தவறுதலான தவறுகள்…!

 

உங்களுக்குப் பேரளத்தாரைத் தெரியாது. அவர் எங்கள் கிராமத்து ஆசாரி. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் பேரளம். எப்படியோ எங்கள் புளியங்குடி கிராமத்தில் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் குடியேறி….வாழ்ந்து வருவதால் அந்தப் பெயர். அவர் சொந்தப் பெயர் கிராமத்தில் சத்தியமாக யாருக்கும் தெரியாது.

அறுபத்தைந்தைத் தாண்டிய ஆள். ஒட்டிய வயிறு. வத்தல் உடல். குள்ள உருவம். கோம்பை முகம். ஒடுக்கு விழுந்த கன்னம். நரைத்த திருவள்ளுவர் தாடி மீசை. அட்டைக்கரி நிறம். காய்ப்பேறிப்போன கைகள். இரண்டு கால்களிலும் ஆணி என்பதால் பனை மட்டை செருப்புப் போட்டும் தாங்கித் தாங்கி நடப்பார். ஆனாலும் நடையில் வேகம், சுறுசுறுப்பு குறையாது. இடுப்பில் கோவணம், வேட்டி. மற்றப்படி மருந்துக்கும் அவர் உடலில் ஒட்டுத் துணி கிடையாது. எங்கு சென்றாலும் இதே கோலம். வெளியூர் சென்றால் மட்டும் கூடுதலாய் தோளில் ஒரு துண்டு. இவருக்கு எங்கோ மனைவி இருப்பதாய் கேள்வி. அவள் யாருடனோ வாலிபவயதில் ஓடிவிட்டதாய்ப் பேச்சு. உண்மை நிலவரம் ஒருவருக்கும் தெரியாது.

அப்பாவிடம் கேட்டால், “நீ சின்னப்பிள்ளை. அது உனக்குத் தேவை இல்லாத விசயம.;” என்பார்.

அதனால் எனக்கு அதைப் பற்றிக் கவலைக் கிடையாது.

அவருக்கு ஒரு மகன் உண்டு. உண்மைப் பெயர் தங்கராசு. கிராம மக்கள் அவனை வெறுப்பேற்றி ரசிப்பதற்காக அழைக்கும் பெயர் முய்யாக்கண்ணன்.!

இவனும்; கருப்பு. அப்பன் முகம். அரை கிறுக்கன். பேச்சு சரியாய் வராது. வாயில் வாணி ஒழுகும். அப்பன் சொன்னதைச் செய்வான். வேறு யார் பேச்சும் கேட்க மாட்டான். இடையில் அழுக்கு வேட்டி. உள்ளே பட்டாபட்டி அண்டர்வேயர். தலையில் முண்டாசு. மழையானாலும் குளிரானாலும் அப்படியே. எப்போதாவது அப்பாவுடன் காரைக்கால் சென்றால் சட்டை அணிவான். அது பானைக்குள் வைத்து எடுப்பதால் கசங்கி, சுருங்கி கன்னாபின்னாவென்று இருக்கும். அதைப் பற்றி அவனுக்குக் கவலை கிடையாது. ஆள் நின்றால் கால்கள் இரண்டும் வில்லாக வலைந்திருக்கும். வயிறு கொஞ்சம் தொப்பை. இல்லை இல்லை.. உப்பல். சாப்பிட்டுவிட்டு நின்றால்…. இடுப்பு நெளிந்து அது இன்னும் உப்பலாகத் தள்ளி அசிங்கமாக இருக்கும். வெற்றிலைப் போடுவான். சுருட்டுப் பிடிப்பான். பேரளத்தார் பீடி பிடிப்பார். இவரே மகன் சுருட்டிற்கு தீப்பெட்டி கிழித்து நெருப்பு பற்ற வைப்பார்.

தங்கராசுவிற்கு…. தன் குடிசைக்குப் பக்கத்தில் இருக்கும் எங்கள் கடையில் பீடி, சுருட்டு வாங்க மட்டுமேத் தெரியும். பாக்கி காசு கணக்காக வாங்கத் தெரியாது. அதிகமாக் கொடுத்தாலும் குறைவாகக் கொடுத்தாலும் அப்படியே வாங்கிப் போவான். பேரளத்தார் விரட்ட திரும்பி வருவான்.

ஊர் கடைசியில் எங்கள் கடைக்கு அருகில் இருக்கும் ஓட்டைக் குடிசைதான் இவர்கள் வாழ்விடம். அதை அடுத்து இரும்பு வேலை செய்யும் கொல்லன்,வண்ணான், பரியாறி குடியிருப்புகள். அதைத் தாண்டி வயல்வெளிகள்.

பேரளத்தார் குடியிருப்பு இடத்தைக் குடிசை என்று சொல்ல முடியாது. ஒரு ஆள் புகுந்து புறப்படுகிறாற்போல் அமைந்த பனை மட்டை குடிசை. ஒட்டு பலகையிலான மரக்கதவு. உள்ளே கொஞ்சம் மண்சட்டி, பானை, பாத்திரங்கள். அப்புறம் உளி, சுத்தியல் என்று தொழில் சம்பந்தமான பொருட்கள். எதுவும் ஒழுங்கு முறையாக அடுக்கி இருக்காது. கன்னாபின்னாவென்று குப்பையாகக் கிடக்கும். வீட்டு மூலை ஓரத்தில் சுள்ளிகள் வைத்து சமைக்கும் சின்னதாக மண் அடுப்பு. அதில் சின்னதாக ஒரு சட்டி, பானை. பேரளத்தார் சமைக்க… சாப்பிடுவார்கள். பெரும்பாலும் காய்கறியெல்லாம் கிடையாது. கருவாட்டுக் குழம்பாகத்தானிருக்கும். தெருவில் வந்து விற்கும் மீன் விற்பவளிடம் வாங்குவார். ஒடுக்கு விழுந்த அலுமினியத் தட்டில்தான் சாப்பாடு. அது கோபத்தில் மகனை அடித்தற்கான உண்டான அடையாளம். பழையதுக்குக் குண்டான். தங்கராசு பழையதை ஒரு கட்டு கட்டுவான். வெளியில் வந்து நெளிந்து நின்று பெரிதாக ஏப்பம் விடுவான்.

கிராமத்தில் என்னைத் தவிர மற்ற எல்லா சிறுவர்களும் தங்கராசுவை, “முய்யாக்கண்ணாhh…ஆ !”கூவி மறைவார்கள்.

அவ்வளவுதான்.! குரல் கேட்ட மாத்திரம்…. ஆத்திரம். அரக்க பரக்க… தெருவில் ரோட்டில் ஓரத்தில் கல் தேடுவான். கிடைத்தால் எடுத்து எறிவான். கிடைக்காவிட்டாலும் மண்ணை அள்ளி வீசுவான். அந்த ஆத்திரம் ஆவேசம் அடங்க அவனுக்குப் பத்து நிமிடங்கள் ஆகும். அதையும் தாண்டி அதிகம் போனால் ஆபத்து. வலிப்பு. இந்த கோபம், ஆட்டம், ஆவேசத்தை ரசிப்பதற்காகவே சிறுவர்கள் அவனைச் சீண்டுவார்கள். சமயத்தில் பெரிவர்களும் சீண்டி மண் வீச்சு வாங்குவார்கள். அப்பாவுடன் போகும் போது அப்படி யாராவது சொல்லி ஓடிவிட்டால்… “…பயப்புள்ள ! ” என்று பேரளத்தார் கொச்சை வார்த்தையில் திட்டுவார். தங்கராசுக்குத் தினமும் காக்காய் வலிப்பு வரும். அது எப்போது, எப்படி வருமென்று யாரும் கணிக்க முடியாது. விழுந்து உடலெல்லாம் சிராய்ப்பு தலையில் அடி படுவான். இதற்காகவே பேரளத்தார் மகனைத் தனியே விடமாட்டார். எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வார். குறிப்பாய் குளத்திற்கு தண்ணீர் எடுக்க விட மாட்டார். குடிக்க, சமைக்க இவர் போய் சின்ன கலயத்தில் தூக்கி வருவார்.

தங்கராசுவிற்குச் சுத்தியல், உளி பிடித்து அப்பன் வேலை செய்யத் தெரியாது. பேரளத்தார்… ~இதை பிடி!| என்றால் பிடிப்பான். ~அதை எடு!| என்றால் எடுப்பான். மற்றப்படி அவன் அப்பா செய்வதை அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இப்படி அசைந்தால் கையில் இருப்பதால் ஒன்று தலையிலோ தொடையிலோ சுரீரென்று போடுவார். அவன் “ஆ….” அலறி துடைப்பானேத் தவிர அகலமாட்டான். அதையும் தாண்டி அதிகமாக வலித்து கோபம் வந்தால் மட்டும் அவரைக் கன்னா பின்னாவென்று திட்டி எட்டி நிற்பான். வாவென்று அதட்டினாலும் வர மாட்டான் போவென்று விரட்டினாலும் போகமாட்டான். சாப்பாட்டிற்கும் வரமாட்டான். பேரளத்தார் கெஞ்சி கூத்தாடி படாத பாடுபட்டுதான் அவன் கோபத்தைக் குறைத்து சாப்பிட வைக்க வேண்டும். மகன் சாப்பிடாமல் அவர் சாப்பிட மாட்டார். சமயத்தில் மகனுக்கு ஊட்டுவார். அப்பன் மகன்…. அவர்கள் தனி உலகம்.!
பேரளத்தார் கிராம மக்களுக்கு எந்த ஆசாரி வேலை என்றாலும் அவர்தான் செய்வார். இவரைப் போல் கொல்லன், வண்ணான், பரியாறி, வெட்டியான் என்று ஒவ்வொரு கிராமத்திற்கும் ஆட்கள் உண்டு. அவர்களுக்கென்று குடியிருப்பு மனைகளும், நிலங்களும் உண்டு. அது மட்டுமில்லாமல் அவர்கள் அறுவடைக்காலங்களில் எல்லா களத்து மேட்டுகளிலும் வருடக் கூலி மட்டும் பெறாமல், செலவிற்கும் நெல் பெறுவார்கள்.

தங்கராசுவிற்கு ஒரு மரக்கால் நெல்லைத் தவிர நான்கு மரக்கால் நெல்லை மூட்டையாய்க் கட்டி தலையில் தூக்கி வரத் தெரியாது. அதற்கும் பேரளத்தார்தான் செல்வார். மகன் தலையில் ஒரு மரக்கால் வைத்துவிட்டு மீதியைத் தன் தலையில் தூக்கி வருவார்.

எங்கள் ஊரில் பெரியப்பண்ணை, சின்னப்பண்ணை, நடுப்பண்ணை, மரைக்காயர் பண்ணை என்று நான்கு பண்ணைகள். அத்தனைப் பண்ணைகளும் தொழிலாளிகளுக்குத் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் புதுத்துணி, பட்டாசு, கரும்பு, சர்க்கரை, அரிசி,பொங்கல் பானைகள் கொடுத்து மரியாதை செய்யும். அன்றைக்குத் தான் பேரளத்தாரும், தங்கராசும் புதுத் துணி அணிவார்கள். அடுத்த நாளே அது அவர்களுக்கு அழுக்காகி விடும். அப்பனும் பிள்ளையும் எப்போதாவதுதான் குளத்தில் குளிக்கும்போது துணிகளுக்குக் கருநீல நிறத்தில் இருக்கும் சவுக்காரம் போடுவார்கள்.

பொங்கலுக்கு பேரளத்தார் எல்லார் வீட்டிற்கும் கொட்டாங்கச்சியில் புதிய அகப்பைகள் செய்து விநியோகம் செய்வார். மற்றப்படி எந்த நேரத்திலும் காலத்திலும் அப்பனும் பிள்ளையும் எவர் வீட்டிலும் வந்து கை நனைத்தது கிடையாது.

ஒரு நாள் பேரளத்தார் புதுக் கலப்பை செய்யும் முயற்சியில் உளி, சுத்தியல் கொண்டு மரத்தைச் செதுக்கிக் கொண்டிருந்தார். மகன் தங்கராசு அவர் அருகில் உட்கார்ந்து மரத்தை ஆடாமல் அசையாமல் பித்துக் கொண்டிருந்தான்.

கடைக்கு வந்த நானும் அவர்களை வேடிக்கைப் பார்த்தேன்.

அந்த நேரம் பார்த்து அவனுக்குத் திடீரென்று வழக்கமாய் வரும் காக்காய் வலிப்பு வந்துவிட்டது. அப்படியே மண்ணில் சாய்ந்து கை கால்கள் வெட்டி வெட்டி இழுத்து வாயில் நுழை தள்ளியது.

பேரளத்தாருக்கு அதிர்ச்சி. செய்வதறியாமல் திகைத்து… அவசரப்பட்டுத் தன் கையிலுள்ள உளியை அவன் கையில் திணித்தார். கை இறுக்கிப் பிடித்த உளி இழுப்பில் எதிர்பாராமல் அவன் நடு வயிற்றில் சொருகி சொருகி விலக…

“ஐயோ! அப்பா! மவனே…!” என்று பதறி கதறி பேரளத்தார் அதைப் பறிக்க முயன்றும் முடியாமல் போக… அவன் உயிர் போய் துடிப்பு அடங்கின பிறகுதான் இழுப்பு நின்றது. இறுகப் பிடித்திருந்த உளி…அப்புறமும் பிரியாமல் ரத்தத்தில் குளித்து தங்கராசு வயிற்றில் அப்படியே இருந்தது.

பேரளத்தார் அப்படியே உறைந்து ஆடாமல் அசையாமல் மகன் சடலத்தைப் பார்த்தார்.

அன்றைக்குப் பார்த்த பேரளத்தார்தான் அப்புறம் நான் பார்க்கவே இல்லை. மகன் இழப்பில் புத்தி பேதலித்து வெளியூரில் பைத்தியமாய்த் திரிந்ததைப் பார்த்ததாய் சிலர் சொன்னார்கள்.

அப்படியேத்தான் அவரும் இறந்திருக்க வேண்டும்.

எனக்கு அந்த அப்பன் மகனை அப்போது பார்க்கும்போது வலி. எத்தனையோக் காலங்களுக்குப் பிறகு இப்போது அவர்களை நினைத்தாலும் வலி.

மேலும்….எனக்கு பேரளத்தார், அவர் மனைவி, தங்கராசு, அவன் பிறப்பு, வளர்ப்பு,அப்பா மகன் வாழ்க்கை, அவர்கள் முடிவு எல்லாம் தவறுதலான தவறுகளாகவேப் படுகிறது. உங்களுக்கு !? 

தொடர்புடைய சிறுகதைகள்
' இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த அத்தனைப் பயணிகளும் பலி! ' - ...
மேலும் கதையை படிக்க...
பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் ...
மேலும் கதையை படிக்க...
இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்.... என்று குரல்கள் மாறி மாறி கேட்டது. கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான். படித்துக்கொண்டிருந்த என்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
ஐம்பது கிலோ மீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு அந்த வீட்டு வாசலில் மனைவியுடன் நின்ற தனசேகரன் தன் கையிலுள்ள தினசரியை விரித்து விலாசத்தை சரி பார்த்தான் சரியாக இருந்தது. முகத்தில் மலர்ச்சி. திவ்வியாவிடமும் காட்டினான் திருப்தி. இருவரும் வாசல் ஏறினார்கள். தனசேகரன் அழைப்பு ...
மேலும் கதையை படிக்க...
நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு... சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க...! ‘‘ மெல்ல அழைத்தாள் என் மனைவி இந்திரா. ‘‘ என்ன...?‘‘ பக்கத்தில் வந்தவளைத் திரும்பி பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
திருமணம்…!
மனிதனும்… மனிதமும்!
நேர்க்கோடு..!
குழந்தை…!
அவர்கள் அடிமைகள் அல்ல….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)