Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சைவம்

 

“கல்யாணத்துக்கு அப்புறமும் வாரக் கடைசியில் வீட்டிற்கு இந்த மாதிரி அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வராதடா…. உருப்படறதுக்கு வழியைப்பாரு..”

“இல்லப்பா கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா எல்லாத்தையும் விட்டுடுவேன்.”

“நான் உன்னை மாதிரி சின்ன வயசுல இருக்கும்போது குடிப்பது என்கிறது மிகப்பெரிய அசிங்கம்….கேவலமான விஷயம். ஆனா இப்ப எல்லாமே தலைகீழா மாறிடுத்து. போததற்கு நாம இருப்பது பெங்களூர் வேற…உன்னோட ஐடி கம்பெனியிலேயே கெட்டுகெதர், பார்ட்டின்னு காரணம் வச்சிண்டு குடிக்கிறீங்க. கேட்டா சோஷியல் ஸ்டாட்டஸ் என்ற சப்பைக்கட்டு…”

“……………………”

“அதத் தவிர, சனி ஞாயிறுகளில் நண்பர்களோட குடிச்சிட்டு ராத்திரி ஒரு மணிக்கு மேல வீட்டுக்கு வர. நான் வெஜ் வேற நிறைய சாப்பிட ஆரம்பிச்சுட்ட. சிகரெட் குடிக்கிற. எனக்கு எல்லாம் தெரியும் பாலாஜி… நாம சாத்வீகமான சைவக் குடும்பம். அதை மனசுல வச்சுக்க…”

“சரிப்பா… கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் விட்டுடறேன்.”

“நாம ஒரு ஆச்சாரமான சாத்வீகமான சைவக் குடும்பத்துல பிறந்தவங்க… அதை முதல்ல ஞாபகம் வச்சுக்க. நமக்கு இந்தக் குடி; சிகரெட்; நான்-வெஜ் எல்லாம் தேவையற்ற விஷயங்கள். ஒழுங்கா இருடா.”

ஆராவமுதம் உள்ளார்ந்த வருத்தத்துடன் மகனைக் கண்டித்தார்.

பி.ஈ படித்து முடியும்வரை பாலாஜி நல்ல பையனாகத்தான் இருந்தான்.

ஆனால் அதன் பிறகு பெங்களூரில் ஒரு நல்ல ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்ததும், பல கெட்ட பழக்கங்கள் அவனிடம் ஒவ்வொன்றாக தொற்றிக்கொண்டன.

போதாததற்கு அவனுடன் வேலை செய்யும் கிரண் கெளடா மற்றும் இன்னபிற அலுவலக நண்பர்கள் பாலாஜியுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டு வார இறுதிகளில் குடிப்பது அதிகமானது. குடிக்கும்போது சிகரெட், நான்-வெஜ் பழக்கமும் கிரணின் அறிமுகத்தால் பாலாஜியிடம் பற்றிக்கொண்டது. நண்பர்களுடன் நன்றாகக் குடித்துவிட்டு பாலாஜி வீட்டுக்கு திரும்பிவர இரவு ஒன்று, ஒன்றரையாகி விடும். சத்தம் எழுப்பாமல் தன்னிடமுள்ள சாவியால் மெயின் டோரைத் திறந்து வீட்டினுள் நுழைந்து தன் அறையினுள் சென்று படுத்துக்கொண்டு விடுவான்.

கல்யாணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில், ஆராவமுதம், பாலாஜிக்கு பெண் பார்ப்பதில் தீவிரமானார்.

அவருடைய ஒரே எதிர்பார்ப்பு திருமணத்திற்குப் பிறகாவது இந்த கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் தன் ஒரேமகன் விட்டுவிடுவான் என்பதுதான்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை…

காலை பத்து மணிக்கு பாலாஜிக்கு மொபைல் அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியவன் முகம் இருண்டது.

“எந்த ஹாஸ்பிடல்?”

“சரி இப்ப உடனே வரேன்…”

பாலாஜி பதட்டத்துடன் கிளம்பினான்.

அவன் பதட்டத்தைப் புரிந்துகொண்ட ஆராவமுதம், “என்னடா போன்ல யாரு? என்ன ஆச்சு? எங்க கிளம்பிட்ட?” என்றார்.

“கிரண ராமையா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க… நேத்து ராத்திரி ரத்த வாந்தி எடுத்தானாம். அப்புறம் மயங்கி விழுந்தானாம்…”

அவசரமாக வெளியே வந்து பைக்கில் ஆரோகணித்து கிளம்பிச் சென்றான்.

ஆராவமுதத்திற்கு எல்லாம் புரிந்துபோனது.

நேற்று இரவு பாலாஜி வீட்டுக்கு வந்தபோது இரண்டு மணி. காலை எட்டு மணிக்குத்தான் எழுந்தான். இருவரும் நேற்று குடித்திருக்கிறார்கள்… அவன் ரத்த வாந்தியில் மயங்கி சரிந்துவிட்டான்….”

விவரம் புரிய, பாலாஜியின் அம்மா வேதவல்லி புடவைத் தலைப்பால் முகத்தைப் பொத்திக்கொண்டு பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அழுடி, நல்லா அழு… இப்பேர்ப்பட்ட பிள்ளையைப் பெத்ததுக்கு நல்லாவே அழு. வயித்தில பிரண்டையைக் கட்டிண்டு ஒரேயடியா அழு….”

மாலை நான்கு மணிக்கு பாலாஜி வீட்டிற்கு திரும்பி வந்தான். மிகவும் களைத்திருந்தான்.

ஆராவமுதம் “என்னடா கிரணுக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கான்?” என்று கவலையுடன் கேட்டார்.

“அவனுக்கு லிவர் ஸிரோஸிஸாம்பா…. டாக்டர் அவன் ரொம்ப சீரியஸ்ன்னு சொல்லிட்டார்….”

வேதவல்லி, “அம்மா கெஞ்சி கேட்டுண்டு உன் கால்ல விழறேண்டா பாலு… நீ எங்களுக்கு ஒரே பிள்ளை… நீ எங்களுக்கு வேணும். தயவுசெய்து எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுடா…” மறுபடியும் அழுதாள்.

“சரிம்மா…ப்ளீஸ் நீ அழாதம்மா.”

பாலாஜி தினமும் கிரண் அருகில் இருந்து கவனித்துக்கொண்டான். தன் வீட்டிற்கு ஒழுங்காகச் செல்லாமல், அவன் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான். வேதவல்லி-ஆராவமுதம் எல்லாம் நல்லவிதமாக முடியவேண்டுமே என்று தினமும் கோவிலுக்குச் சென்று பெருமாளை பாதாதி கேசம் சேவித்தனர்.

எனினும் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்குப் பிறகு, வியாழக்கிழமை மதியம் கிரண் மரித்துப் போனான்.

அவனின் இறப்பு வேதவல்லி-ஆராவமுதத்திற்கு மிகுந்த துக்கமும் வேதனையும் அளித்தது.

அன்று முழுதும் பாலாஜி வீட்டிற்குத் திரும்பவில்லை.

நண்பனின் ஈமக் கிரியைகள் வெள்ளிக்கிழமை பகலில் முடிந்தது. வீட்டிற்கு திரும்பும் முன் பாலாஜி அம்மாவுக்கு போன் பண்ணி, வாசலில் ஒரு வாளித் தண்ணியும், மஞ்சள் பொடியும் எடுத்து வைக்கச் சொன்னான். மஞ்சள் பொடியைத் தலையில் தூவியதும், தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொண்டு; அதன்பிறகு பாத்ரூமுக்குள் சென்று; உடைகளைக் களைந்து அவைகளைத் தண்ணீரில் நனைத்துவிட்டு, ஷவரில் குளிக்கத் திட்டம்.

வேதவல்லி அவ்வாறே செய்து, பிள்ளைக்காக வாசல் வராந்தாவில் காத்திருந்தாள். அவளுடன் கூடவே ஆராவமுதமும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருந்தார்.

மூன்று மணிக்கு பாலாஜி வந்து, பைக்கை வராந்தாவில் நிறுத்தினான்.

வேதவல்லி உடனே மஞ்சள்தூள் டப்பாவுடன் அவன் அருகில் சென்றாள்.

ஆராவமுதம் கோபத்துடன் “டேய் அங்கேயே நில்லுடா… இப்ப என்னத்துக்கு மஞ்சள்தூள்?” என்றார்.

“இல்லப்பா….மஞ்சள்தூள் தலையில போட்டுட்டு தண்ணீர் தெளிச்சப்புறம், பாத்ரூம் போய் நல்லா குளிச்சா தீட்டு போயிடும்னு…”

“உனக்கு என்னடா தீட்டு? தீட்டாவது மயிராவது… உனக்குத்தான் ஒரு எழவும் கிடையாதே…”

“………………………”

“செத்துப் போனது உன் நண்பன்தானே? ஹாஸ்பிடலில் இறந்துபோன அவனை தள்ளி நின்று பார்த்துதானே வருத்தப்பட்டு அழுதாய்? அது எப்படி தீட்டாகும்? ஆனா துடிக்க துடிக்க கொல்லப்பட்ட கோழி; ஆடு போன்ற உயிரினங்களை, சற்றும் கூச்சமில்லாமல் ரசித்துச் சாப்பிட்டு அவற்றை உன் வயிற்றுக்குள் புதைத்து வைத்து வயிற்றை சுடுகாடாக்கிக் கொள்கிறாயே? அப்ப எங்கடா போச்சு அந்தத் தீட்டு?”

“ஆமாப்பா…. இந்த உண்மை எனக்கு அப்போது உரைக்கவில்லை..”

“நல்ல ஆரோக்கியத்திற்கும், சாத்வீகமான குணத்திற்கும் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உண்பதுவே சாலச் சிறந்தது என்று சும்மாவா சொன்னார்கள்? இது புரிந்துதான் புலால் உண்ணும் பலர்கூட, அதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்கள். புகழ்பெற்ற மறைந்த ஜஸ்டிஸ் எம்.எம் இஸ்மாயில் மெட்ராஸ் ஹைகோர்ட்ல இருந்தார். அவர் தன் வாழ்க்கையில் சுத்த சைவத்தைக் கடைப்பிடித்தார். நீ அவர் வாழ்க்கை வரலாறை தயவுசெய்து படிச்சுப்பாரு. தவிர, வள்ளலாரை நிறையப் படித்துப் புரிந்துகொள். அவர் எப்படிப்பட்ட சைவப் புனிதர் என்பதை அறிந்துகொள்.

“சரி… அவன முதல்ல உள்ள அனுப்பி குளிக்க வைங்க…”

பாலாஜி தலையைக் குனிந்துகொண்டே உள்ளே போனான்.

குளித்துவிட்டு, வேறு உடையணிந்து அப்பாவிடம் வந்தான்.

“அப்பா.. நான் நிறைய விஷயங்களை கடந்த நான்கு நாட்களில் நன்கு புரிந்து உணர்ந்துகொண்டேன். இனி எனக்கு அமைதியான வாழ்க்கையும்; என்னுடைய முன்னேற்றமும்தான் எனக்கு முக்கியம். குடி, சிகரெட், நான்-வெஜ் எல்லாத்தையும் விட்டுட்டேம்பா… செத்துப்போன என் நண்பன் கிரண் மீது சத்தியம்…”

அப்பாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுதான். 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு வயது ஐம்பத்தைந்து. பெங்களூரில் சொந்தவீடும் வாசலுமாக பகவத் சங்கல்பத்தால் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வீட்டில் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி ஆகியோரின் உபயோகத்திற்காக மொத்தம் மூன்று கார்கள் இருக்கின்றன. நான்காவதாக எனக்கென்று ஒரு பென்ஸ் கார் வாங்க வேண்டுமென்பது, ...
மேலும் கதையை படிக்க...
அலுவலக வேலையில் மனம் லயிக்காது விச்சு என்கிற விஸ்வநாதன், லாவண்யாவையே நினைத்துக் கொண்டிருந்தான். அவளை இரண்டு நாட்கள் முன்புதான் பெண் பார்த்துவிட்டு வந்திருந்தான். லாவண்யாவின் அழகில் சொக்கிப்போய் உடனே சம்மதம் தெரிவித்தான். அடுத்த இரண்டு மாதங்களில் தனக்குத் திருமணம் என்கிற நினைப்பே அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ராமநாதன் சார் நேற்று இரவு தூக்கத்தில் மாரடைப்பினால் இறந்து விட்டாராம். இன்று காலை ஆபீஸ் வந்தவுடன்தான் அவர் இறப்பு சக ஊழியர்களான எங்களுக்குத் தெரிய வந்தது. நாங்கள் அனைவரும் கூடிக் கூடி வருத்தத்துடன் ராமநாதன் சாரைப் பற்றி பேசிக் கொண்டோம். பத்து ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அவருக்கு வயது 68. பாளையங்கோட்டை அருகே திம்மாராஜபுரம் என்கிற கிராமத்தில் அந்தக் காலத்தில் வில்லேஜ் முன்சீப்பாக இருந்தவர். அவருக்கு ஐம்பது வயதாக இருக்கும்போதே அவர் மனைவி இறந்து விட்டாள். ஒரேபெண் காயத்ரிக்கு திருமணமாகி தற்போது அமெரிக்காவில் இருக்கிறாள். இப்போது ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிற்றுக்கிழமை, காலை பதினோருமணி. அம்மாவும் அக்காவும் மாங்காடு கோவிலுக்கு போயிருந்தார்கள். அக்காவுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம். அப்பாவும் காயத்ரியும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். அப்பா ஹாலில் பேப்பர் படித்தபடி ஈஸிச்சேரில் அமர்ந்திருந்தார். வீடு அமைதியாக இருந்தது. காயத்ரி, அப்பாவிடம் எப்படியும் ஷண்முகவடிவேலுடனான தன் ...
மேலும் கதையை படிக்க...
பெருமாள் கடாட்சம்
நினைவில் நின்றவள்
ராமநாதன் சார்…
ஊட்டாபாக்ஸ் ராகவன்
மீட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)