சுருதி பேதம்

 

எப்போதும் விருப்பத்துக்குரியதாக இருப்பது சமயத்தில் அதிகபட்ச வெறுப்புக்கும் உள்ளாகும் இல்லையா. அப்படித்தான் எனக்குப் பிடித்த, நான் சார்ந்திருக்கும் உத்தியோகம் இந்த நிமிடம் எனக்குப் பிடிக்காமல் போனது.

நான் ஒரு பத்திரிகை நிருபர். இது சங்கீத சீஸன். இசைப் பிரியர்களின் வார்த்தைகளில் ‘டிசம்பர் சீஸன்’. நாரத கான சபாவில் நேற்று நடந்த கச்சேரி-யில் பாடிய புதுமுகப் பாடகி நித்ய கல்யாணி, ஒரே பாடலில் ராகங்களை வித்தியாசப்படுத்தி தசாவதாரம் எடுத்திருக்கிறார். அதுபற்றிய செய்தி உடனே தேவை. சாஸ்திரியைச் சந்தித்துச் சேகரிக்க வேண்டும்.

பரந்தாமன் இன்றைக்குத் திடீர் விடுப்பில் இருப்ப தால் அவசரத்துக்கு நான் பணிக்கப்பட்டேன். இல்லை… சபிக்கப்பட்டேன் என்பதே சரி. சாபம் என்றது கொடுக்கப்பட்ட வேலையை அல்ல. சந்திக்கப்போகும் நபரை. அவர் பொருட்டு உண்டானதுதான் வேலை மீதான கோபம்.

சாஸ்திரியின் தொடர்புகளில் இருந்து விலகியே நான்கைந்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டாலும் பாறையில் படிந்த படிமமாக இருக்கின்றன என்னுள் அவர் நினைவுகள். சாஸ்திரிய சங்கீத உலகில் தனக்-கென தனி இடம் பிடித்தவர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி. சரளி வரிசை தெரிந்த அத்தனை பேருக்கும் அடுத்த-படியாக சாஸ்திரியைத் தெரிந்திருக்கும். விமர்சகராக அத்தனைப் பிரபலம். விஷய வங்கி. விமர்சன வார்த்தை-களைப் பொருத்தவரை விஷ வங்கியும்கூட. மேடை ஏறினால்தான் என்றில்லை… அவர் முன்னால் நின்றால்கூட விமர்சனத்துக்கு உள்ளாகும் பரிதாபம் பலருக்கும் பலமுறை நிகழ்ந்தது. அவ்வளவு ஆணவம். துலாபாரத்தில் ஒரு புறம் அவர் திறமையையும் மறுபுறம் அவர் திமிரையும் வைத்தால், திமிர் சுமந்த தட்டு சட்டெனத் தரை தட்டும்.

எங்கள் பத்திரிகையில் இசை தொடர்பாக வரும் எந்த ஒரு நெடிய செய்தியும் அவர் மூலமாகத்தான் வரும். அல்லது அவரது ஒப்புதல் பெற்ற பிறகே வரும். தன்னைச் சந்திக்க எந்த நிருபர் வர வேண்டும் என்று முடிவு செய்யும் அளவுக்கு எல்லை மீறிய அலப்பறைகள் இருந்தபோதிலும், அவர் திறமை மீதான அபிமானத்தால் எங்கள் நிர்வாகம் அதை அனுமதித்தது.

‘கௌசல்யா சுப்ரஜா…’வில் விடியல் தொடங்கும் பனி பொழியும் மார்கழியில்தான் பெரும்பாலும் நான் அவரைச் சந்தித்ததெல்லாம். ஆனால், அதன் ஒவ்-வொரு நினைவும் தகிப்பும் தணலுமாகவே இருக் கிறது.

முதன் முதலாகச் சந்தித்த நாளில் சாஸ்திரி வீட் டோடு ஓர் இசைப் பள்ளி நடத்தி வந்தார். ஏழைக் குழந்தைகளுக்கு இலவசம் என்பது அதில் இருந்த நல்ல விஷயம். பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லாத சாஸ்திரிக்குக் குழந்தைகள் மீதான வாஞ்சை என்றே அதை நினைத்தேன். குருதட்சணை கொடுக்க வழியற்ற குழந்தைகள், ‘குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா…’வை ஸ்ருதி விலகாமல் உருகும். ஆரம்பத்தில், ஈர்ப்போடு திமுதிமுவெனக் குவிந்தது மழலையர் கூட்டம். யார் கண்ணும் படவில்லை. ஆனாலும் வந்த வேகத்திலேயே அவர்கள் ஓடிப் போனார்கள். தன் பொறுப்பில் இருப்பது சொல்லிச் செதுக்க வேண்டிய பிஞ்சுகள் என்பதை மறந்தவராக, ‘சாதகம் சரியில்லே… கமகம் முறையில்லே…’ என்று தன் ருத்ர முகத்தைக் காட்டியதே அதற்குக் காரணம்.

வகுப்பறை அநாதையாகி, பிறகு வரவேற்பறையானது. பின் வந்த நாட்களில் அது அவருக்காக நான் காத்திருக்கும் இடமானது. தொடை தட்டித் தாளமிடும் சிறு பெண்களின் குரல் இல்லாத அந்த சூழல் சூன்யம் சூழ்ந்த ஒரு மயானமாகவே தோன்றியது எனக்கு.

ஓர் ஐப்பசியில் அடர் மழை நாளின் குளிர் இரவில் சாஸ்திரி வீட்டில் இருந்தேன். இசைப் புத்தகம் வெளியீடு தொடர்பான சந்திப்பு அது. விழுந்து உடையும் பெருமழையில் வெளியேற முடியாமல் காத்திருந்தபோது, சாஸ்திரியின் உத்தரவால், தவிர்க்க முடியாமல் அங்கேயே சாப்பிட வேண்டியதாயிற்று. வெண்டைக்காய் பொரியலும் வெந்தயக் குழம்பும். என்னருகில் சாஸ்திரி. எனக்கு வெங்காய வாடை ஒவ்வாத ஒன்று. அதன் சிறு துணுக்கு கண்ணில் பட்டாலும் ஒதுக்கிவிட்டுத்தான் மறு காரியம். அன்றும் அப்படியே செய்தேன். இங்கும் சாஸ்திரி உள் வருவார் என்பது நான் சற்றும் எதிர்பாராதது.

”வெங்காயம் உடம்புக்கு நல்லதுங்கற-தாலேதானே சமையல்ல சேர்த்திருக்கா… அதை ஒதுக்கி வெக்கறது அவமதிக்கிறாப்-போலன்னாஆறது. வெங்காயத்தை மட்டு-மில்லே, அதைச்சமைச்ச வாளையும் சேர்த்துன்னா அவமானப் படுத்தறேள். முடிஞ்சா அதையும் சேர்த்துச் சாப்பிடுங்கோ… இல்லேன்னா எழுந்துடுங்கோ” என்று விட்டார் முகத்தில் அறைந்த மாதிரி. கொலைக் குற்றவாளிக்குத் தீர்ப்பு சொல்வதுபோல இறுக்கமாக இருந்தது அவர் முகம். சாப்பாட்டில் கை வைத்திருக்கும் ஒரு விருந்தாளியிடம் நடந்துகொள்ளும் முறையா இது? வெங்காயம், தக்காளிக்குக் கொடுக்கும் மரி-யாதையைச் சக மனிதர்களிடம் காட்டத் தெரியாத சாஸ்திரி வீட்டில் அதன் பிறகு சொட்டுத் தண்ணீரை யும் தொட்டுப் பார்த்ததில்லை.

பிறகொரு நாள் என் முன்னால் அவர் மனைவி அவமானப்படவும் அதே உணவு காரணமானது. சாப்-பாட்டில் கிடந்த சிறு கல்லுக்காகத் தட்டை சாதத்தோடு விட்டெறிந்தார் சாஸ்திரி. சுவரெல்லாம் குழம்பின் தடம். அடுத்த அறையில் இருந்த என் காலடியில் உருண்டு நின்ற தட்டை, குனிந்து எடுத்த சாஸ்திரியின் மனைவி, என் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, வெட்கி, விரல்கள் நடுங்க, ஒடுங்கிய காட்சி இன்னும் ஈரமாக இருக்கிறது என் விழிகளுக்குள்.

‘என் உணர்வுகளைக் காயப்படுத்த உனக்கென்ன உரிமை இருக்கிறது?’ என்று பெண்ணியம் பேசத் தயங்கி, போனால் போகட்டும் என்று மாமி விட்டுக்-கொடுத்த சலுகைகளே போகிற போக்கில் சாஸ்திரியின் உரிமைகளான உண்மை இருவருக்குமே புரியவில்லை. பிடிக்காததை ஒதுக்கிவைத்ததே தவறு என்று சொன்ன மனிதருக்கு விட்டெறிவது சரி என்று பட்டதை என்னவென்று சொல்ல?

மனைவியிடம் என்றில்லை, மற்றவர் உரிமைகளுக்கும் அவர் கொடுக்கும் மரியாதை அதே அளவுதான். ‘எலே எலே’ என்று லகரத்தின் ஆக்கிரமிப்பு அதிகம்கொண்ட நெல்லைத் தமிழை அத்தனைச் சுலபத்தில் யாரும் பேசிவிட முடியாது. நாக்கு சுளுக்கும்’ என்பார்களே… நான்கே நாட்கள் திருநெல்வேலியில் தங்கியிருந்தால், அட்சர சுத்தமாக நெல்லைத் தமிழ் பேசுவேன் நான். எந்த வட்டார வழக்கும் அத்தனை விரைவில் அத்துப்-படி ஆகிவிடும் எனக்கு. அப்படித்தான் அந்த டிசம்பர் சீஸன் முழுக்க சாஸ்திரியோடு சபாக்களிலும் கச்சேரி-களிலுமே சுற்றித் திரிந்ததில் பிராமண பாஷையும் பழகிப்போனது. அதை அவரிடமே பிரயோகிக்கும்படி ஆனதுதான் என் போதாத காலம். ‘சொல்லுங்கோ… எழுதினுட்டேன்…’ என்று என்னையும் மீறி சொல்லி-விட்டேன். வந்தது வினை. ”நீங்க பிராமணாளா? இல்லையோன்னோ… பின்னே ஏன் அப்படிப் பேச-றேள்? என்னை இமிடேட் பண்றேளா?” என்று அவர் எகிறிக் குதித்தபோதுதான் என் நாக்கு செய்த சதி புரிந்தது. விளக்கம் சொல்லி, காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்ட பிறகே கோபம் கொஞ்சம் தணிந்தது.

பேச்சுரிமையைப் பறிகொடுத்தது மட்டும் இல்லாமல், எழுத்துச் சுதந்திரம் பறிபோன கதையும் இதே போலத்தான்.

விரைவு வார்த்தைகளையும் விடுபடா-மல் குறிப்பெடுக்கும் கலை நிருபர்களுக்கு உண்டு என்ற உண்மை மீது ஏனோ சாஸ்திரிக்கு நம்பிக்கை இல்லை. சுருக் கெழுத்தில் எழுதினால் அவருக்குப் பிடிக்காது. ”என்ன அவசரம்? நான் சொல்-றத வார்த்தை பிசகாமல் விரிவா எழுதுங்கோ!” என்பார். அவசரம் அவ ருக்கு இல்லை. அவரைக் கட்டிக்கொண்டு அழும் எனக்கு இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. வெறுப்பு வரும். விழுங்கிவைப்பேன்.

அவர் சிரித்துப் பார்த்ததில்லை யாரும். கடைவாயில் இஞ்சி மாட்டிக்-கொண்ட குரங்கு போலவே எப்போதும் இருக்கும் முகம். உள்ளபடியே அவர் உடல்-மொழி அதுதானா? அல்லது தன்னை உயர்த்திக்காட்ட அவராகப் போட்டுக்கொண்ட அரணா?

பத்மஸ்ரீ வாஸந்தியின் கடைசி நாள் கச்சேரி மியூஸிக் அகாடமியில். அன்று சாஸ்திரியுடன் நானும் இருந்தேன். ஆரம்பித்த நொடியிலேயே களைகட்-டியது சபா. வாஸந்தி, பாபநாசம் சிவன் கீர்த்தனையை சஹானாவில் எடுத்து குரலில் ஒரு குழைவைக் கொண்டுவந்த-போது, கண்களில் நீர் திரையிட, மெய் மறந்தது அரங்கம். புகழாத-வர்களே இல்லை. ஆனால், சாஸ்திரிக்கு மட்டும் அதில் ஏதோ குறை தென்பட்டுவிட்டது. அதையே பிரதானமாக்கி ‘பாராட்டுக்குத் தகுதியானவரா வாஸந்தி?’ என்று வழக்கத்தைவிடக் கூடுதலாக இரண்டு பக்கங்களில் சீறித் தள்ளிவிட்டார்.

‘பிறர் போகும் பாதைக்கு எதிர்ப் பாதைதான் எப்போதும் என் வழி’ என்ற சாஸ்திரியின் போக்கு தன்னைத் தனித்து வெளிப்படுத்தும் மட்டமான தந்திரம்தான் என்று பகிரங்கக் குற்றம் சாட்டி, சங்கீத உலகமே அவருக்கு எதிராகத் திரண்டது. ஆனாலும், அசரவில்லை. ”சஹானாவிலே யார் பாடினாலும் கேட்கறவா அதுல உருகி கசியத்தான் செய்வா… அதுவே போறும்னு விட்டா எப்படி? இவர் பங்கும் சேரணுமோல்லியோ?” என்று கடைசி வரை தன் முடிவே சரி என்று சாதித்து, அத்தனை பேர் வாயையும் அடைத்தார்.

குறை சொல்வது மெல்லிய காது திருகலாக இருக்க வேண்டுமே தவிர, கூரிய கத்தியால் குத்திக் கிழிப்பதாக இருக்கக் கூடாது என்பது தெரிந்தும் அதையே ஒரு வேண்டுதல் போலத் தொடர்ந்த சாஸ்திரியைப் பற்றி வெளியே அவ்வளவாகத் தெரியாத ஒரு சங்கதி… சாஸ்திரி ஒரு பிரமாதமான பாடகர். அத்தனை சுலபத்தில் வசப்படாத சக்ரவாஹம்கூட அவர் குரலில் மகுடிக்கு மயங்கிய நாகமாக இழுத்த இழுப்புக்கு வருவதை நானே கேட்டிருக்கிறேன். ஆனாலும், அடுத்தவரை நோகடித்துக் கொக்கரிக்க வேண்டும் என்ற மனமே அவரை விமர்சகராக ஆக்கியிருக்கிறது.

விரும்பிச் செய்யும் தவறுகளுக்குக் காலம் என்றாவது விலை வைக்காமலா போய்விடும்?

நகரத்தின் சலசலப்புக்களும் பேரிரைச்சலும் ஒடுக்கப்பட்ட ஓரிடத்தில், ரோஜா, முல்லை, சம்பங்கி, அடுக்குச் செம்பருத்தி என்ற நிறம் பலகொண்ட பூக்களோடு பசுமை பூத்த பூந்தோட்டத்துக்கு மத்தியில் குத்துவிளக்கு போல இருக்கும் அவர் வீடு. பூலோகச் சொர்க்கம் போன்ற அத்தனை சுகந்தமான சூழலில் வாழும் ஒருவருக்குத்தான் குணத்தில் அத்தனை காரம். தரப்போவது அரைப் பக்கச் செய்தியானாலும் மணிக்கணக்காக என்னைக் காத்திருக்க-வைப்பது சாஸ்திரி விருப்பத்துடனே எப்போதும் நிகழ்ந்தது.

சாஸ்திரி வெளியே சென்றிருந்தார். சீக்கிரமே வந்துவிடுவதாகத் தகவல் இருந்ததால் வழக்கம்போலக் காத்திருந்தேன். ஒரு வித்தியாசம், சாஸ்திரி வீட்டில் இல்லாமல் நான் காத்திருப்பது அதுவே முதல் முறை. அவரை நான் சந்தித்த கடைசி முறையும் அதுவே.

‘கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்…’ – உள்ளிருந்து வந்தது உயி-ரோசை. உயிரைத் தொடும் நாதம். அற்புதமான பெண் குரல். பக்க வாத்திய ஒலி ஏதும் இல்லை. அதனால்தான், அது இசைத்தட்டு இல்லை என்று புரிந்தது. ஆவலை அடக்க முடியாமல், பாடுவது யார் என்று உள்ளே சென்று பார்த்தேன். நுனியில் முடிச்சிட்ட கூந்தலில் ஈரம் சொட்ட, குழலூதும் கண்ணன் முன் அமர்ந்து இமை மூடி உருகிக்கொண்டு இருந்தார் மாமி. கன்னங்களில் கோடிழுத்து வழிகிறது நீர். அது வெறும் பக்தியாகத் தோன்றவில்லை. ‘வந்துடேன் கிருஷ்ணா…’ என்று பிள்ளையிடம் மன்றாடிக் கெஞ்சும் யசோதையின் பரிதவிப்பாகவே இருந்தது. பிள்ளை இல்லாத ஏக்கம். தேம்பும் தாய்மை.

அவர் பாடுவார் என்பதே எனக்குப் புது சங்கதி. அதிலும் இத்தனை பிரமாதமான சாரீரமா! இமை திறக்கும் வரை சத்த மிடாமல் காத்திருந்து, பிறகு மனம்விட்டுப் பாராட்டினேன். சங்கோ ஜப்பட்டார். முதன் முறையாக என் முகம் பார்த்துப் பேசினார். என்னைப்பற்றி விசாரித்து, தன்னைப்பற்றியும் சொல்லத் தொடங்கினார். தங்களுக்கு ஒரு குழந்தை இருந்து இறந்தது என்றார். குரல் கம்ம அவர் சொன்னபோது, எனக்கும் தொண் டைக்குள் ஏதோ அடைத்தது. சற்று முன் அவர் பாட்டில் தவித்ததன் பொருள் புரிந்தது. பிள்ளையே பிறக்காமல் இருப்பதை-விட, பெற்றுப் பறிகொடுப்பது கொடுமையிலும் கொடுமை. அந்த துக்கத்துக்கு ஆட்பட்ட மாமி, சொல்லிவிட்டு சட்டென உள்ளே சென்று ஒரு புகைப்-படத்தோடு திரும்பினார்.

இடுப்பில் ஒற்றை அரைஞாண் கயிற்-றோடு புட்டம் காட்டி வெற்றுடம்போடு குப்புறக் கவிழ்ந்து முகம் தூக்கிப் பார்க்கும் ஆறு மாதக் குழந்தை-யின் கறுப்பு வெள்ளைப் படம் அது. ”இதுதான் என் பிள்ளை. பேரு நாராயணன். உயிர் பிரியறதுக்கு ஒரு வாரம் முன்னதான் இத எடுத்தோம். இதுல எங்கயாச்சும் எங்களைவிட்டுப் போயிடுவான்னு தெரியறதா பாருங்கோ” என்றார். அம்மா பாசத்தையும் மீறிய உண்மை. குழந்தை நிஜமாகவே கொள்ளை அழகு.

”எப்படித் தவறிச்சு?”

”ஆங்… தவறிடுத்து. எனக்குக் குடுப்பினை இல்ல. போயிடுத்து. ஆயுசு முடிஞ்சா, போயிட வேண்டியது-தானே. ஆனா, போற போக்குல அவரைப் பாவியாக்கி-னுண்டிருக்க வேண்டாம்”- விரக்தி வார்த்தைகளோடு விட்டம் வெறித்தது அவர் பார்வை.

சாஸ்திரிகளையா? குழந்தையின் சாவுக்கு அவர் காரணமா… எப்படி?

”அன்னிக்கு நான் குழந்தையத் தூங்கப்-பண்ணிண்டு அவராண்டப் பார்த்துக்கச் சொல்லிட்டு, கடைத் தெரு வரைக்கும் போயிருந்தேன். அவர் சாதகம் பண்ணிண்டு -இருந்தார். திடீர்னு முழிச்சுட்டு குழந்தை விடாத அழுதுண்டிருக்கான். அவர் தூளிய ஆட்டிவிட்டிருக்கார். அப்பமும் அழுகைய நிறுத்தல. இவருக்குக் கோபம் வந்துடுத்து. நான் வந்து பார்த்துக் கட்டும்னுட்டு வெளியே எழுந்துபோயிட் டார். அன்னிக்குனு பார்த்து நான் வர சித்த நாழி ஆயிடுத்து. என் பிள்ளை அழுதழுதே மூச்சுமுட்டி பிராணனைவிட்டுட்டான். இனி, காலத்-துக்-கும் தனியாக் கெடந்து அழுடி அம்மானு விட்-டுட்டுப் போயிட்டான். விதி… யாரை நொந்துக்க?”- வழியும் கண்ணீரைத் துடைக்க முயலாமல் மாமி சொல்லி நிறுத்த, நான் ஆடிப் போய்-விட்டேன்.

பச்சை மண், அதுவும் பெற்ற பிள்ளையின் அழுகை-யைச் சகிக்க முடியாத அளவுக்கு அரக்கத்தனம் மிகுந்த-வரா சாஸ்திரி? இவருக்கெல்லாம் எப்படி இசை வசப்பட்டது? அவர் அலட்சியம் காரணமாகவே ஓர் உயிர்ப் பலி. அந்தக் குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லையே அவரிடம். இல்லாதது மட்டுமன்றி அப்படியன்று நடந்ததா என்பது போல இன்னமும் எத்தனை ஆணவம்? சாஸ்திரி மீது அளவு கடந்த வெறுப்பும் கூடவே பயமும் வந்தது.

மாமி உடல் வெடவெடக்கச் சொல்லி முடித்து கண்களை அழுத்தி மூடியதும், சிறு ஒலியும் அற்ற அந்தக் கணத்தின் அடர்ந்த நிசப்தமும், அதனை ஆக்ரோஷமாகக் கிழிப்பது போல சுவர்க் கடிகாரத்தில் மணி 12 அடித்து ஓய்ந்ததும் சற்று முன் நிகழ்ந்தது போல் இப்போதும் நினைவுகளில். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது மார்கழி முடிவுக்கு வந்திருந்தது.

மறு மார்கழி வருவதற்கு முன் ஆசிரியரிடம் பேசி, சாஸ்திரியைச் சந்திக்கும் பெரும் பொறுப்பை ஜுனியர் நிருபரிடம் கைமாற்றிவிட்டு நான் ஒதுங்கிக்-கொண்டேன். இடைப்பட்ட காலத்தில் நிறைய மாற்றம்.

மனிதத்தின் எந்தச் சம்பிரதாயங்களுக்கும் கட்டுப்-படாமல், தான் செய்வதே சரி என்ற சர்வாதிகாரப் போக்குகொண்ட சாஸ்திரியின் அத்துமீறல்களால் ஒரு கட்டத்தில் கடுப்பான எங்கள் பத்திரிகை, அவர் தயவில் இருந்த இசைப் பக்கங்களைப் பறித்து,வேறொரு வரிடம் ஒப்படைத்தது. அரிதான சில வேளைகளில் மட்டுமே சாஸ்திரி தேவையானார். சமயங்களில் சாஸதிரியே குறிப்புகள் எழுதிக் கொடுப்பார். அதனை வாங்க அட்டெண்டரை அனுப்பும் ஆபீஸ்.

சாஸ்திரி மீது எனக்கு அளவுகடந்த வெறுப்பு இருந்தாலும் அதை அவர் அறியக் காட்டியதில்லை. அவரைப் பொருத்தவரை இன்று வரையிலும் இணக்க-மான நபராகத்தான் அறியப்பட்டிருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் போன வருடம் நடந்த அவரது சஷ்டியப்தப்பூர்த்திக்கு ‘கண்டிப்பாக வரவும்’ என்ற கண்டிஷனோடு பத்திரிகை அனுப்பி, பற்றாக்குறைக்கு போனிலும் கூப்பிட்டார். மாமி முகத்துக்காகவாவது சென்றிருக்கலாம். ஆனாலும் போகவில்லை. நிராகரிப்-பதில் சிறு திருப்தி.

ஆறு மாதங்களுக்கு முன் மாமி மாரடைப்பால் காலமானார். ”பழகிய ஆள். போய் ஒரு வார்த்தை விசாரி” என்று பலரும் சொன்னார்கள். எனக்குத்தான் மனம் வரவில்லை. துக்கம் விசாரிப்பது மரித்தவருக்கு மரியாதை என்பதைவிட, பறிகொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறும் ஒரு சடங்கு. மனிதர்களே வேண்டாம் என்று விரட்டும் ஒருவருக்கு அது எதற்கு?

பிள்ளையைப் பிரியக் காரணமான கணவரை இத்தனை காலமாகச் சகித்து குடும்பம் நடத்திய மாமிக்கு மனதுக்குள்ளேயே ஒரு மலர்க் கிரீடம் வைத்து அஞ்சலி செய்துவிட்டு, அமைதியானேன்.

இந்த நிலையில்தான் இன்று இதோ மீண்டும் ஒரு சோதனை ஓட்டம்.

”ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
வாழும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்”

வாணி ஜெயராம் குரல் வாசலுக்கு வந்தது. ஆச்சர்யமாக இருக்கிறது… சினிமா பாட்டு சாஸ்திரி வீட்டிலா? ஆச்சர்யங்கள் அடுத்தடுத்தும் தொடர்ந்தன.

என்னைக் காக்கவைக்காமல் என் வருகைக்காக அவர் காத்திருந்தார். அதைவிட ஆச்சர்யம், நான் எதிர்-பார்த்தது போல வீண் வியாக்கியானங்கள் இல்லாமல் எனக்கான தகவல்களுடன் தன் பேச்சை முடித்துக்-கொண்டார்.

உடல், குரல் என்று எங்கும் மிச்சமில்லாமல் நிறைந்-திருக்குமே அந்தச் செருக்கு… அது… அதுகூட இன்று இல்லை. வந்த வேலை முடிந்ததும் கிளம்பினேன்.

வாசல்வரை கூடவே வந்தார் மற்றொரு ஆச்சர்ய மாக. கதவு அருகே வந்தபோது…

”ஒரு நிமிஷம்…”

”சார்…”

”ஒண்ணு கேட்டா, தப்பா நினைக்க மாட்டேளே?”

”சொல்லுங்க சார்.”

”தினமும் காலம்பற எத்தனை மணிக்கு எழுந்திருப்பேள்?”

ஆஹா… வந்துடுச்சு வலை. சிக்காமல் தப்பிக்கணும். ஏழு மணி என்று உண்மையைச் சொன்னால், ஏதாவது பிரசங்கம் செய்ய ஆரம்பிச்சுடும் கிழம். பொய் சொல்லி நல்ல பிள்ளையாக நழுவுவதே உத்தமம்.

”அஞ்சு மணி சார்.”

”அப்படியா..?”- சில விநாடிகள் தலை குனிந்து இருந்தார். பிறகு, ”தினமும் எழுந்ததும் ஏன் நீங்க எனக்கு ஒரு போன் பண்ணக் கூடாது? ஐ மீன் எனக்கு வர்ற முதல் கால் ஏன் உங்களோடதா இருக்கக் கூடாது? கூப்பிடக்கூட வேணாம். குட்மார்னிங்னு சொல்றாப் போல ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால்… போறும்.”- சொல்லிவிட்டு பதில் தேடி என் கண்களுக்குள் அவர் பார்வை அலைபாய்ந்த விதத்தை எடுத்துச்சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.

சாஸ்திரி உருவத்தில் அது வேறொரு உயிர். அதன் தோரணையில் இருந்தது கிட்டத்தட்ட ஒரு யாசகம். அறுபது வருட வாழ்க்கையைத் தோல்வியில் முடித்துக்-கொண்டு அதைச் சரிசெய்ய எடுக்கும் சிறு பிராயத்-தனம். மனித சஞ்சாரம் முற்றிலுமாக அற்றுப்போன அந்த வீட்டில் எவ்வகையிலாவது மனிதப் பதிவுகள் இருக்காதா என்கிற பரிதவிப்பு. என்னை நெருங்கவும் நினைக்கவும் ஒரு ஜீவன் வேண்டும் என்கிற தவிப்பு. கடந்துபோன காலமெல்லாம் திரும்பக் கிடைத்தால், செய்த தவறுகளை எல்லாம் திருத்திக்கொள்வேனே என்று ஈனஸ்வரத்தில் முனகிய மனதை எடுத்துச் சொன்னது அவரது ஏக்கப் பார்வை.

காலம் வைத்த விலை. தடுமாறிப்போனேன். எனக்-குள் ஏதோ உடைந்து புரண்டது. நான் யோசிக்கவே இல்லை. ”கண்டிப்பா பண்றேன் சார்!”

”முடியறச்சே அடிக்கடி வந்து போங்கோ!” – உத்தரவாக இல்லாமல் உருகியது வார்த்தை. அவர் உருமாற்றத்தை அதற்கு மேல் தாங்கும் சக்தியற்று விடைபெற்றுக் கிளம்பினேன்.

தவற்றை மட்டுமல்ல… சமயத்தில், மன்னிப்பையும் தாங்க முடிவதில்லை!

- 12th நவம்பர் 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
பெரிய மனுஷி
சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும் நின்று, தீராச் சீக்காழிகளும் ரணம் மறந்து கண் அசந்த இரண்டாம் ஜாமத்தில், இமைக்கவே கற்றுக்கொள்ளாதவளாக விழித்துக்கிடந்தாள் பவானி. விஷயம் வெளி வந்தால் ...
மேலும் கதையை படிக்க...
ஆத்தா
“நாடி விழுந்து நாளு நாலாச்சே.. இன்னமும் மூச்சு நிக்காம இழுத்துகிட்டிருக்கே.. ஏ ஆத்தா சிலம்பாயி.. எங்கைய்யா சாத்தையா.. என்ன கணக்கு வெச்சி இந்த சீவனை இழுத்துக்க பறிச்சுக்கனு விட்டிருக்கீகன்னு வெளங்கலையே..” - இன்னைக்கு பொழுது தாண்டாது என்று தான் குறித்துக் கொடுத்த கெடு ...
மேலும் கதையை படிக்க...
காற்று விசையிடமிருந்து நீர்க்குமிழியை பத்திரபடுத்துவதுபோல பிடித்திருந்தாள் காகிதக் கற்றையை. ‘கோவை தாலுகா வசுந்தராபுரம் நேரு நகரில் உள்ள மனை எண் இரண்டு’ - அடுத்து வரும் வரிகள், அவ்வளவு சுலபத்தில் விளங்காத அரசாங்க வார்த்தைகளாக நீண்டன. ஆனாலும் வாசித்து மகிழ்ந்தாள். அவள் ...
மேலும் கதையை படிக்க...
வெளியே பலத்த மழை! வடக்கிலிருந்து தெற்காக சாய்வாக விழுகிறது சாரல். இரைதேடி இடுக்குகளில் புகும் நாகம்போல் கடைக்குள்ளே சரசரவென பரவுகிறது ஈரம். தண்ணீர் தொடாத இடமாகப் பார்த்து பசங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள். பொழுதென்னவோ பிற்பகல்தான். ஆனால் அதனை சிரமப்பட்டுதான் நம்பவேண்டும். அத்தனை ...
மேலும் கதையை படிக்க...
பெரிய மனுஷி
ஆத்தா
வீடு
தேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)