தன்மயியின் விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 12,373 
 

ஜெயந்த் காய்கிணி
கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன்

இந்தக் கோடை விடுமுறையில் தார்வாட் தாத்தா வீட்டுக்குத் தன்மயி வந்தபோது வீட்டில் விசித்திரமான மேகங்கள் சூழ்ந்திருந்தன. எப்போதும்போல விடுமுறையின் மகிழ்ச்சி தென்படவில்லை. ஸ்டேஷனுக்குக் குஷீ சித்தியும் மஞ்சுவும் வந்திருந்தார்கள். குதிரை வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது தாத்தாவும் பாட்டியும் பாசத்தோடு உடம்பைத் தடவினாலும், சித்தப்பா ‘இந்தத் தடவை விடுமுறையைக் கொண்டாட முடியாது. படிக்கணும். எங்க மஞ்சுவுக்கும் இந்தத் தடவை எஸ்எஸ்எல்சி. அவன் படிப்பையும் கெடுக்கக் கூடாது’ எனத் தீவிரத் தொனியில் ஆணை பிறப்பித்துவிட்டார். தன்மயிக்கு அழுகையே வந்ததுபோலாயிற்று. ‘இந்தத் தடவை பியூசி முடியுது. அடுத்து என்னமோ ஏதோ? அந்தக் கோர்ஸ் இந்தக் கோர்ஸுன்னு எல்லாத்துக்கும் முயற்சிபண்ணனும். எத்தனையோ என்ட்ரன்ஸ் பரீட்சை எழுதணும். இந்தத் தடவை தார்வாடுக்குப் போகவே வேண்டாம்’ என்று மும்பையில் அப்பா அம்மா அதட்டியிருந்தாலும் ‘இல்ல நான் போயே தீருவேன். அடுத்து என்ன நடக்குன்னு யாருக்குத் தெரியும். ரிசல்ட் வந்தவுடனே திரும்பிடறேன். தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி ஆசீர்வாதத்தோட வர்றேன்’ என்றெல்லாம் அடம்பிடித்துச் சாப்பிடாமல் சண்டையிட்டுத் தன்மயி தார்வாடுக்கு வந்திருந்தாள். வருடத்துக்கொருமுறை தார்வாடின் சஞ்சீவினிச் சூழல் அவளுக்கு அவசியம் வேண்டும். மும்பை என்றால் ஊரே வீடு? சே. அது ஆயிரம் பெட்டிகளின் ரயில். ஆனால் தார்வாடிலோ பெரிய வீடு. ஆளுக்கொரு அறை. கடவுளுக்கும் ஒரு அறை. பச்சைப் பசேலென்ற தெருக்கள். எந்த அவசரமுமில்லாமல் பிறந்து நிதானமாக ஒன்றுக்குள் ஒன்று சேரும் பகலும் இரவும். அதோடு இவையெல்லாவற்றுக்கும் கலசம் இடுவதுபோலக் குஷ¦ சித்தியின் அன்பான இருப்பு. இந்த விடுமுறையிலாவது தார்வாடில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் அற்புதமான எண்ணம் தன்மயியை அதிதீவிரமாக இழுத்தது.

மத்தியானம் தூங்கும் பழக்கமோ தன்மயிக்கு முழுக்கப் புதிது. மாலையில் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வருகிறவர்கள், அங்கங்கே குறுக்கே நடக்கிறவர்களின் முகங்களில் இருக்கும் மந்தகாசத்தை அவள் மும்பையில் கண்டதே இல்லை. அது எப்படிப்பட்ட சந்தோஷம் என அவளுக்குத் தோன்றியது. ஆனால் இந்தமுறை மட்டும் தார்வாடுக்குப் புதிதாக ஏதோ சோம்பல் வந்ததைப் போலிருந்தது. தேர்வுக்கூடத்தில் வினாத்தாள் கொடுக்கும்போது நிலவுவது போன்ற கவலையால் ஏற்படும் சோம்பல். மும்பையில் இந்தமுறையோ அப்பா அம்மா சினேகிதி அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட கவலையை இரண்டுமடங்காக்குவது போன்ற விவாதத்திலேயே தொடங்கியிருந்தார்கள். கேரியர், ஸ்கோப் என்றெல்லாம் உரையாற்றிக் கடைசியில் ‘என்ன இருந்தாலும் நீயே தீர்மானி’ என்று தன்மயியின் தலையில் கட்டினார்கள். பதின்பருவத்தினளான அவளுக்கு இந்தப் பொறுப் பொன்றும் பாரமாக இருக்கவில்லை. ஆனால் அதைச் சுமத்தியவர்களின் பட்டுக்கொள்ளாத அக்கறை அவளுக்குப் பயத்தைத் தந்தது. என்னவோ மகத்துவம் மிக்க ஒன்றை தன் அக்கறையின்மையால் இழந்துவிடுவோம் என்று எல்லோரும் தன்னை நம்பச்செய்யும் பயம் அது. இந்தப் பயத்தை வெல்லத் தார்வாடைவிட்டால் தன்மயிக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. ஆனால் தார்வாடும் இப்போது அதே பயத்தின் விதையை ஊன்றுவதாக எண்ணினாள். மத்தியானம் தூங்கியெழுந்து வீங்கிய கன்னங்களில் பவுடர் பூசிக்கொண்டு காய்கறி வாங்க வந்த பெண்கள் அவளுக்குச் சலிப்பை ஏற்படுத்தினார்கள். குஷீ சித்தி மட்டும் என்றும்போலத் தன்மயியைக் கவனித்துக்கொண்டாள்.

விடியற்காலையில் எழுந்து தன்மயி ஓட ஆரம்பித்தாள். விடியல் பசுமையின் பனியாகிப் பெயர் தெரியாத பறவையின் இனிமையாகி ஈர மண்ணின் வெட்டவெளியாக விரிந்தபோது என்றுமில்லாத உற்சாகத்தில் மிதந்தாள். ஆனால் பகல் ஏறத் தொடங்கியதுமே ரிசல்ட்டும் மார்க்ஷீட்டும் வயிற்றில் புளியைக் கரைத்தன. அரிவாளைப் பிடித்து வந்தாற்போல டிகிரி, வேலை, ஹோமியோபதி போன்ற வார்த்தைகள் அசரீரியாகக் கேட்டுத் தொந்தரவு செய்தன. மத்தியானம் தூங்க முயன்றாள். குஷீ சித்திக்குச் சமையலில் உதவப் பார்த்தாள். சைக்கிள் ஓட்டக் கற்பது எப்போது எனக் கவலையோடு யோசித்தாள்.

ஏற்கனவே மும்பையிலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. இதைப் படி, அதைப் படி, இந்தச் செய்தித்தாளில் இந்த விளம்பரத்தைப் பார் முதலானவை. சித்தப்பாகூட வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் உரையாற்ற ஆரம்பித்தார். தன்மயி ஒருமுறை அவர் உரைக்கு நடுவிலேயே எழுந்து வெளியே புதிதாகப் பெய்த மழையைக் கையில் பிடிக்கப் போய்விட்டாள். அந்தக் கோர அவமானத்தின் குரோதத்தைச் சித்தப்பா மஞ்சுவின் மேல் கொட்டினார். தன்மயியை விட்டு ஒரு கணமும் இருக்க முடியாத மஞ்சு இந்தமுறை சித்தப்பாவுடைய குரோதத்தின் பிரம்புக்குப் பயந்து தன்மயியை மறந்துவிட்டிருந்தான். தன்மயியோடு சேர்ந்துகொண்டு விடுமுறையில் ஊர் முழுக்க அலைபவன் சிணுங்கிக்கொண்டே புத்தகத்தில் தலை கவிழ்த்தி மூலையில் உட்கார்ந்திருந்தான். அருகிலுள்ள கித்தூர் ராணி சென்னம்மா பூங்காவில் விளையாடும் சிறுவர்களின் சிரிப்போசை காற்றில் மிதந்து வந்தபோது காலை உதைத்துக்கொண்டு விசித்திரமாக அழுதான். அவனுடைய அம்மா குஷீ சித்திக்கு மட்டும் அவன் இம்சையைப் பார்க்க முடியாது. அவள் தன்மயியிடம் ‘அவனையும் கூட்டிட்டுப் போ’ என்று சொல்லி உலாவிவிட்டு வரவும் விளையாடவும் அங்கும் இங்கும் அனுப்பத் தொடங்கினாள். கடந்தமுறை வந்தபோது ‘அடுத்த தடவை உனக்கு சைக்கிள் ஓட்டக் கத்துத்தரலன்னா என் பேர் மஞ்சுவல்ல’ எனச் சூளுரைத்திருந்த மஞ்சு இந்தமுறை ‘சை’ எனச் சொல்லவும் தடதடவென்று நடுங்கினான். அப்பாவின் செருப்பு, சட்டை, சைக்கிளைப் பார்த்தாலும் அவரையே பார்த்ததாகப் பயந்து புத்தகம் உள்ள மூலைக்கு ஓடினான்.

குஷீ சித்தியைத் தவிர்த்து மற்றெல்லோருடைய கண்களிலும் கல்வி, ஒழுங்குகளின் ஆணை மிளிர்ந்துகொண்டிருந்ததைக் கவனித்த தன்மயிக்குச் சிரிப்பு வந்தது. குஷீ சித்தி மட்டும் பாசம் காட்டினாள். ஈரத்தலையை முந்தானையால் துடைத்துவிடுவாள். புடவை உடுத்திக்கொள்ளக் கற்றுத்தருகிறேன் என்று ட்ரங்குப்பெட்டிக்குள்ளிருந்து பூச்சியுருண்டைகளின் கும்மென்ற வாசனையடிக்கும் தன் சேலையை எடுத்துத் தருவாள். அப்போது பாட்டி ‘குஸுமா, ரொம்பப் பண்ணாதே’ என்று சொல்வாள்.

குஷீ சித்தியுடன் உலாவப் புறப்பட்டால், வீட்டிலிருந்து வெளியே வந்த வினாடியிலேயே அவள் தன்மயிக்கு வேறாகத் தோன்றினாள். சித்திகூடப் பட்டமேற்படிப்பு படித்தவள். ரேங்க் வாங்கியவள். திரு மணத்துக்கு முன்னால் ஏதோ கல்லூரியில் கற்பித்துக்கொண்டிருந்தாள் என அப்பா அம்மா மரியாதையோடு பேசிக்கொண்டதைத் தன்மயி அறிவாள். அவள் அம்மாவுக்கும் குஷீ சித்திமேல் அதீதப் பிரியம். அதிகம் படித்திராத தன் அம்மா மும்பையில் வேலைபார்க்கும் ஒரே ஜம்பத்தால் இங்கே வந்தபோதெல்லாம், குஷீ சித்தி முந்தானையில் கைதுடைத்துக்கொண்டே கேட்டுக்கு ஓடிவருவாள். அம்மா மும்பையைப் பற்றிக் கதையளக்கும்போதெல்லாம், அரிசி புடைத்துக்கொண்டோ சாப்பாட்டுத் தட்டுகளைத் துடைத்துக்கொண்டோ குஷீ சித்தி ‘அப்படியா?’ என்று கேட்பாள். தெருப் பிள்ளைகள் படிப்பு தொடர்பாக ஏதாவது ஆலோசனைக்காகச் சமையலறைக்குள் புகுந்தால் பாட்டி பயமுறுத்தித் திருப்பி அனுப்புவாள். தெருவின் வளர்ந்த பெண்களுக்கெல்லாம் அனைத்து வகையான விண்ணப்பங்களையும் குஷீ சித்தியே எழுதித் தருவாள். சித்தியின் பட்டமளிப்பு விழாப் புகைப்படத்தைத் தன்மயிக்குப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. கடந்தமுறை வந்தபோது கேட்டிருந்தாள் என்று இந்தமுறை பிறந்தகத்திலிருந்து ரகசியமாகத் தன் பால்யத்தின் எல்லாப் புகைப்படங்களையும் சித்தி கொண்டுவந்து வைத்திருந்தாள். கித்தூர் ராணி சென்னம்மா பூங்காவில் உட்கார்ந்து தன்மயியும் சித்தியும் அவற்றைப் பார்த்தார்கள். சித்தியும் முதல்முறை பார்ப்பவள்போலப் பார்த்தாள். இரட்டை ஜடை, அடர்ந்த புருவம், மின்னும் கண்கள். பட்டமளிப்புப் புகைப்படத்திலோ கௌன் போட்டுக்கொண்டு கறுப்புப் பறவைபோலத் தெரிந்தாள். குமாரி குஸுமா தொடவாட். அந்தப் புகைப்படத்தை யாருக்கும் காட்டக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் தன்மயிக்குக் கொடுத்தாள். தன்மயி ‘சித்தி இன்னக்கி இந்தச் சேலை உடுத்து’ என்றெல்லாம் சொல்லும்போது அவள் ‘ஸ்ஸ்ஸ்’ என்று யாராவது கேட்டுவிடுவார்கள் என்பதாக உதட்டின் மீது விரல் வைப்பாள். சித்தப்பா ‘அவ அப்பாகிட்டயிருந்து கடிதம் வந்திருக்கு. அவளைப் பயாலஜி படிக்கச் சொல்லு’ என்று அதட்டினால் கதவை மூடிக்கொண்டு தன்மயியும் சித்தியும் சீட்டு விளையாடுவார்கள். தன்மயி ‘சித்தீ, நீ ஏன் பிஹெச்டி பண்ணல? நீ ஏன் திரும்பவும் லெக்சரர் ஆகக் கூடாது?’ என்றெல்லாம் கேட்டால் சித்தி பதில் சொல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்துவாள்.

ஒரு மாலையில் உலாவச் சென்ற தன்மயியும் மஞ்சுவும் திரும்பியபோது இரவு எட்டு மணியாகியிருந்தது. சித்தப்பா வெளித் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார். குஷீ சித்தி சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தாள். பாட்டி தரையில் கால்நீட்டி உட்கார்ந்து கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கேட் கிறீச்சென்றதுமே சித்தப்பா ஆக்ரோஷத்தோடு வந்தார். மஞ்சுவை இழுத்துக்கொண்டுபோய்த் தப்தப்பென்று அடிக்கத் தொடங்கினார். தன்மயி ‘குஷீ சித்தீ . . .’ என்று உள்ளே ஓடினாள். இருவரும் வெளியே வருவதற்குள் முதல் சுற்று முடிந்திருந்தது. ‘அவளுக்குப் பெரியவங்கமேல எந்த மரியாதையும் இல்ல. உனக்கென்ன கேடு? அவளுக்கென்னா மும்பையில அவங்க அப்பா அம்மா அவ எதைக் கேட்டாலும் வாங்கித்தர்றாங்க. நீ பெயிலான என்ன பண்ணுவே? பிச்சையெடுக்கப் போவ. நாளையிலயிருந்து வெளிய போனா பாத்துக்க?’ என்று கத்தி இவையெல்லாவற்றுக்கும் நீயே காரணம் என்பதைப் போலத் தன்மயியின் பக்கம் பார்த்தார். குஷீ சித்தி மஞ்சுவை அணைத்துக் கொஞ்சி உள்ளே அழைத்துப் போனாள். தேம்பிக்கொண்டிருந்த தன்மயியையே அவள் மஞ்சுவைவிட அதிகம் தேற்றினாற்போலிருந்தது. இரவு படுப்பதற்கு முன் மஞ்சு ‘அம்மா தன்மயிக்குச் சைக்கிள் ஓட்டக் கத்துக்கணுமாம். எப்படிக் கத்துத்தர்றது?’ என்று மனப்பூர்வமாகக் கேட்டான். ‘யூனிவர்சிட்டிக்கு உலாவப் போயிருந்தோம். நேரம்போனதே தெரியல’ என்று சொன்னான். ‘அங்கே கடிகாரம் எவ்வளவு பெரிசாயிருக்கு இல்லியா?’ என்றான். குஷீ சித்தி தன் பல்கலைக்கழக நாட்களை நினைத்தவாறு தூங்கிப் போனாள். அப்போது நீல, சிவப்பு வண்ணப் பூக்கள் பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்திருந்தன. அவ்வப்போது புகைவண்டி ‘கூ’ என்று சுற்றிச் செல்லும். ரயில்வே கிராஸிங்கில் கேட் திறந்திருந்தால் ரயிலைக் காணாமல் ஏமாற்றம் உண்டாகும்.

தன்மயியின் கனவிலும் பல்கலைக்கழகத்தின் கோபுரம் வந்தது. பெரிய பெரிய ஃபைல்களைப் பிடித்தவர்கள், புத்திசாலித்தனத்தைக் குத்தகை எடுத்தவர்கள், கணகண வென்று மணியடித்தவுடனே கையிலிருந்து விடைத்தாள்களைப் பிடுங்கிக்கொள்பவர்கள், ரிசல்ட் ரிசல்ட் என்று நோட்டீஸ் போர்டை முற்றுகையிடுகிறவர்களும் வந்தார்கள். சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். இதயம் அடித்துக்கொள்ளும் பயம். இது என்றைக்கும்போல. தேர்வுக்கூடத்தில் பயங்கரமான மௌனம். அறிமுகமானவர்களும் முகத்தைத் திருப்பிக் கடைசி வேளையில் படபடவென நோட்ஸ் படிக்கும் பயம். ‘டென் மோர் மினிட்ஸ், டை அப் யுவர் அடிஷ்னல்ஸ்.’ மும்பையில் எத்தனையோ ரயில், பஸ்கள் மாறித் தொலைவிலுள்ள தேர்வு மையத்துக்குப் போகும்போது வழியில் மரீன் லைன்ஸ் பக்கம் இரண்டு நிமிடம் கடல் தெரியும். தேர்வு முடிந்து கடலைப் பார்த்தபடி நின்றுவிடத் தோன்றும்.

விடியற்காலை குஷீ சித்தி தன்மயியின் தலைவருடி எழுப்பித் தேநீர் கொடுத்தாள். ‘தனு நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கணுல்ல. நான் சித்தப்பாகிட்டச் சொல்றேன். அவரே கத்துக்குடுப்பாரு’ என்று சொன்னாள். சித்தியின் முகத்தில் தோன்றிய விடியல் தன்மயிக்கு இதமாகவும் பாதுகாப்பானதாகவும் பட்டது. ‘நெஜமாவா?’ என்று ஜிங்கென எழுந்து உட்கார்ந்தாள். சப்பாத்தி சுடுவதில் சித்திக்கு உதவினாள். ‘இங்கயிருக்கற யூனிவர்சிடி எவ்வளவு நல்லா இருக்கு. மும்பையில ஸ்கூல், காலேஜுன்னா வீதிக்கு வீதி மளிகைக் கடை மாதிரி இருக்கும். இங்க அப்படியல்ல. இதுக்கொரு கம்பீரம் இருக்கு’ என்ற தன்மயியிடம் சித்தி ‘எல்லாம் ஒன்னுதான். உள்ள இருக்கற ஜனங்க ஒரே மாதிரிதான் இருப்பாங்க’ என்றாள். குளிக்கப் புறப்பட்ட சித்தப்பாவுக்குத் துண்டு தந்துகொண்டே ‘தன்மயி பாவம் சைக்கிள் ஓட்டக் கத்துக்கணுமாம். நீங்க கத்துக்குடுங்க’ என்று சொன்னாள். சித்தப்பா ‘இன்னக்கில்ல நாளைக்கி ரிசல்ட் வந்துரும். சைக்கிளாம் சைக்கிள். அப்புறம் மும்பையில அவ அப்பா நாம் இவளைக் கெடுத்துட்டோன்னு திட்டறதுக்கா?’ எனப் படபடத்தபடி குளிக்கப் போனார். ‘நீ படிப்பைப் பத்திப் பேசறதே இல்ல. இப்ப சைக்கிள் ஓட்டக் கத்துக்கணுங்கற. முடிஞ்சே போச்சு’ என்று பாட்டி முணுமுணுத்தாள்.

தன்மயி அறைக்குப் போய் சூட்கேஸிலிருந்து ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்துப் படிக்க முயன்றாள். புத்தக வரிகளில் அவளுக்கு மும்பையின் லோக்கல் ரயில்களின் சத்தம் கேட்டது. பெரிய பெரிய கரும்பலகைகள் எழுந்தன. ‘கேரியர் கேரியர்’ என்று அப்பா கூவியதாகவும் ‘டிகிரி டிகிரி’ என அம்மா அழுததாகவும் மும்பை வீட்டிலேயே இருந்ததாகவும் தோன்றிப் புத்தகத்தை மூடிவிட்டாள். ஜன்னலுக்கு வெளியே நீல வானம் அன்போடு பார்த்துக்கொண்டிருந்தது. வீடு முழுக்கச் சுற்றிவைத்த படுக்கைகள், மூடிவைத்த ட்ரங்க் பெட்டி, கப்போர்ட், கட்டிவைத்த பொட்டலங்கள். திறந்திருந்தது ஆகாயம் மட்டும். அதனால் அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு இதம். அதற்குள் உள்ளேயிருந்து வந்த குஷீ சித்தி மடித்துவைத்த ஒரு படுக்கையின் மேல் உட்கார்ந்து தன்மயி திறந்திருந்த புத்தகங்களைப் பார்த்தாள். ‘என் காலத்துல எனக்குப் புஸ்தகங்களே இல்ல. நான் லைப்ரரி அங்கே இங்கே போயி நோட்ஸ் எடுத்துக்குவேன். போன வருசம் வரைக்கும் அந்த நோட்ஸ் வச்சிருந்தேன். அதுங்க இருந்தவரைக்கும் பாரந்தான்னு பட்டு ஏனோ எரிச்சுட்டேன். மஞ்சு கப்பல் செஞ்சி விடறதுக்குக் கொஞ்சம் பயன்பட்டுச்சி’ என்றாள். அவளுக்கு உயிரியல் மிகவும் பிடித்திருந்ததாம். வெளியே மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது. தூக்கத்துக்கும் புத்தகங்களுக்கும் நடுவே கம்பிமேல் நடக்கும் சர்க்கஸை மஞ்சு செய்துகொண்டிருந்தான். சித்தி ‘அவன் வேண்டாம். நாம் ரண்டுபேர் மட்டும் போலாம்’ என்றாள். தன்மயியிக்கு இழுத்து இழுத்து ஜடை போட்டாள். குட்டையான கூந்தலிலேயே குட்டி ஜடை போட்டுக்கொள்வதில் தன்மயியிக்கு மகிழ்ச்சி. மும்பையில் ஜடைக்கு எங்கே நேரம் என்று குட்டையாக வெட்டப்பட்ட கூந்தல் அவளுக்கு. பிறகு சித்தி சரசரவெனப் போய்ப் படபடவென்று ஒரு பொரியல் செய்தாள். ‘வந்து சாதம் வடிக்கிறேன்’ என்று பாட்டியிடம் சொன்னாள். ஐந்தே நிமிடத்தில் தயாராகித் தன்மயியுடன் வெளியே வந்தாள்.

கித்தூர் ராணி சென்னம்மா பூங்கா தாண்டி இடதுபக்கமாக அவர்கள் சாதனா நகர்ப் பக்கம் நடந்தார்கள். அங்கே பெரிய பெரிய சுவர்களுக்குப் பின்னால் மன நோயாளிகளுக்கான மருத்துவமனையைக் காட்டினாள். முன்பு எத்தனையோமுறை அங்கே போயிருந்ததாகச் சித்தி சொன்னாள். அவளுக்குப் பிரியமான ஆசிரியை ஒருவர் அங்கிருந்தாராம். சுதந்திரப் போராட்ட வீராங்கனை. சமூக சேவகி. ஒத்தைப் பெண்மணி. அவர் தங்கியிருந்த வீட்டை அபகரிக்க அவருடைய உறவினர் யாரோ குண்டர்களை ஏவி வருடக்கணக்காகப் பயமுறுத்தி, இம்சித்ததால் சித்தப் பிரமை பிடித்து இதே மருத்துவமனையில் இறந்தாராம். அவரைப் பற்றிச் சொல்லியபடியே குஷீ சித்தி உணர்ச்சிவசப்பட்டவளாகப் பேச்சை நிறுத்தினாள். பல்கலைக்கழகத்திலிருந்ததுபோலவே இந்த மருத்துவமனையிலும் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.

சாதனா நகர்ச் சாலையில் பசுமை முளைவிட்டுக்கொண்டிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் புதிய வீடுகள் பசுமையைக் கத்தரித்து எழுந்துகொண்டிருந்தன. ‘அது பேந்த்ரேயின் வீடு’ எனச் சித்தி காட்டினாள். ‘பேந்த்ரே யாரு?’ என்ற தன்மயியின் கேள்விக்குச் சித்தி ‘பேந்த்ரே பெரிய கவிஞர். முன்பு நான் காலேஜுல இருந்தப்ப எத்தனையோ தடவை வந்திருந்தாரு. சின்னவளாயிருந்தப்ப நான் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்’ என்று பெருமிதத்தோடு சொன்னாள். மெய்மறக்கச் செய்த பசுமையிலும் காற்றிலும் சித்தி ‘நான் காலேஜுல இருந்தப்ப கவிதை எழுதிட்டிருந்தேன்’ என்று சொல்லிவிட்டாள். ‘இப்ப ஏன் எழுதறதில்ல?’ என்று தன்மயி கேட்டுக்கொண்டிருந்தபோதே ‘அட, கியாஸ் அடுப்புல பால் வச்சிருந்தனே?’ என்று திடுக்கிட்டாள். இருவரும் வானொலி நிலையத்துக்குப் பக்கத்துக் குறுக்குத் தெருவழியாக வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள். வானொலி நிலையத்துக்குப் பக்கத்திலுள்ள இந்தப் பழைய தடத்தில் பெயர் சொல்ல முடியாத எத்தனையோ புதர்கள். அவற்றில் காவி, மஞ்சள் வண்ணங்களில் நட்சத்திரங்கள் போன்ற பூக்கள் நிறைந்திருந்தன. ‘இந்தப் பூ, இலைகளின் காட்டு வாசனை எனக்குப் பிடிக்கும் என்று சித்தி மீண்டும் மீண்டும் அந்தப் புதர்களின் இலைகளையும் பூக்களையும் பிடுங்கி முகர்ந்தாள். எல்லாப் பக்கமும் மழை தன் பாட்டுக்குத் தூறிக்கொண்டிருந்தது. ‘நீ இந்த வீதியிலேயே சைக்கிள் ஓட்டக் கத்துக்க. அதிகம் டிராஃபிக் இல்ல. குளிர்ச்சியாயிருக்கு’ என்றாள் சித்தி.

வீட்டுக்குத் திரும்பியபோது பாட்டி ‘பாலை மறந்துட்ட’ என்றாள். குரங்கைப் போல மஞ்சு குட்டிக் கரணம் போட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு எஸ்எஸ்எல்சி மேகசீன் தருவிக்க வேண்டுமா எஸ்எஸ்எல்சி மித்திரன் தருவிக்க வேண்டுமா என்னும் உச்ச விவாதக் கூட்டத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா பங்கு வகித்தார்கள். ‘ரேங்க் ஹோல்டர் அம்மா இருக்கறப்ப அதெல்லாம் எதுக்கு வேணும்?’ என்ற தாத்தாவின் விவேகமான வார்த்தைகளைப் பாட்டி, சித்தப்பா இருவரும் நக்கலாகத் திருப்பிச் சொன்னார்கள். தன்மயி கைகால் கழுவிக்கொண்டு மஞ்சுவின் பக்கத்தில் உட்கார்ந்தாள். சித்தி சமையலறைக்குச் சென்றாள். சித்தப்பா ‘அப்பாவோட கடிதம் வந்திருக்குல்ல. ரிசல்ட் வந்த மாதிரி தான். உனக்கு சைக்கிள் ஓட்டக் கத்துக்கற வெறி வந்திருக்குன்னு அவருக்கு எழுதட்டுமா?’ என்று கேட்டார். வெளியே பட்டாம்பூச்சியின் பக்கம் போய் உட்கார்ந்தாள். மங்கிக்கொண்டிருந்த மாலை நேரத்தைப் பார்த்தாள். மும்பையின் மாலைநேரம் செயற்கை விளக்குகளின் வெளிச்சத்தில் தெரிவதே இல்லை. கால் வைத்த இடமெல்லாம் விளக்கு. இங்கேயாவது அனைத்து வண்ணம், சுவை, வாசனைகளுடன் மாலை மறைகிறது. இந்த மாலை நேரத்துக்குச் சித்தியுடைய அணைப்பின் மென்மை இருக்கிறது. மஞ்சள் வண்ண நட்சத்திரப் பூவின் வாசனை இருக்கிறது. தன்மயி எழுந்து குஷீ சித்தியின் பக்கம் ஓடினாள். சமையலறையில் சப்பாத்தி உருட்டிக்கொண்டிருந்த குஷீ சித்தி இப்போது குமாரி குஸுமா தொட்வாட் ஆகியிருந்தாள். சீருடையணிந்த ஸ்கவுட்டாக நகரத்தின் மத்தியில் வாகனங்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்தாள். நாலுகால் பாய்ச்சலில் நானூறு மீட்டர் தாண்டியிருந்தாள். பலத்த கைத்தட்டலுக்கு நடுவே மின்னும் ஷீல்டைப் பெற்றுக்கொண்டிருந்தாள். ஆனால் அதே சீருடையில் அதே நாலுகால் பாய்ச்சலில் ஓடித் திருமண மண்டபம் ஒன்றுக்குள் புகுந்த கணத்தில் எல்லாக் கைத்தட்டல்களும் நிற்க அதிர்ந்து நின்றாள். தன்மயி அவளையொட்டி நின்றிருந்தாள். தன்மயி அச்சு அசல் சின்னக் குஸுமாவாகவே தெரிந்தாள். தன்மயியின் கையில் சப்பாத்தி உருட்டும் கட்டை இருந்தது. ஆவேசத்தோடு சித்தி அதைப் பிடுங்கிக்கொண்டு அவளைப் பக்கத்தில் சேர்த்துக்கொண்டு ‘இதெல்லாம் நீ செய்யாதே. வெளிய போ’ என்றாள்.

இரவு தன்மயியின் கனவில் பெரிய தேர்வுக்கூடங்கள். ‘உன்னோட பேப்பர் இன்றைக்கே இருக்கிறது. தெரியாதா?’ எனப் பயமுறுத்துபவர்கள். பெரிய பெரிய ஸ்கேல், டேப் பிடித்து என்னென்னவோ அளப்பவர்கள். தேர்வுக்கூடத்தில் இடமே கிடைக்கவில்லை. கிடைத்தால் பையில் ஹால்டிக்கெட் இல்லை. ஆயிரக்கணக்கான பெண்பிள்ளைகளில் ஒருவரும் சினேகிதிகளல்ல. வியர்த்து எழுந்தாள். அதற்குள் இதயத்தில் குண்டு பாய்ந்ததுபோல அலாரம் அலறியது. ‘எந்திரிடா எந்திரிடா’ என்று சித்தப்பா மஞ்சுவைப் படிக்க எழுப்பும் சத்தம். கித்தூர் ராணி சென்னம்மா பூங்காவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போலீஸ் பேண்ட் சினிமாப் பாடல்கள் இசைப்பதைக் கேட்டு மஞ்சு மெய்மறப்பான். சின்னவனாக இருந்தபோது தானும் பெரியவனான பிறகு டிரம் வாசிப்பவனாவேன் என்பான். பேண்ட்காரர்களை அவர்களுடைய தந்தைமார் இவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்க முடியாது என்று அவன் எண்ணியதைப் போலிருந்தது. இப்போது தன்மயியின் கனவில் மஞ்சு ஜரிகைச் சட்டை போட்டுக்கொண்டு ட்ரம் வாசித்த படி நடந்தான். ‘எந்திரிடா எந்திரிடா’ சித்தப்பாவின் குரல் இப்போது உச்சத்தையடையத் தன்மயி எழுந்து உட்கார்ந்தாள். தன்னையும் எழுப்புவதற்காகவே சித்தப்பா அப்படிக் கத்தினாரோ? அவளுக்கு மீண்டும் வயிறு கலங்கியது. சித்தப்பா ஏன் எப்போதும் குஷீ சித்தியிடம் மென்மையாகப் பேசுவதில்லை. சாப்பாட்டுக்கு உட்காரும்போதும், பிடுங்கி எறிவதைப் போலக் கவளத்தை வாயில் போட்டுக்கொள்கிறார். சித்தியின் முகத்தோடு முகம் பார்ப்பதேயில்லை. சித்தி ஏன் ரகசியமாக அழுகிறாள்? ‘உனக்கு எதைச் செஞ்சா சந்தோஷன்னு படுதோ அதையே செய்’ என்று ஏன் ஊக்குவித்தாள். அட்மிஷன்களின் தடம், ஓட்டத்தின் தடம், அளப்பவர்களின் தடம் என எல்லாத் தடங்களின் முனையிலும் ஒரு சித்தப்பா இருப்பாரா அல்லது சப்பாத்தி மணை இருக்குமா? குஷீ சித்தி எழுதிய கவிதைகள் எங்கே போயின? கனவில் என்பதாக இப்போது குஷி சித்தி தன்மயியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் கன்னங்கள் ஈரமாயிருந்தன. தன்மயிக்கு மீண்டும் தூக்கம் வந்தது.

அன்று சித்தப்பா எங்கும் போகவில்லை. காவல் காப்பவரைப் போல வீட்டிலேயே இருந்தார். ‘குளிங்க’ என்று இரண்டுமுறை சொன்னதற்குச் சித்தியின் மேல் எரிந்து விழுந்து திட்டினார். மஞ்சு தன் அம்மா தன்மயியிடம் காட்டும் அக்கறையால் எரிச்சலடைந்தோ அப்பாவுக்குப் பயந்தோ ஒருவகையான முட்டாளைப் போலப் பலமாக அவலயமாக வாக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது கொஞ்சம் தூங்கிவிழுந்தான். ‘மஞ்சு ஏன்டா இப்படித் தூங்கறே?’ என்று தன்மயி கேட்டதற்குப் பாட்டி ‘போதும் போதும். அவனைப் பார்த்து நீ ஒழுங்கைக் கத்துக்கோ. மும்பையில உனக்கு ஒழுங்கைக் கத்துத்தர உன் அப்பா அம்மாவுக்கு நேரம் எங்கிருக்குது?’ என்று முழங்கினாள். சித்தப்பா தன் பெரிய கரிய பூட்ஸுகளை நக்குபவரைப் போலச் சப்புக்கொட்டியவாறு பாலீஸ் போட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே ‘மஞ்சு, எப்படியிருக்குது பாரு’ என்று பூட்ஸுகளைக் காட்டினார். மஞ்சு தூங்குவதை நிறுத்தி ‘அப்பா இன்னும் கொஞ்சம் வேணும்’ என்று சொன்னான். மீண்டும் சித்தப்பா அழுத்தி அழுத்திப் பாலீஸ் போட்டார். தன்மயியிக்கு இவையெல்லாம் தேர்வைவிடப் பயங்கரம் எனப்பட்டது.

மத்தியானம் சாப்பிட்டதும் சித்தப்பா பெரிதாகச் சத்தமெழுப்பிய வாறு எங்கோ புறப்பட்டுப் போனார். தாத்தாவும் பாட்டியும் படுத்திருந்தார்கள். அனேகமாக எல்லா வீடுகளிலும் சோம்பல் கவிந்ததுபோலத் தூங்கும் நேரம் அது. கொஞ்சம் பழைய பத்திரிகைகளைப் புரட்டிய படி உட்கார்ந்த தன்மயி சலிப்புற்றுக் குஷீ சித்தியுடன் சேர்ந்துகொள்ள உள்ளே போனாள். அங்கே அவளைக் காணவில்லை. அப்படியே வீட்டின் பின்கதவைத் திறந்து பார்த்தாள். நம்ப முடியாத காட்சியொன்று தெரிந்தது. பின்பக்கத்துச் சின்னச் செவ்வகக் காம்பௌண்டுக்குள் சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகி வியர்த்த முகத்தோடு குஷீ சித்தி சைக்கிளைப் பிடித்தபடி பெடலில் ஏற முயன்றுகொண்டிருந்தாள். தூறலோடு வெயிலடித்தபடி வித்தியாசமான வெளிச்சம் பரவியிருந்தது. தன்மயி சத்தமில்லாமல் மறைந்திருந்து பார்த்தாள். குஷீ சித்தி ஓடோடியவாறே பெடலில் ஏறி நேராக நிற்க எத்தனித்தாள். அடுத்து சீட்டில் உட்கார வேண்டியதுதான் என்பதற்குள் காம்பௌண்ட் முடிந்துவிட்டது. மீண்டும் சைக்கிளைத் திருப்பி மறுபடியும் அதேபோல ஓடிப் பெடலில் ஏறி நின்றாள். இந்த முறை பெடலில் ஏறியவுடனே சீட்டின் மேல் உட்கார்ந்துவிட்டாள். ஆஹா, அவள் முகத்தில் அதெப்படிப்பட்ட மகிழ்ச்சி! அதற்குள் சேலை முடிச்சு முடிச்சாகத் தடையாகி ஒரு பக்கம் சாய்ந்து இறங்கினாள். தன்மயி தாள முடியாமல் ஓடி இணைந்துகொண்டாள். ‘எங்க மறந்துபோச்சோன்னு. உனக்குக் கத்துத்தர்றதுக்கு முன்னாடி எனக்குச் சரியா வரணுன்ல’ என்ற அவளே உதட்டைக் கடித்து ‘கொஞ்சம் பிடி’ என்று சைக்கிளைத் தன்மயியின் கையில் கொடுத்துவிட்டுக் குனிந்து சேலையை வீராங்கனை மாதிரி கட்டிக்கொண்டாள். மீண்டும் தன்மயி முன்புபோலப் பிடித்துக்கொண்டிருக்க ஜம்மென்று ஏறி பேலன்ஸை மறுபடியும் அடைந்த மகிழ்ச்சியில் சுற்றி வந்தாள்.

தன்மயி ‘சித்தீ ஐடியா. நீ என்னோட சல்வார் கமீஸ் போட்டுக்க’ என்றாள். குஷீ சித்தி சின்னப் பெண்ணின் மகிழ்ச்சியில் உள்ளே ஓடி ஒன்று இரண்டு மூன்று உடுப்புகளைப் போட்டுக் கழற்றிப் பிறகு மஞ்சள் சல்வார் கமீஸ் போட்டுக்கொண்டாள். கண்ணாடியில் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டாள். தன்மயியிக்குக் குஷீ சித்தி தன் சினேகிதியின் அளவே சின்னவளாகத் தெரிந்தாள். இருவரும் அவசரத்தோடு சத்தமில்லாமல் சைக்கிளை வெளியே கொண்டு வந்தார்கள். குஷீ சித்திக்கு மஞ்சுவின் மேல் பாசம் வந்தது. ‘நீயும் வாடா ரேடியோ ஸ்டேஷன் ரோடுக்குப் போலாம். தன்மயிக்குச் சைக்கிள் ஓட்டக் கத்துத்தரலாம்’ என்றாள். மஞ்சு தவித்துப்போனான். ஆனால் அம்மாவை முதன்முதலாகப் புதிய வேஷத்திலும் ஆவேசத்திலும் பார்த்த அவன் பயந்து ‘இல்ல’ என்று சொல்லிவிட்டான். அல்லாமல் தான் போனால் இவ்வளவு அற்புதமானவற்றைப் பற்றிக் கோள் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் யோசித்தான்.

சாலையின் இரண்டு பக்கத்து வீடுகளிலும் மனிதர்களே இல்லையோ என்னும் பிரமையை உண்டுபண்ணும் மத்தியானம். ஈரமும் வெயிலுமான சாலையில் தூறலில் ஓடிக்கொண்டே குஷீ சித்தி சைக்கிளில் ஏறினாள். தன்மயி மட்கார்டைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடினாள். சித்தியின் கண்ணெதிரில் அவள் பூர்வீக மண்ணின் சாலையே விரிந்துகொண்டிருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சைக்கிளில் ஏறிய, தன்மயியின் உடையை அணிந்த குஷீ சித்தி அங்கங்கே தடுமாறினாள். இரண்டு பிரேக்குகளையும் பிடித்துக் குறுக்குமறுக்காக இறங்கினாள். வானொலி நிலையச் சாலையை அடைந்தபோது அங்கே குளிர்ச்சியான வித்தியாசமான அமைதி நிலவியது. மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளின் உறுமல் சத்தம் சமீபத்திலேயே ஓடிக்கொண்டிருந்த நெடுஞ்சாலையிலிருந்து வந்துகொண்டிருந்தது. ஈரமான புதர்கள் தங்கள் மஞ்சள், காவிநிற நட்சத்திர வடிவப் பூக்களின் வாசனையைக் காற்றில் பரப்பிக்கொண்டிருந்தன. எல்லாத் தரித்திரத் திட்டுகளின் உலகத்தை எவ்வளவோ தூரம் கடந்துவந்தது போன்ற இதமான உற்சாகம்.

இந்தப் பக்கம் எவ்வளவோ நேரத்துக்குப் பிறகு சித்தப்பா வீட்டுக்குத் திரும்பிய பிறகு மஞ்சு தன் வாய் கிழிந்துபோகிறளவு மூச்சுவிடாமல் எல்லாவற்றையும் சொன்னான். சித்தப்பா ‘எங்கிருக் கறாங்க காட்டு’ என்று அலறி வெளியே வந்தார். மஞ்சு முன்னால் ஓடியவாறும் சித்தப்பா மேல்மூச்சு வாங்கிக்கொண்டு நீண்ட அடியெடுத்து வைத்துப் பின்னாலுமாக வானொலி நிலையச் சாலைக்கு வந்தார்கள். சித்தப்பா ‘எங்கடா அவங்க?’ என்று கர்ஜித்தார். மஞ்சுவும் ‘அதோ அங்கப் பாரு’ என்று காட்டினான். அடர் பச்சை இயற்கை ரம்மியமாயிருந்தது. தூரத்து இறக்கத்தில் சைக்கிளில் உட்கார்ந்திருந்தது தன்மயியா குஷீ சித்தியா எனப் புரியவில்லை. ஒருத்தி மட்கார்டைப் பிடித்திருந்தாள். இன்னொருத்தி சைக்கிள் மிதித்துக்கொண்டிருந்தாள். ஒரே வகையான உடையில் ஒரே மாதிரித் தெரிந்தார்கள். அதிர்ந்து நின்ற சித்தப்பாவைவிட்டு மஞ்சு ‘ஹோ’ என்று கத்தியபடி மெய்மறந்து அவர்களை நோக்கி ஓடினான். விசாலமான அந்த வழி தூரத்தில் மேட்டில் சற்றே வளைந்திருந்தது. இரண்டு பக்கங்களிலும் காவலுக்காக நின்றதுபோல நெருக்கமான மரங்கள். வண்ண ஓவியம் நீரில் கரைவது போல அந்தக் காட்சி முழுவதின் எல்லா வண்ணங்களையும் கரைத்து ஒன்றாக்கிக்கொண்டிருந்தது மழை. காவி, மஞ்சள்நிறப் பூக்கள், நட்சத்திரங்களைப் போலத் தெரிந்தவாறு மழையில் கரைந்துகொண்டே மேட்டின் வளைவில் அவர்கள் மறைந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *