தண்ணீரும் சொல்லும் ஒரு கண்ணீர்க் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 9,885 
 

முதன் முதலாக வீட்டிற்கு வந்திருந்த அந்தக் கல்யாணப் புரோக்கரைப் பார்த்த போது ஞானத்திற்கு இனிமை கொழிக்கும் கல்யாண சங்கதிகளையும் திரை போட்டு மறைத்தவாறு உள்ளுணர்வாய்ப் பார்க்கும் அவள் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஏனோ கலகம் செய்யவென்றே ஒரு புராண கால காரண புருஷனாய்க் களம் இறங்கும் நாரதரின் முகம் தான் நீண்டு வளர்ந்த வெண்ணிறத் தாடியுடன் பார்ப்பதற்கு அவர் அப்படித் தான் இருந்தார் ஆனால் அவர் வந்திருப்பது அதற்கல்ல அவளை மேலும் மங்களாக்கும் ஒரு தெய்வீகச் சடங்கை நிறைவேற்றவே அவரின் இந்த திடீர்ப் பிரவேசம் யார் சொல்லி அவர் இங்கு வந்தாரோ தெரியவில்லை அவரின் வாக்குச் சாதுர்யத்தால் மங்கள காரியமான அவளின் கல்யாணம் எவ்வித தடங்கலுமின்றி நடந்து முடிந்தது மாப்பிள்ளை பையன் குமார் அவரின் தந்தை வழி உறவாம் அவர்களின் பூர்விகம் புங்குடுதீவாக இருந்தாலும் தொழிலுக்காக டவுனில் வந்து குடியேறிய வந்தேறுகுடிகள் அவர்கள் இதற்கு மேலே வாழ்க்கைச் சத்தியத்தை நிலை நிறுத்தி வாழ்வதற்கான அவர்களைப் பற்றிய உயிர்த்துவ சங்கதிகள் எதுவுமே மறைபொருளாகிப் போன நிலைமையில் தான் அந்த வீட்டிற்கு முற்றிலும் எடுபடாத மறுதுருவத்திலிருந்து ஒரு புது விருந்தாளியாய் அவள் வந்து வந்து சேர்ந்தாள் அவள் தன்னிலையிலிருந்து பார்க்கும் போது அப்படித் தான் ஒரு புரிதல் தோன்றியது ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சூழலின் பசுமை மாறாமல் பார்க்கும் அவள் கண்களுக்கு முன்னால் எரிந்து கருகிய ஒரு கானல் போல் அவர்கள் வீட்டை அவள் கண்டது வெறும் காட்சி மயக்கம் தான் என்று பிடிபட்ட நிலையில் தான் உண்மையில் குமார் மீது அவளுக்கு ஓர் உயிர்ப் பிரவாகமாக மனங்கள் ஒன்றுபடும் அன்பு ஈர்ப்பு தானாகவே நிகழ்ந்தேறியது இந்த நிகழ்வுக்கு முற்றிலும் மாறுபட்ட அன்பு நெறியறியாத கறைப் பயணம் தான் குமாரினுடையது என்பதை அனுபவபூர்வமாய்க் கண்டறிய அவளுக்கு வெகு நாள் பிடிக்கவில்லை அதிலும் கடமையே கண்ணாக நம்பி உழைத்து வரும் மேலான அரச பணியாளன் அவன் இருந்தாலும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து விட்டதாழ்வுச் சிக்கலில் அவளோடு முரண்படும் போதெல்லாம் ஒரு மனநோயாளி போன்றே அவன் செயல்படுவதைக் கூட அவள் பெரிதுபடுத்தியதில்லை அவனிடமே பூரணசரணாகதியாகிப் போன கறைகளற்ற புனிதமான வாழ்க்கை வேள்வியின் நிலை தளும்பாத உயிர் வார்ப்பு அவள்

அவளைப் பொறுத்த வரை மங்களமென்பது பிறந்த வீட்டோடு அழிந்து போன திரும்பப் பெறவே முடியாமல் போன உயிர்ப்பு நிலை பெற்ற ஒரு உன்னதமான பெருமைக் கவச இருப்பு நிலை அந்தப் புரோக்கர் கால் வைத்த காலக் கோளாறோ கலியின் சாபமோ தெரியவில்லை அவள் அப்படியே அந்தப் பீடம் சரிந்து வேரறுந்து தலை கொய்யப்பட்டுக் கதியற்றுப் போன இருட்டில் கால் இடறி விழுந்து கிடக்கும் நிலைக்கு அவர் மட்டுமா குற்றவாளி? வெறும் பணத்துக்காகக் குழி தோண்டிய பாவம் மட்டுமே அவருடையது அந்தக் குழியில் நிலை சரிய நேர்ந்தது அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் உச்சக் கட்ட விபரீத விளைச்சல் இந்த விளைச்சலுக்கு உரம் போட்டு வளர்க்கிற சிந்தனை தெளிவில்லாத மனித மிருகங்களுக்கு இரை போடுகிற மாதிரியே அவளின் கல்யாண வேள்வி இப்படிக் கறைபட்டுப் போகுமென்று யார் கண்டார்கள்

இத்தகைய அவளின் உயிர்ப் பிரகாசமான பெருமைகளைக் கண்டறியத் தவறியது அவன் மட்டுமல்ல அவனிடம் குறைகள் பாராது சரணாகதியாகிவிட்ட நிலையில் அவனை மனதார அவள் ஏற்றுக் கொண்டு விட்ட இருப்பு வேறு அவன் வழியில் சிலுவை அறைந்து கொல்ல அவர்களும் தான் என்றால் இது ஜீரணமாக மறுக்கிற ஒரு பலப் பரீட்சை தான் அவளின் சிறிதும் பங்கமுறாத ஆன்மாவையே குறி வைத்து அவர்கள் தாக்கி வருவதைத் தான் அவளால் தாங்க முடிவதில்லை அவனுக்கு ஒரு முதிர்கன்னி அக்கா நட்சத்திர தோஷமிருப்பதால் இன்னும் கன்னி கழியாமல் இருக்கிறாள் அவர்கள் தகப்பனும் குற்றச் செயல்களுக்கு முகம் கொடுத்தே பழக்கப்பட்ட மகா பாவி புகையிலைத் தரகர் என்பதால் பாவ விளைச்சல் தானாகவே வரும் இந்த விதையின் நிலை சரியாத விருட்சங்கள் தான் அவர்களும் அவர்கள் கண்களுக்கு பெண்மையின் நலன்கள் சார்ந்த வரம் வேண்டி அங்கு வர நேர்ந்த அவளின் இருப்பு ஒரு குற்றக் குறியீடாகவே படும் அதனால் அவள் எது செய்தாலும் அங்கு எடுபடுவதில்லை அவள் சரியாக நடந்தாலும் எங்கோ ஒரு முனையில் குற்றம் கண்டு பிடித்து அன்றாடம் அவளைச் சிலுவையில் அறைவதை வேடிக்கை பார்க்கிற மனோ தர்மம் விடுபட்ட ஒரு குற்றவாளி கணக்கில் தான் அவனும் அவளுடன் உடல் ரீதியாக அவன் வைத்துக் கொள்கிற கீழ்த்தரமான உறவு நிலையையும் தாண்டிஅவளின் உணர்வுகளை மதித்து வாழத் தெரிந்த ஒரு முழு மனிதானாய் அவன் இருக்காத பட்சத்தில் வேறென்ன நடக்கும்?

சாந்தி யோகம் கை கூடாத ஒரு சகதி வாழ்க்கை தான் அவளுக்கு அதிலும் புரையோடிப் போன வறுமையின் நிழல்களில் தீக்குளித்தே வாழ்ந்து கழிக்க வேண்டிய அப்படியொரு விதியின் சாபத்தை சுமந்தே தீரவேண்டிய நிர்ப்பந்தப் பொறிக்குள் இப்போது அவள் அவளை அதிலிருந்து மீட்டு வாழ வைப்பதற்காக வேறு வீடு பார்த்துப் போகிற அளவுக்கு பெருங்கருணை கொண்டவனுமல்ல அவன் அவனுக்கு எல்லாமே அந்த வீடு தான் அந்த உறவு நிலையையும் தாண்டி அவள் பக்கமுள்ள நியாயங்கள் குறித்து அவன் ஒரு போதும் சிந்திக்கப் போவதில்லை அப்படிச் சிந்திக்காமல் விட்டதன் பலன் அவள் சுமக்க நேர்ந்த சிலுவையின் குரூரக் குறியீடுகள் மட்டும் தான்

ஒரு நாளா இரண்டு நாளா அவளுக்கு அந்த நரகச் சிறை வாசம் அவள் அவனை மணம் புரிந்ததே தண்டனைக்குரிய குற்றம் மாதிரி அவர்கள் நினைப்பில் அதற்காகவே இந்தச் சிலுவை அறைதல் அவள் மீது எவ்வளவு காலத்துக்கு என்று தான் இதையெல்லாம் பொறுக்க முடியும் அப்படிப் பொறுமை காக்க நினைத்தால் அவள் அழிந்து போவதைக் கடவுளால் கூடத் தடுக்க முடியாது உண்மையாகக் கடவுளை அறிந்து கொண்ட இடம் அன்பு நெறி தழைத்த ஒரு சாந்தி பூமியாகவே இருக்கும் அதை அறியாததன் விளைவே மிலேச்சத்தனமான அவர்களின் தாக்குதல் வெறி கையால் அடித்துக் கொன்றால் கூடப் பரவாயில்லை அவள் அப்படி உயிரை விட்டால் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்து விடுவாள் அவளை உயிருடன் வைத்துப் பழி வாங்கத் தொடங்கினால் பொறுமை காக்கும் பூமியையே தண்டிக்கிற மாதிரி அவர்கள் செய்யும் இந்த அநியாயம் கடவுளையும் அழ வைக்கும் கடவுளே கண்ணீர் வடித்தாலும் அவர்கள் திருந்தப் போவதில்லை

அவர்களுடையது பெயருக்குத் தான் கல் வீடு புறாக் கூடு மாதிரி இரு அறைகள் மாத்திரம் தான் சுவாமி அறை கொடி நிறைய அழுக்குத் துணிகளின் பரம்பலில் துர் நாற்றம் வீசக் களை இழந்து நிற்பதைக் காணப் பொறுக்காத மனவருத்தம் அவளுக்கு மட்டும் தான் தீட்டுக் குளித்தே வாழப் பழகி விட்ட பழக்க தோஷத்தில் அழுக்கு மண்டிய புறம் போக்கு உலகின் காட்சி அவலம் பிடிபடாத நிலையிலேயே அவர்கள் எதிலும் பட்டுக் கொள்ளாமல் சரளமாக நடமாடித் திரிவதைக் கூடக் கண்டும் காணாதது போல அவள் தனக்கேயுரிய அன்பு நிலையில் சிறிது கூடப் பங்கம் நேராமல் அவள் கரை ஒதுங்கிப் போகிற காட்சி ஒளி கூட அவர்களின் கண்களுக்கு எட்டுவதில்லை

அவர்களை பொறுத்த வரை உயிரிழந்த நடமாடும் பொம்மை தான் அவள் அவளுக்கு மனம் ஒன்று இருப்பதையே அடியோடு மறந்து போன அவர்களோடு தன் உயிரைப் பணயம் வைத்துப் பல சவால்களை எதிர் கொண்டு போராடிக் களைக்கவே கல்யாணம் என்ற பெயரில் அவளுக்கு அந்தக் கால் விலங்கு அதை விட்டு நகர்வதும் முடியாத காரியம் அப்படி இறுகிப் போயிருக்கிறது குமாருடனான அந்தத் திருமண பந்தம் அதைக் கழற்றி எறிந்தால் அவளுக்குத் தான் நட்டம் அவளை மறந்து விட்டுக் குமார் இன்னொரு கல்யாணம் செய்யத் துணிந்தாலும் அவனைப் புறம் தள்ளி பிறிதொரு ஆணின் முகம் பார்க்கிற தைரியம் கூட இல்லாத அவளுக்கு மறுமணமென்பது கனவில் கூட நடக்காது

அவன் காலடியே உலகமென்று வாழத் துணிந்த கற்பின் காவிய நாயகி போலவே உயிரின் ஒளி துலங்க அவள் அங்கு வாழ்ந்து கழிக்கிற தடங்கள் பிடிபடாத நிலையிலேயே அவனின் அக்காவோடு ஒரு சமயம் அவள் வீரும்பாமலே ஒரு தார்மீக யுத்ததிற்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது எந்தநாளும் அவர்கள் வீட்டில் உரலில் புழுங்கல் அரிசி குத்துவது மா இடிப்பது எல்லாம் தவறாது நடக்கும். அழுக்கு அடுப்படிக்குப் பின்னால் ஒரு மர உரல் இருக்கிறது ஓயாமல் அதில் இடிகிற சத்தம் கேட்டபடியே இருக்கும் விட்டிற்குப் பின் வாரந்தாவில் மலை போல நெல் மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை ஞானம் அதிசயமாக ஏறிட்டுப் பார்த்திருக்கிறாள் இதற்கெல்லாம் எங்கிருந்து காசு மழை கொட்டுகிறதோ? எல்லாம் அவள் கொண்டு வந்த சீதனப் பணத்தில் வாங்கிய நெல் மூட்டைகள் தாம் நிலைமை இவ்வாறு இருக்கும் போது குமாரோ பணத்தைக் கொடுத்துத் தன்னை விலைக்கு வாங்கி விட்டதாகப் பல தடவைகள் அவள் முகம் பார்த்தே சொன்னது ஜீரணமாகாத நிலையிலேயே அக்கா வழியில் குரூரமான ஓர் உணர்வுச் சித்திரவதைக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது காலையில் இருந்தே அவள் கையால் ஊறப் போட்டிருந்த சிவப்புப் பச்சரிசியை கல் தவிர்த்துக் களைந்து இடிப்பதற்காக அவள் அழுக்கு மண்டிக் கிடக்கும் அடுப்படியில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது அவளைக் கண்காணிக்கும் தோரணையோடு அக்கா வாசலில் நின்று கொண்டிருந்தாள் எந்நேரமும் வயிறு குமட்டும் கவுச்சி நெடி ஒரு புறம் பிறவிச் சைவம் அவள் மீனென்ன முட்டையையும் கண்ணில் காட்ட முடியாத மறு துருவத்திலிருந்து வந்த போதிலும் குமார் மீது கொண்ட அதீத காதல் ஈர்ப்பினால் வயிறு குமட்டினாலும் மிடறு விழுங்கித் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு கண்ணை மூடித் தவம் செய்கிற உயிரின் தீர்க்க நிலை குலையாத ஆளுமை அவளின் பிறவிப் பெருமை போல் அவர்கள் வீட்டில் களை கொண்டு நின்றாலும் அதைக் கண்டு கொள்ளத் தவறிய அவர்களிடம் அவளின் இவ்வாறான சத்திய இருப்பு நிலை ஓரு மறைபொருள் காவியமாக இருளில் மறைந்து போனதன் விளைவே தன் முனைப்புடன் கூடிய அவர்களின் அகங்கார மன வெளிப்பாடுகள் அக்கா மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன

அவள் அரிசிகளையும் போது தவறுதலாக நிலத்தில் சிந்திய நீரை வைத்து அக்கா வாய் கிழியச் சத்தம் போட்டு அவளோடு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குத் தயாரான போது அதை எதிர்க்கத் துணிவின்றி அவளின் வாயடைத்த மெளனம் வெகு நேரம் வரை நீடித்தது அவளைச் சிலுவையில் அறைந்து கொன்று போடும் தோரணை மாறாமல் மூக்கு நுனி சிவந்து ஆவேசக் குரல் கொண்டு அவள் பேசுவது கேட்டது

“தம்பிட்டை எத்தனை தரம் வாய் உளையச் சொன்னனான் உதுக்கு ஒரு மண்ணும் தெரியாதெண்டு அந்த மனுசி சொன்னது இப்ப நடந்திட்டுது பார் சீ நிலம் என்னத்துக்கு ஆகும் இப்படித் தண்ணீர் சிந்தினால் ஆராலை கழுவித் துடைக்க ஏலும்”

அவள் சொன்னதைக் கேட்டு மனம் பொறுக்காமல் ஞானம் அழுத கண்ணீரைப் பார்த்த சோகம் அவள் கொட்டிய தண்ணீரிலும் பிரதிபலிப்பது போல அவர்கள் வீட்டின் நிலை மாறாத சகதி குளித்து இருண்டு கிடந்த அதன் முகத்திலும் இரத்தக் கறை படிந்த தீட்டுடன் அதைப் பார்த்து விட்ட திடுக்கீட்டின் கனத்தை உள்வாங்கிச் செல்லரித்துப் போன சோகத்தின் இருப்பு நிலை மாறாமல் இருளில் மூழ்கிக் கிடந்த அவள் முன் உயிரழிந்த கோலத்துடன் அக்கா நின்று கொண்டிருப்பது கூடப் பிடிபடாமல் அந்தச் சூனியம் வெறித்த தனிமையில் வாக்குச் சத்தியத்தையே புனிதமாக நம்புகின்ற மனிதர்களைக் கண்டு உணரும் தவிப்போடு வெறித்த கண்கள் அலை பாய்ந்து ஸ்தம்பித்து அவள் அப்படியே தரையோடு தரையாய் உறைந்து போய் அமர்ந்திருந்த அவளுள் உள் மனமே சினம் கொண்டு கேட்பது போல் ஒரு குரல் கேட்டது

“அக்கா! உங்கடை தம்பியை மணந்த பாவத்துக்காக என்னை இப்படித் தண்டிகிறது நியாயமா என்று நான் கேக்கத் தொடங்கினால் உங்களிடமிருந்து சரியான கோணத்தில் பதில் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் வரப் போறதில்லை உங்கடை வாயைக் கிளறி வேடிக்கை பாக்கிற மனோ நிலையிலை ஒரு போதும் நான் இருந்ததில்லை நான் பிறந்து வளர்ந்த மாசற்ற தெய்வீகச் சூழல் என்னை வளர்த்த விதம் அப்படி தப்பு ஆரிட்டைத் தான் இல்லை சொல்லுங்கோ புறச் சூழலை வைச்சு ஆளைக் கணிக்கிற ஆள் நானில்லை அப்படி நான் பாக்கிற ஆளாய் இருந்தால் உங்கடை உறவுகளை மட்டுமல்ல இந்த ஊத்தை வீடு கிட்டப் போனால் மூக்கை பிடிக்கிற நிலைமையிலை இருக்கிற உங்கடை அம்மா கூட என்ரை மனசிலை ஒட்டாமல் எல்லாத்தையும் ஒரு நொடியிலை தூக்கி எறிஞ்சு போட்டு நான் போயிருக்கமாட்டேனா? இவ்வளவு தூரம் என்னிலை நிலைச்சிருக்கிற அன்பு கூட உங்கடை கண்ணிலை படேலை கேவலம் ஒரு சொட்டுத் தண்ணீர் அதுவும் இந்த ஊத்தை நிலத்திலை கை தவறி வழிய விட்ட குற்றத்துக்காக யாரோ மனுஷி சொன்னாவாம் வேதம்

அதை எனக்குப் படிச்சுக் காட்டுற உங்கடை புத்தியை எந்தச் சிலுவையிலை கொண்டு போய் நான் அறையிறது அதென்னெண்டு சொல்லுங்கோ நான் புத்தி தெளிஞ்ச மனிசியாய் இல்லை வேலை தெரிஞ்ச பொம்பிளையாய் என்னை மாத்தப் பாக்கிறன்

அவளுள் கனத்து அகண்ட உயிர் வெளியில் மட்டுமே ஆத்மார்தமாக அவள் கேட்ட கேள்விகளின் தொனி ஓங்கிச் சிதறிக் காற்றில் கரைந்து விட அது ஒன்றுமே செவிகளில் விழாத உயிரின் ஒளி திரிந்து போன நிழல் பதுமையாக மறு துருவத்தில் அக்காவை இனம் கண்ட பெருஞ்சோகம் தாங்காமல் இன்னும் அவள் அழுகிற நிலைமை தான் இந்த அழுகையைக் கண்டு தானும் கண்ணீர் வடிக்கிற மாதிரி அவள் கை தவறிப் பெருக விட்ட நிலத்திலே அந்த நீர் வெள்ளம் இப்படித்தான் மிகவும் நல்லவர்களான மனிதர்கள் அழுதால் நீரும் அழும் நிலத்தடி மண்ணும் வாய் விட்டுக் கதறி அழும் உயிர்க் காட்சி காணும் கண்களுக்கே இதெல்லாம் ஜடம் வெறித்த மனங்களைப் பொறுத்தவரை உயிருள்ள மனிதனும் நிழலாகிப் போன துக்கம் தாங்காமல் பெருகி வரும் கண்ணீர் அவள் கண்களுக்கு மட்டும் தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *