Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சாதாரணமாகும் அசாதாரணங்கள்

 

‘தியா’……

“என் செல்லமில்ல! மணி எட்டரை ஆகுது. சீக்கிரம் படுக்க போம்மா. வருண் அவளை கொஞ்சம் தூங்க வைங்க மணியாகுது, அப்படியே இந்த குப்பையைக் கட்டி வெளியே வைச்சுடுங்க, நாளைக்கு வெள்ளிக்கிழமை. காலையில சீக்கிரமே குப்பை வண்டி வந்திடும்”….

“நீ போய் வை நிதி, நான் தியாவை தூங்கவைக்கிறேன்”…

“அப்படியா! அப்ப நீங்க கிச்சனை சுத்தம் பண்ணிடுங்க, நான் போய் குப்பையை வெளியே வைச்சுட்டு வந்து தியாவையும் தூங்க வைக்கிறேன்.

‘ஆஹ்!…….வேணாம்…வேணாம்….’ நானே குப்பையை வெளியே வைச்சுட்டு வந்து தியாவையும் தூங்க வைக்கிறேன்.

அப்படிங்கிறீங்க….. சரி…..

அம்மாவிடம் போனில் பேசிக்கொண்டே சமையலறையை சுத்தம் செய்து முடித்துவிட்டு, செக்யூரிட்டி அலாரம் ஆன் செய்துவிட்டு படுக்கைக்கு வரும்போது, வருணும், தியாவும் இரண்டாவது சுற்று கனவில் இருப்பவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.

நூத்தி நாப்பது டிகிரியில் இருந்த தியாவை தொண்ணூறு டிகிரியில் படுக்க வைத்துவிட்டு அவளை அணைத்தார் போல் அருகில் படுத்த அரைமணி நேரத்திற்குள் ‘வேகமான காற்று பனைமர கிளைகளுக்குள் ஊடுருவி அசைவது போன்று, சூழலுக்கு சற்றும் பொருந்தாத ஒரு சத்தம் ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்ல முடியாமல் என்னைத் தடுத்துக் கொண்டிருந்தது”

விளக்கை போடாமல் மெதுவாக எழுந்து போய் ஒவ்வொரு ஜன்னலிலும் நின்று வெளிப்புறத்தை உற்று உற்று பார்த்தும், பார்வை ஒரு அசைவையும் படம் பிடிக்கவில்லை. இரவின் கருமைப் போர்வைக்குள் சுகமாக சுருண்டிருந்த மரங்களின் கிளைகள் கூட அடிமரத் தண்டு போல் அசைவற்று உறுதியாக நின்று கொண்டிருந்தது,

ஆங்காங்கே இடைவெளி விட்டு எரியும் இரு ஜோடி பழுப்பு நிற ஜ்வாலை சொன்னது புல்வெளியில் பதுங்கி இருக்கும் முயல்களை. இப்பொழுது சத்தமும் நின்று போய் விட்டது. நிம்மதியாக படுக்கைக்கு வந்து படுத்த சில நொடிகளில் திரும்பவும் அதே சத்தம், காதிற்குள் நுழைந்து மூளையின் செல்களை அதிர்வடையச் செய்தது.

நாளின் தொடக்கம் உண்டாக்கிய குழப்பங்கள் மனதில் சாதாரண நாளில் தோன்றாத பயத்தையும், படபடப்பையும் ஏற்படுத்த போதுமானதாக இருந்தது….

இன்று காலை ஆரம்பித்ததே அசாதாராணமாகத்தான்….

வழக்கம் போல தியாவை பள்ளியில் இறக்கிவிட்ட பின்பும், அவள் உள்ளே நுழையும் வரை பார்த்திருந்துவிட்டு, ப்ரேக்கிலிருந்து வலது காலை எடுத்து, மிதமாக ஆக்ஸிலேட்டரை அமுக்கியபடி பள்ளி வளாகத்திலிருந்து வெளியே வந்து, வலது சிக்னலை போட்டு ஸ்டேரிங்கை ஒடித்து திருப்பி வண்டியை நேர் செய்வதற்குள் என் இடது தொடை பலமான பீப் சத்தத்தில் அதிர்ந்துக் கொண்டிருந்தது.

இந்நேரத்தில் வழக்கமில்லாத வழக்கமாக வந்த மெசேஜ்கள் கவனத்தைக் கவர, காரை அடுத்து வந்த தெருவில் வளைத்து வலது எல்லை கோட்டுக்கு அப்பால் ஓரமாக நிறுத்தி விட்டு, ஜீன் பாக்கெட்டில் துடித்துக்கொண்டிருந்த போனை எடுத்துப் பார்த்தேன். தியாவின் பள்ளியிலிருந்து தான் மெசேஜ் வந்திருந்தது.

“அவசர அழைப்பு: யாரும் பிள்ளைகளை காரிலிருந்து இறக்க வேண்டாம் என்றும், காரை நிறுத்தாமல் மூவிங்லேயே வைத்து இருக்கச் சொல்லியும் அடுத்த அடுத்த மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தது”

நான் அலறியடித்து போட்ட கால்கள் ஒன்று கூட எடுக்கப்படவே இல்லை.

“குழந்தைகளின் பாதுகாப்பில் ஏதோ ஒரு கவனக்குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று மனதில் பதட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. பள்ளி வளாகத்தில் விரும்பத்தகாத நிகழ்வு ஏதேனும் நடந்து இருக்குமோ? மனநல பாதுகாப்பில், இந்த அரசாங்கத்தின் துக்கமான நிலையால் பாதிக்கப் பட்டவனோ? அம்மாவிடம் இருந்து ஊக்க பரிசாக வித விதமான துப்பாக்கிகள் பெற்றவனோ? ஒவ்வொரு கணமும் கவனத்துடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளிய அடுத்தடுத்த சம்பவங்களால் பல கற்பனைகள் மனதில் எழும்பிக் கொண்டேயிருக்க கை தன்போக்கில் திரும்ப அழைத்து தன் முயற்சியை தொடரும் போதே, ‘kids are safe, don’t worry’ என்று அடுத்தடுத்த மெசேஜ்கள் இன்பாக்சை நிரப்பிக் கொண்டிருந்தது.

இருந்தாலும் அவர்களிடம் பேசிவிட்டே செல்வது என்று விடாத என் முயற்சியில் அழைப்பு எடுக்கப்பட்டதும் என்னிடமிருந்து வார்த்தை உதிரும் முன்பே அச்சூழலில் பரவியிருந்த ஒரே கேள்விக்கான பதிலை வாய்ஸ் மெசேஜ் போல் அடுக்கிவிட்டார்கள்.

“துப்பாக்கியுடன் ஒருவனை பள்ளிக்கு வெளியே பார்த்ததால், போலீஸ் வந்து க்ளியர் கொடுக்கும்வரை பிள்ளைகள் வெளியே நடமாட வேண்டாம் என்பதால் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியதாகவும், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், தற்போது எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, கவலை பட வேண்டாம்” என்ற வார்த்தைகள் பதட்டத்தை மெல்ல குறைத்தது.

“யாரவன்? துப்பாக்கி கலாச்சாரத்தின் நீட்சியில் வந்தவனோ? துப்பாக்கியின் காதலனோ இல்லை பெற்றவர்களின் தனி உரிமை பிரச்சனையால் தனித்து விடப்பட்டவனோ? துப்பாக்கியையும் தோட்டாவையும் பிரித்து வைக்கத் தெரியாத, படித்த பாமரனின் புதல்வனா?” பதட்டம் குறைந்து கொண்டே வந்தாலும் என் மனக் குழப்பம் கொஞ்சம் கூட குறையாமல் அதன் போக்கில் அவதியோடவே சுழண்டு கொண்டிருந்தது.

என் கணக்கில் எந்த உயிரின் இழப்பும் சேர்க்கக் கூடாது என்ற முடிவோடு கவனத்தை பாதையில் வைத்து ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

நான் வீட்டுக்கு வருவதற்குள் அச்செய்தியை உறுதிப்படுத்த பள்ளியிலிருந்து மெயிலும் அனுப்பி இருந்தார்கள், அதற்குள் விஷயங்கள் ஊடகங்களின் வாயிலாக காற்றின் வழியே பரவத் துவங்கியிருந்தது,

வருணை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்வதற்கு முன்பே மெயிலின் மூலம் தெரிந்துக் கொண்டு என்னை அழைத்து சமாதானப்படுத்துபவனை மிரள வைக்கக்கூடாது என்பதால் என் மேம்போக்கான பேச்சால் சரிக்கட்டினாலும் தியாவை பார்க்கும் வரை ஒரு நிலையின்மை இருந்து கொண்டே இருந்தது.

நேற்று இரவில் வீட்டுக்கு அருகில் கேட்ட நாய் சத்தமும், ஹெலிகாப்ட்டர் சத்தமும், சைரன் சத்தமும் மூன்று மணிக்கு விடும் பள்ளிக்கு என்னை இரண்டு மணிக்கே போய் உட்காரவைத்தது.

எந்த பக்கம் திரும்பிப் படுத்தாலும் இன்னும் அந்த ‘வேகமான காற்று பனைமர கிளைகளுக்குள் ஊடுருவி அசைப்பது போன்ற சத்தம்’ என் காதில் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருவேளை போன வாரம் பக்கத்து தெருவில் நடந்த மெர்க்குரி கசிவு மாதிரி எதாவது இருக்குமோ? அதற்கு இப்படி ஒரு சத்தம் வருமா? என்று சிந்திக்க முடியாதபடி மனதில் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் தூவிய விதைகள் எல்லாம் மிக வேகமாக விருட்சமாகியது. பய விருட்சத்தின் கிளைகள் இதயம், மூளை, காது, மூக்கு, கண்கள் என்று துளைத்து துளைத்து ஊடுருவிக் கொண்டிருந்தது…

இனி தாங்காது என்று வருணை எழுப்புவதற்காக தியாவை தாண்டி அருகில் போனேன், நேற்று போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக, வேகமான காற்று பனைமர கிளைகளுக்குள் ஊடுருவி அசைவது போல் வருணிடமிருந்து பெரியதாக மூக்கில் நுழைந்த காற்று வாய்வழியாக வந்துகொண்டிருந்தது… 

தொடர்புடைய சிறுகதைகள்
இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி துளியாக சேர்க்கும் அமிர்தம் போல் அந்த நொடிகளே நான்கு வருடத்தில் ஒரு நாளாக நிறைகிறது. அந்த நாளும் வழக்கமாக அருந்தும் ...
மேலும் கதையை படிக்க...
“விஜய் ப்ளீஸ்….ப்ளீஸ்…..என் செல்லமில்ல, பட்டுல்ல, தங்கமில்ல…..” இன்னைக்கு ஒரு நாள் தான்….. ப்ளீஸ்….. என்று கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்த மதுவிடம்…….இல்லை…..இல்லை…..இல்லை……. என்று வேகமாக தலையாட்டி மறுத்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன் விஜய். அம்மா…..நானும்….நானும்…..செல்லம்….பட்டு…..தங்கம்….. ‘ஆமாம்….ஆமாம்….நீயும் செல்லம், பட்டு, தங்கம் தான் வினய்க்குட்டி ஆனா சோபாவில் சறுக்காம ...
மேலும் கதையை படிக்க...
இட்லி இவ்வளவு சூடா வைச்சா எப்படிம்மா சாப்பிடறது, எனக்கு நேரமாச்சு காலேஜ் பஸ் வந்திடும் நான் கிளம்பறேன். ஏன் ஸ்ரீ, இட்லி ஆற ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா? ஒரு மணி நேரம் குளிச்சப்ப தெரியலையா கல்லூரிக்கு நேரமாகும்னு… சாப்பிடறதே ரெண்டு இட்லி, ...
மேலும் கதையை படிக்க...
"கார் பாலத்தின் இடது எல்லையில் போட்டிருந்த அலுமனிய தடுப்பை இடித்தும் நிற்காமல் தலைகீழாக கவிழ்ந்து, காற்றை விலக்கி, ஏரியின் மேல் படர்ந்து இறுகி இருந்த பனித் தகட்டை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது." கார், தடுப்பை இடிக்கும் என்று தெரிந்தவுடனே ஸ்டீரிங்கை ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை கடந்து, தண்ணீரும், தாமரையும் இல்லாது பெயரளவில் மட்டுமேயாக இருந்த தாமரை குளத்தைத் தாண்டி, அடுத்திருந்த தெருவில் நுழையும்போதே குறுகுறுத்தது உள்ளங்கால்கள். ...
மேலும் கதையை படிக்க...
எப்பொழுது…?
செயற்கையாகும் இயற்கை
அவஸ்தை
பனிச்சிறை
பாவனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)