சுயம்

 

பாவம் பத்மினி மிகவும் நம்பிக்கையாக நேற்று போனில் என்னோடு பேசியிருந்தாள். வேண்டுமென்றே ப்ரதோஷபூஜைக்கு லக்ஷ்மி கோவிலுக்குப் போயிருந்த நேரமாய்ப் பார்த்து பேசினாள். அவளது குரலைக்கேட்டதுமே டொக்கென்று போனை வைப்பது லக்ஷ்மியின் ஆறுமாதப்புதுப் பழக்கம். அதனால், நான் தனியாக இருந்தால் என்னிடமாவது மனம்விட்டுப் பேசலாமே என்று தான் பத்மினி அப்படிச்செந்திருந்தாள்.

“அப்பா, மதுரைல நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கறதுக்கு இங்க வந்து இருக்கலாம்பா. அம்மாவுக்குப் பிடிக்கல்லன்னா நீங்களாவது வருவேளாப்பா? நா வீடு பாக்கவா? ஏற்கனவே ‘டெம்ரரி ஜாப்’ல இருக்கேன்னும் அடிக்கடி வேலை மாத்துவேன்னும் கோர்ட்ல ஒரு முக்கிய ‘பாயிண்டா’ச் சொல்லியாறது. இப்போ ‘ஹாஸ்டல்ல இருக்கா, பேரண்ட்ஸ் சப்போர்ட் இல்ல’ன்னு வேற வர ‘ஹியரிங்க்’ போது சொல்லப்போறாளாம். எங்காதுக்கு எட்டியாச்சு. இந்த மூணு வாரத்துல வீட்டப்பார்த்துட்டேன்னா, நீங்களும் வந்திருந்தேள்னு வைங்கோ, எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வரும். ஒரே ஒரு ‘ஹியரிங்’ க்கு மட்டும் என்னோட நீங்க வரவேண்டியிருக்கும்பா. நீங்க புரிஞ்சுப்பேள். ‘கோர்ட் படியேத்தறே’ன்னு அம்மா தான் வைவா, கத்துவா. ஆனா, எனக்கு இந்தநேரத்துல தானேப்பா உங்கரெண்டு பேரோட ‘மாரல் சப்போட்’ வேணும்? எனக்கு எம்பிள்ளை வேணும்பா. இல்லன்னா நா வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாம போயிடுமோனு தோணறது,..”,என்றபோது தைரியசாலியான பத்மினியின் குரல் உடைந்து விடுவேனென்று பயமுறுத்தியது.

“ரிலாக்ஸ்மா, பத்மினி. ஒன்னோட ‘டெஸ்பரேட் பொசிஷன்’ எனக்குப்புரியறது. ஆனா ஒங்கம்மா, ..ம்..ஏற்கனவே நான் என்னால முடிஞ்சவரைக்கும் சொல்லியாச்சு. உங்கம்மாவப் பத்தி ஒனக்குத் தெரியாதா? இருந்தாலும், மறுபடியும் பேசிக் ‘கன்வின்ஸ்’ பண்ணப் பாக்கறேன். நீ ஒரு ரெண்டு நாள்ள எனக்குப் போன் பண்ணினியானா, நெலவரத்தைச்சொல்லிடறேன்”, என்று சொல்லிப் போனை வைத்ததிலிருந்து நான் செய்த முயற்சியெல்லாம் வெறும் முயற்சிகளாகவே முடிந்தன.

முதலில் பிரிய நினைத்து வீட்டைவிட்டுக் கிளம்பி லேடீஸ் ஹாஸ்டலில் போய்த் தங்கும் போது பத்மினிக்கு வரக்கூடிய சிக்கல்கள் புரியவில்லை. ஒரே மாதத்தில் தனியாக ஒரு போர்ஷன் வாடகைக்குப் பேசிக்கொண்டு, வீட்டிற்குப்போய் குழந்தையைக்கேட்டால் தரமறுத்ததுடன் துரத்தாதகுறையாக விரட்டியடித்துவிட்டனர்.

அதன்பிறகு ஸ்கூலில் போய் தன் குழந்தையைப்பார்க்க ஆரம்பித்தாள் பத்மினி. அதுவும் ஒரே வாரத்தில் தெரியவர ஸ்கூல் வாச்மேனிடம் பத்மினி வந்தால் குழந்தையைப்பேச விடவேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்கள். கோடம்பாக்கத்தில் தான் பகுதிநேர வேலை பார்த்த கன்ஸல்ட்டஸ்ட்
ஆபீஸில் கெஞ்சிக்கேட்டு பர்மிஷன் போட்டுவிட்டுப் பேய் மாதிரி ஆட்டோ வைத்துக்கொண்டு தன் பிள்ளையைப்பார்க்க மேற்கு அண்ணாநகருக்கு ஓடுவாள். பள்ளிக்கூட நேரம் முடிவதற்குள் எப்படியும் பார்த்துவிடவேண்டுமென்று.

படித்தவர் செய்யக்கூடிய எதையும் பத்மினியின் புருஷன் செய்யவில்லை. குடியிருந்த வீட்டிற்கும் ஒரே மாதத்தில் ஆபத்து வந்தது. காலிப்பசங்களை இரவு நேரத்தில் அனுப்பிச்செய்த ரகளையில், வீட்டுக்காரர்கள் அடுத்த நாளே வீட்டைக்காலி செய்யச்சொல்லிவிட்டனர். மறுபடியும் லேடீஸ் ஹாஸ்டலிலிருந்து வேலைக்குப் போனாள். இப்போது பாவம் மறுபடியும் வீடு பார்க்க நினைக்கிறாள்.

ஆரம்பத்திலிருந்தே குழந்தையின் தகப்பனாருக்கு குடும்பத்தின் முழு ஆதரவும் கிடைத்தே வந்திருந்தது. குழந்தையைச் சென்னையில் இருந்த ஸ்கூலிலிருந்து வேண்டுமென்றே நாகர்கோவிலில் தன் பெற்றோருடன் இருக்கட்டுமென்று கொண்டு விட்டுவிட்டார். முதலில் அம்மாவைக்கேட்டு அழுதிருக்கிறான். நாளடைவில் அவ்வப்போது கேட்பதுடன் சரி. அழுகை நின்றுவிட்டதாம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் அந்தப்பிள்ளைக்கு இந்த ஒரு வருடத்தில் அம்மாவின் நினைவு அடிக்கடி வந்திருக்கும்.பெரியவர்கள் சண்டையில் அந்தப்பிஞ்சுமனம் என்னென்ன குழப்பங்களை அடைந்திருக்குமோ.

” நம்ம ஆதரவு இருக்குங்கற தைரியத்துல அவ இன்னும் ஜாஸ்தி பண்ணுவோ, அதனால வேண்டாம்.”, பள்ளி மாணவனுக்குக் கட்டளையிடும் ஆசிரியராய் என்னை அதட்டிவிட்டு உள்ளே சென்றாள் லக்ஷ்மி.

“இனிமே செய்ய என்ன இருக்கு, லக்ஷ்மி, சொல்லு. எப்பிடியும் ரெண்டு பேருமாமுடிவெடுத்துக் கோர்ட்படியேறியாச்சு. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மாறிமாறித் தூத்தித்தள்ளிண்டுட்டா. இனிமே அவா ரெண்டு பேரும் மனச மாத்திக்கறது ஒண்ணும் நடக்கப்போறதேயில்ல. இப்போ அவளுக்கு அந்தக் கொழந்தை தான் வேணுமாம். ப்ரோசீடிங்க்ஸ் முடியற இந்தக்கடைசிக்கட்டத்துல அதுக்குத் தான் பாவம் அந்தக்கெஞ்சு கெஞ்சினா போன்ல நேத்திக்கி தெரியுமா,…”, மெதுவாகக் குழைந்துகுழைந்து லக்ஷ்மியை வழிக்குக் கொண்டு வரமுடியுமாவென்று பேசிப்பார்த்தேன்.

“இல்லன்னா, இதுல எனக்குத் துளியும் இஷ்டமில்ல. நாந்தான் ஏற்கனவே சொன்னேனே இதப்பத்தி இனிமே பேசவேண்டாம்னு. நா சொல்றது ரொம்பக் கசப்பாவும் நா கொடுமைக்காரி மாதிரியும் தோணும். ஆனா அந்தக் கொழந்தைக்காகவானும் அவ மனசு மாறலாமோல்லியோ? அதான் இப்பிடிச்சொல்றேன். இப்பயும் ‘ரிக்கன்ஸைல்’ ஆகச் சான்ஸ் இருக்கான்னு நான் ராப்பகலாக் கவலப்படறேன். அவளுக்கு சம்பாத்திக்கற தையிரியம் இருக்கு. அதனால, இப்பச்சரி. பின்னாடி? அவளுக்கு பிள்ளை வேணும்ன்ற அந்த விஷயமே அவ மனச மாத்தாதான்னு பாக்கறேன். ”

” இல்ல, லக்ஷ்மி. அவ ரொம்ப தெளிவா இருக்கா. கொழந்தைக்காகவெல்லாம் அவ மனசு மாறாது. மொதல்ல அதப்புரிஞ்சிக்கோ நீ.”

” எனக்கு சான்ஸ் இருக்குன்னு தோன்றது. இத இத்தோட விடுங்கோ. சாப்டவரேளா, சாதம் போடறேன்.”

” இல்ல, எனக்குப் பசிக்கல்ல. நீ வேணா ஸ்லோகக் க்ளாஸ¤க்குப் போ. அரை மணிகழிச்சு நானே போட்டுச் சாப்டுக்கறேன்.”

லக்ஷ்மி பிடிவாதமாய் மறுத்தது எனக்குச் சரியாகப்படவில்லை. ரிடையர் ஆகும் வரை புரிந்திருந்ததை விட இந்த ஐந்தாண்டு ஓய்வில் லக்ஷ்மியை இன்னும் அதிகம் புரிந்திருந்து கொண்டிருந்ததாக என்னுள் நினைத்திருந்ததை மறுபரிசீலனை செய்யவேண்டுமோ என்று தோன்றியது. இரவெல்லாம் தன் பெண்ணின் கவலையில் அவளுக்கு உறக்கமே இருப்பதில்லை. இருட்டில் வெறித்துவெறித்து எதைத்தான் பார்ப்பாளோ. ஆனால், பார்த்துக் கொண்டேயிருப்பாள். திடீர் திடீரென்று கண்களில் வழியும் கண்ணீரைப் புடைவைத் தலைப்பில் துடைத்துக்கொள்வாள். விடியற்காலையில் தன்னை மறந்த ஓரிரு மணிநேரமே அவளது தூக்கம். இதெல்லாம் எனக்குத் தெரியாது என்பது அவள் எண்ணம்.

இரவில் பட்ட வருத்ததிற்கும் கவலைக்கும் நேர்மாறாக பகலில் பெண்ணின் செய்கைகளை வெறுப்பதுபோன்று நடந்தாள். லக்ஷ்மியை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது. பெண்ணின் மீது பாசமிருந்தும் காட்டவும் சொல்லவும் தெரியாமல் விழிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்ற ஒரு பரிதாப நிலையை அடைந்திருந்தாள். ஒரு நடை அவளிடம் சொல்லாமலேயே அவளது தூக்கமின்மைக்கு டாக்டரிடம் கூட்டிப்போவதாகச் சொல்லிவிட்டு மனநலமருத்துவரிடம் கூட்டிப்போகவேண்டும் என்று தோன்றியபடியே இருந்தது. ஆனால், தெரிந்ததோ அவ்வளவுதான், பத்ரகாளியாய் மாறி என்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவாள். சட்டென்று அப்படிச்செய்தாலும் பரவாயில்லையே. சொல்லாலேயே இரவுபகலாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வாளே.

பத்மினியின் உடனடியான தேவைக்கு என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. சட்டென்று கிளம்பி சென்னைக்குப் போய் விடலாமாவென்று ஒரு கணம் தோன்றியது. சில மாதங்களுக்குப் பின் மதுரைக்கு வந்ததானே ஆகவேண்டும். லக்ஷ்மி அவள் சொல்வதைக்கேட்காமல் நான் போனேன் என்று என்னோடு தன் கடைசி மூச்சுவரை பேசவே மாட்டாள்.

ஸ்லோகக் க்ளாஸிலிருந்து திரும்பிய லக்ஷ்மி கூடத்தில் அமர்ந்திருந்த என்முகத்தையே பார்த்தபடி படியேறி உள்ளே நுழைந்தாள். என் முகத்தில் அவள் பத்மினி போன் செய்தாளா என்று தன் உள்மனக் கேள்விக்கு விடை தேடினாள்.

“பத்மினி போன் பண்ணல்ல லக்ஷ்மி. ராத்திரி பண்றாளோ என்னவோ. பண்ணினா நீ பேசும்மா அவகிட்ட, ப்ளீஸ். பாவம், ரொம்ப ·பீல் பண்றா”, என்றதுமே, ” இல்லன்னா, நா பேசறதா இல்ல. ஒரு கல்யாணத்துக்கு போக முடியறதா, இல்ல கோவிலுக்குத் தான்போக முடியறதா. எங்க யாரப்பார்த்தாலும் இதே கேள்வி தான் கேக்கறா. ரொம்ப அனுதாபப்படறாப்ல முன்னாடிக்கேட்டுட்டு பின்னாடி பரிகாசம் பண்றா. இதுக்குத் தான் போன வாரம் விசாலம் பொண் கல்யாணத்தக்கூட அவாய்ட் பண்ணிட்டேன். இதோ, இப்பக்கூட க்ளாஸ்ல கமலி இந்த டாபிக் எடுத்தா. நான் கட் பண்ணிட்டு, நைஸா கழண்டுண்டு வந்துட்டேன். இந்த மதுரை மீனாக்ஷ¢ அருளால ஒங்க பொண்ணுக்கு புத்தி வந்து பழையபடி ரெண்டுபேரும் ஒண்ணு சேர்ந்தா, பச்சப்பட்டுப்புடைவை வாங்கி சாத்தறாதா வேண்டிண்டிருக்கேன்”, என்று சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கிச் சென்று விட்டாள்.

இவள் வாங்கிக்கொடுக்கும் பச்சைப்பட்டுப் புடைவைக்கு ஆசைப்பட்டு மீனாக்ஷ¢யம்மன் பத்மினியை அவளுக்குப் பிடிக்காத வாழ்க்கையில் கழுத்தைப்பிடித்துத் தள்ளவும் கூடுமோ. பாவம் லக்ஷ்மி, தன் அர்த்தமற்ற பிடிவாதத்துக்கு மீனாக்ஷ¢யம்மனை வேறு குழப்பி லஞ்சம் கொடுக்க நினைத்தாள்.

விசாலம் லக்ஷ்மியின் சொந்தத் தங்கை. அவளுடைய கல்யாணத்துக்குப் போகவேண்டும் என்று கழுத்துவரை ஆசையை வைத்துக்கொண்டு வம்புகளைத் தவிர்க்கவே கல்யாணத்திற்குப்போகவில்லை. எனக்கும் ‘தடா’ போட்டுவிட்டாள். கமலி ஸ்லோகக் க்ளாஸின் ஒலிபரப்புத் துறையின் முக்கிய செயலாளர். அதாவது, அனைத்துவிதமான வம்புகளையும் குறையே இல்லாமல் பரப்புவதில் வல்லவள். கமலி தன் விஷயத்தை மெல்லாதவரை லக்ஷ்மிக்கு அவளைப்பிடிக்கும்.

முன்னிரவில் பத்மினி போன் செய்தாள். போனை எடுத்து நான் பேச ஆரம்பித்ததுமே, லக்ஷ்மி தனக்குப் பிடித்த டீவீதொடரைக்கூடத் தியாகம் செய்துவிட்டு கூடத்திலிருந்து கிளம்பி வாசலுக்குப்போனாள், விறுவிறுவென்று. அங்கே நின்றிருந்தால், தாய்ப்பாசம் தன் பிடிவாதத்தைத் தகர்த்துவிடுமோவென்ற பயம் போலும்.

“அப்பா, என்னப்பா சொல்றா அம்மா? உங்கள மட்டுமாவது அனுப்புவாளா இங்க.”

“எனக்குத் தோணல்ல பத்து. அவள எதுத்துண்டு தான் நா வரதானா வரணும்.”

“இருக்கற பிரச்சன போறாதா? அதெல்லாம் வேண்டாம். ”

“ஐ’ம் சாரிம்மா. எனக்கு ஒண்ணுமே செய்யமுடியல்ல.”

“எனக்கு நேரம் சரியில்ல. நீங்க ஏம்ப வருத்தப்படறேள்? ஆபீஸ்லயும் வேலையே ஓடல்ல எனக்கு. இதே யோஜனையா இருக்கு. ஒலகத்துல உள்ளவா எல்லாரும் சேர்ந்து எனக்கெதிரா சதி பண்ணக் கிளம்பிட்டாளோன்னு ஒரேயடியா ஒவ்வொரு நேரம் தன்னிரக்கத்துல புழுங்கறேன். விஜி இருந்தா பத்தாள் பலம் இருந்திருக்கும் எனக்கு. இந்தநேரம் பார்த்து அவளும் டெபுடேஷன்ல போகணுமா? இதான் நேரம்ங்கறது போல்ருக்கு.”

” ஹ¥ம்,.. பாப்போம். பிள்ளைக்காகப் போராடறேன். ஆனா, சில சமயம் தோண்றது, அதுவே சரியில்லையோன்னு. ஆனா, அந்த மனுஷனுக்கு இப்பவே ‘பொண்’ பாக்கறாளாம் அவாத்துல. அப்போ, கேஸ் முடிஞ்சதும் ஒடனே கல்யாணம்தான் போல்ருக்கு. அப்போ கொழந்த பெத்துக்கலாமே. நான் பட்ட கஷ்டத்துல எனக்கு இன்னொரு கல்யாணத்த நெனச்சும் பாக்க முடியல்ல. சரி, இருக்கற ஒரு பிள்ளையவாவது கூட வச்சிப்போமேன்னு பாக்கறேன். தானே அவன வச்சி வளக்கணும்ற ஆசைய விட என்கிட்டக் கொடுக்கக்கூடாதுன்றதுல தாம்பா குறியா இருக்கா அவா. அப்படி கொடுத்தா, நா ஜெயிச்சதாயிடுமாம். என்னவோப்பா, ஒண்ணுமே புரியல்ல. எரிச்சலாயிருக்கு”

” போன்லயாவது பேசினியா விஜியோட?”

“ம்.. பேசினா, ரொம்பநேரம். அதுலதான் கொஞ்சமேக் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. எதுக்குடி புள்ளபுள்ளன்னு அடிச்சிக்கறன்றாப்பா. பிறத்திருக்கே வாழ்ந்திண்டிருக்கணும்னு சட்டமா? கொஞ்ச நாள் ஒனக்கே ஒனக்காகவும் வாழ்ந்துபாருன்றா. எனக்கே எனக்காக நானும் வாழ்துதான் பாப்போமேன்னு இப்பல்லாம் அப்பப்ப தோண்றது.”

” பத்து, நீ எதானாலும் மனசத்தளரவிட்டுடாத. தைர்யமா இரு, என்ன?”

” ம்ம்.. சரிப்பா, அடுத்தவாரம் போன் பண்றேன்.”

அடுத்தவாரம் தொலைபேசினாள். விவாகரத்திற்குக் கையெழுத்துப்போட்டுவிட்டு இரண்டுநாட்கள் கழித்துப்பேசினாள்.”அப்பா, எனக்குப்பிள்ளை தான் கிடைக்கல்ல. ஆனா, நான் ரொம்ப எதிர்பார்த்திருந்த வேல கெடச்சுடுத்து. அதனால, அம்மாவ மீனாக்ஷ¢க்குப் பொடவ சாத்தறத நிறுத்தவேண்டாம்னு சொல்லிடுங்கோ.இனிமே ‘ எம்பொண்ணு ஆஸ்திரேலியால இருக்கா’ னு பெருமைப்பட்டுக்கலாம் அம்மா. இதச்சொல்லவாவ்து எல்லாக் கல்யாணத்துக்கும் விசேஷத்துக்கும் போகலாம். அந்தவிதத்துல அம்மாவுக்குச் சாதகமாத்தானே நடந்திருக்கு. ம்,.ஹ¥ம்,… கொஞ்சநாள் விஜி சொன்னாப்ல எனக்காகத் தான் ஒவ்வொரு நிமிஷமும் வாழ்ந்துபார்ப்போமேனு தெளிவாட்டேம்பா. சோ டோன்ட் வொர்ரி. பொறப்படறதுக்கு முன்னாடி ஒங்களுக்குப் போன் பண்றேன், பை.”

- ஜூலை 29, 2004 

தொடர்புடைய சிறுகதைகள்
“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின் ஜாக்கெட்டை மிகவும் டைட்டாகத் தைத்திருந்தான் டெய்லர். கொடுத்துக் காத்திருந்து வாங்கிவரவேண்டும், தீபாவளி மின்னட்டைகள் அனுப்பவேண்டும் என்று மனதிற்குள் அன்றைய வேலைகளின் ...
மேலும் கதையை படிக்க...
நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய் தான் இருந்தாள். சமீபகாலமாய் சிறுமியின் போக்கில் அதிகமான தீவிரம். இத்தனையிலும் வேதனை என்னவென்றால் சிந்திக்கவும் சில நிமிடங்கள் கிடைக்காத என் வேலை. ...
மேலும் கதையை படிக்க...
ஒத்திகை
பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. "நல்ல வேளை சார் நீங்க இன்னைக்கே ஃபோன் பண்ணீங்க, நாளைக்கி ராத்திரியாச்சும் சொன்னாதான் என்னால ஏற்பாடு செய்யவே முடியும்.' வேறு பெண்ணென்றால் பரவாயில்லையா ...
மேலும் கதையை படிக்க...
இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப் பிரிவினருக்கு உதவவென்று எங்கள் நாடகக் குழுவிலிருந்து சிலர் அனுப்பப் பட்டனர். நான் பெண் என்பதாலோ என்னவோ, முதலுதவிப் பிரிவில் என்னை ...
மேலும் கதையை படிக்க...
நெய் பிஸ்கட்
நாலேகால் டாலர்
நுடம்
ஒத்திகை
அல்லி மலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)