தங்கமே தங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 11,404 
 

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், செருப்பு தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப்பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப்பணம் சேர்ந்துவிட்டால் போதும். யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தான். இவனிருந்த ரோட்டின் எதிர்புறம் ஒரு வயதானவர் செருப்புத் தைக்கத் தொடங்கியதிலிருந்து இவனுக்குக் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் குறைய ஆரம்பித்தது.

அன்று பெய்த மழையினால், கடுமையான ஜுரம் கண்டு நடுநடுங்கிக் கொண்டிருந்தார் பெரியவர். மறைந்து போன த‎ன் தந்தை வயதையத்த பெரியவர் மேல் இரக்கம் கொண்ட சங்கிலியாண்டி அரசாங்க ஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று, மருந்து வாங்கிக்கொடுத்து, அவரது குடிசையில் கொண்டு போய் விட்டான்.

கை கூப்பி நன்றி கூறிய பெரியவர் “தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா” என்று பரிவுட‎ன் கேட்டார்.

“என் மனைவியாக வரப்போகிறவளுக்குப் போட அரைப்பவுன் தங்கமும், புதுச்சேலையும் வாங்க பணம் சேர வேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றான்.

“உனக்கு அந்தக்கவலையே வேண்டாம், நான் தருகிறேன்” என்றார் பெரியவர்.

அதே சமயம், சத்துணவுக்கூடத்தில் ஆயா வேலை பார்க்கும் பெரியவரி‎ன் மகள் வீடு திரும்பினாள்.

அவள் சங்கிலியாண்டியை நோக்க, சங்கிலியாண்டியும் அவளை நோக்கினான். கண்கள் கலக்க, காதலும் கனிந்தது.

இருவரது கைகளையும் கோர்த்த பெரியவர் “அரைப்பவுன் தங்கம் சம்பாதிக்க அல்லல் படுகிறாயே; இதோ என் மகள் பெயரும் தங்கம் தான். நாற்பது கிலோ சொக்கத்தங்கம்; உனக்கே தருகிறே‎ன்” என்றார் பெரியவர்

தங்கமும் சங்கிலியாண்டியும் சேர்ந்து சிரித்தனர்.

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *