கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 8,878 
 

“மணி ஏழாச்சு! இன்னுமா தூக்கம்? எத்தன தடவடி உன்ன எழுப்பறது?” என்று அலமேலுவின் (அம்மா) சுப்ரபாதத்தைக் கேட்டுகொண்டே கண் விழித்தாள் சுஜா.

“நாலு கழுதை வயசாறது! போறாக் கொறைக்கு போர்டு எக்ஸாம் வருஷம் வேற! இப்படித் தூங்கி வழிஞ்சா வெளங்கினா மாதிரிதான். பிளஸ் டூ படிக்கறப் பொண்ணுக்கு ஒரு sense of responsibility வேணாம்? படிப்புன்னா ஏன் வேம்பா கசக்கறது? இந்தப் பொல்லாத்தனம் நாளைக்குப் போகப்போற எடத்துல நல்ல பேரா வாங்கித்தரும்? ஆனா ஒனக்கென்ன? எப்படி வளத்த்துருக்கா பாரு பெத்தவ’ன்னு என் தல தான் உருளும்” என்று தொடர்ந்த சுப்ரபாதத்தை கவனிக்காதது போல் தன் வேலைகளைச் செய்யத் தொடங்கினாள் சுஜா.

சுஜா அப்படியொன்றும் சோம்பேறி இல்லை. படிப்பிலும் சுட்டி தான். இந்தக் காலக் குழந்தைகளைப் போல் செல்போன் கம்ப்யூட்டர் என்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் ஜாஸ்தி. ஸ்கூலுக்கு லேட்டா போனதாகவோ PTA மீட்டிங்குல இவளப் பற்றிய கம்ப்ளைன்ட்டோ கிடையாது. இருந்தாலும் அலமேலுவுக்கும் இவளுக்கும் மூணாம் நட்சத்திரம் தான். அதுவும் இப்போ கொஞ்ச நாளாத்தான். ப்ரீதா (சுஜா அக்கா) கல்யாணம் ஆகிப்போன பிறகு ரொம்ப அதிகமாகி விட்டது.

ப்ரீதா சுஜாவுக்கு நேர் எதிர். அலமேலு ஒன்று சொன்னால் நாலாக பதில் சொல்லுவாள். இருவருக்கும் வாக்குவாதம் நடக்காத நாளே கிடையாது என்று சொல்லலாம். ஆனால் சண்டை போட்டு முடிச்சதும் ரொம்ப நாள் பிரிஞ்ச தோழிகள் மாதிரி ஒன்று சேர்ந்து கொள்வார்கள். ஷாப்பிங் சினிமா என்று பிரெண்ட்ஸ் மாதிரி சுற்றுவார்கள்.

ப்ரீத்தவுக்கு இரண்டு மாதம் முன்னால் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு முதல் நாள் கூட அம்மாவும் பெண்ணும் வாக்குவாதம் செய்து கொண்டார்கள். ஆனால் ப்ரீதா தன் புகுந்த வீடு சென்றபோது ரொம்ப அழுதது அலமேலு தான். இதில் அப்பா உட்பட எல்லாருக்கும் ஆச்சர்யம்.

ஆனால் சுஜா அப்படி இல்லை. அம்மா என்ன திட்டினாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள். அவளுடைய இந்த careless attitude அலமேலுவை இன்னும் கோபப் படுத்தியது.

குளித்து முடித்து ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து ரெடியாய் டிபன் சாப்பிட வந்த சுஜாவைப் பார்த்ததும் அலமேலுவுக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு கோவம் வந்ததோ தெரியவில்லை.

“ ஏண்டி! பொண்ண லட்சணமா டிரஸ் பண்ணிக்க வேண்டாமா? நெத்தில பளிச்சுனு போட்டு வச்சுக்க வேணாம்? லென்ஸ் வச்சுத் தேடற மாரியா வச்சுப்பாங்க? உங்க ஸ்கூல்ல ஒண்ணும் கேக்க மாட்டாங்களா? என்று உரத்தக் குரலில் கத்தினாள்.

சுஜா ஒன்றுமே பேசவில்லை. அமைதியாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்டாள். பின் தன் ஸ்கூல் பேகையும் லஞ்ச் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டுப் போனாள்.

அலமேலு ஸ்தம்பித்துப் போனாள்.

இந்தச் சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த அவள் கணவன் கிருஷ்ணன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பக்கம் திரும்பிய அலமேலு “ இங்க பாருங்க! இவ செய்யறது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல! என்ன திமிர்! கழுதை! அம்மாங்கற மட்டு மரியாத இல்லாத ஜன்மம்! இவ நல்லதுக்குத் தானே சொல்லறேன்? கேட்டுகிட்டா என்ன? ஊமக்கோட்டான் மாதிரி வாயத் தொறக்காம என்ன அழுத்தம்? நீங்க அவ கிட்ட பேசியாகணும். ஆமாம் சொல்லிட்டேன்! இந்த மாதிரி பொண்ணோட என்னால குப்ப கொட்ட முடியாது.” என்று பொரிந்து தள்ளினாள்.

கிருஷ்ணன் ஒன்றும் பேசவில்லை. சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டினான்.

அன்று மாலை ஸ்கூல் விட்டு சுஜா வெளியே வந்த போது அவளுக்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. கிருஷ்ணன் வெளியே காத்துக் கொண்டிருந்தான்.

“என்னப்பா! இந்த நேரம் இங்க?”

“ஏன் வரக்கூடாதா? ஒன்னப் பாக்கலாம்னு தான் வந்தேன். ஐபாகோ போய் ஐஸ்க்ரீம் சாப்டலாமா?”

சுஜா அப்பாவைப் பார்த்தாள். “ அம்மா விடு தூதாப்பா? சரி வா போகலாம்” என்று சொல்லி விட்டு சைக்கிளை ஸ்டாண்டிலேயே விட்டு விட்டு அவனுடன் நடந்தாள்.

அவளுக்குப் பிடித்த வெனிலா ஆர்டர் செய்தாள். அது வந்ததும் ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டவள், கிருஷ்ணனைப் பார்த்து “ நீ கேள்வி கேட்கறயா இல்லை நானாச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

அவள் பேச்சைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன் “நீயே சொல்லுடா” என்றான்.

ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு சுஜா பேசத் தொடங்கினாள்.

“அப்பா! தினமும் நடக்கற பேச்சக் கேட்டு நீ என்னப் பத்தி என்ன ஒபீனியன் வச்சிருப்பேன்னு தெரியாது. ஆனா என்னப் புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்.

ப்ரீதா கல்யாணத்துக்கு முன்னால அம்மா என்ன எதுவும் சொன்னதில்ல. ப்ரீதாவோட சண்ட போடறதுக்கே நேரம் சரியா இருக்கும். இது ஒனக்கும் தெரியும். ஆனா நான் அப்ப எப்படி இருந்தேனோ இப்பவும் அப்படியே தான் இருக்கேன். ஆனா அம்மா மாறிட்டா.

நீ மார்னிங் ஆபீஸ் போனா நேரம் கழிச்சுதான் வீட்டுக்கு வர்ற. அதனால ப்ரீதா கல்யாணம் ஆகிப் போனபின்னால அம்மாகிட்ட என்ன சேஞ்ன்னு உனக்குத் தெரியாது. என்ன சண்ட போட்டாலும் அவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரிதான் பழகினாங்க. நெருக்கம்னா அப்படி ஒரு நெருக்கம். அதனால ப்ரீதா போனபின்னால அம்மா ஒடஞ்சு போய்டாப்பா! அவளால அந்தப் பிரிவத் தாங்க முடியல்ல.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுத் தான் என்கிட்டே இப்ப இருக்கற மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சா. ப்ரீதா இல்லாத கொறய என் மூலமா தீர்க்கணும்னு நெனச்சா போல இருக்கு. எனக்கு மொதல்ல கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்தது. அம்மாவுக்கும் எனக்கும் வளர்ந்து வந்த நெருக்கம் எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.

அப்போதான் ஒரு நாள் திடீர்னு எனக்கு ஒண்ணு தோணிச்சு. ப்ரீதாவோட பிரிவத் தாங்கிக்க நான் அவளுக்கு தொணையா இருக்கேன். நாளைக்கு எனக்குக் கல்யாணம் ஆகி நான் இந்த வீட்ட விட்டுப் போனா அவளுக்கு யார் தொணை?

எனக்கு பயமாயிடித்துப்பா. அந்த மாதிரி நேரத்துல அம்மாவால தாங்க முடியாதுப்பா. அதுனால தான் நான் அம்மாவ மதிக்காத மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சேன். அப்படிச் செஞ்சா அம்மாவுக்கு என் மேல ஒரு கோவம் வரும். என்னப் பிடிக்காம போகும். நாளைக்கு நான் இந்த வீட்ட விட்டுப் போனாக் கூட தாங்கிப்பா. கரெக்ட் தானேப்பா? நான் நெனைக்கறது தப்பா?”

சுஜா பேசி முடித்துவிட்டு கிருஷ்ணனைப் பார்த்தாள்.

சிலையாய் உட்கார்ந்திருந்த கிருஷ்ணன் கண்களில் கண்ணீர். “அம்மா” என்று அவன் வாயிலிருந்து ஒரு சொல் வந்தது. அது அவன் சுஜாவை அன்புடன் கூப்பிட்டானா இல்லை அவனைப் பெற்ற அம்மாவை நினைத்துக் கொண்டானா தெரியாது.

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *