Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டிபன் ரெடி

 

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சாவித்திரி தவிப்பாக உணர்ந்தாள். தலைமுடியிலிருந்து உதிர்ந்த நீர்த் திவலைகளால் ஜாக்கெட் நனைந்து, முதுகில் ஈரம் உணர்ந்ததா… அல்லது, வயிற்றில் ஓடிய பசிப் பூச்சியா… தவிப்புக்குக் காரணம் எது என்பது புரியவில்லை.

திருமணமாகி பதினான்கு வருடத்தில் தவிப்பென்பது அவளது நிரந்த உணர்வாகிப் போனது.

இரண்டு பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்தி, சிறிதும் விட்டுக்கொடுத்தலே இல்லாமல் இருக்கும் கணவனோடு பல விஷயங்களில் மல்லுக்கு நின்று, ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் புறப்படும்போது பாதி நாட்களில் காலை டிபனைத் தியாகம் செய்ய நேரிடுகிறது.

அதன் காரணமாக, அவ்வப்போது வயிற்றில் வலி!

இப்போதும் அப்படித்தான். பசி, அதன் காரணமாகச் சோர்வு… அலுவலகத்தில் எப்படி வேலை பார்க்கப் போகிறேன்?

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் லஞ்ச் பாக்ஸைப் பிரித்து, தயிர் சாதத்தில் பாதியைக் காலி செய்தால்தான் பசியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று தோன்றியது.

12பி பேருந்து வந்து நிற்க, போராடி ஏறி இடம் பிடித்து அமர்ந்தாள்.

சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு லஞ்ச் பாக்ஸைப் பிரிக்கும்போது, ஏதோ நினைவில் சற்றே விரல்களில் அழுத்தம் கூட்ட, டிபன் பாக்ஸ் மூடி எகிறியது.

ஊறுகாயும் தயிர் சாதமும், அவளையும் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியையும் பதம் பார்த்து, பேருந்தின் தரைத்தளத்திலும் சிதறியது.

பக்கத்து ஸீட் பெண் முறைத்தாள். ஏதோ படக் கூடாத அருவருப்பான ஒன்று பட்டுவிட்டது போல முகம் சுளித்துக் கைக்குட்டையால் துடைத்தாள்.

”ஸாரி…” சாவித்திரி உதிர்த்த வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் கோபமாக ஏதோ முணுமுணுத் தாள். நின்றிருந்த இன்னொரு பெண்மணி, ”பார்த்துத் திறக்கக் கூடாதாம்மா?” என்றபடி முகம் சுருக்கி, தயிர் சாதம் பட்ட செருப்பைத் துடைத்தாள்.

சாவித்திரி தர்மசங்கடமாக நெளிந்தபடி தன் புடவை மீது சிதறியிருந்த ஊறுகாய்த் துளிகளையும் தயிர்சாதத்தையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். கீழே விழுந்த டிபன் பாக்ஸ் மூடியைக் கண்கள் தேடின.

அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சாவித்திரிக்கு என்னவோ போலிருந்தது. வயிற்றுப் பசியோடு சூழ்நிலையின் இறுக்கமும் சேர்ந்துகொள்ள… அழுகை பொங்கி வந்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

இப்போது அவள் முகத்தின் முன் ஒரு கை நீண்டது. நீண்ட கையில் பிரிக்கப்பட்ட டிபன் பாக்ஸ். அதில் இட்லிகள்.

உள்ளுக்குள் பூரித்த சாவித்திரி, கைக்குச் சொந்தமானவரை நோக்கிப் பார்வையைச் செலுத்த…

யூனிஃபார்ம் அணிந்த அந்தச் சின்னப் பெண், சாவித்திரியைப் பார்த்துச் சிரித்தது.

”பசியிலதான அவசரமா டிபன் பாக்ஸ திறந்தீங்க… முதல்ல சாப்பிடுங்க ஆன்ட்டி. அப்புறமா க்ளீன் பண்ணிக்கலாம்” என்றது அழகாகப் புன்னகைத்தபடி.

சாவித்திரிக்கு அழுகை இப்போது கட்டுப்பாட்டை மீறி வந்தேவிட்டது!

- 29-04-09 

தொடர்புடைய சிறுகதைகள்
நேர்மை
கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார நிகழ்வுகள் சாதாரணம். ஆனால் இதுவரை கான்ஃபரன்ஸ் ஹால் நிரம்பியதில்லை. இருபுறமும் ஊழியர்கள் ஆர்வமாக நின்றிருந்ததில்லை. பல்வேறு துறைகளிலிருந்தும் சகாக்கள் திரண்டிருந்தார்கள். திண்டுக்கல் ...
மேலும் கதையை படிக்க...
ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா
அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம் நேதாஜி சாலையில் யூனிஃபார்ம் அணிந்த மாணவ - மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கூடம் நோக்கி விரைவார்கள். எதிரே இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு மாடுகள், ...
மேலும் கதையை படிக்க...
சூதாட்டத்தில் சில தருமர்கள்!
''ஐயா..!'' வாசலில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்த வேணுகோபால், அழைப்புக் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார். சுமார் அறுபது வயதான கிராமத்துப் பெரியவர் ஒருவர் தயங்கியபடி நின்றிருந்தார். கையில் இருந்த மஞ்சள் பையில் பேப்பர்கள் துருத்திக்கொண்டு இருந்தன. ''ஐயாதான் சினிமா தயாரிப்பாளர் வேணுகோபாலுங்களா?'' வயதாகிவிட்ட ...
மேலும் கதையை படிக்க...
ராதாகிருஷ்ணன், காந்தியை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் கலங்கி இருந்தன. அப்பாவைப் பார்க்கச் சங்கடப்பட்டன. ப்ளஸ் டூவில் 95 சதவிகிதம் எதிர்பார்த்திருந்தான். பிரச்னை எதுவும் இல்லாமல், ஓப்பன் கோட்டாவில் மருத்துவம் படிக்க முடியும் என்று நினைத்திருந்தான். ஆனால், 40 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதில், ...
மேலும் கதையை படிக்க...
பயனுற வேண்டும்
ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம். ""என்னம்மா விக்கித்து நிக்கற... போய் கம்ப்யூட்டர ஆன் பண்ணு.. மணி ஆயிட்டு..'' மலர்விழி, வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். குறிப்பிட்ட இணையதளத்திற்குள் நுழைந்தாள். இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
நேர்மை
ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா
சூதாட்டத்தில் சில தருமர்கள்!
அது வியாபாரமல்ல!
பயனுற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)