சுடும் உண்மை சுடாத அன்பு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 18,377 
 

இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் சகல தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு தன் உயிர்த் தோழி வசந்தியையும் உடன் அழைத்துக் கொண்டு அவள் கிளம்பி இருக்கிறாள்.

ஆனால் பெங்களூரில் இருந்து கிளம்பும் போதிருந்த தைரியம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து சென்னை சென்ட்ரலில் வாடகைக் காரில் ஏறி அமர்ந்த போது சுத்தமாகக் கரைந்து போயிருந்தது. வாசலிலிருந்து வீட்டுக்கு உள்ளே போகவாவது அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. ஆனால் அவன் எப்படி நடத்தினாலும் அது அவள் செய்த தவறுக்குக் குறைந்த பட்ச தண்டனையாகக் கூட இருக்க முடியாது என்று நினைத்தாள். கார் மகன் வீட்டை நோக்கி முன்னேற மனமோ பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்து அவளது இளமைக் காலத்தை நெருங்கியது….

சுடும் உண்மை சுடாத அன்பு!

படிப்பிலும் அழகிலும் பலரும் பாராட்டும்படி இருந்த நிர்மலாவுக்கு அவள் தந்தை அழகு என்ற சொல்லிற்கு சம்பந்தமே இல்லாத நடேசனைக் கணவனாக தேர்ந்தெடுத்த போது நிர்மலா அதைக் கடுமையாக எதிர்த்தாள். ஆனால் அவள் தந்தை அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. “பையன் குணத்தில் சொக்கத் தங்கம். அரசாங்க உத்தியோகம் இருக்கு. பார்க்க சுமாரா இருந்தா என்ன?” என்று அவள் வாயை அடைத்தார். பார்க்க சுமார் என்ற வர்ணனை நடேசனை அநியாயத்திற்கு உயர்த்திச் சொன்னது போல தான். கறுத்து மெலிந்து சோடா புட்டிக் கண்ணாடியும் அணிந்திருந்த அவரை எந்த விதத்திலும் சுமார் என்று ஒத்துக் கொள்ள நிர்மலாவால் முடியவில்லை. இரண்டு நாள் சாப்பிடாமல் கூட இருந்து பார்த்த நிர்மலா குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டி வந்தது.

ஆனால் அவளுடைய அப்பா சொன்னது போல நடேசன் குணத்தில் சொக்கத் தங்கமாகவே இருந்தார். அன்பான மனிதராக இருந்த அவர் அவள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார். எல்லா விதங்களிலும் அவளுக்கு அனுசரித்துப் போனார். அவளுக்கு அவருடைய குணங்களில் எந்தக் குறையையும் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் வெளியே நான்கு பேர் முன்னால் அவருடன் செல்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. வேண்டா வெறுப்பாக வீட்டுக்குள் அவருடன் குடும்பம் நடத்தப் பழகிக் கொண்டாள். கல்யாணம் முடிந்து ஆறு மாதத்தில் அவள் கர்ப்பமான போது குழந்தை அவர் போல் பிறந்து விடக் கூடாது என்று அவள் வேண்டாத தெய்வமில்லை. அவள் பிரார்த்தனை வீண் போகவில்லை. அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாழ்க்கை சிறிது சுலபமாகியது.

அவள் மகன் அருணுக்கு இரண்டு வயதான போது அவள் எதிர் வீட்டுக்கு ஒரு கவர்ச்சியான ஆணழகன் குடி வந்தான். ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவன் பார்க்க ஒரு சினிமா நடிகன் போல் இருந்தான். ஆரம்பத்தில் அடிக்கடி சிநேகத்துடன் புன்னகைத்தவன் பின் அவளிடம் பேச்சுத் தர ஆரம்பித்தான். அவள் குழந்தையிடம் அதிக அன்பைக் காட்டினான். குழந்தையை அடிக்கடி எடுத்துக் கொண்டு வெளியே சுற்றப் போனான். போகப் போக அவள் உடுத்தும் உடைகளைப் பாராட்டினான். அவள் அழகைப் பாராட்டினான். மெள்ள மெள்ள அவள் மனதில் இடம் பிடித்தான்.
கடைசியில் ஒரு நாள் அவள் சரியென்று சொன்னால் அவளைக் குழந்தையுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னான். ஆரம்பத்தில் தன்னுடன் தனியாக வந்து விடும் படியும், அவள் நடேசனிடமிருந்து சட்டப்படி விவாகரத்து வாங்கிய பின் திருமணம் செய்து கொண்டு பின் குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விடலாம் என்று சொன்னான். ஓரிரண்டு மாதங்களில் இதையெல்லாம் சாதித்து விடலாம் என்றும் அதன் பின் அவர்கள் வாழ்க்கை ஒரு எல்லையில்லாத சொர்க்கமாக இருக்கும் என்று ஆசை காட்டினான்.

ஒரு பலவீனமான மனநிலையில் அவள் சம்மதித்தாள். ஆனால் அவளுக்குக் குழந்தையை விட்டுப் போவது தான் தயக்கமாக இருந்தது. சில நாட்கள் தானே என்று அவன் அவளை சமாதானப் படுத்தி ஒத்துக் கொள்ள வைத்தான். தன்னை மன்னிக்கும் படி கணவனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அவள் அவனுடன் ஓடிப்போனாள்.

இருவரும் பெங்களூரில் ஒரு லாட்ஜ் எடுத்துத் தங்கினார்கள். மூன்று நாட்கள் கழித்து அவள் பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு அவன் காணாமல் போனான். அவளுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு மெள்ள மெள்ள தான் உண்மை உறைத்தது. அவள் உலகம் அன்று அஸ்தமனமாகியது. அந்த லாட்ஜிற்குத் தரக்கூட அவளிடம் பணம் எதுவும் இருக்கவில்லை. நல்ல வேளையாக அவளுடைய நெருங்கிய தோழி வசந்தி பெங்களூரில் வேலையில் இருந்து அவள் வேலை செய்யும் கம்பெனியின் விலாசமும் அவளிடம் இருந்ததால் போன் செய்து அவளை வரவழைத்தாள்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்த வசந்தி வந்து நிர்மலாவை தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். சில நாட்கள் உண்ணாமல், உறங்காமல் பித்துப் பிடித்தது போல் இருந்த தன் தோழியைப் பார்த்து வசந்தி ஆரம்பத்தில் பயந்தே போனாள். அவள் தற்கொலைக்கு முயல்வாளோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் சந்தேகத்தை ஊகித்தது போல வரண்ட குரலில் நிர்மலா சொன்னாள். “பயப்படாதே வசந்தி. நான் கண்டிப்பாக தற்கொலை செய்துக்க மாட்டேன். நான் செய்த தப்புக்கு நான் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதை முழுசும் அனுபவிக்காமல் நான் சாக விரும்பலை”. சொல்லும் போதே அவள் வார்த்தைகளில் சுய வெறுப்பு பரிபூரணமாகத் தெரிந்தது.

அது காலப்போக்கில் வடிந்து விடும் என்று வசந்தி நினைத்தாள். ஆனால் அது சாசுவதமாக நிர்மலாவிடம் தங்கிப் போனது. ஒரு மாதம் கழித்து வசந்தி கேட்டாள். “நிர்மலா இனி என்ன செய்யப் போகிறாய்?”

“எனக்கு இங்கே எதாவது வேலை வாங்கித் தருகிறாயா வசந்தி?”

”நீ திரும்ப உன் வீட்டுக்குப் போகலையா நிர்மலா?”

அந்தக் கேள்வியில் நிர்மலா கூனிக் குறுகி விட்டாள். “மூன்று நாள் நான் சாக்கடையிலே விழுந்திருந்து அழுகிட்டேன். அந்த நல்ல மனுஷனுக்கு மனைவியாகவோ, அவரோட குழந்தைக்கு தாயாகவோ இருக்கிற அருகதையை நான் இழந்துட்டேன் வசந்தி.”

“நீ போகலைன்னா நீ அவன் கூட எங்கேயோ வாழ்க்கை நடத்திகிட்டிருக்கிறதா அவங்க நினைச்சுட்டு இருப்பாங்க நிர்மலா. நீ மூணு நாளுக்கு மேல அவன் கூட இருக்கலைன்னு அவங்களுக்கு தெரியாமல் போயிடும்”

“கற்பில் கால், அரை, முக்கால்னு எல்லாம் அளவில்லை வசந்தி. இருக்கு, இல்லை என்கிற ரெண்டே அளவுகோல் தான்”

வசந்தி வாயடைத்துப் போனாள். ஆனால் பின் எத்தனையோ சொல்லிப் பார்த்தும் நிர்மலாவின் அந்த எண்ணம் கடைசி வரை மாறவில்லை. அந்த மூன்று நாட்கள் வாழ்க்கை பழைய நிர்மலாவை முழுவதுமாக சாகடித்து விட்டதாகவே வசந்திக்குத் தோன்றியது. தொடர்ந்த காலங்களில் அவள் என்றுமே அழுததில்லை. சிரித்ததில்லை. தன்னை அழகுப்படுத்திக் கொண்டதில்லை. ருசியாக சாப்பிட்டதில்லை. டிவி பார்த்ததில்லை. வசந்தியைத் தவிர யாரிடமும் நெருங்கிப் பழகியதுமில்லை. எத்தனையோ இரவுகளில் உறங்காமல் ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த தோழியைப் பார்த்து வசந்தி மனம் வெந்திருக்கிறாள்.

”என்ன கொடுமை இது. எத்தனை காலம் இப்படி இருப்பாய் நிர்மலா?” ஒரு நாள் தாளமுடியாமல் வசந்தி கேட்டாள்.

நிர்மலா அதற்கு பதில் சொல்லவில்லை.

“இப்படி உள்ளுக்குள்ளே சித்திரவதை அனுபவிக்கிறதுக்கு பதிலா நீ நேரா உன் வீட்டுக்குப் போய் அவங்க பேசறத கேட்டுக்கலாம். கொடுக்கற தண்டனையை ஏத்துக்கலாம். ஒரேயடியாய் அழுது தீர்க்கலாம். அப்படியாவது உன் பாரத்தைக் குறைச்சுக்கலாம்”

அதை நிர்மலா ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுடைய நடைப்பிண வாழ்க்கை தொடர்ந்தது. அடுத்த மாதமே ஒரு வேலையில் வசந்தி அவளை சேர்த்து விட்டாள். நிர்மலா ஒரு நடைப்பிணமாய் அந்த வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். வாங்குகிற சம்பளத்தில் அத்தியாவசிய செலவு போக ஒரு பகுதியை வசந்தியிடமும், மீதியை அனாதை ஆசிரமங்களுக்கும் தந்து விடுவாள்.

அவர்களுடைய தோழி ஒருத்தி மூலமாக நிர்மலாவின் வீட்டு விஷயங்கள் அவ்வப்போது தெரிய வந்தன. கணவர் நடேசன் வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நிர்மலாவின் பெற்றோர் அருணைத் தாங்கள் வளர்ப்பதற்கு முன் வந்தனர். அதற்கு சம்மதிக்காமல் நடேசன் மகனைத் தானே வளர்த்தார். ஊரில் நிர்மலா பற்றி வம்புப் பேச்சு அதிகமாகவே அவர் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். மகன் அருண் படிப்பில் படுசுட்டியாக இருந்தான். நடேசன் அவனை பி.ஈ படிக்க வைத்தார். அவனுக்கு நல்ல வேலை கிடைத்து இரண்டே மாதங்களில் நடேசன் காலமானார்.

அந்தத் தகவல் கிடைக்கும் வரை பொட்டு மட்டும் வைத்துக் கொண்டிருந்த நிர்மலா பின் அதையும் நிறுத்தி விட்டாள். அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்த பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்த போது தான் கான்சர் முற்றிய நிலையில் இருப்பது தெரிந்தது. அதன் பின் தான் பல நாள் யோசனைக்குப் பின் இறப்பதற்கு முன் ஒருமுறை மகனை நேரடியாக சந்திக்க நிர்மலா முடிவு செய்தாள்.

அவள் தன் முடிவை வசந்தியிடம் சொன்ன போது வசந்திக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. வசந்தி பேச வார்த்தைகள் இல்லாமல் தோழியின் கைகளை ஒரு நிமிடம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். எத்தனையோ முறை இது பற்றியும் சொல்லியும் கேட்காத நிர்மலா மரணம் அருகில் வந்து விட்டது என்பதை அறிந்தவுடன் மனமாற்றம் அடைந்தது வசந்தி மனதை நெகிழ வைத்தது. குரல் கரகரக்க அவள் சொன்னாள். “துணைக்கு நானும் வர்றேன் நிர்மலா”

கார் அருண் வீட்டு முன் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கும் போது நிர்மலாவின் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாற ஆரம்பித்தன. வசந்திக்கும் சிறிது பதட்டமாகத் தான் இருந்தது. அருணின் வீடு அழகாகத் தெரிந்தது. வீட்டு முன்னால் நிறைய பூச்செடிகள் இருந்தன. ஒரு காலத்தில் நிர்மலாவிற்கும் பூச்செடிகள் என்றால் உயிர்.

அழைப்பு மணியை வசந்தி அழுத்தினாள். அருண் வந்து கதவைத் திறந்தான். அவனிடம் நிர்மலாவின் அன்றைய சாயல் அப்படியே இருந்தது. அழகான வாலிபனாக இருந்தான். என்ன வேண்டும் என்பது போல அவர்களைப் பார்த்தான்.

”அருண்….?” வசந்தி கேட்டாள்.

“நான் தான். நீங்கள்…?”

“நான் வசந்தி. இது என் சிநேகிதி நிர்மலா. உங்களைத் தான் பார்க்க வந்தோம்”

தாயின் பெயர் கேட்டும் அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. வசந்திக்கு அவனைத் தவறு சொல்லத் தோன்றவில்லை. அவனுக்கு அவன் தாயின் நினைவு எல்லாம் ஏதாவது பழைய புகைப்படத்தினுடையதாக இருக்கலாம். அந்த அழகு நிர்மலாவிற்கும் இன்றைய நடைப்பிண நிர்மலாவிற்கும் தோற்றத்தில் சிறிது கூட சம்பந்தம் தெரியவில்லை.

“உள்ளே வாங்க” அவன் உள்ளே அழைத்தான்.

உள்ளே வரவேற்பறையில் இரண்டு புகைப்படங்கள் சுவரில் தொங்கின. ஒன்றில் நடேசன் மட்டும் இருந்தார். இறப்பதற்கு சில காலம் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் போல இருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு சந்தன மாலை போடப்பட்டிருந்தது. இன்னொன்றில் நடேசனும், நிர்மலாவும், கைக்குழந்தை அருணும் இருந்தார்கள்.

“உட்காருங்க” என்றான் அருண்.

இருவரும் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள். நிர்மலாவின் கண்கள் நடேசனின் புகைப்படத்தில் நிலைத்து நின்றன. அவள் போன பின்பு இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் மகனைத் தன்னந்தனியே வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்து கடமையை முடித்த பிறகு இறந்து போன அந்த நல்ல மனிதரை அவள் பார்த்தாள். அவள் கண்கள் லேசாகக் கலங்கின. வசந்தி தன் தோழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருபது வருட காலத்தில் முதல் முறையாக நிர்மலா கண்கலங்குகிறாள்.

நிர்மலாவின் பார்வை நடேசன் படத்தில் நிலைத்ததும் அவள் கண்கலங்கியதும் அவள் பெயர் நிர்மலா என்று கூட வந்த பெண்மணி சொன்னதும் எல்லாம் சேர்ந்த போது அருணிற்கு அவள் யார் என்பது புரிய ஆரம்பித்தது. அவன் முகத்தில் சொல்ல முடியாத உணர்ச்சிகள் தெரிந்தன. அவன் இன்னொரு புகைப்படத்தில் இருந்த தாயின் உருவத்தையும், இப்போது எதிரில் இருக்கும் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான். ஒற்றுமை சுத்தமாக இல்லை என்றாலும் அவள் தான் தாய் என்பது சொல்லாமலேயே உறுதியாகியது. அவன் அறிந்து கொண்டான் என்பது இருவருக்கும் தெரிந்தது. சிறிது நேரம் அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது.

ஆனால் நிர்மலா பயந்தது போல அவன் அவளை அடித்துத் துரத்தவோ, கேவலமாக நடத்தவோ முனையவில்லை. நிர்மலாவிற்கு நாக்கு வாயிற்குள்ளே ஒட்டிக் கொண்டது போல் இருந்தது. எத்தனையோ சொல்ல இருந்தது, ஆனால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

அருணாகவே அந்த மவுனத்தைக் கலைத்தான். “நீங்க ஒரு நாள் கண்டிப்பாய் வருவீங்கன்னு அப்பா சாகிற வரை சொல்லிகிட்டே இருந்தார்.”

நிர்மலா கண்கள் குளமாயின. “நான்…. நான்….” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.

அருண் சொன்னான். “நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம். அப்பா எல்லாத்தையும் என் கிட்ட சொல்லி இருக்கார். நீங்க அழகு, அவர் அழகில்லைன்னு அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும், உங்களை எப்போதுமே அவர் சந்தேகப்பட்டுகிட்டு இருந்ததாகவும், அடிக்கடி சித்திரவதை செய்ததாகவும் ஒரு நாள் தாங்க முடியாமல் நீங்க வீட்டை விட்டே ஓடிப் போனதாகவும் அவர் சொல்லி இருக்கார்…..”

இது என்ன புதுக்கதை என்று வசந்தி திகைத்தாள். அருண் அவளை அடித்துத் துரத்தாமல் இருந்த காரணம் நிர்மலாவிற்குப் புரிந்தது.

அருண் தொடர்ந்தான். “…அவர் சாகிறப்ப கடைசியாய் என்கிட்ட கேட்டுகிட்டது இது தான். ஒரு நாள் நீங்கள் திரும்பி வந்தால் உங்களை நான் பழையதைப் பற்றியெல்லாம் கேட்டு புண்படுத்தாமல் நல்ல மகனாய் உங்களை கடைசி வரைக்கும் பார்த்துக்கணும்னு தான்….”

நிர்மலா உடைந்து போனாள். இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்திருந்த துக்கம் இந்த வார்த்தைகளால் ஒரே கணத்தில் பல மடங்காகப் பெருகி வெடித்து விட்டது. எழுந்து போய் அந்த மனிதர் புகைப்படத்திற்கு அருகே போய் கை கூப்பிக் கொண்டே கீழே சரிந்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
இறக்கும் வரை அவளைப் பற்றி ஒரு தவறு கூட சொல்லாமல், இறக்கும் போதும் அவளுக்காக மகனை வேண்டிக் கொண்ட இப்படிப்பட்ட மனிதரைக் கணவராய் பெற அவள் என்ன தவம் செய்து விட்டாள்! அப்படிப்பட்ட மனிதரை விட்டு ஓடி அவள் என்னவொரு முட்டாள்தனம் செய்து விட்டாள்!

அவளை சமாதானப்படுத்த அருண் முயன்ற போது அவனிடம் வசந்தி மெல்ல முணுமுணுத்தாள். “வேண்டாம் அழட்டும் விட்டு விடு. அவள் இந்த இருபது வருஷமாய் ஒரு தடவை கூட அழவோ, சிரிக்கவோ இல்லை. அழுது குறைய வேண்டிய துக்கம் இது. இது அழுதே குறையட்டும்”

வசந்தி சொன்னதை யோசித்துக் கொண்டே அருண் அழும் தாயை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். வசந்தி மானசீகமாக நடேசனுக்கு நன்றி சொன்னாள். மலையாய் நினைத்து பயந்த விஷயத்தை அவர் நல்ல மனதால் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ஆனால் சிறிது அழுது ஓய்ந்த நிர்மலா மகனைப் பார்த்து உடைந்த குரலில் சொன்னாள். “அவர் சொன்னதெல்லாம் பொய்….”

வசந்தியின் நிம்மதி காணாமல் போனது. எல்லாம் நல்லபடியாக வருகிற வேளையில் இவள் ஏன் இப்படி சொல்கிறாள். கண் ஜாடையால் தோழியை பேசுவதை நிறுத்தச் சொன்னாள். ஆனால் நிர்மலா தன் தோழியின் கண்ஜாடையை லட்சியம் செய்யவில்லை.

“… அவர் என்னை சந்தேகப்படலை. என்னை சித்திரவதை செய்யலை… ஏன் என்னிடம் ஒரு தடவை முகம் சுளித்தது கூட இல்லை. அந்த தங்கமான மனுஷனைப் பற்றி நீ தப்பாய் நினைச்சுடக் கூடாது. நான் நல்லவள் இல்லை…எல்லாத் தப்பும் என் மேல் தான்….” என்று ஆரம்பித்தவள் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள். ஒரு நீதிபதி முன்பு குற்றவாளி தன் முழுக் குற்றத்தையும் ஒத்துக் கொள்வது போல ஒத்துக் கொண்டாள். எல்லாம் சொல்லி விட்டு நீ என்னை எப்படி தண்டித்தாலும் நான் ஏற்றுக் கொள்ளத் தயார் என்பது போல அவனைக் கண்ணீர் மல்கப் பார்த்தபடி நின்றாள்.

வசந்தி பரிதாபமாக அருணைப் பார்த்தாள். நிர்மலா சொன்ன எல்லாவற்றையும் கேட்டு விட்டு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அவளையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். பின் மெள்ள சொன்னான். “அவர் சொன்னது பொய்ன்னு எனக்கும் தெரியும்….”

வசந்தி திகைப்புடன் அவளைப் பார்த்தாள். அவன் தாயைப் பார்த்து தொடர்ந்து சொன்னான். “எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கு அவர் என்ன செய்வார், என்ன செய்ய மாட்டார்னு தெரியாதாம்மா. பெரியவனான பிறகு சில உறவுக்காரங்க மூலமாகவும் எனக்கு உண்மை தெரிஞ்சு போச்சு. ஆனா அப்பா கிட்ட நான் உண்மை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை. எனக்கு அம்மாவா, அப்பாவா, எல்லாமுமா இருந்த அந்த மனுஷர் என் கிட்ட இது வரைக்கும் வேறு எதையும் கேட்டதில்லை. சாகறதுக்கு முன்னால் அவர் கடைசியா கேட்டுகிட்டது உங்க கிட்ட பழையது எதுவும் கேட்காமல் உங்களை ஏத்துகிட்டு கடைசி வரை நல்லபடியா பார்த்துக்கணும்கிறதை மட்டும் தான். அதனால அதை அப்படியே செய்ய நான் தயாராய் இருந்தேன்னாலும் மனசால் எனக்கு உங்களை மன்னிக்க முடிந்ததில்லை….”

நிர்மலா தலை குனிந்தபடி புரிகிறது என்பது போல தலையாட்டினாள். அருண் எழுந்து அவள் அருகில் வந்து தொடர்ந்து சொன்னான். “…நான் நீங்க எவன் கூடவோ வாழ்க்கை நடத்தி வேற குழந்தை குட்டிகளோட இருப்பீங்கன்னு மனசுல நினைச்சுகிட்டு இருந்தேன்மா. ஆனா அப்பாவுக்கு மட்டும் உள்மனசுல நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு தோணியிருக்கு. அதனால அவருக்கு உங்கள் மேல் கடைசி வரை அன்பு இருந்ததும்மா. நீங்க ஒரு நாள் வருவீங்கன்னும் எதிர்பார்த்தார். நான் அவர் சொல்லியிருந்த பொய்யைச் சொன்னவுடனே அப்படியே நான் நினைச்சுகிட்டு இருக்கட்டும்னு இருக்காமல் நீங்க மறுத்து சத்தியத்தை இவ்வளவு தைரியமா சொன்னதையும், நீங்க அழுத விதத்தையும், இப்ப இருக்கிற கோலத்தையும் பார்க்கிறப்ப உங்க மேல எனக்கு ஒரு மதிப்பு தோணுதும்மா. அப்பா கடைசி வரை உங்கள் மேல் வச்சிருந்த அந்த அன்பு முட்டாள்தனம் இல்லைன்னு தோணுதும்மா”

நிர்மலா மகனைத் திகைப்புடன் பார்த்தாள். தாயைத் தோளோடு அணைத்துக் கொண்டு அருண் கண்கலங்க சொன்னான். “இப்ப எனக்கு உங்க மேல கொஞ்சமும் கோபம் இல்லைம்மா. நீங்க அப்போ செஞ்சது தப்பா இருந்தாலும் நீங்க அதுக்கு அனுபவிச்ச தண்டனை ரொம்பவே அதிகம்மா. உங்க கிட்ட நீங்க இவ்வளவு கடுமை காட்டியிருக்க வேண்டி இருக்கலைம்மா. அப்பா இருக்கறப்பவே நீங்க வந்திருக்கலாம்மா. அவர் நிஜமாவே ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.”

மகன் தோளில் சாய்ந்து அந்த தாய் மீண்டும் மனமுருக அழ ஆரம்பித்தாள். பார்த்துக் கொண்டிருந்த வசந்தி கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோர்த்தது.

– என்.கணேசன் (அக்டோபர் 2011)
(டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)

கோவை ஆர்.எஸ்.புரம் விஜயா வங்கியில் பணிபுரியும் இவர், பல பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நிலாச்சாரல் இணைய தளத்தில், மூன்று நாவல்கள் எழுதி உள்ளார். இவரது வலைப்பூ enganeshan.blogspot.comல் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆன்மிக, சமூக, சுய முன்னேற்றக் கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் பதிவாகி உள்ளன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *