சின்ன மிரட்டல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 6,519 
 

உனக்கென்ன ராசப்பா, போன முறை வெள்ளாமை அமோகமா இருந்திருக்கும் போல!, அக்கா கழுத்துல இரண்டு செயின் புதுசா போட்டிருந்ததா வீட்டுக்காரி சொன்னா! சொன்ன மாரியப்பனுக்கு பதிலேதும் சொல்லாமல் பெருமூச்சு விட்டான். எத்தனை போ¢டம் சொல்லி சொல்லி இவனுக்கு அலுத்துவிட்டது. இத்தனை வருடங்கள் ஏதோ கொஞ்சம் விளைச்சலை கண்டு கொண்டிருக்கும்போது எல்லாம் கண்டு கொள்ளாத இவர்கள் தற்போது ஒரு போகம் அதிக விளைச்சல் வந்தவுடன் எப்படியெல்லாம் பேசுகிறார்கள்.அதுவும் போன முறை வந்த விளைச்சலில் வந்த வருமானத்தில், இரண்டு முறை விவசாயத்தில் நட்டம் அடைந்ததற்கு அடகு வைத்த நகைகளை மீட்டு கழுத்தில் போட்டதற்கே என்ன என்ன கேள்விகள்! அப்பப்பா!கடந்த ஒரு வருடமாக நகைகடையில் இருந்த போது வெறும் கழுத்துமாக அலைந்த போது ஏனென்று ஒருவரும் கேட்கவில்லை, மீட்ட நகைகளை போட்டவுடன் எத்தனை கேள்விகள்.

ராசப்பா அடுத்த உழவுக்கு என்ன பண்ணப்போற! மாடு பூட்டுறயா? இல்ல மாரியப்பா டிராக்டர் ஓட்டிடலாம்னு இருக்கேன், நம்ம கிட்ட காளைகளும் இல்ல! வெளியில பேசுனா கட்டுப்படியாகறதில்ல, பேசாம பக்கத்து காட்டுக்காரரு டிராக்டர் ஓட்டறாரு, அப்படியே நம்மளுது இரண்டு ஏக்கரா தானே, ஓட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டேன், சொல்லிவிட்டு சரி மாரியப்பா நான் வாறேன், மடியில் வைத்திருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

போன வெள்ளாமையில வந்த வருமானம் வண்டியை தேடுது புழுங்கினான் மாரியப்பன். அவனுக்கு ஒரே வருத்தம், ராசப்பனை விட ஒரு ஏக்கரா அதிகம் இருந்தும் விளைச்சலில் அவனளவுக்கு சாகுபடி பண்ணமுடியவில்லையே?இப்பொழுது புழுங்கித்தள்ளுகிறான்.

இந்த விளைச்சலுக்கு ராசப்பன் பட்ட பாடு என்ன! அப்பொழுது எல்லாம் இவனை வேடிக்கையாகவும், கிண்டலாகவும் பேசியவர்கள் இவர்கள். இரண்டு முறை இவனை நட்டப்படுத்திய பூமிக்கு இந்த முறை இயற்கை முறையிலேதான் விவசாயம் செய்யவேண்டும் என முடிவு செய்து கொண்டான் ராசப்பன். அதற்காக பூமியை நன்கு ஆறப்போட்டான், ஒரு பக்கம் பசுஞ்சாணம், ஆட்டுப்புழுக்கை, வேப்பங்கழிவுகள், அனைத்தையும் குவித்து வைத்தான், அதன்பின் உழவை போட்டான், பின் பாத்திகட்டி பின் குவித்து வைத்திருந்த உரங்களை நன்கு துகள்களாக்கி தூவி விட்டு நிலத்தை ஆற வைத்தான், அதன் பின்னரே நாற்று நடுதல், அதற்கு இயற்கை முறையில் பூச்சி தெளிப்பானாக கோமியம், வேப்பங்கழிவுகள் போன்றவற்றையே உபயோகப்படுத்தி விவசாயம் செய்தான்.இதையெல்லாம் இவர்கள் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.இந்த முறை நிலம் இவனை ஏமாற்றவில்லை, வாயை பிளக்கும் அளவுக்கு விளைச்சல் இல்லாவிட்டாலும், புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு வருமானத்தை காட்டியது.

மறு நாள் தோட்டம் போன ராசப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அவன் தோட்டத்தை ஒட்டியிருந்த நடை பாதை அடைக்கப்பட்டிருந்தது, நேராக பக்கத்து தோட்ட ராக்கியப்பனிடம் என்ன மாப்பிள்ளை பாதைய அடைச்சுட்ட என்று கேட்டவனிடம் என் தோட்டத்துக்கு முன்னாடி “செக்காலை”ஒண்ணு போடலாம்னு இருக்கேன், இன்னைக்கு பேங்க் காரங்க வாரனிருக்காங்க, அவங்க வந்துட்டு போன பின்னால எடுத்துடறேன், என்றவனிடம் ஏன் மாப்பிள்ளை அதுக்கு வழித்தடம் என்ன பண்ணுச்சு, அதை ஏன் மறிச்சுட்டு போட்டிருக்க, தப்பா நினைச்சுக்காத மாப்பிள்ளை, அவங்களுக்கு கொஞ்சம் அதிகமா இடம் காண்பிச்சுட்டேன், அவங்க வந்துட்டு போன பின்னால கண்டிப்பா எடுத்துடறேன்.

இது வேண்டுமென்றே செய்த வேலை என அவனுக்கு புரிந்தது,இவன் தன் மனைவிக்கு அண்ணன் முறை ஆகவேண்டும், சொந்தக்காரனே தனக்கு வினை விதைக்கிறான்,காரணம் போன முறை தனக்கு வந்த விளைச்சலின் புகைச்சல்தான் காரணம், நன்கு புரிந்தது.அதுவும் நாளை மறுநாள் உழவு ஓட்ட டிராக்டர் வர வேண்டிய நேரத்தில் இந்த ஆட்டம். இவனுடன் வீண் விவாதம் புரிய மனம் வரவில்லை, சோர்வுடன் வீடு திரும்பினான்.

தோட்டத்துக்கு போனவன் அரை மணி நேரத்தில் திரும்ப வருகிறானே? கேள்விக்குறியுடன் அவனைப்பார்க்க அவன் சோர்ந்த முகத்துடன், வந்ததை பார்த்தவள் ஏய்யா போனவுடனே திரும்பிட்ட?

அதை ஏன் கேக்கற! என்று நடந்த அத்தனையும் சொன்னான், அவளுக்கும் புரிந்தது, பாக்கியம் என்ன கழுத்துல புதுசா நகை போட்டுருக்க? என்ற கேள்வியில் எத்தனை வயித்தெரிச்சல்? கஷ்டப்படும்போது உதவி செய்யாத சொந்தங்கள், வசதி வரும்போது என்ன பாடுபடுத்துகிறது.

ஒரு முடிவு செய்தாள், நீ கவலைப்படாதே நாளைக்கு பார்க்கலாம், பேசாம விடு என்றவள் விடு விடுவென ராக்கியப்பன் வீட்டுக்கு சென்றாள்.இவள் என்ன செய்யப்போகிறாள்? கேள்விக்குறியுடன் அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

மறு நாள் அவன் தோட்டம் சென்ற பொழுது நடை பாதை திறக்கப்பட்டிருந்தது, பாங்குக்காரங்க வரலயாமா! மாப்பிள்ளை போய் உன் வேலைய போய் பாரு என்றவன் பணிவாய் அவனிடம் சொல்லிவிட்டு சென்றான்.

மதியம் வீடு வந்தவன் எப்படி அவன் மனசை மாத்துன? அது ஒண்ணும் பெரிய ரகசியமில்ல, எங்க அப்பனுக்கும், அவங்க அப்பனுக்கும் பொது சொத்து இருக்குதுல்ல இதுல நான் கையெழுத்த்து போடணுமா வேண்டாமா?அப்படீன்னு ஒரு கேள்வியத்தான் எங்க அண்ணிகிட்ட கேட்டுகிட்டு வந்தேன், நான் கையெழுத்து போட்டாத்தான் அந்த சொத்தை விக்கமுடியும் அப்படீங்கறது அவனுக்கு தெரியும்.

பெருசுகள் ஏன் அந்த காலத்தில் சொத்துக்களை பிரிக்க விரும்பவில்லை என்பது இலேசாக புரிந்தது ராசப்பனுக்கு!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *