செந்தட்டீ மம்மே பாரே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 4,627 
 

மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலைக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே கனாப்போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனை நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் அவளுக்கு உணர்வையும் சுயநினைவையும் கொடுத்தது. தலையை உயர்த்த எத்தனம் செய்தாள். விழிகள் நாணம் பூண்டன. மூன்று முடிச்சுக்களை அருளிய சொக்கலிங்கத்தின் கடைவிழி நோக்கைச் சந்திக்க முடியாமல் திக்குமுக்காடினாள்.

மணப்பந்தல் மளமளப்பு மிஞ்சியது. ‘வாங்க, வாங்க!’ என்ற வரவேற்பு மொழிகளும், “தம்பி அவங்க எல்லோரையும் உட்காரவை, பர்மா பாயை விரிச்சுப்போடு , ம். ரங்கூன் ஜமுக்காளத்தையும் உதறி விரியப்பா… இந்தா பார், மரவைத் தட்டிலே வெற்றிலை பாக்கை நிரப்பிக் கொண்டு வா!” என்ற உபசாரக் குறிப்புகளும் மாப்பிள்ளையின் இதழ்க் கரையினின்றும் ஒதுங்கி ஒலித்த வண்ணம் இருந்தன.

“சரி, நேரமாயிற்று. கல்யாணபரிசு, வாழ்த்து எல்லாம் வந்து குவிந்து கிடக்கிறதே. எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்துவிடலாமே!…. அப்புறம், பந்திவைக்க ஆரம்பித்து விட்டால், ஒரு சோலியைச் சமாளிக்கவே நேரமும் பொழுதும் காணாது!” என்றார் பெரியவர் ஒருவர். கழுத்தில் இருப்பிடம் அமைத்திருந்த ருத்திராட்சக் கெவுடு’ அவரது விரல்களின் ஆணைக்கேற்ப அசைந்தது.

“ம், அய்யா சொல்றதும் சரியான யோசனைதான்!” சந்தனப் பேலாவை இடம் மாற்றிக்கொண்டிருந்த உக்கிராணப் பொறுப்பாளர் ஆமோதித்தார்.

பத்தில் காவணத்தின் மையத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பரிசில்களையும், கடிதங்களையும், வாழ்த்துப் பத்திரங்களையும் எடுபிடிகள் கைக்குக் கொஞ்சமாக அள்ளி எடுத்து, மணமகனுக்கு அருகில் வைத்தார்கள். மாப்பிள்ளை சொக்கலிங்கம் இளம் சிரிப்புத் தவழ, அவற்றைப் பார்க்கலானான். ஆர்வம் மிகுந்த பார்வை துள்ளிக் குதித்துத் தவழ்ந்தது; பட்டுச் சொக்காயின் இடது கைப்பகுதியைச் சுருட்டி மடக்கிவிட்டவாறு பரிசுப் பொருள்களை விரல் அமைத்து விலக்கிப் பார்த்தான். இதயத்தின் படபடப்பை நேத்திரங்களுக்கு மாற்றம் செய்து கொடுக்க ஒப்பாதவன் போன்று கடிதங்களின் மீது கண்ணோட்டம் செலுத்தினான். ஓர் அரைக்கணம் அவனது இதயம் அதிர்ந்தது. மார்பில் இழைந்திருந்த மகரகண்டி மாலை அவனுடைய நெஞ்சையே அமுக்கி அழுத்திவிடுவதைப் போன்று உணர்ந்தான். சிதைந்த ஆசை கண்ணீரின் அவதாரம் மூண்டது. மணமகன் அழலாமா? கூடாது. தன்னைச் சமாளித்துக்கொண்டான் அவன்.

அப்போது, வாழ்த்துப் பத்திரங்களை ‘மைக்’ கின் முன்னே வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் ஓர் இளைஞர்.

‘நங்கை வத்சலை! அபிமன்யு கிடைத்தாற் போன்று உனக்குச் சொக்கலிங்கம் கிடைத்திருக்கிறார். நீ கொடுத்து வைத்தவள், உங்கள் தாம்பத்தியம் சகல சௌபாக்கியங்களுடன் பொலிவு பெற வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கின்றேன்.’

வாழ்த்து மடல் வரிகளில் மிதந்தாள் வத்சலை. ஆம், நான் கொடுத்து வைத்தவள்தான். சாமிக்கு நான் எடுத்துப் போட்ட பூ நல்ல பூவேதான் ! கண்கள் கசிந்தன. அந்தக் கசிவில்தான், நடந்த கதை ‘திருப்பம்’ கண்டது.

புதுப்பட்டியில் மு.ஆ. வீடு என்றால் பசையான குடும்பம் என்று பேர். அந்த வீட்டின் தலைச்சன்தான் சொக்கலிங்கம். அவனுக்கு முறைப்பெண்தான் வத்சலை. அழகை ஒரு தட்டிலும், அவளை மறுதட்டிலும் வைத்து நிறுத்தலாம். தேர்ந்த எழில்; ஆனால் அவள் பிறந்த மனை தொடிப்பின் விளைவாக இறக்கம் கண்டது. சம்பந்தம் சாடிக்கை’ விஷயத்தில் வத்சலையின் தந்தை வலியப்போய் எதையும் செய்யமுடியாமல் இருந்தார். இந்த இக்கட்டான நிலையில் தான் வத்சலை தவியாய்த் தவித்தாள். தன் கழுத்தில் மஞ்சள் கயிறு விழுமா என்று ஏங்கிக் கிடந்தாள். குலதெய்வத்தை நொந்துகொண்டாள். தன் முறை அத்தானை ரகசியமாகச் சந்தித்தது. தன் பரிதாப நிலையைக் கண்ணீர் மல்கிப் புரள விளக்கினாள். சொக்கலிங்கம் இதயம் கொண்டிருந்தான். பணத்தை அவன் மதிக்கவில்லை : பெண்மையை மதித்தான். புதுச் சம்பந்தத்தை மதிக்காமல்; வத்சலைக்கு , அவன் அம்மான் சொக்கலிங்கத்தின் நிழலில் ‘போக்கிடம்’ கிடைத்தது.

சுயநினைவை மீட்டுக்கொண்டாள் அவள். இளநீலநிற ஒளிப்புனலைக் கடந்தன விழிகள். அவள், அவள் தேடிய கண்கள் நீரில் மிதந்து கொண்டிருக்கக் கண்டாள்!
‘மஞ்சள் நீராடல்’ சடங்கு முடிந்தது. முகூர்த்தப் பட்டு சலசலக்க மாடிக்கு வந்தான் சொக்கலிங்கம். நடையில் இருந்த நிலைக்கண்ணாடி அவன் உருவை எழுதிக் காட்டிற்று. அழகு முகம் சஞ்சலத்தின் இழை பின்னிக் காட்சி தந்தது. சூன்ய வெளியில் கண் பதித்தான் அவன். இதயம் முழுவதிலும் வெறுமை அட்டகாசமாகச் சிரித்தது. அந்தச் சிரிப்பிலே அவனது அழுகை விளைந்தது. அக்கணம் தன் உயிர் தன்னிடமிருந்து விடைபெறத் துடிப்பது போலப் பட்டது அவனுக்கு. ‘ஆமாம்; அன்று தினம் அந்தத் தெய்வம் என் உயிரைக் காப்பாற்றவில்லையானால், இன்று நான் மாலையும் கழுத்துமாக விளங்கியிருக்க முடியுமா? முடியவே முடியாதே!…’ அவன் நெஞ்சு ஏறி இறங்கியது. அந்த ஏற்றத் தாழ்வில் அன்பு விளையாடியது.

‘மாண்டலே பெட்டகம்’ வாய் திறந்தது. சிறிய புகை படமொன்று கண்திறந்தது. இமைக் கதவம் மூடாமல், அவ்வுருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அன்பு கசிந்த கண்கள்; அருள் நிறைந்த உதடுகள்; தேஜஸ் மண்டிய முகவிலாசம்; கொண்டை சுற்றப்பட்டிருந்த சுருள் அலை படிந்த தலை முடியில் நட்சத்திரப் பூக்கள் மின்னின ; இடது பக்கத்தில் தந்தச் சீப்பு இருந்தது. ஸில்க் அங்கி; அது பொங்கிப் பூரித்த யௌவனத்திற்குப் பாதுகாவல் போலும்!

சொக்கலிங்கம் நேத்திரங்களை மூடினான்; இதழ்கள் வழி கேட்டன். ‘மாட்டீஞ்சி!’ என்று தன்னுள் அவன் முணு முணுத்துக் கொண்டான். கண்ணீர் முட்டி மோதியது. உருப்பெற்ற அந்தப் பெயரிலே பர்மியர் நாடு உருக்காட்டியது; அன்பின் கதை உருக்கொண்டது.

அன்பு சோதனை வடிவானது அல்லவா? ஆனால், இதே அன்புச் சோதனைக்கு இலக்கான நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இருந்தது கிடையாதுதானே?

மேல் பர்மாவின் நாட்டு வளப்பத்துக்குச் சிறப்புப்பாயிரம் அளித்து, நீர்வளம், காட்டிய பெருமை ஐராவதி நதிக்கு உடைமையாகும். ‘தப்பிப்பீன்’ என்னும் ஊர் நதிக்கரையில் அமைந்தது. நீர்ச் செழிப்புக்கு ஏகபோக வாரிசு மாதிரி விளங்கினாள் மாட்டீஞ்சி. அவளுடைய தகப்பன் ‘கொல்லப்போ ‘ மகா முரடன். அவனிடம் குதிரைவண்டி ஒன்று இருந்தது. இரங்கூன் முகத்துவாரத்தில் ‘தீம்போனஸன்’ கப்பல் பிடிப்பு நடந்து முடிந்து ஐந்தாறு நாட்கள் வரை, மீஞ்சான் போன்ற பகுதிகளிலிருந்து திரளும் பிரயாணிகள் அவனுக்குக் கை நிறையைக் கொடுப்பார்கள். ஆனால் அவனிடம் ஒரு கெட்ட குணம் குடி கொண்டிருந்தது. கல்லாக்களை இந்தியர்களை அவன் வெறுத்தான்.

ஒருநாள்.

சொக்கலிங்கம் தன்னுடைய நிர்வாகத்திலிருந்து மரக்கடைக் கல்லாவில் கணக்குப் பிள்ளையை அமர்த்திவிட்டு, கடையை விட்டு வெளியே வந்தான். கிஸ்தி வசூல் செய்யவேண்டிய இடங்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய சிட்டைப் புத்தகம்’ அவனுடைய சேப்பி’யில் இருந்தது. அவன் அணிந்திருந்த சைட்யூ லாங்’ தெருவில் ஊர்ந்தன. அந்தி மாலைப் பொழுது. சில்லறை வசூல்களை முடித்துக்கொண்டு, தமிழர்கள் வசிக்கும் பூசனிக்கன் அல்யா’ வுக்கு வந்து, வேல் முருகனை வணங்கினான் அவன். இருள் சூழத் தொடங்கிற்று, புறப்பட்டான். இடை மறித்த வழியில் அன்பு இடை வெட்டியது. லாதம் டைம்பாவ்! என்று அவனை வரவேற்று உட்காரச் சொன்னான் பர்மாக்காரன் ஒருவன். கூம்ஸாவரம் தாம்பூலத்தட்டை வைத்த கையுடன் ‘லப்பை’ யை நீட்டினான். அவன் கொபாங்குவே; வாடிக்கைக்காரன். தேநீர் குடித்ததும், வசூல் விவரம் பற்றிச் சொன்னான் சொக்கலிங்கம். அது சமயம். ஏதோ காலடியோசை கேட்கவே, அவன் எட்டிப் பார்த்தான். யாரும் தட்டுப்படவில்லை!

“ஜப்பான்காரன் கொடுமை முடிந்து, பர்மா சுதந்திரம் அடைந்ததும், அதற்குள் ஆங்க்ஸான் கொலை காரணமாகக் கிளம்பிய புயல் இப்போதுதான் லேசாக அடங்கி வருகிறது. இருட்டு வேளை. உங்களிடமோ ஐயாயிர ரூபாய் வரை நிலுவை வசூல் பணம் இருப்பதாகச் சொல்லுகின்றீர்கள். நான் வேண்டுமானால் துணை வரட்டுமா?” என்று கேட்டான் பர்மாக்காரன்.

சொக்கலிங்கம் அவனது அன்பைப் பாராட்டி நன்றி சொல்லிவிட்டு, தானே ஒன்றியாக துணிவுடன் செல்ல முடியுமென்று புறப்பட்டுவிட்டான். அவனோடு ஆபத்தும் புறப்பட்டது. ஆபத்துக்கு ஓர் உருமென நின்றான் கொல்லாப்போ, இருட்செறிவுமிக்க சாலை முனையில் அவன் சொக்கலிங்கத்தை மடக்கினான். அவன் கையில் ‘பக்கோ வீச்சரிவாள்’ இருந்தது. ‘ஒன்று பணம் கொடு; இல்லை, உன் உயிரைக் கொடு!’ என்று முழங்கினான் முரடன். தலையில் சுற்றப்பட்டிருந்த சல்லாத் துணியை அவிழ்த்து சொக்கலிங்கத்தின் வாயைக் கட்டினான். குதிரை வண்டி பறந்தது.

மீண்டும் சொக்கலிங்கம் விழி மலர்ந்த தருணத்தில், தன்னைச் சுற்றிலும் பயங்கரமான இருள் ஆட்சி செலுத்தியதைக் கண்டான். அன்பின் கதவு மட்டுமின்றி, அறைக்கதவும் அடைபட்டிருக்கக் கண்டான். மீஞ்சானில் புதுப்பட்டி தோன்றியது. தன்னை மணக் கோலத்தில் காணவிழைந்து ‘ஏர்மெயில் மூலம் அந்த ஆசையை அனுப்பிய பெற்றோர்களை எண்ணினான். பர்மா நாட்டில் உள்ள சொத்துப்பத்தை நினைத்தான். ‘ஸ்வேடீ கான் பயா அவன் கண் முன் நின்றது. மண்ணிடை மெய்ப் பதித்து விழுந்து வணங்கினான். ‘பத்து கியா’ வுக்கு ஊதுவத்தி வாங்கிக் கொளுத்துவதாக பிரார்த்தனை செய்தான். இஷ்ட தெய்வங்களை வரவழைத்து, தன் உயிரைக் காத்தருளும்படி மன்றாடின். மேனியெங்கும் வேர்வை. அவன் மறுபடி கண்களைத் திறந்த சமயம், தன் முன்னே பர்மியப் பெண் ஒருத்தி நிற்பதைக் கண்டான். அவள்தான் அன்பின் உருவம் ! என் அப்பன் விடிவதற்குள் உன்னைக் கொன்று போட்டுவிட்டு, உன் பணம் அத்தனையையும் லூட் அடித்து விடுவதாகத் திட்டம் போட்டிருக்கிறான். மகான் புத்தபிரான் தான் என் அப்பனைக் காத்து ரட்சிக்க வேண்டும். பொங்கிச் சாமிகளைக்கூட சட்டைப்பண்ணா தவனாயிற்றே அவன்! ஐயா, உங்களைப் பார்த்தால் ஏதோ என்னுடன் பிறந்த தமையனார் போலவே தோன்றுகிறது. அப்படித்தான் என் மனசில் பாசம் பெருகுகிறது. எனக்கு அண்ணன் இல்லை. உங்களையே அம்மாதிரி எண்ணுகின்றேன். இப்போதே நீங்கள் உங்கள் பணத்துடன் தப்பித்துக்கொள்ளுங்கள். என் தகப்பன் குடிபோதையில் தூங்குகிறான். இதுதான் தக்க தருணம். இன்று என் உயிர் என்னவோ அளவில்லாத ஆனந்தத்தினால் துள்ளுகிறது. ஆனால் ஒரு விண்ணப்பம். நீங்கள் இந்த லப்பையை அருந்துங்கள். இன்னொன்று, உங்கள் தங்கையை மறந்துவிடாதீர்கள்!….’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினாள் அப்பெண்.

தன்னைக்காத்த தெய்வமென அவளை வாழ்த்திப் பிரிந்தான் சொக்கலிங்கம். அவள் இறுதியில் சொன்னது செந்தட்டீமம்மே பாரே! ‘என்னை மறந்துவிடாதீர்!’ என்ற வாசகம். அவளைத் துறந்து பிரிவதென்பது சாத்தியமா?

“மாட்டீஞ்சி! நீ என் உயிர் காத்த தெய்வமல்லவா? உனக்குத்தானே முதன் முதலாக என்னுடைய திருமணப் பத்திரிகையை அனுப்பினேன்?… நீ திருமண வாழ்த்துக்கூட அனுப்பவில்லையோ? ஏன்”

‘அம்மான்!’ என்று கூப்பிட்டாள் வத்சலை, கையில் பால் தம்ளர் வைத்திருந்தாள். கண்களில் கனவுகளைச் சுமந்திருந்தாள். மது மலரின் எழிலுக்கு வருணனையோ வக்கணையோ தேவையா, என்ன?

முதல் இரவு.

ஆத்திரம் பூக்கவில்லை ; ஆதங்கம் குரல் கொடுத்தது; “அம்மான், அன்றைக்கே உங்ககிட்டே கேட்கணும்னு நினைச்சேன். எப்போ பார்த்தாலும் நீங்க ஏன் பிரமை தட்டிப்போய் இருக்கிறீங்க?… உங்க கண் ரெண்டும் சதா கலங்கிப் போகுதே, ஏன் அம்மான்?…”

மெய்மறந்த பரவசம் எய்தினான் சொக்கலிங்கம். மோகப் பெருமயக்கம் அடைந்த பாவனையில் அவளை ஏறிட்டுப் பார்த்தான். கண்ணாமூச்சி ஆட்டத்திற்குத் துணைவர வத்சலையைக் கைதட்டி அழைக்கும் அழகைப் பார்த்தீர்களா?

“வத்சலை, என்னைப் பார்க்கிறபோது உனக்கு என்ன தோணும்?”

“நீங்க என் தெய்வம் என்கிற ஞாபகம்தான்!”

“அப்படியானா, என்னையே ஒரு ஜீவன் காப்பாத்திச்சுன்னா, அந்த உயிரைப்பற்றி நீ என்ன நினைப்பே?”

“தெய்வத்தைக் காத்த தெய்வம்னு நினைப்பேன்!” “சரி, இந்தப் படத்தைப் பார்!”

அவன் நீட்டிய படத்தைப் பார்த்தாள் வத்சலை. முகத்தில் சலனக்கோடுகள் எழும்பின.

“இந்தா பார், இந்தக் கதையை இல்லை நிஜமாகவே நடந்த கதையைக் கேள்!” என்று சொல்லி, மாட்டீஞ்சியால்தான் பிழைத்து மறு பிறப்புக் கொண்ட விந்தை நிகழ்ச்சியை விளக்கினான் சொக்கலிங்கம். மீண்டும் அவன் சிந்தனை வசப்பட்டான். பிறந்த மண்ணை மிதிக்க எண்ணி, முதல் கணக்கை முடிக்கத் திட்டமிட்ட அவன், முதன் முதலில் மாட்டீஞ்சியிடம் பணம் சொல்லிக்கொள்ளச் சென்றான். அவள் தந்தையை அண்டி, நிரம்பப் பொருள் கொடுத்தால், அது ஒரு வகையில் மாட்டீஞ்சிக்கும் உதவுமே என்பது அவன் கருத்து. மரப்பெட்டி வீட்டில் அடியெடுத்து வைத்ததும், புத்தரின் காலடியில் மாட்டீஞ்சியின் தந்தையின் படத்தைக் கண்டதும், அவனுக்கு மலைப்பு ஏற்பட்டது. தான் அனாதையாகிவிட்டதாகக் கதறினாள் அவள், நினைவுகளின் பிறப்புக்கு நேரம் காலம் இல்லை !

“வத்சலை, என் தெய்வம் மாட்டீஞ்சி எனக்கு வாழ்த்து அனுப்பாமல் இருக்கவே மாட்டாளே?…. அவளிடமிருந்து எதுவும் வராததால், ஒருவேளை அவள் உயிருக்கு…!”
அவன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னதாக, ‘அம்மான், என்னை, என்னை மன்னிச்சிருங்க’ என்னும் அலறல் ஒலி அதிர்ந்தது. “இந்தப் படத்தைக் கண்டதும், தப்பா நினைச்சுக்கிட்டுத்தான் இந்தப் பர்மாக் கடுதாசியையும் ஒளிச்சுப்பிட்டேன். எனக்குத் தாலி பாக்கியம் நிலைக்கச் செய்ஞ்ச தெய்வத்தைத் தப்பா நினைச்சது எவ்வளவு பெரிய பாவம்!” என்று கூறிய வண்ணம், கையிலிருந்த படத்துடன் கிழிக்கப்பட்ட உறைக் கடிதம் ஒன்றையும் நீட்டினாள் வத்சலை.

பர்மிய மொழிக் கடிதத்தின் பொருளை சொக்கலிங்கம் சொன்னான்!

‘உயிருக்கு நேரான அண்ணா!’

நலம். உங்கள் அழைப்பு பெற்றேன். உங்கள் தாம்பத்திய நல்வாழ்வுக்காக மகான் புத்தபிரானின் திருப்பாதங்களைத் தொழுது பிரார்த்தித்தேன். என் அண்ணியைக்காண, திருமணப் பரிசுகளோடு அடுத்த மாதம் கப்பலேறி வருகிறேன். என் எதிர்காலக் கணவரும் உடன் வருவார்.

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *