சாம்பலான முதல் கதை

 

ஜெயகாந்தன் கதைகளில் இருந்த சப்தமும் வாதமும் சுவாரஸ்யமாக இருந்தன. அது என்ன மாதிரியான சுவாரஸ்யம் என்றால், தீபாவளிப் பட்டாஸ் வெடிக்கிறதைப் பார்த்து ரசிக்கிற சுவாரஸ்யம்.

தீபாவளிப் பட்டாஸ் அந்த ஒருநாள்தான் வெடிக்க வேண்டும். தினசரி வெடித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ஜெயகாந்தன் தினசரி வெடித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் பின்னாளில் புஸ் வாணமாகிப் போக நேர்ந்தது. அவரிடம் திடீரென சரக்கு தீர்ந்து போயிற்று.

கதைகளின் கதாபாத்திரத் தன்மைகளில் ஜெயகாந்தன் அவருடைய அபிப்பிராயங்களையும், அபிப்பிராயப் பேதங்களையும் மோத வைத்து ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது ஆரம்பத்தில் சுவாரஸ்யத்தைத் தந்தது.

அந்த சுவாரஸ்யத்தில் எங்கள் வீட்டில் பைண்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த தேவன், லக்ஷ்மி போன்றோரின் தொடர் கதைகளையும் எடுத்து நான் வாசித்தேன். என் வாசிப்பு மதுரம் சித்திக்கு பெரிய மன திருப்தியைக் கொடுத்தது. அதனால் எங்கள் சந்திப்புகளின் போது சித்தி என்னிடம் மேலும் அதிகமாகப் பேசினார். அதிகமாக எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் எங்களின் சந்திப்பும் பேச்சும் கூடுதலாகிக் கொண்டிருந்தன.

சில சமயம் எங்களின் பேச்சுக்களின் போது சிவராமன் சித்தப்பாவும் வந்து நின்று பேச்சை கவனித்துக் கொண்டிருப்பார். அவர் கதா வாசகர் கிடையாது. எப்போதாவது தோன்றும்போது அந்த வாரத்திய ஆனந்த விகடனை எடுத்து புரட்டிப் பார்ப்பார். இன்னொரு நாள் குமுதம் வார இதழைப் புரட்டிக் கொண்டிருப்பார்.

கடைசியில் “எவன் எழுதறதும் சரியில்லை” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். சித்தப்பா தினத்தந்தி பேப்பரை ஒரு செய்தி விடாமல் ஆர்வத்துடன் படிப்பார். அப்போது அதில் தினமும் வரும் ‘குரங்கு குசாலா’ மற்றும் ‘ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார்’ போன்ற பகுதிகளைப் படித்துவிட்டு பெரிதாகச் சிரிப்பார்.

சிவாஜி கணேசன் படங்கள் என்றால் சிவராமன் சித்தப்பாவிற்கு ரொம்ப இஷ்டம். சில படங்களை திருப்பி திருப்பிக் கூட பார்ப்பார். ஆனால் ஒரு நாளும் சித்தியை எந்த சினிமாவுக்கும் தன்னுடன் அவர் அழைத்துப் போனதில்லை. சித்திக்கும் சினிமா பார்ப்பதில் பெரிய விருப்பங்கள் கிடையாது.

நாட்களும், வாரங்களும், மாதங்களும் நகர்ந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் சித்திக்கு இன்னொரு பையன் பிறந்து விட்டான்.

ஒருநாள் வழக்கம்போல் நான் மதுரம் சித்தியைப் பார்க்கப் போயிருந்தேன். சித்தி அடுத்த கட்டத்திற்கு வந்திருந்தார். ஒரு கதையை அவர் முழுவதுமாக எழுதி முடித்து, தன் திருப்திக்காக மூன்றாவது முறையும் அதை எழுதிப் பார்த்து முடித்து வைத்திருந்தார். அந்தக் கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்கும் எண்ணத்திலும் இருந்தார்.

நான் படித்துப் பார்த்து ஓ.கே. சொல்லிவிட்டால் விகடனுக்கு கதையைப் போஸ்ட் பண்ணி விடுகிற உத்தேசம் சித்திக்கு. அந்த நீள சமையல் அறை பெஞ்சில் உட்கார்ந்து சித்தி கொடுத்த கதையை நான் ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். என் வாசிப்புக்கு சின்ன சப்தம்கூட இடைஞ்சலாக இருக்கும் என்ற எண்ணத்தில், சித்தி சிறு ஓசையும் இல்லாமல் நிசப்தமாக அவரின் அடுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

நிஜமாகவே கதை மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருந்தது. கதை மொத்தம் பத்துப் பக்கங்கள். அதில் நான் ஐந்து பக்கங்கள் படித்து முடித்திருந்தேன்.

அப்போது சிவராமன் சித்தப்பா உள்ளே வரும் அரவம் கேட்டது. நான் தலையை உயர்த்தாமல் ஆழ்ந்துபோய் கதையில் லயித்திருந்தேன். சித்தப்பா தன் குரலை உயர்த்தி என்னிடம் “என்னத்தைப் படிச்சிட்டுருக்கே?” என்றார்.

அவரின் குரலைக் கேட்டதும் நான் கொஞ்சம் திடுக்கிட்டு விட்டேன். சித்தப்பாவின் முகம் கடுமையாக இருந்தது. “சித்தி புதுசா ஒரு கதை எழுதி இருக்காங்க… ஆனந்த விகடனுக்கு அனுப்பப் போறாங்களாம். அந்தக் கதையை படிச்சிட்டு இருக்கேன் சித்தப்பா” என்றேன்.

“என்னது உன் சித்தி கதை எழுதி இருக்காளா? மயிரப் போட்டு புடுங்குனா..” என்று பெரிய குரலில் வெடித்த சித்தப்பா, சரேல் என என் கைகளில் இருந்த காகிதக் கற்றைகளை வெறியுடன் பறித்தார்.

பின் அவற்றை எத்தனை சுக்கல் சுக்கலாக கிழிக்க முடியுமோ, அத்தனை சுக்கல்களாகக் கிழித்தார். இரண்டு கைகளாலும் கிழிசல்களை பிசைந்து நசுக்கி வேகமாகப் போய், அங்கு எரிந்து கொண்டிருந்த அடுப்பில் அவற்றை வீசினார். அவை குபீரென பற்றி எரிந்தன. சில நொடிகளில் அவை கருகிச் சாம்பலாகின.

தீயின் கனல் கண்களில் தகிக்க சிவராமன் சித்தப்பா, மதுரம் சித்தியைப் பார்த்து ஆவேசமான ஆங்காரமான வெறி சிலிர்த்த குரலில் கத்த ஆரம்பித்தார், “கதை எழுதறாளாம் கதை… மயிரைப் புடுங்கற கதை. வேலையைப் பாருடி… வீட்டு வேலையைப் பாக்காம சும்மா கதை கிதைன்னு பேசிட்டு நின்னே, நரம்பை உருவிடுவேன் உருவி. தலைக்கு மேல வீட்ல வேலை கெடக்கு, வெட்டிக் கதையை இங்கன பேசிட்டிருக்கே. கதை எல்லாம் புருசன் இல்லாதவளும், புள்ளை இல்லாதவளும் தாண்டி எழுதுவா… ஒனக்கென்னடி? முழு முண்டமா புருசன் நான் இருக்கேன், ஒண்ணுக்கு ரெண்டு புள்ளைங்களும் இருக்கு. பல்லை இளிச்சி இளிச்சி பேசிகிட்டு; கால் துட்டுக்கு துப்பில்லாத கதையை எழுதிட்டு இருக்கலாம்னு பாக்குற; முட்டி ரெண்டையும் பேத்துருவேன் பேத்து. ஞாபகம் வச்சிக்க, இன்னொரு வாட்டி கதை கிதைன்னு எதையாச்சும் ஆரம்பிச்சே, அடுப்புல இந்த மாதிரி இனி பேப்பர் எரியாது, மறந்திராத சொல்லிப்புட்டேன்…”

அடுத்த கணம், கொடிய ஒரு விலங்கின் முகம் போல் மாறிப் போயிருந்த சித்தப்பாவின் முகம் என் பக்கம் திரும்பியது.

“எலேய், ஒனக்கு ஏதாச்சும் வேலை வெட்டி இல்லேன்னா, வெட்டிப் பேச்சு பேச ஒனக்கு என் பெண்டாட்டிதான் கிடைச்சாளா? ஆயிரம் வேலை கெடக்கு அவளுக்கு… சும்மா உக்காந்து உக்காந்து அவகிட்ட ஆகாத கதை பேச, என் வீட்டை என்ன சோம்பேறிப் பய மடம்னு நெனச்சியா? ஒன்னை பெங்களூரை விட்டு இப்பத்தானே அடிச்சி விரட்டியிருக்காங்க! அப்பவும் அறிவு வரலையே ஒனக்கு!! எவளாவது பொம்பளை கிட்ட ஒக்காந்து பொட்டைத்தனமா கதை உட்டுட்டு இருக்கணும் ஒனக்கு.. எவளாவது முண்டச்சி கிடைப்பா. போ, போய் அவகிட்ட விடிய விடிய வேணுமானாலும் ஒன் சரக்கை எடுத்து உட்டுட்டு இரு. அப்ப எந்த மயிராண்டியும் ஒன்னை கேக்க மாட்டான், தெரியுதா? ஓடு எந்திரிச்சி. என் பெண்டாட்டி கிட்டெல்லாம் வந்து பேசிட்டு இருக்காத. பொறவு நான் ரொம்பப் பொல்லாதவனா ஆயிடுவேன்…”

நெருப்பென தகித்த வார்த்தைகளை வெறியுடன் வீசிவிட்டு சித்தப்பா விருட்டென வெளியேறி ஹாலை நோக்கி விரைந்து விட்டார். 

தொடர்புடைய சிறுகதைகள்
பாஸ்கர் சொல்கிறான்: அருகில் என் மனைவி திவ்யா அமர்ந்திருக்க என் சிவப்பு நிற மாருதி ஒகனேக்கல் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்கள்தான், பாவம் திவ்யாவின் வாழ்க்கை முடிந்துவிடும். எவரும் சந்தேகப் படாத வகையில் அவளை ஓகனேக்கல் அருவியின் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘தனிமை’ மற்றும் ‘கோணலான பார்வை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனுக்கு அடுத்த கல்யாணம் முடிந்து, புதுப் பெண்டாட்டி வருவதற்கு முன்பே தன்னைக் கழட்டி விட்டு விட்டதைத்தான் சிவக்குமாரால் சற்றும் பொறுத்தக்கொள்ள முடியவில்லை. பழிக்கு பழி வாங்கும் உணர்ச்சியை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘நதிகள், குணங்கள்...’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). பாரதியார் மேலும் தொடர்கிறார்... புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுர் மறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொது வான் வழக்கமாம்; போற்றி போற்றி, ஜயஜய போற்றி!! ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் அருண். வயது இருபது. மானேஜ்மென்ட் படிக்கிறேன். இரண்டு தங்கைகள். அடையாறில் வீடு. அப்பா சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர். நான் மிகவும் மென்மையானவன். என் அப்பாதான் எனக்கு ஆதர்ஷ புருஷர். அப்பா எனக்கு நல்ல நண்பர். என் முதுகில் அன்பாகத் ...
மேலும் கதையை படிக்க...
இதற்கு முந்தைய ‘ஆசையும் மோகமும்’ சிறுகதையைப் படித்தால் இதைப் புரிதல் எளிது. கல்யாணியை எப்படிப் படிய வைப்பது என்கிற யோசனையில் இருந்தேன். அன்று மாலை ட்ராய்ட் கார்டனில் குடித்துக் கொண்டிருந்தபோது எனது நெருங்கிய ஆபீஸ் நண்பன் மகேஷிடம் கல்யாணியைப் பற்றி பூடகமாக விசாரித்தேன். அவன், “ஐயையோ... ...
மேலும் கதையை படிக்க...
(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.) மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன் வந்து இருக்கும்படி வருந்தி வருந்தி அழைத்தனர். ஒரு மாற்றத்திற்காக ஹைதராபாத் மகள் வீட்டில் சில நாட்களும்; பெங்களூர் மகள் வீட்டில் சில நாட்களும் ...
மேலும் கதையை படிக்க...
கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர். அவருக்கு, பதிவிரதையான அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற மகனும் இருந்தனர். ஒரு பிரார்த்தனையையும் இரு மந்திரங்களையும் கொண்ட ‘க்ருஹ்ய சங்கரஹசூத்ரா’ என்பதை அருளியவர் ஆபஸ்தம்பர். ஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவரான ஆபஸ்தம்பர் ...
மேலும் கதையை படிக்க...
வரதராஜன் அடுத்த மாதம் சென்னை சிவில் ஏவியேஷன் துறையிலிருந்து சீனியர் கம்யூனிகேஷன் ஆபீசராக ஓய்வு பெற்றுவிடுவார். முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு ஐம்பத்திஎட்டு வயதில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் ...
மேலும் கதையை படிக்க...
அவருடைய பெயர் சங்கரலிங்கம். வயது அறுபது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கெசட்டட் ஆபீசராக வேலைசெய்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி மல்லிகா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நல்ல பதவியில் இருப்பவர். வரும் டிசம்பரில் ஒய்வு பெறுகிறார். திருமணமான அவர்களின் மூத்த மகன் லண்டனிலும்; ...
மேலும் கதையை படிக்க...
சிதம்பரநாதனுக்கு வயது அறுபத்தி ஒன்பது. இவ்வளவு வயதாகியும் அவரிடம் மாறாத ஒரே வீக்னெஸ் ‘பெண்கள்’. பதினான்கு வயதில் பெண்களைப் பற்றிய புரிதலுக்கான ஏக்கமும் ஆசையும் அரும்ப ஆரம்பித்த விருப்பங்கள் அவரிடம் இன்றுவரை அடங்கவே இல்லை. அப்படியே வளர்ந்துவிட்டார். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையின் ஏஜி ...
மேலும் கதையை படிக்க...
ஒகனேக்கல்
பெண் தேடல்
இன்றைய பெண்கள்
ஈர்ப்பு
பரத்தையர் சகவாசம்
சமையல்காரன்
சிரார்த்தம்
மூன்று மகன்கள்
அறுபதிலும் காமம்
ருத்ர காளி

சாம்பலான முதல் கதை மீது ஒரு கருத்து

  1. N.Chandra Sekharan says:

    நாய் பெற்ற தெங்கம்பழம் என்பது போல சித்தப்பாவின் கைகளில் கிடைத்த கதைக் கட்டு வேறு காரணங்களால் ஆணாதிக்கத்துக்கு பலியானது! லோகமே இன்னும் இப்படித்தான் இருக்கிறது! பெண் முன்னேறக் கூடாது! அவளது திறமை அங்கே மட்டும்தான் தெரியவேண்டும். வேறு எந்த ஆட்டத்திற்கும் அவள் சேர்த்தியில்லை! அவள் வெறும் உடல் தான். உள்ளம் இருந்தாலும் இல்லாமால் எரித்து விடவேண்டியதுதான்-அக்னியை வலம் வரும்போதே! லென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)