சொத்தா? உயிரா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,047 
 

“பணம் சம்பாதிக்கறதுக்கு துப்பில்லை” சண்டை போட்டு விட்டு வெளியூரில் இருக்கும் அம்மா வீட்டிற்கு போயிருந்த மனைவி பத்து நிமிடத்தில் பேருந்தில் வந்து இறங்கப்போகிறாள். அவளை கூட்டி போவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் தியாகு. அவனும்தான் என்ன செய்வான் “சாண் ஏறினால் முழம் சறுக்குது” என்கிற கதைதான். மில்லுக்கு வேலைக்கு போய் சம்பாதித்து வண்டி எப்படியோ ஓடிக்கொண்டிருக்கிறது.அவள் அம்மா வீட்டிற்கு போயிருப்பது கூட கொஞ்சம் பணம் மாமனாரிடம் கடன் கேட்பதற்குத்தான்..கவலையுடன் பேருந்துக்காக காத்திருந்தான் தியாகு !

நல்லா பார்த்துக்குங்க இவன்தான், இவனை முடிச்சுடணும்,போலீசுக்கு போகாம,புரியுதா? காருக்குள் பாபுலால் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்தவாறு பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த இருவரிடம் தியாகுவை காண்பித்து கொண்டிருந்தான்.

கொஞ்சம் தள்ளி போய் காரை நிறுத்துங்க. பின்னால் இருந்தவன் சொன்னான். பாபுலால் கொஞ்சம் தள்ளி காரை கொண்டு போய் நிறுத்தினான். பின் சீட்டில் இருந்தவன் கதவை திறந்து இறங்கி திரும்பி நடந்து வந்து நின்று கொண்டிருந்த தியாகுவிடம் பழனி போற பஸ் இங்க நிக்குங்களா? கேட்டான்.

இங்க நிக்காதுங்க, பஸ் ஸ்டாண்ட் பக்கம் போயிட்டீங்கன்னா அங்க நிக்கும்.அக்கறயாய் சொன்னான் தியாகு.

தேங்க் யூ” சொல்லிவிட்டு நடந்து சென்று காருக்குள் நுழைந்தவாறு நல்லா பாத்துட்டேன் எப்ப வெச்சுக்கலாம்? என்று கேட்டான்.

இரண்டு நாள் பொறுங்க, நான் வெளியூருக்கு போயிடறேன். நீங்க அவனை கை வைக்கும்போது நான் இங்க இருந்தேன்னா என்னையத்தான் சந்தேகப்படுவாங்க. புரியுதா? சரி என்று சொன்னவர்கள் எங்களை ரவுண்டானாவுல இறக்கி விடுங்க. கார் அங்கிருந்து வேகம் பிடித்தது.

தன்னை தாக்குவதற்கு அடையாளம் காண்பதற்குத்தான் அவன் மணி கேட்டான் என்பதை அறியாத தியாகு அவன் திரும்பி போவதை பார்த்தவன் காருக்குள் ஏறும்போது பின் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் கீழே விழுவதை பார்த்தான். சார்..சார்..கூப்பிட கூப்பிட கார் அங்கிருந்து கிளம்பி விட்டது. தியாகுவுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. ஓடிப்போய் அந்த பர்ஸை எடுத்து உள்ளே திறந்து பார்த்தான்.அதில் பணம் கத்தையாய் இருந்ததை பார்த்து திடுக்கிட்டான். முன் புறம் கை விட்டு அட்ரஸ் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க காலியாய் இருந்தது. சரி காத்திருப்போம், எப்படியும் தேடி வருவார்கள், இல்லை என்றால் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்தவன் மனைவியை மட்டுமில்லாமல், அந்த பர்ஸுக்குரியவனுக்காகவும் எதிர்பார்த்து காத்திருந்தான்.

ரவுண்டானாவில் இறங்கிய இறங்கிய இருவரும் போக்குவரத்து நெரிசலை கடந்து எதிர் புறம் சென்றவர்கள், வேகமாக நடந்தனர். சற்று தூரம் நடந்து முதல் சந்தை அடுத்து வந்த இடது புற சந்துக்குள் நுழைந்தனர்.. போக்குவரத்து பாதையிலிருந்து நன்கு உள்ளே இருந்தாலும் சந்து போகப்போக அகலமாய் இரு புறமும் பங்களாங்கள் வரிசையாய் இருந்தன. இவர்கள் இரு புறங்களை பார்ப்பதை தவிர்த்து வேக வேகமாக நடந்தனர்.பத்து நிமிட நடைக்கு பின் மற்ற பங்களாக்களை விட சற்று நிறம் மங்கிய பங்களா வாசல்,”வரதாச்சாரி வக்கீல்” என்ற பித்தளை போர்டு போட்டிருந்த கேட்டை திறந்து உள்ளே வந்தனர். வாசலிலேயே ஒரு பெரியவர் இவர்களை எதிர்பார்த்து காத்திருப்பது போல் உட்கார்ந்து இருந்தார்.

பெரியவர் போன காரியம் என்னாச்சு?,

ஒரு ஆளை காண்பிச்சு அடிச்சு போட சொல்லியிருக்கான், நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.அடையாளமும் பாத்து வச்சுட்டோம் இப்ப என்ன பண்ணறது?

எப்ப இந்த காரியத்தை செய்ய சொல்லியிருக்கான்?

இரண்டு நாள்ல வெளியூருக்கு போன பின்னாடி பாத்துக்குங்க அப்படீன்னு சொல்லியிருக்கான்.

எப்ப வெளியூர் போறாங்கற செய்தி உங்களுக்கு வந்த உடனே நீங்க அவன் வீட்டுக்குள்ள புகுந்துடுங்க.

அந்த ஆளோட சம்சாரம் குழந்தைங்க?

கவலைப்படாதே அவங்களையும் வெளியூருல இருந்தேன்னு காட்டறதுக்கு கூடவே கூட்டி போயிடுவான்.

எனக்கு ஒண்ணும் புரியலீங்க..இவன் ஒரு ஆளை அடிச்சு போட சொல்றான், நீங்க என்னடான்னா அவனோட வீட்டுக்குள்ள புகுந்து பத்திரத்தை எடுத்து வர சொல்றீங்க..

இப்ப உனக்கு புரியாது, அந்த பத்திரத்தை எடுத்துட்டு வந்திட்டயின்னா அப்புறம் புரியும்.

அவன் அடையாளம் காட்டின ஆளை என்ன பண்ணனும்?

முதல்ல பத்திரம் கைக்கு வரட்டும்,அவனை அப்பறம் பாத்துக்கலாம்.

சரி நாங்க கிளம்பறோம், திரும்பியவர்களை கொஞ்சம் இருங்க காப்பி சாப்பிட்டு போலாம். அவர் குரல் கொடுக்க வேலைக்காரப்பெண் டிரேயில் காப்பியை கொண்டு வந்து கொடுத்தாள். மூவரும் அமைதியாய் அதை பருகினர்.

திரும்பி கொஞ்ச தூரம் வந்த பின்தான் இருவரில் ஒருவன் தன் பின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு பார்த்தான். பர்ஸ் காணவில்லை என்றவுடன் பதட்டப்பட்டான். குமார் பாக்கெட்டுல வச்சிருந்த பர்சை காணோம், எங்கியோ விழுந்திடுச்சு,

எங்க விழுந்திருக்கும்னு யோசி ?

இப்ப நாம் போய்ட்டு வந்தவரைக்கும் விழுகறதுக்கு வாய்ப்பு இல்லை..ம்..ம்ம். பத்து நிமிடங்கள் நின்ற இடத்திலேயே யோசித்தான்.

கரெக்ட், நான் காரை விட்டு இறங்கி அந்த ஆளுகிட்டே மணி கேக்க போகும் போதுதான் விழுந்திருக்கணும், வா அங்க போய் பாக்கலாம்.

இந்நேரம் வரைக்கும் அது அங்க இருக்கும்ணு நினைக்கிறே?

முயற்சி பண்ணுவோம், கிட்டத்தட்ட பதினைஞ்சு நோட்டு அதுல வச்சிருந்தேன். பாபுலால் கொடுத்த பணத்தை அதுலதான் திணிச்சு வச்சிருந்தேன். ஒரு ஆட்டோ புடி..

இவர்கள் ஆட்டோவில் இறங்கி அரக்க பறக்க தேடிக்கொண்டிருந்த பொழுது ஹலோ..சார்..குரல் கேட்டு திரும்பினர். தியாகு நின்று கொண்டிருந்தான். சட்டென்று ஞாபகம் வரவில்லை, அடடா, நாம் இரண்டு நாளில் இவனை அடித்து போட வேண்டிய ஆளாயிற்றே? மனதுக்குள் சிந்தனை ஓட,…

என்ன சார் பர்சை காணோமுன்னு தேடறீங்களா? இந்தாங்க உங்க பர்ஸ், எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க, இதுக்கோசரம் இரண்டு மணி நேரமா காத்து கிட்டு இருக்கேன். எப்படியும் நீங்க தேடி வருவீங்கன்னு. பாவம் சம்சாரம் பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு தனியா போயிடுச்சு, நீங்க தேடி வந்தா பர்ஸை கொடுத்துட்டு வாங்கன்னு.யதார்த்தமாய் சொல்லிக்கொண்டே போனான்.

இருவருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது. இப்படியும் ஒருவனா?அவ்வளவு பணத்தை பார்த்தவர்கள் சத்தமில்லாமல் பர்சை எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள். அவன் முன்னால் எண்ணி பார்க்க கூச்சப்பட்டு அப்படியே பேண்ட்டுக்குள் மீண்டும் சொருக முயற்சித்தான். பாத்து பத்திரமா வச்சுங்குங்க..நான் வர்றேன், நடந்தான்.

இருவரும் திகைத்து நின்று கொண்டிருந்தனர். இவனையா இரண்டு நாட்களில் முடிக்கப்போகிறோம்?

இரண்டாம் நாள் இருவருக்கும் செய்தி அனுப்பி விட்டு குடும்பத்தோடு பாபுலால் ஊட்டி கிளம்பி விட்டான். இருவரும் அன்று இரவே பாபுலால் வீட்டுக்குள் நுழைந்து சல்லடையாய் தேடி வக்கீல் சொல்லியிருந்த பத்திரத்தை மட்டும் எடுத்து கொண்டு வந்து பெரியவரிடம் கொடுத்தனர்.

பாபுலால் அடிக்க சொன்ன அந்த ஆளை என்ன பண்ணறது? அதுக்கு பணமும் அவன் கிட்ட வாங்கிட்டமே?

நீங்க அந்த ஆளையும் அவன் சம்சாரத்தையும் கூட்டிகிட்டு வாங்க.

தியாகுவுக்கு ஒன்றும் புரியவில்லை. வக்கீல் வரதாச்சாரி வர சொல்லி இருக்கிறார் என்று இவர்கள் கூப்பிடுகிறார்கள். வக்கீலை தன்னை பார்க்கற அளவுக்கு தான் பெரிய ஆளும் இல்லை, வக்கீல் கூப்பிடுகிறார் என்றாலே முதலில் பயம்தான் வருகிறது. இவர்கள் இரண்டு பேரை பார்த்த ஞாபகம் இருக்கிறது.அதுவும் மனைவியையும் கூட்டி வர சொல்லி இருக்கிறாராம் அந்த வக்கீல்.

வக்கீல் அவர்களை வரவேற்றார். தியாகு ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தான். என்ன தியாகு அப்படியே திகைச்சு போயிட்டியா? அவனுக்கு வியப்பு

சார் இதுவரை உங்களை பார்த்தது இல்லை, அப்புறம் எப்படி என் பேர் தெரியும்.

நீ ஒரு முறை அவிநாசி ரோட்டுல கார்ல ஆக்ஸிடெண்ட் ஆகி உயிருக்கு போராடிகிட்டு இருந்த ஒருத்தரை ஆஸ்பத்திர்க்கு எடுத்து கிட்டு போய் உயிர் பிழைக்க வச்சியே ஞாபகம் இருக்கா?

அது நடந்து நாலைந்து வருடங்கள் இருக்குமே ! அவர் பேர் கூட மாசிலாமணின்னு ஆஸ்பத்திரியில இருந்தப்ப சொன்ன ஞாபகம்.

அன்று இரவு ஷிப்ட் முடித்து விட்டு விடியற்காலை மூன்று மணி அளவில் வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். கார் ஒன்று மரத்தில் மோதி நிற்பதை பார்த்தவன் சைக்கிளை அப்படியே நிறுத்தி விட்டு காருக்குள் எட்டிப்பார்த்தான். ஸ்டீயரிங்க் அப்படியே அழுத்திக்கொண்டிருக்க ஒருவர் இரத்த காயங்களுடன் முணங்கிக்கொண்டிருந்தார். இவன் சுற்று முற்றும் பார்க்க ஒருவரும் தென்படாததால், இவனே சிரமப்பட்டு அவரை அந்த இக்கட்டிலிருந்து விடுவித்து மெல்ல வெளியே எடுத்து வந்தான். நல்ல வேளையாக அங்கு இரவு கண்காணிப்புக்காக சுற்றி வந்த போலீஸ் ஜீப் ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்தனர்.

அவரை மருத்துவமனையில் சேர்த்தவன் அவர் நினைவில்லாமல் இருந்ததால் இவனே இரண்டு மூன்று நாட்கள் கூட இருந்தான். அவருக்கு நினைவு வந்த பின்னாலும் ஒரு மாதம் வேலைக்கும் சென்று கொண்டு காலையும் மாலையும் மருத்துவமனைக்கு வந்து அவர் கூடவே இருந்து பார்த்துக் கொண்டான். இடை இடையே இவன் மனைவியும் வந்து கவனித்து கொண்டாள். குணமாகி அவர் மருத்துவமனையை விட்டு செல்லும் வரை கணவனும் மனைவியும் உடன் இருந்தனர்.அவர் குணமாகி போகும்போது அவனது வேலை,ஊர்,குடும்ப விவரங்கள் எல்லாவறையும் பெற்றுக்கொண்டு உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு சென்றார்.

என்ன யோசனை தியாகு, உனக்கு மாசிலாமணியை ஞாபகம் இருக்கா?

நல்லா ஞாபகம் இருக்குங்க.

இந்தா இந்த பத்திரத்தை படி என்று ஒரு பத்திரத்தை கொடுத்தார்.

அதை படித்த தியாகுவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அதில் மாசிலாமணியின் சொத்துக்கள் அனைத்தும் தியாகுவுக்கும் அவன் மனைவிக்கும் உரிமையாவதாக எழுதப்பட்டிருந்தது.

திகைப்புடன் அந்த பத்திரத்தை அவரிடமே கொடுத்தவன் மேற் கொண்டு எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்றான். .

என்ன ஒண்ணும் பேசாம நிக்கறே? வக்கீலின் கேள்வி அவனை பேச வைத்தது.

ஐயா, எனக்கு ஒண்ணும் புரியலீங்க. எதுக்கும் சம்சாரத்தை கேட்டுக்குங்க.

என்னம்மா இந்த சொத்தை வாக்கிங்கறீங்களா?

அவளும் வாயை பிளந்து நின்று கொண்டிருந்தாள். அவளை பொருத்தவரை அவர்கள் வீடு, தன் கணவன் வீடு மில் வருமானத்தைத்தான் பார்த்திருக்கிறாள். இவ்வளவு சொத்து என்பது கேள்விப்பட்டதில்லை. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலீங்க.

வக்கீல் சிரித்தார். சரி நீங்க சம்மதம் மட்டும் சொல்லுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.

இருவரும் மனதிற்குள் மகிழ்ச்சி பரவ தலையை ஆட்டினர்.

அப்புறம் இண்ணொன்னு இந்த சொத்துக்காக உங்களை முடிக்கணும்னு சொல்லி இவங்க இரண்டு பேருகிட்ட ஒருத்தர் பணம் கொடுத்துட்டு போயிருக்காரு. அன்னைக்கு உன்னை அடையாளம் பாக்கறதுக்குத்தான் இவரு உங்கிட்ட மணி கேட்டாரு.

ஐயோ இந்த சொத்தே வேணாங்க, எங்களுக்கு உசிருதாங்க முக்கியம். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி சொன்னதை கேட்டு வக்கீல் சிரித்தார்.

உன்னைய அடிச்சு போட சொன்னவன் மாசிலாமணி கூடவே இருந்த அவரோட பர்செனல் செகரட்டரி.. இவர் சொத்தை எல்லாம் உனக்கு எழுதி வச்சுட்டு இறந்துட்டாரு. இவனுக்கு எப்படியோ அது தெரிஞ்சு, அந்த பத்திரத்தை பதுக்கி வச்சுட்டான். உன்னையும் முடிச்சுடணும்னு திட்டம் போட்டான். அவன் கெட்ட நேரம் மாசிலாமணி என்னோட நண்பன், அது மட்டுமில்லாம, அவனோட கம்பெனி சட்ட விவகாரங்களை நான்தான் கவனிச்சுக்கறேன். என் மூலமாத்தான் இந்த பத்திரமே தயாராச்சு. ஆனா பத்திரம் மட்டும் அவன் கையில இருந்துச்சு. அதைய நான் மாசிலாமணி இறந்த பின்னாடி தேடி பார்த்தா கிடைக்கவே இல்லை. சரி எப்படியும் பாபுலால் கிட்டத்தான் இருக்கும்னு முடிவு பண்ணி அவனை வாட்ச் பண்ணறதுக்கு இவங்களை அனுப்பிச்சேன். நான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துச்சு. இரண்டு நாள் கழிச்சு உன்னைய முடிச்சிருப்பாங்கன்னு நினைச்சு ஊட்டியில இருந்து திரும்பி வருவான். ஆனா “பத்திரமே” இப்ப எங்கிட்ட வந்துடுச்சுங்கறது அவனுக்கு தெரியாது.

ஐயா நீங்க பார்த்து என்ன செய்யணும்னு சொல்றீங்களோ அப்படி நானும் என் சம்சாரமும் செஞ்சுடறோம். சொத்தை விட உசிருதாங்க முக்கியம், குழந்தை குட்டிக இருக்குதுங்களே.

அப்பாவியாய் அவர்கள் சொல்வதை கேட்ட வக்கீல் சிரித்தார். நீங்க பத்திரமா இருங்க. நான் அப்புறமா என்ன செய்யணும்னு சொல்றேன்.

தியாகுவின் மனைவிக்கோ “சம்பாதிக்க துப்பில்லை” என்று கணவனிடம் சண்டை போடுபவள் இப்பொழுது பெரிய சொத்தை சம்பாரித்து கொடுத்திருக்கிறான். இதற்கு சந்தோசப்படுவதா? இல்லை உயிரை எடுக்க ஒருவன் முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை கேட்டு பயப்படுவதா? ஒன்றும் புரியாமல் தியாகுவுடன் நடந்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *