‘சார்’லேர்ந்து அங்கிள்

 

சிறுவயதிலிருந்தே தினேஷிற்கு கிரிக்கெட் என்றால் உயிர். பத்தாம் வகுப்பு வரை கிரிக்கெட் ஒன்றே பிரதானம் என திரிந்தவன், அதற்குப் பிறகு ஸ்கூல் டியூஷன், ஐஐடி கிளாஸ் என்ன முழுநேரமும் படிப்பிற்கே போக அவனால் கிரிக்கெட் பார்க்க மட்டுமே முடிந்தது! அதுவும் சமயம் இருந்தால்!!.

பின்னர் கல்லூரி டீமில் விளையாடி அலமாரி முழுவதும் கப்புகளால் நிரப்பினான். வேலைக்கு சென்ற பின் விடுமுறை எடுத்துக்கொண்டு கிரிக்கெட் பார்த்த நாட்களை கணக்கிடவே முடியாது.

அலுவலகத்தில் தினேஷின் மேலாளர் பெரிய கிரிக்கெட் ரசிகர். ரசிகர் என்று சொல்வதைவிட பைத்தியம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். உலக கோப்பை ஆரம்பிக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும். அப்போதே அவர் “இந்த முறை நாம தான் கட்டாயம் ஜெயிப்போம் இப்ப இருக்குற எல்லாத்தையும் நம்ம பசங்க தூக்கி சாப்பிட்டுருவாங்க” என்பார் .

கிரிக்கெட் ஆரம்பித்து சிறிது நாட்கள் சென்றிருக்கும், தகுதிச் சுற்றில் தேர்வு பெற இந்தியாவிற்கு ஒன்று இரண்டு பாயிண்டுகள் தேவைப்படும் அப்போது “இதுதான் முக்கியமான மேட்ச் இதில் ஜெய்ச்சுட்டா நாமதான் வின்பண்ணுவோம்” என்பார். பின்பு ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவும் சவுத் ஆப்பிரிக்காவும் மோதுகிற மேட்சில் ஆஸ்திரேலியா ஜெய்ச்சுட்டா நாம பைனலுக்கு போயிடலாம் ஏன்னா நம்ம டீமும் சவுத் ஆப்பிரிக்காவின் இப்போ சரிசமமாக இருக்கோம்” என்பார். திடீரென குரலை தாழ்த்தி “உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா ஆஸ்திரேலியா இந்த மேட்சில் எப்படியும் ஜெயித்து விடும் ஏன் தெரியுமா இந்தியா பைனலுக்கு வந்தால்தான் அவங்களுக்கும் ஈசி” என்பார்.

இந்தியா் தகுதி சுற்றில் தேர்வாகாமல் போனாலோ அல்லது தோற்றுவிட்டால் தலையை இடவலமாக ஆட்டி கொண்டு “காசு வாங்கிட்டங்கப்பா 50 கோடி / 100 கோடி” என்று வாய்க்கு வந்தபடி புலம்பி தீர்த்து விடுவார்.

கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதில் இவனுக்கும் ஆசைதான் அதற்காக அவனும் இவனும் ஆடவேண்டும் அதில் இவன் தான் வெற்றி பெற வேண்டும் அல்லது இவன் தோற்க வேண்டும்அப்போது தான் நாம் வெற்றிபெற முடியும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்.

தினமும் அவர் கிரிக்கெட் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் அதைவிட அவன் மொழியில் கொச்சைப்படுத்துவார் என்றுதான் சொல்ல வேண்டும் கிரிக்கெட்டில் இந்தியா தோற்பது ஒரு வருத்தம் என்றால் தன்னுடைய மேலாளரை நினைக்கும்போது அது இரட்டிப்பாகிவிடும்.

ஐபிஎல் வந்ததிலிருந்து அடிக்கடி புலம்ப ஆரம்பித்துவிட்டார் அலுவலகத்தில் இவனுக்கு சீனியர் என்பதால் வேறு வழியின்றி அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் அப்போதுதான் தினேஷ் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

வீட்டில் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த அவன் தந்தையை தொந்தரவு செய்ய வேண்டாம் என மெல்ல கடந்து போனவனை அவர் “தினேஷ், ஒரு நிமிஷம், மீட் மிஸ்டர் ஜான்சன் ஒரு காலத்தில் எனக்கு ஜூனியர், இப்ப பெரிய மல்டி நேஷனல் பேங்க்ல ஜெனரல் மேனேஜராக வொர்க் பண்றார்!” என்று அறிமுகப்படுத்தினார்.

அவன், “ஹலோ சார்” என்றான் சம்பிரதாயமாக. அவன் தந்தை, “தினேஷ் அவரும் உன்னைப்போல் சிவில் இன்ஜினியர் தான் அவர் பேங்க்ல உனக்கு சர்வேயர் வேலை வாங்கித் தரேன்னு சொல்கிறார் ஒரு அப்ளிகேஷன் கொடுத்துவையேன்” என்றார்.

“சாரி சார் நான் ரொம்ப டயர்டா இருக்கேன் இன்னொரு நாள் சாவகாசமா பேசலாம்” என்று சொல்லி அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் தன் அறைக்கு சென்று விட்டான்

ஜான்சன், “போங்க சார் இப்பதான் வந்து இருக்கார் அவர் கிட்ட போய்” என்று தினேஷின் தந்தையை செல்லமாக கோபித்துக் கொண்டார்.

அவர், “தாயில்லாத பிள்ளைன்னு ரொம்ப செல்லம் கொடுத்திட்டேனோன்னு சமயத்தில தோணுது. ஆமா நீங்க என்ன அவனைப்போய் நீங்க வாங்கன்னு, ஹி ஈஸ் வெரி யங் நீங்க அவனை ‘டா’ போட்டே கூப்பிடலாம்”. என்று சொல்லி சிரித்தார்.

தினேஷ் அவனுடைய அறைக்கு சென்று சிறிது நேரம் சென்றிருக்கும் அவன் மேலாளரிடம் இருந்து போன் கால் வந்தது. அவர் போனில் “தினேஷ், நான் தான், உங்கிட்ட அப்பவே சொன்னேனே, வீடு மாறலாம் இருக்கேன் உங்க வீட்ல ஏதோ போர்ஷன் காலியா இருக்குனு சொன்னியே இப்ப இருக்கா?” என்றார் கேள்வியுடன்.

புதிதாக என்ன பூகம்பம் கிளம்புமோ என்ற பயத்தில், “சார் புரியல” என்றான். அவர், ” வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னியேப்பா, உங்க வீட்லயே.. அதான் உன் பக்கத்துல இருந்தா எனக்கும் வசதியாயிருக்கும், பேச்சு துணையாகவும் இருக்கும் கரெக்ட் தானே?” என்றார்.

இவனுக்கு தூக்கிவாரிப் போட்டது ‘அலுவலகத்தில் போதாதென்று வீட்டிலுமா’ என்று நினைத்தவன் உடனே “இல்லை சார் போனவாரம் தான் ஒருத்தர் அட்வான்ஸ் கொடுத்துட்டு போயிருக்காரு, , வேறு ஏதாவது வீடு இருந்தா நானே பார்த்து சொல்றேன்” என்று சொல்லி போனை துண்டித்தான்

சரியான நேரத்தில் உள்ளே வந்த அவன் தந்தை “தினேஷ், நீ நல்ல சான்சை மிஸ் பண்றேன்னு தோணுது நான் ஒரு பக்கம் உனக்கு பொண்ணு பாத்து வச்சிருக்கேன், ஜான்சனுக்கு கீழே நீ வேலைக்கு சேர்ந்த ஒரு ஆறு வருஷத்துக்கு நிம்மதியா இருக்கலாம், பிரச்சனைன்னா கூட அவர் ரிடையர் ஆனதுக்கப்புறம் தான் வரும். அதனால” என்று இழுத்தார்.

“அதனால என்ன சொல்ல வரீங்க” என்றான் ஏதோ யோசித்தவனாக

“நீ இப்ப ஒர்க் பண்ற கம்பெனி ஒண்ணும் அவ்வளவு பெரிய கம்பெனியில்லை பொண்ணு வீட்டுல என் பையன் வொர்க் பண்றது ஒரு மல்டி நேஷனல் வங்கின்னு சொன்னா கௌரவமா இருக்கும், அதுவும் இல்லாம உனக்கும் வேலையில ஒரு நல்ல மாற்றம் இருக்கும்” என்று நிறுத்தினார்..

“வேற இன்னும் என்ன?” என்றான்

“சைட் போர்ஷன் காலியா இருக்குல்ல, அதை ஜான்சனுக்கு வாடகைக்கு விட்றலாம்னு இருக்கேன். எனக்கும் நல்லா தெரிஞ்சவன் ஒத்தாசையா இருக்கும், அப்புறம் இன்னொரு முகியமான விஷயம் அவர் கிட்டே பேசும்போது, சார் மோர்னெல்லாம் கூப்பிடாதே, அங்கிள்னே கூப்பிடு,” என்றார்

அவர் கூறுவதில் இருந்த நியாயத்தை உணர்ந்தவன் ஒரு தீர்க்கமான முடிவுடன் ஹாலுக்கு வந்தான். அங்கிருந்த ஜான்சனிடம் “சாரி அங்கிள் ரொம்ப டயர்டா இருந்தது. கேக்குறென்னு தப்பா நினச்சிக்காதீங்க, அப்பா எதோ சர்வேயர் வேலைன்னு அப்பா சொன்னாரே எனக்கு கண்டிப்பா கிடைக்குமா” என்றான் சந்தேகத்துடன்.

அவர், ” என்னப்பா அப்படி கேட்டுட்டே, நான் உங்கப்பாவுக்கு நிறைய கடமை பட்டு இருக்கேன், கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவியை செய்றேன், ஆமா உனக்கு ஸ்போர்ட்ஸ்ல இண்ட்ரஸ்ட் இருக்கா?” என கேட்டார்

“இருக்கு அன்கிள், சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் ஆடுவேன், காலேஜ் டீம்லயும் விளையாடி இருக்கேன்” என்றான்.

“வீட்ல ஷெஃப் பூரா அவன் வாங்கின கப்புதான்” என்றார் அவன் தந்தை இடைமறித்து

“அப்போ கண்டிப்பா ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைக்கும், கவலைப்படாதே” என்று சொல்லிச் சென்றவர் மளமளவென காரியத்தில் இறங்கினார்.

ஒரு வாரத்தில் வங்கியிலிருந்து நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து பணிக்கான நியமன உத்தரவும் அளித்திருந்தார்கள் அவனும் புதன்கிழமை சேருவதாக வாக்களித்திருந்தான்.

புதன்கிழமை.

வேலையில் சேர்ந்த முதல் நாள் என்பதால் பிஎஃப் படிவம் புதிதாக வங்கிக் கணக்கு துவங்கப்படும் என்று தினேஷ் ஏகப்பட்ட படிவங்களுடன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

ஜான்சன் அவன் இருக்கைக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

அவர் வந்ததைக்கூட கவனிக்காத தினேஷ் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். பொறுமை இழந்த அவர் தினேஷ் நான் உன்கிட்ட நெறைய பேசணும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உங்க அப்பாகிட்ட வாடகைக்கு வர்றதா சொல்லியிருந்தேன்ல அதுல கொஞ்சம் பிரச்சனை அப்பாவுக்கு வேற போன் பண்ணனும் ஜாயினிங் பார்மாலிட்டிசெல்லாம் முடி, உன்னை அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று சம்பிரதாயமாக கை குலுக்கி விடை பெற்றார்.

“நானே வந்து உங்களை பார்க்கிறேன் அங்கிள்” என்று தன் வேலைகளை முடித்த தினேஷ் சாவகாசமாக அவர் அறைக்குச் சென்றான்

அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்ற ஜான்சன், “வா தினேஷ், இப்ப தான் எனக்கு ஒரு புது தெம்பே வந்தா மாதிரி இருக்கு, ஆமா நீ ஃபுட்பால் பார்ப்பியா? கிரிக்கெட்டோட கம்பேர் பண்ணா புட்பால் எவ்வளவோ தேவலாம். ஃபுட்பால் மேட்சே இல்லன்னா கிரிக்கெட் பார்ப்பேன்” என்றார்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக அவளையே பார்த்தான்.

“போன வாரம் நீ மெஸ்ஸி ஆட்டத்தை நீ பாத்தியா, அவன் கிட்ட பாலை குடுத்தா கோல்தான்னு தெரிஞ்சும் பசங்க அல்வா மாதிரி கொண்டு ஃபுட்பாலை குடுக்குறாங்க, ஒரு சில நேரத்துல கிரிக்கெட் மாதிரி ஃபுட்பால்லயும் ‘மேட்ச் பிக்சிங்’ இருக்குமோன்னு சந்தேகம் வருது” என்று அடிக்கடி தேவையில்லாமல் கிரிக்கெட்டையும் சம்மந்தப்படுத்தினார்.

அவன் சற்றே தயங்கி, “எனக்கு என்ன வேலை இன்னும் நீங்க சொல்லவே இல்லை” என்று இழுத்தான்.

“அட வேலை ஒண்ணும் பெருசா இல்லைப்பா, ஹோம் லோன் சாங்ஷன் பண்ண எப்பவாவது தேவைப்பட்டா போய் சர்வே பண்ணனும், தவிர எனக்கும் பேச்சுத் துணைக்கு இங்க ஆள் இல்லையா, உனக்கு ஸ்போர்ட்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு உங்க அப்பா சொன்னாரா, அதான் உன்னை இங்கேயே அப்பாயிண்ட் பண்ணிட்டேன்” என்று அவர் சொன்னபோது தினேஷை யாரோ காலால் உதைப்பது போல் இருந்தது.

மாலை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு அவன் வீடு இருந்த தெருவில் திரும்பும்போது முந்தைய கம்பெனி மேலாளர் எதோ சிந்தனையுடன் சென்று கொண்டிருந்தார். இவன் அவரை கவனிக்காதவாறு முகத்தை திருப்பிக்கொண்டு வீட்டிற்கு சென்றான். அதே சிந்தனையுடன் லேசான அதிர்ச்சியில் வீட்டிற்குள் நுழைந்தவனிடம், அவன் அப்பா, “தினேஷ் ஜான்சன் நம்ம போர்ஷனுக்கு வரலையாம் இப்பதான் போன் பண்ணி சொன்னார், அப்புறம் உன் பழைய மேனேஜர் இல்லை அவர் வந்து வீடு வாடகைக்கு கிடைக்குமான்னு கேட்டார், ஜான்சனே பத்தாயிரம்தான் தர்றேன்னார், இவர் 12,000 தர்றேன்றார், உடனே சரின்னுட்டேன், இப்ப தான் போயிட்டுருக்கார், ஆமா கேக்கவே மறந்துட்டேன் எப்படிடா போகுது புது வேலை? ஏதாவது சேஞ்ச் இருக்கா?” என்றார் மிகுந்த எதிர்பார்ப்புடன்

அவர் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தவன் சற்று சுதாரித்து “சேஞ்ச் தானே? இருக்கு. “‘சார்’லேர்ந்து அங்கிள்” அஷ்டமத்திலிருந்து ஏழரை” என்றவனை அவர் புரியாமல் பார்க்க, அவரை மேலும் நோகடிக்க விரும்பாமல் தினேஷ் மௌனமாக தன் அறைக்குச் சென்றான். 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று ஆஃபீசிலிருந்து சீக்கிரம் கிளம்பி விடலாம் என்று ஒவ்வொரு நாளும் மனது ஆசைப்படும். ஆடிட் நேரங்களில் சொல்லவே வேண்டாம் லெட்ஜரை சரிபார்க்க, டேலி செய்ய என்று நேரம் போவதே தெரியாது. எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு கிளம்ப ஏறத்தாழ நள்ளிரவு நெருங்கிவிடும். அன்றும் அப்படித்தான். ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட நாட்களாக மனைவி ஜானகிக்கு அடையாள அட்டை இல்லாத காரணத்தாலும், ரேஷன் கார்டில் இன்னமும் பெயர் சேர்க்கப்படாத காரணாத்தாலும், பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை. (பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை, அது வேறு விஷயம்!) இன்னிலையில் ஒரு நாள் செய்தித்தாளில் இனி அனைவரும் தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
கார் ஆக்சிடென்டில் அம்மா வசுந்தராவையும் அப்பா சுகுமாறனையும் இழந்ததில் பரணி மிகுந்த துயரத்தில் திக்பிரமை பிடித்தது போன்றிருந்தான். ராணுவத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வந்து காரியமெல்லாம் முடிந்த நிலையில் தான் யாருமற்ற ஒரு அனாதை போல் உணர்ந்தான். பணிக்குத் திரும்பவும் மனமில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
“நியூஸ் பேப்பர் கொஞ்சம் கொடுக்கறிங்களா பார்த்துட்டு தறேன்” என்று யாராவது கேட்டால் எனக்கு ‘ஆபிசுவரி மாமா நினைவுக்கு வருவதும், தொடர்ந்து என்மீதே எனக்கு சுய பச்சாதாபமும் ஏற்படுவதையும் தவிற்க்கமுடிவதில்லை. முதன் முதலில் அவர் அவ்வாறு வாங்கிச் சென்றதும் அதன் பிறகு நடந்த சில ...
மேலும் கதையை படிக்க...
“அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று ஸ்கூல்லிருந்து வந்ததும் வராததுமாக அவரசரப்படுத்தினாள் ரேகா. அவள் கவலையெல்லாம் அடுத்தவள் ராக்கி மூன்று வயதாகியும் வாய் திறந்து பேசாதது தான். மருத்துவரை ...
மேலும் கதையை படிக்க...
விடியலைத்தேடி
பின் புத்தி – 2.0
முற்றுப்புள்ளியில் ஆரம்பம்
பின் புத்தி
விளையும் பயிர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)