ட்ரங்கால்

 

வளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி – அதான் அந்தப் பெண்மணி – அடாது மழைபெய்தாலும் வெள்ளிக்கிழமை காலை ஆறரைக்கெல்லாம் ‘பாப்பா’ என்று அழைத்துக்கொண்டு வருவது தப்பாது.

மிளகும் வெந்தையமும் போட்டுக் காய்ந்த எண்ணெயில் ‘சொய்ங்’ என்று சப்தம் எழ ஒரு வெற்றிலையைப் பொரித்து எடுத்து, ஒரு கிண்ணம் எண்ணெயை அம்மா கஸ்தூரியிடம் கொடுப்பாள்.

அரைமணிப் பொழுது தலையை அமுக்கி உலுக்கித் தட்டி, உதறி அத்தனை எண்ணெயையும் தலைக்கு இறக்கிவிடுவாள் கஸ்தூரி.

உடலுக்கும் எண்ணெய் தடவி நீவின பிறகு இதமான வெந்நீரில் சாதக் காஞ்சி செய்தது சீயக்காய்த் தூளைத் தேய்த்ததும் குளியல் முடியும்.

அவள் துவட்டிக்கொண்டு வருமுன் கணகணவென்று தணல் தயாராய் இருக்கும். மட்டிப்பால் சாம்பிராணிக் கலவையின் புகை ஈர முடியில் ஏறி அவள் மேனியே மணத்துப் போகும்.

போல பொலவென்று உதிருதிரியாய் மென்மையாய் இடுப்புக்குக் கீழ் தொங்கும் முடியைத் தளர்த்திப் பின்னலிட்ட பிறகே கஸ்தூரி அவளை விடுவாள்.

ஆனால், போன மூன்றாம் மாசம் திருமணமாகி கணவனுடன் தனிக்குடித்தனம் செய்யப் போபாலுக்கு வந்ததிலிருந்து இதெல்லாம் அவளுக்குப் பழைய கனவாகி விட்டது.

போபால் நகரில், நான்கு பிளாட் உள்ள கட்டிடத்தில் அவர்கள் வலது பக்க மாடி பிளாட்டில் இருந்தார்கள்.

காலையில் ஏழுலிருந்து எட்டுவரைக்கும் தண்ணீர் வரும். குளியல், சமையல், கை, கால் அலம்ப என்று எல்லாவற்றிக்கும் அப்போது வைத்துக் கொண்டால்தான்- இல்லாவிட்டால் மறுபடி மாலை ஐந்து மணிக்கே பைப்புக்குக் கருணை பிறக்கும்.

வேலைக்காரி பாய் அங்குள்ள இரண்டு பிளாட்டில் வேலை செய்பவள். தண்ணீர் வரும் முதல் அரைமணியில் அவள் வீட்டல் அவசரக் காரியங்களை முடித்துவிட்டு, எதிர் பிளாட்டுக்குப் போனால் பத்து மணிக்குமேல் நிதானமாய்த் திரும்ப வந்து மற்ற வேலைகளை முடிப்பாள். அவள் கணவனுக்குக் காலை ஏழரை மணிக்கு பாக்டரியில் இருந்தாக வேண்டிய நிர்பந்தம்.

காலையில் எழுந்து டிபனை முடித்துத் தண்ணீர் பிடிப்பதைக் கவனித்து, வேலைக்காரிக்கு வேலையைக் கொடுத்து, கணவன் ஆபீசுக்குப் புறப்பட உதவி பண்ணிவிட்டுக் ‘குளித்தேன்’ என்று இரண்டு சோம்பு விட்டுக்கொண்டு நிமிர்ந்தால் வந்த முதல் சில நாட்களில் எண்ணெய்க் குளி குளிப்பதற்குள் அவள் திண்டாடிப் போனாள்.

முதல் நாள் வழக்கம்போல் கிண்ணம் எண்ணெயைத் தலையில் அமுக்குத் தேய்த்துக்கொண்டு அரை மணி ஊறியபின் குளிக்கப் போனவளுக்குப் பிடித்து வைத்திருந்த இரண்டு வாளி ஜலத்தில் சிக்கனமாய்க் குளிக்க தெரியாமல் போனதால் சீயக்காயைத் தேய்த்து அலசும் முன்னரே தண்ணீர் தீர்ந்துபோனது. கை வலிக்க வலிக்கத் தேய்த்ததும் எண்ணெய்ப் பிசிக்கே போகாமல் மொழுக்மொழுக்கென முடி பிசுபிசுத்தது.

எது எப்படியானாலும் சரி – தொடர்ந்து காக்காய் குளியலாவது குளித்தே தீருவது என்று நினைத்தவள் அடுத்த சில குளி முறைகளுக்குள் இன்னொரு புதுக் கஷ்டத்தையும் உணர்ந்தாள்.

அவள் போய்க் கதவைச் சாத்திக் கொள்வதற்கும், போஸ்ட் மேன் வருவதற்குமோ, தொட்டி வருவதற்குமோ, இல்லை, பக்கத்து வீட்டுப் பெண்மணி விஸிடிங் வருவதற்குமோ சரியாக இருந்தது. வாசல் மணி ‘டிங்டாங்’ என்று ஓயாது அலறியபோது எண்ணெய்த் தலையும் அதுவுமாய் உள்ளே அவள் தவித்துப் போனாள்.

இப்படிக் குளிக்கும்போது வீட்டைக் கவனிக்க் ஒருவர் தேவைப்படுவதை, தண்ணீர் பற்றாக்குறையை, எண்ணெய் போகாத தலையின் அவஸ்தையை, வாசனை மணக்கும் சாம்பிராணி தூபம் இல்லாததை அவள் வெகு நன்றாக புரிந்து கொண்டு விட்டதால், நாட்கள் செல்லச்செல்ல “எண்ணெய் தேய்த்து கொள்ளாவிட்டால் என்ன? கூடிய முழிகிவிடும் – நாலு நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பூ போட்டால் போதாதா?” என்று எண்ணத் தொடங்கி அதையே செயலிலும் காட்ட முற்பட்டாள்.

ஆனால் மாசம் ஒன்று ஆவதற்குள் ஊற வைத்த எண்ணெய்க் குளியலுக்கு அடிமையாயிருந்த தலைமுடி சண்டித்தனம் பண்ணத் தொடங்கியது.

தலையில் சதா அரிப்பு – கண்களில் ஜிவுஜிவு என்ற எரிச்சல் – இதற்கெல்லம் மசியாமல் இருந்தவள் வாரும்போது முடி பந்து பந்தாகக் கழலத் தொடங்கி, சேர்ந்தாற்போல் நான்கு நாட்களாய்த் தூக்கம் இல்லாமல் அவஸ்தையும் பட்டு விடவே, ‘சரி-இதற்கெல்லம் காரணம் நான் எண்ணெய்த் தேய்த்துக் கொள்ளாதுதான்’ என்று தனக்குத்தானே நினைத்தவளாய் அன்று உறங்கி எழுந்ததும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கத் தயாரானாள்.

***

பெரிய தகர ட்ரம் நிறைய தண்ணீர் பிடித்த வைத்தபின், வேலைக்காரியை பக்கத்து வீட்டு வேலைகளை ஒன்பது மணிக்குள் முடித்துக்கொண்டு சீக்கிரம் வந்துவிடச் சொன்னாள்.

கணவனுக்கு டிபன் செய்து கொடுத்து அனுப்பி, காரக் குழம்பு, பருப்பு துவையல், ரசம் செய்து சமையலை மூடி வைத்தாள்.

அரைக் கிண்ணம் எண்ணெயை புகையக் காய்ச்சி ஆற வைத்து உள்ளங்கையில் எடுத்து உச்சந்தலையில் அழுந்தத் தேய்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் ஊறினாள். கண்களுக்குள் எண்ணெய் கசிந்து எரிச்சல் எடுப்பதற்கும் பாய் வருவதற்கும் சரியாக இருக்கவே ‘நான் குளிக்கப் போறேன் – இந்த வெங்காயத்தை இருச்சி வை – வாசிலில் யாராவது கூப்பிட்டங்கன்னா அம்மா குளிக்கறாங்கனு சொல்லு’ என்று ஹிந்தியில் பணித்து விட்டுக் குளிக்க போனாள்.

தூக்கம் வரவில்லை, தலைமுடி கொட்டுகிறது, உடல் பளபளப்பு குறைந்துவிட்டது என்று ஏகமாய் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு விட்டோமோ என்று மலைப்போடு சுற்றிக் கொண்டிருந்த பழம் புடவையை அவிழ்த்தவள் உடலுக்கு எண்ணெயைத் தேய்த்துக்கொள்ளத் தொடங்கினாள்.

காலிக் கிண்ணத்தைக் கிழே வைத்தபோது வாசல் மணி அடிப்பது தெளிவாகக் கேட்டது.

“அட சட்-சனியன்-நான் எண்ணெய் தேய்ச்சுக்கிறது யார் மூக்கில் வேர்க்குதோ? நிதானமாய்க் குளிக்க ஒரு நாள் ஒழிய மாட்டேங்குதே!”

இரண்டு நிமிஷத்தில் பாத்ரூம் கதவை பாய் தட்டி ‘மேம் சாப்’ என்று கூவினாள்.

‘யாரை இருந்தால் என்ன? அம்மா குளிக்கிறாங்க…அப்புறமா வாங்கனு சொல்லக் கூடாது?’ என்று மனசில் நினைத்தாலும் “என்ன பாய்?” என்றால் உரக்க -

“குஹா சாப் வீட்டுப் பெண் வந்திருக்கா மேம் சாப்…உங்களுக்கு போன் வந்திருக்காம் – உங்க மெட்ராஸிலிருந்து…”

ட்ரங்காலா?

மெட்ராஸிலிருந்தா?

கதவை இரண்டு இஞ்சுக்குத் திறந்து பாயிடம் அந்தப் பெண்ணைக் கூப்பிடு என்றாள் -

வந்தாள் -

“என்ன அல்கா?”

“உங்களுக்கு மெட்ராஸிலிருந்து கால், ஆண்டி, உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள்…” என்றாள் அல்கா -

இருக்கும் கோலத்தில் எப்போது குளித்து, எப்போது போய் போன் பேசுவது?

“பத்து நிமிஷங்களில் வருகிறேன் அல்கா… எக்ஸ்சேஞ்ஜில் சொல்கிறாயா?”

அல்கா புறப்பட்டுப் போனாள்.

மீண்டும் கதவைச் சாத்தினவள் இரண்டு சொம்பு தண்ணீரைத் தலையில் கொட்டிக்கொண்டாள். டபராவில் சீயக்காயைக் கரைத்து கட்டியும் முட்டியுமாய் தலையில் அள்ளி வைத்துத் தேய்க்கத் தொடங்கினாள்.

எனக்கு யார் பொன் பண்ணப் போறாங்க?

மாமனார் வீட்டிலேந்து இருக்குமோ?

மாமியாருக்கு பிரஷர் காரணமாய் மயக்கம் அதிகம் வரதுனுட்டு போன வாரம் எழுதியிருந்தாங்களே, ஜாஸ்தி ஆயிடுச்சோ?

அவளுக்கு பயமாக இருந்தது.

மாமனார் கூப்பிட்டார்னா ஆபீஸூக்கு அத்தான் நம்பருக்கில்லே போன் பண்ணுவாங்க? என் பெயரைச் சொல்லி, எனக்கு ஏன் பி.பி. போடறாங்க?.

மனசுக்கு இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தது.

ஸோ – மாமனார் வீட்டிலிருந்து நிச்சயம் இந்தக் ‘கால்’ இல்லை…

அப்பா, அம்மா யாருக்காவது உடம்பு சரியில்லையோ? உடனே வரச்சொல்லி கூப்பிடராங்களோ? அண்ணிக்கு இது மாசமாச்சே?. போன தடவையே சிஸேரியன் பண்ணினாங்களே! இந்த முறையும் அப்படிப் பண்ணி ஏடாகூடமாய் ஏதாச்சும் ஆயிடுச்சா?

அண்ணன் நல்லவன்; பாவம் அவனுக்கா இப்படிக் கஷ்டம்?.

கண்களை மூடிக்கொண்டு முடியை முன்னால் கொணர்ந்து தேய்த்தவளின் தொண்டையை துக்கம் அடைக்க, கண்கள் கலங்கத் தொடங்கின.

சீ – என்ன அசட்டுத்தனமான நினைப்பு?. அப்பா வீட்டிலிருந்தோ, அண்ணனிடமிருந்தோ சமாசாரம் வரணும்னா கால் ப்ரம் திருச்சினு சொல்லி இருப்பாங்க. இப்போது மெட்ராஸிலிருந்து இல்லே போன் வந்திருக்குது…

அவளுக்கு மேலும் மனசுல தெம்பு கூடியது.

அடித் தலையை தேய்த்த பிறகு நுனி முடியில் சீயக்காயை அப்பி அவசரமாய்க் கைகள் வலிக்கத் தேய்க்கத் தொடங்கினாள்…

மெட்ராஸிலிருந்து யாரு?

அத்தையாயிருக்குமோ?

அவுங்க வீட்டிலே ஏதாவதுன்ன எனக்கெதுக்கு போன் பண்ணப் போறாங்க? மிஞ்சி போன தந்திதனே கொடுப்பாங்க?.

அவள் தலையை அலசலானாள்.

யாராயிருக்கும்?

நிச்சயமாய் கேட்ட சேதி ஒன்றுமில்லை என்று ஏனோ மனசில் பட்டுப் போனதால் தைரியமடைந்தவளாய் மேலும் யோசித்தாள். என் பேரைக் குறிப்பிட்டுக் கூப்பிடணும்னா என்னைத் தெரிஞ்சவங்களாத்தானே இருக்கணும்?.

ஒருவேளை பூமாவாக இருக்குமோ?.

பூமா அவள் கல்லூரித் தோழி – பெரிய தொழிலதிபரின் மகனை மணந்துகொண்டு சென்னையிலேயே வாழ்பவள்.

‘திடீர்னு ஒருநாள் போபாலுக்கு வந்து நீ குடித்தனம் பண்றதைப் பார்க்கப் போறேன் பாரு?’ என்று போன லெட்டரில் கூட எழுதி இருந்தாளே?

அவதான் கூப்பிடராளா?.

இருந்தாலும் இருக்கும் -

அவளுக்கு என்ன – தண்ணி மாதிரி காசு – ஒரு போன் பண்ணிட்டு ஜம்முனு ப்ளேன்ல வந்து குதிப்பா -

சினேகிதி வந்தாலும் வரலாம் என்ற நினைப்பு சந்தோசத்தைக் கொடுத்தது.

மிஸஸ் தாத்தா கிட்டே கத்துக்கிட்ட பெங்காலி ஸ்வீட்டும், மிஸஸ் கோத்திரி சொல்லிக் கொடுத்த சன்னா படூராவும் செய்யணும். ‘நீ எப்படி இதெல்லாம் கத்துகிட்டே’னு அவ ஆச்சிரியப்பட்டுப் போவா -

மணி வைச்ச தைச்ச பெரிய ஹாண்ட் பாக், என் கிப்டா வாங்கித் தரணும். பிர்லா மந்திர், லேக், டி.டி. நகர், ஸான்சி எல்லாம் கூட்டிக்கிட்டுப் போகணும். ஆமா, தனியா வராளோ இல்லை, ஹஸ்பெண்டோட சேர்ந்து வராளோ?.

***

வள் கிழித்து முடித்துவிட்டாள். எண்ணெய் போனதா இல்லையா என்று நிதானிக்க நேரம் இல்லை. புடவையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

முகத்துக்கு மட்டும் பவுடர் போட்டு போட்டு வைத்து, இரும்பு பீரோ சாவியை இடுப்பில் சொருகிக்கொண்டு, ‘பாய் நான் இப்ப வந்திடறேன்..வீட்டைப் பார்த்துக்க…’ என்று சொல்லி விட்டு அரக்கப் பறக்க தெருவில் இறங்கி நடந்தாள்.

திடீரென்று ஒரு நினைப்பு எழுந்தது.

போன மாசம் நாவல் பரிசுப் போட்டிக்கு நாவல் ஒன்று எழுதி அனுப்பிவிட்டு அதைப்பற்றி ஊருக்கு எழுதியிருந்தாள். ‘அந்த பத்திரிக்கை உதவி ஆசிரியர் அத்தானுக்கு பிரண்டுதான்… உனக்கு பரிசு கிடச்சிருந்தா நான் உடனே தெரிவிக்கிறேன்’ என்று நாத்தனார் – டாக்டர் கமலம் – எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

மை காட்! ஒரு வேளை எனக்கு முதல் பரிசே கிடைச்சிருந்தா? அதுதான் ஆபீஸூக்கு இவங்களுக்கு போன் செய்யாமே எனக்குப் பண்றாங்களா? இருக்கும் இருக்கும்.. குஹா வீட்டு நம்பர் மாமனார் வீட்டிலே எல்லோருக்கும் சொல்லி இருக்கோமே – அவசரம்னா இருக்கட்டும்னு… ‘முதல் பரிசு ஏ! அப்பா.. அதுவா? எனக்கா?…”

அவள் மனசின் குதூகலம் தாங்க முடியாமல் லேசாய் ஓடத் தொடங்கினாள்.

அந்த பணத்தை என்ன பண்ணலாம்?. ஒரு வைர மோதிரம் பண்ணிக்கணும்… அப்புறம் டெல்லி, ஆக்ரா எல்லாம் போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்… இவங்களுக்கு ஒரு டபிள்நிட் பாண்ட் தைக்கணும் -

குஹாவின் வீடு வந்துவிட்டது.

அவள் கதவின்முன் நின்று மணியை அடித்தாள்.

மிஸஸ் குஹா கதவைத் திறந்தாள்.

“ஸாரி, நான் குளித்துக் கொண்டிருந்தேன்…” என்று ஹிந்தியில் பேசிக்கொண்டே அவள் போனை எடுத்து ஆபரேட்டரை அழைத்தாள்.

ஆபரேட்டர் சென்னையுடன் தொடர்புகொண்டு ஐந்து நிமிஷங்களில் கனெக்க்ஷன் கொடுப்பதற்குள் அவளுக்கு மனசின் பரபரப்புத் தாங்க முடியாமல் போயிற்று.

கைகளில் வியர்வை கசிந்தது. இதயத்தின் படபடப்பு காதில் கேட்டது.

“ஹலோ” என்ற சென்னை ஆபரேட்டர் “எக்ஸ்டென்ஷன் ஸிக்ஸ்டீன்?” என்று வினவினாள்.

“ஆமாம் – நான் – பி.பி. பேசுகிறேன்”

ஆபரேட்டர் சென்னை நம்பருடன் தொடர்ப்பு கொடுத்தாள்.

“ஹலோ..ஹலோ…” என்று பெரிய, மிகப் பெரிய குரலில் அவள் கத்தினாள்.

“ஹலோ..அம்முகுட்டியோ!” ஒரு கிழத்தன்மை நிறைந்த குரல் மலையாளத்தில் பதில் கொடுத்தது.

அம்முகுட்டியா?

“ஹலோ நான் ராஜி பேசறேன்… அங்கே யார் பேசறது?” அவள் கத்தினாள்.

“ராஜியா? ஐ வாண்ட் அம்முக்குட்டி.. மிஸஸ் நாராயணி… ஹாலோ ஆபரேட்டர்” – கிழவர் டொக் டொக் என்று டெலிபோனைத் தட்டி எக்ஸ்சேன்ஜை அழைத்தார்…

எக்ஸ்டென்ஷன் ஸிக்ஸ்டியில் இருக்கும் மிஸஸ் நாராயணிக்கு வந்த போன் என்றும் சென்னை பார்டி ஸிக்ஸ்டி என்றது ஆபரேட்டர் காதில் ஸிக்ஸ்டீன் என்று விழுந்ததால் மிஸஸ் நாராயணி என்ற எவளோ ஒருத்திக்கு போன் வரப்போய் மிஸஸ் குஹா, மிஸஸ் நாராயணன் ஆனா அவளை அழைத்து விட்டாள் என்பதும் அடுத்த சில நிமிஷங்களில் தெளிவானது.

அசடு வழிய போனை வைத்துவிட்டு அவள் மிஸஸ் குஹாவிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் போகப் தெருவில் இறங்குகையில் சரியாகத் தேய்க்கப்படாத எண்ணெய் கழுத்தில், நெற்றியில் இறங்கி உடம்பு பூராவும் அவளுக்குக் கசகசத்தது.

வெளியான ஆண்டு: 1978 

தொடர்புடைய சிறுகதைகள்
மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு. வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி ...
மேலும் கதையை படிக்க...
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
ராட்சஸர்கள்
அத்தை ஊஞ்சலில் ஒரு காலை மடித்து, இன்னொன்றைத் தொங்கவிட்டபடி அமர்ந்து இருந்தார்.கைத்தறிப் புடைவை, வெள்ளை ரவிக்கை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் விபூதிக் கீற்று, அழுந்த வாரி கோடாலி முடிச்சாக முடியப்பட்ட வெள்ளைத் தலைமுடி.பார்வை மட்டும் வழக்கம்போலவே, பால்கனி வழியாகத் தெரிந்த ...
மேலும் கதையை படிக்க...
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ். வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை. என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ...
மேலும் கதையை படிக்க...
போணி
சுத்தம்
ராட்சஸர்கள்
விழிப்பு
தாய்மை..ஒரு கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)