தாக்ஷாயணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 3,614 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூங்கில் பாலத்தின் மேல் மூவரின் கனம் அழுத்தியதும் பாலம் க்ரீச் க்ரீச்சென்று தொட்டிலாடிற்று. பாலம் ஆடவும் பையனுக்கு ஒரே குஷி. அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொப்புத் தொப்பெனக் குதித்தான். பாலம் ஐயோ ஐயோவெனச் செல்லமாய் ஓலமிட்டது.

“வா, வா போகலாம்.”

இரு அம்மா செத்தே” என்று வர மறுத்துத் தும்பை இழுக்கும் கன்றுக்குட்டி போல் அவள் கையைப் பிடித்து: இழுத்தான்.

“நேரமாயிடுத்தே; அப்பா முன்னாலே போறாரே “அதெல்லாம் முடியாது, வரமுடியாது, போ” என்று பையன் தலையை ஆட்டி முரண்டி, இன்னொரு முறை குதித்தான். அவனுக்கு ஏமாற்றம் நேராதபடி பாலமும் கத்திற்று.

“இதோ பாருங்களேன் , உங்கள் பிள்ளை படுத்தற பாட்டை !”

நாலடி முன்னால் போய்க்கொண்டிருந்த அவள் கணவன் நின்று திரும்பி நோக்கினான் மாலையின் மஞ்சள் வெய்யிலில் பையன் பாலசூரியனாய்த் தகதகத்தான். அவன் தலைமயிர்கூட ஒரு தினுசான செம்பட்டையினால், ஹோமகுண்டத்தின் நெருப்புப்போல் திகுதிகுவென எரிந்தது. பசுபதியின் கண்கள், கூசினாற் போல் லேசாய் மங்கின. யோசனையான புன்னகையுடன் திரும்பி வந்தான். மூவரும் பாலத்தின் நடுவே நின்றதும் பாலம் உடலை முறித்துக்கொண்டு முனகிற்று.

கண்ணுக்கு எட்டியவரை வயற் பரப்புகள் பூமியைக் கட்டானிட்டு அறுத்தன. மைல் தூரத்தில் ரயில்வே ஸ்டேஷனின் செங்கல் கட்டடம் பளிச்சென்றது. தந்திக் கம்பங்களின் உச்சியில் காற்று ஊடுருவுகையில் தந்திகள் சுருதி மீட்டின. மூலைக்கு மூலை, கண்ணுக்கு எட்டிய வரையும் அதற்கப்பாலும் தண்டவாளம் சீறிக்கொண்டு ஓடிற்று. நகைப் பெட்டியைத் திறந்ததும் மூடியின் உள் மெத்தை போல் நீலம் பிதுங்கி நின்றது.

“அப்பா அப்பா , தோ பார்! அதோ , அதோ!” பையன் கையைக் கொட்டிக்கொண்டு குதித்தான்.

சவக்குத் தோப்பின் உச்சியில் வானத்தை அசுத்தமாய்க் கிறுக்கிக்கொண்டு ஒரு கறுப்புத் திட்டு கிளம்பிற்று. நிமிஷத்துக்கு நிமிஷம் புகைப் படலம் அகன்று விரிந்தது. பாறையாய்க் கபம் கட்டிப்போன தொண்டையில் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு கத்தல் நீளமாய்க் கிளம்பிற்று.

சவுக்குத் தோப்பின் மறைவிலிருந்து ரயில் வெளிப் பட்டது தான் தாமதம். பையன் வெறி பிடித்தவனாகி விட்டான். அவன் தாய் அவனை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். திமிறும் திமிறலில் எங்கே பாலத்திலிருந்து விழுந்துவிடுவானோ என்று பயம். ஆனால் அவள் நாட்டம் கவலையோடு அவள் கணவன் மேல் தான் பாய்ந்தது. பசுபதி மௌனமாய் வண்டித் தொடரைக் கவனித்துக் கொண்டிருந்தான். வழியெல்லாம் தண்டவாளத்தை விழுங்கி உமிழ்ந்து ஸ்டேஷனுக்குள் விரைந்து நுழைந்து நின்று அடங்கிப் பெருமூச்சு விட்டது.

இந்த ஸ்டேஷனில் ஏறுவாரும் இல்லை, இறங்குவாரும் இல்லை. ஆனால் கிலுப்தமாய் வண்டி பிரதி தினமும் இங்கு இரண்டு நிமிஷம் இளைப்பாறிவிட்டுத்தான் சென்றது. இதோ மூச்சைப் பிடித்துக்கொண்டு கிளம்பி விட்டது.

வண்டி வளைவில் திரும்பி மரங்களின் பின் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் பசுபதி திரும்பினான். அவன் முகம் கறுத்திருந்தது. நல்ல நிறமாக இருப்பவர்களுக்கு எப்பொழுதும் ஓர் அசௌகரியம். நெஞ்சில் இருப்பதை முகத்தின் நிறம் காட்டிக் கொடுத்துவிடும். பசுபதி பாபுவைவிட நிறம்.

“என்ன, போவோமா?”

“டே, பாபூ, ஓடுடா; உன்னை நான் பின்னால் வந்து பிடிக்கப் போறேன்.”

பையன் கொக்கரித்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்தான்.

அவன் செவி தூரம் தாண்டியதும் தாக்ஷாயணி, “உங்களுக்கு இன்று மனம் சரியில்லையல்லவா?” என்றாள்.

அவன் முகம் லேசான பச்சையாய் மாறிற்று. “உனக்கு அப்படி ஏன் தோணணும்?”

“எனக்குத் தோணவில்லை. தெரியும். இன்று தபால்காரன் வந்து போனதிலிருந்து நீங்கள் சரியா யில்லை. என்னை என்ன என்றுகூடக் கேட்கவில்லை. என்னோடு அப்புறம் சரியாய்ப் பேசக்கூட இல்லை.”

“பிறருக்கு வரும் கடிதத்தைப் பிரிப்பதோ கேட்டு வாங்கிப் படிப்பதோ எனக்குப் பழக்கம் இல்லை.”

“அப்போது நான் பிறத்தியாரா?”

அவன் பேசவில்லை.

“அப்போது உங்களுக்கு கடிதம் வந்தாலும் நான் என்ன என்று தெரிந்து கொள்ளக் கூடாதல்லவா?”

“எனக்குக் கடிதம் போட யார் இருக்கிறார்கள்? இனி எனக்கு வரவேண்டிய ஓலை ஒன்று தான் பாக்கி. அது வந்ததும் அதற்குப் பதில் போட முடியாது. நானே கிளம்பியாக வேண்டும்.”

“சரி சரி, உங்களோடு பேசினால், மூச்சுவிடாமல் இப்படித்தான் தர்க்கம் பண்ணுவீர்கள்.” அவள் குரல் கடுகடுத்தது. “வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் நாக்கில் நரம்பில்லாமல் வெடுக்கென அச்சானியமாய் ஏதாவது சொல்வீர்கள். உங்கள் உடம்பு இருக்கும் நிலைக்கு எனக்குத்தான் தாங்காது. அதனால் நானே தணிந்து போகிறேன்.”

“நான் கிருதார்த்தனானேன். என் அகமுடையாள் எனக்குத் தணிந்து போகிறாள். என் ஜன்மம் சாபல்யம் அடைந்தது.”

“எனக்கு வந்தது இதுதான், இந்தாருங்கள்!” கடிதத்தை மடியிலிருந்து எடுத்து அவனிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பிரித்தான். கண்கள் வரிகள் மேல் ஓடின.

அது அச்சடித்த திருமண அழைப்பு.

அதைக் கையில் பிடித்துக் கொண்டே திரும்பி, பாலத்தின் கட்டத்தின் மேல் சாய்ந்தான். இருவரும் மௌனமாய்க் கீழே ஓடும் ஜலஜரிகையைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது வெய்யில் மழை வரட்டும்; கரை அடங்காது.

“ஊம், பத்மாவுக்குக் கல்யாணமாக்கும்!”

“பத்திரிகை உங்கள் கையில் தான் இருக்கிறது.”

“ஹும், உன் தங்கை அழகி அல்லவா?” அவன் இன்னும் ஜலத்தையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதைப்பற்றிச் சந்தேகம் வேறேயா? இப்போது பட்டுவை நான் பார்த்து எட்டு வருஷங்களாச்சு. உற்ற வயசு. இன்னும் நன்றாய்த்தான் இருப்பாள்.”

“பட்டுவா?”

“அதான், பத்மாதான். நான் அவளைப் பட்டு, பட்டம்மா என்று தோன்றினாற்போல் அழைப்பேன். எங்களிடையில் சண்டை வந்தால் பத்து மொத்து என்பேன். பத்து என்னவோ மொத்து தான். கதைப் புத்தகம் படிப்பதில் கூட அவளுக்கு ஆசை கிடையாது. அம்மா ‘பத்மா’ளென்பாள். அப்பாதான் வாய் நிறையப் ‘பத்மாவ தீ!’ என்று கூப்பிடுவார்.”

“ஆஹா, உன் அப்பாவை எனக்குத் தெரியுமே, எவ்வளவு வாயும் மனசும் நிறைந்த மனுஷர் என்று!”

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். “ஆனால் அப்பாவுக்கு என்னவோ என் மேல் தான் இஷ்டம்.”

“நீ தாக்ஷாயணி அல்லவா?” தோற்ற சீட்டைத் தூக்கி எறிவதுபோல் பத்திரிகையை அலட்சியமாய் வீசினான். அது பறந்து சென்று ஜலத்தில் கிடந்த ஒரு பாறாங்கல் மேல் வீழ்ந்தது.

“ஏன் அதை எறிந்தீர்கள்?” மூண்டெழும் கோபத்தில் அவளுக்குக் கன்னங்கள் குறுகுறுத்தன.

“ஏன்? இதை வைத்துக்கொண்டு கலியாணத்திற்கு நாம் போகப் போகிறோமா?”

“போகாவிட்டால் எறியணுமோ?” கோபக்கண்ணீர் கண்களை உறுத்தியது.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முகம் சுண்டிப் போயிருந்தது. இருவரும் வெகுநேரம் வாளாயிருந்தனர்.

“தாக்ஷாயணீ!”

அவன் மெதுவாகக் கூப்பிட்டது அவளுக்குக் காது. கேட்கவில்லை. கிட்ட நெருங்கி முகத்தெதிரில் விரலைக் சுண்டினான்.

“- ம்ம்ம்?” திடுக்கென விழித்துக்கொண்டாள்.

“என்ன தபஸில் இறங்கிவிட்டாய்?”

“நான் தாக்ஷாயணி அல்லவா? நீங்கள் பசுபதி.”

அவள் அப்படிச் சொன்னதுமே அவன் முகத்தில் குபுக்கெனக் குங்குமம் குழம்பிற்று. உடல் கிடுகிடென ஆடிற்று. கீழே விழாதபடி அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவள் அவனை அப்படியே அணைத்துக்கொண்டாள். அந்த வேகத்தில் பாலம் ஊஞ்சலாடிற்று. அவளுள் கிளர்ந்த தாய்மை தாங்க முடியாமல் வாய் குழறிற்று. புடவைத் தலைப்பால் நெற்றியை ஒற்றினாள். அப்பா! எவ்வளவு பலவீனமாய்ப் போய்விட்டார் ! ஒன்றுமே தாங்க முடிவதில்லை. அவள் விழிகள் நிறைந்த கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

“ஏன் அழுகிறாய்?”

அவனைக் கட்டிக்கொண்டு தேம்பினாள்.

“தாக்ஷாயணி, ஏன் அழுகிறாய்?”

“ஒரு நாள் இது மாதிரி சமயத்தில் உங்களை நான் இழந்து விடுவேனோ?”

“நம் பையன் இருக்கிறான் -”

“இருந்தால் என்ன? உங்களுக்குப் பின் தான் அவன், எல்லாமுமே! நமக்குப் பின் தான் அவன் வந்தான். ஆமாம், எல்லாமே உங்களுக்கு அப்புறந்தான். இது விஷயத்தில் அன்று எப்படியோ அப்படித்தான் எனக்கு இன்றும். நான் இருக்கும் வரை அப்படித்தான்.”

அவள் ஆவேசத்தைக் கண்டு அதிசயித்து நின்றான். மாலை இரவுள் கடக்கும் நேரத்தில், கோயில் மணியோசை காற்றில் மிதந்து வந்து கலக்கையில் அவள் வெறி பிடித்தாற் போல் பேசுவதைக் காணச் சற்று அச்சமாய்க் கூட இருந்தது.

பழுக்கக் காய்ந்த வெல்லப்பாகை யாரோ வாயில் ஊற்றினாற்போல் கனவு கண்டு திடுக்கென விழித்துக் கொண்டாள். அறைக்கு வெளியே நிலவு பட்டை வீசிற்று. அவள் கணவன் படுக்கை விரித்தபடி கிடந்தது. நினைவைச் சரிகூட்டிக் கொள்ளுமுன் உருகோசை புரண்டு வந்து மேலே மோதிற்று. அவளுக்குத் திக்கென்றது. பரபரவென எழுந்து வெளியே வந்தாள்.

பூந்தொட்டிகள் சூழ்ந்த கல்மேடை மேல் அவன் உட்காந்திருந்தான். மடியில் பாபு தலைவைத்துக் கவர்ச்சி யான அலங்கோலத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். பசுபதி ஒரு கையால் தம்பூரை இறுகத் தழுவிக் கொண் டிருந்தான்.

அவள் அவனிடமிருந்து தம்பூரைப் பிடுங்கிக்கொள்ள முயன்றாள். “வேண்டாம்…”

“இல்லை, நான் பாடவில்லை. வெறுமெனச் சுருதி மாத்திரம் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.”

“அதற்கும் நேரமாகவில்லையா?”

அவன் வெறுமெனச் ‘சூள்’ கொட்டினான். அவள் எதிரே அமர்ந்தாள். காற்று சில்லென வெட்டிற்று. உடம்பைச் சிலிர்த்து ஒடுக்கிக் கொண்டாள்.

“இது உங்களுக்கு உடம்புக்காகுமா?” அவள் சொன்னது செவியில் ஏறியதோ இல்லையோ? தம்புராக் கட்டை மேல் முகத்தைப் பதித்து ஓசையை மூர்க்கமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.

எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்பு போல் அவள் மேல் வழிந்து கவ்விற்று. அது தன்னை விழுங்கு வதை உணர்ந்தாள். நாத வெள்ளம் கிறுகிறுவென மூக்கு, விளிம்பு வரை ஏறிற்று. மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்து மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக்கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூலமூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில் அவை தண்ணீருள் பேசிய பேச்சுப் போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப்போனாள்.

“என்ன இது! ஏன் இப்படி இருக்கிறது?”

“எப்படி இருக்கிறது?”

நெஞ்சில் சந்தோஷம் பொங்குகிறது. ஆனால் தொண்டையைத் துக்கம் அடைக்கிறது. கடகடவெனச் சிரிக்க வாய் திறக்கிறது. ஆனால் அழுகை பீரிட்டுக் கொண்டு வருகிறது. இது என்ன? பயமாயும் இருக்கிறது; சந்தோஷமாயும் இருக்கிறது. நாமே இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகங்கூடத் தோன்றுகிறது. நாம் இப்பொழுது இல்லையென்றால் வேறு எப்படி இருக்கிறோம்! இருக்கிறோம் என்றால் இல்லாமலும் இருக்கிறோமே? புரியவில்லை . ஆனால் புரியவும் புரிகிறது. ஆனால் புரியவும் வேண்டாம்; என்ன இது?”

“நீயும் நானும் எங்கோ ஓர் எல்லைக்கோட்டில் இருக்கிறோம். நாம் இப்பொழுது குழந்தைகளாகி விட்டோம். குழந்தை தூக்கத்தில் சிரிக்கிறது. உடனே விக்கி விக்கி அழுகிறது. இது என்ன?”

“சுவாமி தூக்கத்தில் குழந்தைக்குத் தாமரைப் பூவைக் காட்டுவாராம்! அதைப் பார்த்ததும் அது சிரிக்குமாம். அவர் பூவை மறைத்ததும் அழுமாம்.”

“நாமும் தாமரைப் பூவைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இல்லை, பூவினுள் உட்கார்ந்து கொண் டிருக்கிறோம். குவிந்த இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து கொண்டிருக்கின்றன. அல்லது கவிந்து கொண்டிருக் கின்றன. புதுப் பிறப்புள் புகுந்து புறப்பட்டுக் கொண் டிருக்கிறோம். நினைவுகள் அழகிய இதழ்கள்.”

அவள் மேடையினின்று இழிந்து அவன் கால்களை மார்புடன் அணைத்துக் கொண்டாள். சுருதியோசை அவர்களைச் சூழ்ந்து கோட்டை கட்டிக்கொண்டது.

“நீங்கள் என் வாழ்க்கையில் வந்து முளைத்ததை நினைக்கட்டுமா? எனக்கு ஒரே சமயத்தில் நம் வாழ்க்கை யில் ஏதேதோ நினைவு வருகிறது.”

“நீ எது நினைத்தாலும் உன் இஷ்டமே என் இஷ்டம்.”

“ஒவ்வொரு நாளும் எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் என் வாழ்க்கையில் உங்கள் பிரவேசத்தை நினைத்துக்கொள்கிறேன். இன்னும் எனக்கு அலுப்பு ஏற்படவில்லை.”

“உனக்கும் எனக்குமிடையில் இந்நிலையில் அலுப்பு என்பது இல்லை”

“அது மாத்திரம் அல்ல. நினைத்ததையே நினைத்துக் கொள்வதில், நினைத்ததைச் சொல்வதில் இன்பமாக இருக் கிறது. ஓரொரு சமயமும் ஓரொரு புது அர்த்தம் தோன்று கிறது. நிஜம்மா, இதைப்பத்தி உங்களிடம் சொல்றப்போ எனக்கு நாக்கு தொண்டைவரை தித்திக்கிறது.”

“உன் சொல்ருசியில் என் நாக்கிலும் எச்சில் ஊறுகிறது.”

“நான் காலேஜிலிருந்து அப்போதுதான் வீட்டுள் நுழைந்தேன், ஆபீஸ் ரூமிலிருந்து அப்பா கூப்பிட்டார். நான் உள்ளே வந்தேன். வந்ததும் உங்கள் முகத்தைக் காணவில்லை. முதுகைத்தான் கண்டேன் . சுவரில் மாட்டி யிருந்த படத்தை சிந்தித்துக்கொண்டிருந்தீர்கள். முதுகின் பின்னால் கோத்த உங்கள் கைகளைக் கண்டேன். உங்கள் கையைக் கொடுங்களேன் ‘ பற்றி இழுத்து இரு கைகளிலும் பொத்திக்கொண்டாள்.

“கையைப்பற்றிப் பேசுகையில், கையைத் தொடணும் போல் ஏக்கமே ஏற்படுகிறது.”

“தாக்ஷாயணீ, இவர் தான் உன் பாட்டு வாத்தியார். இவரிடம் உன்னைப்பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறேன்.”

“நான் கை கூப்பினேன். நீங்கள் நின்ற நிலை மாற வில்லை. ஆனால் மெதுவாய் முகம் மாத்திரம் என் பக்கம் திரும்பிற்று. இறைஞ்சலில் ஏந்திய என் கைகள் இறங்க மறந்தன.”

“என் முகத்தில் அப்போது நீ என்ன கண்டாய்? தயவு செய்து சொல்லேன்.”

“உங்கள் கேள்வி பெரிய கேள்வி. என்னென்று பதில் சொல்வேன்! அந்த நிமிஷத்தையே தான் இப்பவும் நினைத்துக் கொள்கிறேன். நினைக்க நினைக்க விவரங்கள் பிரளயமாய்ப் பெருகுகின்றன. எதையென்று எடுத்துச் சொல்வேன்.”

“இல்லை, பார்வையின் அந்த க்ஷணப்பதிவில் என்னில் என்ன கண்டாய்? சொல்லேன்!”

“கல் விக்கிரகம் முகம் திரும்பினாற்போல் ‘திக்’ கென்றது. அதற்குமேல் என்னைக் கேட்காதேயுங்கள். எனக்குச் சொல்லத் தெரியவில்லை.”

“இல்லை, சொல்; சொல்! உன்னைக் கெஞ்சுகிறேன். சொல்லேன்! நீ சொல்லச் சொல்ல எனக்குப் பலம் ஊறுகிறது.”

“ஒரு தினுசாய் அடிவயிற்றைத் துண்டம் போட்டது. பழுதையென்று நினைத்துப் பாம்பைத் தூக்கிவிட்டேன் போல், ‘பக்’ கென்று சில்லிட்டுக்கொண்டு ஓர் அதிர்ச்சி. முதலில் ‘பக்’ ; அப்புறந்தான், திகில், குழறல், கூக்குரல் எல்லாம்.”

“உன் பாஷைக்குத் தலைவணங்குகிறேன்”

“என் நெஞ்சில் உடனே பதிந்தவை யாவை? உங்கள்” நெற்றிமேட்டில் கட்டை விரல் நகத்தளவில் வளைவாய் ஒரு. வடு இருக்கிறதே அது.”

அவன் அதைத் தொட்டுக்கொண்டான். “சின்ன வயசில் திண்ணைக்குத் திண்ணை தாவிக் கீழே விழுந்து: விட்டேன்.”

“உங்கள் முகத்தில் கடுகடுப்பு இல்லாவிட்டாலும் அதில் கடினம் இருந்தது. உங்கள் கண்களில் கனிவு ஏன் இல்லை? இப்படிக் கண்டது என் கண்களின் குற்றமோ?”

“என் கண் லேசாய்ப் பூனைக் கண். அதனாலேயே என் பார்வையில் அதற்கு இல்லாத உக்கிரம் இருக்கலாம்.”

“இல்லை, நாம் இப்பொழுது கண்ணால் கண்டது. மாத்திரம் பேசவில்லை. கண் கண்டதால் நெஞ்சு கண்டது. கண்டுகொண்டிருக்கிறோம். ஆகையால் உங்களிடம் நான் கண்டது உங்கள் கண்களின் உக்கிரம் அல்ல. உங்கள் உள் தன்மையின் உக்கிரமேதான். அதை நீங்களும் உடனே நிரூபித்துவிட்டீர்கள்.”

“உன் தகப்பனாருக்கு உன்மேல் இருக்கும் பாசத்தில் அவர் உன் சங்கீதத்தைப்பற்றிச் சொன்னதெல்லாம் காதில் வாங்கிக்கொண்டேனே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாமே நேருக்கு நேர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?” என்றீர்கள்,

“என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?”நீங்கள் சொன்னது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு எடுத்தவுடன் நீங்கள் என்னை நீ’ என்றதும் அவருக்குப் பிடிக்கவில்லை … “எனக்கும் சங்கீதத்தைப்பற்றித் தெரியும்” என்றார்.

“நீங்கள் புன்னகை புரிந்தீர்கள். ஐந்து வயதில் நான் கோலியாடினபோது என் தகப்பனார் என்னைக் கன்னத்தில் அறைந்து இழுத்துவந்து சுவரோடு ஒட்டி வைத்துச் சொல்லிக் கொடுத்த நாளிலிருந்து சாதகம் பண்ணி வருகிறேன். எங்கள் குடும்பம் நினைவு தெரிந்த மூணு தலைமுறையாகச் சங்கீதப் பரம்பரை. அப்படி இருந்தும் சங்கீதத்தைப்பற்றித் தெரியும் என்று சொல்லிக் கொள்ளத் தைரியம் வரவில்லையே!”

“அப்பாவுக்கு இன்னும் ரோசம் வந்துவிட்டது. ‘நான் சங்கீத சபைப் பிரஸிடெண்டு என்று தெரியுமோன்னா?”

“ஓஹோ! அதனால்? திறப்பு விழாவில் கட்டடத்தின் கதவை கரகோஷங்களிடையே வெள்ளிச் சாவி போட்டுத் திறந்தவர் கட்டடத்தைக் கல்மேல் கல்வைத்துக் கட்டினவர் ஆய்விடுவாரா? அல்லது உங்கள் தர்க்கப் பிரகாரம் ஆகிவிடவேணுமா?”

அப்பாவுக்கு முகத்தில் ரத்தம் தெறித்தது. சடேரென்று. நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

“என் வீட்டிலேயே என்னை அவமானப்படுத்த உம்மை இங்கு அழைத்து வரவில்லை!”

“நீங்களும் விடவில்லை. உங்களுக்குப் பிடித்தமான தைப் பேசவும் நான் இங்கு வரவில்லை. நானாகவும் வர வில்லை. உங்கள் பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லித்தர வேண்டும் என்று நீங்களாக என்னைத் தேடிக் கேட்டு அழைத்து வந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவு மூட்டுகிறேன்.”

“ஆமாம், சபா காரியதரிசி உங்களைப்பற்றிப் பிரமாத மாகப் புகழ்ந்தார். நீங்கள் நாளடைவில் ரொம்பவும் பிரபலமாகப் போகும் பெரிய புள்ளி என்று இன்னும் ஏதேதோ சொன்னார். எனக்கும் என் பெண் எதிலும் சிறந்ததையே அடைய வேண்டும் என்னும் அவா உண்டு.அப்படி நான் ஒரு சபதமே பண்ணிக்கொண்டிருக்கிறேன். படிப்போ பாட்டோ புருஷனோ எதுவுமே , ஆம் -”

“நானும் அதையேதான் சொல்கிறேன். உங்கள் பெண் மேல் இருக்கும் பாசம் உங்கள் கண்ணை மறைக்கமுடியும்.”

அப்பா பதிலுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதுதான் சமயமென நான் இடை மறித்தேன். “ஆமாம், இவரை எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க அழைத்து வந்தீர்களா? அல்லது சௌகரியமாய்ச் சண்டைபோடக் கூட்டி வந்தீர்களா?”

“அப்போது நீங்கள் என்பக்கம் திரும்பித் தலை வணங் கினீர்கள். மறுபடியும் நான் சிலை அசையக் கண்டேன். எனக்கு நெஞ்சு பரபரத்தது. எப்படியும் நீங்கள் ஆச்சரிய மான நிமிஷங்கள் படைத்தவர்.”

“தாக்ஷாயணி , நாம் இப்போது நிமிஷத்தின் சிமிழி லிருந்து மையை எடுத்து இட்டுக்கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. நெஞ்சை அடைத்தது. அவன் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டாள். வார்த்தைகள் மூச்சோடு சேர்ந்து வந்தன. “எப்படி உங்களால் இப்படிப் பேச முடிகிறது?”

அவன் பெருமூச்செறிந்தான். இருவரும் மௌன மாயினர்.

ஆகாயத்தில் பட்சி ஒன்று ஒற்றையாய்ப் பறந்து சென்றது. திசை தப்பிய எண்ணம் போல், நிலவு வெளிச்சத்தில் இரவைத்தான் பகலென்று நினைத்துக் கொண்டதோ? மாலையில் நேரத்தில் கூட்டிலடைய மறந்து இப்பொழுது இரவில் திசை தப்பி அலைகிறதோ? சுருதியிலிருந்து இழைகள் பிரிந்து அவர்களைச் சுற்றியும் மேலும்; மேன்மேலும் கூடு பின்னின.

“ரிமா மமாமமாமாம் -”

அவன் குரல் தம்பூரின் ஓசையோடு ரகசியமாய்க் கலந்து ஸன்னமாய்ப் பிரிந்து மெதுவாய் வீங்கி எழுந்தது.

அவள் கண்ணீர் கரையுடைந்தது. அவன் பாதங்களை இரு கைகளாலும் வருடினாள். தொண்டை கேவிற்று.

“நான் இப்போது எது நினைத்தேனோ அதற்கு அடி யெடுத்துக் கொடுக்கிறீர்கள்!”

அவன் கண்கள் புன்னகை புரிந்தன. குரல் இசையோடு தழுதழுத்தது.

“ஸ…ரி.ரி…. ம… மாம… மா… மா… மா. ..”

தடவிக் கொடுத்தாற்போல் அக்ஷரங்கள் ஒன்றோ” டொன்று குழைந்தன. சுருதியில் ஒளிந்து விளையாடின.

“ஸரி மாம மா மமா மக ரி ரீ …”

அவள் கைகள் கூப்பிக் கோத்துக் குவிந்து அந்தரப் பட்சிபோல் தவித்தன. கன்னத்தில் கண்ணீர் வழிந் தோடியபடி இருந்தது. அவள் அவஸ்தையைக் கண்டு அவன் பாடுவதை நிறுத்தினான்.

“தாக்ஷாயணி, ஏன் அழுகிறாய்?”

“நான் அழவில்லை. என் நெஞ்சை மீட்டுகிறீர்கள். என் நெஞ்சில் எவ்வளவு ஆழம் என்னையும் அறியாமல் பதிந்தீர்கள் என்று அன்றுவரை நான் அறியேன். நான் வளர்ந்த சூழ்நிலையில், எவ்வளவோ புருஷர்களோடு பேசிச் சிரித்துக் கொட்டமடித்திருக்கிறேன். அதற்கு என் வீட்டிலும் தடங்கல் இல்லை. காலேஜில் எத்தனை மாணவர்கள், வகுப்புக்கு எத்தனை வாத்தியார்கள்!”

“அதே மாதிரி பாட்டுக்கும் ஒரு வாத்தியார்.”

“அப்படித்தான் அப்பா நினைத்தார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் அப்படி இல்லை .”

“ஏன், எப்படி இருந்தேன்? உன்னிடம் தப்பாக நடந்து கொண்டேனா?”

“இல்லை, இல்லை, ஒருக்காலும் இல்லை. சத்தியமாக இல்லை.” ஆவேசத்துடன் அவன் பாதங்களைக் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டாள். “என் முகத்தைக்கூட நீங்கள் சரியாகப் பார்த்தீர்களோ, எனக்கு இன்னும் சந்தேகம். பாடும் நேரம்வரை கல்லாலடித்தாற்போல் உட்காந்திருந்து, வேலையானதும் சொல்லிக்கொள்ளாமல் கூடப் போய்விடுவீர்களே! என்னோடு எங்கே சரியாய்ப் பேசினீர்கள்? நான் ஒருத்தருக்கும் பயப்பட்டதில்லை. ஆனால் உங்களிடத்தில் எனக்கு ஒரு பீதி கண்டது. அது இன்னமுந்தான் இருக்கிறது. உங்களிடம் ஒரு பிரஸன்னம் இருக்கிறது.”

“நான் உன் அடிமை.”

“நான் தான் உங்களுக்கு அடிமையானேன். அன்று உங்கள் பாட்டிற்கு அடிமையாகி அதனால் உங்களுக்கு அடிமையாகிவிட்டேன். அன்று நீங்கள் சாமா பாடுகையில் கற்பனை ஸ்வரத்தில் மாமாமாமாமா’ என்று ஒரே அக்ஷரத்தை ஐந்து தடவை அழுத்தினீர்களே, அதில் ஏதோ ஒரு தருணத்தில், ஒரு ‘மா’ வில் உங்களுக்கு என்னை இழந்தேன். அன்று நீங்கள் மா… மா…’ என்று எனக்கு என்ன செய்துவிட்டீர்கள். சொல்லுங்களேன்!”

“நான் என்ன செய்தேன்? உன் தகப்பனார் மாதிரி கேட்கிறாயே!”

“இல்லை, ‘மாமாமாமாமா’ என்று நீங்கள் உருக்கமாய் இழைக்கையில் திடீரென என் நெஞ்சுள் ஒரு கன்று அம்மா’ என்று கதறிற்று. அவ்வளவுதான்; உடனே எனக்கு என்னைச் சுற்றி ‘அம்மா! அம்மா!’ என்று ஒரேயடியாய் வெள்ளி மணிகளின் அலறல் தான் கேட்டது. நானே என் வசத்தில் இல்லை. என்னைச் சுற்றி ஒரே நீலமாகிவிட்டது. நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பாவிட்டால் போங்கள். கண்ணை விழித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சொப்பனம் மாதிரி இருக்கிறது. ஆனால் நீங்கள் என் எதிரில் இல்லை . என் மடியில் குழந்தையாய்க் கிடந்தீர்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன்.”

“உனக்கும் எனக்குமிடையில் வெட்கம் என்பது கிடையாது.”

நான் மடியில் இருந்த குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தேன். எனக்குப் பால் பீரிட்டுக்கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தோற்றம், தோன்றின சுருக்கில் மறைந்தது. கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்க்கையில், நீங்கள் கண்ணை மூடி உங்கள் பாட்டில் உங்களை இழந்திருந்தீர்கள். உங்கள் முகத்தில் ஒரு தினுசான களை போட்டிருந்தது. உங்கள் நெற்றியில் வேர்வை பொட்டுப் பொட்டாய் நின்றது. ‘உங்களை நான் தொட மாட்டேனா? என் முன்றானையால் அந்த வேர்வையை ஒற்றி எடுக்க மாட்டேனா?” என்னில் மூண்டு விட்ட தாய்மை தவித்தது. அத்தருணத்தில் என்னை உங்களுக்கு இழந்தேன். கானம் கலைந்து நீங்கள் திடுக்கென விழித்துக் கொண்டீர்கள். எதிரில் என்னைப் பார்த்ததும் உங்கள் முகம் கடுகடுத்தது, ஏதோ நீங்கள் ஏமாந்த சமயம் எனக்குத் தெரிந்து விட்டது போல். தம்பூரைக் கீழே இறக்கி விட்டுக் குடிக்க ஜலம் கேட்டீர்கள். கொண்டு வந்த தீர்த்தத்தை இரண்டு முழுங்கு சீப்பிக் குடித்துவிட்டு, தம்ளரைப் படக்கெனக் கீழே வைத்துவிட்டுச் சரேலென்று எழுந்து போய்விட்டீர்கள்.”

“ஹோட்டலிலேயே சாப்பிட்டு எனக்குச் சீப்பிக் குடிக்கும் வழக்கம் விடவில்லை. என்னை மன்னித்துவிடு.”

“மன்னிப்பா?” அவள் ஒரு விதமான ஆத்திரத்துடன் சிரித்தாள். “நான் தம்ளரை இரண்டு கைகளிலும் எடுத்து ஆத்திரத்துடன் நீங்கள் விட்டுப்போன மிச்சத்தை உறிஞ்சிக் குடித்தேன். ஏன் அப்படிச் செய்தேன்? நானே அப்பொழுது அறியேன். உங்கள் மிச்சத்தை உண்டால் என் தாபம் தணியும் என்றா?”

“என்னடீ தாக்ஷாயணீ?”

திரும்பிப் பார்த்தபோதுதான் அம்மா என் பின்னா லேயே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

“எனக்கு ரொம்ப அசதியாயிருக்கே..”

தம்பூரை அவசரமாய்க் கீழே இறக்கிவிட்டுப் பரிவுடன் அவள் தலையை மடியில் எடுத்துக்கொண்டான்.

“வெகுநேரம் பேசிவிட்டாய். தூங்கு”

“இல்லை, எனக்குத் தூக்கம் வரவில்லை . வராது. நீங்கள் தொடர்ந்து சொல்லுங்களேன்.”

“என்னது?”

“நம் கதையை. உங்கள் வாய் மூலமும் நான் கேட்க இன்று எனக்கு ஆசையாக இருக்கிறது; இரண்டு குழந்தைகள் ஒன்றுக்கு ஒன்று கதை சொல்லி ஒன்றை ஒன்று தூங்கப் பண்ணிக் கொள்வது போல்.”

அவன் லேசாய்ச் சிரித்தான்.

அவள் குழந்தை மாதிரி அவனைத் தொந்தரவு பண்ணினாள். “சொல்லுங்கோன்னா.”

அவள் மனம் இல்லாமல் இணங்குவதுபோல் பெருமூச் செறிந்தான்; பேசலானான்.

“அடுத்த நாள் மாலை நான் உங்கள் வீட்டுள் நுழைகையிலேயே, ஆபீஸ் அறையிலிருந்து உன் தகப்பனார் கூப்பிட்டார்.

மிஸ்டர் பசுபதி , நான் திடீரென முடிவு செய்து விட்டேன். என் பெண்ணிற்கு ‘டியூஷன்’ நிறுத்திவிடப் போகிறேன். இதோ உங்கள் சம்பளம்; மன்னிக்க வேண்டும்; சரி, போய் வருகிறீர்களா? எனக்கு வேலை இருக்கிறது.’

“அவர் நடத்தை வெடுக்கென்று இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்டுக் கொள்ளவில்லை. ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுப் பேச்சை வளர்த்த எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. அத்தோடு பாட்டு வாத்தியார் பிழைப்பே இப்படித்தான். நான் பேசாமலே அப்படியே போய் விட்டேன். எனக்கு இதெல்லாம் கேட்டுத் தெரிந்து என்ன ஆகவேணும்?

இதெல்லாம் பற்றி நான் சிந்தனை கூடச் செய்ய வில்லை. ஆனால் மூன்று நாட்கள் கழித்து, மாலை நான் வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கையில் அறைக் கதவை டக்டக்கென்று நாசுக்காய் விரல்கணுவால் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். உன் தகப்பனார் நின்று கொண்டிருந்தார்.”

“உள்ளே வரலாமா, மிஸ்டர் பசுபதி?”

நான் வழி விட்டேன். “ஹும்!” சுற்றுமுற்றும் பார்த்தார் . நாற்காலி தேடினாரோ என்னவோ? உடை யின் வண்ணான் மடிப்பு கலையாதபடி உடம்பை ஜாக்கிரதையாய் இறக்கிக் கொண்டு பாய்மேல் உட்காந்தார். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“உங்கள் நேரத்தை வீணாக்குகிறேனோ?”

“அப்படி ஒன்றும் இல்லை . என் நேரம் எனக்குக் காத்துக்கிடக்கும்.”

“சடக்கென நிமிர்ந்து பார்த்தார். ‘மிஸ்டர் பசுபதி, இப்பொழுது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”

“இதென்ன கேள்வி?”

“பிறகு சொல்கிறேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள். ஆயிரம் – ஏன், ஆயிரத்தைந்நூறாகத்தான் இருக்கட்டுமே ஒரு மட்டாய்க் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”

“என்ன செய்ய முடியாது? என்ன வேணுமானாலும் செய்யலாம். குதிரை வாலில் கட்டி ஒரு மட்டாய்த் தோற்க லாம்; கெலித்தால் பதினைந்தாயிரமாய்ப் பண்ணலாம்.”‘

“அவர் முகம் சட்டென மாறிற்று. அப்புறந்தான் தெரிந்தது. அவருக்கு ‘ரேஸ்’ பைத்தியம் உண்டு என்று.”

“உங்களைப் பொறுத்தவரையில் சொல்லுங்களேன்.”

“எனக்கு யோசனை சுவாரசியமாய்த் தானாவே ஓடத்தலைப்பட்டது. ‘பார்க்கலாம், இப்போது நான் வைத்துக் கொண்டிருக்கும் ‘டியூஷன் ‘ களுக்கு அக்கடா என்று ஒரு வருஷத்துக்காவது முழுக்குப் போட்டு விடலாம். சௌகரியமாய் இஷ்டப்படி சாதகம் செய்ய லாம். நல்ல குருவை அடுத்துப் பாடம் கேட்கலாம். மதுரைக்குப் போய் ஓலைச் சுவடிகளைப் புரட்டி ஒரு வருஷமாவது ஆராய்ச்சி செய்ய வேண்டுமென வெகு நாளாய் ஓர் அவா உண்டு.”

“பேஷ், பேஷ்!” என்று பையிலிருந்து செக் புத்தகத்தை எடுத்துத் துடையில் வைத்துக் கொண்டு எழுத ஆரம் பித்தார்.”உங்கள் முதல் எழுத்து என்ன?”

“ஏது, என் விஷயத்தில் இவ்வளவு அக்கறை திடீரென்று?”

“உம்மிடத்தில் அக்கறை இல்லை. எனக்கு என் பெண் மேல் இருக்கும் அக்கறைதான்.”

“இதென்ன குரு தக்ஷணையா?’ “அப்படித்தான் வைத்துக் கொள்ளுமே.”

“இதென்ன, இந்த மூன்று நாளில் தாக்ஷாயணி சங்கீதத் தில் மேதையாகிவிட்டாளா என்ன?”

“மிஸ்டர் பசுபதி, என் பெண்ணுக்குச் சங்கீதம் வேண்டாம். என் பெண் எனக்கு மிஞ்சினால் போதும். மிஸ்டர் பசுபதி, நான் ஏமாந்து போனேன். என் பெண் உம்மிடத்தில் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள்.”

“கோணி ஊசியால் ஓங்கிக் குத்தினாற் போல் என் மண்டையில் வலி பளீரெனப் பாய்ந்து மின்னிற்று. ஓசைகள் அனைத்தும், அவைகளின் கதியில், அப்படியே தடுக்கி நின்றன. கூரையிலிருந்து ஒரு பல்லி தொப்பென்று மூலையில் சாத்திய தம்பூரின் மேல் விழுந்தது. ‘ரொய்ஞ்ஞ்’ என்று தந்திகளின் சத்தந்தான் அந்த நிமிஷத்தை விடுதலை செய்தது.

“என்ன சொல்கிறீர்கள்?” அவர் அப்படிக் கேட்கையில் அவரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. “என் பெண்ணை நான் காப்பாற்ற வேண்டும். ஒரேயடியாய்ப் புத்தி கலங்கியிருக்கிறாள். ஏதோ பிதற்றிக் கொண்டே யிருக்கிறாள். ஆகாரமே செல்லவில்லை. அவளை நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்?”

எனக்குச் சுருக்கென்றது.”மிஸ்டர் பசுபதி, உங்களுக்கு என் பெண்ணைக் கொடுப்பேன் என்று நினைக்கிறீர்களோ?”

“நான் நினைப்பேன் என்று நீங்கள் நினைக்கிறது இருக்கட்டும். நீங்கள் கொடுத்தாலும் நான் பண்ணிக் கொள்ள வேண்டாமா? என் சம்மதம் என்று ஒன்று இதில் உண்டே !”

அவருக்கு மூக்குத் துடித்தது. “அதிகப் பிரசங்கித்தன மாய்ப் பேச வேண்டாம். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே மீறித்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். நான் வார்த்தை பொறுக்கமாட்டேன்.”

“வாஸ்தவம், நான் யார்? கேவலம் பாட்டுவாத்தியார் நீங்கள் பெரிய உத்தியோகஸ்தர். உம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உமக்கு ஆமாஞ்சாமி போட்டுப் போட்டுப் பிறர் அபிப்பிராயம் என்று ஒன்று உண்டு என்பதையே மறந்துவிட்டீர்கள். உம்மிடத்தில் பணம் ஏராளமாய் இருக்கிறது.”

“என் கையில் செக்கைத் திணித்தார். ‘நீங்கள் என் பெண்ணுக்கு ‘இழைத்திருக்கும் தீங்கிற்கு உம்மைச் சும்மாவே விடுகிறேன் என்று வைத்துக்கொள்ளும்.”

“கொஞ்சம் மூச்சு விடுங்கள். உங்கள் பெண்ணிற்கு, நான் என்ன தீங்கு இழைத்துவிட்டேன்?”

“இன்னும் என்ன வேண்டும்? ஜவ்வாதுப் பொட்டும் கஸ்தூரி வாசனையும் இட்டுக்கொண்டு அவள் மனத்தை, மயக்கியிருக்கிறீர்.”

“செக்கை நாலு சுக்கல்களாய்க் கிழித்து அவர் ஜேபியில் செருகினேன். தயவு செய்து போகிறீர்களா?”

“மிஸ்டர் பசுபதி!”

“உடனே போய் விடுங்கள். தயவு செய்து உடனே.”

அவர் போன பிறகு வெகுநேரம் நான் உட்காந்த இடத்தை விட்டு அசையவில்லை. உன்னைப்பற்றி நான் அதுவரை நினைத்ததில்லை. நான் ஒரு நாளும் அதுவரை வாசனைகள் உபயோகித்ததும் இல்லை. எங்கோ கடியாரத். தில் மணி ஒன்பது அடித்தது. கஸ்தூரி, ஜவ்வாது, கஸ்தூரி ஜவ்வாது என்று இரண்டு வார்த்தைகள், தொண்டையில் நார் சுற்றிக் கொண்டிருந்தன. இரண்டு கட்டடம் தாண்டி னால் சந்தனக் கடை. சரக்கென்று எழுந்து சென்றேன். ஜவ்வாதும் கஸ்தூரியும் வாங்கிக் கொண்டு வந்தேன். கண்ணாடி பார்த்துச் செவ்வையாக இட்டுக்கொண்டேன். தம்பூரை மீட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தேன்.

“நானே என் வசத்தில் இல்லை . அந்த சமயம் எனக்கு உடல் கூட இல்லை. குரலாய் மாறிப் போயிருந்தேன்.. எத்தனை நேரம் பாடினேனோ?

“மாடிப்படியில் திடுதிடுவென யாரோ ஏறி வரும் சத்தம். கதவு படீரெனத் திறந்தது. வாசற்படியில் ஒரு கணம் நீ நின்றாய். நீ அலங்கோலமாக இருந்தது தெரிந்தது. உன் கண்களில் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. ஓடிவந்து அப்படியே என்மேல் விழுந்தாய். சாட்டை மாதிரி உன் பின்னல், பாம்பு போல் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது.”

அவன் உடல் கிடுகிடென் ஆடிற்று. அவள் எழுந்து அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள்.

“சில விஷயங்கள் சில சமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்தது தான் உண்டு. அவை தேர்ந்தவிதமல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது நேர்வது அல்லாமலும் முடியாது. நேர்ந்த சமயத்தில் நேர்ந்தபடி அவை நேர்வது அல்லாது முடியாது. நேர்ந்தமையால், அதனாலே நேர வேண்டியவையாவும் ஆகிவிடுகின்றன. அப்படி நேர வேண்டியவையாய் ஆனதால் அவை நேர்ந்ததால் அவைகளில் ஒரு நேர்மையும் உண்டு. அந்த நேர்மை தவிர அவை நேர்ந்ததற்கு வேறு ஆதாரம் இல்லை. வேண்டவும் வேண்டாம். அவைகளின் ஸ்வரங்களே அவ்வளவுதான்.”

“நீங்கள் ஆச்சரியமான நிமிஷங்கள் படைத்தவர்.”

இருவரும் வெகு நேரம் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். தம்பூரின் மேல் பதிந்த அவன் நாட்டம் மாறவில்லை.

“சரி, நேரமாகிவிட்டது, எழுந்திருங்கள்.”

“ஆகட்டும்.”

“இப்போது மணி என்னவோ? கண்ணை ஒரு முறை கொட்டியாவது திறக்கவேண்டாமா?”

“கண்ணை மூடினால் மாத்திரம் நேரமாகவில்லையா? விழித்துக்கொண்டிருந்தாலும் நேரந்தான். தூங்கினாலும் நேரந்தான். ஆகிற நேரம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது.”

“நிமிஷத்தில் வருஷங்கள். வருஷத்தில் நிமிஷங்கள் காலகதியின் உண்மையான தன்மையில் நிமிஷத்துக்கும் வருஷத்துக்கும் வித்தியாசம் இல்லை.”

“நீ படித்திருப்பதால் நீ சொல்வதையெல்லாம் நிரூபிக்க முடியும். எனக்குத் தெரிந்தது கூட்டில் அடைபட்டாற்போல் இங்கு இருக்கிறேனே , இந்த எட்டு வருஷங்கள் தாம். எட்டு வருஷங்கள். ஒன்றா இரண்டா … ?”

அவள் தலை குனிந்தாள். அவன் புறங்கையில் இரண்டு நெருப்புச் சொட்டுக்கள் விழுந்தன. அவன் மனம் பஸ்மம். போல் பிசுபிசுத்தது.

“தாக்ஷாயணி, ஏன் அழுகிறாய்?”

அவள் முகம் பயத்தில் மாறுவது நிலவில் கூடத் தெரிந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்.

“நீங்கள் எதை நினைக்க வேண்டாம் என்று கவலைப் படுகிறேனோ, அதையே தான் இப்போது இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.”

“மனம் என்பது எப்பொழுதும் ஒரு நிலையில் இருப்ப தில்லை. அது எண்ணுவதையெல்லாம் எண்ணியே தீரும்.”

அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“என்னால் உங்களுக்கு ஒரு சுகம் கிடையாது. நான் படி மிதித்ததிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.”

“என் வியாதிக்கும் நீ படி மிதித்ததற்கும் சம்பந்தம் இல்லை. இது குடும்பத்தில் இரண்டு வழியிலும் இருக்கிறது. என் தாய் இறந்தது காசநோயால் தான். என் தாயைப் பெற்ற பாட்டனார் இறந்ததும் அதே வியாதியால் தான். என் தகப்பனாரோ தம் அத்தை மகளையே மணந்து கொண்டார். ஆகையால் நான் எனக்கு வந்ததைத் தப்ப முடியாது. இருந்தாலும் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது எண்ணுவதை எண்ணியே தீரும். எண்ணங்களை அறவே ஒழிக்க முடியாது. முடிந்தவரை அடக்க முடிந்தால் அதுவே ஒசத்தி.”

“நானுந்தான் நினைத்துக் கொள்கிறேன் : ஓரொரு சமயம், நீங்கள் எப்படி வீணாய்ப் போய்விட்டீர்கள் என்று. என்னவோ ஆரம்பத்தில் ஜலதோஷ ஜுரம் என்று தானே நினைத்தோம்.”

“டாக்டர் என்னை வைத்துக்கொண்டு உன்னிடத்தில் தானே சொன்னார்? ஆத்திரத்துடன் கேலி பண்ணினார். ‘அம்மா! உங்களுக்கு உங்கள் புருஷன் மிஞ்சணுமானால் பட்டணத்தை விட்டு எங்கேயாவது கிராமத்துக்கு ஓடிப் போய் விடுங்கள். இந்த இடத்து மூச்சை இன்னும் ஒரு நிமிஷம் கூட சுவாசிக்க இவர் லாயக்கில்லை. சுவாசப்பை யில் ஓட்டை விழ எப்போடா என்று காத்துக்கொண்டிருக்கிறது!”

‘இன்று பாலத்தில் நாம் நின்றபோது ரயில் வந்ததே, அப்போது இதைத்தான் நினைத்துக்கொண்டேன். எட்டு வருஷங்களுக்கு முன்னால் இதே வண்டிதானே இந்த ஊரில் நம் இருவரையும் கக்கிவிட்டுச் சென்றது? நான் தான் முதலில் இறங்கினேன். தம்பூரைத் தோளில் மாட்டிக் கொண்டு பின்னால் நீங்கள் இறங்கினீர்கள். உங்களுக்குக் கை கொடுத்து இறங்கவேண்டியிருந்தது. அவ்வளவு பலவீனமாய்ப் போயிருந்தீர்கள். அந்த மூன்று மாதங்களுக்குள்.”

“இப்போதுந்தான் எதற்கு உபயோகம்? உனக்குக் குழந்தையாகவே நானும் ஆகிவிட்டேன். பெண்களுக்குள் ஒரு வசனம் உண்டு; பெற்றது வயிற்றுப் பிள்ளை; கொண்டது கயிற்றுப் பிள்ளை. எப்படி இருந்தால் என்ன? இருவர் மூவரானோம். அது நிமிஷத்தில் சேர்ந்ததா, வருஷத்தில் சேர்ந்ததா?” அவன் முகத்திலிருந்து பத்து வருஷங்கள் சட்டென உதிர்ந்தன. பாபுவின் முதுகைத் தடவினான்.

“நானும் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த நிமிஷத்தில் எதையுமே மனத்தில் ஒளித்து வைக்க முடியவில்லை . இந்த எட்டு வருஷங்களுக்குள் ஒரு தடவை, எப்போது என்று சொல்ல மாட்டேன், நானும் உங்களை விட்டுப் பிரிந்து போய்விடவேண்டும் என்று நினைத்தது உண்டு.”

“ஏன்?” அவளை ஸ்வாரஸ்யத்துடன் கவனித்தான்.

“ஏன் என்றால் என்னத்தைச் சொல்வது? நீங்கள் தான் சொன்னீர்களே, அது மாதிரி ஒரு நிமிஷபுத்திதான். இப்படித் தோசியாய்ப் போய்விட்டேனே என்ற மனக் கசப்பு. பிறந்த வீட்டுச் சபலமும் இருக்கலாம். ஒரே எண்ணம் மனசை முற்றுகையிட்டு விட்டால்தான் முன்புத்தி பின்புத்தியில்லாமல் அடித்து விடுமே! என்னவோ நினைத்துக்கொண்டேன்; அவ்வளவுதான். நீங்கள் அசதியாய் உறங்கிக்கொண்டிருந்தீர்கள். பையன் விளையாடப் போயிருந்தான். கடியாரத்தைப் பார்த்தேன். வண்டிக்கு நாலு நிமிஷங்களே இருந்தன. ஈரக் கையை மடியில் துடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.”

அவள் அவனைப் பார்க்கவில்லை. நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டாள்.

“நான் சொல்வதைச் சொல்லிவிடுகிறேன். இந்த நிமிஷம் என்னால் எதையுமே ஒளிக்க முடியவில்லை. நம்மிடையில் இது ஒன்றுதான் இருவருக்கும் தெரியாதது. அதையும் இல்லையென்று பண்ணிவிடுகிறேன். வயல் வரப்புக்களின் மேல் தட்டுத் தடுமாறிக் குறுக்கு வழியில் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். சவுக்குத் தோப்பின் உச்சியில் புகைப்படலம் தெரிந்துவிட்டது. மூங்கில் பாலத் தின் மேல் கால் வைத்தேன். வண்டி ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது. நீளமாய் ஒரு முறை ஊதிற்று. இன்னொரு முறையும் ஊதிற்று. ‘ஏ அசடே, வழிதப்பிப் போகாதே. இந்தத் தடவை உன்னைக் காப்பாத்தியாச்சு. இங்கேயே விழுந்து கிட’ என்று கடிவது போல் இருந்தது.”

அவளுக்கு மூச்சு இரைத்தது.

அவன் அவள் கையை இழுத்து தன் கையுள் வைத்துக் கொண்டான். அவள் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள் “உஷ்!” குழந்தை முழிச்சுக்கறான்!” என்றாள்.

பாபு உடம்பை முறுக்கிக் கொண்டு கண்ணைத் திறந்து, இருந்த இடம் புரியாமல் ஒரு தரம் மிரள விழித்தான். தன் மேல் கவிந்த முகங்களை அடையாளம் கண்டு கொண்டதும் அவன் முகத்தில் வெளிச்சம் உண்டாயிற்று. காலை நீட்டி அவள் மடியில் சொகுசாய்ப் போட்டுக் கொண்டான்.

“அப்பா! அம்மாக்கும் உனக்கும் நடுவில் நான் பாலம்” என்றான்.

– பச்சை கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *