தவமாய் தவமிருந்து..

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,081 
 

“”இங்கே பாருங்க மாமா… உங்க புள்ளை மாதிரி எல்லாம், என்னாலே வழவழா, கொழகொழன்னு பேச முடியாது. விழாவிலே தர்ற, ஐந்து லட்ச ரூபாயும் அப்படியே முழுசா வீடு வந்து சேரணும். “அங்கே தானம் பண்ணிட்டேன்; இங்கே இனாம் குடுத்திட்டேன்…’ன்னு இங்க வந்து நிக்க வேணாம்; வேற இடம் பார்த்துக்கிடலாம்!” மூத்த மருமகள் பவானி, நிர்தாட்சண்யமாய் முடிவைச் சொல்லி விட்டாள்.
“”அண்ணி… அதுல எனக்கு ஒரு வைரத்தோடு வாங்கித் தந்திடுங்க… அது, எங்கப்பா எழுதி, சம்பாதிச்சது; எனக்கும் அதுல பங்கு இருக்கு!” மகள், தன் உரிமைக் கொடியை நிலைநாட்டினாள்.
தவமாய் தவமிருந்து..“”க்கும்… இன்னும் பணத்தை கண்ணுலயே காணல… அதுக்குள்ளார பங்கீட்டு பிரச்னை கொடி கட்டிப் பறக்குது!” என்று நமுட்டுச் சிரிப்புடன், தோளை குலுக்கி, உள்ளே போனாள் சின்ன மருமகள்.
மவுனமாய் தன் கணவரை ஏறிட்டாள் கமலம்மா. அவர் முகம், சொல்ல முடியாத வேதனையில் இருப்பதைக் காட்டியது. ஏதும் பேசாமல், திண்ணைப் புறமாய் நகர்ந்தார்; மனசு தணல்பட்ட பூவாய் மன்றாடியது.
“செம்பருத்தி’ வாரப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் தான், முதன் முதலாய் அவர் எழுதிய கதை, பரிசுக்குரியதாய் தேர்வாகி, வெளியானது. அதன் பிறகு, பரவலாக அவருடைய கதைகள், பல பத்திரிகைகளிலும் வெளியாயிற்று.
காலாண்டுக்கு ஒருமுறை, அப்பத்திரிகை தேர்வு செய்யும் மகரந்தச் சிறுகதைகளில், பல கதைகள் தேர்வாகி, சிறப்பை அளித்தன.
அதுவரை, தான் உண்டு, தன் ஆசிரியர் பணியுண்டு, கதையுண்டு என்று இருந்தவர், ஒரு தவம் புரிய எண்ணினார். அதன்பின், அவர் எழுதி வெளிவந்த அந்த நாவல், அவருடைய நான்காண்டு கால உழைப்பை, உறிஞ்சி வெளியே வந்தது.
நலிந்து போன ஒரு சமூகத்தின் அவலங்களை, பிரச்னைகளை, அவர்களுடனேயே தங்கி, உணர்ந்து, கேட்டு, கவனித்து எழுதியிருந்தார். அந்த சமூகத்தின் அவல நிலையை, அந்த நாவல், நிர்வாணமாகவே தனக்குள் புதைத்துக் கொண்டது.
எல்லாராலும், அந்த நாவல், பரவலாக பேசப்பட்டு, பாராட்டப்பட்டாலும், அவருக்கு மட்டும் ஏதோ ஒன்று குறையாகவே பட்டது. அவர் விரும்பிய, எதிர்ப்பார்த்த, ஏதோ ஒன்று நடைபெறாமலே போய்விட்டது என்ற உண்மை, அவர் மனசுக்குள் ஊவாமுள் போல நிரடிக் கொண்டே இருந்தது.
“எழுத்து என்பது ஒரு விளக்கு போன்றது; அது ஏற்றுபவருக்கும், வெளிச்சத்தைத் தருகிறது; சுற்றி இருப்பவர்களுக்கும் அதனால் பலன் ஏற்படுகிறது. இந்த எழுத்துப் பணி தவம் போன்றது…’ என்று துவங்கும் அந்த பகுதி மொத்தமுமே மனனம் அவருக்கு.
“கமலி… ஒரு தவமாய்த்தானே இந்த நாவலை எழுதி முடிச்சேன்! என் எழுத்து யார் மனசையுமே தொடலையோ? என் எழுத்து அந்த சமூகத்துக்கு ஒரு வெளிச்சத்தை கொடுக்கும்ன்னு நினைச்சேன்… ஒரே ஒருத்தர் அந்த சமூகத்திலிருந்து மேலுக்கு வந்தால், அதுவே ஒரு ஆரம்பமாயிருக்கும்ன்னு எண்ணினேன். என் எழுத்தில் என் சத்தியத்தின் குரல்… அந்த த்வனி ஒலிக்கலையோ?’ என்று மனைவியிடம் பல நேரங்களில் புலம்புவார்.
அவருடைய பணிக்காலம் முடிந்து வந்த ஓய்வூதியத் தொகையை, அந்த சமூகக் குழந்தைகளின் படிப்புக்காக என்று எழுதி, ஆவன செய்துவிட்டு வந்த போது, ஒரு சின்ன மலர்ச்சி, ஒரு கீற்று போல முகத்தில் தெரிந்ததை கமலம்மா மட்டுமே உணர்ந்தாள்.
இது தெரிந்தவுடன், மகன்களும், மருமகள்களும், தங்கள் முகத்தையே மாற்றிக் கொண்டனர். மகன்களின் அலட்சியமும், மருமகள்களின் அசட்டைப் பேச்சும், அவருக்கு நிஜத்தை புரிய வைத்த போது, மனைவியிடம் வருத்தப்பட ஆரம்பித்தார்.
இப்படி பிக்கல், பிடுங்கல் நிற்கையில்தான்… புதிசாய் இந்தப் புயல்…
பிள்ளைகளும், மருமகள்களும் அமைத்த கூட்டணியில், மகளும் வந்த சேர்ந்து கொண்டாள்.
இத்தனை வருடங்களுக்கு பிறகு, அவர் எழுதிய அந்த நாவலுக்கு, ஒரு இலக்கிய அமைப்பு, அவரை கவுரவித்து, விழா எடுத்து, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப் போவதாகக் கடிதம் போட்டிருந்தது.
அவ்வளவுதான்… வீடு முழுவதுமே புதிதாய் ஒரு முகமூடியை அணிந்து விட்டது. பிரவாகமாய் பொங்கிய அன்பு மழையில், முதியவர்கள் இருவரும் அரண்டு போயினர்.
எல்லாமும், மூத்த மருமகள் பவானி, இவர்களின் உரையாடலை ஒட்டுக் கேட்கும் வரைதான். நாடகத்தில் காட்சிகள் மாறுவது போல, மீண்டும் எல்லாமும் தலைகீழாய் மாறின.
அன்றிரவு, அவர், தன் படுக்கையில் அமர்ந்தபடி, கமலம்மாவிடம், “கமலி… என் மனசுல ஒரு திட்டம் இருக்கு… அது, உனக்கு பிடிக்காது கூடப் போகலாம்; ஆனாலும், நீ என்னை மன்னிச்சுடு…’ என்று துவங்கியதுமே, துடிதுடித்து போனாள் கமலம்மா.
“என்னங்க… என்னங்க இது… என்ன பேச்சு பேசுறீங்க… மன்னிப்பு அது, இதுன்னு… என்னோடு இத்தனை வருஷம் வாழ்ந்தும், என்னைப் புரிஞ்சுகிட்டது இவ்ளோதானா?’ – குரலில் வருத்தம் குமிழியிட்டது.
சில நிமிடங்கள் அவளையும், அவள் பேச்சையும் ஆராதிப்பது போல மவுனமாயிருந்தவர்…
“ஒரு தவம் மாதிரி தான், அந்த நாவலை எழுதினேன்… பொருளாதார ரீதியா அவர்களுக்கு உதவ என்னால் முடியலை… ஆனா, இதை படிச்சிட்டு யாராவது ஒருத்தர்… ஏதாவது அந்த சமூகத்துக்கு செய்ய மாட்டாங்களான்னு ஏங்கினேன். அந்த அளவுக்கு நான் உள்ளூர ஆடிப் போயிருந்தேன். ஒரே ஒரு குழந்தை படிச்சு மேல வந்தா போதும்; அதன் மூலமே வெளிச்சம் வந்திடும்ன்னு நெனச்சேன்… என் தவத்துக்கு வரம் கிடைக்கலை…
“அதனாலதான், ரிடையர் ஆனதும் வந்த பென்ஷனைக் கூட எழுதி வச்சேன்… ஆனாலும், அதெல்லாம் போறாதுன்னே தோணுது. அதனால…’ அவர் நிறுத்தினார்.
“சொல்லுங்க!’ அவள் தூண்டினாள்.
“நாம ரெண்டு பேருமே, அங்கேயே போயிட்டா என்ன… விழாவிலே கிடைக்கிற பணத்தை, அந்த சமூகத்தின் மேன்மைக்கு செலவிடணும்ன்னு ஆசைப்படறேன். அங்கே போய், படிப்பை, அகல் விளக்கு மாதிரி ஏத்தி வச்சிட்டாப் போதும். அடுத்த தலைமுறை வெளிச்சத்துக்கு வந்திடும். “அன்னச் சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, உயர்ந்தது ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்…’ன்னு பாரதி சொல்வான்.
“நம்ம கடமைகளை, நம்ம குடும்பத்துக்கு பூரணமா செஞ்சு முடிச்சிட்டோம். இனி, இருக்கிற காலத்தில் இந்த சேவை செய்றதுதான் என் தார்மீக பொறுப்புன்னு நான் நினைக்கிறேன்; நீ என்ன சொல்றே கமலி?’
கமலம்மா வாயைத் திறக்கும் முன், கதவுக்கு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த மருமகள் பவானி, வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறினாள்.
வயதானாலும், மாமனார், மாமியார் தனிமையில் பேசுவதை ஒட்டுக் கேட்கலாமா என்ற விவஸ்தை கூட இல்லாமல், கேட்டதுமின்றி, அதைக் கொஞ்சமும் நாகரிகமில்லாமல், நடு வீட்டில் போட்டு உடைத்தாள் பவானி…
குடும்பம் முழுவதும் கூடி நிற்க, பவானி பேச… முதியவர்கள் இருவரும் கூனிக்குறுகி நின்றனர். கமலம்மாவுக்கு, உடம்பே கூசிப் போனது.
கை நிறைய மாலைகளும், மனசு நிறைய பரவசமுமாய் வந்த இருவரையும், உட்புறமாய் பூட்டிக் கொண்ட கதவுதான் வரவேற்றது.
கை ஓயும் வரை தட்டி, வாய் ஓயும் வரை கூப்பிட்டுப் பார்த்து, ஓய்ந்து போய் திண்ணையில் உட்கார்ந்து கொண்டனர் இருவரும்.
மழை வேறு அடித்து பெய்து கொண்டிருந்தது… திகைப்பும், தவிப்புமாய் நேரம் நழுவிக் கொண்டிருந்தது. மழையும், காற்றுமாய் குளிர் வலுத்தது. அனாதரவாய் தெருவில் விடப்பட்ட அனாதைக் குழந்தைகளைப் போல உணர்ந்ததும், கண்ணீர் பெருகியது அவருக்கு… ஆதரவாய் கமலம்மா அவரைத் தொட்டதுமே உடைந்து போய் அழ ஆரம்பித்தார்.
கமலம்மா அவரை ஆசுவாசப்படுத்த முனைகையிலேயே, வாசலில் கார் ஒன்று, மழை நீரை கிழித்த வண்ணம் வழுக்கி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டவாலி சேவகன், குடையை விரித்துப் பிடிக்க, கதவைத் திறந்து, ஒருவர், வீட்டு வாயிலை நோக்கி வந்தார்; இருவரும், சட்டென்று எழுந்து நின்றனர்.
“”சார்… வணக்கம். “தவமாய் தவமிருந்து…’ நாவலை எழுதிய கிருஷ்ணன் நீங்க தானே? என் பெயர் அய்யனார்; புதிதாக வந்திருக்கிற மாவட்ட கலெக்டர். என்னை மன்னிக்கணும்… உங்க பாராட்டு விழாவுக்கே வந்திருக்கணும். பக்கத்து ஊருல சின்ன பிரச்னை… அதை முடிச்சு திரும்ப லேட்டாயிருச்சு…” என்று, மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசியவர், சட்டென்று தன் கரங்களால், கிருஷ்ணனின் கைகளை பற்றி, தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
திகைத்து நின்றவரைப் பார்த்து, “”இந்தப் பதவி, நீங்கள் போட்ட பிச்சை அய்யா!” என்றார் கண்ணீர் மல்க.
“”ஆமாம் சார்… உங்கள் நாவலை படிச்ச ஒரு பெரிய மனசுக்காரர், எங்கள் பகுதிக்கு வந்து, தட்டுத் தடுமாறி படிச்சுக்கிட்டிருந்த என்னை, “கல்வி தத்தெடுப்பு’ செய்து, படிக்க வைத்தார். அவருடைய முயற்சியால் தான், ஒரு கலெக்டரா உங்க முன்னால நான் நிக்கிறேன்…
“”அது மட்டுமல்ல… எங்க சமூகத்துலே ஒரு சின்ன வட்டமே இப்போ படிக்க ஆரம்பிச்சிருக்கு … அதுக்கு விதை போட்டதே நீங்கதான் சார்…” என்றார் கலெக்டர் குரல் தழுதழுக்க.
“”கலெக்டர் சார்… நீங்க சொன்னது, இப்ப நான் கேட்டது எல்லாமே நிஜமா? அப்போ… என் எழுத்து வீண் போகலே; என் தவம் பலிச்சிருச்சு… அது வரம் வாங்கி வந்திருச்சு… கமலி… வரம் கிடைச்சிடுச்சு… வரம் கிடைச்சிடுச்சு!” உணர்வு பெருக்கில் அவர் தடுமாறினார்.
“”ஆமாம் அய்யா… எங்க சமுதாயம் சாபத்திலிருந்து விடுதலை பெற, நீங்க வாங்கித் தந்த வரம் அய்யா அது. புழுவாய் கிடந்த என் சமூகம், நிமிர ஆரம்பிச்சுடுச்சு அய்யா… என் படிப்புக்கு உதவினவரை, என் படிப்பு முடிஞ்சதுமே பார்க்கப் போனேன். அப்போ அவர் சொன்னார்… உங்களுடைய இந்த நாவல் தான், அவருடைய மனசையே புரட்டி போட்டுச்சாம்… எங்கள் சமூகத்தை தேடி வர வச்சுதாம். ஏதாவது செய்யணும்ங்கற எண்ணத்தை தூண்டியதாம். அதனால, எல்லாப் பெருமையும், புகழும் உங்களுக்கே!”
“”கலெக்டர் சார்… கேட்கறப்பவே சந்தோஷமா இருக்கு… ஒரே ஒரு துளிர் பூமியத் துளைச்சு கிட்டு வராதான்னு ஏங்கி நின்னுக்கிட்டிருந்தேன். பூவும், பிஞ்சுமா பூ மரமே கண் முன் நிக்கறதை பார்த்தா… மனசு கொள்ளலை அய்யா… மனசு கொள்ளலை…” கர, கரவென கண்ணீர் இறங்கியது.
“”சார்… ப்ளீஸ் அழாதீங்க… ஆமாம்… இது உங்க வீடுதானே… ஏன் வெளியே நிற்கறீங்க… உள்ளே யாருமில்லையா?” கலெக்டர் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே கதவைத் திறந்து, குடும்பம் மொத்தமும் வெளியே வந்து ஆர்வமாய் சூழ்ந்து கொண்டது.
“”ஒண்ணுமில்லே… விழா முடிஞ்சு வந்துதுமே அப்படியே கொஞ்ச நேரம் திண்ணையிலேயே உட்கார்ந்துட்டோம்; நீங்களும், வந்திட்டீங்க…” என்றார்.
“”ஓ… அப்படியா… உங்களிடம் ஒரு விண்ணப்பம்!” என்றார் கலெக்டர்.
அதற்குள்… இடைபுகுந்த பெரிய மகன், “”வணக்கம் சார்… உள்ளே வாங்க… இவர், எங்கப்பா தான். அப்பா, உள்ளார வரச் சொல்லி கூப்பிடுங்களேன்!” என்றான்.
இவரோ, எதையும் பொருட்படுத்தாதவராய், “”என்ன சார் இது, வழக்கமா நாங்க தான் மனு கொடுப்போம்… நீங்க போயி!” என்றார் குறுஞ்சிரிப்புடன்.
கலெக்டரும் புன்முறுவலுடன், அதை ஆமோதிப்பது போல, “”சார்… நீங்களும், அம்மாவும் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும்; ரெண்டு நாளாவது தங்கணும். என் மனைவியின் அன்பான வேண்டுகோள் இது… என் ஆசையும் கூட. நீங்க எங்களோட தங்குவீங்களா… எங்க வீட்டுலே சாப்பிடுவீங்களா?” சின்னக் குழந்தையின் ஒரு வித குதூகல எதிர்ப்பார்ப்பு, கலெக்டரின் கண்களில் மின்னலாய் தெறித்தது.
சுற்றிலும் நின்றவர்களை ஒருமுறை நோட்டமிட்ட கிருஷ்ணன்… “”வர்றேன்… ஆனால் ஒரு கண்டிஷன்!” என்றதும், எல்லாருமே விக்கித்து நின்றனர்.
அவரே குரலில் குழைவையும், மென்மையும் கூட்டி, “”ரெண்டு நாள் தான் தங்க அனுமதிப்பீங்களா சார்… இந்த ஏழை, தன் காலம் முடியுமட்டும் உங்க ஆதரவிலேயே இருக்க அனுமதி தர மாட்டீங்களா?” என்றார்.
“”அய்யா… இது என் பாக்கியம்!” நடந்திருக்கக் கூடியவைகளை சடுதியில் புரிந்து கொண்டு, கை கூப்பினார் கலெக்டர்.
“”கமலி… வா போகலாம்… இவரும் நமக்கு மகன்தான்… இல்லையில்லை மகனுக்கும் மேலே…” என்றபடி, தோளில் கிடந்த அங்க வஸ்திரத்தை சரி செய்து கொண்டார்.
கலெக்டரும், “”வாங்கம்மா… வாங்க!” என்றபடியே கிருஷ்ணனின் கைகளை பற்றியபடி நடந்தார்.
கிருஷ்ணன், கமலியின் தோளை அணைத்து அழைத்து வர, கலெக்டரே கார் கதவைத் திறக்க, இருவரும் கம்பீரமாய் காரில் ஏறிக் கொள்ள, வண்டி சின்ன உறுமலுடன் புறப்பட்டது.
மழை நின்று போய், மேக மூட்டமே இல்லாமல், பிழிந்து போட்ட புடவை போல வெளிறிக் கிடந்தது வானம்… வாசலில் நின்றிருந்த கூட்டத்தினரின் முகத்தைப் போல.

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *