தனி வீடு

 

அம்மா மாட்டுக் கொட்டகைக்குள் சாணத்தை பெருக்கிக் கொண்டிருந்தாள். முதுமை அவளை முழுவதுமாக தின்னாமல் எலும்பை மட்டும் விட்டு வைத்திருந்தது. காதோர முடிகள் புளிச்சைத்தண்டு நாரைப் போல வெளிர்த்திருந்தன. கொசுவம் மாதிரியான சுருக்கம் முகத்தில் அப்பியிருந்தன.

முடிச்சை அவிழ்க்க இதுதான் சரியான தருணம் என எனக்குப்பட்டது.

“அம்மா ……“

தலையைத் தூக்கிப்பார்த்தாள்.

“நானும் காஞ்சனாவும் கொஞ்ச நாளைக்கு வெளியே தங்கிக்கிறட்டுமா?“

இடுப்பின் பின்புறம் இரண்டு கைகளையும கொடுத்து நிமிர்ந்தாள். நெட்டிகள் பொடபொடவென பறிந்தன.

“நீயும் காஞ்சனா மட்டும் தானா. இல்ல புள்ள மதனும்மா?“

“மதன விட்டுட்டா போக மடியும் ? அவனும் தான்”

சமிஞ்கையாக ஒரு பார்வை பார்த்து விட்டு சாணக்கூடையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“முப்பது வருஷத்துக்கு முன்னாடி சாணிக்கூடை இருக்கிற இடத்தில நீ இருந்தேடா மகனே “

அம்மா எதையும் நேராக பேசக்கூடியவள் அல்ல. அவளுக்கென தனி நடை இருக்கு. சாணத்தை கொட்டிவிட்டு மறுபடியும் சாணத்தை பெருக்கும் போது அம்மாவைப் பார்க்க பாவமாகத் தெரிந்தாள்.

“இரும்மா ….குப்பைய நான் தூக்கிவிடுறேன்.“

முந்தாணையை எடுத்து லபக்கென்று சொருகிக் கொண்டவள் அரை வட்டமடித்து கூடையை இடுப்பில் சாத்திக் கொண்டாள்.

“மாட்டுச்சாணம் உனக்கு இப்ப குப்பையாப்போச்சு?“ என சொல்லிவிட்டு பூமி குலுங்க நடந்தாள்.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேனு இப்படியெல்லாம் பேசுறே?“

கூடையை கீழே போட்டவள் முந்தாணையை கைப்பிடிக்குள் சுருட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டாள்.

“இப்ப நீ பொண்டாட்டி புள்ளைய அலைச்சிக்கிட்டு ஊர விட்டு கிளம்புனா, ஊருசனம் என்னடா சொல்லும். வீட்டுக்குள்ளே எதோ சலசலப்புனு காது கடிச்சிக்கிற மாட்டாங்க?“

“ஊர் சனத்துக்காகவாம்மா வாழ முடியும்?“

“பின்னே…….. மனுசன்க துணி உடுத்துறமுனா எதுக்கு உடுத்துறோம்? அடுத்தவங்களுக்காகதான் உடுத்துறோம். “

“அப்படியே பேசினாலும் எத்தனை நாளைக்குத்தான் பேசுவான்க. ஒரு வாரம்? . இல்ல ஒரு மாதம்?”

“நீ பொம்மணாட்டி பேச்சைக்கெட்டுக்கிட்ட அவள் பின்னாடி போறத காலாக் காலத்துக்கும் பேசுவாள்வடா”

என் ஆழ்மனதில் சுருக்கென்று ஒரு தையல் விழுந்தது.

தூரத்தில் காஞ்சனா அன்னக் கூடையை கழுவும் பாவணையில் நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். கீதாரி அசரும் நேரத்தில் வேலியைத் தாண்டும் செம்மறி ஆட்டைப் போல அம்மா என்னை கவனிக்காத நேரம் பார்த்து காஞ்சனாவை கவனித்தேன்.

வாயை நெளித்து இளக்காரம் செய்தாள்.

அம்மாவைப் பேச விட்டால் நிறைய பேசுவாள். காஞ்சனா என்னும் பிம்பம் வேலி படலுக்குள் நிழலாட மனதில் எழும் கொந்தளிப்புகளை மாத்திரையைப் போல விழுங்கிக் கொண்டு அடுத்த வேலைக்கு எட்டுப்போட்டாள். என் நினைவுகளோ கடந்தக் காலத்திற்குள் போய் சொருகிக் கொண்டது.

“நகரத்து பொண்டுக தாலிக்கயிற தங்கத்தில கேட்பாள்வ . தனிக் குடித்தனம் வைக்க சொல்லுவாள்வ. விடிஞ்சா சுடிதார், இருட்னா நைட்டி . தஸ் புஸ்னு மணிக்கணக்கில் பேச்சு. மாமியார் பிரச்சனைக்கு புருசன கோர்ட் படியில ஏத்துவாள்வ. நீ பாத்திருக்கும் பொண்ணு காஞ்சனா எப்படிடா?“

“அப்படியெல்லாம் இல்லம்மா.காஞ்சனா ரொம்ப நல்ல பொண்ணு”

“நானும் விசாரிச்ச வரைக்கும் அப்படிதான் தெரிஞ்சது. அப்பறம் நடக்கப்போற கதையெல்லாம் , கடவுளு நம்ம தலையில போட்ட எழுத்து . கல்யாணத்துக்குப் பிறகு கிராமத்திலேயே இருக்க பழகிக்கிருவாளா?“

“ம். இருப்பாம்மா“

அம்மாவும் நானும் இப்படி பேசிக் கொண்டது நேற்று நடந்தது போலவே இருக்கு . ஆனால் எட்டு வருசமாச்சு.

காஞ்சனா அவசரமாக என்னை அழைத்தாள். நிகழ்காலத்திற்குள் வந்தேன்.

“பேசச் சொன்னா தவளைய முழுங்கிய பாம்பாட்டம் பம்முறீங்க. பெத்த அம்மாக்கிட்ட பேசுறதுக்கே இப்படி. எல்லாம் என் தலைஎழுத்து“

“என்ன நான் பம்முனேன்?“ கோபமாக கேட்டேன்.

“நீயும் அப்பாவும் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருங்க. நான் கொஞ்ச நாளைக்கு வெளியிலே தங்கிக்கிறேனு பட்டுனு போட்டு உடைக்க வேண்டியது தானே”

“நீ நினைக்கிற மாதிரி இல்ல காஞ்சனா ,பெத்தவங்களுக்கிட்டே வார்த்தய அளந்துதான் வைக்கணும்“

“நான்தான் அப்பவே கேட்டேன்ல. தனிக்குடித்தனமா நம்மள வைப்பாங்கலானு? அதுக்கு அப்ப நீங்க என்னச் சொன்னீங்க?“

“வைப்பாங்கனு சொன்னேன்”

“பின்னே ஏன் வைக்கல?“

“கொஞ்சம் பொருத்துக்கோ காஞ்சனா . மதன் படிக்கிற காலத்தில தனியா போயிடுவோம்“

கண்டும் காணாமலும் அதுக்கும் இதுக்குமாக நடந்த அம்மா டீக்கடை போய் திரும்பிய அப்பாவை அழைத்துக் கொண்டு நட்ட நாத்துக்குழியை மறைக்க தண்ணீர் கட்ட கிளம்பி விட்டாள்.

“காஞ்சனா ”

கரு விழிகள் இமைக்குள் சொருக நெற்றியை நிமிர்த்தி பார்த்தாள்.

“சரி உருப்படிகளை எடுத்து வை”

மொட்டு மலர்வதைப்போல மெல்லியதான அவள் இதழ்கள் அசைவுற்றன. அதிலிருந்து ஒரு சொல்லும் வந்து விழுந்தன.

“இப்பவேவா?“

“ம்.இப்பவே தான்.?“

அவளுக்கு கைக்கால்கள் ஓடவில்லை. அவளுடைய மனசு குளிர்ந்தது

”வீடு?“ கேட்டாள்

“பழைய வீட்ல தங்கிக்கிறலாம்”

எரித்து விடுவதைப் போல பார்த்தவள்.. “என்ன விளையாடுறீங்களா?“

“நீ நினைக்கிற மாதிரி இல்ல காஞ்சனா. என்னால அப்படியெல்லாம் திடுதிப்புனு பெத்தவங்கள விட்டுட்டு டவுன்பக்கம் வர முடியாது“

எங்கள் இருவர்களுக்கிடையிலும் கொஞ்ச நேரம் நிசப்தம் நிலவியது.

“இரண்டு மாதம் மட்டும் பழைய வீட்டில் தங்குவோம்..பிறகு உன் விருப்பப்படியே டவுன்“

எனது யோசனை அவளுக்கு சரியென பட்டிருக்கும் போலும் சம்மதித்தாள்.

பழைய வீட்டுக்கும் இப்ப குடியிருக்கும் வீட்டுக்கும் குறுக்கே ஒரு நீரோடைதான். ரோடு சுத்தி வர ஒரு மைல் தூரம் பிடிக்கும்.

தனிக்குடித்தனம் போகப்போகும் குதூகலத்துடன் மகனைத் தேடினாள். மதன் சின்னஞ்சிறு செட்டுகளோடு தெருவில் அவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

“மதன்….இங்கே வா உன்னை அப்பா கூப்பிடுறாங்க.”

“போகங்கம்மா நான் விளையாண்டுக்கிட்டுருக்கேன்“

“வாடா அப்பா கூப்பிடுறாங்க“

“போங்க நான் வர மாட்டேன்.“

காஞ்சனா வேகமாக மகனை நோக்கி நடையைக் கட்டினாள். அவன் மண்ணையெல்லாம் குவித்து வீடு கட்டிக் கொண்டிருந்தான். சுற்றிலும் சற்றுச்சுவர் எடுத்திருந்தான் பின்பக்கமாக திரும்பி இரண்டு கால்களையும் ஒன்றுச்சேர்த்து விரல்களால் ரோடு போட்டிருந்தான்.ரோடு வீட்டைச்சுற்றி நெளிந்து வாசலில் வந்து நின்றது.

“மதன்.. இது என்னப்பா வீடா?“

“அய்யே இல்லம்மா. பங்களா“ என சொல்லிக் கொண்டே அவனது விளையாட்டில் துடிப்பாக இருந்தான்.

அவளுக்கு வந்த சிரிப்பை வெடிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காஞ்சனா, மகன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டையும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பங்களாவிற்கு அருகில் குச்சி ஒன்று ஊன்றியிருந்தது.அதைப் பார்த்துக் கேட்டாள் “இது என்னப்பா மரமா?“

“ஊகூம். அது டவர்மா. நாம போன் பேசனுமில்ல“

தூரத்தில் ஒன்றிரெண்டு தென்னம் கீற்றை வைத்து சிறியதாக கொட்டகை ஒன்றும் போட்டிருந்தான். அந்த கொட்டகையை நீண்ட நேரமாக பார்த்திருந்தவள் பிறகு கேட்டாள.

“மதன் என்னப்பா நீ கக்கூசை கொண்டுப்போய் அவ்ளோ தூரத்தில கட்டிருக்கே?“

“என்னம்மா நீ எல்லாத்தையும் தப்புத்தப்பாகவே சொல்றே“

“பின்னே என்னப்பா அது?“

“தனி வீடு வேணுமுனு அப்பாக்கிட்ட சண்டை போடுற மாதிரி எங்கிட்டேயும் நீங்க சண்டை போடக்கூடாதுனு உங்களுக்கான தனி வீடும்மா அது.”

பிரக்ஞை தப்பிய நிலையில் இடுங்கிப்போய் திரும்பி வந்து கொண்டிருந்தாள் காஞ்சனா. 

தொடர்புடைய சிறுகதைகள்
பக்கத்து வீட்டு வினோத் மட்டுமா சொன்னான்?. ...
மேலும் கதையை படிக்க...
சீரியலுக்கு இடையில் வந்துபோகும் விளம்பரத்தைப்போல மின்சாரம் வந்த சடுதியில் துண்டித்துக்கொண்ட போது மாடசாமிக்கு ஒரு யோசனை உதித்தது. கொட்டகைக்குள் கட்டப்பட்டிருந்த இரண்டு காளைகளையும் நோட்டமிட்டார். கிளிங்க், கிளிங்க் என மணியாட்டிக்கொண்டு மொய்க்கும் ஈக்களை விரட்டுவதும் அசை போடுவதுமாக இருந்தன. மாடசாமி, கொட்டகைக்குள் நுழைந்ததும் ...
மேலும் கதையை படிக்க...
பட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது.கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை.கடை துடைச்சிக்கிடக்கிறது. “ அண்ணே.... இந்த வெடி எவ்வளவுண்ணே...” “ இது என்ன வெடிண்ணே...” “ அண்ணன்ணே......எனக்குக் கொடுத்திருங்கண்ணே.....”பலா பழத்தில மொய்க்கும் ஈக்களைப்போல கடையில்கூட்டம் மொய்யோ மொய்னு மொய்க்கும்.கூட்டம்,நெரிசல்,கைநீட்ட, எக்கிப்பார்க்க, தள்ளுமுள்ளு, சச்சரவென...கடை எப்படியெல்லாமோ இருக்கும்.... கடையில்எதிர்ப்பார்த்தக்கூட்டமில்லை.ஒன்றிரண்டுப்பேர்கடையச்சுற்றி நின்றுக்கொண்டு பட்டாசுகளை எடுத்துப்பார்க்கிறதும், ...
மேலும் கதையை படிக்க...
“பலாப் பழம் சொல்லு ...” “பலாப் பலம்.” “பலம் அல்ல. பழம்” “பளம்.” “நாக்கை நீட்டு...” நீட்டினேன். “நாக்கு நன்றாகத்தானே இருக்கு. பின்னே என்ன?” “ம்... பழனியப்பன் சொல்லு.” “பளனியப்பன்.” “ போச்சிடா தமிழை கொல்கிறானே...” “எப்பா பழனியப்பா... உனக்கு அந்தப் பெயரை தெரியாமல் வைத்து விட்டேன். இனிமேல் மாற்ற முடியாது. அழகுத் தமிழில் நீ ...
மேலும் கதையை படிக்க...
குறுஞ்செய்தி ஒன்று மொபைலில் வந்து விழுந்தது. நீண்ட நேரமாக எதிர்பார்த்திருக்கும் செய்தியாக இருக்கலாம் என வேகமாக திறந்து படித்தார் அணுசக்தி துறை அமைச்சர் பீமராகவ் ”சாரி சார். பிப்டி பேசன்ட் டெத். இன்குலிடிங் டூ டாக்டர்” செய்தி , அமைச்சர் முகத்தில் துக்கத்தை ஓங்கி அறைந்தது. அவசரமாக ...
மேலும் கதையை படிக்க...
மெல்லினம்
மண்ணும் மாடசாமியும்
நரகாசுரன்
“ழ” வைத் தெரியுமா?
வித்தியாசமான கிராமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW