Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

டிராக்டர் தரிசனம்

 

“எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது…. எலெக்டிரிஸிட்டியை நம்பி இலையைப் போடப்படாது… இந்த ரெண்டையும் செய்தாலும் செய்யலாம்… ஆனால், வாடகை டிராக்டரை நம்பி வயலைக் காயப் போடாதேன்னு சொன்னேனே.. கேட்டியா….? கேட்டியா….?”

வயலின் வரப்போரத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி தந்தை மருதமுத்து சொன்னது, மகன் கணபதியா பிள்ளையின் காதில், “கெட்டியா- கெட்டியா-” என்றேதான் கேட்டது. தந்தையைச் சத்தம் போடப் போனார். இயலவில்லை. அவர் முகத்தைப் பார்க்கக் கூச்சப்பட்டு, வயலின் ஓர் ஓரத்தில் கல்லடுப்பில் பொங்கிய பாத்திரத்தைப் பார்த்தார். அதில் கோழித் துண்டுகள் குதித்துக் கொண்டிருந்தன. வேலைக்காரப்பெண் ராசகிளி, தீ மூட்டிக் குழாய் மூலம் ஊதி, அடுப்பை மூட்டிவிட்டு, “கறி வெந்திருக்கா” என்று பார்ப்பதற்காக, ஒரு கோழித் துண்டை வாய்க்குள், திணித்துவிட்டு, பிறகு சூடு தாங்காமல் துப்பினாள்.

“கடைசியில் எவனெவனுக்கெல்லாமோ நான்…” என்று பேசிய அவர் மனைவி மரகதம், பிறகு அந்தப் பேச்சை முடிக்க வில்லையானால், அது ஆபத்தான அர்த்தத்தில் கொண்டு போய்விடும் என்று உணர்ந்து “சோறாக்க வேண்டியதிருக்கு” என்றாள். கணவனைக் கடுகடுப்பாகப் பார்த்தாள். அந்தப் பார்வை தாங்க மாட்டாத கணபதியா பிள்ளை, தமது வயலைக் கண்களால் உற்றுப் பார்த்தார்.

எல்லா வயல்களும் நெற்பயிர்களால் அலங்காரமாய்த் தோன்றியபோது, இந்த வயல் மட்டும் மொட்டையாய், மூளியாய்க் கிடந்தது. வயலைப் பார்க்க மனமில்லாத கணபதி, கண்களை நகர்த்தி, தெற்குப் பக்கமாய்ப் பார்த்தார். ராமையாத் தேவரோட வயல். மற்ற வயல்களைவிட அதில் மட்டும் நெற்பயிர்கள் ஓரடி அதிகமாக வளர்ந்திருந்தன. இவ்வளவுக்கும் அடுத்த வயல்களில் நட்டபோது தான் தேவர் வயலிலும் நடப்பட்டது. ஆனால் தேவர் வயலில், அவரைப் போலவே பயிர்கள் மினுக்காக நின்றன.

ராமையாத் தேவர், கணபதியா பிள்ளையைப் பார்த்து, மீசையைத் தடவி விட்டார். கையில் இருந்த டிரான்ஸிஸ்டர் ரேடியோவைத் தட்டி விட்டார். சிறுமைப்பட்டுப் போன கணபதியா பிள்ளை, கிழக்குப்பக்க வயலைப் பார்த்தார். அங்கே, ஆறுமுக நாடார், லாவகமாகப் பூச்சி மருந்தை வீசிக் கொண்டிருந்தார். பிள்ளையை அவர்பார்த்த விதம், அவரையும் சேர்த்து வீசப்போவது போலிருந்தது.

எவரையும், எதையும் பார்க்க முடியாமல் தவித்த கணபதி, பண்ணையாள், பால் பாண்டியனைக் கோபமாகப் பார்த்தார். ‘எல்லாம் இவனால் தான் வினை. நான்கு முனைத் தேர்தல் போட்டியில் ஒரு முனையாவது டிக்கெட் வாங்கி விடலாம் என்று அலைந்து, அவர் ஏர்முனையை மறந்து, வயலை டிபாஸிட் இழந்த வேட்பாளர் நிலையில் விட்டது உண்மைதான். ஆனாலும், நேற்று வாடகை உழவுக்கு ஆள் அமர்த்தப் போனார். இந்தப் பால்பாண்டிதான், “உழவு மாடுங்க ஒரு வாரம் எடுத்துக்கிடும்…. டிராக்டரை வாடகைக்கு வாங்கலாம்…” என்று சொல்லிவிட்டான். ‘பெரிய பண்ணையாளிடம் வருடக்கணக்கில் வேலை பார்த்தவனாச்சே என்று நம்பி விட்டார். இவ்வளவுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னால் தான் பால்பாண்டி இவரிடம் வேலையாளாய்ச் சேர்ந்தான். இப்போது இவரையே வேலையாளாய் ஆக்கிவிட்டான் என்பது கிழவர் மருதமுத்துவின் வாதம்.

கணபதியா பிள்ளை, அழப் போனார்.

டிராக்டருக்குப் பணம் கட்டியாகி விட்டது. எட்டு மணிக்கு வரவேண்டியது. பத்து மணியாகியும் வரவில்லை . இருசால் உழவு செய்யணும். மத்தியானமே “தொளி” மிதிக்கணும். அதாவது உழுத நிலத்தில் இலை தழைகளைப் போட்டு கால்களால் மிதிக்க வேண்டும். அதோ கிணற்று மேட்டில் வாதமடக்கிப் பூவரசுக் கிளைகள் குவிந்து கிடக்கின்றன. வேலையாட்களுக்கும் சொல்லி யாச்சு… டிராக்டரைத்தான் காணோம்… வருமா….?

ஒரு காலத்தில் வயலெல்லாம் வியாபித்து, இப்போது ஓரங்கட்டப்பட்ட ஐ.ஆர். எட்டு நெல் ரகம் போல் கழித்துக் கட்டப்பட்ட தந்தைக்கார மருதமுத்து, இப்போது ஆட்டம் போடும், ஐ.ஆர். இருபதை – அதுதான் பண்ணையாள் பால்பாண்டியனை எரிந்து விழுந்து பேசினார்.

“எல்லாம் உன்னால் வந்ததுடா… ஒன்னால்தான் வந்ததுடா….”

“ஆமாம்… என்னாலதான் வந்தது… அதோ பாருங்க….”

எல்லோரும் பால்பாண்டியன் காட்டிய திசையைப் பார்த்தார்கள். சந்தேகமில்லை. டிராக்டர்… ராட்சதச் சிகப்பு கம்பளிப்பூச்சி போல், அது ஓடி வந்தது. அதன் அரியாசனத்தில், ஒரு வாட்டசாட்டமான ஆசாமி. ‘அடடே…. என்ன இது… ராமையாத் தேவரும், ஆறுமுக நாடாரும் ஓடிப்போய் டிராக்டரை மறிக்கிறாங்க…? என்ன அநியாயம். டேய் பால்பாண்டி…அரிவாளை எடுடா….’

கணபதியாபிள்ளை, வேட்டியை முந்தானை மாதிரி தூக்கிக் கட்டிக்கொண்டு, டிராக்டர் மறிக்கப்பட்ட இடத்தைப் பார்த்து ஓடினார். அவர் பின்னால், பால்பாண்டி அரிவாளுடன் ஓடினான்.

டிராக்டர் முன்னால் பெருங்கூட்டம் கூடிவிட்டது. ராமையாத் தேவரும், ஆறுமுக நாடாரும், டிராக்டர் அரியாசனத்தில் இருந்த டிரைவரையும், அவன் பின்னிருக்கையில் கட்டப்பட்ட கம்பத்தில் பறந்த ஒரு கட்சியின் கொடியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். ராமையா தேவர், கொடியைப் பார்த்தபோது, ஆறுமுகம் நாடார் குரல் கொடுத்தார்.

“நிலம் பூமாதேவிடா… எல்லாருக்கும் பொது மனுஷிடா… வயலுக்குள்ள எப்படிடா நீ கட்சிக் கொடியோடு வரலாம்? ஒண்ணு கொடியை எடுத்துக் கீழே போடு. இல்லேன்னா வந்த வழியா வண்டியை விடு. வயலுக்குள்ளே மட்டும் இறங்கப்படாது.”

“வண்டியை ரிவர்ஸில் எடுக்க முடியாதே.”

“அப்போ கொடியை எடு… எடுக்கியா….? எடுக்கட்டுமா…?”

கணபதியா பிள்ளையால் தான் முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் கொடியைவிட, தமது வயல் தரிசாகக் கிடக்கவேண்டும் என்பதில் அக்கறை அதிகம் என்று நினைத்தார். சூடாகவே கேட்டார்.

“என்னய்யா நீங்க…. இந்தக் கொடில என்னய்யா இருக்குது….”

“ஆயிரம் இருக்கு துய்யா. டிராக்டர , வயலுக்குள்ளே தூரத்துப் பார்வையா பார்க்கிறவன், ஒம்ம வயலுல பறக்குதா….. என் வயலுல பறக்குதான்னு சந்தேகப்படுவான்….”

“அப்போ அடுத்த கட்சிக்காரன் கிட்டப்பணம் வாங்கிட்டீரா….”

“யோவ் பிள்ளை… இந்த மாதிரி பேச்சை யார்கிட்டே வச்சுக்கிட்டாலும், என்கிட்டே வச்சுக்காதேயும். ஏய் பால்பாண்டி கையில் என்ன துடா…. போட்டுப் பார்ப்போமா….? நீ அரிவாக் கையோடயும், நான் வெறுங்கையோடயும் மோதிப் பார்ப்போமா.”

“அய்யோ சாமி. இதோ ஒங்ககிட்டேயே கொடுக்கேன். நீங்களே என்னை வெட்டுங்க…”

“சரி கொடு. கணபதியா பிள்ளைக்கும் டிரைவருக்கும் தேவைப்படும். படுவாப் பயலே கொடுடா… அரிவாளை…..”

பால்பாண்டி, அரிவாளை விடவும் முடியாமல், தொடவும் முடியாமல் தவித்தபோது விவசாயப் பிரமுகர்கள் விவகாரத்தைத் தீர்த்து வைத்தார்கள். சம்பந்தப்பட்ட அந்தக் கட்சியின் கொடி, நேராக நிறுத்தப்படாமல், டிராக்டர் மேல் படுக்க வைக்கப்படவேண்டும் என்பது தீர்ப்பு.

எப்படியோ… டிராக்டர், கணபதியா பிள்ளையின் வயலுக்குள் வந்தது. டிராக்டரின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்ட அரியாசன டிரைவர், படுத்துக் கிடந்த கட்சிக் கொடியைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, அந்த வயலைச் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது, பால்பாண்டி, டிராக்டரில் தனக்குள்ள நிபுணத்துவத்தைக் கோடி காட்ட விரும்பினான். அதட்டலாகவே கேட்டான்.

“டிரைவர்… கேஜ் வீல் இருக்குதா….? வயலுல சேறும் அடிச்சுடலாம் பாருங்க….”

டிரைவர்பால்பாண்டியைப் பட்டும் படாமலும் பார்த்தபோது, கணபதியா பிள்ளை, தமது வேலையாளிடம் விளக்கம் கேட்டார்.

“அதென்னப்பா புது வீலு…?”

“சொல்லுதேன்… மொதலாளி சொல்லுதேன். இந்த டயர்ச் சக்கரங்கள் வச்சுச் சேறு அடிக்க முடியாது. அப்படி அடிச்சா டிரைவரோட சேர்த்து, இந்த டிராக்டர் முங்கிப் போகும். இந்தச் சக்கரங்களில் எதை இடது பக்கம் மாட்டணும், எதை வலது பக்கம் மாட்டணுமுன்னு இருக்கும். மாற்றி போட்டால் மாட்டிக்கிடுவோம். டிரைவர்! நீங்க சட்டிக்கலப்பையைப் பொருத்தி இருக்கணும். இந்த ஏர்க்கலப்பை, இந்த வயலுக்கு லாயக்குப்படாது. சரியா உழாது.”

பாம்புக் காது மருதமுத்துக் கிழவர் கத்தினார்.

“டேய் என்னடா சொல்றே… ஆழ உழாடால், தொளி அடிக்க முடியாதேடா…”

“கவலைப்படாதிய மொதலாளி… நான் எதுக்கு இருக்கேன்.”

“அதுதாண்டா புரியல….”

டிரைவர், இன்னும் வண்டியை நகர்த்தவில்லை. அவரைப் பதறிப் பார்த்த கணபதியா பிள்ளையிடம் அட்டகாசமாகக் கேட்டார்.

“இது எவ்வளவு ஏக்கர்…?” “ரெண்டு ஏக்கர். ஏன் அப்படி கேட்கறீக…”

“ஏய்யா…. மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு ஏக்கர்னு ‘எங்கய்யா’ கிட்டச் சொல்லி, 240 ரூபாய் கட்டினால் போதுமா?

ஒரு ஏக்கருக்கு மேல் கொண்டு ரூ.120 கட்டணும்.”

“ரெண்டே ரெண்டு ஏக்கர்தான் ஸாரே. வேணுமுன்னால் பத்திரத்தைக் காட்டட்டுமா…”

“இதோ பாரும் பிள்ளை ….. எங்கய்யா ‘வை ஏமாற்றியது மாதிரி என்னை ஏமாத்த முடியாது…. எங்கய்யாவை ஏமாத்தும்… ஆனால், என்னை ஏமர்த்தாதீங்க…”

கணபதியா பிள்ளைக்குக் குழப்பம் வந்தது. ஆனால் பால்பாண்டி, டிரைவர் கடைசியாய்க் கக்கிப் போட்ட பஞ்ச தந்திர’ வார்த்தைகளில் சூட்சுமம் இருப்பதைப் புரிந்து கொண்டு தீர்மானித்தான்.

“சரிண்ணே … 120 ரூபாய்ல ஒனக்குப் பாதி. எங்க முதலாளிக்குப் பாதி…. சரி தானே….”

“ஒன் முகத்துக்காவ ஒக்காக்கறேன். சரி காசைக் கட்டச் சொல்லு….”

“நீ உழுது முடி…”

“தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாய் வயிறு வேறு. இல்லாட்டி சக்கரம் சுத்தாது.”

கணபதியா பிள்ளை, வேறு பக்கமாகத் திரும்பி, சட்டைப் பையில் இருந்த ஒரு கத்தை நோட்டுக்களில், ஆறு தாள்களைப் பிய்த்து, மீண்டும் டிரைவருக்கு முகங்காட்டி, கை நீட்டினார். டிரைவரின் சட்டைப் பைக்குள் ரூபாய் நோட்டுக்கள் உட்காரவும், டிராக்டர் நகரவும் சரியாக இருந்தது.

பால்பாண்டி, டிராக்டர் அண்ணணிடம், எப்போது, எப்படி, எங்கே, எவ்வளவு கமிஷன்’ கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

- கல்கி (விடுமுறை மலர்) – 1995 – தராசு (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான். சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே, முடிச்சவிழ்ந்த ...
மேலும் கதையை படிக்க...
கல்வி, விவசாயம், கோழி விஸ்தரிப்பு அதிகாரிகள் உட்பட எண்ணக்கூடிய அதிகாரிகளும், எண்ணில்லா இதர ஊழியர்களும், ஃபீல்ட் ஒர்க்கர்களும், அந்தப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்ச் பண்ணிக் கொண்டிருந்தார்கள். காரணம், நடப்பு நிதியாண்டு முடியும் 'மார்ச்' மாதத்திற்குள், வேலை நடக்கிறதோ ...
மேலும் கதையை படிக்க...
தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். "ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் - அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு 'ஓம் வக்ர துண்டாயா' பன்றபோது, கீரைக்காரி ...
மேலும் கதையை படிக்க...
மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக ...
மேலும் கதையை படிக்க...
நீலா, தனது சபதத்தை இப்படி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது 'பைத்தியக்காரப் பொண்ணு' என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே ...
மேலும் கதையை படிக்க...
ராசகுமாரி, அந்தப் பெயருக்கு எதிர்ப்பதமாய் அல்லாடினாள். சண்டைக் கோழிகளான மாமியாருக்கும், அவள் எதிரிக்கும் இடையே உள்ள இடைவெளியில் நின்றபடி இரண்டு கைகளையும் விரித்துப் போட்டு, அவர்களின் மோவாய்களைத் தொட்டாள். பிறகு, தலைக்கு மேல் கரம் தூக்கி அதைக் கும்பிடாக வைத்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
இறுகத் தார் பாய்ந்த வேட்டியில் மரத் துரள்களும் மண் தூள்களும் இரண்டறக் கலந்த செம்மண் கோலத்தில் குடிசைக்கு வந்த கன்னையா, கழுத்தில் தொங்கிய கோடரியைக் கீழே வைத்துவிட்டு, குடிசைக்கு முன்னால், வேலிகாத்தான் முட்செடிகள் மொய்த்த இடத்தருகே இருந்த மண் பானையில் இருந்த ...
மேலும் கதையை படிக்க...
ஊரு ஒலகத்தில் காதலிப்பதுபோல், தானும் காதலிக்காமல் போனதுக்கு ராசகுமாரி, வட்டியும், முதலுமாய் வருத்தப்பட்டாள். அந்த அரங்கு வீட்டின் கடைசி அறைக்குள் வாசல்படியில் உட்கார்ந்து கொல்லைப்புறத்தைப் பார்த்தபடியே குழைந்தாள். இரண்டு சிட்டுக்குருவிகள், அவள் முன்னால் சல்லாபம் செய்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் அவற்றை ரசித்துப் ...
மேலும் கதையை படிக்க...
கடைசியர்கள்
அரைமணி நேர அறுவை
முகம் தெரியா மனுசி
சாமந்தி ⁠சம்பங்கி ⁠ஓணான் இலை
கொடி(ய)ப் பருவம்
ஒருவழிப் பாதை
திருப்பம்
முதுகில் பாயாத அம்புகள்
பூவம்மாவின் குழந்தை
முகமறியா முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)