கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 13,303 
 

ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா.

வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது.

தன்னுடைய பையில் ஊறுகாய் பாட்டில்களை வைத்துக் கொண்டிருந்த ராமலிங்கம் “”அம்மா… பெரியம்மா வீட்டுக் கார்” என்று சொன்னான்.

தலை எழுத்து

புனிதா எழுந்து பார்த்தாள்.

டிரைவர் முத்து வந்தான்.

“”வா முத்து… எதாவது விசேஷமா?”

சற்று கலவரப்பட்டவளாகக் கேட்டாள்.

“”உங்க அக்கா, உங்களை வரச் சொன்னாங்க”

“”சரி வர்றேன் போ”

“”டிரைவர் போய்விட்டான்.

“”அம்மா எதுக்கு பெரியம்மா வரச் சொன்னாங்க?”

ராமலிங்கம் சுரத்தில்லாமல் கேட்டான்.

“”எதுக்குன்னு தெரியலே. அவ புதுப் பணக்காரி. பந்தாவை எங்கிட்டத்தான் காட்டுவா. போய்ப் பாக்கறேன். நீ உன் பையை எடுத்துட்டுக் கிளம்பு”

“”சரிம்மா”

ராமலிங்கம் தன்னுடைய ஊறுகாய் பாட்டில் பையை சைக்கிள் கேரியரில் வைத்துக் கொண்டு விற்பனைக்குப் புறப்பட்டான்.

புனிதாவும் ஊறுகாய் பாட்டில் பையை எடுத்துக்கொண்டு விற்பனை செய்யப் புறப்பாட்டாள்.

முதலில் அக்காவைப் பார்க்கப் போனாள். பங்களா காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி உள்ளே போகும் போதே அவளுடைய அக்கா ரம்யா போர்டிகோவுக்கு வந்தாள்.

புனிதாவை பங்களாவுக்குள் அழைக்கவில்லை.

“”எதுக்கக்கா வரச் சொன்னே?”

புன்முறுவலோடு புனிதா கேட்டாள்.

“”இங்க வரும்போதும் இந்தப் பையைத் தூக்கிட்டுத்தான் வரணுமா?”

ஆரம்பமே கடுகடுப்பான கேள்வி.

அதை எதிர்பார்க்காத புனிதாவுக்கு முகத்தில் வாட்டம் ஏற்பட்டது.

“”என்னக்கா சொல்றே? நா வழக்கமா நாலு தெருச் சுத்தி ஊறுகாய் விக்கறேன். நீ வரச் சொன்னதால வந்தேன். இப்படியே யாவாரம் பண்ணப்போறேன். கை வீசிட்டு வர முடியுமா?”

“”போதும் நிறுத்து நீ தெருத் தெருவாச் சுத்தறது எனக்கு மானக் கேடா இருக்கு”

“”நான் ஜீவனம் பண்ணத் தெருத் தெருவாச் சுத்தறேன்”

“”டாக்டர் ஜானகி வீட்டுக்கும் நீதான் ஊறுகாய் சப்ளைப் பண்றயா?”

“”ஆமா”

“”அதுதான் எனக்குப் பிடிக்கலே”

“”அதுக்கு நான் என்ன செய்யணும்?”

“” நீயும், உன் மகனும் ஊரைவிட்டுப் போகணும்.

கையிலத் தொழில் இருக்கே… எங்கேயோ போய் பொழச்சுக்கோ. தாயும், புள்ளையும் தெருத்தெருவா சுத்தி என் மானம், மரியாதையைக் கெடுக்காதே”

புனிதா அதிர்ந்துவிட்டாள்!

அவள் கண்கள் கலங்கின.

“”என்ன யோசிக்கறே? அக்கா வசதியா இருக்காளே நாம அப்படி இல்லையேன்னு நினைக்கிறயா? அது உன் தலை எழுத்து”

“”இதைச் சொல்லத்தான் கூப்பிட்டியா? ச்சே… நீ ஒரு மனுஷி… த்தூ…”

புனிதா வெறுப்போடு துப்பிவிட்டு திரும்பி வேகமாக நடந்தாள்.

அவள் மீது ரம்யாவுக்கு கோபம் வரக் காரணமே, மாதந்தோறும் டாக்டர் ஜானகி வீட்டுக்கு இரண்டு பாட்டில் ஊறுகாய் சப்ளை செய்கிறாள் புனிதா.

அந்த டாக்டர் ஜானகி, ரம்யாவுக்கு ஃபேமலி டாக்டர்.

ரம்யாவும், புனிதாவும் அக்கா தங்கை என்பதை யாரோ டாக்டரம்மாவிடம் சொல்லவும், புனிதாவைப் பற்றி டாக்டரம்மா ரம்யாவிடம் கேட்டுவிட்டாள்.

அது ரம்யாவுக்கு மானக்கேடாகி விட்டதாம்.

அவள் கவுரவத்தைப் புனிதா கெடுப்பதாக நினைக்கிறாள்.

அதன் விளைவு?

புனிதாவை ஊரைவிட்டுப் போகச் சொல்லிவிட்டாள்.

ஒரு தையல் தொழிலாளியின் மகள்களாக ரம்யா, புனிதா கஷ்ட ஜீவனத்தில் இருந்தவர்கள். ரம்யாவின் கணவன் பாஸ்கரன்.

சாதாரண டீக்கடை நடத்தியவன்.

சீட்டுக் கம்பெனி ஆரம்பித்து “ஓகோ’ என்று வந்து விட்டான்.

புனிதா, ஒரு மில் தொழிலாளிக்கு மனைவியானாள். அவனோ அவளுக்கு ஒரு பிள்ளையைத் தந்துவிட்டு அகால மரணத்தில் போய்விட்டான்!

வசதியாக வாழும் அக்கா ரம்யா…

உதவி செய்வாள் என்று நம்பிப் போனபோது “”நீ ஒரு பீடைச் சனி! உன் தலையெழுத்து இப்படியாச்சு. உனக்கு ஒரு உதவியும் செய்ய முடியாது. எதாவது கூலிக்குப்போய் பொழப்பை நடத்து” என்று இழிவாகப் பேசி விரட்டிவிட்டாள்.

வேதனைத் தீயில் கருகிய புனிதா குழந்தை ராமலிங்கத்தை வளர்க்கப் படாதபாடுபட்டாள்.

ஜீவனத்துக்காக இன்றைக்கு தாயும், பிள்ளையும் சேர்ந்து, ஊறுகாய் வியாபாரம் செய்கிறார்கள்.

வீடு வாசல், காசு பணம் வைத்து வசதியாக வாழ்ந்தால்தான் உறவுகளும், சொந்தங்களும் தேடி வரும். அஞ்சுக்கும், பத்துக்கும் தெருவைச் சுற்றும் புனிதாவை லட்சங்களில் வாழும் ரம்யாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அவளைக் குப்பையாக நினைக்கிறாள்.

ரம்யா டாட்டா சுமோ காரில் போகும்போது வழிகளில் புனிதா, ஊறுகாய் பையைத் தூக்கிக்கொண்டு, அலைவதைப் பார்த்தால் அலட்சியமாகச் சிரிப்பாள்.

ஒருமுறை ஜவுளிக் கடைத் தெருவில் ரம்யா நடந்தபோது எதிரே புனிதா வந்தாள். அவளைப் பார்த்து “”த் தூ… சனியன்” என்று முனகியபடி துப்பிவிட்டுப் போனாள்.

வேதனையோடு புனிதா விலகி நடந்தாள்.

காலத்தின் வேகம் மனித வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களைச் செய்துவிடுகிறது.

அப்படி இருக்க ரம்யா குடும்பம் மட்டும் விதி விலக்காக முடியுமா?

இரவு பத்து மணி.

தொலைக்காட்சிப் பெட்டியில் காதலர் ஆடிப்பாடும் டூயட் பாடலை ரம்யா பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

வெளியில்.

ஓயாமல் ஹாரன் சத்தம். திடுக்கிட்ட ரம்யா வேகமாக எழுந்து ஜன்னல் வழியே பார்த்தாள்.

டாட்டா சுமோ கேட்டுக்கு வெளியே தொடர்ந்து ஹாரன் ஓசை எழுப்பியது. ஓடிப்போய் கேட்டைத் திறந்தாள்.

விர்ரென்று வண்டி கிளம்பி போர்டிகோவில் நின்றது.

கேட்டைச் சாத்திவிட்டு ரம்யா வந்தாள்.

“”ஏய்… எருமை மாடு! என்ன பண்ணிட்டு இருந்தே வண்டி வந்தது உனக்குத் தெரியாதா?”

ரொம்ப கோபமாகக் கேட்டுக்கொண்டு டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினான் பாஸ்கரன்.

ரம்யாவுக்கு அதிர்ச்சி!

“”என்னங்க இன்னிக்கு இப்படி

கோபம். நீங்க வண்டிய ஓட்டிட்டு வந்திருக்கீங்க, டிரைவர் எங்க போனான்?”

அவள் கேள்விகளுக்கு, பதில் சொல்லாமல் பாஸ்கரன் பங்களாவுக்குள் போனான். ரம்யாவுக்குக் குழப்பமாக இருந்தது.

அவனைத் தொடர்ந்து சென்றவள் டி.வி.யை ஆப் பண்ணிவிட்டு மறுபடியும் கேட்டாள்.

“”காலைல டிரைவர் வந்தானே இப்ப ஏன் வர்லே?”

“”இனிமே வரமாட்டான்”

“”ஏன்?”

“”டிரைவர் வேண்டாம். நானே வண்டி எடுப்பேன்.”

“”உங்களுக்கு என்னாச்சு? போன மாசம் வீட்டுக் காவலுக்கு இருந்த வாட்ச்மேனை நிறுத்திட்டீங்க?”

சமையல்காரியைத் துரத்திட்டீங்க. இந்த மாசம் டிரைவரை விரட்டிட்டீங்க என்னை எருமைமாடுன்னு கோபமா திட்டறீங்க”

ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாஸ்கரன் உடை மாற்றிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.

“”வந்து சாப்பிடுங்க”

“”ஆச்சு”

“”ஆச்சா!”

“”ஆமா, ஓட்டல்ல சாப்பிட்டாச்சு”

“”என்னங்க இது?”

எல்லாமே புதுசா இருக்கு”

“”இனிமே அப்படித்தான்”

அவன் பக்கத்தில் ரம்யா உட்கார்ந்தாள். பாஸ்கரன் எழுந்து படுக்கப் போனான்.

“”அவனுக்கு மூளை கெட்டுவிட்டதா?”

“”ஏன் இப்படி இருக்கிறான்?”

ரம்யாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பாஸ்கரனிடம் போய்க் கேட்டாள்.

“”என்னங்க எல்லாமே தலைகீழா நடக்குது”

“”நான் சீட்டுக் கம்பெனியை மூடிட்டேன்”.

“”ஐயோ… என்ன காரியம் பண்ணுனீங்க! ஜனங்க அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு லட்ச லட்சமா உங்ககிட்ட பணம் குடுத்திருக்காங்களே”

“”என்கிட்ட பணம் வாங்கினவனெல்லாம் கம்பெனி லாஸ்னு சொல்லி ஓடிட்டானுங்க”.

“”ஊருக்குள்ள தலைகாட்ட முடியாதுங்க”

“”ஊர்ல இருந்தாத்தானே”

“”என்ன சொல்றீங்க?”

“”நான் தலைமறைவா கொஞ்சநாள் எங்காவது போகணும்”

நீ உன்னை எப்படியோ காப்பாத்திக்கோ”

“”ஐயோ, திடீர்னு இப்படிச் சொல்றீங்க”

“”சுனாமி, பூகம்பமெல்லாம் சொல்லிட்டா வருது”

“”அதுக்கு?”

“”என் நிலைமை அப்படி புரிஞ்சிக்கோ. நம்ம கம்பெனி லாஸ் ஆயிட்டுது”

“”இதுக்கு ஏன் கவலைப்படறீங்க?”

“”நம்ம பங்களாவை வித்து சரி செய்வோம்”

“”முடியாது பங்களா ஜப்திக்கு வருது”

ரம்யா அதிர்ச்சியில் உறைந்தாள்.

காலையில் பங்களாவை ஜப்தி செய்ய கோர்ட்டுப் பிறப்பித்த ஆர்டரைப் பார்க்க பாஸ்கரன் வீட்டில் இல்லை. தலைமறைவாகி விட்டான்.

கட்டிய புடவையோடு ரம்யா தெருவில் நின்றாள். அவள் வாழ்ந்த கோபுரம் சாய்ந்துவிட்டது. எங்கே போவது? யோசித்தாள்.

அவளைத் தெருவே வேடிக்கை பார்த்தது. வெட்கம் பிடுங்கித் தின்ன டாக்டர் ஜானகி வீட்டுக்கு நடந்தாள்.

அழைப்பு மணி சுவிட்சை அழுத்தினாள், கதவைத் திறந்த சமையல்காரி.

“”வாங்கம்மா” என்றாள்.

“”டாக்டரம்மாவைப் பார்க்கணும்”

“”அவுங்க சிங்கப்பூர் போயிருக்காங்க”

ரம்யாவுக்கு மேலும் ஓர் அடி.

இனி எங்கே போவது?

சிந்தனையில் நடந்தவளுக்கு, தங்கை புனிதா நினைவு வந்தது. வீட்டைத் தேடிப் போனாள்.

பழைய ஓட்டு வீடு.

புனிதா ஊறுகாய்ப் பையுடன் விற்பனைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள், அவளைப் பார்த்து ரம்யா அழுதாள்.

“”அக்கா… வா வா… என்னாச்சு எதுக்கு அழறே?”

தங்கையின் அன்பான அழைப்பு அவளை வியப்பில் ஆழ்த்தியது.

புனிதா பாய் விரித்தாள்.

சோபாவில் உட்கார்ந்து பழக்கப்பட்ட ரம்யாவுக்கு அந்தப் பாய் வெறுப்பாக இருந்தது. என்ன செய்வது? வழியில்லாமல் அதில் உட்கார்ந்தாள்.

தன் குடும்ப நிலைமையைச் சொன்னாள். புனிதா ஆறுதல் சொன்னாள்.

அடுத்த நாள். பாஸ்கரன் புகைப்படத்தோடு, அவனுடைய சீட்டுக் கம்பெனி. திவாலான செய்தியும், கம்பெனி வாசலில், பாதிக்கப்பட்ட ஜனங்கள் கூடியிருந்த, புகைப்படமும் செய்தித்தாள்களில் வெளிவந்து பரபரப்பை உண்டாக்கின.

ராமலிங்கம் வாங்கிவந்த செய்தித்தாளை ரம்யாவும் பார்த்தாள்.

“”பார்த்தீங்களா பெரியம்மா, “”நீங்க எங்க அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லுவீங்களே, தலையெழுத்தைப் பற்றி அதை யாரால் மாத்த முடியும்”

ராமலிங்கம் எதுக்காக அதைச் சொல்லனும். ரம்யாவுக்குப் புரிந்தது. அந்தத் தலையெழுத்து இப்போது அவளையும் வலுவாகப் பற்றிக் கொண்டது.

ராமலிங்கத்தின் பேச்சு ரம்யாவுக்கு ஊசிக்குத்தாக இருந்தது.

– உடுமலைநன்னன் (ஜூன் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *