கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 19,974 
 

தரிசனம்
நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம்.

மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?

திரும்பி வீட்டிற்குள் வந்து பாயைப் போட்டேன். துயில் திரை கண்களின் மேல் படர்ந்தது, ஆமைக் கால்களைப் போல், என் புலன்கள் சுருங்கி உறங்க ஆரம்பித்தன. மனத்தின் சுடர்விழி மட்டும் முழுதும் மூடவில்லை. வௌவால் முகத்தினருகில் அடித்தது. கண் திறந்தேன். எதிரில் ஆகாயமளாவி நின்றாள் சிவசக்தி. தலைமயிர் வெற்றிக் கொடிபோல் பறந்தது. கண்ணினின்று கொஞ்சும் அழகு. கையில் கொடி மின்னலைப் பழிக்கும் வைரவாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கலகலவென்ற சிரிப்பு உலகெங்கும் பரவியது. உடல் மயிர்க் கூச்செறிந்தது.

சிறிது நேரம் கழிந்தது. அலையோய்ந்த கடல்போல் சற்று நெஞ்சம் ஆறுதலடைந்தது. போர்வையை எடுத்தேன்; பளீரென்று ஒரு மின்னல் உலகை ஒளிரச் செய்தது. அவ்வொளிர் “சொக்கப்பனையில்” எதிரே கண்ணில் பட்டது. ஒரு மரம் – ஒரு வெறும் நெட்டைத் தென்னை! “என்ன ஆச்சர்யமென நினைத்தேன்.
***
மழைத் தெய்வம்
மறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர்? இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம்! மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே! எனவே “மானம் பார்த்த” சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா? ஆறு, குளங்கள் உள்ள ஊர்க்காரர்களுக்குக் கூடத்தான் பார்க்க வேண்டும். இரண்டு மானத்தையும் தான் – ஒரு ‘மான’த்தை வயிற்றுக்காகவும் மற்றொன்றை ஜீவனுடைய தீராத பசியாகிய கௌரவத்திற்காகவும்…

மழைக்குக் கொடும்பாவி இடத்தில் ஏன் அவ்வளவு பயம்? ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம்? அனுதாபமாயிருக்கலாம்; அல்லது குடியானவர்கள் சொல்வதுபோல் சூரியனுடைய காதல் கட்டழகியாகிய கொடும்பாவியின் மீதுள்ள போட்டிப் பிரேமையாயிருக்கலாம்.

எப்படி இருந்தாலென்ன? இதோ மழை வந்துவிட்டது. ஜில்லென்று தாமரைத் தண்டுகள் தொடுவதுபோல் மேலே காற்று வீசுகிறது. வானம் மைக்காரியாகி விட்டது. நக்ஷத்திரங்களெல்லாம் வழி தெரியாமல் விழுந்து விட்டன. அடடா! வானில் என்ன கத்தி விளையாட்டு! என்ன இடி முழக்கம்! கொல்லைப் புறத்திலிருந்து தவளைகள் தங்கள் தெய்வத்தை வரவேற்பதற்காக முறை வைத்துப் பாட ஆரம்பித்து விட்டன. எவ்வளவு தினிசுகள்! – வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா! வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா!…
***
புலியின் வரிகள்
ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற வர்ணம் மட்டும் உடலில் பரவி இருந்தது.

காட்டு வழியே வரிக்கோடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. ஆதி முதற்கொண்டு வரிகள் தனித்து ஓரியாக இருந்தன. தனிமையின் தன்மையில் தம்மையே உணர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. பொருள்கள் மோதினால்தானே, இணைந்தால்தானே உணர்வு பிறக்கும், பொறி பறக்கும்? குகையை விட்டு வரும் அரிமாவைப் போல நான் என்னும் நினைப்பு, பிடரி மயிரைச் சிலிர்த்துப் பெருமிதம் அடைய முடியும்? ஆனால் வரிகள் ஒன்றியாகப் பயனற்றிருந்தன. தவிப்பை முறித்தெறியப் பாதை வழியே அவை நடந்து வந்து கொண்டிருந்தன.

‘என்ன அழகிய மூங்கில் கொத்து! என்ன அழகிய புலி!’ என்று, ஒரு நிமிஷம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விர்ரென்று விஷ அம்பு ஒன்று புலி மேல் பாய்ந்தது. காடு நடுங்க உறுமிக் கொண்டே புலி இறந்தது. புலிதான் போய்விட்டதே என்ற தைரியத்தில், கோடாலிக்காரன் விரைந்து வந்து மூங்கில்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வீடுகட்ட எடுத்துப் போய்விட்டான். மிஞ்சி இருந்த இரண்டு மூங்கில்கள் உராய்ந்து கொண்டே துயரத்தால் ஓலமிட்டன. புலிக்கு நாம் துணை, நமக்குப் புலி துணை என்று நினைத்தோமே, ஏமாந்து விட்டோ மே என்று புலம்பின.
பயந்து போய் வரிக்கோடுகள் மேலே நடந்து சென்றன. “ஓரியாக இருந்தால் இன்பம் இல்லை” என்றது ஒரு கோடு.

“இரண்டாக இருந்தால் மூன்றாவது எதிரி வருகிறான்” என்றது மற்றொரு வரி.

“பின் என்ன செய்யலாம்?”

“ஒன்றியாக இல்லாமல் இரண்டாகவும் இல்லாமல் ஒன்றிவிட்டால் இன்பம் உண்டு. பலவாக இருப்பது ஒன்றிவிட்டாலும் பகை தெரியாது. பெருமிதம் மிஞ்சும்.”

“அதுதான் சரி” என்று வரிகள் முடிவு செய்தன.

கொஞ்ச தூரத்துக்கும் அப்பால் மற்றொரு மூங்கில் புதரும் புலியும் தெரிந்தன. புலியைப் பார்த்த உடனேயே வரிகள் புலியின் தோலுடன் தனித்தனியாக ஒன்றி, கறுப்புப் பட்டுப்போல் மின்னி மகிழ்ந்தன. வெயிலும் நிழலும் கலந்த மூங்கில் கொத்தும் வரிப்புலியும் எல்லாம் ஒன்றாகிவிட்டன. எது எதுவென்றே தெரியவில்லை.

கோடாலிக்காரன் வரும் வாசனையை உணர்ந்த புலி பயங்கரமாக உறுமிற்று. உறுமல் அலையலையாகப் பரவி வேடனை எச்சரித்தது. எழுந்து பார்த்தான். புலி இருக்கும் இடம் தெரியவில்லை. வெயிலும் மூங்கில்களின் நிழல்களும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. ‘உருவத்தைப் பார்த்தால் இலக்கு வைக்கலாம். குரலைக் குறித்து எப்படி இலக்கு வைக்க முடியும்?’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே போனான். கோடாலிக்காரன் புலி உறுமுகிறதென்று போய்விட்டான்.

கோடாலிக்காரனும் வேடனும் திரும்பிச் சென்றதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூங்கில்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. தங்களுடைய உடல் புலியைப் போன்ற வண்ணம் கொண்டதைக் காண வியப்பாக இருந்தது.

வரி வேங்கை ஆனந்தமாய்த் தூங்கக் கொட்டாவி விட்டது. என்ன பயங்கரமான குகைவாய், கோரப் பற்கள்!

– கலைமகள் – ஜூன் 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *