கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 7,966 
 

அம்மாவும் நானும் இரவு சாப்பாட்டை முடித்துப்போட்டு வாசற்படியில் இருந்;து அம்புலிமாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நிலா நிலா ஓடி வா பாட்டை நான் பாடினேன். அப்பா வந்து அம்மாவைப் பேசினார். நீ ஏன் அவன் ஆனந்தன் வீட்டை போனி. உனக்கெத்தனை தரம் சொல்கிறது அந்த நன்றி கெட்ட நாய்களோடு கதைக்க வேண்டாம் என்று. ஆ.

அம்மா என்னுடைய தலையைத் தடவிக் கொண்டு பேசாமல் இருந்தா.

ஏன் நான் ஒருத்தன் இங்கை கதைக்கிறது கேக்கவில்லையோ.

ஏன் உப்ப கத்துகிறீங்கள். அம்மாவுக்கும் சுகமில்லையென்று சொல்லிச்சினம். அதான் ஒருக்காப் போய் பார்ப்போம் என்று போனான்.

ஓமோம். உன்னுடைய கொம்மாவிற்கு நெடுகச் சுகமில்லை. நீயும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு அங்கே நெடுகப் போ. நான் சொல்கிறதை எப்ப நீ கேட்டிருப்பாய். சொல்லு பார்ப்போம். அவங்கள் செய்ததை எல்லாம் மறந்திட்டு வெட்கமில்லாமல் அவங்கடை வீட்டை …

திடீரென்று நாலுபேர் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்திச்சினம். யாரது என்று அப்பா கேட்டார். ஆனால் அவர்கள் ஒன்றும் கதைக்காமல் வந்து நீட்டு நீட்டாக துவக்கைக் காட்டி சத்தம் போடாதே. பிரச்சினை தந்தா சுட்டுக் கொண்டு விடுவம் என்றார்கள். நாலு மாமாமாரும் மூக்கையையும் வாயையும் மறைத்து கைலேஞ்சி கட்டியிருந்திச்சினம். நாலு மாமாக்களிலும் குண்டாக இருந்த மாமா சிவம் எங்கே என்று கேட்டார். அவன் இங்கே இல்லை என்று அப்பா சொன்னார். ஆனால் குண்டு மாமாவைத் தவிர மற்ற மூன்று மாமாக்களும் வீட்டுக்குள்ளே ஓடி ஓடித் தேடிச்சினம். ஆனால் உள்ளுக்குள்ளே படித்துக் கொண்டிருந்த கவியக்காவை மட்டும்தான் பிடித்துக் கொண்டு வந்திச்சினம். குண்டு மாமா அப்பாவைப் பிடித்து அவர் தலையை சுவரிலே இடித்தார். சிவம் எங்கே. உண்மையைச் சொல்லு. இல்லாட்டி குடும்பம் முழுக்கச் சுடுவம். அவன் இங்கே வந்து நிற்கிறான் என்று தகவல் எங்களிற்கு வந்தது. ஆள் எங்கே?

அவன் இங்கே வந்து மூன்று நாலு மாதம் ஆகிட்டுது, தம்பி. அவன் இங்காலே வருகிறதில்லை. காம்பிலேயே நிற்கிறவன்.

உன்டை மகன் என்ன செய்திருக்கிறான் தெரியுமோ. எங்கடை ஆக்கள் ஏழு பேரைக் கொன்றிருக்கிறான். போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவங்கள். அவங்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறான்.

அவன் அப்படிச் செய்யக் கூடியவனில்லை தம்பி. தமிழனைத் தமிழன் கொல்லுகிறது கூடாது என்று சொல்லிறவன். அவன் செய்திருக்க மாட்டான்.

டேய். அவன் சொன்னால் செய்யப் போகிறானே. எங்கடை ஆக்கள் பார்த்தவங்கள். அவன்தான். அவனும் இன்னும் சில நாய்களும் சேர்ந்து செய்திருக்கிறாங்கள்.

அவன் செய்திருந்தாலும் நாங்கள் அதற்குப் பொறுப்பில்லை தம்பி. அவன் அந்த இயக்கத்திலே சேர்ந்ததற்கு எவ்வளவு வருத்தப்பட்டனான்.

அப்படி என்றால் எங்கடை இயக்கத்திலே சேர்ந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பியோ.

அப்படி இல்லை தம்பி. ஆனால் நாங்கள் உங்கடை இயக்கத்திற்குத்தான் சப்போர்ட்.

கதையைக் கேளுங்கடா டேய். ஏழு பேரைக் கொன்றிருக்கிறான் உன்டை மகன். நீ கதையோடா விடுகிறாய். குண்டு மாமா துவக்கால் அப்பாவின் காதுப் பக்கம் அடித்தார். அம்மா உடுப்புத் துவைக்கையில் வரும் சத்தம் போல் கேட்டது. அப்பாவின் காதுப் பகுதியிலும் கழுத்திலும் இரத்தம் வடிந்தது. அப்பா அப்படியே சுவரிலே சாய்ந்து இருந்திட்டார்.

அம்மா சத்தம்போட்டு அழுதா. அந்த மனிசனை அடிக்காதீங்கோ தம்பி. சுகமில்லாத மனிசன். ஏதாவது நடந்திடும். உங்கடை காலிலே விழுந்து கும்பிட்டுக் கேக்கிறேன். அவரை விட்டு விடுங்கோ. நாங்கள் ஒரு தப்பும் செய்யேலை. அம்மா குண்டு மாமாவின் காலடியில் சிவன் கோவிலில் கும்பிடுகிற மாதிரி கும்பிட்டா. அம்மா முந்தி சொன்னவா கடவுள் எங்களிலும் பார்க்க சக்தி வாய்ந்தவர். அவரை விழுந்து கும்பிட்டாத்தான் அவருக்கு மரியாதை கொடுப்பது போலாகும் என்று. அப்பிடியென்றால் குண்டு மாமாவும் கடவுளா. பக்கத்தில் நின்ற கவியக்காவைக் கேட்கலாம் என்றால் கவியக்கா கேவிக் கேவி அழுது கொண்டிருந்தா. அவா கடைசியாக அழுதது போன கிழமை. அப்பா குட்டினதாலே அழுதவா. கணக்கு டெஸ்டிலே குறைய மாக்ஸ் எடுத்ததென்று அப்பா குட்டினவர். அவள் நளினியைப் பார். என்ன மாதிரி நல்ல மாக்ஸ் எடுக்கிறாளென்று நீயுமிருக்கிறாய் மூதேவி. விதம்விதமா உடுத்தி ஸ்டைல் காட்டத்தான் தெரியுமே தவிர ஒழுங்கா படித்து நல்ல மாக்ஸ் எடுக்கத் தெரியுதே. மடச்சனியன் என்றெல்லாம் அப்பா பேசினவர். அம்மா சொன்னவா அவருடைய குணம் தெரியும்தானே உனக்கு. முதலிலே கோபப்படுவார் பிறகு வருந்துவார். அழாதே. சொன்னால் கேள் என்று.

காலடியில் விழுந்து கும்பிட்ட அம்மாவைக் குண்டுமாமா காலால் உதைத்தார். எழும்பு. எனக்கு இந்த கண்ணீர் நாடகம் எல்லாம் பிடிக்காது. உண்டை புருசனுக்கு நான் இலேசாகத் தட்டினதற்கு நீ இப்படி அழுகிறாய். ஆனால் எங்கடை ஆக்கள் ஏழு பேர் செத்ததற்கு அழுதியோ. அவங்கடை தாய்மார் எப்பிடி அழுதிருப்பாங்கள் சொல்லு பார்ப்பம்.

அப்ப உயரமாக ஒல்லியாக இருந்த மாமா குண்டு மாமாவைப் பேசினார். வந்த வேலையைப் பார்க்காமல் சும்மா கதைத்துக் கொண்டிருந்தால். எங்கே சாமான்கள் இருக்கிறதென்று கேள். குண்டு மாமா அம்மாவைக் கேட்டார். எங்கே உங்கடை நகைகள் பொக்கிஷங்கள் இருக்கென்று காட்டு.

எங்களிட்டை ஒன்றும் இல்லை தம்பி. நான் போட்டிருக்கிற தாலிக் கொடி மட்டும்தான் இருக்குது.

குண்டு மாமா துவக்கால் அம்மாவை அடித்தார். உனக்கு இப்பத்தான் சொன்னான் கதைவிடாதே என்று. எங்கே இருக்குது என்று காட்டு. அக்கா உடனே நான் காட்டுகிறேன் என்று ஒல்லி மாமாவை சாமியறைக்குக் கூட்டிக் கொண்டு போனா.

குண்டு மாமா எங்களெல்லாரையும் ஹோலுக்குள்ளே போய் இருக்கச் சொன்னார். ஹோலுக்குள்ளே இருந்த ஒரு மாமாவின் படத்தைக் கண்டதும் குண்டு மாமா கோபமாகக் கத்தினார். அவங்களை சப்போர்ட் பண்ணுகிறதில்லையென்று போட்டு இந்த நாயின்ரை போஸ்டரை ஏன் இங்கை ஒட்டி வைத்திருக்கிறீங்கள். ஆ.

சிவம்தான் தம்பி ஒட்டினவன் என்று அப்பா சொல்ல குண்டு மாமா துவக்கால் அப்பாவைத் திருப்பவும் அடித்தார். அம்மா அழுதா. குண்டு மாமா அந்தப் படத்தைக் கிழித்தெறிந்தார்.

அப்ப ஒல்லி மாமா ஒரு சாக்கில் கனசாமான்களையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு வந்தார். பிறகு ஒல்லி மாமாவும் தாடி மாமாவும் ஒவ்வொரு அறையாக வேறெதுவும் சாமான்கள் இருக்கிறதா என்று தேடிச்சினம். அப்ப குண்டு மாமா கவி அக்காவோடு கதைத்தார். உனக்கொருத்திக்குத்தான் இங்கே உண்மை சொல்லத் தெரியுது. எத்தனையாம் வகுப்புப் படிக்கிறாய்.

ஓ லெவல் என்று அக்கா சொன்னா. அக்கா இன்னும் அழுது கொண்டேயிருந்தா.

அழாதே. இப்ப என்ன செய்திட்டம். இனித்தானே எல்லாம் செய்ய வேண்டும். ஆ.

ஹோலுக்குள் எங்களோடு நின்ற மற்ற மாமா சிரித்தார். அப்ப ஒல்லி மாமாவும் தாடி மாமாவும் அப்பாவின் றூமூக்குள் இருந்து றேடியோ வேறு சில சாமான்களுடன் ஹோலுக்குள் வந்திச்சினம். எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு. வேறொன்றும் இல்லை என்று ஒல்லி மாமா சொன்னார்.

தாலியை மறந்திட்டாய் என்று குண்டு மாமா சொன்னார். அம்மாவின் தாலியை தாடி மாமா கழட்டினார். அவா போட்டிருந்த இரண்டு காப்பையும் கழட்டிச்சினம். பிறகு குண்டு மாமா அக்கா போட்டிருந்த செயினையும் கழட்டினார். வேறெங்கேயும் நகை போட்டிருக்கியோ என்று குண்டு மாமா கேட்டார்.

கவியக்கா இல்லை என்று சொன்னா.

பொய்.

உண்மையாக இல்லை.

எங்கே பார்ப்பம் என்று குண்டு மாமா அக்காவைத் தடவினார். மற்ற மூன்று மாமாவும் சிரித்தார்கள். குண்டு மாமா கவியக்காவிற்கு கிச்சுகிச்ச மூட்டியிருக்கிறார் என்று நானும் சிரித்தேன். அம்மா எனக்குக் கிச்சு கிச்சு மூட்டுவது எனக்குப் பிடிக்கும்.

தம்பி அவளை விட்டு விடு. உன்னைக் கும்பிடுகிறேன் என்று அம்மா சொன்னா.

ஆனால் குண்டு மாமா அக்காவை ஒரு அறைக்குள்ளே இழுத்துக் கொண்டு போனார்.

உடனே அம்மா கத்திக் கொண்டு குண்டு மாமாவை நோக்கி ஓடினா. ஆனால் ஒல்லி மாமா அம்மாவைப் பிடித்துத் தள்ளிவிவிட்டார். அம்மா சுவரில் இடிபட்டு விழுந்தா. ஆனால் அம்மா திரும்பக் கத்திக் கொண்டு எழும்ப ஒல்லி மாமா துவக்கால் இரண்டு தரம் தலையில் அடித்தார். அம்மா நிலத்திலே சாய்ந்து படுத்திட்டா. அப்பா எழும்பி அம்மாவைத் தூக்க முயற்சித்தார்.

பேசாமல் போய் இரு. இல்லாட்டி உனக்கும் அடி கிடைக்கும் என்று ஒல்லி மாமா சொன்னார்.

அப்பா கதிரையில் இருந்து நிலத்தைப் பார்த்தபடி அழுதார். அவருடைய முழு உடம்பும் குளிரில் நடுங்குவது போல் நடுங்கியது. ஒல்லி மாமா எனக்குப் பக்கத்தில் இருந்து சிகரெட் பிடித்தார். ஒரு சிகரெட் குடியேன் என்றார்.

நான் வேண்டாம் என்றேன். சிகரெட் பிடித்தா நோய் வந்து சாவம் என்று அம்மா சொன்னவா என்று சொன்னேன்.

ஒல்லி மாமா சிரித்தார்.

அப்ப குண்டு மாமா அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். நல்ல சரக்கு மச்சான் என்றார். ஒல்லி மாமா சிகரெட்டைக் குண்டு மாமாவிடம் கொடுத்து விட்டு அறைக்குள் போனார். குண்டு மாமாவும் மற்றவர்களும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி சரக்கு என்று சொன்னார்கள். சரக்கு என்றால் என்ன அம்மாவைக் கேட்கலாம் என்றால்; அம்மா நிலத்தில் படுத்து நித்திரை. அப்பாவைக் கேட்டால் கோபம் வந்து கத்துவார். முந்தி ஒருக்கா கொஞ்சப் பேர் லவுட்ஸ்பீக்கர் மூலமாக தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கத்திக் கொண்டு போனார்கள். அப்ப நான் அப்பாவிட்டைக் கேட்டேன். தமிழீழத் தாயகம் என்றால் என்ன என்று அவர் சொன்னார். தமிழர் இலங்கையில் வாழும் பகுதி என்று. அப்ப நான் கேட்டேன். அது எப்படி தமிழனின் தாகத்தைப் போக்கும். தண்ணியல்லவோ வேணும் என்று. அப்பா உடனே கோபமாக உன்டை தலை என்று கத்தினார். உனக்கு எதற்குக் கேள்வி கேட்கிறதில்லை என்றார்.

அம்மா அப்பாவைப் பேசினா. சின்னப் பிள்ளை அப்படித்தான் கேட்பான். பொறுமையாகப் பதில் சொல்கிறதை விட்டு விட்டு என்றா.

அப்ப நீயே பொறுமையாய் இருந்து சொல்லு என்று அப்பா சொன்னார்.

அம்மா சொன்னா பலவிதமான தாகம் இருக்குது. தண்ணி குடிக்கிறது ஒருவித தாகம். அதுபோல் எம்மிடம்; இல்லாததை எமக்கு வேண்டியதை அடைய ஏங்குவதும் ஒருவித தாகம்தான். தமிழன் தனக்குத் தமிழீழம் வேண்டும் என்று தாகமாய் இருக்கிறான் என்றா.

யார் தமிழன் அம்மா என்று நான் கேட்டேன்.

நாங்கள் எல்லோரும் தமிழர்.

நானும் தமிழனோ.

ஓம். நீயும் தமிழன்தான்.

அப்ப ஏன் எனக்கு அந்தத் தாகம் இல்லை. எனக்குத் தண்ணித் தாகம் மட்டும் தானே வருகிறது.

அம்மா சிரித்தா. நீ வளர்ந்தால் உனக்கும் தாகம் வரும் என்றா.

அம்மா எழும்பினாற் பிறகு சரக்கு என்றால் என்ன என்று கேட்க வேண்டும். அப்பாவும் கவியக்காவும் பொறுமையாகப் பதில் சொல்ல மாட்டினம்.

ஒல்லி மாமாவிற்குப் பிறகு மற்ற இரண்டு பேரும் ஒருத்தொருத்தராய் கவியக்காவுடன் அறைக்குள் போய் இருந்திச்சினம்.

பிறகு சாமான்கள் சாக்கு மூட்டைகளை எடுத்துக் கொண்டு வெளியிலே போனார்கள். அப்பா நிலத்தைப் பார்த்தபடி நடுங்கியபடி அழுது கொண்டிருந்தார். அப்பா இதற்கு முதல் அழுது நான் பார்க்கவில்லை. நான் அம்மாவிற்குப் பக்கத்தில் போய்ப் படுத்தேன். அண்டைக்கு எனக்கு அம்மா கதை சொல்லவில்லை. வழமையாக நான் படுக்கும்போது எனக்குக் கதை சொல்கிறவா.

ஆனால் அம்மா இரண்டு நாளா எழும்பேலை. குப்பிளான் அன்ரி, பெரியப்பா, பெரியம்மா, அம்மம்மா, காந்தன் அண்ணா எல்லோரும் வந்திருந்திச்சினம். இன்னும் கனபேர் வந்திருந்திச்சினம்.

அம்மாவை அதற்குப் பிறகு நான் காணேலை. ஆனந்தன் மாமா சொன்னார். அம்மா சொர்க்கத்திற்கு போயிட்டா என்று. ஏன் என்னை விட்டுப் போனவா. சொர்க்கம் இங்கிருந்து கன தூரமாம். நாங்களெல்லாம் இப்ப போகேலாதாம். நான் யாரிடம் சரக்கு என்றால் என்ன என்று கேட்பது. அப்பாவும் அக்காவும் சுவற்றைப் பார்த்தபடி கதைக்காமல் அழுது கொண்டேயிருக்கினம். நான் யாரிடம் கேட்பது.

(சரிநிகர் ரூ தாயகம், 1996)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *