கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2013
பார்வையிட்டோர்: 8,120 
 

ஒரு மங்கலான பிற்பகல்.. !!

பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு ஏழெட்டு மலைக் கிராமங்களை இணைக்கும் அந்த பஸ்…. !!

“இந்தாம்மா… அந்த பையைக் கொஞ்சம் காலுக்குக் கீழே இறக்கி வச்சுக்கிட்டா என்னவாம் ? பக்கத்துல ஆளுங்க உக்காரத் தேவல ?” கேட்ட பெண்மணி தன் நெற்றி முழுவதும் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு அபாய அறிவிப்பு செய்வது போன்ற சைஸில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, அதனால் தனக்கு ஒரு தெய்வீகக் களை இருப்பதாகவும், எல்லோரும் பயபக்தியுடன் தன்னைப் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் இருந்த மற்றவர்களைப் பார்த்தார்.

அவருடைய கேள்விக்கு விடையாக ஒரு வினாடி தன் முகத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு தன் மடியில் இருந்த பெரிய பையை மீண்டும் கைகளால் சுற்றிப் பிடித்தபடி மேகலை ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

“என்ன திமிரடியம்மா இந்தக் காலத்துப் பெண்களுக்கு ? பெரியவங்க, பெருந்தலைங்கன்னு ஒரு மருவாதி கொடுக்கத் தாவல ? அந்தக் காலத்துல நாங்க பெரியவங்க வந்தா எம்புட்டு கவுரதை தருவோம். இப்போ என்னடியின்னா மடியில இருக்குற பையை எறக்கி வையடியம்மா அப்படின்னு சொன்னாக் கூட கேப்பாரில்ல”

அவளுக்கு அடுத்து இருந்த கண்ணாடி போட்ட மனிதர் ” பெரியம்மா.. அவங்க மடியிலே அவங்க வச்சுகிட்டு போறாங்க.. நீங்க வுட்டுத் தள்ளுங்க” என்றார்.

“இப்படி காத்து வர வழிய மறைச்சுகிட்டா நான் எப்படிங்க மூச்சு விட முடியும்?” பெரியம்மா மார்பில் கையை வைத்துக் கொண்டு மாரடைப்பு வந்தவள் போல பெருமூச்சு விட்டுக் காண்பிக்க பஸ்ஸில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். தன்னை விளையாட்டுப் பொருளாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெரியம்மா கையிலிருந்த ஆரஞ்சுப் பழத்தை உரிக்க ஆரம்பித்தார்.

தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் தன்னைப் பற்றி நடப்பது கூட தெரியாமல் மேகலை ஜன்னலுக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த காட்சிகளில் லயித்திருந்தாள். மேகலை…

“என்பு தோல் போர்த்த உடம்பு” என்று ஒரு செய்யுளில் வருமே.. அது போல ஒரு எலும்புக் கூட்டுக்கு மேல் தோல் போர்த்தி இருப்பது போலத்தான் இருந்தாள். கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு உண்மையில் மஞ்சள் கயிறு என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்பப் போவதில்லை.

மதிவாணன் நல்ல மனிதன்தான். கோயம்புத்தூரில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிவிட்டு வாரம் ஒரு முறை வந்து போய்க்கொண்டு இருந்தாலும் எந்த கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.

மேகலையைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் கழுத்தில் ஒரு பவுன் தாலி வாங்கிக் கட்டினான். கீரையன்பாளையத்திலே அவன் சொந்த நிலத்திலே ஒரு ஓட்டு வீடு இருந்தது. அவர்கள் சொர்க்கம் அங்கே இருந்ததாக மேகலை நினைத்தாள். அது கேரளத்தில் எல்லை என்பதால் மழையின் தாக்கம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.

கீரையன்பாளையம் ஆனைமலைக்கு போகும் வழியில் மலையின் மேலேயே ஒரு மேட்டுப் பிரதேசத்தில் இருந்தது. எப்போதும் மேகக் கூட்டங்கள் திரண்டு திரையிட்டுக் கொண்டிருக்கும். மேகலை பிறந்து வளர்ந்தது எல்லாமே காரைக்குடி பக்கம் ஒரு வறண்ட பூமியில்.. அதனால் அவளுடைய உலகம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு உச்சியில் நிலையாகிப் போனது. ஆனால் எல்லாமே ஒரு மழைக்கால ராத்திரியில் மாறிப்போனது.

அந்த வருஷம் நல்ல மழை. விடாமல் பெய்து கொண்டே இருந்தது. மேகலைக்கு உதவி செய்ய வந்திருந்த சின்னம்மா ஊருக்குப் போய்விட்டதால் நிறைமாத கர்ப்பிணியான அவள் யாரும் இல்லாமல் தனியாக இருந்தாள். வாசலில் மழையின் ஆரவாரத்தோடு வேறு மனிதர்களின் குரல்களும் கேட்டன. மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்தவளுக்கு அடிவயிறு கலங்குவது போல நாலைந்து பேர்களாக மதியைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

“கடவுளே ! அவருக்கு என்னங்க ஆச்சு ?” “பதறாதேம்மா.. உயிருக்கு ஆபத்தில்ல.. நாலு நாள் முன்னால ஒரு விபத்து நடந்து போச்சு. காலிலே நல்ல அடி. எலும்பு முறிஞ்சு போச்சு. கட்டு போட்டு அழைச்சுகிட்டு வந்துட்டோம்” என்று ஒருவர் சொல்ல “பயப்படாதே மேகலை.. எனக்கு ஒண்ணும் இல்ல” என்று மதி சிரிக்க முயற்சி செய்தான்.

ஆனால் அந்த சிகிச்சைக்கு எல்லாம் எந்த பலனும் இல்லாமல் அவள் பிரசவத்தின்போதே அவனுக்குப் புரையோடிய காலை எடுத்து விட வேண்டிய நிலைமை வந்தது. லாரி ஓனர் நல்லவர்தான். ஆனாலும் அவரால் எவ்வளவு பணம் தர முடியும் ? கையில் கழுத்தில் இருந்த சொற்ப நகைகளும் போனபிறகு அவர் கொடுத்தது மருந்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சரியாய்ப் போனது. கையில் கம்புடன் தடுமாறி நடக்க மதிவாணன் பழகிக் கொள்ள ஆரம்பித்தான். மேகலை சுமக்க ஆரம்பித்தாள். வீட்டைச் சுற்றி காய்கறி செடி வளர்த்து அதைப் பறித்து சந்தைக்குக் கொண்டு போய் விற்று வந்தாள்.

தினமும் அவர்களுக்கு இருந்த ஒரே சந்தோஷம் அந்த சின்ன மழலையின் ஓசைதான். ஆனால்..

அன்று மேகலை வீட்டுக்கு வந்தபோது.. “மேகலை.. குழந்தைக்கு உடம்பு அனலாக் கொதிக்குது. வூட்டுல எந்த மருந்தும் இல்ல. வைத்தியர் கிட்ட போயிட்டு வர்ரேன்.” என்று சொன்னபடி மதி கம்பை ஊன்றி எழுந்தான்

“நீங்க உக்காருங்க. நான் கொழந்தைய எடுத்துக்கிட்டு போயிட்டு வர்ரேன். உங்களால அந்த கல்லுப் பாதையில நடக்க ஏலாது” என்றபடி மேகலை கிளம்பினாள்.

வானம் கருக்க ஆரம்பித்தது.

***

என்னவோ புதையலை காக்குற பூதம் போல வழிய வுடாம பைய வச்சுகிட்டு அடைக்கிறாளுங்க.. என்ன சன்மங்களோ?” டேஞ்சர் லைட் பொட்டு வைத்த பெரியம்மா நகர.. மேகலைக்கு அருகில் ஒரு இளம்பெண் உட்கார்ந்து கொண்டாள். மேகலையின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு அவள் மீது பட்டால் அழுக்கு ஒட்டிக் கொள்ளுமோ என்று நினைப்பவள் போல நாசூக்காக நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

மேகலை எதையும் கவனிக்கவில்லை. பையை இறுக அணைத்துப் பிடித்தபடி சாலையின் ஓரத்தில் தெரிந்த பலகைகளில் எழுதியிருந்ததை மனதுக்குள் எழுத்துக் கூட்டிப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “கீரையன் பாளையம் 6 கி.மீ”

அவள் மனது ஒரு மாதத்துக்கு முன்னால் போனது. வைத்தியர் அப்போதைக்கு மருந்து கொடுத்து விட்டு குழந்தையை பொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்டி விட்டு வரச் சொன்னார். குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு அவள் திரும்பியபோது அவசரமாக எழுந்து அவள் பின்னாலேயே வந்த மதிவாணன் கம்பை ஊன்ற முடியாமல் விழுந்து உருண்டு அடி பட்டிருந்தான். தபால் ஆபீஸ் தாத்தா என்று அழைக்கப்பட்ட போஸ்ட் மாஸ்டர் உதவி செய்ய மதியை வீட்டில் விட்டு விட்டு, குழந்தையுடன் பொள்ளாச்சி ஆஸ்பத்திரிக்குப் போனாள்.

அவள் நல்ல நேரம், அப்போது அங்கே ஒரு பெரிய மருத்துவர்களின் மாநாடு நடப்பதாக இருந்ததால், இலவச சிகிச்சை மையம் என்று ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். குழந்தையை அட்மிட் செய்யச் சொன்னார்கள். குழந்தைக்கு ஏதோ கொடுமையான நோய் என்று சொன்னார்கள். இலவசமாக மருத்துவம் செய்வதாகச் சொல்லி பத்திரிக்கைக்காரர்களை எல்லாம் கூட கூட்டி வந்து பேசினார்கள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. அன்றிலிருந்து அவள் தினசரி வாழ்வு ஆஸ்பத்திரியில் தொடங்கி அங்கேயே முடிந்தது.

நடுவில் ஊருக்கு வந்தபோது அவள் அப்பாவும், சின்னம்மாவும் கடன் தொல்லை தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிவிட்டதாக செய்தி வந்திருந்தது. வீட்டை விட்டு வெளியே வராமல் தினமும் ஒரு வேளைக் கஞ்சியில் தன் வாழ்வை ஓட்டிக் கொண்டிருந்தான் மதிவாணன்.

“மேகலை.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் ? குழந்தையை ஒரு தடவை பாக்கணும் மேகலை.. நான் அது முகத்தை பார்த்து ரெண்டு வாரமாச்சு. இப்போ எப்படி இருக்குது?”

“நானே சரியாப் பாக்கலீங்க. ஒடம்பெல்லாம் ஊசி குத்தி கண்ணாடி கூண்டுக்குள்ள வச்சிருக்காங்க.இன்னும் ரெண்டு வாரத்துல சரியாயிடும். அழைச்சுகிட்டு வந்துடறேன். செடிய மட்டும் கொஞ்சம் பாத்துக்குங்க”

ஆனால் இன்று காலையில் கதை மாறிப் போனது. கண்ணாடிக் கூண்டில் இருந்த குழந்தையைப் பார்க்க அவளை அழைத்தபோது அவள் அடிவயிறு கலங்கியது. குழந்தையில் மேலிருந்த குழாய்கள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்க, கதவிடுக்கில் நசுங்கிய பல்லியின் எலும்புக்கூடு போல குழந்தையின் உடல் இருந்தது.

“ராசா.. என் மவனே”

“அழக்கூடாதம்மா. நாங்க எல்லா வைத்தியமும் செஞ்சுட்டோம். என்ன செய்யுறது ? நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான். இங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செஞ்சு தரோம். அந்த கண்ணாடி போட்ட நர்ஸம்மா விவரம் சொல்லுவாங்க கேட்டுக்க”

மேகலையின் கண்ணில் கண்ணீர் வற்றிப் போயிருந்தது.

***
“யம்மா.. கீரையன்பாளையம் வரப்போகுது. பைய எடுத்துக்கிட்டு இறங்கம்மா” கண்டக்டர் குரல் கொடுக்க மேகலை பையை இறுக அணைத்தபடி எழுந்தாள்.

அவள் மட்டும் இறங்கியபோது மேகக்கூட்டங்கள் புகையாக மூடிக்கொண்டன. ஊரென்ன ஊர் ! இரண்டு தெரு.. நாலு கடை. ஒரு போஸ்ட் ஆபீஸ்.. முப்பது நாற்பது வீடு. அவ்வளவுதான். எல்லோருக்குமே இந்த மேகக்கூட்டத்தின் நடுவில் நடமாட பழக்கம் உண்டு.

…………………………………

கண்ணாடி போட்ட நர்ஸம்மாவிடம் போனபோது அவள் இரண்டு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாள். “குழந்தை உடம்பை இங்கேயே அடக்கம் செய்ய ஒரு அமைப்பு உதவி செய்யுதும்மா” என்றாள்.

“இல்லீங்க.. எங்க வூட்டுக்காரருக்கு கால் நடக்க ஏலாது. அவரு குழந்தையப் பாக்க ஆசைப்படுவாருங்க.”

“அவர வந்து பாக்க சொல்லும்மா”

“இல்லீங்கம்மா. நாங்க இருக்கறது மலை மேல. அங்கிருந்து வர்ரது சிரமம்”

நர்ஸம்மாவுக்கு பொறுமை இல்லை. “அப்படியின்னா பாடியை வாங்கிக்கிட்டு போ” என்றபடி நகர்ந்தாள்.

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடக்கம் செய்ய உதவத் தயாராக இருந்தார்களே தவிர குழந்தையின் முகத்தைக் கடைசியாக அதன் தகப்பன் பார்ப்பதற்கு உதவத் தயாராக இல்லை.

பிணத்தை எடுத்துச் செல்ல வண்டிக்காரர்கள் கேட்ட தொகை அவள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியாதது. மேகலை தீர்மானித்தாள்.

………………………….

மேகத்திரை விலகியபோது சரிந்த பாதையில் கம்பை ஊன்றிக் கொண்டு பஸ் சத்தம் கேட்டதால் மேகலை வருவாளோ என்ற சந்தேகத்தில் மதிவாணன் வந்து கொண்டு இருந்தான்.

“மேகலை.. மேகலை.. கொழந்த எப்படி இருக்குது ? நல்லா இருக்குதா ? அது முகத்தைப் பாத்து ஒரு மாசம் ஆச்சு”

மேகலை வெறித்தபடி கையில் அணைத்து வைத்திருந்த பையை இறக்கினாள். அதன் முடிச்சை அவிழ்த்து மேலாக இருந்த துணியை எடுத்தாள்.

“பாருங்க.. ஒங்க மகன் மொகத்த நல்லா பாருங்க”

நழுவிய பைக்குள் இருந்து ஒரு பிஞ்சு முகமும், அதன் மூடிய விழிகளும் தெரிய சுமையை இறக்கி வைத்த மேகலை, மதிவாணனின் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *