தங்கமே தங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,842 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தங்கத்தாலே காப்புப் போட்டுத்
தங்கமே தங்கம் – உனக்குத்
தாலிகட்டப் போறேனே நான்
தங்கமே தங்கம்!”

இந்தப் பாட்டு நந்தபாலனுக்கு நினைவு வந்ததும் அவன் முகத்தில் ஓர் அலாதிக் களை தோன்றி அவனை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது. அடுத்த கணம் எங்கேயோ பிறந்து வளர்ந்து கடைசியில் கழைக் கூத்தாடியான தன் கதையை நினைத்தபோது அவனுடைய ஆனந்தம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது.

ஒரு சமயம் கம்பத்தின் உச்சியில் நின்று கரணம் போட்டுக் கொண்டிருந்த நந்தபாலன் தவறிக் கீழே விழுந்து விட்டான். அவன் காலில் பலமான அடி பட்டு விட்டது. உடனே அவன் சிகிச்சை பெறுவதற்காக அந்த ஊரிலிருந்த ஒரு பாதிரிமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். சிறிது குணமாயிருக்கவே அவன் ஆஸ்பத்திரியின் பின்புறத் தோட்டத்தின் டாக்டரின் உத்தரவுப்படி நடைவண்டியைத் தள்ளிய வண்ணம் உலாவிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் தான் மேலே குறிப்பிட்ட பாட்டு நந்தபாலனின் நினைவுக்கு வந்தது. உடனே அவன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்.

எத்தனையோ கதைகளில் எத்தனையோ கதாநாயகர்களுக்கு நேர்ந்த கதி தான் நந்தபாலனுக்கும் நேர்ந்திருந்தது. சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்துவிட்ட அவன் தனக்குத் தூரபந்துவும் மாமன் உறவினனுமான கோவிந்தக் கோனான் வீட்டில் வளர்ந்து வந்தான். தங்கம் அவனுடைய மாமாவின் பெண். தினசரி இருவரும் சேர்ந்து ஆடுமாடுகளை மேய்க்கச் செல்வார்கள். மலைப்புறத்தில் அவற்றை மேய விட்டுவிட்டுத் தங்களுக்குப் பிடித்தமான ஓர் ஆலமரத்தடிக்கு அவர்கள் வருவார்கள். அருகருகே தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு ஆலம் விழுதுகளுக்கு மத்தியில் ஒரு கனத்த கம்பைக் கட்டி நந்தபாலன் ஊஞ்சல் ஜோடிப்பான். அதில் தங்கத்தை உட்கார வைத்துத் தள்ளிவிடும்போதுதான் அவன் முதன்முதலில் குறிப்பிட்ட பாட்டைப் பாடுவது வழக்கம். தங்கம் அந்தப் பாட்டை விரும்பாதவள் போலத் தன் முகத்தைக் கோணிக் கொண்டு “ஊம், நான் அழுவேன்!” என்று நந்தபாலனைப் பயமுறுத்துவாள்.

“நீ அழணும். அப்போது உன் அழகைப் பார்க்கணும்னு தானே அந்தப் பாட்டைப் பாடறேன்!” என்பான் நந்தபாலன்.

தங்கம் ‘களுக்’கென்று சிரித்துவிடுவாள்.

“பார்த்தாயா தங்கம், என்னை ஏமாத்திப்பிட்டயே” என்பான் நந்தபாலன்.

திடுக்கிட்டுவிடுவாள் தங்கம். “நான் என்ன ஏமாற்றி விட்டேன்?” என்று அவளுக்கு ஒன்றும் புரியாது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு “நான் உன்னை என்னா ஏமாத்திப்பிட்டேன்? சொன்னத்தான் ஆச்சு” என்று ஊஞ்சலை விட்டு கீழே குதித்துவிடுவாள்.

நந்தபாலன் சிரித்துக்கொண்டே “அது தான் அழாம ஏமாத்திப்பிட்டியே” என்று அவள் கன்னத்தை லேசாகத் தட்டப் போவான். தங்கம் அதற்கு இடங்கொடாமல் அவனைப் பாடாய்ப் படுத்தி மனம் களிப்பாள்!

அந்தி வேளை வந்ததும் அவர்கள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகளை ஒன்று சேர்த்து ஓட்டிக் கொண்டு வருவதற்காக மலைப்புறத்திற்குச் செல்வார்கள். அப்பொழுதும் தங்கம் ஒரு குன்றிலிருந்து இன்னொரு குன்றுக்குச் செல்லும்போதும் குன்றைவிட்டுக் கீழே குதிக்கும் போதும் அநாயாசமாகத் தாவுவாள். நந்தபாலனுக்குச் சில இடங்களில் பிரமிப்புத் தட்டிவிடும். அவன் அவளைப் பின்பற்ற முடியாமல் விழிப்பான்; அம்மாதிரி சமயங்களில் தங்கம் அவனுக்குக் கைகொடுத்து உதவும் போது அவனைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிடுவாள். நந்தபாலன் அவளுக்குச் சளைக்காமல் “தங்கம்! நான் என்னாத்துக்கு அந்தக் குன்றிலிருந்து குதிக்க அப்படி முழிச்சேன், தெரியுமா? எல்லாம் உன் கையைப் பிடிக்கனுமேங்கிற ஆசையாலேதான்” என்று சொல்லிச் சமாளித்துக் கொள்ளப் பார்ப்பான்.

*⁠ *⁠ *

கடைசியில் நந்தபாலனுடைய ஆசையில் ஒரு நாள் மண்ணைப் போட்டு விட்டான் கோவிந்தக் கோனான். அதற்கேற்றாற்போல் அன்று ஓர் ஆட்டுக்குட்டி ஒநாய்க்கு இரையாகிவிட்டது. அதைப்பற்றி அவன் நந்தபாலனைத் திட்டிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த எதிர் வீட்டுக் கோபாலக் கோனான், “அவன் அங்கே மாட்டையா மேய்க்கிறான்? உன் மகளையல்லவா மேய்ச்சுக்கிட்டு இருக்கிறான்” என்று கோள் சொல்லிவிட்டான். அதைக் கேட்டதும் கோவிந்தக் கோனானுக்கு ஆத்திரம் அளவுக்கு மீறி வந்து விட்டது. ஏனெனில் அவன் கோபாலக் கோனானிடம் வேண்டிய மட்டும் கடன் வாங்கியிருந்தான். அந்தக் கடனை ஈடு செய்வதற்காக அவன் தன்னுடைய பெண்ணைக் கோபாலக் கோனானின் பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தான்.

ஆகவே “இனிமேல் நீ என் வீட்டுப் பக்கம் தலையைக் காட்டினா, தலையை வெட்டிப்பிடுவேன்” என்று சொல்லி அவன் நந்தபாலனை விரட்டி விட்டான்.

எதிர்பாராத இந்தச் சம்பவத்தைக் கண்டு தாரை தாரையாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, தங்கத்தால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

தனக்கு ஆறுதல் அளிக்க ‘தலைவிதி’யைத் தவிர வேறு ஒன்றையும் காணாத நந்தபாலன், அந்த ஊருக்கு அப்பொழுது வந்திருந்த கழைக் கூத்தாடிகளின் கோஷ்டியில் சேர்ந்துவிட்டான். ஏன், தங்கத்தை மறக்க அது தான் சிறந்த வழி என்றும் அவன் அப்பொழுது நினைத்தான்.

இந்தக் கடைசிக் கட்டத்துக்கு வந்ததும் நந்தபாலன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டுத் தன்னுடைய மனோரதத்தை மிக்க பிரயாசையுடன் நிறுத்தினான். அப்பொழுது அந்த ஆஸ்பத்திரியின் தோட்டத்துக்கு வெளியே,

“தங்கத்தாலே காப்புப் போட்டுத்
தங்கமே தங்கம்….!”

என்று யாரோ பாடிக்கொண்டு சென்றது அவன் காதில் விழுந்தது. குரலோசையிலிருந்து இந்தப் பாட்டைப் பாடுவது தங்கமாய்த்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்ட நந்தபாலன், வியப்பும் திகைப்பும் ஒருங்கே அடைந்தவனாய் ஆஸ்பத்திரியின் மதிற்கவருக்கு மேல் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம் – சந்தேகமேயில்லை. தங்கம், தங்கமேதான்

“தங்கம்! தங்கம்!”

நந்தபாலனைப் பார்த்ததும் தங்கமும் தன்னுடைய ஆடல் பாடலை நிறுத்து விட்டு அசைவற்று நின்றாள்.

”இரு, இரு இதோ வந்துட்டேன்!” என்று சொல்லிவிட்டு, நந்தபாலன் ஆஸ்பத்திரியின் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு பெற்றுக்கொண்டு அந்த நிமிடமே அங்கிருந்து வெளியேறினான்.

வழியில், “தங்கம்! நீ எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டான்.

“நிஜமாகவே உனக்கு ஒரு சங்கதியும் தெரியாதா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள இருந்த கோபாலக் கோனான் மகன் செத்துப்பூட்டான். என் பொல்லாத ஜாதகத்தாலேதான் அவன் செத்துப்புட்டான்னு ஊரிலே எல்லாம் ஒரே பேச்சு. அதாலே வேறே ஒருத்தனும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க வரலே. அவன் அப்பன் எப்படியாச்சும் நம்ம கடன் வந்தாப் போதும்னு கோர்ட்டிலே வழக்கைப்போட்டு, எங்க அப்பாவுக்கு இருந்த நிலபுலம், ஆடுமாடு எல்லாத்தையும் ஜப்தி சேஞ்சுப்போட்டான். இந்தக் கஷ்டத்தையெல்லாம் தாங்க முடியாம எங்க அப்பாவும் செத்துப்பூட்டாரு. இப்போ எங்க அம்மாவும் நானும் ஊரிலே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராதுன்னு இந்த ஊருக்கு வந்து கூலி வேலை சேஞ்சி பிழைச்சுக்கிட்டு வாரோம் என்று சொல்லிச் சோகமே உருவாய் நின்றாள் தங்கம்,

“அப்படியா சங்கதி? அத்தனை கஷ்டத்திலும் என் பாட்டை மட்டும் நீ மறக்கலையே!” என்று வியந்தான் நந்தபாலன்.

“எப்படி மறப்பேன்?” என்றாள் தங்கம்.

இப்படிப் பேசிக்கொண்டே தங்கம் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வழியில் நந்தபாலனின் கதையைக் கேட்ட தங்கம், தணலைக் கண்ட தங்கம் போல் உருகினாள்.

வீட்டுக்குள் நுழைந்ததும் நந்தபாலனைக் கண்ட தங்கத்தின் தாயார் தன்னை மறந்து நின்றாள். தங்கம் மூச்சுவிடாமல் அவனுடைய கதையைத் தன் தாயிடம் சொன்னாள். அதைக் கேட்ட அவள் “அப்பாடா! எப்படியோ நீ என் வீட்டைத் தேடி வந்துட்டே! இனிமேல் என்கஷ்டம் தொலைஞ்சுது!” என்றாள்.

“என்ன கஷ்டம் தொலைஞ்சுது?’ என்று கேட்டாள் தங்கம்.

“எல்லாம் உன் கல்யாணக் கஷ்டந்தான்” என்றாள் அவள்.

அப்பொழுது நந்தபாலனைப் பார்த்த தங்கத்தின் அகன்ற விழிகள், “உஷார்! இங்கே என் அம்மா இருக்கிறாள்!” என்று அவனை எச்சரிப்பது போலிருந்தன.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *