சூட்சுமம்

 

சிவராமனும் நானும் கடந்த பத்து வருடங்களாக கிண்டியிலுள்ள ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களது பழக்க வழக்கங்கள் நேர் எதிர்.

சிவராமன் ஐயிரு வீட்டுப்பையன். அவன் என்னிடம் பழக ஆரம்பித்த புதிதில், “நாங்க வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளை வீட்டில் சேர்க்க மாட்டோம்.” என்றான்.

“அடப்பாவி, வெங்காயம் சாப்பிட மாட்டீங்களா ? சுத்தம்….விளங்கிரும்.” என்றேன்.

அவன் ரொம்ப அமைதியானவன். யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டான். போட்டி, பொறாமை, பாவ்லா பண்ணுவது என்று எந்த செயற்கை எண்ணங்களும் அவனுக்கு கிடையாது. தவிர சிகரெட், கட்டிங், கஞ்சா, புகையிலை, பிற பெண்களின் சகவாசம் என்று எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது.

ஆனால் நான் ஒரு ஷோக் பேர்வழி. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட், தினமும் வீட்டுக்கு போவதற்குமுன் ரெண்டு கட்டிங், உள்ளங்கையில் தேய்த்து தேய்த்து போடும் ஜரிதா பான், அவ்வப்போது கஞ்சா, புகையிலை, கிண்டியில் ரேஸ்…. ரொம்ப முக்கியமா என்னோட தொடுப்பு நித்யா என்று ஒரு மனிதனுக்கு என்னென்ன கெட்ட பழக்கங்கள் ஏற்பட சாத்தியமுண்டோ அத்தனையும் எனக்கு அத்துப்படி.

சிவராமன் வேலையிலும் கெட்டிக்காரன். அடிக்கடி லீவு எடுக்க மாட்டான். எந்த வேலையையும் ஒத்தி வைக்காமல் மிக நேர்த்தியாக செய்வான். தன் வேலை முடிந்ததும் அடுத்தவர்கள் வேலையையும் ஈடுபாட்டுடன் எடுத்துச் செய்வான்.

மதிய உணவுக்குப் பிறகு நாங்கள் மூன்று நான்குபேர் அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெட்டிக்கடையில் நின்றுகொண்டு சிகரெட் வாங்கி புகைப்போம். அப்போது தான் புகைக்காவிடினும், எங்களுடன் அங்கு நின்றுகொண்டு பேசுவான். ‘நான் ரொம்ப யோக்கியன் அதனால உங்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பேன்’ போன்ற பம்மாத்துகள் அவனிடம் அறவே கிடையாது.

எனக்கு அவனது நேர்மையான நடத்தையின் மீதும், நல்ல பழக்கங்களின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. அதனால் அவனிடம் மிகுந்த வாஞ்சையுடன் இருப்பேன்.

நங்கநல்லூரில் சிவராமன் இருப்பது கூட்டுக் குடும்பத்தில். அவனுடைய பாட்டி; வயதான அம்மா, அப்பா; மூத்த அண்ணா, மன்னி; பள்ளிக்குச் செல்லும் அவர்களின் மூன்று குழந்தைகள்…என பெரிய குடும்பம்.

சிவராமனுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகி விட்டது. நான் அவன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். இன்னமும் குழந்தை இல்லை. அது குறித்து அவ்வப்போது என்னிடம் வருத்தப் படுவான்.

“குழந்தை பிறக்க நீ அடிக்கடி புவனாவுடன் தனிமையில் இருக்க வேண்டும் சிவராமா, நீ ஹனிமூன்கூட போகல. அந்த தனிமைதான் உனக்கு இன்னமும் வாய்க்கவில்லையே…”

“இல்லியே, நானும் புவனாவும் ராத்திரி பெட்ரூமில் தனியாத்தானே படுத்து தூங்குகிறோம்… நல்ல தாம்பத்திய உறவில்தான் ஈடுபடுகிறோம்..”

“உனக்கு புரியலை சிவராமா, தாம்பத்யம்னா அதுமட்டும் காணாது. தனிமைன்னா வீட்ல ராத்திரி பெட்ரூமில் தாச்சுக்கிறது மட்டும் இல்ல. சில்மிஷம் செய்து வாய்விட்டு சிரிக்கலாம் என்றால் உங்களால் முடியாது, நீங்க சத்தம்போட்டுக்கூட கொஞ்ச முடியாது. தொடர்ந்து ஒருநாள், இரண்டுநாள் முழுக்க, யாருடைய இடையூறும் இல்லாம, கற்பனைகளுடன் கூடிய முஸ்தீபுகளுடன் உங்க தாம்பத்திய உறவு ஏகாந்தமா இருக்கணும்.”

“………………….”

“ஒண்ணு, நீ ஊட்டி, கொடைக்கானல்னு எங்கியாவது புவனாவை கூட்டிகிட்டு போ, இல்லன்னா, வீட்ல எல்லாரையும் திருப்பதி, திருமலைன்னு எங்கியாவது ரெண்டு நாளைக்கு ஊருக்கு அனுப்பு. அப்புறமா நீ வீட்டுக்குள்ள சுதந்திரமா பகல், ராத்திரின்னு பார்க்காம புவனாவுடன் ரொம்ப ரொமாண்டிக்கா இரு… உச்சகட்டத்துல சுதந்திரமா ஆ ஊன்னு வாய்விட்டு கத்து….அப்புறம் பாரு.”

ஒருவாரம் சென்றது….

அன்று திடீரென்று சிவராமன் அலுவலகம் வரவில்லை. என்னிடமும் அவன் போனில் எதுவும் சொல்லவில்லை. நான் சற்று கவலையடைந்தேன். உடனே அவன் மானேஜரிடம் சென்று கேட்டதற்கு, “உடம்பு சரியில்லையாம் போன் பண்ணிச் சொன்னார்” என்றார்.

நான் உடனே சிவராமன் மொபைல் நம்பரைத் தொடர்பு கொண்டேன்.

சிவராமன் ரொம்ப கூலாக, “உடம்புல்லாம் நல்லாத்தான் இருக்கேன். என்னோடது, கூட்டுக் குடும்பம்னுதான் உனக்கே நல்லா தெரியுமே, என் பாட்டி, அம்மா, அப்பா மூவரும் காளஹஸ்தி, திருப்பதி போயிருக்காங்க; அண்ணனும், மன்னியும் மாம்பலத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க; அவங்க குழந்தைகள் ஸ்கூலுக்கு போயாச்சு. புவனா மட்டும்தான் வீட்டில் தனியா இருக்கவேண்டிய சூழ்நிலை. அதுனால திடீர்ன்னு எனக்கு அவளோட தனியா இருந்து நாள் முழுவதும் அவள கொஞ்சனும்னு தோணிச்சு. அதான்…. இப்ப நானும் புவனாவும்தான் வீட்ல.” என்றான்.

“அடிசக்கை…அப்படிச் சொல்லுடா…ஜமாய்டா என் செல்லக்குட்டி.”

அடுத்த இரண்டுவாரம் கழித்து, ஒரு வியாழன், வெள்ளி லீவு எடுத்தான் . சனி, ஞாயிறு ஏற்கனவே ஹாலிடே. என்னடான்னு கேட்டா, பெங்களூர் ஆபீஸ் ஆடிட் பண்ணனும்னு வீட்ல பொய் சொல்லிவிட்டு, புவனா பெங்களூரே பாத்ததில்லைன்னு சொல்லி அவளுடன் நான்கு நாட்கள் கூர்க் பக்கத்தில் உள்ள பாலிபெட்டா என்கிற மலைவாசஸ்தலத்தில் உள்ள டாட்டாகாப்பி கெஸ்ட் ஹவுஸில் போய் தங்கினானாம். இதுல என்ன விசேஷம்னா எங்களுக்கு பெங்களூர்ல ஆபீசே கிடையாது.

“அடப்பாவி, வரவர நீ ரொம்ப பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட….ஆமா அதெப்படி உனக்கு அந்த பாலிபெட்டா தெரியும்?”

“நீதான போன வருஷம் நித்யாவோட அங்கபோய் ரெண்டுநாள் தங்கிட்டு வந்து கெஸ்ட்ஹவுஸ் கேர்டேக்கர் பேரைச்சொல்லி அவன் போன் நம்பர எனக்கு கொடுத்த…..மறந்துபோச்சா?”

ஒரு பெண்ணின் அருகாமை தரும் கிறக்கம் எப்படியெல்லாம் ஒருத்தனை பொய் சொல்ல வைக்கிறது ! ஆனால் இவன் விஷயத்தில் அந்தப் பெண் அவன் மனைவி என்பதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

அதன்பிறகு வீட்டில் அடிக்கடி பொய்சொல்லி, புவனாவுடன் தனிமைச் சந்தர்ப்பங்களை ஏராளமாக ஏற்படுத்திக் கொண்டான் சிவராமன்.

ஆறு மாதங்கள் சென்றன. அன்று அலுவலகத்தில் இருந்த என்னிடம் வந்த சிவராமன், “புவனா உண்டாயிருக்கா” என்றான்.

நான் உடனே என் இருக்கையிலிருந்து துள்ளி எழுந்து “அடிசக்கை அப்படிப்போடு அரிவாளை…கங்கிராட்ஸ்” என்றேன். அவனது கையைப் பிடித்து குலுக்கினேன்.

“நீ சொன்னது ரொம்பசரி. திருமணத்திற்கு பிறகு முதலில் கணவனுக்கும் மனைவிக்கும் மனரீதியில் நல்ல புரிதல் வேண்டும். பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல், நிபந்தனையற்ற அன்பு, பாசம் போன்றவற்றால் அந்த புரிதல் ஏற்படுகிறது. அதன் பிறகுதான் உடல்புரிதல் ஏற்படுகிறது. அம் மாதிரி புரிதலுக்கு அதிக அளவில் நிச்சந்தையான தனிமை தேவைப் படுகிறது. அந்த தனிமையில்தான் இருவருக்கும் உடல் தேவைகளின் ரிதம் புரிகிறது. ஆனால் இந்த புரிதல்களுக்கு நான் ஐந்து வருடங்கள் எடுத்துக்கொண்டது ரொம்ப அதிகம்….இது என்னுடைய அறியாமை.”

“பரவாயில்லை சிவராமா பெட்டர் லேட் தேன் நெவர்.” என்றேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
ராஜசேகர் அந்தப் பிரபல நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு ஆயத்தமானான். கிளம்பும்போது தாத்தா ஜம்புநாதனின் காலைத் தொட்டு வணங்கினான். அவரின் கண்கள் லேசாக ஈரமானது. ஜம்புநாதன் சுதந்திரப் போராட்ட வீரர். போராட்டத்தில் தனது ஒரு காலை இழந்தவர். அதற்காக கலங்கி விடாமல், தனது எண்பது ...
மேலும் கதையை படிக்க...
அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில் பிரசுரமாகியிருந்ததுதான். ஏற்கனவே அவனது படைப்புகள் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்டு பிரசுரமாகி இருப்பினும், அவனுடைய இந்த பிரத்தியேக சந்தோஷத்திற்கு காரணம், சுமதியுடன் பரிச்சயமான ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஞாயிற்றுக் கிழமை. அறுபது வயதான ரகுராமன் தன் ஸ்மார்ட் போனை நோண்டிக் கொண்டிருந்தார். “சிறந்த அழகான தஞ்சாவூர் ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளது. தொடர்பு கொள்ளவும்: ராகுல் 99000 06900” OLX ல் வந்திருந்த அந்த விளம்பரத்தை பார்த்த ரகுராமன் மனைவி லக்ஷ்மியைக் கூப்பிட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
தி.நகர். சென்னை. தன் வீட்டில் அமர்ந்தபடி விசிறியால் முதுகைச் சொறிந்து கொண்டிருந்த நடராஜனுக்கு எழுபது வயது. ஒரு குடும்பத் தலைவனாக இன்றைக்கும் அவரது அதிகாரம்தான் வீட்டில் கொடிகட்டிப் பறக்கிறது. கூட்டுக் குடும்பம். நான்கு மகன்களில் மூன்று பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் முரளிக்கு போன வாரம்தான் ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் வந்தனா. வயது முப்பத்தைந்து. அன்பான கணவர். பதினைந்து வயதில் ஒரு அழகான மகள். பெயர் சுகன்யா. சேலத்தில் ஒரு பிரபல பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறாள். அழகான, அமைதியான கவிதை போன்ற என் குடும்பத்தில் மகள் சுகன்யாவால் தற்போது நிம்மதியிழந்து தவிக்கிறேன். ...
மேலும் கதையை படிக்க...
நாளை வரும்
கண நேர மீட்சிகள்
தஞ்சாவூர் ஓவியங்கள்
மீறல்
இக்கால இளசுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)