சற்றுமுன் வந்த அலை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 12,049 
 

”இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?” – கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை ஆச்சர்யத்தோடு பார்த்தான் மாதவன். என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், ”சாமிதாம்பா” என்றவன், மகனின் கையைப் பிடித்துக்கொண்டு வரப்போகும் அலைகளுக்காகக் காத்திருந்தான். முதல் அலை அருணின் கால்களை நனைத்தபோது அவன் முகத்தில் ஏற்பட்ட பரவசம், அந்த அலையைவிட… அலையை அனுப்பிவைத்த கடலைவிட… கடலை உருவாக்கிய கடவுளைவிட அழகாக இருந்தது.

”போதும் போலாம்பா…” என்றான் மாதவன்.

”இன்னும் கொஞ்ச நேரம்பா, ப்ளீஸ்…” என்று அருண் கேட்டபோது, பெரிய அலை ஒன்று வந்து அவர்களை முழுக்க நனைத்தது. வாயில் நுழைந்த தண்ணீரைத் துப்பிக்கொண்டே, ”சாமியைத் திட்டுப்பா” என்றான் அருண்.

”ஏம்ப்பா?”

”சாம்பார்ல கொஞ்சம் உப்பு அதிகமாப் போட்டாலே நீ அம்மாவைத் திட்டுறியே… கடல்ல எவ்ளோ உப்பு போட்டுவெச்சிருக்கு பாரு சாமி… திட்ட மாட்டியா?” என்றபோது இன்னோர் அலை வந்து அருணின் கால்களை முத்தமிட்டது. தான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டதற்காகத் தந்துவிட்ட பரிசுபோல் இருந்தது. அப்போது தொடங்கியது, மாதவன் குடும்பத்தோடு மாதத்துக்கு ஒருமுறையாவது காந்தி பீச் செல்லும் வைபவம்.

”இதை ஏம்ப்பா ‘காந்தி பீச்’னு சொல்றாங்க… அவர்தான் இதைக் கட்டினாரா?” – ஏழு வயதில் அருண் கேட்ட கேள்வி.

”இல்லப்பா… இந்த இடத்துல காந்தி சிலை இருக்கிறதால அப்படிச் சொல்றாங்க.”

சற்றுமுன் வந்த அலை1திரும்பி வரும்போது காந்தி சிலையைப் பார்த்து, ”பீச்சுக்குப் பக்கத்துல இருக்கே… அப்ப இவர ‘பீச் காந்தி’னு சொல்வாங்களாப்பா?” – அருண் கேட்க, ”டேய்… கொஞ்சம் நேரம் அமைதியா வாடா” என்று அருணை அடக்கினாள் மாதவனின் மூத்த மகள் காயத்ரி.

இன்னும் சற்று நேரத்தில், இருவருக்குள் சகோதர யுத்தம் தொடங்கிவிடும். இப்போதெல்லாம் மாதவனும் புவனாவும் அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அருண் – காயத்ரி சண்டைக்கு ஐந்து நிமிடங்களோ… பத்து நிமிடங்களோதான் ஆயுள். ஆனால், அது ஒருவகையில் அவர்களுக்கு இடையே அன்பை அதிகமாக்கும் ஆயுதமாக இருந்தது.

அருணுக்கு அவன் அம்மாவைவிட மாதவனை ரொம்பப் பிடிக்கும். ஒவ்வோர் இரவும் தூங்குவதற்கு முன் ‘கதை சொல்லு’ என அருணும் காயத்ரியும் புவனாவை நச்சரிப்பார்கள். அவளும் ‘ஒரு ஊர்ல ஒரு அப்பா-அம்மா. அவங்களுக்கு மூணு பிள்ளைங்க. ஒருத்தர் டாக்டர், ஒருத்தர் இன்ஜினீயர், இன்னொருத்தர் கலெக்டர்…’ என இதையே ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பச் சொன்னாள். ஒருகட்டத்தில் குழந்தைகள் இருவரும் நொந்துபோய்விட்டனர்.

”அப்பா… இனிமே நீதான் கதை சொல்லணும்”- ஆண்டவன் கட்டளைபோல் இது அருணின் கட்டளை. மாதவனால் மறுக்க முடியவில்லை. அன்று முதல் ‘கதை சொல்லி’ என்ற பதவி, புவனாவிடம் இருந்து மாதவனுக்கு மாற்றப்பட்டது.

மறுநாள் இரவு முதல் மாதவன் கதை சொல்ல ஆரம்பித்தான். ”ஒரு ஊர்ல ஒரு அப்பா…”

”அந்த ஊருக்கே ஒரே ஒரு அப்பாதானா?” என்று அருண் கேட்க… மாதவன், புவனா, காயத்ரி மூவரும் சேர்ந்து சிரித்தனர். அருணும் சிரித்துவிட்டான். மாதவன் சொல்ல வந்த கதை, அந்த இரவில் ‘ஒரு ஊர்ல ஒரு அப்பா’வோடு முடிந்தது.

ஒருநாள் தன் மனைவி, குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்றான் மாதவன். புவனாவைத் தவிர அருணுக்கும் காயத்ரிக்கும் எங்கே போகிறோம் எனத் தெரியாது. ‘காந்தி பீச்சுக்கா… ஹோட்டலுக்கா… இல்ல சித்தப்பா வீட்டுக்கா…’ எனக் கேட்டுக்கொண்டே வந்தனர். மௌனமான சிரிப்பையே மாதவன் பதிலாகக் கொடுக்க, கார் ஷோரூம் வாசலில் போய் நின்றது அந்த ஆட்டோ.

”இதுல எந்தக் கலர் பிடிச்சிருக்கு?” என்று மாதவன் கேட்டான். அப்போது அவர்களின் முகத்தில் ஏற்பட்ட பரவசம், ஆயிரம் நிலாக்களை அப்படியே அள்ளிக்கொண்டு பூமிக்கு வந்ததுபோல் இருந்தது.

”புது காரில் முதலில் எங்கே போகலாம்?” என்றான் மாதவன்.

”காந்தி பீச்ப்பா…” – அருணிடம் இருந்து அதிவேகமாகப் பதில் வந்தது. தண்ணீரைப் பார்த்தால் அப்படி ஓர் ஆனந்தம் அருணுக்கு.

அடுத்த ஆண்டு காயத்ரி ஏழாம் வகுப்பிலும், அருண் மூன்றாம் வகுப்பிலும் சேர்ந்தனர். ”இந்த வருஷக் கடைசியில இருந்து ஸ்கூல்ல எனக்கும் ஸ்விம்மிங் கிளாஸ் இருக்குல்லப்பா..?” என்று கேட்டான் அருண்.

”நிச்சயமா! உங்க ஸ்கூல்ல அது கம்பல்ஸரி ஆச்சே” என்றான் மாதவன்.

எந்த விஷயத்திலும் ‘கம்பல்ஸரி’ என்பது அருணுக்குப் பிடிக்காது. ஆனால், இந்த விஷயத்தில் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் மாதவன், பஞ்சதந்திரக் கதைகளையும், தெனாலிராமன் கதைகளையும் படிக்கத் தொடங்கியிருந்தான். அவைதான் அருணுக்கும் காயத்ரிக்கும் தூக்க மாத்திரைகள்.

ஒருநாள் இரவு மாதவன் ”இன்னிக்கு எதுவும் நான் கதை படிக்கல… ஒரு பாட்டு பாடட்டுமா?” என்று கேட்டான்.

”ஐய்யயோ… வேணாம் டாடி” என்று காயத்ரி கையெடுத்துக் கும்பிட, ”நாங்க தூங்க வேணாமா?” என்று அருண் நக்கலடித்தான்.

” ‘பாட்டு பாடுறேன்’னு சொல்லி எதுக்கு ராத்திரியில குழந்தைங்களைப் பயமுறுத்துறீங்க?” – இது புவனாவின் கிண்டல்.

‘என்ன கதை சொல்றதுனு தெரியலையே’ என மாதவன் புலம்ப, ”உன் சின்ன வயசுக் கதையைச் சொல்லுப்பா” என்று அருண் மாதவனின் மனக் குளத்தில் ஒரு கல் வீசினான்.

சின்ன வயசுக் கதை என்றால்… சின்ன வயதில் இருந்து இன்று வரை தான் சந்தித்த சந்தோஷம், துக்கம், வலி, வேதனை, காதல், நட்பு, துரோகம், வெற்றி, தோல்வி… இப்படி அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு மாதவனின் மனதில் ரீவைண்டு ஆனது.

இளவரசனைப்போல் வாழ்ந்ததைச் சொல்வதா, அப்பாவின் மரணத்தால் ஒரே நாளில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்ததைச் சொல்வதா, உயிரைப் பிசைந்து பாசத்தை ஊட்டிய அம்மாவைப் பற்றி சொல்வதா, தன்னைக் காதலித்த, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சொல்வதா, எதைப் பற்றி சொல்வது… எங்கே இருந்து தொடங்குவது?

”சொல்லுப்பா…” என்று மாதவனை உலுக்கினான் அருண்.

”இந்தப் பல் எப்படி உடைஞ்சது தெரியுமா?” என்று முன்வரிசையில் இருந்த தன் உடைந்த பல்லைக் காட்டி மாதவன் கேட்டான்.

”எப்படி..?” – அருணும் காயத்ரியும் ஆர்வமாகிவிட்டனர்.

சற்றுமுன் வந்த அலை2”நான் ஏழாங்கிளாஸ் படிக்கும்போது எனக்கும் சிவக்குமாருக்கும் செம சண்டை. அன்னைக்கு எங்க அப்பா ஊர்ல இல்லை. எங்களை மறுபடியும் ஃப்ரெண்ட்ஸ் ஆக்க டி.பி.சேகரும் விஸ்வநாதனும் ப்ளான் போட்டு, ‘மலைக்குப் போய்ப் படிக்கலாம்’னு எனக்குத் தெரியாம அவன்கிட்டயும், அவனுக்குத் தெரியாம என்கிட்டயும் சொல்லி, வரச் சொன்னாங்க. அவங்க நெனச்சமாதிரியே நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். அப்புறம் எங்க படிக்கிறது… விளையாட ஆரம்பிச்சுட்டோம்!

சிவக்குமாரைத் துரத்திக்கிட்டு நான் ஓடினப்ப, ஒரு கல் தடுக்கி விழுந்துட்டேன். நெத்தி, உதடு, தாடை எல்லாம் ரத்தமா ஒழுகுது. பயந்துபோன மூணு பேரும் என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் முகம் முழுக்கக் கட்டு போட்டு வீட்டு வாசல்ல விட்டுட்டு ஓடிட்டாங்க. என்னைப் பார்த்த அம்மா, அலறித் துடிச்சிட்டாங்க. நடந்தது எல்லாத்தையும் சொன்னேன்.

‘பல்லு வேற உடைஞ்சிருக்கேடா… உங்கப்பா வந்தா என்ன சொல்வேன்?’னு அம்மா கதற, ‘சைக்கிள்ல இருந்து விழுந்துட்டேன்னு சொல்லும்மா’னு கெஞ்சினேன்.

”உங்க அப்பா உன்னைத் திட்டுவாராப்பா?” இது அருணின் இடைச்செருகல் கேள்வி.

மாதவன் சொன்னான்… ”திட்ட மாட்டார்… ஆனா, திட்ற மாதிரி நடிப்பார்.”

”உங்கப்பா எப்ப ஊர்ல இருந்து வந்தார்?” காயத்ரி கேட்டாள்.

”ரெண்டு நாள் கழிச்சு வந்தார். என்னைப் பார்த்துட்டு, ‘என்ன ஆச்சு?’னு அம்மாகிட்ட கேட்டார். அம்மா சைக்கிள் கதையைச் சொன்னாங்க. டி.சி.சேகர், சிவக்குமார், விஸ்வநாதன் மூணு பேரையும் வரவெச்சு, தனித்தனியா விசாரிச்சார். சைக்கிள்ல இருந்து விழுந்தேன்னு சொன்னது பொய்னு கண்டுபிடிச்சிட்டார்.”

”எப்படி..?” – கண்கள் விரியக் கேட்டான் அருண்.

”அதை நாளைக்குச் சொல்றேன்” – இப்படி மாதவனின் சின்ன வயதுக் கதைகளால் அருண், காயத்ரியின் இரவுகள் கரைந்துகொண்டிருந்தன.

அருணுக்கு அழகுணர்ச்சி அதிகம். ஒருமுறை அருணை சலூனுக்கு அழைத்துப்போய் சம்மர் கட்டிங் என்ற பெயரில் கிட்டத்தட்ட மொட்டை அடித்துக்கொண்டு வந்தபோது அருண் செய்த ஆர்ப்பாட்டம் இருக்கிறதே..! அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் மாதவனுக்கு ‘போதும் போதும்’ என்றாகிவிட்டது.

நான்காம் வகுப்பில் சேர்ந்த பிறகு, அருணின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது. பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் டி.வி பார்த்துக்கொண்டும் காயத்ரியுடன் சண்டை போட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் ஒவ்வொரு நொடியும் உற்சாகமாக இருந்ததோடு… வீட்டையே உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தான்.

ஒருமுறை மாதவன் அருணையே பார்த்துக் கொண்டிருந்தான்.

”என்னப்பா, அப்படிப் பார்க்கிறே?”

”உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்குடா… அப்பாவும் உன்னை மாதிரியே இருக்கணும்னு ஆசைப்படுறேன்.”

சச்சின், தோனியைத் தவிர மாதவனுக்கு வேறு எந்த ப்ளேயர் பெயரும் தெரியாது. ஆனால் அருணுக்கோ, IPL-ல் வரும் அனைத்து நாட்டு ப்ளேயர் பெயர்களையும் சொல்வான்.அருணுக்கு அப்படி ஒரு ஞாபகசக்தி. படிப்பில் காயத்ரி வாங்கிய கோப்பைகளும், விளையாட்டில் அருண் வாங்கிய கோப்பைகளும் வீட்டு அலமாரியை நிறைத்தன.

மாதவனின் பொருளாதாரம் எப்போதும் ஒரே சீராக இருக்காது. திடீரென லட்சங்களில் புரளும்… சில நேரம் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கக்கூட பணம் இருக்காது. அவன் தொழில் அப்படி. புவனாவுக்கும் காயத்ரிக்கும் அவனிடம் எப்போது பணம் இருக்கும்; இருக்காது என்பது தெரியும். அதற்கு ஏற்றவாறு தங்கள் தேவைகளைக் கூட்டியும் குறைத்தும் கொள்வார்கள். ஆனால் அருணுக்கு, அதைப் பற்றியெல்லாம் தெரியாது. மாதம் ஒரு முறை காரில் காந்தி பீச்சுக்குப் போக வேண்டும். விடுமுறை நாட்களில் கிளப்புக்கோ, ரிசார்ட்டுக்கோ போக வேண்டும். அங்கே ஏ/சி ரூம், டி.வி., நீச்சல்குளம் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். சிரித்துக்கொண்டும் சிரிக்க வைத்துக்கொண்டும் இருக்கும் அருணால், மாதவனும் புவனாவும் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் அருணுக்கு பள்ளியில் நீச்சல் வகுப்பு இருக்கும். புவனா செய்கிறாளோ இல்லையோ… நீச்சல் உடை, டவல், ஹெட் கேப் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் புதன்கிழமை இரவே அருண் செய்துவிடுவான்.

அப்படித்தான் அன்று ஒரு புதன்கிழமை இரவு. காயத்ரி படித்துக்கொண்டிருக்க, அருண் ”அப்பா… நொச்சிக்குப்பத்துக்கு ‘க்’ வருமா?” என்று கேட்டான்.

”நிச்சயம் வரும்பா” என்று மாதவன் சொல்ல, அந்த ‘க்’-கைப் போட்டுவிட்டு நீச்சல் உடை எடுத்து வந்தான் அருண்.

”எல்லா நாளுமே வியாழக்கிழமையா இருந்தா நல்லா இருக்கும்பா” – அருண் சொல்ல, மாதவன் அவனைப் பார்த்தான். ”ஆமாப்பா… அன்னைக்குத்தான் கேம்ஸ், ஸ்விம்மிங்னு ஜாலியா இருக்கும்” என்றான் அருண்.

”சரி, போய்த் தூங்கு” என்றான் மாதவன்.

”கதை..?” என்றான் அருண்.

”நாளைக்குச் சொல்றேன்… அப்பா கொஞ்சம் எழுதணும்” என்ற மாதவனின் வார்த்தைகளைக் கேட்டு, சின்னதோர் ஏமாற்றத்தோடு தூங்கச் சென்றான் அருண்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் எல்லா வீட்டுப் பரபரப்போடு, அந்த வியாழக்கிழமை மாதவன் வீட்டுக்கும் வந்தது. புவனா, மகள் காயத்ரிக்குத் தலைவாரிவிட, மாதவன் டிபன் பாக்ஸில் லஞ்ச் பேக் செய்ய, ”அப்பா… நொச்சிக்குப்பத்துக்கு ‘க்’ வரும்தானே?” என்று அருண் மீண்டும் கேட்டான்.

”நிச்சயம் வரும்பா…” என்று மாதவன் சொல்லும்போதே ஸ்கூல் வேன் ஓட்டுநர் ஹார்ன் அடிக்க, அருணும் காயத்ரியும் ஸ்கூல் பேக்கைத் தூக்கிக்கொண்டு ஓட, லஞ்ச் பேக்கைத் தூக்கிக்கொண்டு புவனாவும் அவர்கள் பின்னாலேயே ஓடிப்போய் அவர்கள் கையில் கொடுத்துவிட்டு வந்தாள். வேன் கிளம்பியது.

‘9:30 மணிக்கெல்லாம் கிளம்பணும்’ என புவனாவிடம் சொல்லிவிட்டு, மாதவன் பேப்பர் படிக்க ஆரம்பித்தான். புவனாவும் டீ போட்டுக் கொடுத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள்.

தனக்கு வந்த இரண்டு அலைபேசி அழைப்புகளுக்கு காது கொடுத்துவிட்டு பிரஷ் செய்துகொண்டிருந்தான் மாதவன். குளித்துவிட்டு வந்த புவனா, டிபன் செய்வதற்காக சமையல் அறைக்குப் போக… மாதவன் ”நான் டிபன் வெளியே சாப்பிட்டுக்கிறேம்மா…” என்றான்.

”சரி… நீங்க குளிச்சிட்டு வாங்க… நானும் உங்க கூடவே வந்து பாபா கோயில்ல இறங்கிக்கிறேன். அப்புறம் வந்து ஏதாவது சாப்பிட்டுக்கிறேன்” என்று சொன்னாள்.

அப்போது மணி 9:15 இருக்கும். மாதவன் டவலை தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் போக முற்பட்டபோது புவனாவின் போன் ஒலித்தது. புவனா எடுத்து ‘யாருங்க..?’ எனக் கேட்டுவிட்டு… ‘அய்யய்யோ…’ எனக் கதற, மாதவன் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

‘அவளுடைய அப்பாவுக்கு ஏதாவது… ச்சே… ச்சே…’ என மாதவன் நினைப்பதற்குள், புவனா ”அய்யய்யோ… அருணோட டீச்சர்… குழந்தை நீச்சல்குளத்துல தண்ணி குடிச்சிட்டானாம்…” என்று கைகள் நடுங்க போனை மாதவனிடம் கொடுத்தாள்.

மாதவனிடம் பேசிய டீச்சர், ”நீச்சல்குளத்துல அருண் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டான். பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை. ஆனா, உடனே எஸ்.கே.ஹாஸ்பிட்டலுக்கு வாங்க” என்று சொல்ல, ”என் குழந்தைக்கு ஒண்ணும் ஆகலியே?” என்று மாதவன் கதறினான்.

”ஒண்ணும் இல்லை சார். ப்ளீஸ்… நீங்க வாங்க” என்ற வார்த்தைகளோடு போன் துண்டிக்கப்பட்டது.

மாதவனும் புவனாவும் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு பதறியடித்து விரைந்தனர். புவனா தனக்குத் தெரிந்த கடவுள்களின் பெயர்களையெல்லாம் அரற்றிக்கொண்டே வந்தாள். உடம்பெல்லாம் நடுங்கினாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் புவனாவின் போனுக்கு வந்த டீச்சரின் நம்பருக்கு டயல் செய்துகொண்டே போனான் மாதவன். அந்த போன் எடுக்கப்படவே இல்லை.

”போனை எடுக்கவே மாட்டேங்கிறாங்களே” என்று புவனாவின் கையைப் பிடித்துக் கலங்க… ”என் புள்ளைக்கு என்னங்க ஆச்சு?” என்று புவனா கதறினாள். மாதவன், அவளைத் தன் தோள்மீது சாய்த்துக்கொண்டான். அப்போது புவனாவின் போன் ஒலித்தது. மாதவன் அதை எடுத்து ‘ஹலோ…’ என்பதற்குள் ”சார்… நேரா வி.ஜே.ஹாஸ்பிட்டல் வந்துடுங்க” என்றார் டீச்சர்.

”அருணுக்கு என்ன ஆச்சு?” என்று பெருங்குரலில் மாதவன் கதறினான்.

”ப்ளீஸ் சார்… அங்கே வந்துடுங்க” என்று அந்தச் சாத்தானின் குரல் அழைப்பைத் துண்டித்தது.

ஆட்டோ டிரைவரிடம் ”வி.ஜே. ஹாஸ்பிட்டலுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டு, புவனாவிடம் ”குழந்தைக்கு என்னமோ ஆகியிருக்கும்மா” என்று சொல்ல, புவனா கதறி அழத் தொடங்கினாள். மாதவனின் உடலில் இருக்கும் ஒவ்வோர் அணுவும் வெடிப்பதுபோல் அதிர, ஆட்டோ வி.ஜே. ஹாஸ்பிட்டலுக்குச் சென்றது.

இருவரும் இறங்கி ரிசப்ஷனுக்கு ஓடி அருணின் பெயரையும் பள்ளியின் பெயரையும் சொல்ல… ”குழந்தைகளை இங்க அட்மிட் பண்ண மாட்டோம். பக்கத்து ரோட்டுல இருக்கிற வி.ஜே.ஹெல்த் சென்டருக்குப் போய்ப் பாருங்க” என்று பதில் வந்தது. உடனே இருவரும் அதே ஆட்டோவில் வி.ஜே. ஹெல்த் சென்டருக்கு விரைந்தனர்.

குழந்தைகள் வார்டு மூன்றாவது வார்டு எனத் தகவல் தெரியவர, லிஃப்ட் வேலை செய்யாததால் தரைத்தளத்துக்கும், மூன்றாவது மாடிக்கும் அருணைத் தேடித் தேடிக் கதறிய அந்த நிமிடங்கள், மாதவனின் மரணத்தின்போதுகூட மறக்க முடியாதது. அவர்களின் தவிப்பைப் புரிந்துகொண்ட ஒரு டாக்டர் ”கேஷ§வாலிட்டில பார்க்கலாம்… வாங்க” என்று போக, அவரைப் பின்தொடர்ந்த இருவரும் பதற்றத்தில் திசைமாறிப் போய்… மீண்டும் ஆஸ்பத்திரியைச் சுற்றி வந்தனர்.

அந்த டாக்டர் எதிரே வந்து மாதவனைக் கட்டிப்பிடித்துக்கொள்ள, கால்கள் தடுமாற மாதவன் அவர் மேல் சாய்ந்து நடக்க… கேஷ§வாலிட்டி வார்டில் இருந்த ஒரு திரை விலக்கப்பட்டது. அங்கே…. ”அய்யோ… அருண்..!” என்று புவனா அவன் மீது விழுந்து கதற, அறுந்துகிடக்கும் தன் குலக்கொழுந்தைப் பக்கத்தில் போய்ப் பார்க்கும் தைரியம் இல்லாமல் மாதவனும் கதறி வெடித்தான். உறவினர்களும் நண்பர்களும் வந்து சேர… மீடியா வந்து குழுமியது.

அனைத்து சடங்குகளும் முடிந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, கண்ணாடிப் பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருந்தான். இரவு முழுவதும் மாதவனும் புவனாவும் அவனையே பார்த்துக்கொண்டிருக்க… வந்தவர் வந்தனர்… சென்றவர் சென்றனர்… ‘எப்படி ஆச்சு?’ என்ற வந்தவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், ‘ஏன் ஆச்சு?’ என்ற தன் கேள்விக்குப் பதிலும் கிடைக்காமல் அருணையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் மாதவன்.

மறுநாள்…

தனக்கு 13 வயது இருக்கும்போது தன் அப்பாவுக்குக் கொள்ளிபோட்ட மாதவன், தன் 10 வயது மகனை மின் மயானத்தில் படுக்கவைத்து கற்பூரம் ஏற்றியது யார் வாழ்க்கையிலும் நடந்திருக்காது… நடக்கவும் கூடாது. 21-ம் நாள் புண்ணியாதானமும் முடிந்தது. ஒரு குடத்தில் எடுத்துவரப்பட்ட அருணின் அஸ்தியை, மாதவன் தன் மடியில் வைத்துக்கொள்ள… கார் காந்தி பீச்சை நோக்கிப் போனது. காந்தி சிலையைப் பார்த்தான் மாதவன். ‘அப்ப இவர் பேரு பீச் காந்தியா?’ எனக் கேட்பதற்கு அருண் இல்லை… அஸ்தியாகிவிட்டான். தன் மடியில் இருக்கும் குடத்தை இறுக அணைத்தபடி மாதவன் கதற, சுற்றி இருந்தவர்கள் ஆறுதல் சொல்ல முடியாமல் கண் கலங்கினர்.

கடலை நோக்கி நடந்தார்கள்… குடத்தை மூடியிருந்த துணி திறக்கப்பட… அருணின் எலும்புகள்… மாதவனின் கதறல் அந்தக் கடலை மௌனமாக்கிவிட்டது.

”டேய் அருண்… காந்தி பீச்சுடா…” என்று கத்திக்கொண்டே அஸ்தியைக் கடலில் வீசினான். அருணின் பெயரைச் சொல்லியபடி கடலையே பார்த்துக் கதறிக்கொண்டிருந்த மாதவனின் கால்களில் ஏதோ தட்டுப்பட்டது. ‘இது அருணின் எந்த எலும்பு?’ – மாதவனின் உடல் நடுங்கியது. அதை எடுத்துப் பார்க்கலாம் என்று குனிவதற்குள் அந்த அலை போய்விட்டது. மாதவன் கடலை வெறித்துப் பார்த்தான். ‘அந்த அலை எங்கே?’ அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்த அலை எங்கிருந்து வந்ததோ… அங்கேயே போய்விட்டது!

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *