சவப்பெட்டி

 

சந்தனு அந்த கற்பாறையில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் பல விடயங்களிலும் பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியடைந்து நொந்துபோய் இருந்தான். தனக்கு மட்டும் ஏன் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று பலமுறை யோசித்து யோசித்து அதில் இருந்து விடுபட முடியாமல் மிகுந்த விரக்தி நிலை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
அவன் குடும்பத்தில் அப்பா, அம்மாவைத்தவிர அவன் ஒரேயொரு பிள்ளைதான். அதனால் வீட்டில் அவனுக்கு எல்லாச்சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவனுக்குக் கிடைத்த செல்லம் காரணமாகவோ என்னவோ அவனுக்கு படிப்பு கொஞ்சமும் ஏறவேயில்லை. எனினும் அவன் முட்டிமோதி க.பொ.த. (சா/த) வரை படித்த போதும் இறுதிப் பரீட்சையில் சித்தி பெறவில்லை. அத்துடன் அவன் மேலே படிப்பதை நிறுத்திவிட்டான். இக்காலத்தில் அவனது அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விட்டாள்.

அவர்களுக்கு கிராமத்தில் ஒரு விசாலமான விவசாய பூமி சொந்தமாக இருந்தது. அவனது அப்பா எறும்புபோல் எப்போதும் மண்வெட்டியால் வெட்டிக் கொத்தி வேலை செய்து கொண்டே இருப்பார். அதில் அவர்களுக்கு சிறு வருமானமே கிடைத்து வந்தபோதும் வாழ்க்கையைக் கொண்டு நடத்த அந்த வருமானம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. மேலும் கடுமையாக உழைத்து மேலும் மேலும் வருமானத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுமென்று அவன் தந்தை ஒரு போதும் நினைத்தது கிடையாது. அவர் எப்போதும் வாழ்க்கைச் செலவுக்கேட்ப மட்டும் வருமானம் கிடைத்தால் போதும் என்றும், யாரிடமும் கையேந்தக் கூடாது என்ற கொள்கையையும் கொண்டவராக இருந்தார்.

அவரது இந்த மெத்தனமான போக்கு அவனுக்கு எரிச்சலூட்டுவதாகவே எப்போதும் இருந்தது. என்றபோதும் அவன் வேலை வெட்டி இல்லாதவன் என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு அவனது விவசாயத் தோட்டத்தில் அவனது தந்தைக்கு உதவியாக அவ்வப்போது வேலை செய்து வந்தான். அவன் தானாக முன்வந்து தோட்டத்தில் வேலை செய்வதனை அவன் தந்தை ஒரு போதும் வேண்டாம் என்று சொன்னதில்லை. இருந்தாலும் அவன் கஷ்டப்பட்டு வேலைசெய்து உழைக்க வேண்டுமென்று அவர் ஒரு போதும் நினைத்ததோ, வற்புறுத்தியதோ கிடையாது.
சந்தனு அம்மா இல்லாத பிள்ளையாதலால் அந்தக் குறை தெரியாமல் அவன் தந்தை எல்லாவிதத்திலும் அவனைக் கவனித்துப் பார்த்துக் கொண்டார். அவருக்கு மிக நன்றாக சமையல் செய்யத் தெரியும். அவர் தனது சமையல் கலையைத் தன் தாயிடம் இருந்தே கற்றுக்கொண்டார். அவர் சிறுவயது முதலே அம்மா பிள்ளையாகத்தான் வளர்ந்திருந்தார். எப்போதும் சமையலறையில் அம்மா சமைக்கும் போது அம்மாவின் நடவடிக்கைகளை அச்சொட்டாமல் கவனித்துக் கொண்டிருப்பார். அம்மாவும் கூட அவனை சும்மா இருக்க விடாமல் தேங்காய் திருவு, வெங்காயம் உரி, கீரையை பிச்சுக்கொடு, போஞ்சியை உடைத்துப் போடு, வெண்டிக்காயை வெட்டித்தா என்று இப்படி ஏதோ வேலைகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா கோழிக்கறி சமைக்கப் போகிறார் என்று அறிந்ததுமே அவருக்கு உற்சாகம் பிறந்துவிடும். கோழியை அறுத்து அதனை கொதிநீரில் அமுக்கி, அதன் முடி இறக்கைகளை சுத்தம் செய்து மஞ்சளை களியாக அரைத்து அதன் மீது பூசி, அதனை எரிந்த தணல் மீது காட்டி எஞ்சியிருக்கும் சிறு முடிகளை பொசுக்கி அதனை சதை வேறாகவும் எழும்புகளை வேறாகவும் வெட்டி எடுத்த இறைச்சியை பிரட்டல் கறியாகவும், சற்றே சதையுடனான எலும்புகளை பாற்சொதியாகவும் சமைத்து விடுவார். அந்த இரண்டு கறிகளுமே அடுப்பில் வேகும் போது நெஞ்சை அள்ளும் மணம் முன் வாசல் வரை வரும். அதனை முகர்ந்த அந்த கணமே பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிடும்.
இந்த விடயம் அம்மாவுக்குத் தெரியாததல்ல. அவர் நேரம் காலம் அறிந்தே சமையல் செய்வார். அவர் சமையல் செய்து முடிக்கவும் சாப்பாட்டு நேரம் வரவும் மிகச் சரியாக இருக்கும். அவர் ஒரு போதும் பிள்ளைகளை பசியுடன் காக்க வைத்தது கிடையாது. பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தே அவர்களின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன எனக் கண்டுபிடித்து விடுவார். எனவே மிகச் சரியான தருணத்தில் அவர் பிள்ளைகளையும் தனது கணவரையும் சாப்பிட வாங்க என அழைப்பாள். அவர்கள் வயிரார உண்பார்கள். பானையில் ஒருபோதும் சோறோ, கறியோ மிஞ்சுவதில்லை. இப்போது அதனை நினைத்துப் பார்க்க அது ஒரு பொற்காலம் போல் சந்தனுவின் தந்தைக்குப்பட்டது.

அந்த அனுபவாயிலாகத்தான் அவர் சமைக்கப் பழகியிருந்தார். அவரது அம்மா சமைத்த அளவுக்கு அவரால் சமைக்க முடிந்ததா என்பது வேறு விடயம். ஆனால் அவர் சமைத்த சாப்பாடுகளை சந்தனு விரும்பியே உண்ணுகிறான் என்பது அவருக்குத் தெரியும். இப்போது அவருக்கு நன்றாக வயது போய்விட்டது. அவ்வளவாக வேலை செய்ய முடியவில்லை. கண்பார்வையும் சற்றே மங்களாகிக் கொண்டு வந்தது. அநேகமான சந்தர்ப்பங்களில் அவர் தமது விவசாயக் காணியில் சற்றே உயரமாக அமைந்திருந்த மண் மேட்டில் அமர்ந்திருந்து காலை கீழே போட்டுக் கொண்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை வாயில்போட்டு குதைத்து சப்பிக்கொண்டிருப்பார். இந்த மாதிரி நேரங்களில் அவரைக் கண்ணுறும் சந்தனுவுக்கு அவர் மீது எரிச்சல் எரிச்சலாக வரும்.

இந்தக் கிழவனுக்கு வேலை வெட்டி கிடையாது. சாப்பாடு போடுவது தெண்டம். எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று நினைப்பான். அவன் மரமண்டைக்கு அவர் தனக்காக என்னவெல்லாம் செய்திருக்கார் என்பது கொஞ்சம் கூட நினைவுக்கு வாராது. அவன் சிந்தனையெல்லாம் அவரை எவ்வாறு ஒழித்துக் கட்டுவது என்பதிலேயே ஊன்றி ஊறிப் போயிருந்தது.

ஒரு நாள் அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். நகரத்துக்குப் போய் அங்கிருந்த சவப்பெட்டிக் கடையில் சவப்பெட்டி ஒன்றை வாங்கி வந்தான். அதனை ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வந்தான். அவன் அதனை அவனது வயது முதிர்ந்த தந்தை அமர்ந்திருந்த இடத்துக்கு இழுத்துச் சென்று அதனுள் ஏறிப்படுக்குமாறு கேட்டான். இது என்ன விபரீதம் என்று தனக்குள் யோசித்த அவனது தந்தை மறுபேச்சின்றி அதில் ஏறிபடுத்துக் கொண்டார். அவன் அதனை சற்று தள்ளியிருந்த உயரமான செங்குத்தான பள்ளத்தாக்கை நோக்கி இழுத்துச் சென்றான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட அவன் தந்தை மகனே! நீ என்னை வேண்டுமானால் அந்த உயரமான பள்ளத்தாக்கில் கொண்டு போய் தள்ளிக்கொன்றுவிடு. ஆனால் அந்த சவப்பெட்டியை பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட சந்தனு ஏன் என்று வினவினான். ஏனென்றால் நீ முதியவனானதும் உன் பிள்ளைகள் அதனை தேடிக்கொண்டு வருவார்கள். அவர் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமலேயே அந்த வார்த்தைகளைக் கூறினார். 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை நான் இந்த உலகத்திலேயே இருந்த மிகக் கொடுமையான அம்மா என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் குழந்தைகளை நான் ...
மேலும் கதையை படிக்க...
பாசாங்குகள்
அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களேயாகின்றன. அவன் ஒரு பத்திரிகையாளன். அத்துடன் இலக்கியத்துறையிலும் ஆர்வம் செலுத்தி சிறுகதைகள், கவிதைகள் என எழுதிக் கொண்டிருந்தான். மேலும் புகைப்படத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தான். காட்டு வாழ்வை படம் பிடித்து அழகு பார்ப்பதில் அதிகம் ...
மேலும் கதையை படிக்க...
செல்வியை அவளது அப்பா ஒரு புதுமைப் பெண்ணாக வளர்த்திருந்தார் . அதற்கு ஏற்றாற் போலவே அவளும் இலக்கணம் மீறிய கவிதை போல் வளர்ந்து இருந்தாள். ஆண்கள் தன்னிடம் நட்பாக பழக வேண்டும் என்றே விரும்பினாள் அன்றி காதல் கத்தரிக்காய் என்று எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
இந்தத் தொழில்நுட்ப யுகம் எந்தளவுக்கு நம்மை மனித உறவுகளில் இருந்து அப்பால் இழுத்துச்சென்று அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிவதில்லை. இதைப்பற்றி சிந்திக்க எப்போதாவது நாம் ஒரு நிமிடத்தை ஒதுக்கியுள்ளோமா? அனுபவங்கள் அவரவருக்கு தலையிடியாக வந்து குத்திக்குடையும் போதுதான் ...
மேலும் கதையை படிக்க...
தனக்குத் தனிமை தேவைப்பட்ட போதெல்லாம் மகாராணி அனுலாதேவி ராஜ மாளிகையின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த மத்ஸ தடாகத்தைத் தேடித்தான் வருவாள். அங்கு மட்டும்தான் தனக்கு அமைதி கிடைக்கும் என்று அவள் நம்பினாள். தனது மனக்குமுறல்களையெல்லாம் அங்கிருந்த மீன்களிடம் தான் கொட்டித் தீர்ப்பாள். ...
மேலும் கதையை படிக்க...
அம்மாவின் கட்டளைகள்
பாசாங்குகள்
புதுமைப் பெண்
ஸ்மார்ட் போனின் அன்பு
பெண்ணரசி அனுலாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)