தகாத உறவுகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 20,352 
 

கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது.

முதலில் ஒரு நல்ல வேலைக்காரியை வீட்டோடு அமைத்துக்கொள்ளத் துடித்தாள். பல பேரிடம் சொல்லி வைத்தாள். மல்லிகா ஒரு சீரியல் பைத்தியம். மாலை ஆறு மணியிலிருந்து தொடர்ந்து சீரியல்களில் லயிக்கும் மல்லிகாவுக்கு, புது வீட்டில் ஒரு வேலைக்காரி அமையும் வரை எல்லா வேலைகளையும் அவளே செய்வது கஷ்டமாக இருந்தது.

நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்தப் பெரிய வீட்டில் மல்லிகா; அவள் கணவர் சிவராமன் மற்றும் ஒரேமகன் திலீப் என மொத்தம் மூன்று பேர்தான். தமிழக அரசாங்க அதிகாரியாக அடுத்த வருடம் ஓய்வு பெறப்போகும் கணவருக்கு ஐம்பத்தியேழு வயது. சம்பளத்தைத் தவிர நல்ல கிம்பளம். சென்னை படைப்பையில் பத்து ஏக்கருக்கு பார்ம் ஹவுஸ் வாங்கிப் போட்டிருக்கிறார். மகன் சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறான். சீக்கிரம் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து மணம் செய்துவைக்க வேண்டும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மல்லிகாவின் சகோதரன் மனோகரன் மூலமாக ஒரு வேலைக்காரி அறிமுகமானாள். அவள் பெயர் சரோஜா. திருமணமாகவில்லை. அவளுக்கு இருபத்தியைந்து வயதாம். ஆனால் பார்ப்பதற்கு ஏகத்துக்கும் மாடர்னாக புஷ்டியாக மதர்ப்பாக இருந்தாள். செக்ஸியாக இருந்தாள் என்றும் சொல்லலாம்.

மல்லிகா, சிவராமன், திலீப், மனோகரன் நால்வரும் அவளை விலாவாரியாக இன்டர்வியூ செய்து ஒரு மனதாக அவளைத் தேர்வு செய்தனர்.

வாரம் ஒருநாள்; வாரம் இரண்டுநாள்; தினசரி செய்ய வேண்டிய வேலைகளை மல்லிகா அவளிடம் விவரித்தாள். சரோஜாவுக்கு மாதச் சம்பளம் ஐந்தாயிரம்; தினமும் டிபன், காபி; சாப்பாடு மற்றும் அவள் தங்கிக்கொள்ள டெரஸ் ரூம் என்று முடிவாயிற்று.

சரோஜா அனைத்து வேலைகளையும் உடனடியாக கற்றுக்கொண்டாள். மல்லிகாவிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டாள். எப்போதும் சிரித்தபடி வேலையில் சுறுசுறுப்பாக இருந்தாள். நாளடைவில் அந்த வீட்டில் ஒருத்தியாகிப் போனாள். அதுதவிர அவள் மல்லிகாவின் மகன் திலீப்புடன் அதிக நட்புடன் பழகினாள்.

அப்போதுதான் மல்லிகாவுக்கு அந்தப் பயம் உதிக்க ஆரம்பித்தது. அவள் மாலை ஏழு மணிக்கு விஜய் டிவியில் பார்க்கும் ராஜா ராணி சீரியலும்; இரவு ஒன்பது மணிக்கு Zee தமிழில் பார்க்கும் செம்பருத்தி சீரியலும் அடிக்கடி மனதில் தோன்றி அவளைப் பயமுறுத்தின. ஏனெனில் அந்த சீரியல்களில் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரிகள் அந்த வீட்டின் திருமணமாகாத மகன்களைக் காதலிக்கத் தொடங்கி குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பத்திற்கு வித்திட்டு விடுவார்கள்.

அம்மாதிரி தன் மகன் திலீப்பையும், சரோஜா வளைத்து விடுவாளோ என்று பயந்தாள். மகனை கண்குத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டாள். சீக்கிரமே மகனுக்கு ஒரு கல்யாணம் செய்துவிடத் துடித்தாள்.

மல்லிகாவுக்கு தெய்வபக்தி அதிகம். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடன் தாட்டியாக தமிழ் சினிமா சொர்ணாக்கா மாதிரியான தோற்றத்தில் இருப்பாள். வீட்டின் பூஜையறையில் அகிலாண்டேஸ்வரி; பட்டீஸ்வரம் அம்மன் புகைப் படங்களை பெரிதாக மாட்டியிருப்பாள். பிரதோஷம்; சங்கஷ்ட சதுர்த்தி, ஆடி; அமாவாசை என்று அடிக்கடி விரதம் இருப்பாள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது…

அன்று ஒரு வெள்ளிக்கிழமை.

சிவராமன் அலுவலகம் செல்லவில்லை. மதியம் சாப்பிட்டவுடன் ஏஸியில் தூங்கிக் கொண்டிருந்தார். திலீப் அலுவலகம் போயிருந்தான். சரோஜா தன் அம்மாவைப் பார்த்துவர தாம்பரம் சென்றிருந்தாள். அவர் நன்றாகத் தூங்குகிறாரே, தற்போது எழுப்ப வேண்டாம் என்று நினைத்து நான்கரை மணிவாக்கில் மல்லிகா வீட்டின் கதவை டோர்லாக் செய்துவிட்டு நங்கநல்லூர் ஹனுமார் கோவிலுக்குப் போய்விட்டு மெதுவாக வீடு திரும்பினாள்.

பெட்ரூமில் சிவராமனைக் காணோம். ஆனால் படுக்கையின் மீது ஒரு கடிதம் இருந்தது.

மல்லிகா அதை அவசரமாக எடுத்துப் படித்தாள்.

அன்புள்ள மல்லிக்கு,

இக்கடிதத்தை படித்தவுடன் பதட்டப் படாதே. நான் நம் வீட்டிற்கு திங்கட்கிழமை காலைதான் அலுவலகம் செல்லும்முன் வருவேன். தற்போது நம்முடைய படப்பை பார்ம் ஹவுஸில் நம் சரோஜாவுடன் தங்கி இருக்கிறேன். ஆம். அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் ஒரு சிறந்த வேலைக்காரி மட்டுமல்ல. விதம் விதமாக எனக்கு சரீர ஒத்தாசைகள் செய்வதிலும் கில்லாடி. அவளை நம் படப்பை பார்ம் ஹவுஸில் நிரந்தரமாக என்னுடைய ஆசை நாயகியாக குடி வைத்துள்ளேன். நம் நங்கநல்லூர் வீட்டிற்கு இனி அவள் வரமாட்டாள்.

தயவுசெய்து இதைப் பெரிது படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதே. சமீபத்தில் பாரத நாட்டின் சுப்ரீம் கோர்ட்டே இம்மாதிரியான தகாத உறவுகளை தவறில்லை என்று சொல்லிவிட்டது. உன்னைப் பொறுத்தவரை இது தகாத உறவாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகவும் தேவையான தகும் உறவு.

என்னுடைய இந்தப் புதிய ரசனையால் யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லை. எனவே கோபத்தில் போலீஸ் கீலீஸ் என்று நீ போனாலும் இது ஒரு தண்டனைக்குரிய குற்றம் அல்ல.

திலீப்புக்கு எதுவும் தெரிய வேண்டாம். ரகசியம் காப்பது உன் கடமை.

திங்கட்கிழமை காலை பார்க்கலாம்.

உன் கணவன் சிவராமன்.

கடிதத்தை படித்த மல்லிகா ஆடிப்போனாள்.

உடனே பூஜையறைக்குச் சென்று பத்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

வெளியே வந்தபோது அவள் மனதில் துல்லியமாக ஒரு திட்டம் இருந்தது.

தாம்பரத்தில் வசிக்கும் அவள் சகோதரன் மனோகரனை உடனே வீட்டுக்கு வரச்சொன்னாள். மனோகரன் இரவு எட்டு மணிக்கு வந்தான். அவனிடம் சிவராமன் எழுதிய கடிதத்தை கொடுத்து படிக்கச் சொன்னாள்.

“என்னக்கா, இந்த வயசுல மாமா இப்படி புத்திகெட்டு அலையுதாறு?”

“ஆமாண்டா மனோ… அது என்ன சுப்ரீம்கோர்ட் சொல்லிச்சாம்?”

“ஆமா… அந்த ஜட்ஜ் நாய்ங்களுக்கு வேற வேலை என்ன? ஓரினச்சேர்க்கை தப்பு இல்லையாம்… தகாத உறவுகள் தவறில்லையாம்… பெண்கள் சபரிமலைக்கு போகலாமாம். வேலையில்லாதவன் பூனையைச் சிறைச்ச கதையாக, எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் தீர்ப்புக்காக காத்திருக்க; இந்த ரெண்டு கால் ஜட்ஜ் நாய்ங்க இந்தியாவைச் சீரழித்துவிட்டுத்தான் போகும் போல. சுப்ரீம்கோர்ட்டாம்… அடி ஈரச் செருப்பால…. கோவில்களின் புனிதங்களுக்கும் கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஆண்களுக்குச் சமம் என்று சொல்லி, பெண்களையும் சட்டை அணியாமல் கோவிலுக்குள் போகச் சொல்வார்களா? அல்லது ஆண்களை சட்டையுடன் அனுமதிப்பார்களா? அசிங்கமான பரதேசி நாய்கள்….”

“சரி, அதவுடு, நா ஒண்ணு சொன்னா அக்காவுக்காக ரகசியமா செய்வியா?”

“சொல்லுக்கா… நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.”

“நீ உடனே நம்ம இன்னோவாவ எடுத்துக்க. நீயே ஓட்டிட்டு போ… உன்னோட நம்பிக்கையான ரியல் எஸ்டேட் அடிதடி ஆளுங்கள உருட்டுக் கட்டையோட படப்பை பார்ம் ஹவுஸுக்கு கூட்டிட்டு போ. நீ மட்டும் அடையாளம் தெரியாமலிருக்க மாஸ்க் போட்டுக்க. சிவராமன தொடைக்கு கீழ உருட்டுக் கட்டையால ஓங்கி அடிச்சு அடிச்சு அவன் கால்களை கூழாக்கி, அங்கேயே தெரு முனைல போட்டுட்டு வந்துடு…”

“கண்டிப்பா இன்னிக்கி நைட்டே முடிச்சுக் காட்டறேன்கா…”

“அவன் இந்த வீட்ல இனிமே சக்கர நாற்காலியிலதான் உலா வரணும். இன்னொரு முக்கியமான விஷயம். அந்த சரோஜாவ பத்திரமா அவ தாம்பரம் வீட்ல கொண்டுபோய் விட்டுறணும். பாவம் அவள இவன்தான் பசப்பு வார்த்தைகள் சொல்லி, பணத்தைக் காட்டி ஏமாத்தியிருக்கான். அவளுடைய பாதுகாப்பு உன் கையில்தாண்டா…ப்ளீஸ் நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்க.”

“புரியுதுக்கா…”

மனோகர் உடனே நம்பிக்கையான ஐந்து அடியாளுங்களுக்கு போன் செய்து அவர்களை தயார் செய்தான்.

ஒன்பது மணிக்கு இன்னோவாவை எடுத்துக்கொண்டு சீறிக் கிளம்பினான்.

திலீப் அலுவலகத்திலிருந்து ஒன்பதரை மணிக்கு வீடு திரும்பினான்.

மறுநாள் சனிக்கிழமை…

திலீப் காலை எட்டு மணிக்கு அம்மாவுடன் காபி குடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினான்.

“ஹலோ உங்க பேர் திலீப்பா…?”

“ஆமாங்க… நீங்க யாரு?”

“மியாட் ஹாஸ்பிடலில் இருந்து ட்யூட்டி டாக்டர் பேசறேன். உங்க அப்பா மிஸ்டர் சிவராமன் ஹாஸ்பிடலில் இன்னிக்கி காலை ரெண்டு மணிக்கு அட்மிட் ஆயிருக்காரு. நீங்க உடனே அம்மாவோட வரணும்னு சொன்னாரு…”

“என்ன ஆச்சு டாக்டர்?”

“அவரு ஆக்சிடெண்டுன்னு சொல்றாரு.. ஆனா அவர யாரோ கட்டிவச்சு அடிச்ச மாதிரிதான் தெரியுது… உயிருக்கு ஆபத்து இல்ல. ஆனா இனிமே அவரு வீல் சேர்லதான் இருக்கணும். நீங்க உடனே புறப்பட்டு வாங்க ப்ளீஸ்.”

“அம்மா… அப்பாவை யாரோ அடிச்சுப் போட்டுட்டாங்கம்மா. உடனே ஹாஸ்பிடல் போகணும்… கிளம்புங்கம்மா.”

“சரிடா… இப்பவே கிளம்பறேன்.”

பூஜையறைக்குள் நுழைந்து மகனின் காதுபட “அகிலாண்டேஸ்வரி அவர் உயிரை ஒண்ணும் பண்ணிடாதம்மா…” என்றாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “தகாத உறவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *