சுத்தம்

 

ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை, சின்ன வயசு முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம். திருநீர்மலை ஏறப் போகிறோம் என்று அலைந்த நாட்களில் கூட, அவள் “நா வரலைப்பா..எனக்கு வேலை இருக்கு!” என்று ஒதுங்கி விடுவாள். ஒருநாள் லீவு கிடைத்தால், மண்டையை ஓட்டை போடும் வெயிலில் நின்று புடவைகளைத் தோயித்து, கஞ்சி போட்டு உலர்த்தி இஸ்திரி பண்ணுவாள். இல்லாவிட்டால் அலமாரி சாமான்கள் இறக்கி வைப்பாள். அழுக்குப் பேப்பரை மாற்றுவாள். புடைவைகளைச் சீராய் குஞ்சம் ஒரு பக்கம், மடிப்பு ஒரு பக்கம் என்று அடுக்குவாள். ஊர்துபதி பாக்கெட் வங்கிப் பிரித்துப் போடுவாள். பாக்கெட் மணியில் ‘ப்ளவர் டஸ்ட்’ வங்கி உடுப்புகள் நடுவில் வைப்பாள். இதுவும் இல்லாவிட்டால், தன மேஜையைத் துடைப்பாள். தூசி இல்லாமல் தட்டி, புத்தகங்களையும் மற்ற சாமான்களையும் புதுசாய் வைப்பாள்.

“ஏண்டி…ஆளைப் பண்ணச் சொல்லேன்… நீ எதுக்கு கெடந்து அல்லாடறே?” அம்மா அங்கலாய்ப்பாள்.

“ச்செய்.. அவனுக்கு நன்னாவே பண்ணத் தெரியலைம்மா! கை, நகத்துல வண்டி அழுக்கு! என் சாமானை நானே க்ளீன் பண்ணிகறேன்ம்மா… ஐ லைக் இட்!” என்று பதில் ரெடியாய் வரும்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த ப்ரீதியின் சுத்த உணர்வு, இவள் கணவன் அமெரிக்காவுக்கு விஸிட்டிங் புரொபஸராக ஒரு வருஷம் போனபோது, தானும் கூடச் சென்று அங்கே குடுத்தனம் செய்துவிட்டுத் திரும்பியதிலிருந்து வெறியாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் சுத்ததைத் தன்னுடைய எண்ணூறு ரூபாய் வாடகை வீட்டிற்குக் கொண்டு வந்துவிடத் தலைகீழாய் நிற்க ஆரம்பித்தாள்.

தரையும், சுவர்களும், சாமான்களும் மின்னி ஜ்வலித்தது கூட ஆச்சர்யமில்லை. இந்த பாத்ரூமைத்தான் குறிப்பாகச் சொல்ல வேண்டும்! ஒரு பக்கமாய், மொசைக் தரையிலும், ‘க்ளாஸ்ட்’ மேலும், புஸுபுஸுவென்ற அழகான கம்பலங்களைக் கொணர்ந்து விரித்தாள். யாரும் சொட்டு ஜாலம் விடக்கூடாது. “அந்த நாட்டுப் பழக்கவழக்கம், கிளைமேட்டுக்கு இந்தக் கவர் எல்லாம் தேவை… நமக்கு எதுக்கும்மா?” என்று கணவன் சொன்னதை இந்தக் காதில் வங்கி அந்தக் காதில் விட்டுவிட்டாள். யாராவது பாத்ரூம் உபயோகப்படுத்த விரும்பினால், அவர்கள் அந்த தகதகக்கும் சுத்தமான அறையில் விருப்பப்படி கையை நீட்டிக் காலை ஆட்டிக் குளிக்கக்கூட முடியாமல் தவித்துத்தான் போனார்கள்.

வீட்டில் குந்துமணி இடத்தில் தூசி தும்பு இருப்பதில் ப்ரிதிக்கு இஷ்டமில்லை. இடுப்பில் சலவை செய்துவந்த துண்டை ஏப்ரனுக்கு மேல் சொருகிக்கொண்டு சதா சாமான்களைத் தட்டினாள். நிமிஷத்துக்கு ஒரு தரம் கையை சோப்புப் போட்டுக் கழுவினாள், மற்றவர்களையும் அலம்பச் செய்தாள்.

“சீ…இந்த கண்ட்ரிலே என்ன தூசி, என்ன அழுக்கு! கையை அலம்புங்கோ!”

“ஐய்யையோ… அழுக்குக் கையோட ப்ரிஜ்ஜைத் தொடாதீங்கோ!”

“ப்ளீஸ், செருப்புப் போட்டுண்டு கார்பெட் மேல போகாதீங்கோ… ஒரே மண்ணு!”

“டிராயிங் ஹால் சோபா மேல கால் வைக்காதீங்கோ…வெளிர் மஞ்சள் சில்க் துணி… அழுக்குப் பளிச்சுனு தெரியும்!”

“ஆமா, கார் கதவை ஸாவ்லான் போட்டுத் துடைச்சேளா? அந்தப் பிச்சைக்காரன் கதவைத் தொட்டுட்டானே…”

ப்ரிதியின் ‘க்ளொன்லிநெஸ் மேனியா’வுக்கு பலியானவர்கள் ஏராளம், ஏராளம்.

இவளின் கடுமையான உத்தரவு, நியம நிஷ்டைகளுக்கு பயந்துகொண்டு வந்த இரண்டு நாட்களுக்குள் ஆட்கள் வேலையை விட்டு ஓடிப்போனார்கள்.

“ஐயோ, அந்தம்மா வூட்டுல வேலை பண்ண நமக்குக் கட்டுப்படியாகாதும்மா! சும்மா சும்மா பெருக்கு, தொடைங்கறாங்க!” என்றாள் ஒருத்தி.

“படா பேஜாரும்மா… வூட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே சோப்பு போட்டுக் கை களுவணும்! தும்மக் கூடாது, இரும்மக் கூடாது! இன்னா பொண்ணும்மா அது!” என்றாள் இன்னொருத்தி.

“அவாத்துல மனுஷியாலே வேலை பண்ண முடியுமோ?. அம்மிலே அரைக்கரச்சே கையாலே தள்ளக் கூடாதாம்.. ஸ்பூன் வெச்சுண்டு தள்ளணுமாம்! இது சாத்தியமே? அப்பளத்தை இடுக்கியலே பரிமாறணுமாம், கை படக்கூடாதாம்! இது என்னடிம்மா கூத்து, லோகத்துலே இப்படியும் ஒரு பொம்மனாட்டியா..!” என்றாள், இவள் வீட்டுக்கு வந்து ஒண்ணேகால் நாள் தங்கி சமையல் வேலை செய்த அம்புஜம்.

வாஸ்தவம்தான். ப்ரீதி கூத்துக்கட்டிதான் அடித்தாள். தன் சுத்த உணர்வுக்கு ஆட்கள் சரிப்பட்டு வராமல் போனபோது, “இவா தயவு எனக்கெதுக்கு? நானே பார்த்துப்பேன்!” என்று வீறாப்புப் பேசினாள். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த வாஷிங் மெஷின், மிக்ஸி வகையறாக்களை வைத்துக்கொண்டு உயிரை விட்டாள்.

***

ந்த சமத்தில் மேரி இவளிடம் வேலைக்கு வந்து சேர்ந்தாள். வெள்ளைக்கார துறை வீட்டில் வேலை செய்த அனுபவமாம். மடிப்புக் கலையாத வெள்ளைப்புடவை, தூக்கிப் போட்ட கொண்டை, பிரா, காலில் செருப்பு என்று படு நறுவிசாய் இருந்தாள்.

மெதுவாய்ப் பேசினாள். பணிவாய் பதில் சொன்னாள். சம்பளம் மட்டும் எண்பது ருபாய், சாப்பாடு போட்டு.

“வீட்டு வேலைக்காரிக்கா எண்பது ருபாய், சாப்பாடு போட்டு?” என்று வாயைப் பிளந்தவர் அனேகம்.

ஆனால் ப்ரீதிக்கு மனசில் குறையில்லை.

“என் மனசு அறிஞ்சு நடந்துக்கறா, சொன்ன வேலையை ‘கப்” புனு புரிஞ்சிக்கறா, துண்டை இடுப்புல வெச்சிண்டு கை துடைச்சிக்கறா! சோம்பேறியா உட்காராம ஷெல்ப் தட்டறா! ஒ ஷி ஈஸ் வெரி க்ளீன்! இன்னும் பத்து ரூபா சேர்த்துக் கொடுக்கக் கூட நான் ரெடி!”

***

ப்படியும் இப்படியுமாக மேரி வேலைக்கு வந்து பதினைந்து நாட்கள் கடந்த ஒரு நாளில் வீட்டில் குழம்புப்பொடி தீர்ந்து போனது. சாதாரணமாய் ஊரிலிருந்து ஆறு மாசத்துக்கு ஒரு தரம் போடி அரைத்து அனுப்பும் அம்மா இந்த முறை அனுப்பவில்லை.மறந்துபோய் விட்டதோ, இல்லை விட்டுப்போய் விட்டதோ தெரியவில்லை.

நாமே இங்கு அரைத்துக் கொள்ளலாம், இது என்ன ப்ரும்ம வித்தையா என்று நினைத்திருந்ததால் ப்ரீதியும் அம்மாவுக்கு ஞாபகப்படுத்தி எழுதவில்லை. ஆனால் நினைத்தது நடக்காதபடி, என்னவோ தொட்டுத் தொட்டு வேலை, நச்நச்சென்று மழை. சுத்தமாய் துடைத்து வைத்த மாதிரி போடி தீர்ந்துபோய், ஒரு நாள் அரைத்துவிட்ட சாம்பார், ஒருநாள் பொரித்த குழம்பு, ஒரு நாள் மோர் சாம்பார் என்றும் வைத்தாகி விட்டது. இனியும் எப்படி சமாளிப்பது?.

அன்றைக்கு சாமான்களைத் திட்டமாய் ‘சமைத்துப்பார்’ புத்தகத்தில் சொல்லிருந்த தினுசில் தயார் செய்து டப்பாவில் போட்டுக்கொண்டு, மேரி உடன்வர, காரில் ப்ரீதி கிளம்பினாள்.

“அரைக்கிற மிஷின் எங்கே இருக்குது தெரியுமா மேரி?”

“எங்க வீட்டுக் கிட்டத்துலயே ஒண்ணு இருக்குதும்மா… குடுங்க, நான் அரைச்சிட்டு வந்திடுறேன்..”

“நோ.. நோ… நானும் வரேன்… சுத்தமா, கிட்ட நின்னு அரைக்கச் சொல்லணும்!”

மேரி வழி சொல்ல, இவள் அங்கு வண்டியை ஓட்டிச் சென்றாள். சந்து குறுகலாய் இருக்கவே, சட்ட்று எட்டி வண்டியை நிறுத்தினாள்.

மெஷின் கட்டிடம் ரொம்பப் பழசாக இருந்தது. அன்றைக்கோ வெள்ளை அடித்திருந்த கட்டிடத்தில் இங்குமங்கும் சிகப்புக் கற்கள் தெரிந்தன.

“இதுவா? க்ளீனா இல்லியே மேரி! வேற எடத்துக்குப் போகலாமே…”

“உள்ள நல்ல இருக்கும்மா… எனக்கு வேற மிஷின் தெரியாதுங்க..”

முகத்தைச் சிணுங்கிக்கொண்டே ப்ரீதி கேலி இறங்க முற்பட்டாள். முதல் நாள் பெய்த மழையில் தரை சொதசொதத்திருந்தது. சற்றுத் தள்ளியிருந்த ஒட்டு வீடுகளின் வாசலில், காகிதக் கப்பல் விட்டுக் கொண்டிருந்தனர்.

“நீங்க இருங்கம்மா.. நான் உள்ளார பொய் மிஷின் ஓடுதான்னு பார்க்கறேன்..” மேரி இறங்கிப் போய் இரண்டு நிமிஷத்தில் இவளிடம் வந்தாள்.

“கரெண்ட் இல்லம்மா.. நீங்க வீட்டுக்குப் போங்க, நான் இருந்து அரைச்சிட்டு வரேன்..”

“ஒ காட்… வாட் எ நியூசென்ஸ்! கரெண்ட் எப்ப வருமாம்?”

“நாழி ஆவலாம்ங்கறாங்க…”

ப்ரீதி யோசித்தாள். மணியைப் பார்த்தாள். பதினொன்று பன்னிரண்டு மணிக்கு உமா வருவதாய்ச் சொல்லியிருக்கிறாளே…

“நீ என்ன சொல்ற மேரி?”

“நீங்க போங்கம்மா… நான் பார்த்துக்கறேன்…”

மேரியின் மேல் உண்டாகிவிட்ட அதித நம்பிக்கையால், பாத்திரங்களை அவளிடம் கொடுத்த ப்ரீதி, கூடவே துணி ஒன்றையும் கொடுத்தாள்.

“மிஷினை நல்ல துடைச்சிட்டு அரைக்கச் சொல்லு… எவங்க தொட்டதோ! என்ன?”

“சரிம்மா…”

“கை படாம அரைச்சி எடு… திறந்த போடாம வீட்டுக்கு உடனே எடுத்துட்டு வந்துடு!”

“சரிம்மா…”

“அப்ப நான் போறேன்… பார்த்து அரைச்சுண்டு வா!”

“சரிம்மா… நீங்க கவலைப்படாம போங்க… நான் பார்த்துக்கறேன்! உங்க சுத்தம் எனக்குத் தெரியாதா?”

நம்பிக்கையளிக்கும் தினுசில் மேரி புன்னகைக்க இவள் கிளம்பிப் போனாள்.

கார் அந்த பக்கம் போனதும், மேரி பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு மெஷின் கட்டிடத்துக்குள் போனாள்.

“இன்னா மேரி… மிஷினை நிப்பாட்டச் சொல்லிட்டு எங்க போயிட்டே? ஆளு காத்திருக்காங்க… ஓட்டலாமா?”

முண்டாசு கட்டின ஆள் மேரியைப் பார்த்துக் கேட்கவும், இவள் தொப்பென்று பத்திரங்களை வைத்துவிட்டுத் தரையில் உட்கார்ந்தாள்.

“ஒட்டு அண்ணே… நல்லவேளையா நீ நிப்பாட்டினியோ, அந்தம்மா உள்ளார வராம போச்சோ! இல்லாட்ட உன் தாவு தீர்ந்து போயிருக்கும் இன்னிக்கு!”

‘டொர்.. ரூம்…’ என்ற உறுமலோடு மெஷின்கள் ஓடத் தொடங்கின. கூடையும் கையுமாய் காத்து கிடந்த ஒரு பெண், “நா மொளகா அரச்சிகினு போயிடறேங்கா…” என்று மேரியிடம் சொல்லி மெஷினிடம் சென்றாள்.

சற்றுமுன் மிளகாயும் மஞ்சள் தூளும் அரைத்த இன்னொரு பெண் ஒருபக்கமாய் ஒதுக்கிவிடப்பட்ட இடத்தில் அவற்றைக் கொட்டி, தகரத்தட்டல் துளாவிக் கொண்டிருந்தாள். அவள் கிட்டத்தில் பத்துமாசப் பிள்ளை ஒன்று தவழ்ந்தது.

“தே… போ அப்பாலே. நெடி ஏறுது!” என்று பிள்ளையை விரட்டின அவள், “இன்னா மேரிக்கா,
இந்நேரத்துல மிஷினுக்கு வந்து குந்திகினே?” என்று குசலம் விசாரித்தாள்.

“ச்சூ!” என்று சூள் கொட்டின மேரி, பதிலேதும் கூறவில்லை.

துலாவி முடிந்த கையேடு அவற்றை டப்பாக்களில் அந்தப் பெண் அள்ளி முடிப்பதற்கும், குழந்தை ‘ஜொர்’ என்று சிறுநீர் கழிப்பதற்கும் சரியாக இருந்தது. கோடாய் ஓடிய நீர் அங்கு மிங்கும் வளைந்து கோலம் போட்டது.

இதற்குள் மெஷினில் மிளகாய் அரைத்து முடித்த பெண், அதை ஆறப்போட வேண்டி கிட்டத்தில் வந்தாள்.

“அட இன்னாடா நீ… இங்கே போய் ஒண்ணுக்கு இருந்துகினு! இப்ப நா எங்க கொட்டி தொளாவுறது? ஆங்?”

பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு எழுந்த மேரி அந்தப் பெண்ணின் சங்கடம் புரிய, மெஷின் துடைப்பதற்காகப் ப்ரீதி கொடுத்திருந்த துணியை அவளிடம் வீசி, “இதால துடைச்சிடு…” என்றாள்.

இடத்தை சுத்தமாய்த் துடைத்த பெண்ணும், அது காய்ந்த உடன் மிளகாய்த் தூளை அங்கு கொட்டினாள்.

மெஷின் சப்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓசையும் மீறி முண்டாசுக்காரன் மேரியிடம் பேச்சிக் கொடுத்தான்.

“தாஸுக்கு வேலை கிடைச்சிடுச்சா மேரி? ஆளைக் கண்ணுலயே காணுமே? வேலை தேடி ரொம்ப அலையறானோ?”

“எங்கே? அதுவும் அலையாத, ஏறாத எடம் இல்லே! எங்கே கிடைக்குது?” மேரி சலிப்புடன் கத்தினாள்.

பக்கத்தில் சீயக்காயப் பையை யாரோ உதற, முண்டாசுக்காரன் ‘லொச்… லொச்…’ என்று நான்கு முறை தும்மி, மூக்கில் சேர்ந்த சளியை இடக்கையால் வழித்து, சுண்டியெறிந்தபின், விரல்களை மெஷினின் மேல்புறத்தில் தேய்த்தான்.

“உன் புது வூட்டு வேலை எப்படியிருக்குது? சல்லிசா இருக்கா?”

“ஐயே.. என்ன சல்லிசு? ஆளை ஒரு நிமிஷம் ஒக்கார உடமாட்டேங்கறாங்க! என் வூட்டுக்காரருக்கு ஒரு எடத்துல வேலை கிடைச்சிடுச்சின்னா, நா இந்த இடத்துக்குத் தலை முழுகிடுவேன்… சரியான கேஸு இந்தம்மா!”

மிளகாயும் சாமான்களும் அரைபட்டு விட்டன. அவற்றை இப்படி எடுத்து வந்து, சற்றுமுன் குழந்தை சிறுநீர் கழித்து இப்போது காய்ந்துவிட்ட இடத்தில் கொட்டி ஆறவைத்தாள் மேரி. பின் வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருந்த பையனில் ஒருவனை அழைத்தாள்.

“டே ராசு, இங்க வாடா… ஒரு பொட்டலம் தாரேன், அதை எங்க வூட்டுக்காரர்கிட்ட குடுத்துடுடா… இந்தா, பத்து காசு, குச்சி ஐஸ் சாப்பிடு கண்ணு…”

ராசு பத்து காசுக்கு ஆசைப்பட்டு உள்ளே வந்தான்.

பழைய பேப்பர் ஒன்றை எடுத்து, அரைத்திருந்த மிளகாய் மற்ற தூள்களிலிருந்து கால் பங்கு போல எடுத்து பொட்டலம் கட்டி, ராசுவிடம் கொடுத்து, கூடவே பத்து காசையும் நீட்டினாள் மேரி.

பையன் காசு, பொட்டலத்தோடு ஓடினான்.

மேரி மிகுதிப் பொடியைப் பாத்திரங்களில் வாரிக் கொட்டினபோது, கூலி வாங்க அவளிடம் முண்டாசுக்காரன் நெருங்கி வந்தவன், அவளுக்கு உதவியாக மஞ்சள், மற்ற சாமான் தூளைக் கையால் வாரி பாத்திரத்துள் போட்டான். அப்புறம், கூலியை அவன் சொல்ல, மேரி கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.

இரண்டடி சென்றவள் திரும்பி, குழந்தையின் மூத்திரம் துடைக்கப்பட்ட துணியை எடுத்துப் பத்திரங்களை அழுந்தத் துடைத்தாள். பின்னர் துணி, பாத்திரங்களுடன் வெளியே நடந்தாள்.

***

மேரி வீட்டை அடைந்தபோது விருந்தாளிகள் வந்து விட்டனர். பளபளத்த வீட்டைப் பெருமையுடன் அவர்களுக்குச் சுற்றிக், காட்டின ப்ரீதி, கடைசியாய் கிட்சனுக்குக் கூட்டி வந்தாள்.

அரைத்து வந்த பொடிகளைப் பாத்திரத்திலிருந்து கரண்டியின் உதவியுடன் கண்ணாடி சீசாக்களுக்கு மாற்றிக் கொண்டிருந்தாள் மேரி.

“நல்ல சுத்தமா ஆராய்ச்சியா மேரி?”

“ஆமாம்மா…”

“மிஷினை முதல்ல துடைக்கச் சொன்னியா?”

“ஆமாம்மா, இங்க பாருங்க துணியின் அழுக்கை!” என்று மூத்திரம் துடைத்த துணியை மேரி நீட்டினாள்.

“குட், கை படாம எடுத்தியா?”

“ஆமாம்மா…”

‘பார்த்தீர்களா என் வீட்டு சுத்தத்தை!’ என்று தினுசில் விருந்தாளிகளை ஒரு பார்வை பார்த்தாள் ப்ரீதி.

“ஒரு ஆபரேஷன் தியேட்டர் மாதிரி இருக்கு உங்க கிச்சன்… அத்தனை சுத்தம், அத்தனை பளபளப்பு! யுவர் சர்வெண்ட் ஈஸ் வெரி க்ளீன்!”

சிநேகிதியின் பாராட்டில் பூரித்தாள் ப்ரீதி.

“அமெரிக்கா சுத்தத்தை இங்கே எதிர்பார்காதேன்னு எல்லோரும் சொன்னா… பட் நௌ லுக் அட் மை ஹவுஸ்! மனசு வெச்சா எதுதான் நடக்காது? ம்? நாம பொறுமையா கத்துக் கொடுத்தா ஏன் ஆட்கள் கத்துக்க மாட்டா?” தோளைக் குலுக்கி கர்வத்துடன் எஜமானி பேசியபோது, தன்னை மீறிக்கொண்டு எழுந்த சிரிப்பு வெளியில் தெரியாதிருக்கும் பொருட்டு, வேறு பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மேரி.

- வெளியான ஆண்டு: 1979 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்று சியாமாவுக்கு இறைச்சி வாங்கிவரும் ஆள் வரவில்லை. வயலில் கரும்பு வெட்டுகிறார்களாம், போய் விட்டான். தேசிய நெடுஞ்சாலையில் அந்த டவுனுக்கு தெற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்த தொழில்சாலையில் எங்கள் இல்லமும் இருந்ததால் ஏதொரு விஷயத்திற்கும் எந்த ஒரு சாமான் வாங்கவும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று இவர் ஊரில் இல்லை-தூங்கி எழுந்த எண்ணெய் தேய்த்து ஸ்னானம் செய்தேன். இவர் இல்லாததால் வீட்டில் வேலை ஒன்றுமே இல்லை. என்ன செய்து பொழுதைப் போக்கலாம் என்று தவித்தவள், இவருடைய பட்டன் இல்லாத ஷர்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பட்டன்களைத் தைத்துக் கொண்டிருந்தேன். சமையற்கார ...
மேலும் கதையை படிக்க...
அவன் கண்களை மூடிக்கொண்டான். மனசுக்குளே அவளை முழுசாய் நிறுத்திப் பார்க்க முயற்சித்தான். கிட்டத்தட்ட ஒரு மாசமாய் நினைத்துநினைத்துப் பழகி இருந்ததால் கூப்பிட்ட உடன் ஓடிவரும் நாய்க்குட்டி மாதிரி மனசுக்குள் வந்து நின்று கொண்டாள். அவள் ரொம்ப உயரமில்லை. ஐந்து இருநாடு இருந்தால் அதிகம். அந்த உயரத்திற்கு ஏற்ற பருமன். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்வதென்றால் ரொம்பப் பிரியம். கல்யாணமாகுமுன் பிறந்த வீட்டில் காலேஜ் போகும் கன்னியாக இருந்த நாட்களில் அவளுக்கு எண்ணெய் தேய்த்துவிட என்று ஒரு பெண்மணியை அம்மா நியமித்திருந்தாள். கஸ்தூரி - அதான் அந்தப் பெண்மணி - அடாது மழைபெய்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
நடராஜன் தன் போட்டோ ஸ்டுடியோவின் மாடி வராந்தா குட்டை கைப்பிடிச் சுவரில் சாய்ந்து வண்ணம் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே அவனுக்கு வேலை எதிர் பார்க்காத விதமாய் ஒன்று மாற்றி ஒன்று சரியாய் இருந்தது. முதல் நாள் கல்யாண முகூர்த்த நாள் ...
மேலும் கதையை படிக்க...
வைராக்கியம்
நெடுஞ்சாலையில் ஒரு சாவு
ஆசை ஆசை ஆசை
ட்ரங்கால்
சோறு ஆறுதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)