Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சம்பாதிப்பு……!

 

சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன்.

சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து உருமாறி, படித்து…. திருமணத்தி;ற்குப் பிறகு அப்பன் சாவில் சந்தித்ததோடு சரி. இதோ உஸ்மான் சாலை ஒரம் நடந்து செல்ல…அருகில் ஊர்ந்து உரசியபடி ஒரு ஆடி கார் வந்து நிற்க….அதன் கண்ணாடிக் கதவு திறந்து…

“அங்கிள்! எங்கே போறீங்க ? ” குரலோடு எட்டிப் பார்த்த மஞ்சுவின் பளீர் முகம்.

“எ…ஏ….” இவர் அடையாளம் கண்டு துணுக்குற…

“வந்து வண்டியில் ஏறுங்க. பக்கத்தில்தான் எங்க வீடு.”

“அப்படியா ? ” என்று இவர் ஆச்சரியப்பட….அவள் அருகில் அமர்ந்திருந்த இரண்டு வயது ஆண் குழந்தை இவரைத் துறுதுறுவென்று பார்த்தான். அவனுக்கு அருகில் மஞ்சு கணவன் விதார்த்.

“ஏறுங்க சார் !” அவனும் புன்னகையுடன் அழைத்தான்.

மறுத்து ஒதுக்க முடியாத சந்திப்பு, அதனைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நெருக்கு. தவிர்க்க முடியாமல் ஏறினார்.

கதிரவனும் மஞ்சு தகப்பன் கணேசனும் ஒரே ஊர். பால்ய நண்பர்கள், பள்ளி, கல்லூரித் தோழர்கள். வேலை விவாகரத்தில் மட்டும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வேயொழிய உயிர் நண்பர்கள்.

கணேசன் பெரிய வேலையிலிருந்து ஓய்வு. அந்த வேலைக்குத் தகுந்தாற்போல் சம்பளம், பணம் காசுகள் சேர…லட்சக்கணக்கில் விளைநிலம், வீடு, வீட்டுமனைகள் என்று ஏகப்பட்டப் பணம்.

மஞ்சு, கணேசன் – சந்திரவதனா தம்பதிகளுக்கு ஒரே பெண். ஆசை ஆசையாய்ப் பெற்று செல்லமாய் வளர்க்கப்பட்டவள். பொறியியல் படிப்பு. இவர்கள் வசதி வாய்ப்புகளைவிட அதிக வசதிகள் கொண்ட சென்னை மாப்பிள்ளைக்குத் திருமணம். திருமணத்தி;ற்கு அடுத்த வாரமே கணேசன் மாரடைப்பால் திடீரென்று இறக்க….வந்து காரியங்கள் முடித்துவிட்டு அம்மாவோடு சென்னை சென்றவள். இதோ ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திடீர் சந்திப்பு.

கார் சட்டென்று வளைவில் திரும்பி…..ஐந்து நிமிடங்களில் ஒரு பத்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தது. மின்தூக்கியில் ஏறி… முதல் மாடியில் வீடு. உள்ளே பணக்காரத்தனம், சொகுசின் பிரதிப்பளிப்பு.

“எப்படி இருக்கீங்க அங்கிள் ? ” மஞ்சு சோபாவில் அமர்ந்ததும் எதிரில் அமர்ந்த கதிரைக் கேட்டாள். அவள் அருகில் விதார்த், குழந்தை.

“நல்லா இருக்கேம்மா.”

“காரைக்கால் சவுக்கியமா ? ”

“இருக்கும்மா. நீ எப்படி இருக்கே ? ”

“பார்த்தாத் தெரியலை. ரொம்ப நல்லா இருக்கேன்.”

“சந்தோசம். மாப்பிள்ளை வேலையில் இருக்காரா வியாபாரம் பண்றாரா ? ”

“வியாபாரமா !? நாங்க அமெரிக்காவில் இருக்கோம் அங்கிள்.” மஞ்சு முகத்தில் அத்தனை மலர்ச்சி.

“அமெரிக்காவிலா ?!…..” கேட்டவருக்குள் சின்னத் திடுக், துணுக்குறல்.

“ஆமாம் அங்கிள். அப்பா இறந்த அடுத்த மாசமே இவருக்கும், எனக்கும் அமெரிக்காவில் வேலை கிடைச்சுது போனோம். அதுக்கு அடுத்த வருசம் இவர் அப்பா அம்மா இறந்ததும்….. இங்கே வந்து சொத்தையெல்லாம் வித்து பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துட்டு அங்கேயே நிரந்தரக் குடியாகிட்டோம். இந்த கட்டிடம் மட்டும்தான் இங்கே எங்க அசையாச் சொத்து. இதில் வர்ற வாடகை, வருமானமெல்லாம் மாசா மாசம் வங்கிக்குப் போகும். நாங்க வருசம் ஒரு தடவை வந்து பத்து நாள் இருந்து போவோம். இந்த வருசம் வந்திருக்கோம்.” விலாவாரியாகச் சொன்னாள்.

“அப்படியா ?!” கதிரவன் சந்தோசப்பட்டார்.

“உன் அம்மா எங்கே மஞ்சு ? ” விசாரித்தார்.

“இங்கேதான் இருக்காங்க.”

“இங்கேதான்னா…?…”

“முதியோர் இல்லத்தில்.”

“அங்கேயா ?!” அவருக்குள் அதிர்ச்சி வந்து உலுக்கியது.

“ஆமாம் அங்கிள். அமெரிக்காவில் வேலையில் உள்ளவர்களுக்குத்தான் குடியுரிமை. மத்தவங்களுக்குக் கிடையாது. அதனால் அம்மா இங்கேயே இருக்காங்க.”

“நல்ல அருமையான இடம். அத்தை இங்கே தனிமையில் கிடந்து வாடாமல் அங்கே நாலு பேரோடு பேசி பழகி நல்ல வசதியாய் இருக்காங்க. நாங்க விடுப்பு நாளில் வாரம் ஒரு தடவை தொலைபேசியில் அங்கிருந்து பேசுவோம். இங்கே வந்ததும் போய் பார்த்து வருவோம். அப்படித்தான் இப்போ போய்த் திரும்பினோம்.” விதார்த்; சொன்னான்.

‘ வயதான காலத்தில் பெற்றவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டில் வாசம், சம்பாத்தியம், சொகுசு வாழ்க்கை. என்ன கொடுமை இது.! ‘ கதிரவனால் ஜீரணிக்க முடியவில்லை.. கசப்பாய் இருந்தது.

ஏழை…. தன் பணத்தேவை, முன்னேற்றதிற்காக அம்மா அப்பா, உறவுகளை உதறி வெளிநாடுகளில் போய் வேலை, குடியுரிமை பெறுவது….ஒரளவிற்குச் சரி, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அதுவேத் தவறு.

இவர்களுக்குப் புகுந்த, பிறந்த வீட்டுச் சொத்துக்களே ஒரு தலைமுறைக்கு மேல் உட்கார்ந்து தின்னும் அளவிற்கு உயரம். சம்பாத்தியம் ஆண் இலக்கணம், அத்தியாவசியமென்றால் நல்ல தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பளிக்கலாம். அது தொடங்க விருப்பமில்லை, படித்தப் படிப்பு வீணாகக் கூடாது, சோம்பேறியாக இருக்கக்கூடாது என்றால்…..சென்னைக் கம்பெனிகளிலேயே இவர்கள் வேலை தேடி…பெற்றவர்களுடன் குடும்பமாக இருந்து அழகு வாழ்க்கை வாழலாம். அதை விடுத்து எங்களுக்கு அமெரிக்காவில் வேலை, அங்கு சம்பாத்தியம், குடியுரிமை என்றால்….இவர்கள் சம்பாத்தியம் ஏன், எதற்கு…?

“என்ன அங்கிள் யோசனை….? ” மஞ்சுளா அவர் நினைவைக் கலைத்தாள்.

“எனக்குப் பிடிக்கலை மஞ்சு.” கதிரவன் வெளிப்படையாகவே தன் மனதைத் திறந்தார்.

“எது அங்கிள் ? ” இவள் துணுக்குற்று அவரைப் பார்த்தாள்.

“நீங்க பெத்தவங்களை உதறித் தள்ளி அமெரிக்காவில் இருந்தது, இருக்கிறது.”

“என்ன அங்கிள் சொல்றீங்க ?! ” திடுக்கிட்டாள்.

“இந்த வேலையை ஒரு ஏழை செய்ஞ்சா ஓரளவுக்கு ஏத்துக்கலாம். ஆனா நீங்க செய்ததை ஏத்துக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது.”

“ஏன் அங்கிள் ?! ” அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“உங்களுக்கு விலாவாரியாவே சொல்றேன். உங்களுக்குப் பணத்தேவை கிடையாது. தேவை….. படிப்பு வீணாகக்கூடாது, சோம்பேறியாய் இருக்க விருப்பமில்லேன்னா….தொழில் தொடங்கலாம், இல்லே… இங்கேயே வேலைக்குப் போய் சம்பாதித்து வயசான பெத்தவங்களைப் பராமரிச்சி சந்தோசமா இருக்கலாம். அதை விட்டுட்டு நீங்க அமெரிக்காவில் இருந்து லட்சம் லட்சமாய்ச் சம்பாத்திப்பது பணம் மேல் பணம் அடுக்கும் பணி. தேவைக்கு அதிகப் பணங்கள் வெற்றுக் காகிதங்கள் என்பது சத்தியப்பூர்வமான உண்மை. அந்த வெற்றுக்காகிதங்களைச் சேர்க்க வயசான அம்மா அப்பாக்களை தனிமையில் தவிக்க விட்டுட்டுப் போறது பெரிய பாவம். தள்ளாடும் வயசுப் பெத்தவங்களைத்தான் புள்ளைங்க தங்கத் தாம்பளத்தில் வைச்சுத் தாங்கனும். அன்பு, அனுசரணையாய் இருந்து காப்பாத்தி அவர்களுக்கு நல்லது கெட்டது செய்யனும். அதை மறந்து….இவர்களை தவிக்க விட்டுவிட்டு அல்லது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டில் போய் உட்கார்ந்து அவர்கள் செத்ததும் பறந்து வந்து ஐஸ் பெட்டியில் இருக்கும் மரக்கட்டைகளை எடுத்து சுடுகாடுகளில் எரித்து, புதைத்து….அதுக்குச் சடங்கு, சாங்கித்தியம், அமாவாசை, திதியெல்லாம் செய்யிறது எந்த விதத்தில் நியாயம், சரி. அது உங்களுக்குத் திருப்தியாய் இருந்தாலும் அதை அவர்கள் ஆத்மா ஏத்துக்குமா ?!” கொட்டினார்.

“அங்கிள்! நீங்க சொல்றது தப்பு. உங்க வயசுக்குத் தக்கப்படி அம்மா அப்பாக்களுக்கு ஆரதவாய்ப் பேசுறீங்க. அப்படியே பிறந்த எங்க சார்பாகவும் கொஞ்சம் யோசியுங்க. நாங்க அம்மா அப்பா, அவர்களுக்குச் செய்யவேண்டியதை மறக்கலை. அதை எங்க சார்பா முதியோர் இல்லம் வழியாய்ச் செய்ய வைத்து பறக்கிறோம். இது எந்த விதத்தில் தப்பு, தவறு ? உங்க யோசனைப்படி இவுங்களோட இருந்து வாழனும் என்கிறதுக்காக எங்க படிப்பு, வேலை, சம்பாத்தியம், சாமார்த்தியம், சந்தோசம், புள்ளைங்க எதிர்காலத்தையெல்லாம் பாழாக்கனுமா.? ” மடக்கினாள்.

“சரியான கேள்வி, பார்வை மஞ்சு. இதுக்கு ஒரு வரி பதில். மனசு இருந்தால் மார்க்கமுண்டு.” நிறுத்தினார்.

“புரியலை…?! ” கணவன் மனைவி இருவருமே அவரைக் குழப்பமாய்ப் பார்த்தார்கள்.

“உங்க குழந்தையை நீங்க பராமரிக்கிறதுக்கும் மத்தவங்க பராமரிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. பெத்தவங்களை நீங்க முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு அந்த வேலையைத்தான் செய்யுறீங்க. உங்க தனிக்குடித்தனம், பணம் சம்பாதிப்பு, சந்தோசத்துகெல்லாம் தடையாய் இருக்கிற பெற்றோர்களை அவுங்க தவிப்பு, தாகம், கஷ்டம் தெரியாமல் இப்படி ஒதுக்கி, தள்ளி வைச்சு வாழ்றீங்க. பெத்தவங்க….. எப்படி இருந்து, என்ன கஷ்டப்பட்டாலும்….ஐயோ ! புள்ளைங்க இப்படி பண்ணிட்டேன்னு சபிக்க மாட்டாங்க, சாபம் விடமாட்டாங்க. மாறாய்….நாம கஷ்டப்பட்டாலும் நம்ம புள்ளைங்க நல்லா இருக்கட்டும்ன்னுதான் வேண்டுவாங்க, விரும்புவாங்க. அவ்வளவு பெரிய உள்ளங்கள் உள்ள பெத்தவங்களை உங்க சந்தோசம், விருப்பு, வெறுப்பு, ஆடம்பரங்களுக்காக தனிமையில் தவிக்க விடுறதும், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும் எந்தவிதத்தில் நியாயம் ? எதுக்கும் எதிர்வினை உண்டு. இந்த வினை உங்களைத் தாக்கும். உங்க மகன் உங்களை இப்படி உதறி தள்ளும்போது அன்னைக்குத் தெரியும் இன்னைக்கு உங்க பெத்தவங்க அனுபவிக்கும் வலி, வருத்தம், கஷ்டம். விதைச்சதைத்தான் மஞ்சு எல்லாரும் அறுத்திருக்காங்க. புதுசா எதையும் அறுக்கலை. நல்லதை விதைச்சா நல்லதை அறுக்கலாம். கெட்டதை விதைச்சா…. அது விதி இல்லே. உங்க சம்பாதிப்பு. வர்றேன்.” எழுந்தார் கதிரவன்.

விதார்த், மஞ்சு….இருவரும் அப்படியே அரண்டு, சுருண்டு சிலையானார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு... சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க...! ‘‘ மெல்ல அழைத்தாள் என் மனைவி இந்திரா. ‘‘ என்ன...?‘‘ பக்கத்தில் வந்தவளைத் திரும்பி பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
எதிர் வீட்டு எதிரி, எமன் வடிவில் தன் கல்லூரி வகுப்பறைக்கு வாத்தியாராக இப்படி எதிரில் நிற்பாரென்று வருண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'நிச்சயம் இந்த ஆள் எதிரி, எமன்தான்.!! சந்தேகமே இல்லை. அதிலும் முக்கியப்பாடத்திற்கு ஆசிரியர். தியரில் நன்றாக எழுதி தப்பித்தாலும் செய்முறை வகுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! " பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான் பரமசிவம். வயசு நாற்பது. சாய்மான நாற்காலியில் சவகாசமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்தவர் "ஏன்டா ?" - ரொம்ப உரிமையாய்க் கேட்டார். தன் தகுதிக்குக் ...
மேலும் கதையை படிக்க...
நெடுநேரம் பேசாமல் எதிரும் புதிருமாய் அமர்ந்திருக்கும் ராஜலட்சுமி, ஹசீனாபேகத்திற்குள் 'இந்த சிக்கலை எப்படித் தீர்க்க...? ' என்பதில் தீவிர யோசனை. மூளைக்குள் வண்டு குடைச்சல். ராஜலட்சுமியின் மகன் ரகோத் ஞாயிறு விடுமுறை நாளான இன்று காலையில்தான் தயங்கித் தயங்கி..... ''அம்மா...! '' என்று ...
மேலும் கதையை படிக்க...
கூடத்து சோபாவில் தனித்து அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்கு இரண்டு நாட்களாக மனசு சரி இல்லை. காரணம், நிர்மல் விமலுக்குள் சரியான பேச்சு வார்த்தைகள் இல்லை. மனமுறிவு!. அவர்கள்; இவர் மகன்கள். நிர்மல் மூத்தவன். விமல் அவனைவிட மூன்று வயது இளையவன். இருவருக்கும் தற்போது வாலிப ...
மேலும் கதையை படிக்க...
அவர்கள் அடிமைகள் அல்ல….
பண்பு…!
காவல் நிலையம்…!
நிறம் மாறும் நிஜங்கள்…!
வேண்டாம் இந்த விபரீதம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)