தாம்பத்தியம் என்பது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 7,924 
 

“என்னடீ தமா, இவ்வளவு குண்டாப் போயிட்டே?” அனுசரணையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கேட்ட அக்காளை குரோதத்துடன் பார்த்தாள் தமயந்தி.

ஹூம்! இவளுக்கென்ன! வீட்டுக்காரர் உயிரையே விடுகிறார். `அபி, அபி’ என்று நொடிக்கொரு தடவை அவர் அழைக்கும்போதெல்லாம், `கொஞ்ச நேரம் என்னை சும்மா இருக்க விடமாட்டீங்களே!’ என்று அலுத்துக்கொள்வதுபோல பேசினாலும், இவள் முகமெல்லாம் விகசித்துவிடுமே!

அது மட்டுமா? பிறர் பேசுவதைப்பற்றி எல்லாம் இவர்களுக்குக் கவலைப்படாது, ஒரு விடுமுறைநாள் தவறாது, கணவன், மனைவி இருவரும் எங்காவது ஊர்சுற்றக் கிளம்பிவிடுவார்கள்!

தமயந்தியின் பொருமல் வார்த்தைகளாக வெடித்தன. “ஒன்னைமாதிரி சந்தோஷத்திலே பூரிக்கத்தான் முடியலே. ஒடம்பாவது பூரிமாதிரி இருக்கட்டுமே!”

ஒன்றும் பேசாது, தங்கையின் வீட்டுக்குள் நுழைந்தாள் அபிராமி. எதற்குக் குடைய வேண்டும்! வேளை வரும்போது தானே சொல்லாமலா இருக்கப்போகிறாள்!

இருதினங்கள் கழித்து, ஒரு மத்தியானம் அவ்வேளை வந்தது. இருவரும் ஆளுக்கு ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாலும், படிப்பதில் மனம் போகவில்லை. யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசிப்பதுபோலிருந்தது.

“வரவர, இவர் வீட்டிலேயே தங்கறதில்லேக்கா!” அதற்கு மேலும் பொறுக்க முடியாது, தமயந்தி ஆரம்பித்தாள்.

புத்தகத்தை மூடி வைத்தாள் அபிராமி. “நமக்குத்தான் வீட்டுவேலை, சமையல்னு ஆயிரம் இருக்கு. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர்ற ஆம்பளைங்களுக்கு மாறுதலா ஏதாவது வேணாமா?”

உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டாள் தமயந்தி. பெண்ணுக்குப் பெண் பரிந்துபேச வேண்டாமோ?

“ஒனக்கென்ன! பேசுவே! மாமா ஒன்னையே சுத்திக்கிட்டிருக்காரு. ஒனக்கெப்படிப் புரியும் என் கஷ்டம்!” முனகலாக வந்தன வார்த்தைகள்.

பெரியவளுக்குக் கவலை வந்தது. இந்த மனிதர் வேறு எவளுடனாவது தொடர்பு வைத்துக்கொண்டிருப்பாரோ? வெளிப்படையாகவே கேட்டாள்.

“அதெல்லாம் கிடையாது. அப்படி இருந்தால் என்னை..,” சொல்லாமல் விட்டுவிட்டு, கணவனின் போக்கை யோசித்தாள். நாளில்லை, கிழமையில்லை, அவர் நினைத்தால் நினைத்ததுதான். எல்லாம், ஓயாது படங்களைப் பார்ப்பதால் வந்த வினை!

இப்போதுதான் பார்ப்பவர்களின் மனத்தைச் சலனப்படுத்துவதற்கென்றே தமிழ்ப்படம் எடுக்கிறார்களே, பேராசை பிடித்த பாவிகள்! `டான்ஸ்’ என்ற பெயரில் இடுப்பை ஆட்டி, காலை அகட்டி, அசிங்கம் பிடித்த அசைவுகள்! அதற்கு இளம்பெண்களின் அரைகுறையான ஆடைகள் வேறு! கர்மம்! இதனால் ஆட்டம் கண்டுவிட்ட மனதை சமனப்படுத்த அவருக்குத் தெரிந்த ஒரே வடிகால் மனைவிதான்! நினைக்கும்போதே உடம்பெல்லாம் ஏதோ ஊர்வதுபோல அருவருப்பு உண்டாயிற்று தமயந்திக்கு.

கல்யாணமான புதிதிலும், இளமையாக இருந்தபோதும் விரும்பி ஏற்ற உறவு இப்போது ஏன் கசந்தது?

இதையெல்லாம் யாரிடம் கேட்பது!

வெட்கக்கேடுதான்!

`அதுதான் இரண்டு பிள்ளைகள் பெற்றாயிற்றே! இனியும் என்ன! பெரியவனுக்குப் பதின்மூன்று வயதாகிறதே! அவன் என்ன நினைத்துக்கொள்வான்!’ என்று அவளுக்குத் தோன்றும். ஆனால், கேட்டதில்லை.

ஒவ்வொன்றாக தமயந்தி சொல்லச் சொல்ல, அக்காளுக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. “நீ தினமும் தலைக்குக் குளிப்பியா? வெளியிலேயும் போறதில்ல. அரிப்பும் இல்லே..,” என்று நோட்டம்பார்க்கத் துவங்கினாள்.

“அதான் சொன்னேனே! வாரத்திலே நாலு நாள் விரதம்!”

அபிராமிக்குத் தெரிந்தவரை, தங்கை அப்படி ஒன்றும் ஆன்மீகவாதி இல்லை. இப்போது என்ன திடீர் பக்தி?

“விரதம்னா, பட்டப்பட்டினியா?”

“ஐயோ! அது யாராலே முடியும்? என் ஒருத்திக்காக என்ன சமைக்கிறது? பாலும், பழமும்தான் ஆகாரம். பசிக்கிறபோதெல்லாம் ஒரு பெரிய கிளாஸ் பால், ஏதாவது ரெண்டு பழம்! ஒரு பிடி பாதாம், இல்லே முந்திரி!” அப்பாவித்தனமாகப் பேசிய தங்கையைப் பார்த்து பரிதாபம் கொள்வதா, சிரிப்பதா என்று அபிராமிக்குப் புரியவில்லை. உடம்பு ஏன் குண்டாகப் போகாது?

“ஒங்க வீட்டுக்காரரும் விரதம் இருப்பாரா?”

“நல்லா கேட்டியே! என்னைப் பாத்தே ஆத்திரப்படறவரு!”

“எதுக்கு ஆத்திரப்படணும்? நல்ல விஷயம்தானே?”

தமயந்தி ஒரு வெற்றிப்புன்னகையை உதிர்த்தாள். “விரத நாளெல்லாம் நான் பாயிலதான் படுப்பேன் — சாமி அறைக்குள்ளே!” விஷயம் உடைத்துச் சொல்ல முடியாததாக இருந்தால் என்ன! தான் அதற்கு ஒரு தீர்வு கண்டுவிட்டோமே என்ற பெருமை அவள் முகத்தில்.

இதெல்லாம் ஆறு மாதங்களுக்குமுன். அப்புறம்தான் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே!

“இப்போ நான் என்ன பேச ஆரம்பிச்சாலும், `ஆரம்பிச்சுட்டியா?’ன்னு கத்திட்டு, வெளியே போயிடறாருக்கா!” ஏக்கமும், குழப்பமும் கலந்திருந்தன் அவள் குரலில்.

அபிராமிக்குப் புரிந்தது.

நாற்பது வயதுக்குமேல் ஆன பெண்ணின் உடற்போக்கும், மனப்போக்கும் புரியாமல், மனைவி தன்னை வெறுத்து ஒதுக்குகிறாள் என்று குன்றிப்போய், வீட்டிலிருப்பதையே தவிர்க்கிறார், பாவம்!

“அவர் வீட்டிலே இருந்தா, ரெண்டு பேரும் என்ன பேசிப்பீங்க?”

“பேச எங்கே நேரம்! நான் பக்கத்திலேயே இருந்து கவனிக்காட்டி, முத்து வீட்டுப்பாடம் ஒழுங்கா செய்யமாட்டான்”.

“ரெண்டு பேரும் சேர்ந்து வெளியிலேயும் ஒண்ணாப் போகமாட்டீங்க போலயிருக்கு!” என்று சரியாக ஊகித்தாள் அபிராமி.

“போனா, கல்யாணம், இல்லே, கருமாதிக்குத்தான்! இந்த வயசிலே நாங்க ரெண்டு பேரும் ஜாலியா சுத்தினா, பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?”

அபிராமிக்கு எரிச்சலாக இருந்தது. `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்தே நம் வாழ்க்கையைப் பாழடித்துக்கொள்வது என்ன புத்திசாலித்தனம்! “எங்க பக்கத்து வீட்டிலே இருக்காளே யாத்தி..?”

எரிச்சலாக இருந்தது தமயந்திக்கு. தான் எவ்வளவு முக்கியமான சமாசாரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்! இந்த அக்கா சம்பந்தம் இல்லாமல் என்னவோ கதை அளக்கிறாளே!

“யாரு, அந்த குண்டு மலாய்க்காரிச்சியா? இப்போ என்ன அவளைப்பத்தி?”

“அவங்கப்பாவுக்கு போன மாசம்தான் கல்யாணம் நடந்திச்சு. அவருக்கு என்ன வயசு தெரியுமா? அறுபத்தஞ்சு!”

“கஷ்டம்! கல்யாணமான மக இருக்கா. அவருக்கு ஏன் புத்தி அப்படிப் போச்சு?”

“அவரைக் கட்டிக்கிட்டது அறுபது வயசானவங்க”.

“இந்த வயசிலே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கேக்குதா?” ஏளனம் அவள் குரலில்.

“வீடுன்னு ஒண்ணு இருந்தா, பேச ஆள் வேணாம்? கடைசி காலத்திலே ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்காங்க,” என்று அவர்களுக்குப் பரிந்த அபிராமி, விஷயத்துக்கு வந்தாள்: ”ஏன் தமா, நீ என்னிக்காவது ஒங்க வீட்டுக்காரரோட வேலையைப்பத்தி கேட்டிருக்கியா?”

“நீ என்னக்கா, வக்கீல்மாதிரி கேள்வி மேலே கேள்வி கேக்கறே!”

“சொல்லுடி. நீ அவரோட வேலைபத்தி..”.

“நான் கேட்டா மட்டும் அவரு சொல்லிடப் போறாராக்கும்! இல்லே, அவரு சொன்னாப்போல எனக்குத்தான் விளங்குமா?”

“ஏண்டி! வேலைன்னா அதில ஆயிரம் இருக்குமில்லே? அவரு யாரைப் பாத்தாரு, மேல இருக்கிற ஆபீசர் யாரை, எப்படி நடத்தினாரு, தெருவிலே பாத்த விபத்து, மத்தவங்க இன்னொருத்தரைப்பத்தி வம்பு பேசறது — இப்படி எவ்வளவு இல்லே?”

தன் பிரச்னைக்கும், இப்போது இவள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்? “அது ஏன் கல்யாணமான புதிசிலே இந்த தகறாறு எல்லாம் இருக்கலே? அப்போ,” வெட்கத்துடன் பழைய நினைவை அசைபோட்டாள். “அவரோட ஞாபகமாவே இருக்கும். அப்புறம்..!”

“ஒனக்கு மட்டுமில்லே, ஒலகத்திலே எல்லாருக்கும் கல்யாணமான ஒண்ணரை, அதிகமாப் போனா, ரெண்டு வருஷம்தான் இந்த காதல் மயக்கமெல்லாம் இருக்கும்”.

தமயந்திக்கு அந்தத் தகவல் அதிர்ச்சியை அளித்தது. காலமெல்லாம் காதல் இல்லாது, தம்பதிகள் ஒருவரோடு ஒருவர் வாழ்ந்தாக வேண்டுமா! என்ன உலகம் இது! கொடுமை!

“தமா! கல்யாணம் கட்டிக்கிறது பிள்ளை பெத்துக்க மட்டுமில்லே. தினமும், சின்னச் சின்னதா ஏதேதோ நடக்குது நம்ப வாழ்க்கையிலே. அதைப் பகிர்ந்துகிட்டாலே, நம்பளையும் அறியாம ஒரு நெருக்கம் வரும்!”

தமயந்தி யோசனையில் ஆழ்ந்தாள். “அப்படியாக்கா சொல்றே?”

“பின்னே? நாப்பத்தஞ்சு வயசுக்குமேலே, தரையிலே ஒக்காந்தா, ஒரு கையை கீழே ஊனி, அமுக்காம எழுந்திரிக்கக்கூட முடியலியே! இந்த லட்சணத்திலே, ஹனிமூன் கொண்டாடறவங்கமாதிரி கூத்தடிச்சுக்கிட்டு இருக்கவா முடியும்?”

சகோதரிகள் இருவரும் மனம்விட்டுச் சிரித்தார்கள்.

அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “நான் கொஞ்சம் படுத்துக்கறேன். தலை கனக்குது!”` என்று எழுந்தவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள் அக்காள்.

ஒன்றாகப் படுப்பதைத் தவிர, வேறு எந்த நேரத்திலும் நெருக்கம் இல்லாத உறவே ஏதோ இனம் புரியாத அருவருப்பை உண்டாக்கியிருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது, விரதம், அது, இது என்று வேறு எதிலோ நிம்மதி தேட ஆரம்பித்திருக்கிறாள், பாவம்!

“தமா! இன்னிக்குச் சாயங்காலம் நான் வீட்டைப் பாத்துக்கறேன். நீங்க ரெண்டு பேரும் எங்கே போவீங்களோ, அது ஒங்க பாடு!” விஷமத்தனமாகக் கண்களைச் சிமிட்டிய அபிராமி, “போறப்போ, ஞாபகமா, `நாம்ப ரெண்டு பேரும் இப்படிச் சேர்ந்து போறது நல்லாத்தான் இருக்கு. இல்லே?’ன்னு அவர்கிட்டே கேளு!” என்று சொல்லியும் கொடுத்தாள்.

“எனக்கு அப்படியெல்லாம் பேசத் தெரியாது!” என்ற தமயந்தியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *