தலைச்சுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 5,218 
 

காலை 7.00 மணி வெய்யிலே சுள்ளென்று அடித்தது. கோடை சூரியன் உக்கிரமாக பிரகாசித்தது.

“வெள்ளரிப் பழம் ! வெள்ளரிப் பழம்…!” பின்னால் ஓங்கி குரல் கேட்டது.

கோடைக்கு வெள்ளரிப் பிஞ்சு தாகத்தைத் தணிக்கும். உடல் சூட்டைக் குறைக்கும். அதன் பழமோ… தோல் நீக்கி, சர்க்கரையும், ஏலக்காயும் தட்டிப் போட்டு கலந்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி. சின்னத் துண்டுகளாக்கி குளிர்பதனப்பெட்டியில் வைத்து கொஞ்சம் குளிரூட்டி சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு தின்றால்.. ஆகா…அமிர்தம். ! எதுவுமே வேண்டாம். வெறுமனே வெள்ளரிப்பழத்தை விண்டு சாப்பிட்டாலே போதும். சோறு, தண்ணி தேவை இல்லே. ! எல்லாம் நினைக்க 4எனக்கு நாக்கில் எச்சில் ஊறியது.

நின்று திரும்பிப் பார்த்தேன்.

சாணிப்பூசி முழுகிய சுத்தமான மூங்கில் கூடையில் பனை ஓலைச்சுருளில் விண்டு, வெடித்து மஞ்சள் மஞ்சளாக பழங்கள் குடிகொண்டிருந்தது.

ஆனால்… சுமை தூக்கும் தலை…? – எனக்குப் பொட்டில் அறைந்தது.

60 வயதில் தோல் சுருங்கி தளர்ந்த உடல். நரைத்தத் தலை. ஜாக்கெட் போடாமல் வெளுத்த பச்சை பழைய நூல் புடவை சுற்றிய மாராப்பு கருத்த உடல். வெறும் கழுத்தில் எந்த துணையுமில்லாமல் பளீரென்று தெரியும் மஞ்சள் கயிறு. நெற்றியில் குங்குமம். அது… தலைச் சுமை, நடையில் வேர்த்து, வியர்வையில் கரைந்து மூக்கு நுனியில் வழிந்தது.

பழம் சுமக்கும் வயதான கிழம். மனம் பச்சாதாப்பட…

வெயில் பொசுக்க சாலையோரம் நிற்கும் தூங்குமூஞ்சி மரநிழலில் ஒதுங்கினேன்.

மனம் அவளை எடை போட்டது.

விதவையாய் இருந்தாலும் பரவாயில்லை. கணவரில்லை. பெற்ற மக்கள் ஒதுக்கித் தள்ள வயிற்றுப் பாட்டிற்கு வழி இல்லாமல் உழைத்து வாழவேண்டிய நிலை! என்று மனசு ஆறலாம்.

இவள் சுமங்கலி. கணவரிருக்கும் போது இப்படி உழைத்துப் பிழைக்க வேண்டிய அவசியம்..?!

இவளைவிட இவள் கணவர் ஏழெட்டு வயது மூப்பு. உழைக்கத் திராணி இல்லையோ..? இல்லை வயோதிகம், உடல் உபாதை, படுத்தப் படுக்கை…இவள்தான் சம்பாதித்துச் சாப்பிடவேண்டும் என்கிற நிலையோ..?!

பிள்ளைகள் ஒதுக்கித் தள்ளப் பட்டத் தாக்கமா…? இல்லை…இருந்தும் சிறகு முளைக்க கூட்டை விட்டுப் பறந்து விட்ட விளைவால் ஏற்பட்ட விளைவா..? பிள்ளைகளே இல்லையா..?!!

மகன், மருமகள், பேத்தி, பேரன்கள் எல்லாம் உண்டு. கிளைகள் பிரியா ஏழைக் குடும்பம். ஆளாளுக்குக் கொண்டு வந்து கொடுத்தால்தான் வயிறு நனைய சாப்பாடு என்கிற நிலை. அதனால் தாய் ஒரு பக்கம், தந்தை ஒருபக்கம், மகன், மருமகள்கள் ஒரு பக்கம் என்று உழைக்கிறார்களா..?

இல்லை… மருமகள் கொடுமை. கொண்டு வந்து கொடுத்தால்தான் ஆச்சு என்கிற நிர்பந்தமா..? இல்லை எவருமில்லாத அனாதைகளா..?!

எங்கே ரணம்..? எவ்விடத்தில் பாதிப்பு..?

எப்படி இருந்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள் கொடுமை எப்படியோ. அப்படியே இந்த வயதானவர்கள் உழைப்பும் கொடுமை!!

என் மனம் இவளுக்காக இரங்கியது. பச்சாதாப்பட்டது.

எதோ நம்மால் ஆன உதவி. ஐம்பது அறுபதுக்கு வாங்கி உதவலாம். தோன்றியது.

“வெள்ளரிப்பழம்!” அழைத்தேன்.

அவளைப் ‘பாட்டி!’ என்று அழைத்திருக்கலாம். அவள் மனதுக்கு இதமாய் இருக்கும் என்று அப்புறம்தான் தோன்றியது.

“வர்றேன் சாமி !” எட்டி நடை போட்டு அருகில் வந்தாள்.

“பழம் வேணுமா..?”

“ஆமா..”

“கொஞ்சம் கூடையைப் பிடிச்சி இறக்குங்க..”

இரு கைகள் பற்றி இறக்கினேன். கூடை கனமாக இருந்தது.

அவள் தலையில் இருந்த துணி சும்மாட்டை எடுத்து வியர்வைத் துடைத்தாள். கரைந்த குங்குமம் கீற்றாக மாறியது.

“பழம் என்ன விலை பாட்டி..?”

“இது நாப்பது. அது முப்பது. ..” சிறிசு, பெரிசு விலைக்குத் தகுந்தவைகளைக் காட்டினாள்.

இவளுக்கு ஏனிந்த நிலை..? அறிய எனக்குள் ஆவல்.

பழங்களை ஆராயும் சாக்கில்…

“பழங்களை விலைக்கு வாங்கி வந்து விக்கிறீங்களா..?” விசாரணையைத் தொடங்கினேன்.

“இல்ல! எங்க நெலத்துல போட்டு அறுவடை செய்தது” என்றாள்.

இது நான் எதிர்பாராதது.

என்றாலும் அதிர்ச்சி ஏற்படவில்லை. காரணம்..? கிராமத்து மக்களுக்கு…குத்தகை, சொந்தம் என்று நிலம், நீச்சு என்பது சகஜம், சாதாரணம். உணர்ந்த நான்…

“சொந்த நிலமா பாட்டி..?” அதையும் அறியும் ஆவலில் கேட்டேன்.

“ஆமா..”

“எத்தினி மா..”

“ஒரு வேலி!”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

ஒரு வேலி நிலத்திற்குச் சொந்தக்காரி என்றால் மிராசு. உழைத்து வாழ வேண்டுமென்கிற அவசியமில்லாத பணக்காரி.

திடுக்கிட்டுப் பார்த்தேன்.

“ரெண்டு போர்செட். ஒரு சுத்துக்கட்டு ஒட்டு வீடும் இருக்கு.”

இன்னும் இடி!

“என்ன பாட்டி. ஒரு வேலிக்குச் சொந்தக்காரி, பணக்காரி நீ எதுக்கு இப்படி வேகாத வெயில்ல வந்து வெள்ளரிப்பழம் விக்கிறே..? உருக்குலையுறே..?” கேட்டேன்.

பதில் சொல்லவில்லை.

“தாத்தா என்ன செய்யிறார்..?”

“ஒரு ஏக்கர் புஞ்சையில் மஞ்சள் வைச்சு தண்ணி பாய்ச்சுறார்.”

“வயசு..?”

“எழுபது”

“புள்ளைங்க…?”

“ரெண்டு ஆண். மூணு பெண்!”

ஐந்து பிள்ளைகள் பெற்றவள்!

“பொண்ணுகளைக் கட்டிக் கொடுத்து புள்ளைங்களுக்கு கலியாணம் முடிச்சாச்சு.” அவளே சொன்னாள்.

“புள்ளைங்க உதவி ஒத்தாசையாய் வீட்டோட இல்லையா..?”

“பெரியவன் அரசாங்கப் பள்ளிக்கூடத்துல வாத்தியாரா விழுப்புரத்துல இருக்கான். அடுத்தவன் வங்கியில காசாளர் வேலை. தஞ்சாவூர்ல இருக்கான். மூணாவது பையன் சென்னையில இன்ஜினியர். ஒரு பொண்ணு திண்டிவனத்துல குடித்தனம். இன்னொன்னு புதுச்சேரி. கடைசிதான்….” இழுத்து நிறுத்தினாள்.

“அ… அதுக்கு என்ன..?”

“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இருபத்தஞ்சு வயசுல ரெண்டு புள்ளைகளுக்குத் தாயாய் விதவையாய் வீட்டுல வந்து இருக்கு..” கமறினாள்.

எனக்குள் எவரோ இதயத்தில் ஈட்டி சொருகிய வேதனை, வலி.

“எப்படி..?” தாங்க முடியாமல் துடித்துக் கேட்டேன்.

“அதான் விதி !” சொல்லி கலங்கியக் கண்களைத் துடைத்தாள்.

“……”

“மருமகன் கார் விபத்துல பலி!”

“மகளுக்கு மறு கலியாணம்…?”

“ஏற்பாடு பண்ணினோம். புள்ளைங்கள்லேர்ந்து பெத்தவர் வரை புத்திமதிகள் சொன்னோம். மறுபடியும் அதே வாழ்க்கை. புள்ளைங்க துணை போதும்னு ஒரேயடியாய் மறுத்துட்டாள்.”

“பெண் படிச்சிருக்காளா..?”

“பட்டப்படிப்பு படிச்சிருக்காள். இந்த நிலையில வேலைக்குப் போனால் கழுகுகள் சுத்தும் சொல்லி மறுத்துட்டாள்.”

என்னதான் படித்திருந்தாலும் சமுதாயத்தை எதிர்த்து நிற்கத் துணிவில்லாமல் இப்படியும் சில பெண்கள் கோழைகளாய் இருந்து சுமையாய் ஆகின்றார்கள்! என்கிற எண்ணம் எனக்குள் ஓடினாலும்..

“கவலைப் படாதீங்க பாட்டி. உங்க சொத்து பத்தை வைச்சி பொண்ணு, பேரன், பேத்திகளை நல்லவிதமாக வளர்க்கலாம்!” சொன்னேன்.

“நாங்களும் அதைத்தான் நினைச்சோம். இன்னும் பங்கு, பாகம் பிரிக்கல. தாயோடு பிள்ளையாய் இருக்கும் இல்லாதப்பட்ட இவளுக்கு அதிகமா கொடுத்து மத்ததை மத்தப் புள்ளைங்களுக்குக் கொடுப்போம். பொறந்தவள்தானேன்னு புள்ளைங்களும் சம்மதிக்கும்ன்னு நினைச்சோம். ஆனா… பங்குன்னா சமம்தானே. அதுல இருக்கப்பட்டது என்ன, இல்லாதப்பட்டது என்ன..? இது பெத்ததுகளுக்குச் செய்யிற துரோகம்ன்னு மனசை மாத்திக்கிட்டோம். அதனால பாகம் பிரிக்கின்ற வரைக்கும் நானும், என் புருசனும் முடிஞ்சவரைக்கும் உழைச்சு, இதுக்குன்னு ஒரு சொத்து சேர்க்க ஆரம்பிச்சோம். இப்படிக்கு கொடுத்தால் கூடப் பொறந்ததுக்காக மற்ற புள்ளைங்க நிச்சயம் சம்மதிப்பாங்க. எதிர்ப்புக் காட்டினால் கூட இது எங்க உழைப்புன்னு சொல்லி சமாளிக்கலாம்ன்னு நெனப்பு. பாகம் பிரிக்கின்ற காலத்துல எங்க பொதுப்பங்கு. இந்த தனிப் பங்கு சேர்த்தா மூணாவது பொண்ணுக்கு மத்த புள்ளைங்க திட்டத்துக்கு கணிசமான சேர்ந்துடும். அடுத்து என் புருசன், பெண்சாதி உழைப்பு. அப்புறம்… பொறந்ததுங்களும் இவளுக்கு இரக்கப்பட்டு ஏதாவது கொடுக்கும்னு நம்பிக்கை இருக்கு. இந்த விதவைப் பொண்ணு எப்படியும் நல்லா வாழ்வாள் என்கிற நம்பிக்கை இருக்கு…” என்று முடித்தவள்…

“எத்தினி பழம் வேணும் தம்பி..?” கேட்டாள்.

‘என்ன நேர்மை, உழைப்பு, பாசம், அக்கறை…?!’ எனக்கு நெஞ்சு சிலிர்க்க..

“நாப்பதுல அஞ்சு பழம் பாட்டி !” சொல்லி இருநூறு எடுத்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *