கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 14,742 
 

சாதத் ஹசன் மன்டோ
தமிழாக்கம் : ராமாநுஜம்

”என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய சமூகத்தை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்” என்று சொன்ன சாதத் ஹசன் மன்டோவின் நூற்றாண்டு இது. மன்டோ பிறந்தது பஞ்சாப், சம்ரலாவில். இறந்தது லாகூரில். ஆனால், அவர் மனமோ எப்போதுமே பம்பாயில்தான் வாழ்ந்துகொண்டு இருந்தது. பத்திரிகை, சினிமா என்று மாறிமாறி இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்த மன்டோ வாழ்ந்தது வெறும் 42 ஆண்டுகள்தான். ஆனால், 22 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து வானொலி நாடகத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு சுய அனுபவக் குறிப்புத் தொகுதிகள் என்று எழுதிக் குவித்தவர். மன்டோவின் படைப்புலகம் சமூகத்தின் முன்பகுதியில் இயங்கியது அல்ல; கூத்தாடிகளும் ஜேப்படித் திருடர்களும் கொலைகாரர்களும் பாலியல் தொழிலாளிகளும் உலவும் பின்பகுதியில் இயங்கியது. முக்கியமாக, இந்தியப் பிரிவினையை ரத்தமும் சதையுமாகப் பதிவுசெய்தவர் மன்டோ. பொருளாதார நெருக்கடிகளும், நிலையற்ற மனமும், குடியும் அழித்த மன்டோ இறந்தபோது, அவருடைய குடும்பத்துக்குச் சொத்துகள் என்று ஏதும் இல்லை. ஆனால்,காலத் தைக் கடந்து அவருடைய எழுத்துகள் சமூகத்தின் ‘புனித மதிப்பீடு’களைத் தோலுரிக்கின்றன!
———————————————————————————————————–
ஒரு பார்ஸி பேக்கரியில், சூரியக் குடையின் கீழ் அமர்ந்து அவர்கள் டீ அருந்திக்கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கத்தில் கடல் இருந்தது. அலைகளின் உறுமல் சத்தத்தைக் கேட்க முடிந்தது. டீ ரொம்பவும் சூடாக இருந்ததால், அவர்கள் அதை மிக மெதுவாக உறிஞ்சிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால், தடிமனான புருவங்களைக்கொண்ட, பழக்கப்பட்ட ஒரு யூதப் பெண்மணியின் முகம் இருந்தது. வளைந்த மூக்கும் தடித்த உதட்டுச் சாயம் போட்டிருக்கும் முழு நிலவு முகம்கொண்ட அந்தப் பெண்ணை, மத்தியில் இருக்கும் கதவுக்குப் பக்கத்தில் உள்ள நாற்காலியில் ஒவ்வொரு மாலையிலும் பார்க்க முடியும். மக்பூல் அவள் இருந்த பக்கம் பார்த்து, ‘வலையை வீசுவதற்கு அவள் தயாராக இருக்கிறாள்’ என்று பால்ராஜிடம் சொன்னான்.

பால்ராஜ் அவளைப் பார்க்காமலேயே, ‘ஏதோ ஒரு மீன் அல்லது வேறெதோ ஒன்று, அவளுடைய வலையில் நிச்சயம் சிக்கத்தான்போகிறது’ என்று பதில் சொன்னான்.

சாந்திமக்பூல் மற்றொரு கேக் துண்டை வாயில் போட்டுக்கொண்டு சொன்னான், ‘இது விசித்திரமான தொழில்தான். சிலர் தெருக்களில் சுற்றி வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறார்கள். சிலர் கடைகளில் இருந்துகொண்டு தங்களை விற்றுக்கொள்கிறார்கள். சிலர் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். உடலை விற்பது ஒரு கலைதான் என்பதோடு சிரமமானதும்கூட. எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, எப்படி அவள் வாடிக்கையாளர்களைக் கவர்கிறாள்? நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்று எப்படி வெளிப்படுத் திக்கொள்கிறாள்?’

பால்ராஜ் புன்னகைத்துச் சொன்னான், ‘நீ ஓய்வாக இருக்கும்போது, இங்கு வந்து கொஞ்ச நேரத்தைச் செலவிடு. எவ்வாறு பரிமாற்றங்கள் நடக்கின்றன என்றும் வெறும் பார்வையிலேயே எப்படி எல்லாம் முடிக்கப்படுகின்றன என்றும் நீ தெரிந்துகொள்வாய்.’

பால்ராஜ் இதைச் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, மக்பூலின் கையைப் பிடித்து, ‘அங்கு யார் இருக்கிறது என்று பார்’ என்று சொல்லி, மூலை யில் இருந்த குடையைக் காட்டினான். மக்பூல் நிமிர்ந்து பார்த்தான். நல்ல நிறத்தில் அங்கொரு பெண் இருந்தாள். அவள் குட்டை முடி வைத்திருந்தாள். மஞ்சள் நிறப் பட்டுப் புடைவை அணிந்திருந்தாள். பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத்தான் இருந்தாள்.

‘யார் அவள்?’ என்று மக்பூல் கேட்டான்.

பால்ராஜ் அவளைப் பார்த்துக்கொண்டே, ‘விசித்திரமான பெண்பற்றிச் சொன்னேனே, அது அவள்தான்’ என்றான். ‘நீ பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் விசித்திரமானவர்கள் தான்’ என்று மக்பூல் பதிலுக்குச் சொல்லி, ‘அதில் இவள் யார்?’ என்று கேட்டான்.

பால்ராஜ் புன்னகைத்து, ‘இவள் விசேஷமானவள். இவளைக் கவனமாகப் பார்’ என்றான். மக்பூல் மறுபடியும் அவளைப் பார்த்தான்.

அவளுடைய பின்னப்படாத தலைமுடி சற்றே பழுத்த நிறத்தில் இருந்தது. மஞ்சள் நிறத்தில் புடவை கட்டியிருந்த அவள், அரைக் கை ரவிக்கை அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் உதட்டுச் சாயம் பூசி இருந்தாள். ‘உன்னுடைய இந்த விசித்திரமான பெண்ணுக்கு எப்படி உதட்டுச் சாயம் பூசுவது என்றுகூடத் தெரியவில்லை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புடவையைச் சரியாகக்கூடக் கட்ட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதையும் உணர முடியும். அவளுடைய தலைமுடியும் சுத்தமாக இல்லை.’

பால்ராஜ் சிரித்தான். ‘நீ குறைகளை மட்டும்தான் பார்க்கிறாய். நல்ல விஷயங்கள் உன் கண்களுக்கு அகப்படுவதே இல்லை.’

‘நல்ல விஷயங்களை நீ சொல்லி நான் கேட்கிறேன்’ என்று சொன்ன மக்பூல், ‘ஆனால், முதலில் உனக்கு அவளைத் தனிப்பட்ட முறையில் தெரியுமா, அல்லது…’ அந்தப் பெண் பால்ராஜைப் பார்த்துப் புன்னகைக்க, மக்பூல் நிறுத்தினான். ‘எனக்கு விடை கிடைத்துவிட்டது. இப்போது அவளுடைய நல்ல விஷயங்களைச் சொல்.’

‘முதல் நல்ல விஷயம் என்னவென்றால்…’ பால்ராஜ் விளக்கத் தொடங்கினான், ‘மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவள். அவள் எப்போதும் பொய் சொல்வது இல்லை. அவளாகத் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட சட்டதிட்டங்களை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தக்கூடியவள். அதோடு, அவள் சுத்தம் மீது ரொம்பவும் அக்கறை காட்டுகிறவள். காதல் அது இது என்று எந்த நம்பிக்கைகளும் இல்லாதவள். இந்த மாதிரி விஷயங்களில் அவள் கல்நெஞ்சக் காரி.’

பால்ராஜ் கடைசி வாய் டீயைக் குடித்து முடித்த பின், ‘சரி, நீ என்ன செய்வதாக இருக்கிறாய்?’ என்று கேட்டான். மக்பூல் அந்தப் பெண்ணை மீண்டும் ஒருமுறை பார்த்துச் சொன்னான், ‘நீ சற்று முன் விளக்கிய குணாம்சங்களை, அவள் போன்ற பெண்கள் நிச்சயமாகக்கொண்டிருக்கக் கூடாது. அவளிடம் வரும் ஆண்களில் எவனோ ஒருவன், தன்னுடைய காதலை – அது உண்மை இல்லை என்றாலும், நடிப்புதான் என்றாலும் – வெளிப்படுத்தலாம்; ஒரு ஆண் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள இந்தப் பெண் உதவவில்லை என்றால், அவள் முட்டாள்தான்.’

சாந்தி2‘நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்’ என்று பதில் தந்தான் பால்ராஜ். ‘இந்தப் பெண் வெளிப்படையானவள். முரட்டுத்தனமாகவும் முகத்தில் அடிப்பது போன்றும் வெளிப்படையானவள். ‘சில சமயங்களில் நாம் குழம்பிப்போகிறோம்… ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது… நீ செய்ய வேண்டியதை இன்னும் செய்யவில்லை… நான் கிளம்ப வேண்டும்’ என்பாள். அவள் கிளம்பிப்போய்விடுவாள். ‘நீ நாற்றமடிக்கிறாய்… விலகிப் போ… என்னுடைய புடவையைத் தொடாதே. அதுவும் நாற்றமடிக்கும்’ என்பாள். பால்ராஜ் சிகரெட்டைப் பற்றவைத்தான். ‘விசித்திரமான பெண்தான்’ என்று தொடர்ந்தான்… ‘நான் அவளை முதன்முதலாகப் பார்த்தபோது எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவள் சொன்னாள்: ‘ஐம்பது ரூபாய்க்குச் சல்லிக் காசு குறையாது… உன்னிடம் பணம் இருந்தால், நாம் கிளம்பலாம். இல்லைஎன்றால் என்னை விட்டுவிடு. எனக்கு வேறு வேலை இருக்கிறது.’ ”

மக்பூல் அவளுடைய பெயர் என்னஎன்று கேட்டான்.

‘சாந்தி’ என்று பால்ராஜ் பதில் தந்தான். ‘அவள் காஷ்மீரில் இருந்து வருகிறாள்.’ மக்பூலும் காஷ்மீரில் இருந்து வந்தவன்தான் என்பதால் ஆச்சர்யப்பட்டான். ‘உன்னுடைய சொந்த ஊரில் இருந்துதான்…’ என்று மேலும் சொன்னான்.

மக்பூல் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தான். நிச்சயமாக காஷ்மீரைச் சேர்ந்தவள்போல்தான் இருந்தாள். ‘அவள் எப்படி இங்கு வந்து சேர்ந்தாள்?’ என்று கேட்டான்.

‘எனக்குத் தெரியாது’ என்றான் பால்ராஜ்.

மக்பூலுக்கு அந்தப் பெண் மீது ஆர்வம் கூடியது.

‘எனக்கு காஷ்மீர்பற்றித் தெரியாது. ஆனால், அவள் இங்கு தனியாக வாழ்கிறாள்’ சிகரெட்டின் அடிப் பகுதியை அணைத்தவாறு பால்ராஜ் சொன்னான். ‘ஹார்ன்பி சாலையில் உள்ள ஹோட்டலில்தான் அவள் அறை ஒன்றை எடுத்திருக்கிறாள். எவரிடமும் அவள் இருக்கும் இடத்தைச் சொல்வது இல்லை. ஏதோ சந்தர்ப்பவசத்தால் எனக்குத் தெரியவந்தது. அவளை அழைத்துச் செல்ல வருகிறவர்கள் யாராக இருந்தாலும் இங்குதான் வருவார்கள். அவள் ஒவ்வொரு மாலையும் மிகச் சரியாக ஐந்து மணிக்கு இங்கு வருவாள்.’

மக்பூல் சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். பிறகு, வெயிட்டரை அழைத்து ரசீது கேட்டான். அப்போது நல்ல முறையில் ஆடை அணிந்திருந்த ஒருவன் வந்து அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளத் தொடங்கினார் கள்.

மக்பூல், ‘அவளை நான் ஒரு முறை சந்தித்தாக வேண்டும்’ என்று சொன்னான். பால்ராஜ் புன்னகைத்தான். ‘நிச்சயமாக’ என்றான். ‘ஆனால், இப்போது அவள் பிஸியாக இருக்கிறாள். வேறெரு சமயம் ஒரு மாலையில் வா. அவளுக்கு அருகில் போய் உட்கார்.’

மக்பூல் பணம் கொடுத்த பின் அவர்கள் வெளியேறினார்கள்.

அடுத்த நாள் மக்பூல் தனியே வந்து டீக்குச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டான். மிகச் சரியாக ஐந்து மணிக்கு ஒரு பேருந்தில் இருந்து இறங்கி, அவளுடைய கைப்பையை ஆட்டிக்கொண்டே வந்தாள். அவள் மக்பூல் அமர்ந்திருந்த மேஜையைக் கடந்து சென்று சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டாள். மக்பூல் தனக்குள் சொல்லிக்கொண்டான்: ‘பாலியல் கவர்ச்சி எதுவும் அவளிடம் இல்லை. உதட்டுச் சாயத்தைக்கூடக் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் போட்டிருக்கிறாள். புடவையை எப்படிக் கட்டுவது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. எப்படி அவளுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.’

பிறகு, அவளை எப்படி அணுகுவது என்று யோசிக்கத் தொடங்கினான். அவன் சொல்லியிருந்த டீ கொண்டுவரப்படாமல் இருந்திருந்தால், எழுந்து சென்று அவளு டைய மேசையில் அமர்ந்திருப்பான். அவன் டீயைக் குடிக்கத் தொடங்கினான். தன் இருப்பை அவளுக்குத் தெரியப்படுத்துவதற்காகச் சத்தம் எழுப்பிப் பார்த்தான். அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்தாள். சற்றே சங்கடமாக உணர்ந்த பிறகு, உடனடியாகத் தன்னை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தான். ‘கொஞ்சம் டீ குடிக்கிறாயா?’ என்று கேட்டான். ‘வேண்டாம்’ என்றாள்.

இந்தச் சுருக்கமான வெட்டுவது போன்ற பதில், விருப்பம் இன்மையைத்தான் வெளிப்படுத்தியது. மக்பூல் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னான், ‘காஷ்மீரிகளுக்குப் பொதுவாக டீ என்றால் பிடிக்கும்.’

அந்தப் பெண் நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்தாள் ‘உனக்கு என்னோடு வர வேண்டுமா?’

மக்பூலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘ஆமாம்’ என்று எப்படியோ சமாளித்துச் சொன்னான். அந்தப் பெண், ‘ஐம்பது ரூபாய், சம்மதமா இல்லையா?’ என்றாள். இது மீண்டும் அவனைத் தூக்கிவாரிப்போட்டது. ஆனாலும், அசராமல் மக்பூல் சொன்னான், ‘கிளம்பு, போகலாம்.’

மக்பூல் டீக்குப் பணம் கொடுத்த பிறகு, அவர்கள் டாக்சி நிறுத்தத்தை நோக்கி நகர்ந்தார்கள். வழியில் அவன் ஏதும் சொல்லவில்லை. அந்தப் பெண்ணும் அமைதியாக இருந்தாள். அவர்கள் டாக்சி யில் ஏறிய பிறகு மக்பூலிடம் அவள் கேட்டாள், ‘உனக்கு எங்கு போக வேண்டும்?’

‘நீ என்னை எங்கு அழைத்துச் செல்கிறாயோ… அங்கு’ என்று மக்பூல் பதில் தந்தான்.

‘எங்கு போக வேண்டும் என்று நீ சொல்’- அந்தப் பெண் உறுதியாக இருந்தாள். மக்பூல் சாதாரணமாகத்தான் சொன்னான், ‘எனக்குத் தெரியாது.’ ஆனால், உடனே அவள் டாக்சி கதவைத் திறக்கக் கையைத் தூக்கி, ‘நீ எப்படிப்பட்ட மனுஷன்? இதெல்லாம் என்ன விளையாட்டு?’ என்றாள்.

மக்பூல் அவளுடைய கையைப் பிடித்து, ‘நான் விளையாடவில்லை’ என்றான். ‘எனக்கு உன்னோடு பேச வேண்டும் அவ்வளவுதான்.’

எரிச்சல் அடைந்த அவள், ‘என்ன முட்டாள்தனம்? நீ ஐம்பது ரூபாய் கொடுக்கச் சம்மதித்து இருக்கிறாய்’ என்றாள்.

மக்பூல் தன் பையில் கையைவிட்டு ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான். ‘இந்தா இதை எடுத்துக்கொள். இப்போது திருப்திதானே?’

அவள் பணத்தை வாங்கிக்கொண்டாள். ‘உனக்கு எங்கு போக வேண்டும்?’ என்றாள். ‘உன் வீட்டுக்கு’ என்றான் மக்பூல்.

‘முடியாது.’

‘ஏன் முடியாது?’

‘நான் முடியாது என்று சொல்கிறேன்.’

மக்பூல் புன்னகைத்து, ‘ஓ.கே. முடியாது.’

சற்று அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், ‘நீ விசித்திரமான மனிதன்தான்’ என்றாள்.

‘நீ ஐம்பது ரூபாய் சம்மதமா இல்லையா என்றாய். நான் சம்மதம் என்று சொல்லி ஐம்பது ரூபாய் கொடுத்தேன். நீ முடியாது என்றாய். நான், ஓ.கே. முடியாது என்றேன். நீ வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?’ என்றான் மக்பூல்.

அந்தப் பெண் யோசிக்கத் தொடங்கினாள். மக்பூல் புன்னகைத்து, ‘இங்கு பார் சாந்தி, நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நேற்றுதான் உன்னை நான் பார்த்தேன். உன்னைப் பற்றி என் நண்பன் சில விஷயங்கள் சொல்லியிருக்கிறான். அது என் ஆர்வத்தைத் தூண்டியது. ஆக, இன்று நான் உன்னைப் பிடித்தேன். நாம் நம் வீட்டுக்குச் செல்வோம். சற்று நேரம் பேசிக்கொண்டு இருப்போம். பிறகு, நான் கிளம்பிப்போகிறேன். இதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதா?’

‘முடியாது. இந்தா உன்னுடைய ஐம்பது ரூபாய்.’ அந்தப் பெண் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாள். அவளுடைய முகத்தில் எரிச்சல் காணப்பட்டது.

‘நீ ஐம்பது ரூபாய் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கிறாய். இந்த உலகத்தில் நூற்றுக்கணக்கான வேறு விஷயங்கள் இருக்கின்றன’ என்றான் மக்பூல். ”இப்போது டிரைவரிடம் உன் விலாசத்தைச் சொல்லு. நாம் அங்கு போவோம். நான் மரியாதைக்குரிய மனிதன். உனக்கு எந்தக் கெடுதலும் நேராது.’

இவனிடம் காணப்பட்ட உண்மைத்தன்மையில் அவள் சற்றே இறங்கிவந்தாள். மேலும், சிறிது நேரம் யோசித்த பிறகு டிரைவரிடம், ‘ஹார்ன்பி சாலை’ என்றாள்.

டாக்சி நகரத் தொடங்கியபோது மக்பூல் கொடுத்த பணத்தை அவனுடைய பாக்கெட்டில் வைத்து, ‘நான் இதை எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்றாள். மக்பூல், ‘உன் விருப்பம்போல்’ என்று மட்டும் சொன்னான்.

ஒரு ஐந்து மாடிக் கட்டடத்துக்கு முன் டாக்சி நின்றது. முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் மசாஜ் நிறுவனங்கள் இருந்தன. மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிகளில் ஹோட்டல்கள் இருந்தன. அந்தக் கட்டடம் அழுக்கடைந்தும் இருண்டும் கிடந்தது. சாந்தியின் அறை நான்கா வது மாடியில் இருந்தது. அவளு டைய கைப்பையில் இருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தாள். அந்த அறையில் பொருட்கள் என்று மிகச் சொற்பமானவை தான் இருந்தன.

வெள்ளைத் துணி கொண்டு போர்த்தப்பட்டு இருந்த ஓர் இரும்புக் கட்டில். ஒரு மூலையில் அலங்கரிப்புக் கண்ணாடி மேஜை. ஒரு மர ஸ்டூலில் மேஜை விளக்கு ஒன்று. கட்டிலுக்கு அடியில் நான்கு பெட்டிகள் இருந்தன. அறையில் காணப்பட்ட சுத்தம் மக்பூலை வெகுவாகக் கவர்ந்தது. தலையணை உறைகள் பொதுவாக அழுக்கேறிக் கிடக்கும். ஆனால், அவளுடைய இரண்டு தலையணைகளும் மிகச் சுத்தமாக இருந்தன. மக்பூல் கட்டிலில் உட்கார எத்தனித்த போது, அவள் தடுத்தாள். ‘இல்லை, நீ அதில் உட்காரக் கூடாது’ என்றாள்.

‘என் கட்டிலில் உட்கார நான் எவரையும் அனுமதிப்பது இல்லை. அந்த நாற்காலியில் உட்கார்’ என்று சொல்லி, அவள் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். மக்பூல் புன்னகைத்து அந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

சாந்தி அவளுடைய கைப்பையைத் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு, ‘சொல்லு, உனக்கு என்ன பேச வேண்டும்?’ என்றாள்.

மக்பூல் மிகக் கவனமாக அவளைப் பார்த்தான். பிறகு, ‘முதலில் உனக்கு உதட்டுச் சாயம் எப்படிப் போட்டுக்கொள்வது என்று தெரியவில்லை’ என்றான்.

சாந்தி எரிச்சல் எதையும் வெளிக்காட்டாமல் பதில் சொன்னாள். ‘எனக்கு அது தெரியும்.’

‘எழுந்து போய் உதட்டுச் சாயத்தை எடுத்து வா’ என்றான் மக்பூல். ‘அதை எப்படி உபயோகிப்பது என்று நான்

உனக்குக் கற்றுத்தருகிறேன்.’

‘அலங்கரிப்பு மேஜையில் இருக்கிறது, எடுத்துக்கொள்’ என்றாள் சாந்தி.

‘இங்கு வா’ என்றான்.

‘முதலில் இந்த அசிங்கத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்’.

‘உன்னுடைய கைக்குட்டை வேண்டாம்’ என்றாள் சாந்தி.

‘என்னுடையதை எடுத்துக்கொள்.’ அவள் ஒரு பெட்டியைத் திறந்து அதில் இருந்து சுத்தமான கைக்குட்டை ஒன்றை எடுத்தாள். அதைக் கொண்டு மக்பூல் அவளுடைய உதட்டைச் சுத்தம் செய்துவிட்டு, சாயக் குச்சியை எடுத்து மிகக் கவனமாகவும் நேர்த்தியாகவும் சாயம் பூசினான். பிறகு அவளுக்குத் தலைவாரிவிட்டான். ‘இப்போது போய் உன்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்’ என்றான்.

சாந்தி கண்ணாடியை நோக்கி நகர்ந்து அதற்கு முன் நின்றாள். அவளுடைய தலைமுடி மற்றும் உதட்டைப் பார்த்தாள். பாராட்டத் தகுந்த அளவுக்கு வேறுபாடு இருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை. திரும்பி மக்பூலிடம் இதை மட்டும்தான் சொன்னாள்: ‘இப்போது சரியாக இருக்கிறது.’ பிறகு, கட்டிலில் வந்து அமர்ந்துகொண்டாள்.

‘உனக்கு மனைவி இருக்கிறாளா?’ என்று கேட்டாள்.

‘இல்லை’ என்று மக்பூல் பதில் தந்தான்.

சற்று நேரம் அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். மக்பூல் உரையாடல் தொடர வேண்டும் என்று விரும்பினான். அதனால், அவனே தொடங்கினான். ‘எனக்கு உன்னைப் பற்றி இவ்வளவுதான் தெரியும். சாந்தி, நீ காஷ்மீரில் இருந்து வந்தவள். இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறாய். இப்போது சொல், நீ இந்த ஐம்பது ரூபாய் சமாசாரத்துக்குள் எப்படி நுழைந்தாய்?’

எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சாந்தி பதில் தந்தாள். ‘ஸ்ரீநகரில் என் தந்தை ஒரு மருத்துவர். நான் அங்கு இருந்த மருத்துவமனை ஒன்றில் தாதியாக இருந்தேன். ஒரு பையன் எனக்கு ஆசைகாட்டி மோசம் போகவைத்தான். நான் வீட்டில் இருந்து ஓடி இங்கு வந்து சேர்ந்தேன். நான் ஒருவனைச் சந்தித்தேன். நான் அவனோடு சென்றால், ஐம்பது ரூபாய் தருவதாகச் சொன்னான். நான் சென்றேன். இப்படித்தான் இந்த வியாபாரத்துக்கு வந்தேன். நான் இந்த ஹோட்டலுக்கு மாறினேன். இங்கு இருப்பவர்கள் எவருடனும் நான் பேசுவது இல்லை. இவர்கள் எல்லோரும் உடலை விற்பவர்கள்தான்.’

இதற்கு மேலும் துருவுவது சரியாக இருக்காது என்று மக்பூல் நினைத்தான். நிச்சயமாக அவன் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டான். ஸ்ரீநகரில் அந்தப் பையன் இவளை அடைந்த பிறகு பத்து ரூபாய் கொடுத்திருக்கிறான். இவள் கோபம்கொண்டு அந்த ரூபாய் நோட்டைக் கிழித்தெறிந்திருக்கிறாள். இதுதான் அவள் வீட்டைவிட்டு ஓட வேண்டிய நிர்பந்தத் துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஐம்பது ரூபாய் கட்டணம் என்பது திட்டமிடப்படாமல் எதேச்சையாக நடந்த ஒன்று. அவளுக்குப் பாலியல் உறவுகளில் ஈடுபாடு இல்லாததால், பாலியல் சந்தோஷங்கள் உண்டா என்ற கேள்வியே எழவில்லை. இது மிகச் சுத்தமான நேரடியான வியாபாரம். அவள் தாதியாக இருந்ததினால் சற்றுக் கூடுதல் கவனத்தோடு இருக்கிறாள். அவள் ஒரு வருடமாக மும்பையில்தான் இருக்கிறாள் என்றும் மக்பூல் தெரிந்துகொண்டான். இந்த ஒரு வருடத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து இருக்கிறாள் என்றும் தெரிந்துகொண்டான். குதிரைப் பந்தயத்தில் அவளுக்கு ஈடுபாடு இருப்பதையும் தெரிந்துகொண்டான். போன பந்தயத்தில் ஐயாயிரம் ரூபாயை இழந்துவிட்டதாகவும் அதை எப்படியும் மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தாள். ‘அந்தப் பணத்தை நான் ஜெயித்துவிடுவேன்’ என்றாள். செலவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு நயா பைசாவுக்கும் அவள் கணக்கு வைத்திருப்பதையும் தெரிந்துகொண்டான். ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறாள். அதை நேராக வங்கியில் சேர்த்துவிடுகிறாள். உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்று அதற்கு மேல் சம்பாதிக்க அவள் முயற்சிகள் ஏதும் செய்வது இல்லை.

இரண்டு மணி நேரம் கடந்துபோனது. அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்து, ‘இப்போது நீ கிளம்ப வேண்டும். நான் இரவு உணவு எடுத்துக்கொண்டு உறங்கப்போகிறேன்’ என்றாள். மக்பூல் எழுந்து கிளம்பத் தயாரானபோது அவள், ‘பேசுவதற்காக நீ வர விரும்பினால், காலை நேரங்களில் வா. மாலை என் தொழிலுக்கான நேரம்’ என்றாள். மக்பூல் தலைஅசைத்துக் கிளம்பிச் சென்றான்.

அடுத்த நாள் காலை, சுமார் பத்து மணியளவில் மக்பூல், சாந்தியின் அறையை அடைந்தான். இந்த வருகையை அவள் விரும்பாமல் போகலாம் என்று நினைத்தான். ஆனால், அவள் எத்தகைய சங்கடத்தையும் வெளிப்படுத்தவில்லை. மக்பூல் அவளோடு மிக நீண்ட நேரம் இருந்தான். புடவையை எப்படிச் சரியாகக் கட்டிக்கொள்வது என்று அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். அவளிடம் நல்ல விதமான துணிமணிகள் நிறைய இருந்தன. அதைஎல்லாம் அவனிடம் காட்டினாள்.

அவள் இளமையானவளும் இல்லை. வயதானவளும் இல்லை. அவள் மரக் கிளையும் இல்லை. மரத் தண்டும் இல்லை. அவளுடைய வளர்ச்சி திடீரென்று தடைபட்டதுபோல் இருந்தாள். இது மக்பூலை ரொம்பவும் சங்கடப்படுத்தியது. அவளுடைய வளர்ச்சி தடைபடுவதற்கு முன்னர் அவள் எப்படி இருந்திருப்பாள் என்று கற்பனை செய்து பார்க்க முயற்சித்தான். அவளைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று மக்பூல் அவளைச் சந்திக்கச் சென்றான். அவனுக்கு என்று அவள் பிரத்யேகமாக எதையும் செய்யவில்லை என்றாலும் அவனைக் கட்டிலில் உட்கார அனுமதித்தாள்.

ஒரு நாள் அவள் சொன்னதைக் கேட்டு மக்பூல் அதிர்ச்சியடைந்தான். ‘உனக்குப் பெண் வேண்டுமா?’

கட்டிலில் படுத்திருந்த மக்பூல் தூக்கிவாரிப்போட்டதுபோல் எழுந்துகொண்டு, ‘நீ என்ன சொன்ன?’ என்று கேட்டான்.

சாந்தி திரும்பவும் சொன்னாள், ‘உனக்குப் பெண் வேண்டுமா என்று கேட்டேன். என்னால் இதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.’

காரணம் இல்லாமல் இந்தச் சிந்தனை ஏன் அவளுக்குத் தோன்றியது என்று மக்பூல் கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள். மக்பூல் தொடர்ந்து கேட்டதினால், ‘நீ வருகிறாய், வெறுமனே பேசிக்கொண்டு இருக்கிறாய். பிறகு, கிளம்பிப் போகிறாய். ஒரு பெண்ணாக நான் பிரயோஜனம் இல்லாதவள் என்று நினைக்கிறாய். எல்லாப் பெண்களும் என்னைப் போல் இருக்க மாட்டார்கள். அதனால், உனக்குத் தேவை இருக்குமானால், நான் ஏன் ஒரு பெண்ணுக்கு ஏற்பாடு செய்யக் கூடாது என்று நினைத்தேன்’ என்று சொன்னாள்.

அவளுடைய கண்களில் மக்பூல் முதல்முறையாகக் நீரைப் பார்த்தான். திடீரென்று அவள் எழுந்து நின்று கத்தத் தொடங்கி னாள் ‘நான் எதுவுமே இல்லை… வெளியே போ… நீ ஏன் இங்கு வருகிறாய்? போ…’

மக்பூல் எதுவும் சொல்லவில்லை. அவன் எழுந்து அமைதியாக வெளியே வந்தான்.

இதற்குப் பிறகு பார்ஸி பேக்கரிக்குத் தொடர்ந்து ஒரு வாரம் வந்துகொண்டு இருந்தான். ஆனால், சாந்தியை எங்கும் பார்க்க முடியவில்லை. கடைசியாக அவள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் போனான். சாந்தி கதவைத் திறந்தாள். ஆனால், ஏதும் பேசவில்லை. மக்பூல் நாற்காலியில் அமர்ந்துகொண்டான். அவளுடைய உதட்டில் சாயம் பழைய மாதிரி அக்கறை இல்லாமல் அப்பியிருந்ததைப் பார்த்தான். அவளுடைய தலைமுடியும் சுத்தமாக இல்லை. முன்புபோலவே புடவையும் மோசமாகக் கட்டியிருந் தாள். அவன், ‘உனக்கு என் மேல் கோபமா?’ என்று கேட்டான். சாந்தி பதில் ஏதும் சொல்லவில்லை. அவளைச் சீண்டும்விதமாக, ‘நீ எல்லாவற்றையும் மறந்துவிட்டாய்’ என்று சொன்னான்.

சட்டென்று, ‘என்னை அடி’ என்று அவள் சொன்னாள். மக்பூல் எழுந்து நின்று அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். அவள் வலியால் அழுதாள். கண்ணீர் அவளுடைய கன்னங்களில் வழிந்தோடியது. மக்பூல் தன்னுடைய கைக்குட்டையை எடுத்து மோசமாக அப்பியிருந்த உதட்டுச்சாயத் தைச் சுத்தம் செய்தான். அவள் எதிர்ப்புத் தெரிவித்தாள். ஆனாலும், அவன் தொடர்ந் தான். பிறகு, சாயக்குச்சியை எடுத்து அவளுடைய உதட்டில் புதிதாக, அழகாக சாயம் பூசினான். சீப்பை எடுத்து அவளு டைய தலைமுடியை வாரிவிட்டான். பிறகு, கட்டளையிடும் தொனியில் சொன்னான், ‘போய்ப் புடவையை ஒழுங் காகக் கட்டிக்கொண்டு வா.’

சாந்தி எழுந்து நின்று மீண்டும் புடைவையைக் கட்டிக்கொள்ளத் தொடங்கினாள். அவள் மறுபடியும் வெடித்து அழுது கட்டிலில் விழுந்தாள். மக்பூல் சற்று நேரம் அமைதியாக இருந்தான். அவளுடைய அழுகை சற்றே அடங்கிய பின் அவள் அருகில் சென்று, ‘எழுந்திரு சாந்தி, நான் கிளம்புகிறேன்.’

சாந்தி அவன் பக்கம் திரும்பிக் கத்தினாள்… ‘முடியாது, நீ இங்கிருந்து போக முடியாது.’ மூடியிருந்த கதவில் சாய்ந்து நின்று வழியை மறித்தாள். ‘நீ இங்கிருந்து கிளம்பினால், உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று கத்திப் பெருமூச்சு வாங்கினாள்.

அவளுடைய மார்பு, இதுவரை மக்பூலி னால் கவனிக்கப்படாதது, ஏதோ பெரும் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதுபோல் மேலெழுந்தது. மக்பூலின் அதிர்ச்சிஅடைந்த கண்கள், சாந்திக்குள் ஏதோ பெரும் உருமாற்றம் நிகழ்ந்துகொண்டு இருப்பதைப் பார்த்தன. கண்ணீரால் நிறைந்திருந்த அவளுடைய கண்கள் பிரகாசித்தன. சாயம் பூசிய அவளுடைய உதடு கள் துடித்தன. மக்பூல் ஓரடி அவளை நோக்கி நகர்ந்து அவளை அணைத்துக்கொண்டான். அவர்கள் கட்டிலில் உட்கார்ந்திருந்தபோது சாந்தி அவளுடைய தலையை அவனுடைய மடியில் சாய்த்தாள். அவளுடைய கண்களில் இருந்து நீர் வழிவது நிற்கவே இல்லை. மக்பூல் அவளைத் தட்டிக்கொடுத்துச் சொன்னான், ‘அழுவதை நிறுத்து சாந்தி.’

தேம்பித் தேம்பி அழுத அழுகையின் ஊடாக அவள் சொன்னாள், ‘ஸ்ரீநகரில் ஒருவன் என் வாழ்க்கையை நாசம் செய்தான். இங்கு ஒருவன் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்தான்.’

இரண்டு மணி நேரங்கள் கடந்து மக்பூல் கிளம்பத் தயாரானபோது, தன்னுடைய பையில் இருந்து ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து சாந்தியின் கட்டிலில்வைத்து, ‘இதோ உன்னுடைய ஐம்பது ரூபாய்’ என்று சொன்னான்.

சாந்தி அருவருப்போடு அந்த ரூபாய் நோட்டை எடுத்து விட்டெறிந்தாள். பிறகு, வேகமாக அலங்கரிக்கும் மேஜைக்குச் சென்று ஒரு டிராயரை இழுத்தாள். ‘இங்கு வா, இதில் இருப்பதைப் பார்’ என்று சொன்னாள்.

டிராயரில் கசங்கிய நூறு ரூபாய் நோட்டுகள் இருப்பதைப் பார்த்தான். அதில் இருப்பதைக் கொஞ்சம் அள்ளி எடுத்துச் சுற்றிலும் இறைத்துப் போட்டுச் சொன்னாள், ‘இப்போது எனக்கு இது தேவை இல்லை.’

மக்பூல் புன்னகைத்தான். அவளுடைய கன்னத்தில் செல்லமாகத் தட்டிக்கொடுத்து, ‘இப்போது உனக்கு என்ன தேவை?’ என்று கேட்டான்.

சாந்தி பதில் சொன்னாள், ‘எனக்கு நீதான் வேண்டும்’ – இதைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மக்பூலைக் கட்டி அணைத்துக்கொண்டு மறுபடியும் அழத் தொடங்கினாள். அவளுடைய தலைமுடியைக் கோதிவிட்டபடி மக்பூல் சொன்னான்: ‘நீ வேண்டியது உனக்குக் கிடைத்திருக்கிறது, அழாதே!’

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *