தண்டனை

 

மத்தியான நேரம். சித்திரகுப்தன் எருமை மாட்டின் கொம்பின் நுனியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். நன்றாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவினார். இருந்தும் அந்த எருமை மாடு கருகருன்னு இருட்டுப் போல கருப்பா இருந்தது. சிவந்த கண்களும் முறுக்கிய கொம்பும் யாருக்கும் பயத்தை வரவழைக்கும். பளிங்கு பாறையின் முன்னால் எமதர்மராஜா அலங்கரிக்கப்பட்ட உடையோடு நெஞ்சை நிமிர்த்தி ஒருமுறை அகலமாய் வாயைத் திறந்து சிரித்துக்கொண்டார். அவரின் கர்ஜனையால் எமலோகமே அதிர்ந்தது. எருமை மாட்டின் மீது அமர்ந்து கொண்டு இன்றையத் தொழிலுக்குப் பூலோகம் கிளம்பிவிட்டார்.

ராஜன் மிகவும் கவலையுடன் காணப்பட்டான். வயித்துப்புள்ளத்தாச்சி லட்சுமி மூடப்பட்ட அந்த அறையின் ஒரு பகுதியில் இரண்டு கால்களும் விரிந்த நிலையில் படுத்துக் கிடந்தாள். லட்மியால் வேதனை பொறுக்க முடியவில்லை. அவளைச் சுற்றிலும் சிஸ்டர்கள் நாலு பேர் இருந்தார்கள். லட்சுமியின் நெஞ்சுப்பகுதிக்கு அடியிலிருந்து கை வைத்து வயிற்றை நன்றாகக் கீழ் நோக்கி தள்ளிக்கொண்டிருந்தார்கள். குழந்தையின் தலைப்பகுதி மெல்லமெல்ல வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளே நடப்பது பற்றி அறியாத ராஜன், தன்னுடைய விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தான். மனசு வேற வேகமாக இயங்கியது. குழந்தை வெளியே வந்து கத்தியது. குழந்தையின் சத்தம் ராஜனின் காதுகளில் சங்கீதமாய் ஒலித்தது. எமன் இதற்கு மேல் பொறுமையில்லாதவராய் பாசக்கயிற்றினை ராஜன் மீது வீசினார். குழந்தை பிறந்த மகிழ்ச்சி கொந்தளிப்பில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மருத்துவரை உடனடியாக வரவழைக்கப்பட்டு ராஜனுக்கு சோதனை செய்யப்பட்டது. ராஜன் மாரடைப்பால் இறந்து விட்டான் என்றார் மருத்துவர். அங்கிருந்தவர்களின் அழுகை ஒப்பாரியாய் மாறிப்போனது.

“பொறந்தக் குழந்தைய ஒருமுறை கூடப் பாக்காம போயிட்டாரே…” “புள்ளப் பெத்துக்கிடக்குற மக லட்சுமி எழுந்து வந்து கேட்டா நா என்ன சொல்றது. கடவுளே.. என் மருமகப்புள்ளைய கொடுத்திடு. கடவுளே உனக்கு கண்ணில்லையா… இன்னும் வாழவே இல்லையே… அதுகுள்ள கூட்டிட்டு போயிட்டியே… ஆஆச்ச்ச்சு… ஆஆச்ச்சு…” என்று ஒப்பாரி வைத்தாள் லட்சுமியின் அம்மா.

ராஜன் கழுத்தில் கயிறை இறுக்கமாகக் கட்டி பூமியிலிருந்து எமலோகம் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் எமன். எருமை மாட்டின் வாலில் ராஜனை கட்டிப்போடப்பட்டது. கொஞ்ச நேரம் தான் இறந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனிடம் இல்லை. கொஞ்சகொஞ்சமாகத் தான் இறந்து எமனுடன் விண்ணுலகம் சென்று கொண்டிருக்கிறோம் என புரிய ஆரமித்தது ராஜனுக்கு. அழுதான். கண்ணீர் விட்டான். எமனிடன் கேள்விகள் பல கேட்டான்.

“எதற்காக என்னை இவ்வளவு சீக்கிரம் அழைத்துச் செல்கிறீர்” “நான் ஈ எறும்புக்குக் கூட துரோகம் நினைச்சதில்லையே” “நான் என்ன தவறு செய்தேன்” “பிறந்த என் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் சாகடித்துவிட்டீர்களே? அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? இவ்வுலகில் எத்தனையோ மனிதர்கள் ஊரையே கொள்ளை அடிக்கின்றார்களே! அவர்களை முதலில் சாகடிக்க வேண்டியதுதானே… என்னை ஏன் பிடித்து வந்தீர்கள்” ராஜன் எமனிடம் வாதம் செய்தான். எமதர்மராஜாவின் உதட்டிலிருந்து புன்னகை மட்டுமே வந்தது. கெஞ்சியும் பார்த்துவிட்டான். மிஞ்சியும் பார்த்துவிட்டான். எமன் வாயிலிருந்து ஒரு பதிலும் வருவதாக இல்லை. சோர்ந்து போய் படுத்துவிட்டான்.

எமனுக்கு எப்படியாவது தம்முடைய வாகனத்தை பூமியை விட்டு தாண்டியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தார். எமதர்மராஜா சில நேரங்களில் அழுத கண்ணீரைப் பார்த்தவுடன் மனம் இளகி பிடித்து வந்த உயிரை மீண்டும் விட்டுவிடுவார். அதனால்தான் அதிசியக்கும்படியாகச் சில மனிதர்கள் இறந்து போய் மீண்டும் பிழைத்துக்கொள்கிறார்கள். செத்துப்போயிட்டார்ன்னு சுடுகாடு வரை சென்றவர்கள் கூட மூச்சுவிட்டு எழுந்து நிற்பதைக் காணமுடியும். இதனால் பல நேரங்களில் மூம்மூர்த்திகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் எமன். பூமியைத் தாண்டிவிட்டால் என்ன அழுதாலும் மீண்டும் உயிரானது உடலிடம் போய்ச்சேராது. ஆகவேதான் எருமை வாகனம் பூமியைத் தாண்டும் வரை ராஜன் மீது தன்னுடையப் பார்வை விழதாபடிக்கும், காதில் எச்சொல்லும் கேட்காதபடிக்கும் முகத்தை அங்கும் இங்கும் திரும்பிய படியே வைத்திருந்தார். இதோ எருமை வாகனம் பூமியைத் தாண்டிவிட்டது. இனிமேல் தான் இரக்கப்பட்டாலும் இந்த உயிர் உடலில் சேராது. அதனால் கவலையில்லை. மனம் திருப்திவுடன் பலமாகச் சிரித்தார். எமனின் சிரிப்பைக் கேட்டு அதிர்ந்து போனான் ராஜன். இப்பொழுது ராஜனின் சந்தேக கேள்விகளுக்கு எமன் பதிலளிக்கத் தயாரானார்.

“மானிடா… உன் கேள்விகளை இப்பொழுது கேள்…”

“சாக வேண்டிய வயது அல்ல எனக்கு. என் உடலில் எந்த நோயும் இல்லை. அப்படியிருக்க எதற்காக என்னைக் கொன்று அழைத்துச் செல்கின்றீர்” – ராஜன்

“எல்லாம் உன்னுடைய கர்மவினை. உன்னுடையப் பாவங்கள் உன்னைக் கொன்றுவிட்டன”

“கர்மவினையா… நான் என்ன பாவம் செய்தேன். நான் யாருக்கும் கெட்டது பண்ணினது இல்லையே. என்னால் முடிஞ்ச உதவிகளை நாள்தோறும் செய்திட்டுதான இருந்தேன். அப்புறம் எப்படி பாவம் செய்தேன்?”

“நீ பாவம் செய்ததனால்தான் இப்படி குறைஞ்ச வயசுல வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறேன்”

“எரும மாட்ட நிறுத்து எம ராஜனே. நான் பாவம் செய்யவில்லை. தவறுதலாக என்னை அழைத்து வந்துவிட்டீர்கள். உடனடியாக என் உயிரை உடலுடன் சேர்த்து வையுங்கள்” என்றான்.

“ஆ…ஆ…ஆ… மீண்டும் எமனின் சிரிப்பு. மானிடனே நீ இந்த ஜென்மத்தில் நல்லவனாய்தான் இருந்தாய். ஆனால் போன ஜென்மத்தின் பாவம் உன்னை இந்த ஜென்மத்திலும் துரத்துகிறது” என்றார் எமன்.

“என்ன போன ஜென்மத்து பாவமா?”

“ஆமாம்! கடந்த பிறவியில் நீ செய்த பெரும்பாவம் உன்னை இன்றும் துரத்துகிறது”

“நான் செய்தது பாவமாக இருப்பின் அதற்குரிய தண்டனையை அந்தப் பிறவியிலேயே அனுபவிக்கவில்லையா? ஏன் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும்?”

“ம்… சரியான கேள்விதான்? நீ அப்போதும் அனுபவித்தாய்! இப்போதும் அனுபவிப்பாய்?”

“எதற்காக இரண்டு தண்டனை எனக்கு?”

“என்ன இரண்டு தண்டனையா? யார் சொன்னது உனக்கு? உன்னுடைய மொத்த தண்டனை ஏழு ஆகும். இப்போதுதான் இரண்டு கழிந்திருக்கிறது. இன்னும் ஐந்து பாக்கி உள்ளது”

“என்னது… இன்னும் வரும் பிறவிகளிலும் தண்டனையா? அப்படி என்ன தவறு செய்தேன் எமதர்மராஜா? – என்றான் ராஜன். அவன் செய்த பாவங்களை எமன் சொல்லலானார்.

கடந்த பிறவியில் நீ பிறந்து மூன்று வயதானதும் உன்னுடைய தகப்பனார் காலமானார். அது அவருடைய வினைப்பயன். அதன்பிறகு உன்னை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள் உன் தாய். மறுதிருமணம் செய்யாமல் உனக்காகவே வாழத்தொடங்கினாள். ஆண்களின் கழுகுப்பார்வையில் தப்பித்துப் படாதபாடுபட்டு தன்னையும் காத்துக்கொண்டு உன்னையும் நன்கு வளர்த்து வந்தாள். உன்னை ஆளாக்கி திருமணமும் செய்து வைத்தாள். உன் மனைவி பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தாள். அவளுக்கு நீதான் உலகம். உன் பிள்ளைகள் நட்சத்திரம். ஒருநாள் வயதாகி படுத்தப்படுக்கையாகி விட்டாள். காலமாற்றத்தால் உன் மனைவி மாமியாரைக் கொடுமைப்படுத்த ஆரமித்தாள். கணவனாகிய உன்னிடம் அம்மாவைப்பற்றி தரக்குறைவாகப் பேசினாள். நீ மனைவி மீது கொண்ட மோகத்தால் எல்லாமும் மறந்து பெற்றெடுத்த அன்னையை வெறுத்து ஒதுக்கினாய். உன் ஆயையும் நீ பெற்றெடுத்தப் பிள்ளைகளின் ஆயையும் கழுவிய அந்தத்தாயின் மலத்தைக் கழுவ ஆளில்லை.

“கண்டவளுக்கெல்லாம் பீ… மூத்திரம்… அள்ளவா என்னை எங்க அப்பனும் ஆத்தாவும் பெத்துப்போட்டுருக்காங்க” சிலிர்த்துக்கொண்டாள் மருமகள்.

சரியானப் பராமரிப்பு இல்லாதனால அவளின் உடம்புகளில் கொப்புளம் ஏற்பட்டது. கொப்புளத்திலிருந்து சீல் வடிந்தது. கொஞ்ச நாளுக்கு அப்புறம் அப்புண்களிலிருந்து புழு நெளிய ஆரமித்தது. அத்தாயின் மீது கடும் துர்நாற்றம் வீசியது. மகனாகிய நீ உன் அம்மாவை யாருமில்லாக் காட்டிலே தனியாக விட்டுப்போனாய். வெயிலின் தாக்கத்தினால் அன்றே உடல் வெந்து கண்ணீருடன் இறந்தாள். அத்தாயின் கண்ணீரே உன்னை இந்த அளவிற்கு கொண்டுபோய் விட்டுள்ளது. நீயும் ஒருநாள் கிழவனாவாய். உனக்கும் அந்நிலைமை உருவாகலாம் என்றார் எமன். ராஜனுக்கு தான் செய்த பாவவினைகள் புரிந்தது. தனக்கு கொடுக்கப்பட்டத் தண்டனை சரியானதுதான் என்பதை உணர்ந்தான். அதற்குள் இருவரும் எமலோகம் வந்து சேர்ந்தார்கள்.

எமன் வருவதைக் கண்ட எமகாத வீரர்கள் ஓடி வந்தார்கள். எமனை வணங்கிய அவர்கள், ராஜனைப் பிடித்துக்கொண்டார்கள்.

“எமகாதர்களே… எல்லாம் சரியாக நடக்கிறதா? என்றார் எமன்.

“நல்லபடியாக நடக்கிறது மகாராஜா. இவனை உடனடியாக அவ்விடத்தில் அழைத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்” என்றார்கள் எமகாதர்கள்.

கொப்பரையில் எண்ணை ஊற்றப்பட்டது. விறகு வைக்கப்பட்டு தீ மூற்றப்பட்டது. எண்ணையினுள்ளே ராஜன் இறக்கப்பட்டான். கொஞ்சகொஞ்சமாகச் சூடு பரவியது. அந்நேரத்தில் ராஜனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

“எமதர்மராஜா… எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.

“உன்னுடைய சந்தேகத்தை இப்போதே கேட்டுக்கொள். இல்லையெனில் அடுத்த ஜென்மத்தில்தான் என்னை பார்க்கவும் பேசவும் முடியும்” சிரித்துக்கொண்டே சொன்னார்.

“நான் செய்த குற்றத்திற்கு ஏற்றத் தண்டனையை அனுபவிக்கின்றேன். என் மனைவியாகிய அவளுக்குத் தண்டனை இல்லையா” என்றான்.

பலமாக சிரித்தார் எமன். “வினையின் பயன். விதியின் விளையாட்டு யாரையும் விடாது. இன்று உன் மனைவியாய் இருக்கின்றாளே லட்சுமி அவள்தான் உன்னுடைய முந்தைய பிறவியிலும் மனைவி ஆவாள். யாரை வெறுத்து ஒதுக்கினாளோ! யாருடைய மலத்தை தொட தயங்கினாளோ! அவளே உன் மகளாய் பிறந்துள்ளாள். லட்சுமிதான் அக்குழந்தையின் மலத்தை துடைக்க வேண்டும். ஆம்! உன்னுடைய தாய்தான் உனக்கு மகளாய் பிறந்துள்ளாள். கணவனை இழந்த உன் தாய் அனுபவித்த அனைத்தும் அவளும் அனுபவிப்பாள். வேண்டாமென்று ஒதுக்கிய தாயை இன்று அவளே அணைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பாள். உடல் என்பது வடிவம் மட்டுமே. உயிரால் விளையும் ஆன்மாவே என்றும் நிலைத்து நிற்கும்” என்றார்.

ராஜனின் உடல் எண்ணையில் கரைந்து போய் அடுத்தப் பிறவிக்கானக் கருப்பைக்காகக் காத்திருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு கிராமத்தில் எள்ளை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செக்கானும் அவனுடைய மனைவியும் மகளும் குடிசையில் வாழ்ந்து வந்தனர். தினமும் செக்கான் ஆட்டிய எண்ணெய்யை கிராமத்து தெருக்களில் அம்மாவும் பொண்ணும் விற்று வருவார்கள். அப்படியொரு நாள் செக்கானின் மகள் எண்ணெய் விற்றுக்கொண்டே கையை ...
மேலும் கதையை படிக்க...
கருப்பு நிறச் சாலையில் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாய் கேசவன், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். எதிர்க்காற்றில் தலைமுடி தென்னங்கீற்றாய் பறந்தது. அலுவலகத்தில் அன்றைய வேலை பரப்பரப்பாக ஓடியது அவனுக்கு. “கேசவனுக்கு என்னாச்சு… இன்னிக்கு ஒரே சிரிப்பும் கும்மாளுமாக ...
மேலும் கதையை படிக்க...
சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 ...
மேலும் கதையை படிக்க...
ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் அக்கல்லூரிக்கு. வழிநெடுக புளிய மரங்கள். மண்ணால் போடப்பட்ட சாலை. கல்லூரியின் குட்டிச்சுவரில் அன்பு யாரையோ எதிர்ப்பார்த்து உட்காந்திருந்தான். கல்லூரிக்கு மாணவர்கள் வருகின்ற திசையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அன்பு உட்காந்திருந்த பின்பக்கத்தில் ...
மேலும் கதையை படிக்க...
இடதாரம் செடி – ஒரு பக்க கதை
தாய்மை
அர்த்தநாரி
சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை
விளையாட்டு வினை

தண்டனை மீது 2 கருத்துக்கள்

  1. Lenin says:

    நன்றி தோழி!

  2. JAYALAKSHMI R says:

    அருமை , முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பதை இச்சிறுகதை மூலம் சட்டை அடி கொடுக்கப்பட்டுள்ளது….மாற்றம் நிச்சயம்.. நம்பிக்கையுடன் இருபோம்

Leave a Reply to JAYALAKSHMI R Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)