சொல்லவா கதை சொல்லவா?

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,416 
 

அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர் கூறியவற்றை, அந்த ஆலோசனைகளை, உலக மக்கள் போற்றபடவேண்டிய நல்ல அறிவுரைகள் என நம் முன்னோர்கள் நமக்குப் போதித்ததில்லை. அறிவுரைகளைப் பலரும் கொடுத்தவண்ணமே இருப்பார்கள். அது மிகவும் சுலபம், அறிவுரைகளை கடைபிடிப்பதே சிரமம். அறிவுரை கொடுப்பவர்களே அதைக் கடைபிடிக்க மறந்தும் விடுவார்கள். “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”, என்கிறது திருக்குறள். அனைத்து அறிவுரைகளுமே மறுக்கமுடியாத (கசப்பான) உண்மைகள். அவை மருத்துக்கு சமம். அதனால் அறிவுரைகளை மருந்தை தேனில் குழைத்துக் கொடுப்பதுபோல் கொடுக்கவேண்டும்.

– பேசும்பொழுது எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக, எல்லோரையும் திருப்தி படுத்தும் விதமாகப் பேசமுடியாது என்பது ஒரு அடிப்படை விதியினைப் போன்றது. எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல், பொதுவாக பேசும் சொற்கள் என நாம் நினைப்பவைகூட எதிர்பாராதவிதமாக ஒரு சிலருக்கு மனவருத்தத்தைக் கொடுத்துவிடக்கூடும்.
– ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ ஒரு முடிவுக்கு நாம் வரக்கூடாது.
– எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர்களிடம் உண்மையை மறைக்கக் கூடாது.

இப்படிப் பல அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அவை என்றும் நினைவில் நிற்பதுபோல் சொல்வது எப்படி? ஒரு உதாரணத்துடன் சொன்னால் நினைவில் தங்கும். பெரும்பாலும் நன்னெறிகள் நமக்கு கதைகளின் வழியே போதிக்கப்படும், தேனில் குழைத்துக் கொடுக்கும் மருந்து போல. அதன் காரணம் அறிவுரைகளைவிட கதைகள் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். நம் நாடு கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்த நாடு. வளரும்பொழுது தன் தாய் சொன்ன கதைகளைக் கேட்டவர்கள் மகாத்மாக்களாக, மாவீரர்களாக உருவெடுத்த வரலாற்றை நாமும் சிறுவயதிலேயே படித்திருக்கிறோம்.

பாட்டி வடை சுட்ட கதையில் ஆரம்பித்து நம் அனைவருக்கும் சிறுவயதில் படித்த அல்லது கேட்ட எத்தனையோ கதைகளில் ஒரு சில கதைகள் மற்ற கதைகளைவிடவும் மிகவும் பிடித்துவிடும். இன்றுவரை நினைவில் பசுமையாக இருக்கும். அதை நம் குழந்தைகளிடம், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வதும் வழக்கம். அதுபோல நான் படித்த சிறுவயது கதைகளில் எனக்கு பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்.

சோவியத் ரஷ்யாவின் பதிப்பகம் வெளியிட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒன்றின் தலைப்பு “மறைந்த தந்தி”. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையின் புத்தகம், சாம்பல் வண்ண அட்டையில் பச்சை வண்ணப் பைன் மரங்களும், பொழியும் வெள்ளைப் பனியும் படமாக சித்தரிக்கப்பட்டு உள்ளேயும் பல சித்திரங்களுடன் இருக்கும். மாஸ்கோவில் தன் தாயுடன் வசித்த “சுக்” “கெக்” என்ற இரு சிறுவர்களைப் பற்றிய கதை இது. என் பள்ளி நூலகத்தில் இருந்து படிப்பதற்காக நான் கொண்டுவந்த இந்தக் கதைப்புத்தகம் என் தம்பிக்கும் தங்கைக்கும் மிகவும் பிடித்துவிட்டது. சிலநாட்கள் கழித்து ஊருக்கு வந்த சோவியத் ரஷ்யா புத்தகக் கண்காட்சியில் அந்த புத்தகமும் இருந்ததது. அம்மாவிடம் கேட்டு வாங்கிகொண்டு வந்துவிட்டேன். எத்தனையோ முறை திரும்ப திரும்ப படித்து ஒரு காலத்தில் எனக்கும் என் தம்பி தங்கைக்கும் கதையின் வரிகள்கூட மனப்பாடமாகிவிட்டது. வீட்டிற்கு சென்றால் புத்தக அலமாரியில் தேடி மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறந்துவிடுகிறேன். கதையின் சாரத்தை என் நினைவிலிருந்து கீழே கொடுத்துள்ளேன்.

“மறைந்த தந்தி”

மாஸ்கோவில் வசிக்கும் ஒரு சிறு குடும்பம், அதில் உள்ளவர்கள் சிறுவர்கள் சுக், கெக் மற்றும் இவர்களின் பெற்றோர்கள். அப்பா சைபீரியாக் காட்டில், பனிப் பிரதேசத்தில், தொலை தூரத்தில் உள்ள ஊருக்கு ஏதோ ஒரு வேலை காரணமாகப் போய் விடுவார். வரும் கிறிஸ்த்மஸ்கு அப்பாவைப் போய் பார்த்து அவருடன் கொண்டாடலாம் என்று திட்டம் போடுவார்கள். அம்மா சிறுவர்களை வீட்டில் விட்டுவிட்டு ரயில் பயணச் சீட்டு வாங்க சென்றுவிடுவாள். சிறுவர்கள் அம்மாவுக்கு சற்றும் பிடிக்காத சண்டையில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். அப்பொழுது வீட்டிற்கு தபால் வரும். அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு மீண்டு சண்டையைத் தொடர்வார்கள். ஒருவர் பொருளை ஒருவர் ஜன்னல் வழியே வீசியெறிய, வந்த தந்தியும் வெளியே பனிக்குவியலில் விழுந்து காணமல் போய்விடும்.

சிறுவர்கள் எவ்வளவு தேடியும் தந்தி கிடைக்காது. பயம் பிடித்துக்கொள்ள அம்மாவிடம் என்ன சொல்வது என யோசிப்பார்கள். உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்கும் என்பதால் உண்மையைச் சொல்லவேண்டாம் என்று முடிவெடுப்பார்கள். அம்மாவிடம் பொய்யும் சொல்லக்கூடாதே. அதனால் அம்மா வீட்டிற்கு வந்ததும் இன்று கடிதம் ஏதும் வந்ததா என்று கேட்டால் சொல்லலாம், கேட்காவிட்டால் பேசாமல் இருந்துவிடலாம் என்று முடிவுக்கு வருவார்கள். அப்படி செய்வது பொய் சொல்வதாகாது என்பது அவர்கள் எண்ணம். பயணச்சீட்டுடன், மேலே உள்ள சால்வையில் உள்ள பனித்துளிகளை நீக்கியவாறு வீட்டின் உள்ளே வரும் அம்மா, குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக அமைதியாய் இருப்பதைப் பார்த்தும், கணவருடன் கிறிஸ்த்மஸ் கொண்டாடட்டும் உற்சாகத்திலும் ஏதும் கேட்கமாட்டாள்.

பயணநாளில் புறப்பட்டு, நெடுந்தூரம் ரயிலில் பயணம் செய்து, ஆள் அரவமற்ற, அத்துவானக் காட்டில் எங்கும் பனியைத்தவிர வேறு எதுவும் இல்லாத அப்பாவின் ஊருக்கு வந்து சேருவார்கள். அப்பாவின் இருப்பிடத்தில் யாரும் இல்லாமல் அந்த இடத்தின் காவல்காரர் மட்டுமே இருப்பார். இவர்களைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக ஏன் வந்தீர்கள், இங்கு யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா என்பார். அந்த ஆள் முரட்டு சுபாவத்துடன், சரியான கோபக்கார முசுடான ஆள்.

அம்மாவோ அவர் சொல்வது ஒன்றும் புரியாமல் விழிப்பாள். அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஏதோ திடீர் மாற்றம் வந்து மேலும் தொலைவான ஒரு ஊருக்கு போய்விட நேர்ந்திருக்கும். அதனால், திட்டம் மாறிவிட்டது, நீங்கள் கிறிஸ்த்மஸ்க்கு வரவேண்டாம் என அப்பா கடிதம் எழுதி காவல்காரரிடம் கொடுத்து தபாலில் சேர்க்க சொல்லியிருப்பார். காவல்காரர் அம்மாவிடம், நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லப்பட்ட கடிதத்தை நான்தான் தபாலில் சேர்த்தேன் உங்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் வந்தீர்கள், எதற்காக வந்தீர்கள் என அதட்டுவார்.

அம்மாவிற்கு உண்மை புரிய வெகு நேரம் ஆகாது. “ஏண்டா, படுபாவிகளா என்னடா செய்தீர்கள் அந்தக் கடிதத்தை?” என்று சிறுவர்களைப் பார்த்து கத்துவாள். பையன்கள் வெட்கமிலாமல் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, கோள் சொல்லி அழுவார்கள். யாருக்கும் என்ன செய்வது எனப் புரியாது. திரும்பிப் போவதும் நடக்கும் காரியமில்லை. காவல்காரர் அழும் இரு சிறுவர்களையும் நோட்டமிடுவார். இந்த புஸு புஸுவென இருக்கும் பையன் அவன் அப்பாவின் சாயலில் இருக்கிறான் என்பார். இதைக் கேட்ட இரு சிறுவர்களுமே வருத்தப் படுவார்கள். ஒருவன் தன்னை புஸு புஸுவென குண்டாக இருப்பதாக சொன்னதற்கு வருந்துவான், மற்றொருவன் தனக்கு அப்பாவின் சாயல் இல்லை என்று சொன்னதற்காக வருந்துவான்.

காவல்காரர் தன் வீட்டில் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு, உங்களால் முடிந்தவரை காலத்தை ஓட்டுங்கள், உங்களுக்குப் பணிவிடை செய்ய எனக்கு நேரமுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, குளிரிலும், பனியிலும் அவர்கள் மூவரையும் தனியே தவிக்க விட்டுவிட்டு தன் பனிச்சறுக்கு வண்டியில் கிளம்பிப் போய்விடுவார். அம்மாவும் பிள்ளைகளும் தனிமையில் கிறிஸ்த்மஸ் கொண்டாடுவார்கள். புத்தாண்டு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் வெளியில் ஒரே சத்தமாக, கூச்சலும் குழப்பமுமாக இருக்கும். அம்மாவும் பிள்ளைகளும் வெளியில் ஓடிப்போய்ப் பார்த்தால் காவல்காரரும், அப்பாவும், அவர் தோழர்களும் பனிச்சறுக்கு வண்டியில் வருவார்கள்.

முசுடான காவல்காரர்தான் அந்தக் கடுமையான பனிப்பொழிவில் அவ்வளவு தூரம் பயணம் செய்து, அப்பாவிடம் போய் நடந்ததைக் கூறி, அவரையும் அவர் குழுவினரையும் கையோடு அழைத்து வந்திருப்பார். ஆனால், இப்பொழுது வந்த பிறகோ அவர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டை அம்மாவும் பிள்ளைகளும் களேபரம் செய்துவிட்டார்கள் எனக் கோபத்துடன் முணுமுணுத்த வண்ணம் இருப்பார். அந்தக் கோபக்கார முசுடர் தனக்காக செய்த உதவியை நினைத்து அம்மா கண்களில் நன்றியுடனும், கண்ணீருடனும் அவரை அணைத்துக் கொள்வாள்.

சிறுவர்கள் இருவரும் அப்பாவின் ஆளுக்கொரு காலாக ஏறி, அவர் தோளில் தொங்கியவாறு உற்சாகத்துடன் விளையாடுவார்கள். அன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கும் பொழுது மாஸ்கோவின் தேவாலய மணியோசையை வானொலியில் ஒலிபரப்புவதைக் கேட்டவாறு அனைவரும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.

(Thanks to Mr.Vasanth Kumar for sending the pictures from the book)

Print Friendly, PDF & Email

5 thoughts on “சொல்லவா கதை சொல்லவா?

  1. I have one, bought it when I was young at new century Book house stall at Thoothukudi. Bought it for Rs.1.50ps

  2. சார் இந்த மறைந்த தந்தி அப்பா எனக்கு அறிமுகப் படுத்திய புத்தகம் என் பால்யத்தில் நான் விரும்பி படித்த புத்தகம் அப்பா எனக்கு வாங்கி தந்த புத்தகம் சமீபத்தில் தொலைந்து விட்டது தயவுசெய்து எனக்கு இந்த புத்தகம் கிடைக்குமா

  3. இந்தப் பதிவுக்காக மிக்க நன்றி! “மறைந்த தந்தி” என் சிறு வயதில் என் அம்மா எனக்கு வாங்கித்தந்து நான் மிகவும் விரும்பி வாசித்த ஒரு கதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தை பல ஆண்டுகளாகத் தேடிவருகிறேன். கிடைக்கவில்லை! இணையத்தில் தேடியபோது உங்கள் பதிவைக் கண்டேன்.

    நாம் சிறு வயதில் வாசித்து மகிழ்ந்த கதையை, வாசித்து மகிழ்ந்த இன்னொருவரை அறிவதும் சந்திப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

    வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *