Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிண்ட்ரெல்லா!

 

மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்து கொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். “வெரி குட் கண்ணு.’

அவள் குழப்பத்துடன் விழித்தாள். “அம்மா திட்டுவாங்களே!’ அப்போதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. “ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.

“செருப்பைக் காணோமே’ என்றார் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையில் ஆரம்பம் தெரிந்தது, “இங்கேதான்ப்பா விட்டேன்.’

விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப்பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். “செருப்பைக் காணோமா?’

சிண்ட்ரெல்லா!“ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’
நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாக தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?

பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாக பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது; அவசியமும் கிடையாது. அவற்றைத் தொலைப்பது பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவதும் இல்லை.

ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிட முடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்கு முன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. “ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.

நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகத்தான் குழந்தை அழுகிறாள். செருப்பைத் தொலைத்துவிட்டோம் என்பதற்காக அல்ல. காரணம் கிடக்கட்டும். இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது? குழந்தை இங்கேதான் அவிழ்த்து விட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள் மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.
செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப் போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்தவிடும்.
மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக் கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடிகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.

நாங்கள் அந்த மணல் தோட்டியை முழுக்கச் சுற்றி வந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீசா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும் அக்ம்பக்கத்து பெஞ்சுகளின் இருட்டுக் கால்களுக்கிடையிலும் கூட குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பை காணவில்லை.

ஒருவேளை, ஒற்றைச் செருப்புக் கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்க வேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகத்தான் கொண்டு சென்றிருப்பார்கள்.

எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குத்தானே பயன்படப் போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.

ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். “அம்மா திட்டுவாங்க’ என்பதை தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.

“பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே,’ என்றேன் நான். “திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’

அவள் திருப்தி அடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். “இங்கே தான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.

இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள் மட்டுதான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை “பளிச்’ சென்று உறைத்தது.

பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முறைத்திருந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப் போலவே தோன்றியது.

நாங்கள் இன்னொருமுறை அந்த விளøயாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூட தேடினோம். பலன் இல்லை.

இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்கு போகலாம்.

“எப்படிப்பா? கால் குத்துமே.’

“வேணும்னா என் செருப்பைப் போட்டுக்கிறியா?’ அவிழ்த்து விட்டேன்.

“உனக்குக் கால் குத்துமே.’

“பரவாயில்லை, போட்டுக்கோ.’

அவள் நிச்சயம் இல்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைத்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப் போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.

நானும் செருப்பில்லாம் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப் பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள் கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள்.. “எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா,’ என்றாள் “ரொம்ப பெரிசா இருக்கு..’

“அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. “அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’

“ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, “நிஜமாவா சொல்றே?’

“ஆமா கண்ணு,’ என்று குனிந்தேன், “ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’

அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துக் கொண்டேன். நடக்க ஆரம்பித்தேன்.

இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது கூட குறைந்துவிட்டது. “இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்க வைத்துவிட்டோம்.

ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.

ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். “ஏழெட்டு வயசுப் öப்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’
நினைத்தால் நினைக்கட்டுமே, அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் செருப்பு தொலைஞ்சுடுச்சு என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக் கொண்டிருக்கமுடியும்?

ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும் கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!

சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, “அப்பா, நீ ஏன் எதுவும் பேச மாட்டேங்கறே?’
“பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். “நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’

“அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், “நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’

“சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’

“தொப்பையை குறைக்கத்தானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், “நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’

“ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’

“சரிப்பா, இனியே தொலைக்கலை,’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, “அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போக மாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிக்கிட்டு வரமாட்டியா?’

“என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்கெல்லாம் தேவைப்படாது.’

அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், “நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.
நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிறைத்தது. அதற்கு நடுவிலும், நிலா அழகாகத்தான் இருந்தது.

ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. “நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.

“ஏன்ம்மா?’

“நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’

இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.

நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக் குரல் கேட்டது. “பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்கு கடைக்குப் போய் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’

- நவம்பர் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
முதன்முதலாக என்னை 'குண்டுப் பையா' என்று அழைத்தவன் யார் என்று எனக்குத் துல்லியமாய் நினைவிருக்கிறது. அப்போது நான் மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். சொற்ப ஆசிரியர்களே கொண்ட எங்கள் அரசுப் பள்ளியில் பெரும்பான்மை நேரங்கள் விளையாட்டுக் கல்விக்குதான் என்பது ஒரு ...
மேலும் கதையை படிக்க...
எங்கும் பச்சைப்பசேலென்றிருக்கிற ஒரு புல்வெளியில் அந்த தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்தபடி ப்ரியா ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். ஊஞ்சலுக்கான கயிறு வானத்தில் எங்கிருந்தோ திடீரென்று துவங்கியிருந்தது, இதமான சிலுசிலு தென்றல் அதைத்தொட்டு இயக்கிக்கொண்டிருக்க, பல வண்ணங்களில் உடையணிந்த அழகிய தேவதை அவளை மெல்ல அணைத்தபடி ...
மேலும் கதையை படிக்க...
பொம்மை
மதிப்புக்கு உரிய 'பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு... வணக்கம். நலம். நலமறிய ஆவல். என் பெயர் விமலா. கோயம்புத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்கு முன் உங்களுடைய வெப்சைட் வழியாக ஒரு பொம்மை வாங்கிஇருக்கிறேன். இதற்கு மேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகம் செய்துகொள்வது என்று ...
மேலும் கதையை படிக்க...
அன்று அதிகாலையிலிருந்தே அவனுக்கு நேரம் சரியில்லை. தூக்கத்திலிருந்து விழிப்பதற்குமுன்பே ஒரு கெட்ட கனவு - யாரோ நான்கு முகம் தெரியாத அயோக்கியர்கள் அவனைத் துரத்தி, அவனுடைய கை, கால்களிலெல்லாம் சிறு ஊசி கொண்டு எண்ணற்ற துளைகள் செய்துவிட்டு, காணாமல் மறைந்துவிடுகிறார்கள். திடுக்கிட்டு விழித்துக்கொண்டவன், தன் ...
மேலும் கதையை படிக்க...
'எவன் உனக்கு வேலை கொடுப்பான் ?', உள்ளே ஆத்திரம் பொங்கினாலும், அதை மறைத்துக்கொண்டு கொஞ்சம் கிண்டலாகதான் கேட்டார் அவளது அப்பா. ஒரு பெண்கள் விடுதியின் வரவேற்பறையில், கிருஷ்ணார்ஜுனர்களின் படம் எதற்கு என்று சபாபதிக்குப் புரியவில்லை. ஆனால், சுவரில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருந்த அந்த ஓவியம் மிக ...
மேலும் கதையை படிக்க...
குண்டுப் பையன் கதை
பொதி
பொம்மை
கிழக்கு
உபதேசம்

சிண்ட்ரெல்லா! மீது ஒரு கருத்து

  1. Nithya Venkatesh says:

    அருமையான கதை என் பால்ய நினைவுகளை கொண்டு வந்து விட்டது..நானும் இது போன்று ஏன் தந்தையின் முதுகின் மீது உப்பு மூட்டை எறியதுண்ண்டு ,,அந்த இன்பத்திற்கு அளவென்பதே இல்லை.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத பாசமும் இன்பமும் ஒருங்கே அமைந்திருந்த சமயம் அது… பசுமை மாற நினைவுகளாக என் நெஞ்சில் உள்ளன..

    வாழ்த்துக்கள் இது போன்று நெகிழ வைக்கும் கதையை அளித்ததற்கு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)