கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 14,753 
 

அடுத்த ஷோ தொடங்க இன்னும் பத்து நிமிடங் கள்தான் இருந்தன. ஜோக்கருக்குப் பதற்றம் குறைந்திருக்கவில்லை. இன்னொரு பீடியை எடுத்துக் குடித்தான். புகை கூடவே கொஞ்சம் இருமலையும் சேர்த்துக் கொண்டுவந்தது. இந்த ஊருக்கு வந்து டென்ட் அடித்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டன. வீட்டுக்கு இன்னும் பைசா அனுப்பவில்லை. முன்பெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்துவிட்டால் திரும்பிப் போகும் வரை என்ன நடந்தாலும் கவலைப்படத் தேவையிருக்காது. ரெண்டு மாசமோ, மூணு மாசமோ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இப்போது அஞ்சு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் செல்போனைக் கொடுத்துவிட்டார் கள். இதனால் யாருக்குத் தொல்லையோ இல்லையோ, ஜோக்கர் அநியாயத்துக்குத் திண்டாடினான். தினம் நூறு முறையாவது போன் செய்து பேசாவிட்டால் அவன் பொண்டாட்டிக் குத் தூக்கமே வராது.

”என்னய்யா செய்ற… சாப்பிட் டியா?” – மத்தியானம் ரெண்டு மணிக்குக் கூப்பிட்டாலும் இப்படித்தான் தொடங்குவாள். ராத்திரி பதினோரு மணிக்குக் கூப்பிட்டாலும் இப்படித்தான் தொடங்குவாள். சில சமயம் ஷோவில் இருக்கும்போது தெரியாத்தனமாக பேன்ட்டுக்குள் போனை வைத்திருப்பான். பல்டி அடிக்கிற நேரமாக போன் அடிக்கும். உடனே எடுக்கவும் முடியாது. அவனுடைய பார்ட்டை முடித்துவிட்டு, மீண்டும் வந்து எடுக்கும் வரை போன் அடித்துக்கொண்டே இருக்கும். எதாவது அவசரமோ எனப் பதற்றத்தோடு எடுத்தால், ”என்னய்யா செய்ற… புள்ள உன்னத்தான் கேட்டுட்டே இருக்கு!” என்பாள். கடுப்பில், ”சனியனே… இவ்ளோ நேரமா கூப்புட்டும் எடுக்கலைன்னா வேலையா இருப்பான்னு தெரிய வேணாம். சும்மா… சும்மா… என்ன வெங்காயத்துக்கு போன் அடிக்கிற?” என்று வெடித்தால், அடுத்த நொடியே எதிர்முனையில் இருந்து அழுகைச் சத்தம் கேட்கும். அது எப்படி இவளுக்கு மட்டும் நினைத்ததும் அழுகை வந்துவிடுகிறது என்று தெரியவில்லை.

இவன் எதுவும் சொல்ல மாட்டான், ”சரி… சரி… புள்ளைக்குத் திங்க எதாச்சும் வாங்கிக் குடு. நான் அப்புறம் பேசறேன்!” என்று சொல்லித் துண்டித்துவிடுவான். அதற்கு மேலும் பேசினால், அவள் சொந்தக் கதை, நொந்த கதை எல்லாம் சொல்லி முடிக்க முக்கால் மணி நேரம் ஆகிவிடும்.

இன்று மதியம் ஷோ முடிகிற நேரமாக டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து இவன் போனை எடுத்துக்கொண்டு ‘தவளை’ ரமேஷ் ஓடிவந்தான். அது என்னவோ ரமேஷ் எனப் பெயர் வைத்திருக்கிறவன்களைக் கண்டாலே கோபம் கோபமாக வருகிறது. எல்லாம் இந்தத் தவளை ரமேஷால் வருவதுதான். அவன் பொதுவாக இவன் மீது எந்த அக்கறையும் காட்டுவது இல்லை. ஜோக்கருக்கு ஒரு பிரச்னை என்றால், சின்னதாக இருந்தாலும் உடனே அந்தப் பிரச்னையை எப்படிப் பெரிதாக்குவது என யோசித்து அதைச் செயல்படுத்திவிடுவான்.

போனை எடுத்ததும் ”காடாறு மாசம்… வீடாறு மாசம்னு சுத்தற பொழப்பு ஒரு பொழப்பாய்யா? சரி… போறதுதான் போற, வீட்டுக்குச் செய்றது செஞ்சுட்டுப் போக வேணாம். ஒனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டியும் புள்ளகுட்டியும்?” – இப்படி ஒரு மூர்க்கமான தாக்குதலை அவனது பொண்டாட்டியிடம் இருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. அது எப்படியோ பதினைந்து நாளைக்கு ஒரு முறை மூவாயிரம் கொடுத்தால்தான் குடும்பம் நடத்த முடிகிறது. இத்தனைக்கும் வீட்டில் பொண்டாட்டியும் மகளும் மட்டும்தான். ”வரும்போதுதானடி காசு கொடுத்துட்டு வந்தேன். அதுக்குள்ள என்ன எழவுனு இப்ப கேக்கற? இங்க என்ன அச்சா அடிக்கிறேன். நீ கேட்டதும் அனுப்பிவைக்க?”

அவன் பொண்டாட்டி விடுவதாக இல்லை. ”நீ குடுக்கற காச நான் என்ன அவிச்சா திங்கறேன்? வெலவாசி அம்புட்டு விக்கிதுய்யா. பாலு வெல தெரியுமா? பேசற பேச்சு…” பால் விலையா இவ்வளவு செலவுக்கும் காரணம்? ”நாம கெட்ட கேட்டுக்கு பாலு ஒரு கேடா? அதான் ரேஷன் கடைல அரிசி ஒரு ரூவாய்க்குத் தராய்ங்கள்ல… அப்புறம் என்ன?” அவன் இப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று ஏதோ ஒன்றைச் சொல்ல… ”ஒரு ரூவாய்க்கு அரிசி வந்துட்டா, மத்த சாமானெல்லாம் உங்கப்பனா வந்து குடுப்பான்? நானும் எல்லாத்தையும் வித்துட்டுத்தான் குடும்பத்த ஓட்டறேன். இன்னும் விக்கிறதுக்குத் தாலி மட்டும்தான் இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல ரூவா அனுப்பல, அதத்தேன் விக்கணும்!” சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

சாப்பிட்ட கொஞ்ச சோறும் நெஞ்சுக்கு ஏறிக்கொள்ள, ஷோ தொடங்கும் நேரமாகிவிட்டதற்கான பெல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். முகமூடி போட்டுக்கொள்வதாலேயே பல சமயங்களில் இவன் படும் துயரங்கள் எதையும் வெளி உலகம் தெரியா மல் பார்த்துக்கொண்டு இருக்கிறான். அதையும் மீறி சில சமயங்களில் நிஜமாகவே கண்ணீர் வரும்.

எவ்வளவோ குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துகிறான். அவன் குழந்தை? பிள்ளையைப் பற்றி நினைக்கிறபோது எல்லாம் தன்னையும் மீறி அழுதுவிடுவான். அவன் கண்ணீர் முகத்தில் வழிந்து இறங்கும்போது ஜோக்கரின் நடிப்பை மெச்சி கைத்தட்டல் பலமாகும். கை தட்டத்தட்ட சில சமயங்கள் அழுகை அதிகமாகியபடியே இருக்கும். அன்று முழுக்க எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் பிள்ளையின் நினைப்பாகவே திரிவான்.

இன்று ஷோ முடிந்ததும் கொஞ்சம் பணம் கேட்டு வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டான். இவனுக்குத் தன் பிள்ளையோடு விளையாட அவ்வளவு பிடிக்கும். ஆனால், தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் அவன் வீட்டில் இருந்தது இல்லை. ஏதாவதொரு ஊருக்கு கம்பெனி கிளம்பிவிடும். இன்னும் ஒரு வாரம் இருந்துவிட்டுப் போகலாம் என்றால், வீட்டில் தாங்காது. பல சமயங்களில் வேறு ஏதாவது தொழில் செய்திருக்கலாமோ என்று படும். ஆனால், இதில்தான் தான் சந்தோஷ மாக இருப்பதாக நினைத்தான். ஷோ தொடங்கிவிட்டது. எப்போதுமே முதலில் கொஞ்ச நேரம் ஜோக்கர்தான் காமெடி பண்ண வேண்டும். இன்று பணம் கேட்க வேண்டும் என்பதால் கொஞ்சம் ஆர்வமா கவே எல்லாவற்றையும் செய்தான். கைத்தட்டல் வழக்கத்தைவிடப் பலமாக இருந் தது. வழக்கமாக பல்டி அடிக்கும்போது இருக்கிற வேகத்தைவிட இன்று அதிகமாக இருந்தது. அவனைத் தொடர்ந்து யானையைக் கூட்டிக்கொண்டு அடுத்த ஆள் உள்ளே வர, இவன் சின்ன ஓய்வுக்காக டிரெஸ்ஸிங் ரூமுக்குப் போனான்.

எல்லோரும் தயாராகி இருந்தார்கள். வழக்கமாகப் பேசும் சில வார்த்தைகள். தவளை ரமேஷ், ”என்ன ஜோக்கர் அண்ணே… இன்னைக்கி வீட்ல இருந்து மதினி போன் வரவும் ஆட்டம் பிரமாதமா இருந்துச்சுபோல!” – குத்தலாகக் கேட்டான். அப்படியே அவன் வாயில் ஒரு குத்துவிடலாமா என்று இருந்தது. இவன் சிரித்தபடியே நகர்ந்து போய்விட்டான்.

மேனேஜர் அடுத்தடுத்து யார் எல்லாம் போக வேண்டும் என வரிசையாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். அது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. தினமும் செய்து பழக்கப்பட்டுப் போனதுதான். ஆனாலும், தனது கடமையில் சற்றும் மனந்தளராத உத்தமன் மேனேஜர். ஜோக்கர் பட்டும்படாமல் அவரைச் சுற்றியே வந்துகொண்டிருக்க ‘என்னய்யா… என் பின்னாலயே திரியற? சீக்கிரம் போ. நீ இங்க வந்து நிக்கலாமா?’ என்றான்.

ஜோக்கர் சிரித்தான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு, ”ஒண்ணுமில்ல சார். இன்னிக்குக் கொஞ்சம் பணம் வேணும். வீட்டுல புள்ளைக்கு மேலுக்குச் சொகம்இல்லை!”

மேனேஜருக்குக் கடுப்பானது.

”யோவ்! காசு கேக்கற நேரமாய்யா இது? போய்யா… போய் வேலையப் பாரு!” ஆளை இப்போது பிடித்தால்தான் ஆச்சு என்கிற பதற்றத்தில்தான் ஜோக்கர் இங்கயே வந்து சொன்னான். மேனேஜர் பேசுவதைப் பார்க்கையில் காசு வருகிற மாதிரி தெரியவில்லை. என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என மீண்டும் கிரவுண்டுக்குப் போனவனை தவளையன், ”என்னண்ணே, நிறையக் கிடைச்சுதா?” கேட்ட வேகத்தில் அவனது மூக்கில் ஒரு குத்துவிட்டான்.

ஒன்று இரண்டாக… இரண்டு மூன்றாக… வரிசையாகக் குத்துகள்! தவளையன் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. முதல் குத்தை பொண்டாட்டியை நினைத்தும் இரண்டாவது குத்தை மேனேஜரை நினைத்தும் மூன்றாவது குத்தை பால் விலை, பஸ் டிக்கெட், பருப்பு விலை… இப்படி எல்லாக் கண்றாவியின் விலையைக் கூட்டியவனை நினைத்தும் குத்தினான். எல்லோரும் வந்து விலக்கிவிட்டும்கூட அவனால் நிறுத்த முடியவில்லை. மேனேஜர் ஜோக்கரின் முகத்தில் தெரிந்த குரோதத்தைக் கண்ட பயத்தில் எதுவும் பேசவில்லை.

”ஏண்டா… என்னப் பாத்தா எல்லாப் பயலுக்கும் எளக்காரமா இருக்கா?” அவன் இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தான். ஜோக்கரின் புண்ணியத்தில் தவளை பெர்ஃபார்மன்ஸ் மட்டும் கேன்சலாகிவிட்டது.

மேனேஜர் என்ன நினைத்தாரோ, ஷோ முடிந்ததும் ஜோக்கரைக் கூப்பிட்டு, ”இந்தாய்யா உனக்குத் தர வேண்டிய சம்பளம் நாலாயிரத்தோட சேர்த்து கூடுதலா ஒரு பத்தாயிரம் இருக்கு. எடுத்துக் கிட்டு வவுச்சர்ல கையெழுத்துப் போடு!” ஜோக்கரின் மூஞ்சியைப் பார்க்கவே இல்லை. சிரிக்க வைப்பதுதான் ஜோக்கரின் வேலையாக இருக்க வேண்டும்! வன்முறை யாளனாக இருப்பதா? கையெழுத்துபோடும் போது மனம் முழுக்க ஜோக்கருக்குப் பட்டாம்பூச்சி பறந்தது. கையெழுத்துப் போடுகிறபோது மட்டுந்தான் ஜோக்கர் மணி என ஜோக்கரோடு சேராமல் மறைந்து போன தன் பெயர் அவனுக்கே நினைவுக்கு வருகிறது.

பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பப்போனவனை ”இப்பிடி அடிக்கிறது, மல்லுக்கட்டுறதுனு இருக்க ஆளுக நம்மளுக்குச் சரிப்படாதுப்பா. நீ வேற கம்பெனி பாத்துக்க. சொல்றதுக்குத்தான் வரச் சொன்னேன்!” வவுச்சர் புக்கை எடுத்து வைத்துவிட்டு மேனேஜர் வேகமாக எழுந்துபோனார். இவனால் அந்த வார்த்தைகளை முழுமையாகச் செரிக்க முடியவில்லை. வேறு கம்பெனியா? இவனுக்கு வேறு வேலை எப்படித் தெரியாதோ அப்படியே வேறு கம்பெனியும் தெரியாது. விவரம் தெரிந்த நாளில் இருந்து இதே கம்பெனியில்தான் வேலை செய்கிறான். ஜோக்கராகவே வளர்ந்து, ஜோக்கராகவே கல்யாணம் கட்டி, ஜோக்கராகவே அப்பாவாகி, ஜோக்கராகத்தான் சமூகத்தின் ஒரு மனிதனாகியிருந்தான். இப்போது என்ன செய்வது?

ஓடிப்போய் மேனேஜரின் காலில் விழுந்தான். ”அய்யா… தெரியாம செஞ்சுட்டேன். உங்களுக்கே தெரியும்… அந்தப் பய எப்பப் பாத்தாலும் என்னய நோண்டிக்கிட்டே இருக்காங்கிறது. இன்னைக்கு கோவத்துலதான் அடிச்சிட்டேன். இனிமே நடக்காம பாத்துக்கறேன்யா. மன்னிச்சுக்கங்கய்யா!” -கெஞ்சிப் பார்த்தான்.

”ஆமாய்யா! இன்னைக்குக் கோவத்துல அவன அடிச்ச. நாளைக்கு என்னய அடிப்ப. இதெல்லாம் சரிப்படாதுப்பா!” இனி, எவ்வளவு அடித்தாலும் ஜோக்கர் வாங்குவான். அதிகாரம் என்னும் சாட்டை மேனேஜரிடம் இருந்தது. அதை முயன்றவரை சுழற்றவே விரும்பினான். எப்படி விலைவாசி உயர்த்துகிற அதிகாரம் இருக்கிறவர்கள் சாட்டையைச் சுழற்றுகிறார்களோ அதே மாதிரி. ஜோக்கருக்குக் கெஞ்சி, அழுது தொண்டைத் தண்ணி வற்றிவிட்டது. மேனேஜர் இறங்கி வருவதாயில்லை. அவன் கிளம்பிப்போய்விட்டான்.

வீட்டில் இருந்து பொண்டாட்டி வரிசையாக போன் அடித்துக்கொண்டு இருந்தாள். அவன் எடுக்கவில்லை. அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் இரவு முழுக்க உட்கார்ந்திருந்தவன், சோடியம் விளக்குகளினூடாகப் பெய்துகொண்டு இருந்த பனி மழையைப் பார்த்தபடி அடுத்து என்ன செய்வதெனத் தெரியாதவனாக இருந்தான். ஓடிப்போய் குழந்தையின் மடியில் விழுந்து அழுது புரண்டு விளையாடினால் எல்லாம் சரியாகிவிடும்.

அதிகாலையில் வீட்டுக்குப் போகும்போது அரை உயிராகப் போனான். எதிர்பாராமல் இவனைப் பார்த்த அவன் பொண்டாட்டி இவனுக்கு எதுவோ ஆகியிருக்கிறதென நினைத்து, ”யாத்தீ! என்னய்யா ஆச்சு. ஏன் மூஞ்சியெல்லாம் இப்படி இருளடஞ்சு கிடக்கு. மேலுக்குச் சொகம்இல்லையா?” – சேலைத் தலைப்பால் மூஞ்சியைத் துடைத்துவிட்டாள். சுருட்டியிருந்த வேஷ்டி மடிப்பில் இருந்து ரூவாயை எடுத்துக் கொடுத்தான். காசை வாங்கி எண்ணிப் பார்த்தவள், ”எதுக்குய்யா இம்புட்டுக் காசு? மேலுக்கு என்ன… ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள். ஜோக்கர் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டான். அந்தப் பிள்ளை அவனோடு பின்னிப் பிணைந்துகொண்டது. ஒரு சொம்பு நிறைய நீராகாரம் எடுத்து ஜோக்கரிடம் அவன் பொண்டாட்டி நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் குடித்தவனுக்கு அந்தக் குளுமை சந்தோஷமாக உள்இறங்கியது. திரும்பி அவளைப் பார்த்தவன், ”இனிமே சர்க்கஸும் இல்ல… ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. வேற பொழப்பத்தான் பாக்கணும்!”- அவனால் பொண்டாட்டியின் மூஞ்சியைப் பார்க்க முடியவில்லை. அவளுக் குத் தெரியும், இவனுக்கு அதைவிட்டால் வேறு எந்த வேலையும் தெரியாது. எல்லோரையும் சந்தோஷப்படுத்துவதைப் பெருமையான வேலையாக நினைத்துச் செய்கிறவனுக்கு, என்ன காரணத்தால் இப்போது இப்படி ஆகியிருக்கிறது?

பத்து நாட்கள் எங்கும் போகவில்லை. வீடு அவனை முழுமையாக அரவணைத்துக்கொண்டது. சர்க்கஸில் என்னவெல்லாம் செய்தானோ அதை வீட்டில் பிள்ளையின் முன்னால் செய்துகாட்டினான். குழந்தை எல்லாவற்றையும் ஆவெனப் பார்த்தது. சிரிக்கவே இல்லை. இவனுக்கு ஏன் அது சிரிக்காமல் இருக்கிறது எனத் தெரியவில்லை. தனது அதிகபட்சமான அத்தனை வித்தைகளையும் செய்துகாட்டியும் அது சிரிப்பதாக இல்லை. முதல் இரண்டு நாட்கள் எப்படியும் அதைச் சிரிக்க வைத்துவிடலாம் என நம்பியவன், என்ன செய்தும் சிரிக்க முடியவில்லை என்றானதும், அவள் முன்னால் வித்தை செய்வதை நிறுத்திவிட்டான். குழந்தையிடம் வேறு எப்படி அன்பு காட்டுவது எனத் தெரியவில்லை.

அவளுக்கு என்ன விளையாட்டு பிடிக் கும்? அவன் பொண்டாட்டி வெறுமனே கிச்சுகிச்சுக் காட்டினால்கூட அதற்கு சந்தோஷமாக அந்தக் குழந்தை சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தது. இவன் என்ன செய்தாலும் அப்படியே இருக்கிறாள்.என்ன செய்வது எனத் தெரியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டவனாக அமைதியாக இருந் தான். வீட்டில் இருப்பது துயரமாகிவிட… வாழ்வில் முதல்முறையாக வேலை தேடித் தெருவில் இறங்கினான்.

ஒரு காட்டன் மில்லில் நைட் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் வேண்டும் எனக் கேட்டு இருந்தார்கள். நாலாயிரம் சம்பளம், ஒரு வேளைச் சாப்பாடு. இப்போதைக்கு இது பரவாயில்லையென மனசில்லாமல் போனான். யாருமே இல்லாமல் அநாதையாக இருப்பதுபோல் உணர்ந்தான். தன்னைச் சுற்றி எப்போதும் கேட்டுக்கொண்டு இருந்த சிரிப்புச் சத்தம் இல்லாமல் சூனியம் பிடித்தது போலாகிவிட்டது.

அவன் பிள்ளையிடம் விளையாடவே அச்சமாக இருந்தது. அதுவாக ஓடிவந்து இவனிடம் ஒட்டிக்கொண்டாலும் அதைத் தவிர்த்தான். ”புள்ள எவ்ளோ ஆசையா ஓடியாந்து உக்காருது… தூக்கேன்யா!” பொண்டாட்டி சொல்கிறபோது எல்லாம் அமைதியாக அவளை வெறிப்பான். அவனுக்கு மற்றவர்களின் சிரிப்புச் சத்தம் கேட்காமல் சிரிப்பது மறந்துபோயிருந்தது.

மகளின் பள்ளிக்கூட விழாவில் நிகழ்ச்சி நடத்த ஜோக்கரைக் கூப்பிட்டு இருந்தார் கள். அவனுக்கு விருப்பமே இல்லை. போனால் ரெண்டாயிரம் ரூபாய் குடுப்பார் கள் என்றதால் சம்மதித்துப் போனான். ரொம்ப நாளைக்குப் பிறகு வேஷம் கட்ட எந்தச் சிரமமும் இல்லை. கை தானாகவே எல்லாவற்றையும் செய்தது, மிக அனிச்சையானதொரு செயலாக. குழந்தைகள் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்கும் சத்தம் இவனுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. சீக்கிரமாகப் போக வேண்டும் என வேகமாக ரெடியானான். குழந்தைகளுக்கு நடுவில் போய் நின்றதும் அப்படியரு கைத்தட்டல். எல்லோருமே சந்தோஷக் கூச்சலிட்டார்கள். கூட்டத்தில் வேகமாகக் கண்கள் அவனது மகளைத் தேடின. அந்தக் குழந்தை எப்போதும்போல் அமைதியாக இருந்தது. ஜோக்கருக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வழக்கமாகச் செய்கிற ஒவ்வொரு வித்தையாகச் செய்தான். செய்யச் செய்ய குழந்தைகள் சிரித்து உருண்டனர். ஒவ்வொரு வித்தையைச் செய்யும்போதும் தனது மகள் சிரிக்கிறாளா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் சிரிப்பதாகவே இல்லை.

கடைசியாக இவன் பல்டியடிக்கும் ஒரு வித்தை செய்யும்போது தவறி விழுந்து அழுகிறபோது அவன் மகள் சிரித்தேவிட்டாள். ஜோக்கருக்குத் தான் நின்றிருக் கும் நிலம் அப்படியே ஒரு பத்தடி உயரமானதுபோல் இருந்தது. கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது. ”என் மக சிரிச்சிட்டா… என் மக சிரிச்சிட்டா… என் மக சிரிச்சிட்டா!”

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *