ஜனனம் இல்லாத ஆசைகள்

 

ஸரஸு எச்சில் இட்டுக் கொண்டிருந்தபோது அப்பா உள்ளே நுழைந்து சமையல்கட்டு வாசப்படியில் தலையை வைத்துப் படுத்திருந்த அம்மாவிடம் வந்து நின்றார்.

பாதி எச்சில் இடுகையில் கையை எடுத்தாலோ தலையை நிமிர்த்தினாலோ அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும்.

“எச்சில் இடறப்போ பராக்கு என்னடீ?” என்பாள்.

“அந்தக் காலத்துலே நாங்கள்ளாம் இருபது, முப்பது பேர் சாப்பிட்ட கூடத்தை ஒரே மூச்சுலே மெழுகிடுவோம். சாணியை உருட்டிப் போட்டு, துளி ஜலத்தைத் தெளிச்சுண்டு குனிஞ்சம்னா, ஒத்தாப்பல இட்டு முடிச்சிட்டுதான் நிமிருவோம். ஒரு பருக்கை தங்குமா, இல்ல சொட்டு ஜலம்தான் இருக்குமா? பொம்மனாட்டி காரியம் அப்படின்னா இருக்கணும்?” என்பாள்.

இன்னும் நீளநீளமாய் அந்தக் காலத்தில் தான் வேலை செய்த பாங்கையும், இப்போது தன் இயலாமையையும் சொல்லி புலம்புவாள்.

அம்மாவைச் சொல்லி என்ன? அவள் உடம்பு அப்படி! அவள் சலிப்பு அப்படி!

ஏதோ ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டோமா, குழந்தை குட்டிகளைப் பெற்றோமா, அதுகளுக்கு ஒருவழி பண்ணி விட்டோமா, கடைசிக் காலத்தில் ‘ராமா! கிருஷ்ணா !’ என்று கிடப்போமா என்று ஆசைப்படுவதெல்லாம் நடக்க இயலாதபடி அழிச்சாட்டியம் பண்ணும் பிளட்ப்ரஷர், போதாதகுறைக்கு ஸரஸு.

“பஞ்சு மாமா கூப்பிட்டாரேனு போயிருந்தேண்டி… அவர் முன்னே சொன்னாரே, அந்த மதுரை வரன், ஞாபகம் இருக்கா? அவர் வேலை நிமித்தமா நேத்திக்கு இங்க வந்திருக்காராம். ஜாடை மாடையா மாமா அவர்கிட்ட பேச்சுக் கொடுத்துப் பார்த்தப்போ, ‘உங்க இஷ்டம் மாமா, உங்களுக்குத் தெரியாததா’னுட்டாராம். ‘ஸரஸுக்கு நல்ல காலம் பொறக்கப் போறதுடா, இன்னிக்கு சாயங்காலம் அவரைப் பொண் பார்க்க கூட்டிண்டு வரேன். பிடிச்சுப் போச்சுன்னாக்க, உடனே முடிச்சுடலாம்’ன்னார். ‘ஆஹா! அதுக்கென்ன, அவகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணறேன். அஞ்சு மணிக்கு வாங்கோ’னு சொல்லிட்டு ஓடி வரேன்-ஏண்டி, மங்களம், நீ என்ன சொல்றே?”

படுத்துக்கொண்டிருந்த அம்மா எழுந்து உட்கார்ந்தாள்.

“நா என்னன்னா சொல்றதுக்கு இருக்கு? எல்லாம் அந்த ஈஸ்வரன் விட்ட வழி…!”

“அப்ப, சரி…சாயங்காலம் டிபனுக்கு பண்ணச் சாமான்கள் இருக்கா?”

அம்மா உட்பக்கம் திரும்பி இவளைப் பார்த்தாள்.

“எச்சல் இட்டு ஆச்சோ இல்லையோ? ரெண்டு பேர் சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்ண இத்தனை நாழியா! அசமந்தம்…” என்று கடுகடுத்தவள், “மடமடனு கை அலம்பிண்டு வந்து கூடைல வாழக்காய், வெங்காயம் இருக்கானு பாரு… அப்படியே ரேடியோ ஆயிலும், சக்கரையும் எவ்வளவு இருக்குனு பாரு” என்றாள்.

இவள் கிணத்தடிக்குப் போய் கை கழுவிக்கொண்டாள். சுருணை எடுத்துவந்து சாப்பிட்ட இடத்தைத் துடைத்தாள். திரும்ப கை அலம்பி தலைப்பில் துடைத்துக்கொண்டு அம்மா சொன்ன சாமான்களைப் பார்த்தாள்.

வெங்காயம், உருளை இருந்தன. வாழைக்காய் இல்லை. ரவை, சர்க்கரை போதும். கடலை மாவுதான் போதாது.

சின்னக் குரலில் தேவையானவைகளைச் சொன்னாள்.

“பைய எடுத்துக் குடு, நா ஒரு நடை போய் வாங்கிண்டு வந்துடறேன்.”

அப்பாவிடம் ஸரஸு பையை நீட்டினாள்.

“நூறு முந்திரி வாங்கிண்டு வரேளா? யானை விலை சொன்னான்னா வாண்டாம். முந்திரிப் பருப்பு போட்டு வேண சொஜ்ஜி கிளறியாச்சு… இப்ப இல்லாட்டா பரவாயில்லே…”

அப்பா தலை ஆட்டிக்கொண்டே படி இறங்கினார். அம்மா திரும்ப வாசப்படியில் படுத்தாள். “குருவாயூரப்பா, என்னிக்குத்தான் எங்க மேல உனக்கு கருணை பொறக்கப் போறதோ, தெரியலையே! ஆடி பொறந்தா இவளுக்கு முப்பது ரொம்பிடும். காலா காலத்திலே கல்யாணம் ஆயிருந்தா, தோள் உசரத்துக்குப் பொண்கூட இருந்திருப்பா. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அவஸ்தைப்பட வைக்கப் போறயோ…கிருஷ்ணா …”

தனக்குத்தானே அம்மா முனகிக்கொள்வதை காதில் வாங்கியபடியே ஸரஸு அடுக்களையை ஒழித்தாள். பத்துப் பாத்திரங்களை கிணத்தடிக்கு எடுத்துப் போனாள். சாம்பலை தேங்காய் நாரில் ஒற்றி எடுத்துப் பாத்திரங்களை அழுந்தத் தேய்த்து, தண்ணீர் விட்டு அலம்பிக் கவிழ்த்தாள். குடத்தில் ஜலம் கொணர்ந்து சமயக்கட்டை அலம்பிவிட்டாள்.

ஒரு வழியாய் வேலைகள் முடிந்து, ஈரப்புடவை காலைத் தடுக்க நடந்து, உறங்கும் அம்மாவைத் தாண்டிக்கொண்டு கூடத் துக்கு வந்தவள், தெருவைப் பார்க்க இருந்த ஜன்னல் திண்ணை யில் ஏறி அமருமுன் சுவரில் மாட்டியிருந்த கைக்கண்ணாடி மேல் பார்வை விழ ஒரு நிமிஷம் அப்படியே நின்றாள்.

லேசாய் குனிந்து கிட்ட நெருங்கிப் பார்க்கையில் முன்பக்கம் மயிரின் அடர்த்தி குறைந்து மண்டை தெரிவது புரிந்தது. காதோரமாய், நெற்றியை ஒட்டி வெள்ளியாய் ஜொலித்த நரை முடிகள். வயசைக் கூட்டிக் காட்டும் கன்னங்கள்.

அம்மாடி! என்னது இது! அம்மா சொல்கிற மாதிரி ஏன் இப்படி வயசானவளாய்த் தெரிகிறேன்! நிஜமாய் வயசு அதிகமாகி விட்டதா?

‘முப்பது நிறைந்து முப்பத்தொன்று’ அவ்வளவுதானே! சாஸ்திரிகள் வீட்டு கமலத்துக்குக் கல்யாணமாகும்போது முப்பத்தியோரு வயசு. குழந்தை பிறந்தால் ஸிஸேரியன் அது, இது என்று என்ன பயமுறுத்தல்! ஆனால் நடந்தது என்ன? தங்க விக்ரஹம் மாதிரி பொண்ணும் பிள்ளையுமாய் அவள் மணப்பது தானே நிஜம்!

சியாமளிக்கு மட்டும் என்னவாம்! இருபத்தி ஒன்பது வயசில் கல்யாணம். இப்போது அமெரிக்காவில் கொட்டி முழக்குகிறாள்.

எனக்கும் நல்லபடியாய் எல்லாம் நடக்கும். எனக்கென்று ஒருத்தன் எங்காவது பிறந்திருப்பான். வேளை வந்துவிட்டால் வந்து தாலி கட்டி அழைத்துப் போய்விடுவான், நிச்சயம்.

அம்மா பாவம். உடம்புக்கு முடியவில்லை. புலம்புகிறாள். அவள் சொல்லுவதை எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது.

திரும்ப கண்ணாடியிடம் குனிந்து பார்த்த ஸரஸு முன் மயிரை கோதிக்கொண்டாள். முகத்தில் வழிந்த எண்ணெயை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.

ஆ! இப்போது முகம் இளமையாய்தான் இருக்கிறது.

இரண்டு நிமிஷம் போல கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே ரசித்துக்கொண்டவள், நகர்ந்து திண்ணை மீது ஏறி உட்கார்ந்தாள்.

அதுதான் அவள் இடம், பல வருஷங்களாய் பாந்தமாகிப் போன இடம். மங்குமங்கென்று வீட்டு வேலைகள் அத்தனையும் செய்து முடித்துவிட்டு தெருவைப் பராக்கு பார்க்க ஆர்வத்துடன் அவளை அமர அழைக்கும் இடம்.

ஜன்னல் கம்பியில் தலையை முட்டுக் கொடுத்து சாய்ந்து உட்கார்ந்து, எதிர்ப்பக்க சுவரில் கால்களை அழுந்த உதைத்துக் கொண்டாள்.

தெரு, வெயிலின் கொடுமையில் துவண்டு இருந்தது.

பிளாஸ்டிக் சாமான்களைக் கூடையில் அடுக்கிக்கொண்டு போகும் பாத்திரக்காரன், வேகாத வெயிலில் வேகும் தபால்காரர், டிபன் காரியர்களோடு பள்ளிக்கூடத்தைப் பார்க்க ஓடிய ஆயா, இவர்களைத் தவிர தெருவில் வேறு ஜனநடமாட்டம் இல்லை.

வெயிலை வெறித்ததால் கூசிய கண்ணை மூடிக் கொண்டாள்.

மாலையில் தன்னைப் பெண் பார்க்க வரப்போகும் நபரிடம் சிந்தனை ஓடியது.

பஞ்சு மாமா சொன்ன வரனா? அது யார்?

எனக்குத் தெரியாமல் அப்பா எப்போது அம்மாவிடம் இந்த வரனைப்பற்றி பிரஸ்தாபித்தார்?

நான் கோயிலுக்குப் போயிருந்தபோதா, இல்லை நாலு நாள் முன் லல்லு வீட்டுக்குப் போனபோதா?

வெளியூர்க்காரரா? அப்பா பேசியதிலிருந்து அப்படித்தானே தெரிந்தது.

முன்பெல்லாம் இவளை யாராவது பெண் பார்க்க வருவதாக இருந்தால் முதல் நாளே வீடு திமிலோகப்பட்டதை இப்போது ஸரஸு நினைத்துப் பார்த்தாள்.

பிள்ளை, யார் என்பதைப்பற்றி அப்பாவும், அம்மாவும் ஓயாமல் பேசுவார்கள்.

மாலாவும் லல்லுவும் ரகசியமாய் கேலி பண்ணுவார்கள்.

எதிர் வீட்டு மாமி, பக்கத்தாத்து மாமி என்று எல்லோரும் காலையிலேயே ஒத்தாசைக்கு வந்துவிட, தெருவே அமர்க்களப் பட்டுப் போகும்.

அதெல்லாம் அப்போது. கிட்டத்தட்ட பதிமூன்று வருஷங்களுக்கு முன்…

முதன் முதலாய் ஸரஸு என்கிற ஸரஸ்வதியை அவளுடைய பதினேழாவது வயசில்தான் ஒருவன் பெண் பார்க்க வந்தான்.

அப்போது அப்பா வேலையில் இருந்தார். கவர்மெண்ட் ஆபீஸ் ஒன்றில் க்ளார்க். அம்மாவுக்கு ப்ளட் ப்ரஷர் இல்லை, தெம்பாகத்தான் இருந்தாள். மாலா எஸ்.எஸ்.எல்.ஸி. லல்லு எட்டாவது.

இரண்டு வருஷமாய் மூத்த மகள் ஜாதகத்தோடு அலைந்த பின், பெண் பார்க்க ஒரு வரன் வரும் சந்தோஷம் அப்பா, அம்மாவுக்கு.

அம்மா சற்றுமுன் சொன்ன மாதிரி நிறைய முந்திரி, திராட்சை போட்டு சொஜ்ஜி, மணக்க மணக்க நாலு தினுசு பஜ்ஜி.

அந்த நாள், ஸரஸுவுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

பிள்ளைக்கும் கவர்மெண்டில்தான் உத்தியோகம். நானூறு ரூபாய் சம்பளம். வெட்வெடவென்று உயரமாய், கறுப்பாய் இருந்தான். வெள்ளைப் பேண்ட், கோடு போட்ட ஷர்ட் அணிந்து வந்தான். கூட வந்த அம்மா, அக்காக்காரிகள் பாடச் சொன்னதும் ஸரஸு, ‘நீயே கதி ஈஸ்வரி’ பாடினாள்.

ஒரு மணி போல இருந்துவிட்டு ‘இரண்டு நாளில் சொல்லி அனுப்புகிறோம்’ என்று புறப்பட்டு போனார்கள்.

அன்று இரவு ஸரஸு கலர் கலராய் கனவு கண்டாள். தமிழ் சினிமாவில் பார்க்கிற ரீதியில் அவனும் அவளும் டூயட் பாடினார்கள். கண்களால் பேசினார்கள். அருவியில் உடை நனைந்து, உடம்பு தெரிகிற மாதிரி குளித்தார்கள்.

மறுநாள் சாயங்காலம் பதில் வந்தது. “பெண்ணைப் பிடிச்சிருக்கு, கையிலே நாலாயிரம் கொடுக்கறதா இருந்தா முடிச்சுடலாம்.”

நாலாயிரமா?

அப்பா இரண்டாயிரம் வரை முக்கி முனகிக்கொண்டு போனார். அவ்வளவுதான்.

இண்டாவது, மூன்றாவது வரன்கள் கூட இப்படிப் பணம், சீரால்தான் தட்டிப் போயின.

அப்புறம் நாலாவதாக வந்த பையன் “அக்காவை விட தங்கையைப் பிடிச்சிருக்கு” என்று சொல்ல, அப்பாவும், அம்மாவும் இரண்டு நாட்கள் போல ஆயிரம் யோசனை பண்ணினார்கள்.

நல்ல பையன், நல்ல சம்பாத்தியம், பிக்கல் பிடுங்கல் இல்லை, வலிய மாலாவை பண்ணிக் கொள்கிறேன் என்கிறான். மாலாவுக்கும் பதினேழு நடக்கிறது. ஒப்புக்கொண்டால் என்ன?

ஸரஸு காத்திருக்க அடுத்தவள் மாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு ஜம்ஜம்மென்று குடித்தனம் பண்ணப் போனதும் இப்படித்தான்.

அடுத்த வருஷம் கிட்டிமுட்டி எதுவும் வரவில்லை. ஸரஸு வுக்கு இருபது வயசு நிரம்பின பிறகு எல்லாம் கூடி வந்த ஒன்றும் நிச்சயதார்த்தம் நடக்குமுன் மாப்பிள்ளையின் தாயார் திடுமெனத் தவறிவிட, சகுனம் சரி இல்லை என்று கை நழுவிப் போயிற்று.

லல்லு பள்ளிப் படிப்பு முடித்து, ஷார்ட் ஹாண்ட், டைப்பிங் பாஸ் பண்ணி, இருநூறு ரூபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்ந்ததும், அக்காவைப் பெண் பார்க்க வந்த பையன்களுக்கு லல்லுவின் இளமையும், அதைவிட அவள் சம்பாத்தியமும் பெரிசாகத் தோன்றியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

லல்லுவுக்கு இப்போது ஒண்ணரை வயசில் ஒரு பெண்; வயிற்றில் நாலு மாசம்.

அதற்கப்புறம்தான் அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் சலித்துப் போயிருக்க வேண்டும்-இவளோடு ஆயுசுபர்யந்தம் லோல்பட வேண்டுமா என்று அலுத்துப் போயிருக்க வேண்டும்.

பேச்சு, பார்வை, கவனம் எல்லாவற்றிலும் அவர்களுக்கு இவளிடம் ஒரு நிஷித்தம் வந்தது அதற்கப்புறம்தானோ?

இதற்கு ஏற்ற மாதிரி வந்த ஓரிரு வரன்களும் பெண்ணுக்கு வயசாயிடுத்தே’ என்றார்கள்.

“பெண் பார்வைக்கு ரொம்ப வயசானவளா தெரியறா…” –என்றார்கள்.

“பணம் காசுக்குக்கூட நாங்க பார்க்கலை; எங்க பையனுக்கு ஏத்த ஜோடியாக இருக்க வேண்டாமா! அக்கா, தம்பி மாதிரி இருந்தா எப்படி?” என்றார்கள்.

என்னமோ லொட்டு லொசுக்கு காரணங்கள்.

நன்றாய் இருந்த காலத்தில் பணம் பிரதானமாய் இருந்தது. அப்போது உருவத்தைப் பார்க்காமல் இப்போது உற்று உற்றுப் பார்த்து கருப்பு, மோட்டு நெற்றி, குழி விழுந்த கன்னம்என்றால்?

ஸரஸு எதற்கும் எதுவும் இன்றுவரை சொன்னவளில்லை. மனசுக்குள் கசந்து போனதும் இல்லை.

எனக்கென்று ஒருவன் பிறக்காமலா இருப்பான்! வேளை வரவில்லை. வந்தால் எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விடும்!

அந்த மீனாக்ஷி என்ன வாழ்ந்தாள்? கழுத்தே இல்லாதபடி பருமன். எட்டாவதுதான் படிப்பு. அவளுக்கே போன வருஷம் கல்யாணம் நடக்கவில்லையா?

அந்த ருக்கு? அப்புறம் அந்த நீலா?

வரும்-எனக்கும் காலம் வரும். யாரும் எதிர்பார்க்காதபோது இளவரசன் மாதிரி ஒருத்தன் குதிப்பான்.

ஹா! அழகில் என்னடியம்மா இருக்கிறது? இல்லை பணத்தில்தான் என்ன இருக்கிறது! குணம். அது அல்லவா முக்கியம்? உன் காரியமும், உன் அடக்கமும் யாருக்கு வரும் என்பான். மாலா, லல்லு பொறாமைப்படுகிற மாதிரி என்னை வைத்துக்கொள்வான்.

“என்னடீ ஜன்னலண்ட உட்கார்ந்து, யோஜனை? கூப்பிடறது காதுல விழலையா? மணி ஆச்சு-எழுந்து வந்து காய்கறியை நறுக்கு; கடலை மாவை திட்டமா கரைச்சு வை. சொஜ்ஜியைக் கிளறிட்டு மூஞ்சி அலம்பிக்கப் போ…எந்திருடீ…’”

அம்மா இப்போதெல்லாம் ரொம்ப சமயல்கட்டு காரியங்களில் பட்டுக்கொள்வதில்லை.

எல்லாம் ஸரஸுதான்.

அது, நாள் கிழமையாகட்டும், இல்லை இவளைப் பெண் பார்க்கும் படலம் ஆகட்டும், எல்லாம் இவள்தான்.

ஸரஸு எழுந்து உள்ளே போனாள். பஜ்ஜி, சொஜ்ஜியைப் பண்ணி மூடி வைத்து காபிக்கு டிகாஷனையும் போட்டுவிட்டு கிணற்றடிக்கு முகம் அலம்பப் போனபோது மணி நாலரை என்றது.

வரப்போகிற நபரைப்பற்றி கனவு கண்டுகொண்டே தலை வாரி, பௌடர் பூசி, பொட்டிட்டு, நைலான் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள்.

வாசலில் குரல்கள் கேட்டன.

பத்து நிமிஷத்தில் அம்மா உள்ளே வந்து டிபன், காபி எடுத்து வரச் சொல்ல, ஸரஸு சொன்னபடி செய்தாள்.

டிபன் தட்டை பாயில் அமர்ந்திருந்த நபரிடம் நீட்டியபோது முதலில் அவள் கண்களில் பட்டது அர்த்தசந்திர வடிவமாய் இருந்த அந்த வழுக்கைதான்.

ஓ! வயசானவரா?

மாமூலாய் பழக்கம் ஆகிவிட்ட தினுசில் நமஸ்கரித்து எழுந்தவள் கண்களை நிமிர்த்தி எதிரில் அமர்ந்திருந்தவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

இத்தனை வயசானவரை எதிர்பார்க்காததால் ஒரு கணம் மனசு அடிபட்டுச் சிலிர்த்தது.

ஐம்பது இருக்குமா? அல்லது அதற்கும் மேலேயா?

மேலேதானாம். உள்ளே பின்னோடு வந்த அம்மா மெல்ல கிசுகிசுத்தாள்.

“அம்பத்தி அஞ்சு வயசானா என்ன? மனுஷன் ஜிங்குனு சிறுசாதான் இருக்கார்…”

ஸரஸு பதில் சொல்லாமல் சுவரில் சாய்ந்து ஒரு பக்கமாய் உட்கார்ந்தாள்.

அரைமணி போல வந்தவர்களோடு அப்பாவும், அம்மாவும் பேசினார்கள். ஆறுபவுனில் தாலிச் சரடு, திருநீர்மலையில் கல்யாணம், என்று இங்கும் அங்குமாய் வார்த்தைகள் காதில் விழுந்தன.

அப்புறம் அப்பா உள்ளே வந்தார். பின்னால் அம்மா. இரண்டு பேர் முகங்களிலும் இத்தனை வருஷங்களாய் ஸரஸு காணாத பரபரப்பு.

ஸரஸுவின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.

அம்மா மெதுவாய்ப் பேசினாள். கூடத்தில் உட்கார்ந்திருப் பவர்களுக்குக் கேட்டுவிடக்கூடாதே, என்ற பதைப்போடு பேசினாள்.

“அவருக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்காம், ஸரஸு. ‘உங்க பொண்ணுக்கு சம்மதம்னா இப்பவே பாக்கு வெத்தலை மாத்திக்கலாம்’னு சொல்றார். ரெண்டாம் கல்யாணம்னா என்ன தப்பு? அந்தக் காலத்துலே இதெல்லாம் சகஜம்….கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா உனக்கே நிலமை புரியும்…”

இப்போது அப்பா தொடர்ந்தார்.

“நல்லவேளையா சின்னக் குழந்தைகள் யாரும் இல்ல… பெண் கல்யாணமாகி புக்ககத்துக்குப் போயிட்டாளாம்…பையன் வடக்கே வேலையாயிருக்கான்…வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுண்டு அக்கடானு கிடக்கலாம். தெய்வமா பார்த்துதான் அவரை இங்க கொண்டுவந்து விட்டிருக்கு….காலணா செலவு இல்லாம பத்து நாளில் கோவில்லே வைச்சு கல்யாணம் பண்ணிக்கிறேங்கறார்… வந்து…வந்து, உன் வயசையும், நாங்க இத்தனை வருஷமா படற கஷ்டத்தையும் நீ இப்போ நினைச்சுப் பார்க்கணும்.”

வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற தவிப்புடன் பேசும் அப்பா.

‘தெம்பு இருக்கறப்போ காசி, ராமேஸ்வரம் போவோம்னா முடியலை. தஞ்சாவூர்லே பெண் வா வானு கூப்பிடறா, காவேரிலே குளிச்சுண்டு பத்து நாள் அவாத்திலே போய் இருப்பம்னா முடியலை…இந்தப் பொண்ணுதான் எங்களுக்கு ப்ராரப்த கடனாயிட்டாளே….இவளை விட்டுட்டு எங்க போறது?’

சமீப காலமாய், வருவோர், போவோரிடமெல்லாம் சொல்லி புலம்பத் தொடங்கி இருக்கும் அம்மா…

இருந்தாலும்? இருந்தாலும்? ஐம்பத்தைந்து வயசு கிழவரையா? பேரன் பேத்திகூட இருக்குமோ?

வாய்க்கு ருசியாய் சமைத்துப் போட என்றால், ஒரு சமயக்காரிதான் இவருக்குத் தேவையா? மனைவி வேண்டாமா?

சட்டென்று என்னமோ உள்ளுக்குள் உடைந்து போன உணர்வு, வேதனை. அப்பா அம்மாவை மாறிமாறிப் பார்த்தாள்.

“ரெண்டாம் கல்யாணம்னா என்ன தப்புமா? அவர்கிட்ட எந்தக் குறையும் இருக்கறதா எனக்குத் தெரியலை. எனக்கு சம்மதம்னு சொல்லிடுங்கோ” என்றவள் கண்களைக் கீறிக் கொண்டு எழுந்த நீரை மிகுந்த பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு புன்னகைக்க முயற்சித்தாள்.

- குங்குமம், 1980 

தொடர்புடைய சிறுகதைகள்
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் ...
மேலும் கதையை படிக்க...
அன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான். தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் ...
மேலும் கதையை படிக்க...
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கமாகக் காணப்படும் சந்தடி. ஜன நடமாட்டம் இன்றி அதிசயமாய் அமைதியாய் இருந்தது. வெயிலைப் பொருட்படுத்தாமல் வாசப்படியில் அமர்ந்து தெருவை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்துக்கு அலுப்புத் தட்டியது. எழுந்து உள்ளே போகலாமா என்று நினைத்த நொடியில் ஒன்றின்பின் ஒன்றாகத் தெருக்கோடியில் ...
மேலும் கதையை படிக்க...
"ஏன் விசாலம், இன்னிக்குமா சாம்பார் பண்ணலை?” “பண்ணலை ...” “அதான் தெரியறதே, ஏன்னு கேட்டா?” “தொவரம்பருப்பு என்ன வெலை விக்கறது தெரியுமா? எட்டு ரூபா அறுபது பைசா! இந்த லட்சணத்துல தோட்டத்துல காய்ச்சுக் கொட்டற மாதிரி தெனமும் பருப்பு அள்ளிப் போட்டு சாம்பாரா ...
மேலும் கதையை படிக்க...
அனுராதா ஒவ்வொரு செடியிடமும் நின்று குனிந்து பார்த்தாள். ரோஜா பூச்சி விழுந்து காணப்பட்டது. மல்லிச் செடிகள் நுனி கருகி இருந்தன. புல் காய்ந்து போயிருந்தது. க்ரோடன்ஸும், அரளியும் தலை தொங்கி வாடியிருந்தன. அம்மா இருந்தால் தோட்டம் இப்படியா இருக்கும்? பணக்கார வீட்டுக் குழந்தைகள் மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
சுத்தம்
வைராக்கியம்
விழிப்பு
கடைசியில்
ஸ்டெப்னி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)