சில நிஜங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 5,346 
 

(இதற்கு முந்தைய ‘ஜன்னல்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

ராஜலக்ஷ்மியை சுப்பையா கோயிலில் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“குட் மார்னிங்… கோயிலுக்கு இந்நேரம் வந்திருக்கீங்க..?” பதில் புன்னகையுடன் கேட்டான்.

“தினம் தினம் இதான் நான் கோயிலுக்கு வர்ற நேரம்.”

“நெஜமாவா ஒங்களை போட்டோ எடுக்கணும்?”

“ரொம்பச் சின்னப் பிள்ளையா இருந்தபோது ஒரு ஸ்டூடியோவுல எடுத்துக்கிட்டதுதான். இப்ப அதைப் பார்த்தா என் போட்டோன்னு சொல்லவே முடியாது. அதான் கேட்டேன்.”
சுப்பையாவுக்குள் சின்னதாக ஊற்று ஒன்று திறந்து லேசாகக் கசிந்தது. ஏற்கனவே அழகர்சாமி, ராஜலக்ஷ்மியை சபரிநாதன் எப்படி நடத்தி வருகிறார் என்பதை சொல்லி வைத்திருந்தார். அதெல்லாம் சுப்பையா மனதில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது ராஜலக்ஷ்மியின் வெளிப்பாடுகளில் ஒரு அவசரம் இருந்ததை அவனால் உணர முடிந்தது. அதற்காக அவனாலும் அவசரம் காட்டிவிட முடியவில்லை. அதனால் ராஜலக்ஷ்மியை போட்டோ எடுப்பதற்குத் தயங்கினான்.

“ஒரே ஒரு போட்டோ எடுங்க போதும்.”

“அவருக்குத் தெரிஞ்சா உங்களுக்குத்தானே கஷ்டம்?”

“எல்லா கஷ்டமும் பட்டாச்சி. இதுக்கு மேல இந்த வயசில வேற ஒரு கஷ்டம் வரப்போறதில்லை. அதுக்காக நீங்க என்னை எடுக்கிற போட்டோவை அவங்ககிட்ட காட்டுவேன்னு சொல்ல வரலை, சமையல் ரூமுக்குள்ள ஒளிச்சு வச்சிப்பேன். இப்பகூட நீங்க படிக்க குடுத்த புஸ்தகம் எல்லாத்தையும் அவருக்குத் தெரியாமத்தானே வச்சிருக்கேன். அவரு கண்ல பட்டாதான் கஷ்டம். அதுவும் நீங்க கொடுத்ததுன்னு தெரிஞ்சா கேக்கவே வேணாம்..”

“நெஜமாவே அவருக்கு இவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ்னா என்னால நம்பவே முடியல..”

“அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்து பாட வேண்டாம்னு சொன்னாங்களே!”

“ஆமா ஏதோ தமாஷா சொன்னார்.”

“அது தமாஷ் கிடையாது… பாட்டும் சங்கீதமும் எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம். நான் இஷ்டப் படற ஒண்ணு உங்ககிட்ட இருக்கக்கூடாது! அதனால வீட்ல நீங்க பாடிடக்கூடாது. தாராளமா கோயில்ல பாடலாம்.”

சுப்பையா லேசாக அதிர்ந்தான்.

“நிஜமாவா சொல்றீங்க?”

“ஆமா. உங்களைப் பாட வேண்டாம்னு சொன்னதோட நிஜம் இதுதான்.”

“ஒரு நிஜமே தாங்க முடியல…”

“அப்ப ஆயிரம் நிஜங்களைத் தாங்கற என் மனசுக்கு எப்படி இருக்கும்? நீங்க இருக்கிற ரூம் ஜன்னலைத் திறந்தா கொசு வரும்னு சொல்லி அதை மூடச் சொன்னாங்களே! அதுவும் நிஜம் கிடையாது. அந்த ஜன்னல் வழியா பார்த்தா எங்க சமையல் ரூம்ல இருக்கற ஜன்னல் வழியா என்னை நீங்க பாத்திடலாம். ஜன்னலைச் சாத்தச் சொன்னது அதுக்குத்தான்!”

சுப்பையா கொஞ்சம் மிரண்டு போனான்.

“இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நான் அவருக்கு மரியாதையே கொடுத்திருக்க மாட்டேன்…”

“நீங்க பக்கத்து வீட்டுக்கு குடியேறியது அவருக்குப் பயமும் பெரிய தண்டனையும். அந்தத் தண்டனையாவது அவருக்கு கிடைக்கணும்….”

சொல்லும்போதே ராஜலக்ஷ்மிக்கு கண்கள் பளபளத்தன. அவளின் அந்தக் கண்ணீர்ப் படலம் அவளுடைய மொத்த வாழ்க்கையையுமே சுப்பையாவுக்கு பிரதிபலித்துக் காட்டியது. என்ன பேசுவது என்று தெரியவில்லை அவனுக்கு. ஆனால் அவனின் மனச்சதுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அவளுகுக்காக நெகிழத் தொடங்கியிருந்தது.

ராஜலக்ஷ்மி அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “உங்ககிட்ட எவ்வளவோ சொல்லணும் போல இருக்கு… ஆனா நேரமாகுது. அவரு இங்கேயே கிளம்பி வந்தாலும் வந்திருவாக…”

“இங்க வந்து உங்களையும் என்னையும் பாத்தாலே அவருக்கு தண்டனைதானே?”

“இவ்வளவு பெரிய தண்டனையை இப்பவே அவருக்கு குடுக்க வேண்டாம். ஆனா எதுக்காகவும் உங்க ரூம் ஜன்னலை மட்டும் மூடிடாதீங்க. இப்போதைக்கு இந்த தண்டனையை மட்டும் அவருக்கு கொடுத்தா போதும்…”

“கண்டிப்பா பூட்ட மாட்டேன், பாடறதையும் நிறுத்த மாட்டேன், போதுமா?”

“ஆண்டாள் சன்னதி பக்கம் போய் என்னை ஒரேயொரு போட்டோ மட்டும் எடுங்க. எடுத்ததும் நான் கிளம்பிடறேன்.”

சுப்பையா ராஜலக்ஷ்மியை ஆண்டாள் சன்னதியில் நான்கு போட்டோக்கள் எடுத்தான். உடனே அவள் கிளம்பிச் சென்றாள்.

இயல்பாக ராஜலக்ஷ்மியின் வாழ்க்கை மெளனமானது. அந்த மெளனத்தை உடைத்தெறிந்து விட்டார் சபரிநாதன். அந்த வெளிப்பாடுதான் சுப்பையாவிடம் கிடைத்த முதல் தருணத்திலேயே அவள் சபரிநாதனின் மனக் கோணல்களை சுருக்கமாகத் தெரிவித்துவிட்டாள். அவளுக்கேகூட இது ஆச்சர்யமாக இருந்தது. ஜன்னலை எப்போதும் திறந்து வையுங்கள் என்று சொல்கிற அளவிற்கு சுப்பையாவிடம் அன்னியோன்னியமும் வந்திருந்ததில் ஆச்சர்யம் இன்னும் அதிகமாயிற்று.

ராஜலக்ஷ்மி இதற்கெல்லாம் ஆச்சர்யமே படவேண்டாம். அடிமேல் அடி விழுந்ததில் அம்மி நகரத் தொடங்கியிருக்கிறது! இன்னும் ஆடிக்காத்து வீசும்போது அம்மி பறக்கவே செய்யும். இதோ ஆனி உறங்கி ஆடி எழுந்தருளுகிறது…!

தாமதமாகிவிட்ட படபடப்பில் ராஜலக்ஷ்மி கோயிலில் இருந்து வேகமாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தாள். சபரிநாதன் திண்ணையில் நின்று கொண்டிருந்ததை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டாள். வீட்டினருகில் சுப்பையாவின் மோட்டார் பைக்கைச் சுற்றி நின்றபடி நிறைய பையன்கள் அதைப்போட்டு இஷ்டத்திற்கு நோண்டிக் கொண்டிருந்தார்கள். ‘நல்லா நோண்டுங்கலே’ என்ற முகபாவனையில் சபரிநாதன் பையன்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் ராஜலக்ஷ்மியால் அதைப் பார்த்து சும்மா வர முடியவில்லை. “பைக்கை யாரும் தொடக்கூடாது… ஓடுங்கலே அவங்க அவங்க வீட்டுக்கு” கண்டிப்பான குரலில் பையன்களை விரட்டினாள். ஓடும்போதுகூட ஒரு பையன் ஹாரனை அமுக்கிவிட்டு ஓடினான். “மறுபடியும் இந்தப்பக்கம் வாங்க சொல்றேன்” என்றபடி படியேறிய ராஜலக்ஷ்மியை உற்றுப் பார்த்தார் சபரிநாதன். அவரைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் போக இருந்தவளை “நில்லு” என்றார்.

“ஒங்க தாத்தா வீட்டுப் பைக்கா? பெரிய இவ கணக்கா பசங்களை நோண்டாதீங்கலேன்னு மிரட்றியே?”

“யாரு வீட்டுப் பைக்கா இருந்தா என்ன, நோண்டினா ரிப்பேர்தானே ஆகும்?”

“ரிப்பேரானா ஆயிட்டுப் போகட்டும், ஒன் சோலியைப் பாத்துட்டுப் போ நீ”

“அப்படிப் போக முடியல என்னால…” ராஜலக்ஷ்மி தீர்க்கமாகச் சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள். சபரிநாதனின் கரு விழிகளில் தீப்பொறி மின்னியது.

“நில்லுளா” என்றார்.

பழைய காலத்து திருநெல்வேலி ஆசாமிகள் அவர்களின் பெண்டாட்டிமார்களை “வாளா போளா” என்றுதான் கோபத்தில் பேசுவார்கள். அது கோபத்தின் வெளிப்பாடு. சபரிநாதன் இதுவரை ராஜலக்ஷ்மியை அப்படி கூப்பிட்டது கிடையாது. அந்த சாதனையையும் இன்று புரிந்துவிட்டார்!

“வர வர நீ கொஞ்சம் சரியில்லை… பத்திரம். இப்படியெல்லாம் இன்னொருவாட்டி பதில் வந்தா நடக்கிறதே வேற! சங்க அறுத்துருவேன். ஆடி அசைஞ்சி ஒன்றரை மணிநேரம் கழிச்சி வர்றியே! ஒரு பிள்ளை பெத்துக் குடுக்க துப்பு இல்லை… பேச்சு மட்டும் வாய் கிழியுது! போய் சட்டு புட்டுன்னு சமைக்கிற வேலையைப் பாருளா…!”

ராஜலக்ஷ்மி விருட்டென்று உள்ளே நகர்ந்துவிட்டாள். சபரிநாதன் ஒருவித பகை உணர்வுடன் மீசையை நீவி விட்டுக்கொண்டார். மோட்டார் பைக்கையும் வன்மத்துடன் நோக்கினார். திடீரென சபரிநாதனின் மனசை எதுவோ நெருடியது. கழுத்தை வளைத்து சந்தேகத்துடன் பக்கத்து வீட்டுக் கதவை கழுத்தை வளைத்து உத்துப் பார்த்தார். வாசலில் பைக் நிற்பதால் சுப்பையா வீட்டிற்குள்தான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் வீட்டிற்குள் அரவமே இல்லை. பாட்டாவது பாடிக்கொண்டிருப்பார் பாகவதர்! அதையும் காணோம்…

அப்போதுதான் கவனித்தார். பக்கத்து வீட்டு வாசலை ஒட்டி தனியாக ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். “யார்லே நீ? எதுக்காக இங்கன நிக்க?”

“இந்த வீட்டு மாமாவை பாக்க வந்திருக்கேன்.”

“நீ எதுக்குல அவரைப் பாக்கணும்?”

“எழுதறதுக்கு எனக்கு ஸ்லேட்டே இல்லை. மாமாகிட்ட கேட்டு ஸ்லேட் வாங்கிட்டுப் போக வந்திருக்கேன்.”

“மாமா என்ன கடையால வச்சிருக்காரு ஒனக்கு ஸ்லேட் குடுக்கிறதுக்கு?”

“மாமா காலையில சங்கரனுக்கு புதுசா பென்சில் குடுத்திருக்காரே..!”

“அப்பம் ஏன் இங்கன நிக்க? போயி கேளு…”

“கதவை எத்தினியோவாட்டி தட்டிப் பாத்திட்டேன். மாமா உள்ளார இல்லை. அதான் இங்கன நிக்கேன்…”

சபரிநாதன் கதவை உற்றுப் பார்த்தார். வாசலில் பைக் நிற்கிறது. எங்கே ஒழிஞ்சான் இவன்? தெருவைப் பார்த்தார். சுப்பையா தூரத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவரது புருவங்கள் நெரிந்தன. கோயிலுக்கா போய் வந்து கொண்டிருக்கிறான்? அப்படியானால் கோயிலில் அவனும் ராஜலக்ஷ்மியும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமே! சபரிநாதனுக்குள் குப்பென்று பயம் கவிந்தது.

“மாப்ள கோயிலுக்கா போயிட்டு வர்றீங்க?” பயந்துகொண்டே கேட்டார்.

“இல்ல மாமா… மலை மேல கொஞ்சதூரம் ஏறிப்பாத்திட்டு வரேன். திட்டமே இல்லாமல் சுப்பையா பொய் சொன்னான். ‘அப்பாடா’வென்று இருந்தது சபரிநாதனுக்கு.

“என்ன மாப்ள நீங்க கடை கிடை ஏதேனும் வச்சிருக்கீங்களா?” கிண்டலாகக் கேட்டார். அவன் புரியாமல் விழித்தான். நேற்றுவரை இயல்பாகப் பார்த்த அவரை தற்போது அவனால் அப்படிப் பார்க்க முடியவில்லை.

“உங்ககிட்ட ஸ்லேட் வாங்கிட்டுப் போகணும்னு அப்பப் பிடிச்சி நிக்கான் இவன். ரெண்டு அடி குடுத்து அனுப்புங்க.”

உடனே அந்தச் சிறுவன் காலையில் நடந்ததைச் சொன்னான். சுப்பையாவுக்குப் புரிந்துவிட்டது. காலையில் அவனிடம் பென்சில் வாங்கிய பையனின் பெயர் சங்கரன் போலிருக்கிறது. அதான் இவன் ஸ்லேட் கேட்கிறான். சுப்பையாவின் மனசு கரைந்துவிட்டது. உடனே அந்தப் பையனை இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டான்.

“நாளைக்கி நான் ஜங்க்ஷன் போவேன். அப்ப உனக்கு புது ஸ்லேட் வாங்கிண்டு வந்து தரேன். சரியா?” பையன் உற்சாகத்துடன் தலையை ஆட்டினான்.

“இன்னும் உன்னைப்போல ஸ்கூல் பசங்க யார் யாருக்கு என்னென்ன இல்லையோ அதெல்லாம் கேட்டுட்டு வந்து சொல்லு. அதையும் நாளைக்கு வாங்கித் தரேன்…”

அப்போது பார்த்து வாசலுக்கு வந்த ராஜலக்ஷ்மி, சிறுவனை சுப்பையா தூக்கிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து சிறிது மன அழுத்தம் குறைந்தவளானாள். சபரிநாதன் அவளைப் பார்த்து மூஞ்சியை சுருக்கிக்கொண்டு “என்ன?” என்றார். அவள் வேண்டுமென்றே சுப்பையாவைப் பார்க்க வாசலுக்கு வந்திருக்கிறாள் என்பது அவருடைய எண்ணம்.

“வாழப்பூ உப்பேரி பண்ணச் சொல்லியிருந்தீங்க…அப்பாவு இன்னும் வாழப்பூ கொண்டாந்து தரலை…”

“அவரைக்கா இருக்கா?”

“இருக்கு”

“அப்ப அதுல உப்பேரி பண்ணிடு”

அப்போது அண்ணாச்சியை பாக்கவே முடியலையே…” என்ற குரல் கேட்டு சபரிநாதன் திரும்பிப் பார்த்தார். ராஜலக்ஷ்மி வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.

பழைய கூட்டணி நபர்கள் மூன்று பேரும் முருகபூபதியுடன் வந்து திண்ணையில் அமர்ந்தனர். சிறுவனை அனுப்பிவிட்டு சுப்பையாவும் அவனுடைய வீட்டிற்குள் சென்றுவிட்டான். பூபதி, “உங்க பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கும் உங்க மாப்ள தம்பிய பாத்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியுதுங்க அண்ணாச்சி.. ஊரு பூரா அவரைப் பத்திதான் பேச்சே…” என்றார்.

சபரிநாதனுக்கு இப்போதுதான் மும்முரமாக காது குடைய வேண்டியிருந்தது!

“நீங்க வந்த விஷயம் என்னவே?” சபரிநாதன் பேச்சை மாற்றினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *