தஞ்சாவூர் ஓவியங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 10,789 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை. அறுபது வயதான ரகுராமன் தன் ஸ்மார்ட் போனை நோண்டிக் கொண்டிருந்தார்.

“சிறந்த அழகான தஞ்சாவூர் ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளது. தொடர்பு கொள்ளவும்: ராகுல் 99000 06900”

OLX ல் வந்திருந்த அந்த விளம்பரத்தை பார்த்த ரகுராமன் மனைவி லக்ஷ்மியைக் கூப்பிட்டுக் காண்பித்தார்.

ஆலிலைக் கிருஷ்ணன், வெண்ணைத் தாழி கிருஷ்ணன், ராதா கிருஷ்ணர், கஜ லக்ஷ்மி, கீதாபதேசம் என்று புகைப் படங்களுடன் விளம்பரத்தில் அழகாகக் காணப் பட்டன.

லக்ஷ்மி மிகுந்த உற்சாகத்துடன், “வெண்ணைத் தாழி கிருஷ்ணன் ரொம்ப நல்லாயிருக்கு… உடனே மொபைல்ல பேசி எவ்வளவுன்னு கேளுங்க” என்றாள்.

ரகுராமன் உடனே 99000 06900 க்கு போன் பண்ணி ராகுலுடன் பேச, “ஒவ்வொன்றும் வேறு வேறு அளவுகளில் உள்ளதாகவும், நேரில் வந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச் செல்லலாம்” என்றார்.

ரகுராமன் அன்று மாலையே வருவதாகச் சொல்லி ராகுல் வீட்டின் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். அவர் இருப்பது பெங்களூர் இந்திரா நகரில். ராகுல் இருப்பது பெங்களூரின் வடக்குப் பகுதியான ஹெப்பால் ப்ளை ஓவர் கிட்டே அமைந்துள்ள டாட்டா நகரில்.

மாலை…

மனைவியுடன் ரகுராமன் தன் காரில் சென்று ராகுலின் வீட்டை தேடிக் கண்டுபிடித்தார்.

வீட்டின் பெயர் பரத்வாஜ். தனிமையான பெரிய வீடு. போர்ட்டிகோவில் மூன்று கார்கள் நின்றிருந்தன. உள்ளே கிரானைட்டினால் வீடு இழைக்கப் பட்டிருந்தது. பிரெஞ்ச் விண்டோஸுடன் இருந்த பெரிய வரவேற்பறையில் மிக உயர் ரக சோபாக்கள் வீற்றிருந்தன. அதில் லக்ஷ்மியுடன் அமர்ந்தார். பழைய கிராமபோன் ரெக்கார்டர் ஒன்று காணப்பட்டது. கிராண்ட் பாதர் கடிகாரம் ஐந்து முறை அழகாக அடித்தது.

ராகுல் வீட்டின் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். சின்ன பையன்தான். வயது முப்பதுக்குள் இருக்கும். ரகுராமன் அவனிடம் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, “பெயின்டிங்ஸ் பார்க்கலாமா?” என்றார்.

அவன் தன்னிடம் இருந்த விதவிதமான தஞ்சாவூர் ஓவியங்களை எடுத்து வந்து கண்பித்தான். லக்ஷ்மிக்கு வெண்ணைத் தாழி கிருஷ்ணனும், ராதா கிருஷ்ணரும் மிகவும் பிடித்துப் போயின. தவழ்ந்த நிலையில் இருந்த வெண்ணைத் தாழி கிருஷ்ணனின் அழகிய குழந்தைக் கண்களைப் பார்த்து சொக்கித்தான் போனாள்.

ரகுராமன் ஆச்சரியத்துடன், “உங்களுக்கு எப்படி இவ்வளவு அழகான பெயின்டிங்க்ஸ் கிடைத்தன?” என்றார்.

“தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதயெல்லாம் சேகரித்து எனக்கு அனுப்புவார்கள்.”

ராகுல் அவர்களுக்கு குடிப்பதற்கு லெமன் ஜூஸ் கொடுத்தான்.

ரகுராமன் “நாங்க இப்பதான் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் பண்ணோம். 2 x 2 ½ சைஸில் உள்ள வெண்ணைக் கிருஷ்ணனை எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

லக்ஷ்மி புன்னகையுடன் ராகுலிடம், “இந்த வெண்ணைக் கிருஷ்ணனின் வரவு எங்க வீட்டுக்கு சுபிட்சம் கொண்டுவரும். எங்க புது வீட்டு பூஜா ரூமுக்கு இந்த ஓவியம் ரொம்ப லக்ஷணமா இருக்கும்” என்றாள்.

“தாராளமா எடுத்துட்டுப் போங்க.”

“சரி, நீங்க எவ்வளவுன்னு சொல்லுங்க…?” – ரகுராமன்.

“எழுபதாயிரம் ஆகும்”

விலையக் கேட்டதும் சற்று அரண்டு போனார்கள்.

ரகுராமன், “ரொம்ப ஜாஸ்தி ராகுல், நான் முப்பது முப்பத்தைந்திற்கு மேல் எதிர்பார்க்கவில்லை… முப்பத்தஞ்சுன்னா இப்பவே வாங்கிக்கறேன்” என்றார்.

“சாரி சார்… எழுபதாயிரத்துக்கு ஒரு ரூபாகூட கம்மியா வராது.”

லக்ஷ்மி மிக வருத்தமுற்றாள். பிரிய மனமில்லாமல் கிருஷ்ணரைப் பிரிந்து சென்றாள்.

அவர்கள் வீட்டிற்கு சென்றதும் சென்னையிலிருந்து சம்மந்தி மாமி

லக்ஷ்மிக்கு போன் பண்ணி, “நீங்க பாட்டியாயிட்டேள், உங்களுக்கு பேரன் பொறந்திருக்கான்.. இப்பதான் அரை மணிநேரமாச்சு நார்மல் டெலிவரிதான் ரம்யாவும் குழந்தையும் நல்ல செளக்கியம்” என்றாள் உற்சாகத்துடன்.

லக்ஷ்மி மிகுந்த சந்தோஷத்துடன் கணவரிடம், “பாருங்க அரை மணி நேரம் முன்பு நாம அந்த வெண்ணைத் தாழி கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தோம்…அந்த டையத்துல நம்மாத்துலையே அவர் பொறந்துட்டார்… அவர் நம்ம ஆத்துக்குள்ளேயே வந்துட்டா நமக்கு ஐஸ்வர்யம் பொங்கும்… பரவாயில்லைங்க எழுபதாயிரம் நமக்கு ஒன் டைம் எக்ஸ்பென்ஸ்தான் ராகுலுக்கு உடனே போன் போட்டு அத வாங்கிடுங்க” என்றாள்.

“உடனே போன் பண்ணி நம்ம டெஸ்பரேஷனை காண்பிச்சுக்க வேண்டாம் லக்ஷ்மி… நாளைக்கு அவனுக்கு போன் பண்ணி பேசலாம், எழுபதாயிரம் கொடுத்து எவன் வாங்குவான்? நீயே பாரு இன்னிக்கே அவன் நமக்கு போன் பண்ணுவான்.” என்றார்.

இரண்டு நாட்கள் சென்றன. ‘பேரன் பிறந்த சந்தோஷத்தில் லக்ஷ்மி கிருஷ்ணனை மறந்து விட்டாள்’ என்று நினைத்தார்.

ஆனால் லக்ஷ்மி விடுவதாயில்லை.

“என்னங்க ராகுல் இன்னமும் உங்களுக்கு போனே பண்ணல, நீங்களும் அவனுக்கு பண்ற வழியா இல்ல.. எனக்கு அந்த வெண்ணை கிருஷ்ணன் கண்டிப்பா வேணும். இப்பவே ராகுலுக்கு போன் பண்ணுங்க…” மொபைலை அவர் கையில் திணித்து அருகிலேயே நின்றுகொண்டாள்.

எழுபதாயிரம் ரூபாயை அந்த ஒரு கிருஷ்ணன் ஓவியத்துக்கு செலவு செய்ய ரகுராமனுக்கு மனசே வரவில்லை. அதே நேரம் லக்ஷ்மியையும் இனிமேல் சமாளிக்க முடியாது… அவள் அந்த வெண்ணை கிருஷ்ணனை பார்த்த நேரம்தான் தனக்கு பேரன் பிறந்ததாக நம்பிவிட்டாள். இனிமே இது அவளின் மனசு சம்பந்தப் பட்ட நம்பிக்கை… ராகுலிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்தார்.

ராகுல் நம்பருக்கு போன் போட்டார்… அவன் போனை எடுத்தான்.

“ராகுல், நான் ரகுராமன் பேசுகிறேன்.”

“சாரி, எந்த ரகுராமன்?”

“போன சண்டே என் மனைவியுடன் உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே… அந்த வெண்ணைத் தாழி கிருஷ்ணனைப் பார்த்தோமே…”

“ம்ம்.. ஓ ஆமா ஆமா, சொல்லுங்க சார்”

“நாங்க வாங்கறதா முடிவு பண்ணிட்டோம் எழுபதாயிரம் கேஷா எடுத்துண்டு வரோம்.”

“இல்ல சார் அத மறுநாளே வித்துட்டேனே…வேற கிருஷ்ணர் எதாவது வந்தா சொல்றேன்.”

“ஓ காட்… ஜஸ்ட் கியூரியாசிடி.. கடைசில எவ்வளவுக்கு போச்சு?”

“நைன்டிக்கு வித்துட்டேன்.”

“எங்ககிட்ட எழுபதாயிரம்தான சொன்னீங்க? அதெப்படி நைன்டி…?”

“சார் உங்க மனைவி பக்தியுடன் கிருஷ்ணரைப் பார்த்தாங்க. பூஜையறைக்கு வேணும்னு சொன்னங்க…அதனால எனக்கு லாபமே வேண்டாம்னு எழுபதாயிரம் சொன்னேன்… ஆனா அத வாங்கின சேட்டு தன் கடை அழகுக்காக வாங்கினான். அது கமர்ஷியல். அதுனால ரேட்ட ஏத்தி வித்துட்டேன். பக்தி வேற, அழகு வேற இல்லீங்களா…?”

அருகிலிருந்த லக்ஷ்மியிடம் இதைச் சொன்னபோது அவள் கொதித்துப் போனாள்.

“உங்களுக்கு சமர்த்து சாமர்த்தியமே போறாதுங்க… நான் உடனே அவனுக்கு போன் பண்ணச் சொன்னேன், நீங்க கேட்கல, மறுநாளும் நீங்க போன் பண்ணல… ச்சே! சப்ளை டிமாண்ட் தியரியே உங்களுக்குப் புரியாது, இதுல உங்களுக்கு தான் ரொம்ப கெட்டிக்காரர்னு நினைப்பு வேற, எல்லாம் என் தலையெழுத்து.”

இனி இதைச் சொல்லி சொல்லியே அடுத்த சில மாதங்களுக்கு தன்னை வறுத்தெடுத்து விடுவாள் லக்ஷ்மி என்பது அவருக்குப் புரிய, சாந்தமான அழகிய வெண்ணைத் தாழி கிருஷ்ணன் மறைந்து ஏனோ அவர் மனதில் கம்சனை வதம் செய்த கிருஷ்ணர் தோன்றினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *