சமர்ப்பனம்

 

“ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா…எம்மவனை காப்பாத்துங்கய்யா…’வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்’னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு 200அடி உயர செல்போன் டவர்ல ஏறி கீழே விழுந்து சாகப்போறேன்னு அடம் பண்றான்…உடனே கிளம்பி வாங்கய்யா”பதட்டத்தில் அதற்கு மேல் வார்த்தை வராமல் நாக்கு குழற இணைப்பை துண்டித்தாள் சாரதா.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்பாட்டில் இருந்தது போலீஸ்.தீயணைப்பு வீரர்கள் டவரைச்சுற்றி வலைவிரித்து வாகாக நின்றார்கள்.

குதிப்பதிலேயே குறியாய் நின்றவனிடம் …கூம்புக்குழாய் வழியே குசலம் விசாரித்துக்கொணடிருந்தார் இன்ஸ்பெக்டர்.அவனோ வீம்பாய் வாதாடிக்கொண்டிருந்தான்.

அவனது கவனத்தை போலீஸ் தன்பக்கம் திருப்பி வாதிட்டுக்கொண்டிருக்க…யாருக்கும் தெரியாமல் டவரில் ஏறிக்கொண்டிருந்தார் தீயணைப்புத்துறை அதிகாரி சண்முகப்பாண்டி.

கீழே கடலென திரண்டிருக்கும் கூட்டம்.கேமராங்களில் சுட்டுக்கொண்டிருந்த மீடியா உலகம்…போலீஸ்…தீயணைப்புத்துறை வீரர்கள்..தலைவிரி கோலமாக தரையில் புரளும் தனது தாய்…வினாடிக்கு வினாடி அசட்டுத்தனம் மூளையில் மோதி மோதி அவனை அலைகழித்தது.

தவளை என நினைத்து கூழாங்கல்லை விழுங்கிய பாம்பாய்..தன்னை உணர்ந்தான்.விழுங்கவும் விருப்பமில்லை…துப்பவும் திராணியில்லை.விக்கிச்சாவதை விட விழுங்கிச்சாகலாம் என முடிவெடுத்துவிட்டான்.

ஆயிரம் தலைகள் அன்னாந்து நோக்குகின்றன.கடமையே கண்ணாக சில தலைகள்..ஒரு உயிர் ஊசலாட்டத்தில் இருக்கும்போதும் அதை கொண்டாட்டமாக நினைத்து குதூகலித்து கூச்சலிடும் சிலபேர்கள்….குதிப்பானா ?..மாட்டானா?..சாவானா.?..பிழைப்பானா..?என்று திடீர் பந்தயங்களில் ஈடுபடும் பணப்பேய்களின் உன்னிப்பான அவதானிப்பு..இவற்றிக்கு மத்தியில் ஒற்றை மனுசியாய் ‘என்னை அனாதை ஆக்கிடாதடா..’என கூம்புக்குழாயில் ஒப்பாரிபாடும் தாய்..அத்தனையையும் மூளையில் பதித்துக்கொண்டு தயக்கத்தோடு கண்களை மூடி நீண்ட பெருமூச்சை வெளியிட்டான்.

தீடீரென முதுகில் யாரோ கைகொடுத்து தள்ள வீறிட்டு அலறியபடியே கீழ்நோக்கி விழுந்தான்.

அவனுக்கு தெரியாமல் பின்புறமாக மேலே ஏறிவந்த தீயணைப்பு வீரர் சண்முகபாண்டியன் தான் கீழே வலையை விரித்து காத்திருக்கும் தனது சகாக்களுக்கு சமிக்சை கொடுத்தபடி அவனை இழுத்துக்கொண்டு கீழே குதித்தார்.

“ஏம்பா..என்னாச்சு..ராசா.!..ஏன்யா பெத்த வயிரை இப்படி பதற வக்கிற..இன்னிக்கி வரைக்கும் நாயா உழைச்சி உனக்கு கஞ்சி ஊத்தி..ஓடா தேய்ஞ்சி உனக்கு கல்வி கொடுத்த பாவிக்கு நீ காட்டுற விசுவாசம் இதுதானா..?.இப்பவோ செத்தையோன்னு உயிரை இழுத்து புடிச்சிகிட்டு கெடக்குறவ ஏதோ சொல்லிட்டேன்னு சாவ துணிஞ்சியே”கட்டிக்கொண்டு தாய் அழுதாள்.

“ஏன்யா..செத்துப்போறதுக்கு செல்போன் டவருதான் கிடைச்சுதா..உனக்கு.?..மந்திரி பந்தோபத்துக்கு வந்த மாதிரி மண்டையை பொளக்குற வெயில்ல மல்லுக்கு நிக்க வச்சுட்டியேய்யா…உங்களுக்கு படிப்புக்கேத்த வேலை கிடைக்கலேங்கறது குறை…படிச்ச படிப்பு என்ன புத்தியை கொடுத்திருக்கு…கழைக்கூத்தாடி கூட இந்த ரெண்டுமணி நேரத்துல ஆயிரம் பேரை சந்தோசப்படுத்தி அதுல அரை வயிறு நிறைஞ்சி அவனும் சந்தோசப்பட்டிருப்பான்.!..எல்லாம் எங்க தலை எழுத்துய்யா….”முடியில்லாத வழுக்கையை பரபரவென சொறிந்துவிட்டு..தொப்பியை கவிழ்த்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர்.

“தம்பி.!..ஒவ்வொரு மனுசனும் இயலாமையால விரக்திநிலைக்கு தள்ளப்படும்போது தான் அவனுக்குள்ள அமுங்கி கிடக்குற மகத்தான சக்தி வெளிப்படுது…அதை கண்டுணற அவன் உயிர்போட இருந்தாகனும்..அதை நீ உணர்ந்தியோ இல்லையோ…நான் உணர்ந்தேன்.!”

“இருபது அடி தென்னைமரத்துல ஏறுறதே எல்லாராலயும் முடியாத காரியம்…மேலிருந்து கீழே பார்த்தால் தலை கிறுகிறுக்கும்..நீயோ எந்த வித சேப்டி வெப்பனும் இல்லாம இருநூறு அடி ஏறினதுமில்லாம அங்கேயே நின்னு ரெண்டுமணி நேரம் எங்களுக்கு தண்ணீ காட்டியிருக்க…அது தண்டனைக்குரிய குற்றம் தான்..ஆனா அதுதான் எதை காரணம் காட்டி நீ சாகத்துணிச்சியோ அதுக்கே தீர்வாகப்போகுது…போ போயி…இப்ப இன்ஸ்பெக்டரோட விசாரணைக்கு ஒத்துழை..பிறகு என்னை வந்து பார்.!”என்றார் தீயணைப்புத்துறை அதிகாரி.

அந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு போலீஸ் வாகனம் புறப்பட..கூடியிருந்த கூட்டமும் கலைந்து சென்றது.

“ஐயா..எம்புள்ளைய காப்பாத்துன நீங்க மவராசனா இருக்கனும்யா..!”என்றாள் சாரதா.

“நன்றிம்மா…உங்க பையனை என்னை வந்து பார்க்கச்சொல்லுங்கம்மா…அடுத்த மாசம் நான் ஓய்வு பெறப்போறேன்..எனக்கு பிறகு வாரிசு யாரையாவது நான் இந்த துறைக்கு அர்ப்பனிக்கனும்..எனக்கு குழந்தையே இல்ல…உங்க பிள்ளைகிட்ட..அறிவு இருக்கு ….படிப்பு இருக்கு..அதுக்கு மேலாக அசட்டு துணிச்சல் இருக்கு..அவனை எனக்காக இல்ல..இந்த நாட்டுக்காக கொடுங்கம்மா…அவனோட அசட்டுத்தனத்தை போக்கி நேர்சீராக்கி நல்ல வீரனா உருவாக்கறேன்.அவன் கனவுப்படி அரசாங்க உத்தியோகமும் கிடைச்சுடும்..என்னம்மா சொல்றீங்க.!?”என்றார் தீயணைப்புத்துறை அதிகாரி.

இரண்டு மணிநேரம் தான் பெற்ற பதற்ற அவஸ்தையை இனி காலம் முழுவதும் தனக்கு மருமகளாக வருபவள் படவேண்டுமே என்ற பாமரத்தாயின் மனம் வெதும்பியது.ஆனாலும் மனதின் வெகுளித்தனத்தை மண்ணின் வீரம் வென்றது.

தாயுள்ளம் பிரதியுபகாரமாக கண்ணீரை உதிர்ப்பதை தவிர வேறெதை செய்துவிடமுடியும்.!உச்சபட்சமாக இருகரம் கூப்பினாள் சாரதா.

வேள்வியில் மட்டும் தானா…இதோ விரக்தியிலும் ஒரு வீரன் பிறந்துவிட்டான்.!

பிரசுரம்:ஜுலை31_ஆகஸ்டு6,2009 பாக்யா வாரஇதழ் 

தொடர்புடைய சிறுகதைகள்
"நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்கீங்க...ஆனா இவ்வளவு காலமா இல்லாம இப்ப ஊர்வம்பு வாசல்தேடி வந்து நிக்குது...அக்கம் பக்கம் இளக்காரமா பார்க்கறாங்க ...என்ன பண்ணீங்க ...
மேலும் கதையை படிக்க...
"சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு"இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன். வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள் அஞ்சலி. கோடை விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரபல சர்க்கஸ் கலைநிகழ்ச்சியை காண செல்கிறார்கள் மனோகரன் குடும்பத்தினர். மனோகரனுக்கு நகரின் பல ...
மேலும் கதையை படிக்க...
"வளரு..வளரு..!".. குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை. அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்புபவன்,இரவு வீடு திரும்புகையில் ...ஒருநாள் கூட இப்படி அன்பொழுக கூப்பிட்டதில்லை. யோசனையோடு தாழ்ப்பாளை விலக்கியவள் "என்ன மாமா.!..இந்நேரமே திரும்பிட்ட..பொழப்புக்கு போகலியா.?"என்றாள். "இல்ல..வளர்,பொழப்புக்குதான் போனேன்.தலைவரு தர்மலிங்கம் ...
மேலும் கதையை படிக்க...
அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான். அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது. அவனுக்கு அந்த சுவை புதிது...அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது...ஆனால் அது நியாயமான பசி ...
மேலும் கதையை படிக்க...
"மாப்ளே.!நாளைக்கு மாசி மகம்டா...திருவிழாவுக்கு கோவில்ல நேர்த்திக்கடன் கிடா வெட்டுவாங்கடா...நம்ம ஊர் தலைகட்டுக்கு வீட்டுக்கு நூறுகிராம் கிடைச்சாலே பெருசு...பத்துநாள் விரதத்தை எலும்பு உறிஞ்சாம எப்படிடா முடிக்கறது..?..முந்நூற்றி எண்பது ரூவா விக்குதேடா ஆட்டுக்கறி..."கோவில் திண்டில் ஆரம்பித்தான் கண்ணன். "ஒங்க..கதை அரைகிலோ,முக்கா கிலோவுல முடிஞ்சிடும்டா,என் கதைய கேளு ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவா இப்படி?
பசி படுத்தும் பாடு
‘பலான’எந்திரம்
நாளையும் ஓர் புது வரவு
கறிச்சோறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)