தனி ஒருவன்

 

முருகேசன் தன் பதினெட்டு வயது மகன் பார்த்திபன் வரவிற்காக வீடடின் கூடத்தில் மனைவியுடன் காத்திருந்தார்.

“பாத்தியாடி மணி பத்தாச்சு…ஒரே பிள்ளை ஒரே பிள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தியே, அவன் வீட்டுக்கு எப்ப வரான், போறான்னு ஏதாவது உனக்குத் தெரியுமா? அவன ஒரு நாளாவது நீ கண்டிச்சிருக்கியா? உனக்கு ஏதாவது அக்கறை இருக்கா?”

அப்போது அங்கு வந்து சேர்ந்த முருகேசனின் தாயார், “சும்மா அவள ஏண்டா திட்டுற? நீதானடா ஒரே பிள்ளைன்னு அக்கறையா அவன கவனிச்சு கண்டிச்சு வளர்க்கணும்….என்னோட பேரன் வீட்டுக்கு வந்ததும் அவன உட்கார வெச்சு அமைதியா, நிதானமா பேசு…சும்மா அவனிடம் சண்டைபோட்டு கத்தாத.” என்றாள்.

இரவு பதினோரு மணிக்கு தன் மோட்டார் பைக்கை வீட்டின் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் பார்த்திபன்.

முருகேசன், “டேய் பார்த்தி, இங்க வந்து உட்காரு, உன்னோட கொஞ்சம் பேசணும்” என்றார்

பார்த்திபன் உட்காராமல் நின்றபடியே, அலட்சியமாக தன் மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.

“காலேஜ் லீவ் என்பதற்காக நீ எப்பவும் ப்ரெண்ட்ஸோட வெளிலையே சுத்திகிட்டு இருக்கணுமா என்ன?”

“ஆமா எப்பவும் அவங்களோட இருந்தாத்தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு டாடி.”

“ஓஹோ அப்ப துரைக்கு வீட்ல இருந்தா நிம்மதியா இல்ல?”

“ஆமா நிம்மதியா இல்ல. எப்பவும் என்னைச்சுற்றி என் பிரண்ட்ஸ் இருக்கணும் அவங்களாலதான் நான் சந்தோஷமா இருக்கேன்…” பார்த்திபன் முறைப்புடன் சொன்னான்.

“என்னையும், அம்மாவையும் உன்னோட நல்ல ப்ரண்ட்ஸா நெனச்சு நீ நம்ம வீட்ல ரொம்ப நேரம் இருக்கலாமே…உனக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கிற எங்களையும் ஒரு பொருட்டா மதிச்சு உன் அன்றாட வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கலாமே. ஆனா நீ எதையும் எங்ககிட்ட பேசறதும் கிடையாது, ஷேர் பண்ணிக்கிறதும் கிடையாது. ரொம்ப நாளாவே நானும் அம்மாவும் இத நெனச்சு வருத்தப் பட்டிருக்கோம்.”

“வீட்ல என் சந்தோஷத்தைப் பத்தி நீங்க கூடத்தான் பொருட்படுத்தியதே கிடையாது.”

“நான் அப்படி நினைக்கலை பார்த்தி. உன் சந்தோஷத்துக்காக எதையுமே நாங்க செய்யத் தவறியதா எனக்குத் தோணலை. நீ கேட்டது எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்திருக்கிறோம். உனக்குன்னு கார், டூ வீலர், லேட்டஸ்ட் ஐ போன், லேப்டாப் என்ன இல்ல இப்ப உன்கிட்ட சொல்லு?”

“நான் இல்லேன்னு சொல்லலை டாடி. ஆனா இதெல்லாம் எனக்கு நீங்க ஒரு நஷ்டஈடு கொடுக்கிற மாதரிதான். அதை ஞாபகம் வச்சுக்கோங்க.”

“இல்லேன்னு சொல்லாம, நாங்க உனக்காக வாங்கித் தந்ததையா ஒரு நஷ்டஈடுன்னு சொல்ற?”

“ஆமா, நான் உங்ககிட்ட அதுவும் என்னோட ரொம்பச் சின்ன வயசுல கேட்டதை நீங்க எனக்குத் தரவே இல்லை…நான் கேட்டத நீங்க சீரியசாகவே எடுத்துக்கல.”

“ஸாரி எனக்கு நினைவில் இல்லடா. இப்ப சொல்லு என்னன்னு, உடனே வாங்கித் தரேன்.”

“நீங்க ஈஸியா மறந்திருக்கலாம் டாடி. ஆனா நான் அதை மறக்கல. ஏன்னா அது என்னோட ஏக்கம். அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன்…நம்ம நடன சித்தப்பாக்கு பிரேமா பிறந்திருந்தா. அவள பார்க்கிறதுக்கு நாமெல்லாம் போயிருந்தோம்… எனக்கும் அதுமாதிரி ஒரு குட்டிப் பாப்பா வேணும்னு சொல்லி நான் அழுதேனா இல்லையா? அப்புறம் நம்ம ரேவதி சித்திக்கு விக்னேஷ் பிறந்தப்ப எனக்கும் ஒரு தம்பி வேணும்னு, நான் கீழ விழுந்து புரண்டு ஒரு பெரிய ரகளை பண்ணேன்.

“……………….”

“யார் வீட்ல குழந்தை பிறந்தாலும், நான் உங்ககிட்ட வந்து எனக்கும் பாப்பா வேணும், தம்பி வேணும்னு அடிக்கடி அடம் பிடிச்சிருக்கேன். நீங்களும் ஒவ்வொரு தடவையும், இதோ பாப்பா வாங்கித்தரேன்னு என்கிட்ட பொய் சொல்லி என் அழுகையை நிறுத்திடுவீங்களே தவிர, எனக்குன்னு ஒரு தம்பியையோ, தங்கையையோ நீங்க கடைசிவரைக்கும் தரவே இல்லை.”

“ஸாரி அந்த வயசுல நீ அழுத அழுகையை நானும் அம்மாவும் சீரியஸா எடுத்துக்காம இருந்தது எங்க தப்புதான்…”

“ஆனா அந்த விஷயம் என்னை சின்ன வயசுலேயே ரொம்பவும் பாதிச்சிருச்சு. எந்த வீட்டில் பார்த்தாலும் குட்டி குட்டி பாப்பாக்கள் பிறக்குது…நம்ம வீட்ல மட்டும் ஒரு குட்டிப்பாப்பாகூட பிறக்கலையேன்னு ஏங்கியிருக்கேன். நிறையதடவை தனிமைல அழுதிருக்கேன்…ஆனா இதெல்லாம் ஒரு காலகட்டம் வரைக்கும்தான். விவரம் தெரிய ஆரம்பிச்சப்புறம் எனக்கு தம்பி வேணும் தங்கை வேணும்னு உங்ககிட்ட வந்து அழலையே தவிர, அந்த ஆசையும் ஏக்கமும் எனக்குள்ள அப்படியே மண்டிக்கிடக்கும். நான் தனி ஒருவனா இந்த வீட்ல அனாதையாகத்தான் இருக்கேன். நீங்களும், அம்மாவும் எங்கிட்ட ரொம்ப அன்பு காட்டறீங்க இல்லேன்னு சொல்லல… ஆனா வீட்ல எனக்கு விளையாடறதுக்கு ஒரு கம்பேனியனும் இல்ல. எனக்கு பயங்கர லோன்லினஸ் டாடி…வீடே வெறுத்துப்போய் வெளிய நல்ல நண்பர்களைத் தேட ஆரம்பிச்சேன்…அதனால முடிஞ்ச வரைக்கும் வெளிலேயே இருக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க எனக்கு என்ன வாங்கித் தந்தாலும் அது எவ்வளவு காஸ்ட்லியா இருந்தாலும், என்னோட தனிமையை உங்களால போக்க முடியல டாடி.

“இப்ப சொல்லுங்க என்னோட தீராத ஏக்கத்துக்கு நீங்கதானே காரணம்? ஏன் எனக்கு ஒரு உடன்பிறப்பு இல்லாம, ஒரு ஓரிக் காக்காவா என்ன வளத்தீங்க? நான் என்னோட பிரண்ட்ஸ்கூட சுத்தறது உண்மைதான். ஆனா நான் படிப்புல புலி, குடி, சிகரெட், போதைன்னு எந்தக் கெட்டப் பழக்கத்திலும் எறங்கல டாடி.”

“ஸாரி பார்த்தி இது என்னோட அறியாமைதான், தப்புதான்…… ஒத்துக்கறேன். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மகனா நீ மட்டுமே போதும்; எங்களோட மொத்த கவனத்தையும், அன்பையும் உன்னிடமே காட்டி உன்னை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினாலே போதும் என்கிற நல்ல எண்ணத்தில்தான், உனக்கு அப்புறம் வேற குழந்தைகள் வேண்டாம்னு நாங்கமுடிவு செய்தோம். அதனாலதான் உனக்கு தம்பியோ தங்கையோ பொறக்கல.”

“ஸோ என்னோட நடத்தைக்கு நீங்க ரெண்டுபேரும்தான் பொறுப்பாளியே தவிர, நான் பொறுப்பாக முடியாது.”

முருகேசன் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. அனாவசியமா இவனிடம் வாயைக்கொடுத்து, பிள்ளைப்பூச்சியை எடுத்து வயிற்றில் கட்டிக்கொண்டோமோ என்று நினைத்தார்.

பிறகு அவனிடம் கனிவாக, “உனக்கு தம்பியோ தங்கையோ நாங்க தரலேங்கறதுதான உன்னோட கோபம்? இன்னிலர்ந்து அதுக்கு நான் ட்ரை பண்றேன், என்னை நம்பு” என்றபடி மனைவியைப் பார்த்தார்.

“ப்ளீஸ் என்னை முட்டாளா நினைக்காதீங்க டாடி…உங்களுக்கு வயசு இப்பவே வயசு நாற்பத்திரண்டு, அம்மாவுக்கு முப்பத்திஎட்டு. உங்களுக்கு ஷுகர் வேற. தவிர இனிமே பிறந்து வளரப்போகிற தம்பியோ தங்கையோ எனக்குத் தேவையில்லை….இப்ப எனக்கு வேண்டியது என் வயசு க்ரூப் தம்பியோ, தங்கையோதான், அதற்கு காலம் கடந்து விட்டது…ஓகே லெட்ஸ் ஸ்டாப் திஸ் டாபிக். ஐ டோன்ட் வான்ட் டு ஹர்ட் யூ.”

மாடியேறி தன் படுக்கை அறைக்குச் சென்று விட்டான்.

இதுவரை குறுக்கே ஏதும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த முருகேசனின் அம்மா, “ஏண்டா முருகு, நான் உனக்கு அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன், நீ கேட்டியா? உனக்கு ஒரு பொம்பளப் புள்ள பொறந்திருந்தா நம்ம வீட்டுக்கு ஒரு மஹாலட்சுமி கிடைச்சிருப்பா. வரவர நம்ம உறவுகள்ல அத்தை, மாமா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா என்று எதுவும் இருக்காது போல…இந்தக் காலத்து பசங்களுக்கு உறவுகளின் மகிமை புரிய மாட்டேங்குது, வீடு, ஏ.ஸி. காரு, பேங்க்ல பணம்னு அலையா அலையறாணுவ…இதெல்லாம் எங்க போய் நிக்கப் போகுதோ தெரியலை” என்றாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)