சோட்டு

 

உறக்கம் விலகி விழித்தேன். அருகே கடிகாரம் ஆயிரத்து நூற்றுப்பதினொன்று என்றது. அலாரம் வைத்த, கைக்கடக்கமான டிஜிடல் கடிகாரம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்! கெமிஸ்ட்ரிக்கு பதில் எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்கலாம்.. ஹ்ம்ம். தொடர்ந்து யாரோ கதவைத் தட்டுவது கேட்கக் கலைந்தேன். விலகிப் படுத்திருந்த மனைவியை எழுப்பினேன். “மைத்லீ… யாரோ கதவைத் தட்டறா.. போய்ப்பாரு”.

தூங்கியிருப்பாள் என்று நினைத்தவன், ஏமாந்தேன். பெண் சிறுத்தை போல் சீறினாள். “நல்லா இருக்கே? நான் போய் கதவைத் தொறக்கணுமா? அதுவும் அர்த்த ராத்திரிலே.. யாராவது பொட்டுல ஒண்ணு வெச்சா என்னாறது?”

“ஏண்டீ… நான் போய் கதவைத் தொறந்து என் பொட்டுல ஒண்ணு வச்சா பரவாயில்லையா? அப்றம் நாறிப்போய்டுவேள்டீ..”

“இப்ப மட்டும் என்ன கிழியறது..? மதுராந்தகத்துல ஒண்ணரை ஏக்கரா நெலத்தோட அழகாப் பண்ணை வீட்டை விட்டுட்டு இங்க ரெண்டு ரூம் வீட்டுல படி ஏறி எறங்கி நாறாம என்ன நடக்கறதாம்?”

“ஏன்? பம்பாய் வாசம் நாறதா? எங்கியோ அத்துவானத்துல வரட்டி தட்டிண்டிருந்துட்டு.. அதுதான் அசல் நாத்தம்..”

“நிறுத்துங்கோ.. இது மட்டும் அத்வானமில்லையாக்கும்.. இருந்து இருந்து ஒரு மாதர் சங்கத்துல சேந்தா அதுக்கு போக விடலை நீங்க.. அப்றம் பம்பாய் என்ன வேண்டிக்கிடக்கு?”

அவள் கோபம் எனக்கு நன்றாகப் புரிந்தது. மாலை மாதர் சங்க மீடிங் போக வேண்டாமென்று தடுத்துவிட்டேன். இன்னும் பத்து நாளைக்கு எந்தப் பேச்செடுத்தாலும் மாதர் சங்கத்தை இணைத்து முரண்டு பிடிப்பாள். பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஏதோ கூத்தடிக்கிறார்கள். கதவு தட்டப்படுவதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தேன். ஒரு ஆர்க்யூமென்ட் என்றால் அதை ஜவ்வாக இழுத்து முடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கவேண்டும். பிராமணத் தம்பதிகளின் குணச்சித்திரம். “மைத்லீ.. சாயந்திரம் அணுசக்தி அலாட்மென்ட் ஆர்டர் வரலையேனு போய்ப் பாக்கறது முக்கியமில்லையா? இந்த மாதர் சங்க மீடிங் விட்டா அடுத்த மாதர் சங்க மீடிங் ரெண்டே நாள்ல வரப்போறது…”

கதவை வேகமாகத் தட்டினார்கள். பிக்ரம் என்றால் இந்நேரம் குரல் கொடுத்திருப்பான். அல்லது கதவைப் பெயர்த்தெடுத்திருப்பான். யார் தட்டுகிறார்கள்? மைதிலி தொடர்ந்தாள்.

“.. க்கும்..ஒண்ணரை வருஷத்துல அலாட் ஆயிடும்னேள்.. இங்க வந்து ரெண்டு வருஷமாய்டுத்து.. இப்ப இன்னும் ஒண்ணரை வருஷம்ங்கறேள்.. நன்னா நாறித்தான் கெடக்கு எல்லாம்.. அந்த மகாலிங்கத்துக்கு மட்டும் வந்து நாலே மாசத்துல அலாட் ஆயிடுத்து. பன்னெண்டு வயசுல பொண்ணு நமக்கு.. நாளைக்கே பெரியவளாப் போறா.. இங்கே தூரம்னு உக்காரக் கூட இடமில்லை. ஒண்டிக்கட்டை மகாலிங்கத்துக்கு எப்டி அலாட் ஆச்சுனு கேட்டேளா? இல்லியே..அதுக்கெல்லாம் தைரியம் வேணும்..”

“மகாலிங்கத்துக்கு எப்டி அலாட் ஆச்சுனு தெரிஞ்சுண்டு என்னடி பண்றது? கதவைத் தட்ட்றான் பார்.. ப்லீஸ்.. போய்ப் பாருடி மைத்.. ஆர்க்யூமென்டை வந்து வச்சுக்கலாம்”

“இப்டித் தட்றானே?.. பிக்ரம் எங்க போனான்? ஏதாவது ஜிந்தாபாத் போஸ்டர் ஒட்டப் போயிருப்பான் கடங்காரன்.. தட்டற தட்டல்ல கொழந்தை முழிச்சுண்டுறப் போறா..நீங்களே போய்க் கதவைத் தெறங்கோ..யாருனு பாருங்கோ.. யாரா இருந்தாலும் ‘இது பொம்னாட்டிகள் இருக்குற வீடு, போய்ட்டு வா’னு சொல்லிட்டு வாங்கோ.. யாராவது ராப்பிச்சையா இருக்கும்.. மாடியேறி வந்திருக்கு பாருங்கோ..”

“என்னால எழுந்துக்க முடியலே மைத்லீ.. சாய்ந்தரம் பத்து கிலோ அரிசியை மாடிக்கு எடுத்துண்டு வந்ததுல முதுகு பிடிச்சுண்டு.. தட்டற தட்டுல முழிச்சுக்கறாளோ இல்லியோ, உன் கத்தல்ல முழிச்சுக்கப் போறா… மைத்லீ.. சித்த போய் பாரேன்..”

“நான் அப்பவே முழிச்சுண்டாச்சு.. நீங்க ரெண்டு பேர் ஆர்க்யூ பண்றதைக் கேட்டுண்டிருந்தேன்.. ஐ டோன்ட் வான்ட் டு கெட் மாரீட்பா” என்று மூலைப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் வித்யா.

“இந்தாத்துல எல்லாத்தையும் நானே கவனிக்க வேண்டியிருக்கு..” என்றபடி எழுந்த மைதிலி, வித்யாவை அதட்டினாள். “இந்தாடி.. தஸ்சுபுஸ்சு.. படுறி.. காத்தால ஸ்கூலுக்குப் போகணும்”.

என் மனைவியின் தைரியம் எனக்கு இல்லை. மனதுக்குள் அவளுக்கு நன்றி சொல்லியபடி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். கதவைத் திறக்கும் ஒலி கேட்டது. நொடிகளில் கதவை இழுத்து மூடும் ஒலி. தொடர்ந்து மைதிலியின் அலறல்.

முதுகு வலியை மறந்து அடித்துப் பிடித்து எழுந்து ஓடினேன். எனக்கு முன்னால் என் மகள் வித்யா ஓடினாள். “என்னாச்சும்மா?”.

மைதிலி வெலவெலத்து நின்றிருந்தாள். அவள் எதிரே ஒரு சிறுவன்.

“யாருடீ இது?”

“அந்த பிக்ரம்.. இந்தப் பையனோட.. வெளில நின்னுண்டிருந்தான். கதவைத் தொறந்ததும் இதை உள்ளே தள்ளிட்டு.. ‘மூச்!’னு ஜாடை காட்டிட்டு.. அவனே கதவைச் சாத்திண்டு கீழே ஓடிட்டான்”

“யாரிவன்? எதுக்கு நம்மாத்துல..”

“கேள்வி என்ன வேண்டிக்கிடக்கு… மொதல்ல இதை வெளில தள்ளி கதவைச் சாத்துங்கோ சொல்றேன்…” என்றாள்.

அவள் சுட்டிய ‘இதை’ இன்னொரு முறை பார்த்தேன். ஏழு வயதிருக்கலாம். அரை நிஜார் போட்டிருந்தான். முழங்கால் அருகே காயங்கள். சட்டைக்குப் பதில் துண்டு போர்த்தியிருந்தான். செக்கச்செவேலென்று நிறம். கன்னத்தில் சூடு காயம் போல் தெரிந்தது. பெரிய கண்கள். சுருள் சுருளாய் தலைமுடி.

“அம்மா.. பாவமா இருக்குமா.. அனாதையா இருக்கும்” என்றாள் வித்யா.

“உள்ளே போடி தடிச்செருக்கி.. போய்ப் படுறி” என்று ஆத்திரத்தை மகள் மீது செலுத்தினாள் மைதிலி.

“எக்தம் ஜங்க்லி ஹை” என்று முணுத்தபடி என்னருகே ஒட்டிக்கொண்டாள் வித்யா.

அந்தச் சிறுவன் எங்களையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய கண்களில் சிறியக் கண்ணீர்த்துளிகள். பசியும் பயமும் முகத்தில் தெரிந்தது.

“நீ உள்ளே போய்ப் படு வித்யா.. அம்மா சொல்றதக் கேளு” என்று நான் சொல்லவும், வெளியே கூச்சல் கேட்டது. அவசரமாக ஜன்னலுக்குச் சென்றோம். பிக்ரம் யாருடனோ கத்திப் பேசிக்கொண்டிருந்தான். பெங்காலி மராத்தி கச்சடா இந்தி என்று இருவரின் சச்சரவும் கேட்டது. மெள்ள மற்ற வீடுகளின் வெளிச்சம் கீழே பரவத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஒரு பெண்ணுருவம் கீழே தெரிந்தது. பூரணி விஸ்வேஸ்வரன். செம்பூர் மாதர் சங்கக் காரியதரிசி. எந்த ஆணும் கீழே இறங்கி வரவில்லை. என்னைப் போலவே ஜன்னலோரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பூரணியும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டது போல் தெரிந்தது. சிறிது நேரத்தில் அமைதியானது. பிக்ரமுடன் இருந்த ஆள் வெளியேறினான். பிக்ரமும் பூரணியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு இருவரும் எங்கள் பிளாட் படிகளை நோக்கி வந்தனர்.

பிக்ரம் எங்கள் ஜட்டி நகருக்கும் அணுசக்தி காலனிக்கும் பொதுவான வாச்மேன். எங்களுக்கு முன்னாலிருந்து அவன் வாச்மேனாக இருக்கிறான். முப்பது வயது கூட இருக்காது. நல்ல உயரம், உடல்வாகு. பிஏ படித்த வேலையில்லா பட்டதாரி என்பார்கள். சிலர் ஹைஸ்கூல் என்பார்கள். வாச்மேன் வேலையை அவனாகவே வலிய எடுத்துக்கொண்டதாகச் சொல்வார்கள். இந்தி, மராட்டி, பெங்காலி, ஆங்கிலம் என்று சரளமாகப் பேசுவான். அணுசக்தி காலனி அலாட்மென்டை எதிர்பார்த்து, சென்ற ஐந்து வருடங்களில் இங்கே வந்து சேர்ந்த என் போன்றத் தமிழர்களிடமிருந்து தமிழ் கற்றுக் கொண்டுவிட்டான். என்னடி ராக்கம்மா பாட்டை, என் கண்ணு மூக்கு பல்லு நாக்கு என்று பார்ட் பார்டாகப் பிரித்துப் பாடுமளவுக்கு ஞானம் வந்துவிட்டது. அத்தனை பேரையும் தெரியும். பூரணி சில நேரம் பிரா போடுவதில்லை என்று என்னிடம் ரகசியமாகச் சொல்லிச் சிரிப்பான். ஒருவேளை மைதிலியையும் கவனிக்கிறானோ என்று தோன்றும். பிள்ளைகளுடன் கால்பந்து க்ரிகெட் விளையாடுவான். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செம்பூர் காரியதரிசி. அவ்வப்போது காணாமல் போய்விடுவான். இரண்டு நாள் பொறுத்துத் திரும்பி வருவான். சில சமயம் காலனியின் வீடுகளில் இந்திரா காங்கிரசை எதிர்த்து நோட்டீஸ் வழங்குவான். அவனுடைய அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காவிட்டாலும் அவனுடைய உள்ளூர்ச் செல்வாக்கும் பாதுகாப்பும் எங்களுக்குத் தேவைப்பட்டது.

கதவைத் தட்டாமலே திறந்தேன். பூரணியும் பிக்ரமும் உள்ளே வந்தார்கள். தொடர்ந்து மணிகண்டன், முரளி, முரளியின் அப்பா, தங்கத்துரை, தங்கத்துரையின் மாமனார், ஜேம்ஸ், விஸ்வேஸ்வரன், வேல்முருகன், சாய்ராம் என்று அக்கம்பக்க பிளாட்களிலிருந்து தம்பதிகளோடு வந்தார்கள்.

எல்லோரும் சிறுவனைப் பார்த்தார்கள்.

சில நிமிடங்கள் பொறுத்து, பிக்ரம் பேசினான். மைதிலிக்கு நன்றி சொன்னான். “சோட்டு ஸே மிலியே” என்றான். சிறுவனை அருகில் இழுத்துக் கொண்டான். “இன்னிலந்து இவன் இங்கே இருப்பான். நீங்க எல்லாரும் இவனுக்கு சாப்பாடு டிரஸ் கொடுக்கணும்” என்றான் சர்வ சாதாரணமாக.

வேல்முருகனுக்குக் கோபம் வந்து விட்டது. “யாருப்பா இந்தப் பையன்? என்னவோ நீ பாட்டுக்கு சொந்தம் கொண்டாடுற? எங்களையும் இழுத்து விடுறே? நாங்க ஏன் இந்தப் பிள்ளைக்கு சோறாக்கணும்? துணி கொடுக்கணும்? நல்லா தூங்கிட்டிருந்தவங்களை எழுப்பி என்ன கதையடிச்சிட்டிருக்கே?”

பூரணி மறித்துப் பேசினார். “இந்தப் பையன் பிக்ரமோட அக்கா பையனாம்”

“அதனால?” என்றார் திருமதி மணிகண்டன்.

“ஜி.. இந்தப் பையனோட அப்பா அம்மா ரெண்டு பேரும் க்ளோஸ். சூய்சைட் செஞ்சுகிட்டாங்கோ. பாவம் இந்தப் பிள்ளையை நான் எடுத்துட்டு வந்தேன். என் கிட்டே அவ்ளோ வசதியில்லே. அதான் நீங்க எல்லாரும் உதவி செய்யணும்.. நான் உங்களுக்கு எக்ஸ்ட்ரா வேலை எதுனா செய்றேன். மெகர்பானி” என்றான் பிக்ரம்.

“வேறே வேலையில்லே? யார் பெத்த பிள்ளையோ? இருக்கறவங்களுக்கே இடத்தைக் காணோம். இதுல ஊர்ப்பிள்ளைங்களுக்கு ஊஞ்சல் பலகையா?” என்றாள் மைதிலி. வித்யா என்னை இடித்தாள். “இஸ்கோ சுப் கரோ” என்றாள் மென்மையாக.

பிக்ரம் அந்தச் சிறுவனை மையமாக நிறுத்தினான். “ப்லீஸ்.. லுக் அட் ஹிம். யூ லேர்னட் பீபில். உங்க வாழ்க்கைல நீங்க எல்லாம் நல்லா மேலே வந்தீங்க.. இவன் என்ன பாவம் செஞ்சான் யோசனை பாருங்கோ. நாம எல்லாம் இவனை வளத்தாவணும். அப்னா ஜிம்மேதாரி ஹை.. சஹி ராஸ்தா ஹை”

சோட்டு எங்களைப் பார்க்காமல் அறையைச் சுற்றிப் பார்த்தான். பிறகு என்ன தோன்றியதோ, வித்யாவின் அருகே நின்று கொண்டான். வித்யாவைப் பார்த்துப் புன்னகைத்தான். மைதிலி சடாரென்று வித்யாவை இழுத்துக் கொண்டாள். சோட்டு புரியாமல் விழித்தான்.

“போலீஸ்ல சொல்லி அனாதை ஆசிரமத்துல சேத்துடலாமே?” என்றார் ஜேம்ஸ்.

“அது தான் சரி. இதுல தலையிடறது மே நாட் பி லீகலி ரைட்” என்றேன்.

“யார் அந்த ஆளு? உன் கூட சண்டை போட்டானே? ஒரு வேளை அவன் சொந்தமோ என்னவோ.. அவன் கிட்டே விடுறது தானே?” என்றார் தங்கத்துரை.

“அந்த ஆளு இந்தப் பையனோட சித்தப்பாவாம்” என்றார் பூரணி.

“அவருக்குத்தான் உரிமை இருக்கு. நாம யாரு குறுக்கே வர? பையனை உடனே அவங்க சித்தப்பா கிட்டே சேத்துருங்க” என்றார் மணிகண்டன்.

“ஐ டெல் யூ வாட். நாங்கள்ளாம் ஆளுக்கு பத்து ரூவா கொடுக்கறோம். நான் நூறு ரூவா தனியா குடுக்கறேன். பிக்ரம், இந்தப் பையனைக் கூட்டிட்டு அவங்க சித்தப்பா கிட்டே விட்டுரு. பணத்தையும் கொடுத்துரு. தட்ஸ் இட், திஸ் சைல்ட் இஸ் நாட் அவர் ரெஸ்பான்சிபிலிடி” என்றார் சாய்ராம்.

பிக்ரம் குறுக்கிட்டான். “நான் இந்தப் பையனோட மாமா. எனக்கும் ரைட்ஸ் இருக்குதே? அந்த சித்தப்பா கிட்டே பையனைக் கொடுத்தா ரெண்டே நாளிலே தாராவிலே வித்துருவான். பையனை கண்ணு அந்தாவாக்கி பிச்சை எடுக்க வச்சுருவான் மாதாசோத்..” என்று சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். “வெரி சாரி” என்றான். “இந்தப் பையன் கொஞ்ச நாள் சர்வைவ் பண்ண உதவி செய்யுங்க. ஹீ நீட்ஸ் பேமிலி. நீங்க எல்லாரும் நல்ல குடும்பத்துல வந்தவங்க. உங்க குடும்பத்துல ஒருத்தனா இவனை நினைக்க வேண்டாம். ஜஸ்ட் என் ஆர்பன்.. அனாத்.. அப்படி நெனச்சு முடிஞ்சப்ப சாப்பாடும் பழைய துணியும் குடுங்க போதும்.. ஆப்கே பேர் பகட்தா மை.. இல்லாட்டி இவனை ரொம்போ கொடுமை படுத்துவாங்க.. பிச்சை எடுக்க வைப்பாங்க.. சாலா மர் பீ ஜாயேகா” என்று சோட்டுவை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“நோ.. நோ.. திஸ் இஸ் நாட் ரைட்” என்றார் ஜேம்ஸ்.

“இந்தப் பையன் என்ன ஜாதியோ? வீட்டு சாமியுள்ளுக்குள்ள வருவான்..” என்றார் முரளியின் அப்பா. “நாங்கள்ளாம் ஆசாரம் பாக்குறவா”.

“அப்பா, பேசாம இரு!” என்று அடக்கினார் முரளி.

“இல்லைடா. இப்படி எடத்தைக் கொடுத்துத்தான் பாரு.. இப்ப மடமே இவா கூட்டமா போயிடுத்து. சாப்பாடு போட்டா போறது.. எத்தனையோ பிச்சை போடலியா.. அதுக்காக இருக்க எடம் கொடுத்து துணி கொடுத்து.. வேண்டாத வேலை” என்று அவர் தொடர்ந்தார். முரளி முறைத்து நெளிந்தார்.

“அவங்கவங்க தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கணும்” என்று ஒவ்வொருவரும் ஏதோ சொல்லத் தொடங்கினார்கள்.

“வேண்டாத வம்பை விலைக்கு வாங்குறாப்புல ஆயிடும்”.. “நமக்கென்ன தலையெழுத்து”.. “இந்தப் பிள்ளைக்கு ஏதாவது வியாதி இருக்குமோ?”.. “நாம யாருங்க இந்தப் பிள்ளையோட விதியைத் தீர்மானிக்க?”.. “இதுக்கெல்லாம் அரசாங்க செலவுல அனாதை ஆசிரமம் இருக்குங்க”.. “இதெல்லாம் முடியாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்கோ”

ஒரு நிமிடம் சில நிமிடங்களானது. யாரும் எதுவும் சொல்லவில்லை. பிக்ரம் சிறுவனை இழுத்துக்கொண்டு, “சோட்டு.. ஆவ்” என்றான்.

பூரணி அவனைத் தடுத்தார். “பிக்ரம். உன்னோட வேகமும் மனசும் எங்களுக்குப் புரியுது. அவசரப்பட்டு யாரும் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இதென்ன நாய்க்குட்டி பூனைக்குட்டியா? எ ஹ்யூமன் சைல்ட்.. திஸ் இஸ் மோர் சீரியஸ். ஒரு வாரம் யோசிப்போம். அதுவரைக்கும் எங்க வீட்டுல இருக்கட்டும். ஒரு வாரம் கழிச்சு… இப் தேர் ஆர் நோ இஷ்யூஸ்.. வீ வில் டிசைட்… ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு.. இப்போ எல்லோரும் போய்ப் படுங்க” என்றார்.

மைதிலி திடீரென்று, “இன்னிக்கு ராத்திரி எங்க வீட்லயே இருக்கட்டும்.. வந்தாச்சு.. இப்ப சின்னக் கொழந்தையை வெளில எப்படி தள்றது?” என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. வித்யாவின் பார்வையில் திடீரென்று பெருமை தெரிந்தது. மைதிலியின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“வெரி குட் மைதிலி. செடில்ட். நாளைலந்து எங்க வீட்ல இருக்கட்டும்” என்று மைதிலியைத் தட்டிக் கொடுத்து வெளியேறியப் பூரணியைத் தொடர்ந்து ஒவ்வொருவராக வெளியேறினர். கடைசியில் பிக்ரம் மைதிலியையும் என்னையும் கும்பிட்டான். “ஆப் லோக் இஸ்கோ துபாரா ஜனம் தியே.. பகுத் பகுத் ஷுக்ரியா” என்றான்.

சோட்டுவுக்கு என்னுடைய பழைய சட்டை ஒன்றைக் கொடுத்தேன். பாய் தலையணை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் வித்யா. படுத்ததும் தூங்கி விட்டான் சோட்டு.

நாங்கள் ஏதோ வளர்ப்புப் பிராணியைப் பார்ப்பது போல் அவனை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். “தி பெஸ்ட் டே ஆப் மை லைப்” என்ற வித்யா மைதிலியைக் கட்டிக் கொண்டாள். “அம்மா.. நீ ஜங்க்லி மாதிரி பேசினாலும் உள்ளுக்குள்ள ரொம்ப சாப்ட்.. ஐ லவ் யூமா” என்றாள். எனக்குத் தூக்கம் வந்தது. மறுபடி படுத்தபோது மூன்று மணிக்கு மேலாகியிருந்தது.

அந்த இரவைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகி விட்டன.

எனக்கு இன்னும் அணுசக்தியில் அலாட் ஆகவில்லை. வேறெங்கெங்கோ கொடுத்தார்கள். வித்யாவின் ஹைஸ்கூல் காலேஜ் பொருட்டு கிடைத்த மாற்றல்களை நிராகரித்து விட்டேன். போன ஜூனில் எமர்ஜென்சி வந்ததிலிருந்து அரசாங்க வேலைகளில் நிறைய சுறுசுறுப்பு வந்திருந்தது. இருபதம்சத் திட்டத்தின் கீழ் என்னென்னவோ மாற்றங்கள் கொண்டு வந்தார்கள். இன்னும் ஒன்றரை வருடங்களில் நிச்சயம் அணுசக்தியிலேயே அலாட் ஆகிவிடும் என்றார்கள். ஊழல் இருக்காது என்றார்கள்.

சோட்டு எங்கள் காலனியில் ஒருவனாகி விட்டான். பிக்ரமின் ஷெட்டில் தங்கிக் கொண்டான். எங்கள் வீடுகளில் எடுபிடி வேலை செய்தான். எங்களுடன் பேசிப் பழகி தமிழ் கற்றுக் கொண்டுவிட்டான். காய்கறி வாங்குவது, பேப்பர் கொண்டு வருவது, பிக்ரம் இல்லாத நேரங்களில் பால் வாங்கி வருவது, பிள்ளைகளுடன் விளையாடுவது என்று மினி பிக்ரமாகி விட்டான். கிடைக்கும் சில ரூபாய்களை மைதிலியிடம் கொண்டு வந்து கொடுப்பான். சஞ்சயிகா பிஞ்சயிகா என்று ஏதோ திட்டத்தில் சேர்த்து அவன் காசை சேமிக்கச் சொல்லிக் கொடுத்தாள்.

எமர்ஜென்சி வந்த நாளிலிருந்து பிக்ரம் அடிக்கடி ஜெயிலுக்குப் போகத் தொடங்கினான். காங்கிரசின் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடுகிறேன் பேர்வழி என்று என்னென்னவோ செய்தான். சில நாட்கள் உடல் முழுதும் ரத்தக் காயத்தோடு வருவான். அடிக்கடி எங்கள் காலனிக்குப் போலீஸ் வரத்தொடங்கியதும் நாங்கள் எல்லாம் பிக்ரமை சற்று அடக்கி வாசிக்கச் சொன்னோம்.

வித்யா கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அவள் அடிக்கடி பிக்ரமுடன் பேசுவதைக் கண்டிப்பதால் மைதிலிக்கும் அவளுக்கும் சண்டை வந்து விடும். இதைச் செய்யாதே.. அதைச் செய்யாதே.. லிப்ஸ்டிக் போடாதே.. ஸ்லீவ்லெஸ் போடாதே.. ராஜேஷுடன் என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.. அப்படி இப்படியென்று தினம் ஏதாவது சண்டை போடுவார்கள். வீட்டை விட்டு ஓடிப்போவதாக வித்யா பயமுறுத்துவாள். படிப்பை நிறுத்திவிடுவதாக மைதிலி பயமுறுத்துவாள். நான் மைதிலியுடன் விவாதம் செய்த நேரம் போக, காலையில் மாதுருடன் பஸ் பிடிப்பதில் கவனமாக இருந்தேன்.

சாயந்திரம் சினிமா போகலாமென்று சொல்லியிருந்ததால் சீக்கிரமே கிளம்பி வந்தேன். இன்னும் வித்யா வரவில்லை.

“நாலு மணிக்கெல்லாம் வந்துடுவாளே?”

“உங்க பொண்தானே? அணுசக்திக் காலனி ராஜேஷோட சிரிச்சுண்டிருப்பா.. அவ படிப்பை நிறுத்துங்கோனா கேக்க மாட்டேங்கறேள்”

“எதுக்கெடுத்தாலும் படிப்பை நிறுத்துனு சொல்லாதே மைதிலி.. பெண் குழந்தைகள் படிச்சாதான் நல்லது… நீயே நல்லா படிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிண்டுச் சித்திரவதைப் படுவியா சொல்லு..”

“போறும் போறும்.. வழியறது..”

“சோட்டு.. சோட்டூ… அப்னி வித்யா தேகா க்யா?” என்றேன்

“இல்லே” என்றான் சுருக்கமான தமிழில். வித்தியாசமாகப் பட்டது. எப்போதும் காலேஜ் வரை தேடிப்பார்க்கிறேன் என்று சைக்கிளில் உடனே கிளம்பிவிடுவான்.

“பிக்ரம் கஹான்?”

“எங்கயோ போயிருக்கான்” என்றான்.

“தெருக்கோடி வரைக்கும் போய் பாருப்பா.. வித்யா அந்த ராஜேஷோட பேசிண்டிருந்தா வரச்சொல்றியா?” என்றாள் மைதிலி.

“சரி” என்று குறுக்கு வழியில் அணுசக்தி காலனிக்குள் ஓடினான் சோட்டு.

ஏழு மணியாகியும் வித்யா வரவில்லை. மெள்ள விசாரித்ததில் தங்கத்துரையின் பெண்ணும் ஹைஸ்கூல் முடிந்து வீடு வந்து சேரவில்லை. அணுசக்தி காலனியில் இரண்டு பெண்களைக் காணோம்.

போலீசில் புகார் கொடுத்துவிட்டு வந்தோம். செம்பூர் போலீஸில் புகார் எழுதிக் கொண்டு சாதாரணமாக, “ஆப் லோக் ஜாயியே” என்றார்கள்.

மைதிலி ஒரு வாளி நிறைய தண்ணீரில் இலுப்பைக் கரண்டியைப் போட்டு வைத்தாள். அழுது கொண்டே இருந்தாள்.

எனக்கு எலும்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. எங்கே என் பெண்? எங்கே என் பெண்? கற்பனை கன்னா பின்னாவென்று ஓடி இன்னும் கலக்கியது.

நள்ளிரவில் தூக்கம் வராமல் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன். சோட்டு தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் ஒதுங்கினான். “சோட்டு” என்றேன். “என் பெண்ணைப் பாத்தியாப்பா?” என்றேன். என் கண்களின் கண்ணீரை அவன் கவனிக்குமுன் துடைத்துக் கொண்டேன்.

நாலடி நடந்திருப்பேன். சோட்டு என்னைத் தொடர்ந்து வந்து, “சாப்” என்றான்.

“என்னப்பா?”

“ஜி” என்று என் காலில் விழுந்தான்.

விழித்தேன். “என்ன சோட்டு?”

“ஜி… பிக்ரம் பதல் கயா.. நல்ல ஆளில்லே இப்போ” என்றான்.

“என்னப்பா சொல்றே? இதுக்கும் வித்யாவுக்கும்…”

“அவங்க எங்க இருக்காங்கனு ஒரு ஐடியா இருக்கு.. இப்பவே வந்தீங்கன்னா பசா சக்தே”

என் வயிறு உள்ளுக்குள் வெடித்துச் சிதறியது. “என்னடா சொல்றே?” என்று அவனை அறைந்தேன். “உனக்குத் தெரியுமா? போலீஸ் போகலாம் வா”

“போலீஸ் போனீங்கனா இன்னும் மோசமாயிடும்” என்றான். “சப் லோக் ஹை இஸ் மே.. என்னை நம்புங்க” என்றான்.

இடிந்து உட்கார்ந்தேன்.

சற்று நேரத்தில் தங்கத்துரை, ஜேம்ஸ், அணுசக்தி காலனி ஆட்கள், மனைவிமார் என்று கூடினோம். எல்லோரும் சோட்டுவை ஆளுக்கொரு அறை கொடுத்தார்கள். “தெரிஞ்சுகிட்டு எங்களை ஏமாத்தியிருக்கே பொறுக்கி”.. “எங்க உப்பைத் தின்னுட்டு எங்களுக்கே துரோகம் செஞ்சிருக்கியே?”

சோட்டு அழுதான். “சாப்.. எனக்கு நிச்சயமா எதுவும் தெரியாது. இப்பத்தான் பிக்ரம் சாசா பெட்டில பணம் பாத்தப்போ கொஞ்சம் புரிஞ்சுகிட்டேன். அனாதையான எனக்கு இருக்க எடம் கொடுத்து, அன்பு காட்டின உங்களுக்கு துரோகம் செய்வேனா? ஒவ்வொருத்தருக்கு ஒரு அப்பா-அம்மா.. முஜே இத்நே மா பாப். நீங்க என்னை உங்க பிள்ளையா நினைக்காவிட்டாலும் நான் உங்களை என் பெற்றோர்களா நெனச்சுத்தான் வளந்தேன்… ப்லீஸ் என்னை அடிக்காதீங்க..”

“சொல்லு சோட்டு.. எங்க இருக்காங்க எப்படி கூட்டிட்டு வரது? ஏன் போலீஸ்ல சொல்லக்கூடாதுனு சொல்றே?” என்றார் பூரணி.

“எனக்கு ஒரு சந்தேகம் தான்.. ஒரு.. நாலஞ்சு இடம் போய் பாக்கலாம்.. அங்க இருந்தாங்கனா கூட்டிட்டு வந்துரலாம்..” என்றான் சோட்டு.

“வாங்க.. நாம பையன் சொல்ற இடத்துல போய் பாக்கலாம்.. எப்படி இருந்தாலும் பிறகு போலீசுக்கும் போயிடுவோம்” என்றார் ஜேம்ஸ்.

“உடனே போங்கோ”

சோட்டு சைக்கிளில் விரைந்தான். நிமிடங்களில் ஒரு அம்பேசடருடன் வந்தான். “சலியே” என்றான் டிரைவர். சோட்டுவுடன் நானும் தங்கத்துரையும் ஜேம்சும் ஏறிக்கொண்டோம். “வேண்டாம்.. ஜகா நஹி.. ஏக் சாப் பஸ் ஹை” என்றான் சோட்டு. எனக்குச் சற்று அச்சமாக இருந்தது. தங்கத்துரையைப் போகச் சொல்ல நினைத்தேன். என் பெண் என்ற எண்ணம் மேலோங்கி அச்சத்தைக் கரைத்தது. ஜேம்ஸ் மட்டும் இறங்கிக் கொண்டார்.

பூனே சாலையில் அரை மணி போல் பயணம் செய்தோம். சட்டென்று விலகி ஏதோ சந்தில் திரும்பியது வண்டி. சந்தோஷிமா க்ளினிக் என்ற கட்டிடத்தைத் தாண்டிச் சென்று நின்றது. டிரைவர் வண்டியை நிறுத்தி சோட்டுவுக்கு சைகை காட்டினான். சோட்டுவும் நாங்களும் இறங்கிக் கொண்டோம். சந்தோஷிமா க்ளினிக் கதவைப் பலமாகத் தட்டினோம். ஒரு கிழவி கதவைத் திறக்க, அவளைத் தள்ளிவிட்டு சோடு உள்ளே ஓடினான். நாங்களும் அவன் பின்னே ஓடினோம். இரண்டு அறைகள் தாண்டி, சாத்தியிருந்த அறைக்கதவைத் திறந்தான். யாரும் இல்லை.

மூன்று நாட்கள் இப்படிப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான் சோட்டு. ஒவ்வொரு இடத்திலும் ஏமாந்த வெறியில் அவனை வழியெல்லாம் அடித்தோம். தங்கத்துரை அவனை அடித்து அடித்து ஓய்ந்து போனார். சோட்டு டிரைவருடன் அடுத்த இடத்திற்குச் செல்வதிலேயே குறியாக இருந்தான்.

ஆறாம் நாள் ஏமாற்றத்துடன் சுற்றிவிட்டுத் திரும்ப எண்ணினோம். இதற்குள் தங்கத்துரையும் நானும் சோட்டுவைப் பம்மி எடுத்துவிட்டோம். போலீசில் தகவல் கொடுப்பது என்று முடிவெடுத்தோம். வீட்டுக்குப் போன் செய்து சொன்னபோது, போலீசில் ஜேம்ஸ் துணையுடன் ஏற்கனவே தகவல் கொடுத்ததாகச் சொன்னாள் மைதிலி.

சோட்டு டிரைவரிடம் ஏதோ சொல்ல, மறுபடி சந்தோஷிமா க்ளினிக் வந்தோம். சோட்டு வேகமாக ஓடினான். பின்புறம் வழியாக உள்ளே குதித்தான். சில நொடிகளில் வாசல் கதவைத் திறந்தான். எங்களை வேகமாக இழுத்துக்கொண்டு ஓடினான். உள்ளே முன் பார்த்த அறையில் என் பெண் வித்யா சோர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளருகே தங்கத்துரையின் பெண். மற்ற இளவயது ஆண் பெண்கள்.

வீட்டுக்கு வந்தபோது விடிந்து விட்டது. மைதிலி வித்யாவைக் கட்டிக்கொண்டு விலகவேயில்லை. “அம்மா” என்று தொடர்ந்து விசும்பிக் கொண்டே இருந்தாள் வித்யா.

காலையில் பிக்ரம் வந்தான். பெண்களைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டான். அவனை நாங்கள் முற்றுகையிட்டுப் போலீசில் சொல்வதாகச் சொன்னோம். ஜேம்ஸ் அதற்குள் செம்பூர் இன்ஸ்பெக்டரை அழைத்து வரப்போனார். “இவனை விடாதீங்க”.

சற்று நேரம் அமைதியாக இருந்த பிக்ரம், “என்னை மன்னிச்சிருங்க” என்றான். “போலீஸ்லே என்னை அடிச்சு ரொம்பத் துன்புறுத்திட்டாங்க. வலுக்கட்டாயமா கர்ப்பத்தடை செய்ய ஆள் சேத்துக் கொடுக்கச் சொன்னாங்க..ஒரு ஆளுக்கு இருநூறு ரூபாய்.. நை தோ என்னை மிசாலே பர்மனென்டா தள்ளி சித்ரவதை செய்றதா.. என் உயிருக்கு பயந்து பால் மாறினேன். அரசியல் கட்சி சண்டையில் என் வாழ்க்கை நாசமாயிடுச்சு.. ஆள் பிடிச்சுக் கொடுக்கறாப்ல நடந்துகிட்டு நானே அவங்களை நாளைக்குக் கொண்டு வரதா இருந்தேன்.. நீங்க முதல் தடவை வந்தப்பவும் அங்க தான் இருந்தாங்க.. ஒரு வேளை யாராவது வருவாங்கனு நெனச்சு பக்கத்து ரூமுல அடைச்சு வச்சிருந்தாங்க.. ஆப் ஸப் மதராசி லோக்.. உங்களுக்கு ஆதரவா இங்க யாரும் வரமாட்டாங்க.. உங்க ஆளுங்களே ஒதுங்கிப் போயிடுவாங்கனு ஒரு தைரியத்துல.. ஐசா கியா.. மாகி கசம் உங்க பிள்ளைகளுக்கு வேறே கெடுதல் செய்ய எண்ணவில்லை… சோட்டு, வா போகலாம்” என்றான்.

சோட்டுவின் உடலெங்கும் வீங்கியிருந்தது. தங்கத்துரை அவனை செருப்பால் அடித்து விளாசியிருந்ததில் முகத்தில் அங்கங்கே ரத்தக்கறை. பிக்ரமைப் பார்த்தான். “என்னால் இவர்களை விட்டு வரமுடியாது” என்றான். “பிக்ரம் சாசா.. உன்னைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது. உனக்கு விழுந்திருக்க வேண்டிய இத்தனை அடிகளை நான் வாங்கிக் கொண்டதில் என்னுடைய நன்றிக் கடன் தீர்ந்தது. நீ ஏன் மனம் மாறினாய் என்பது முக்கியமில்லை. இனி ஒரு கணம் கூட உன்னை இந்தக் கட்டிடத்தில் அனுமதிக்கப் போவதில்லை. வெளியே போ. இனி இந்தப் பக்கம் வராதே, வந்தால் நானே உன்னைக் கொன்றுவிடுவேன்” என்றான்.

பிக்ரம் மௌனமாக வெளியேறினான்.

தங்கத்துரையும் நானும் சோட்டுவிடம் மன்னிப்பு கேட்டோம்.

“உனக்கு இவர்கள் இருந்த இடம் எப்படித் தெரியும்?” என்றார் ஜேம்ஸ். பதிலுக்கு சோட்டு பார்த்தப் பார்வையில் சோகம் பரிதாபம் வலி வருத்தம் எல்லாம் கலந்திருந்தது.

எத்தனை வற்புறுத்தியும் எங்கள் காலனியில் தங்க மறுத்துவிட்டான் சோட்டு. “உங்க அடிகளுக்காகவும் ஏச்சுக்காகவும் நான் வருத்தப்படவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்தவங்க நீங்கதான். அதைத் திரும்ப எடுக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கு. ஆதரவு கொடுத்தீங்க, அதனால அடிச்சு உதைச்சீங்க ஜைசா சம்ஜியே.. டீக் ஹை ..லேகின்.. இந்தத் தவறு ஏற்பட ஒருவகையில் நான் காரணம் என்பது என்னை உறுத்திக்கிட்டே இருக்கும். மறுபடியும் நான் உங்க வீட்டுக்குள்ள வந்தா என் மனசாட்சி என்னை ரொம்பத் துன்புறுத்தும்” என்ற சோட்டு, எங்கள் வீடுகளுக்குள் வருவதை நிறுத்திக் கொண்டான். நாங்கள் கொடுத்தப் பணம் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. திடீரென்று மூன்றாம் நாள் காணாமல் போனான்.

ஆறு மாதங்களில் நடந்ததை எல்லாம் அனேகமாக மறந்துவிட்டோம். வழியில் சிக்கியவற்றைச் சேர்த்துக்கொண்டுக் கிடைத்தப் பாதையில் ஓடும் நதியைப் போல, ஒரு சில மாற்றங்களுடன் வாழ்க்கை தொடர்ந்தது.

பெண் கிடைத்ததில் மைதிலிக்கு நிம்மதி. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வழக்கம் போல் வித்யாவை அதட்டினாள். ஆனால் படிப்பை நிறுத்துவதாகச் சொல்லவில்லை.

வித்யா வழக்கம் போல் கல்லூரிக்குப் போனாள். மைதிலியுடன் சண்டை போடவில்லை. சோட்டுவின் சிறிய புகைப்படத்தை தன் அறையுள் சட்டம் போட்டு மாட்டி வைத்தாள்.

டாக்டருக்கு நிறையச் செலவானது.

முரளியின் அப்பா தன்னுடைய சொத்தையெல்லாம் அனாதைகளுக்கு எழுதி வைத்ததாகச் சொன்னார்.

தங்கத்துரை வேலையை விட்டு சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் போனார்.

நானும் மைதிலியும் எதற்கெடுத்தாலும் விவாதம் செய்வதை நிறுத்தினோம்.

எனக்கு அணுசக்தி காலனியில் அலாட்மென்ட் உத்தரவு வர இன்னும் ஒன்றரை வருடமாகும் என்று மறுபடி சொன்னார்கள்.

என்றைக்காவது சோட்டு திரும்பி வருவான் என்று மட்டும் அடிக்கடித் தோன்றியது.

- 2011/11/12 

தொடர்புடைய சிறுகதைகள்
ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு ...
மேலும் கதையை படிக்க...
சாதாரண நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத உருக்கொண்டு, பேரழிவுக் காரணிகளாவதைக் கவனித்திருக்கிறேன். சோம்பலா.. திமிரா.. தனக்குத் தெரியாததில்லை என்ற ஆணவமா.. முட்டாள்தனமா.. அல்லது உறைந்திருக்கும் பிறவிக் குணமா... ஏதோ ஒன்று கண்ணைக் கட்டிவிடுகிறது. ரகு. என் வட்டத்துக்கு வெளியே என்றாலும், சற்று நெருங்கிய நண்பர் ...
மேலும் கதையை படிக்க...
கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத நண்பன் ஸ்ரீரங்கன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்ந்தான். கரிய நிறம். களையான முகம். சம்மர் கட் என்று அந்த நாளில் ...
மேலும் கதையை படிக்க...
மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா. ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் ...
மேலும் கதையை படிக்க...
பம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா 'நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி' என்று தனக்குத் தானே தலைமை மேஸ்திரி சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டு தினம் வெயில் வீணாகாமல் மேற்பார்வைக்குப் போய்விடுவார். நெருங்கிய நண்பன் ஸ்ரீதரின் அம்மா ...
மேலும் கதையை படிக்க...
திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் - ஒரு அறிமுகம்: [+] பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக் கூட்டமில்லை. வெனிஸ் அறையில் பதினைந்து பேர் இருக்கலாம். வழக்கமாக வரும் சாமி நாதன், சாய் பிரபு, நெடுமாறன். அருகில் புதிதாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பூமியின் சுற்றுப்பாதையில் சேர்ந்த உடனேயே அத்தனை பூமித் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பியிருந்தார்கள். "நாங்கள் கிடிழின் வாசிகள். பூமியிலிருந்து மூவாயிரம் ஒளிவருடங்கள் கடந்து புது கிடிழின் கோளிலிருந்து வருகிறோம். நாங்கள் நல்லெண்ணத்தோடு வருகிறோம். எங்களைப் போரில் வெல்ல முடியாது. முயற்சி செய்யாதீர்கள். மறுபடியும் ...
மேலும் கதையை படிக்க...
'what now?' என்றவனை வெறியோடு பார்த்தேன். என் வீட்டில் என் கண்ணெதிரே என் மனைவியை அம்மணமாகப் புணர்ந்துவிட்டு, என்னிடமே 'வாட் நௌ?' என்னும் இந்தப் புறம்போக்குச் சொறிநாயை வெட்டிப் போடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேனே? ஏற்கனவே அவன் முகத்தில் இஸ்திரிப் பெட்டி எறிந்து ...
மேலும் கதையை படிக்க...
குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை மென்றபடி ஓட்டுனர் நடத்துனர் போல் நின்று கொண்டிருந்தவர்களிடம், "கோவிந்தபுரத்துல நிறுத்துவீங்களா?" என்றேன். "ஏளி க்காழுங்க, வன்" என்றார் ஒருவர். வெற்றிலைச்சாறு ...
மேலும் கதையை படிக்க...
"அரிகாதொ". வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான். "மடா இகிமாசு". திரும்பி வருவதாகச் சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
ஸ்மரண யாத்ரை
ஊனம்
மன விலங்கு
அதர்மு மாமா
பாலுவின் கோடை
காசிருந்தால் கல்யாணம்
மானிட சேவை
நிம்மதி
தூண்டில்
கோமதீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)