தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 8,928 
 

கருப்பணசாமி கோயில் தெற்குப் பக்கம் உள்ள காடுகளில் (விவசாய நிலங்கள்) கடலை எடுப்பு நடந்துகொண்டிருந்தது.
ஒரு வாய் காய்ஞ்ச புல்லுக்குக் கூட காய்ஞ்ச மாடுகள்… இன்று கடலைச் செடிகள் மேல் கழிஞ்சபடியும், சொகுசாய்ப் படுத்துக்கொண்டு அசை போட்டபடியும் கிடக்கின்றன.
ராணுவ வீரர்கள் போல் அணிவகுத்து நிற்கும் துவரஞ்செடி நிழலில் அமர்ந்து கடலை ஆய்கின்றனர் மக்கள்.
துவரஞ்செடியிலிருந்து ஒரு வாசம் காற்றில் கலந்து வரும்… சும்மா சொல்லக்கூடாது. வாசமுன்னா வாசம் அப்படியொரு வாசம்.

வேலிகளில் படர்ந்துள்ள சின்னச் சின்ன “மை’ பழங்களை சில பால்வாடி சிறுவர்கள் பறித்தத் தின்கின்றனர். அவர்கள் வாய், பற்கள், நாக்கு, எச்சில் என எல்லாம் நீல நிறமாகிப் போனத. பத்ரகாளி போல் நீலநிற நாக்குகளை நீட்டியபடி ஒருவரை ஒருவர் பயமுறுத்தித் திரிகின்றனர்.

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் ராமசாமி நடத்திக் கொண்டிருக்கும் பாடங்கள் சுத்தமாக பால்முருகன் மண்டையில் ஏறவில்லை. அவன் நினைவெல்லாம் கடலைக் காடுகளில்தான்.
“நாளைக்கி லீவு – காலையில சீக்கிரமா எந்திருச்சுத் தப்புக் கபலை (காடுகளில் தப்பும் கடலை) பொறுக்கப் போயிறணும் – காலையிலகூடப் பாத்தேனே – மாணிக்கம் கடையில அந்தத் தேங்கா கேக்கு பாக்கெட் தொங்கிக்கிட்டுக் கெடந்துச்சே. இருடி இரு… நாளைக்குத் தப்புக் கபலை போட்டு ஒன்ன வாங்கித் திங்கறேன்’ என மனசுக்குள் பேசிக்கொண்டான்.

பள்ளி முடிந்து வீடு சென்ற பால்முருகன், ஒரு மஞ்சள் பையையும், ஒரு களை துரட்டியையும் எடுத்துப் பத்திரபடுத்தி வைத்துக்கொண்டான்.

வாரச் சந்தைக்குச் செல்லும்போது அப்பா வாங்கி வரும் முறுக்கும், பொரி கடலையும்தான் பால்முருகன் இதுவரை சாப்பிட்ட சுவீட்டுகள்.

பள்ளிக்கூடம் செல்லும் மகனுக்கு தினமும் “பாக்கெட் மணி’ கொடுத்து அனுப்பும் அப்பனல்ல பால்முருகன் அப்பா. டீக்கடைக்குக் கூடச் செல்லாது தினம் வீட்டில் கருப்பட்டி காபி குடித்து வேலைக்குச் செல்லும் மனிதர் அவர்.
அம்மாகூட இவனுக்கு, சல்லிக்காசு தரமாட்டாள் – அஞ்சலறைப் பெட்டி, சுருக்குப் பை என இவற்றில் கைவரிசை காட்டி பால்முருகன் “தேன்மிட்டாய், ரோஜா பாக்கு மிட்டாய், கல்கோனா, இழந்தப் பழ மிட்டாய் பாக்கெட், அப்பளம்’ என வாங்கித் தின்றிருக்கிறான்.

மாணிக்கம் கடையில் விற்கும் விலை உயர்ந்த தின்பண்டமான அந்தத் “தேங்காய் கேக்’ மட்டும் அவன் தின்றதில்லை. “அப்படி அதுல என்னதான் இருக்கும்! கொள்ள இனிப்பு இனிக்குமோ?!’ என்ற ஏக்கத்தில் திரிந்த பால்முருகனுக்கு சென்ற வருடம் அடித்தது அந்த அதிர்ஷ்டம். ஆம், தப்புக் கடலைகள் போட்டு, அந்த அரிதான தெவிட்டாத “தேங்காய் கேக்’ வாங்கித் தின்றான். அதன் இனிப்பும் நினைப்பும் இன்றுவரை அவனை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

விடிந்ததும் விடியாத கருக்கலிலேயே பால்முருகன் தப்புக்கடலை பொறுக்கக் கிளம்பிச் சென்றான்.

போன வருடம் ஒவ்வொரு காட்டிலும் கொத்துக் கொத்தாக அவனுக்குத் தப்புக்கடலை கிடைத்தது. ஆனால், இன்று அப்படி இல்லை – சுற்றி திரியும் காக்கை குருவிகள்கூட “எங்க இத்தனூண்டு வயத்துப் பசியக் கூடப் போக்க இங்க கடலைகள் இல்ல – இவன் என்னடானா பெரிய முஞ்சப் பையையே தூக்கியாந்திருக்கான் – ஏண்டா தம்பி, பெரிய மூட்ட கீட்ட ஏதும் உங்க வீட்டுல இல்லையா?’ என அவனை நக்கலடிப்பதுபோல கிறிச்சிட்டு அலைந்தன.

வெயில் வேறு வாட்டி எடுத்தது – பொளபொளவென் விழியும் வியர்வையை, சட்டையால் துடைத்துக்கொண்டான். அவனுக்கு தாகம் எடுத்தது. “என்னடா இது சூரியன் மேற்குப் பக்கமா சாய ஆரம்பிச்சுருச்சு இன்னும் காப் பை (கால் பை) கடலகூடச் சேரலையே’ என கவலைப்பட்டான்.

ஓடி வந்தவன் கருப்பணசாமி கோயில் குளத்தில் தண்ணீர் குடித்தான். செம்மண் கலரில் இருக்கும் அந்தத் தண்ணீருக்கும் ஒரு ருசி உண்டு. சுவை உண்டு. வயிறு முட்ட தண்ணீர் குடித்தான். அந்த அரச மர நிழல் வேறு குளுகுளுன்னு இருந்தது.
“செத்த நேரம் இங்க இருந்திட்டுப் போகலாமா’ என நினைத்தான். “கடல வேற சேரல. உட்கார்ந்தா என்ன ஆகுறது – எப்படி தேங்கா கேக்கு திங்கிறது!’ என்ற நினைப்பு வேறு வந்து பளிச்சிட்டது.
நடந்தான். ஒவ்வொரு கடலைக் காட்டையும் கூரிய பார்வைகளால் அளந்தான். ஆராய்ச்சி செய்தான்.

கிடைத்தவற்றைச் சேகரித்தான். மஞ்சள் பையில் கால் பை அளவே நிரம்பி இருந்தது. அரைப் பை கடலை இருந்தால் தான் தேங்காய் கேக் வாங்க முடியும். மணி நாலு ஆச்சு என்பதைச் சத்தம் போட்டுச் சொல்லியது டவுனில் இருந்து ஊதும் பேரூராட்சி சங்கு.

பால்முருகன் மனம் பதைபதைத்தது. “கடலைகள் ஏதும் கிடைக்க மாட்டுதே – நேரம் வேற ஆகுதே. என்ன செய்றது?’ என்ற சிந்தனையிலேயே சுற்றித் திரிந்தான். “இந்த வருடம் தேங்கா கேக்கு திங்க முடியாதோ!’ என நினைக்கும்போதே அவனுக்கு அழுகை வந்தது. கண்ணீரைத் துடைத்தான். யோசித்தான்.
கருப்பணசாமி கோயில் அருகில் உள்ள ஒரு காட்டில் மட்டும் இன்னும் கடலை எடுப்பு நடக்கலை. அந்தக் காட்டில் கடலைச் செடிகள் குமரிப் பெண்கள்போல் கொழுத்துச் செழித்த வளர்ந்து நின்றது.

முடிவு செய்துவிட்டான் பால்முருகன், யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கடலைகள் திருடுவது என்று.

நடந்தான். கருப்பணசாமி கோயில் வந்தது. கையில் பெரிய வீச்சரிவாளுடன் கொடூரமாய் நின்றார் கருப்பண்ணசாமி. சாமியைப் பார்க்காது வேகமாய் நடந்து சென்றான். கடலைக் காட்டை அடைந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. முழுப் பாய்ச்சலில் கடலைச் செடிகளைப் புடுங்கினான். ஒவ்வொரு கடலைச் செடியிலும் பத்து, பன்னிரண்டு கடலைகள் சுளையாக இருந்தன.
யாரோ ஒருவர் தூரத்தில் சைக்கிளில் வந்தார். அவரைப் பார்த்த பால்முருகனுக்கு ஈரக்குலையே நடுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் ஓடிச் சென்றவன் புதர்ச் செடியினுள் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரம் சென்றதும் எழுந்து பார்த்தான். சைக்கிளில் வந்த மனிதரைக் காணவில்லை. மறுபடியும் கடலைக் காட்டுக்குள் சென்றான். செடிகள் பிடுங்கிக் கடலைகள் பறித்தான். பாதி பைக்கு மேல் கடலை நிறைந்தது.
பையைத் திறந்து கடலையைப் பார்த்தான் – “இது போதும் – தேங்கா கேக் வாங்க’ என சந்தோஷம் கொண்டான்.
நடந்தான். கருப்பணசாமி கோயிலை அடைந்தான். கருப்பணசாமியைப் பார்த்தான். கருப்பணசாமியின் மகிமைகளாகச் சில விஷயங்களையும் மேலும் பல கட்டுக் கதைகளையும் சேர்த்த இவனது ஆயா இரவில் இவனுக்குக் கதை கதையாய்ச் சொல்லி இருக்கிறாள். அவற்றை நினைத்துப் பார்த்தவனுக்குப் பயத்தில் கை, கால் உதறல் எடுத்தது. கருப்பணசாமியிடம் ஓடிச்சென்றான். அவர் காலை இருக்க கெட்டியாக பிடித்தக் கொண்டான்.

“சாமி என்ன காப்பாத்து. தப்பு செஞ்சுட்டேன்…’ என அழுதான்.
ஆயா கூறியபடி தீயவர்களைக் கருப்பணசாமி பார்த்தவுடனே கொன்றுவிடும். ஆனால், இப்பொழுது கருப்பணசாமி வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தார். “சாமி நல்ல சாமி – நம்மள மன்னிச்சுருச்சு’ என்று நினைத்தான் கொஞ்சம் மண்ணை எடுத்து சாமித் திருநீறாகப் பூசிக்கொண்டான். கை நிறையக் கடலைகள் அள்ளியவன் சாமியின் காலடியில் அதைக் காணிக்கைகளாகப் போட்டான். பின் அங்கிருந்து விருட்டென நடந்தான். இருட்டியது. குறுக்குப்பாதைகள் வழியாக நடந்தான். மாணிக்கம் கடைக்கு வந்தான். கடை பூட்டியிருந்தது. மாணிக்கம் வீடும் பூட்டியிருந்தது. மனம் உடைந்து போனவன் பூட்டிக் கிடக்கும் கடையையே வெறித்துப் பார்த்தபடி நின்றான்.

யார் போய்ச் சொன்னார்களோ தெரியலை. இவனது தாய் அங்கு வந்தாள். கடலைப் பையை வாங்கியவள் அவனைக் கூட்டிக்கொண்டு வீடு சென்றாள். பாயில் படுத்திருந்த பால்முருகன், போர்வைக்குள் அழுதுகொண்டு இருந்தான். பாயும் போர்வையும் ஆறுதல் சொல்ல இயலாது தவித்துப் போய், மனம் கனத்துப் போய்க் கிடந்தன. வீட்டு வெளியில் உள்ள அடுப்பில் பால்முருகன் சேகரித்த கடலைகள் வெந்து கொண்டிருந்தன.

– பா.பாண்டிசெல்வம் (ஏப்ரல் 2011)

Print Friendly, PDF & Email

1 thought on “தப்புக்கடலை

  1. மண் மணம் மாறா ஆகச்சிறந்த சிறுகதை… கதை ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *