தலைமுறை இடைவெளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 4,652 
 

“இன்னிக்கி கிரஹணம் வத்சு… குழந்தைக்கு பன்னிரண்டு மணிவரை முட்டையெல்லாம் கொடுக்காதே… அதுவும் நேத்திக்கி வேகவெச்சு பிரிட்ஜ்ல வச்சு எடுத்தது….”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா… நான் அடிக்கடி ப்ரிட்ஜ்ல வச்ச முட்டையை வெளியே எடுத்து அவன்ல வச்சு சுடப்பண்ணி குழந்தைக்கு எப்பவுமே கொடுக்கறதுதான்..”

“சரி அப்படீன்னா இன்னிக்கி மட்டும் வேண்டாமே… கிரஹணம் வேற…”
“அம்மா ப்ளீஸ் நீங்க இதுல எல்லாம் தலையிடாதீங்க, அவளுக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு… முட்டை சாப்பிட்டதும் அப்புறம் அவளுக்கு நான் தலைவாரணும்; யூனிபார்ம் மாட்டணும், சாக்ஸ், ஷூ போட்டு விடணும்…”

அப்போது நரேஷ் அங்கு வந்தான்.

“என்ன இங்க காலை வேளையில் ஆர்க்யூமென்ட்?”

“இன்னிக்கி கிரஹணம்டா… குழந்தைக்கு இன்னிக்கி ஒரு நாளைக்கு முட்டை கொடுக்க வேண்டாமே? அதுவும் நேத்திக்கி வேகவச்சு ப்ரிட்ஜ்ல இருந்தது வேற…”

“அம்மா ப்ளீஸ் இதெல்லாம் ஒரு மேட்டரா? வத்சலாவோட இஷ்டத்துக்கு விட்டுடேன்..”

சரோஜாவுக்கு மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது. இவங்க குழந்தையை வளர்க்கிற வளர்ப்பு முறை மிகவும் வேதனையளித்தது. குழந்தைக்கு பாத்ஸா; பீட்ஸா; பர்கர் என்று இதெல்லாம்தான் அன்றாட சாப்பாடே… இட்லி, இடியாப்பம், வடை, தோசை, புட்டு இவைகளைப்பற்றி குழந்தைக்கு எதுவுமே தெரியாது.

குழந்தையை நேரில் பார்க்கலாம் என்கிற ஆசையில் கணவருடன் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு கிளம்பி வந்தது தப்பாகப் போயிற்று என்று தோன்றியது. அது அதுகள் தனித் தனியா தள்ளி இருந்தாலே உசிதம் என்றும் தோன்றியது.

தற்போதைய உலகில் பெரியவர்களுக்கு சிறியவரகளிடம் இருக்கும் வாஞ்சையும், அன்பும், அக்கறையும், பிரத்தியேக கவனிப்பும்; ஏனோ சிறிசுகளுக்குப் புரிவதில்லை. அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்…

சரோஜாவுக்கு நரேஷ், சுரேஷ் என்று இரண்டு பிள்ளைகள். நரேஷ் சிட்னியிலும்; சுரேஷ் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். திருமணமாகி நன்றாக செட்டில் ஆகிவிட்டார்கள்.

நரேஷுக்கு ஒரு பெண் குழந்தை. சிட்னி வருவதற்கு முன்பாக சிங்கப்பூரில் இளைய மகனுடன் ஒருமாதம் இருந்துவிட்டு வந்தாள். அவனுக்கு மிகச் சமீபத்தில் திருமணம் ஆனதால் இன்னமும் குழந்தை இல்லை. அவனோட பெண்டாட்டி நீரஜா சமைப்பதேயில்லை.. இரண்டு பேரும் சம்பாதிப்பதால் எப்போதும் வெளியே பார்த்துக் கொள்கிறார்கள். விடுமுறை தினங்களில் ‘ஆப்’பில் நுழைந்து தேவையானதை ஆர்டர் செய்து கொள்கிறார்கள்.

சரோஜாதான் நிறைய சமையல் சாமான்கள் வாங்கிப் போட்டு, உடென்ஸ்ஸிஸ் ஏகமாக வாங்கி வைத்து கிச்சனை முழுமையாக மாற்றினாள். வெளியே சாப்பிடுவது உடம்புக்கு கெடுதி என்று எடுத்துச் சொன்னாள். நீரஜா மையமாகத் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

சரோஜாவுக்கு தெரியாதா? இதுகளுக்கெல்லாம் உடம்பு வணங்காது என்று? எப்படியோ போகட்டும்… சந்தோஷமாக இருந்தால் சரி என்று ஆயாசத்துடன் நினைத்துக் கொண்டாள்.

இப்ப இங்க சிட்னில என்னடான்னா நரேஷ் பொண்டாட்டி வத்சலா இப்படி… குழந்தையைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அதுகளை போஷாக்குடன் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

தான் சிட்னியில் இருக்கும் வரையாவது அந்தக் குழந்தைக்கு கவனிப்புடன் ஊட்டச்சத்து அளிக்க உறுதி பூண்டாள்.

முதலில் இந்தப் பாத்ஸா, பீட்ஸா; பர்கர் போன்று ஆர்டர் பண்ணிச் சாப்பிடுவதை நிறுத்தினாள். முதலில் குழந்தைக்கு வேக வைத்த கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு மசித்து கொடுத்தாள். குழந்தை ஆர்வத்துடன் விரும்பிச் சாப்பிட்டது.

பிறகு வேக வைத்து மசித்த சாதத்துடன் காய்கறிகள், நெய், பருப்பு வகைகளை அறிமுகப் படுத்தினாள். அத்துடன் காலை உணவாக இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு போன்றவற்றை செய்து கொடுத்தாள்.

அதன் பிறகு அனைத்து உணவுகளையும் விதம் விதமாக ருசியுடன் செய்து பரிமாறினாள். குழந்தை சந்தோஷத்துடன் ரசித்து சாப்பிட்டது. ஆரோக்கியத்துடன் சற்று குண்டாகவும் மாறிவிட்டது. அது தவிர, நரேஷும், வத்சலாவும் சரோஜா செய்த சமையலை நாக்கை சப்புக்கொட்டி வக்கணையுடன் சாப்பிட்டார்கள்.

குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில்தான். குழந்தைகளின் சிறிய வயதில் நாம் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமாக அமையும் என்பதை வத்சலாவுக்குப் புரிய வைத்தாள். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மணடலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும் என்று எடுத்துச் சொன்னாள்.

தலையைத் தலையை வத்சலா ஆட்டினாளே தவிர, அவளாக ஒருநாளும் எதையும் எடுத்துச் செய்யவில்லை.

விஸா முடிந்து சரோஜாவும் அவள் கணவரும் சிட்னியை விட்டுக் கிளம்பும் நாளும் வந்தது. குழந்தைக்கு பாட்டியைப் பிரியவே மனசு இல்லை. அடம் பிடித்து அழுதது.

சென்னைக்கு வந்ததும். சரோஜாவுக்கு எப்போதும் பேத்தியின் நினைவுதான் ஒரு ஞாயிற்றுக்கிழமை வத்சலாவுக்கு போன் செய்து பேத்தியை ஸ்கைப்பில் வரச் செய்தாள்.

பாட்டியை ஸ்கைப்பில் பார்த்ததும் பேத்தி பொங்கிவிட்டாள். “தாத்தாவுடன் நீ இங்கேயே வந்து எங்களோட இருந்துடேன் பாட்டி…” என்று உருகினாள்.

“நீ நன்னா சாப்பிடறயா?”

“இல்லை பாட்டி, நீ இருந்தபோது விதம் விதமாக சமைத்துப் போட்டாய்… இப்ப அம்மா மறுபடியும் பீட்ஸா, சலாட், பர்கர், பாத்ஸான்னு ஆர்டர் பண்ண ஆரம்பிச்சுட்டா…”

சரோஜாவுக்கு வேதனை பீறியது… மூன்று வயதுக் குழந்தை பொய் சொல்லுமா என்ன?

இந்தக் காலத்துப் பெண்களுக்கு சமைக்க ஏன் அப்படி ஒரு சோம்பேறித்தனம்? எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்பதில்லை. இத்தனைக்கும் ஒரு சுவிட்ச் தட்டினால் சமையலுக்கு எல்லாமே ரெடி… அம்மி, ஆட்டுக்கல், ஊதுகுழல், விறகடுப்பு என்று எந்தவித சிரமங்களும் அவர்களுக்கு இல்லை.

அறுபது வயது ஆகிவிட்டால் வீட்டிலுள்ள பெரியவர்களை கிழடுகள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். முக்கியமான விஷயங்களைக்கூட விவாதிப்பதில்லை. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், எதையும் தான் தோன்றித்தனமாக செய்து முடிக்கிறார்கள். கூகுளில் தேடுகிறார்களே தவிர, வீட்டிலுள்ள பெரியவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். தெரியாமல்தான் செய்கிறார்களா? இல்லை தெரிந்தேதானா? நம்மை அவமதிக்கும் நோக்கமா இல்லை தலைமுறை இடைவெளியா?

யோசிக்க யோசிக்க சரோஜாவுக்கு குழப்பம்தான் மிஞ்சியது. சற்றுக் கவலையுடன் சோர்ந்திருந்தாள்.

அவள் கணவர் நடேசன் அப்போது அங்கு வந்தார்.

“என்ன சரோ ரொம்ப டல்லா இருக்க?”

சரோஜா பேத்தி சொன்னதை துக்கத்தோடு விவரித்தாள்.

“அட இதுக்காகவா கவலைப்படற? அது அவா வாழ்க்கை. நீ ஏன் அதில் மூக்கை நுழைக்கிறாய்? நீ பசங்கள நன்னா படிக்க வச்ச… நல்ல இடத்ல கல்யாணமும் பண்ணிக் கொடுத்த. அவ்வளவுதான். உன் கடமை முடிந்தது. அவாள நேர்ல பார்க்கும்போது சந்தோஷப்படு. அதோட நிறுத்திக்கோ… எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத ஒரு detached attachment டை மனசளவில வளர்த்துக்கோ சரோ… அவா அவா பட்டுப் புரிஞ்சுப்பா.”

“……………………”

“சம்பவங்களின் கோர்வைதான் வாழ்க்கை. நீ அவங்ககூட சிட்னில வாழ்ந்த ஒவ்வொரு நாளும்; அது தரும் சுகமான நினைவுகளும்தான் உனக்குத் துணையாக இருக்க வேண்டும்… எத்தனையோ கதைகளைப் படிக்கிறோம். ஒவ்வொரு கதையிலும் ஒரு சுவையும் சுவாரஸ்யமும் இருக்கிறது இல்லையா? அதுமாதிரி ஒன் இரண்டாவது மகனுடன் நீ சிங்கப்பூரில் இருந்தது ஒரு சுகமான சிறுகதை; சிட்னியில் மகன், மருமகள், பேத்தியுடன் வாழ்ந்த நாட்கள் ஒரு திருப்தியான குறுநாவல். இதில் இப்போது உன் வாழ்க்கை மட்டும் ஒரு தொடர்கதை… அதை ஈடுபாட்டுடன், ரசனையுடன் தொடர்வது உன் கையில்தான் இருக்கிறது…” என்றார்.

சரோஜா கணவரின் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *