செம்புலப் பெயநீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,519 
 

கைப்பேசியில் ஜென்னியின் எண்ணை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ‘நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் ஸ்ட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்று ஒலிக்க அதை வெறித்துப் பார்த்தான் கார்த்தி.

கார்த்தி. வளர்ந்து வரும் கிருத்திகா இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனன். ஜென்னி அவனுடைய தனி உதவியாளினி, ஸ்டேட்மென்ட், கடிதம் டெண்டர், என அந்த அலுவலகமே அவளை சார்ந்து இருந்தது. . ஜென்னி ஒரு நாள் வரவில்லையென்றாலும் அலுவலகமே தலை கீழ். ஒரு நாள் விடுமுறைக்கே இந்த கதி என்றால், அவள் வேலையை விட்டு நின்றுவிட்டால்?.

நடந்ததென்னவோ அதுதான்.

சொல்லப்போனால் கார்த்தி அவன் மனைவி கயல்விழி அவனை பிரிந்து சென்ற போது கூட இவ்வளவு கவலைப்பட வில்லை.. ..

இதேபோன்று ஒரு மாலை நேரம் கயல்விழி கோபித்துகொண்டு தன் பிறந்த வீடு சென்று ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.

பத்து பொருத்தமும் பார்த்துப் பார்த்து திருமணம் செய்த அவன் அன்னை மங்கையர்கரசி இதைக்கேட்டு மிகவும் இடிந்து போனாள். ‘கழுதை எங்கே போய்டும், கொஞ்ச நாள் போனா தன்னால திரும்பி வரும்’ என்ற அவன் ஆணவமான வார்த்தையில் மேலும் ஆடிப்போனாள்.

காதலித்த குற்றத்திற்காக இரு குடும்பத்தினரையும் பகைத்துக்கொண்டு, பதிவுத் திருமணமும் செய்துகொண்டு, திடீரென ஒரு நாள் கணவனையும் பறிகொடுத்த நிலையில், கைகுழந்தையான கார்த்தியை வளர்க்க மங்கையர்கரசி மிகுந்த சிரமப்பட்டாள்.

தன் வளர்ப்பில் என்ன குறை என்று தன்னைத்தானே கேட்டு பதிலில்லாமல், இணைபிரியாத தம்பதிகளாக இருந்தவர்கள் தானே இருவரும், எங்கிருந்து வந்தது இந்த இறுமாப்பு, இல்லர வாழ்க்கையின் சுவையே விட்டுக்கொடுத்தலில் தானே இருக்கிறது, இதனை எப்படி அவனுக்கு உணர்த்துவது என்று செய்வதறியாமல் விக்கித்து நின்றாள்.

ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு யுகமாக கடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்த இரவுகள். அப்படி ஒருநாள் அவள் மிகுந்த வேதனையிலிருந்த போது கார்த்தி அறையிலிருந்து கேட்ட தொலைபேசி உறையாடல் அவள் கவனத்தை கலைத்தது. ‘மணி பத்தாகப்போகுது, இன்னேரத்துக்கு என்ன பண்றான்’ என்று அக்கரையுடன் அவன் உறையாடலை கவனிக்கத் துவங்கினாள்.

“சொல்லுங்க செல்வராஜ், ஜென்னி நம்பர் ஸ்விட்ச் ஆஃபா?, நானே ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டிருக்கேன், பேசாம் ஒண்ணு செய்ங்க, நேரா ஆஃபீஸ் போய் ரெகார்ட்ஸ் பாத்தீங்கன்னா லாண்ட் லைன் நெம்பர் கிடைக்கும், எனக்கு உடனே சொல்லுங்க பேசிப்பாக்கறேன், என்றான். அவர் ஏதோ சொல்ல, சாரி செல்வராஜ் கொஞ்சம் டைம் பாக்காதீங்க, நம்ம எல்லார் நலனுமே இதுலதான் இருக்கு, ப்ளீஸ்,” என்று தொலைபேசியை வைத்தான்

அவன் அருகில் வந்து ஆதரவாக அமர்ந்த மங்கையர்கரசி. “என்ன கார்த்தி எதாவது பிரச்சினையா?” என்றாள்.

“பிரச்சினை எல்லாம் ஓண்ணும் இல்லம்மா, அசிஸ்டன்ட் ஜென்னி, இங்கிரிமெண்ட் கேட்டான்னு கொஞ்சம் கோவமா பேசிட்டேன், அவ திடீர்னு சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு நின்னுட்டா, நாளைக்கு ஒரு டெண்டர் சப்மிட் பண்ணனும், டீடைல்ஸ் அவளுக்குத்தான் தெரியும், அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு” என்றான்.

மொபைலில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. “சொல்லுங்க செல்வராஜ் நம்பர் கெடைச்சுதா, அப்பாடா.. சொல்லுங்க” என்று எண்ணை குறித்துக்கொண்டான் “மிச்சத்தை நான் பாத்துக்குறேன்” என்று அவரை கட் செய்துவிட்டு அந்த லேண்ட்லைன் நம்பருக்கு டயல் செய்தான்.

அவன் அருகில் அமர்ந்திருந்ததாலும், அறையே நிசப்தமாக இருந்ததால் மங்கையர்கரசிக்கு இருவர் பேசுவதும் தெளிவாக கேட்டது.

ஃபோனை ஜென்னி தான் எடுத்தாள், “ஃபோனை அப்பா கிட்ட கொடும்மா” என்று உறிமையோடு கூறியவன் அவர் ரீசிவரை பெற்றுக்கொண்டதை உறுதி செய்து, “சார் நீங்க பெரியவங்க, நீங்களே சொல்லுங்க உங்க பொண்ணு செஞ்சது நியாயமா?” என்றான்.

அவர் “சாரி தம்பி, நீங்க என்ன பேசினீங்கன்னு எனக்குத் தெரியாது, இது அவளோட பர்சனல் விஷயம், அதுவுமில்லாம ஜென்னிக்கு சொல்லிக்குடுக்கிற வயசுமில்லை, இந்த விஷயத்தில என்னால உங்களுக்கு எந்த உதவியும் செய்யமுடியாது, நீங்க எதுவேணாலும் ஜென்னி கிட்டேயே பேசிக்கங்க” என்று ரிசீவரை ஜென்னியிடம் கொடுத்தார்.

அவருடைய இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் சிறிது சுதாரித்து அவளிடம் கனிவான குரலில் “என்ன ஜென்னி, படிச்ச பொண்ணு நீ இப்படி செய்யலாமா?” என்றான் மிகுந்த கவனத்துடன்.

அவள் சமாதானமடையாமல் “இல்லை சார், இங்கிரிமென்ட் கேட்டதுக்கு நீங்க என்ன இருந்தாலும் என்னை அப்படி பேசியிருக்கக் கூடாது” என்றாள் விடாப்பிடியாக.

அவன் தழைந்த குரலில் “ சரி தப்பு என் பேரில தான் சாரி, போதுமா?, அப்புறம் … உன் சிஸ்டமை மாத்தணும்னு கேட்டுட்டிருந்தியே அதை நாளைக்கே மாத்த சொல்றேன்” என்றான். அவள் மௌனம் தொடர்ந்ததை பொருத்துக்கொள்ள முடியாமல் “சரி உன்னோட இங்க்ரிமென்ட் பத்தி நம்ம மேனேஜர் செல்வராஜ்கிட்ட சொல்லி அடுத்த மாசத்திலேர்ந்து கொடுக்க சொல்றேன் சரிதானா? என்றான் மிகுந்த எதிர்பார்ப்புடன்.

“தான்க்ஸ் சார், அப்புறம் .. நான் செஞ்சதும் தப்புதான் சாரி“ என்றாள் ஜென்னி

“குட் கர்ள், கார்த்தால ஒன்பதரைக்கு உன்னை எதிர்பாக்கறேன்” என்று ஃபோனை வைத்தான்.

பின்பு ஏதோ சாதித்தவனைப் போல் பெருமிதமாக மங்கையர்கரசியை பார்த்தான்.

தன் மகன் கார்த்தியா இப்படி பேசியது என்று தன் காதுகளையே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மங்கையர்கரசி. பின்பு மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

“நான் உன்னை புத்திசாலின்னு நினைச்சேன், பணம் மட்டும் சம்பாதிக்க தெரிஞ்சிகிட்டு, வாழ்க்கைல தோத்துட்டிருக்கிற ஒரு அடி முட்டாள் நீன்னு இப்பதான் புரிஞ்சிகிட்டேன்” என்றாள் மிகுந்த வேதனையுடன்

“என்ன சொல்றீங்க?” என்றான் புருவம் சுருங்க.

“வாழ்க்கைல எப்பவுமே ஒண்ணை சார்ந்து தான் இன்னொண்ணு இருக்கு, ஒரு கம்பனிக்கே நிர்வாகி, அந்த சின்ன பொண்ணை சார்ந்து இருக்கே, உன்னை ஒருத்தி சார்ந்து இருந்தா அவளை நீ எளப்பமா நினைக்கிறே, தப்பில்லையா? கம்பெனில எல்லரையும் அரவணச்சுட்டு போறதும், விட்டுக்குடுக்கிறதும் மட்டுமே வெற்றின்னு நினச்சுட்டே, வாழ்க்கையில எது வெற்றின்னு யோசிச்சுப்பரு, நீயும் படிச்சவன் தானே உனக்கும் புரியும். ஒரு அம்மாவாக நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்” என்று தன் மனதில் நீண்ட நாட்களாக இருந்த பாரத்தை அவனிடம் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்க சென்றாள்

நீண்ட சிந்தனைக்குப்பின் தன் தவறை உணர்ந்தவனாக, கார்த்தி கனத்த இதயத்துடன் தூங்கசென்றான்.

மங்கையர்கரசி காலையில் கண்விழித்தபோது, கயல்விழி கையில் காஃபியுடன் எதிரில் நின்றுகொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *