Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சதுரத்தின் விளிம்பில்

 

மனோகர் நிறைய குடித்திருந்தான்.ஆனாலும் தள்ளாட்டமில்லாத நடை.அவனது இடது கை ஆட்காட்டி விரலை பிடித்தபடி நடைபயின்ற அழகான ஐந்து வயது பெண் குழந்தை அவனது மகள் மாலினி.எம்.சி.ரோட்டில் ஓ.ஏ.ஆர்.திரையரங்கை கடந்து ஆம்பூர் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.சார்மினார் ஓட்டலை கடக்கும் போது தான் நான் அவர்களுக்கு முன்பாய் எதிர்ப்பட்டேன்.என்னை கண்டதும் நின்றான்.

“முரளி…”.

நின்றேன்.மென்மையான சிரிப்பொன்றை உதிர்த்தான்.பற்களில் புகையிலைக்கறை.உற்றுப் பார்த்தேன்.

“டேய் மனோ…”.அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப்போயிருந்தான்.கன்னங்கள் ஒட்டிப்போய் கண்களுக்கு கீழே கருவளையமும் ‘டொக்கு’விழுந்த கண்களுமாய் மெலிந்து நின்றிருந்தான்.அவனது வலது கையை பற்றிக்கொண்டேன்.மனசுக்குள் லேசான வருத்த ரேகை இழையோட ஆரம்பித்தது.உள்ளே அவன் போட்டிருந்தது என் நாசிக்குள் நுழைந்து போதைக்குள் என்னை அழைத்தது.

ஆறு வருடங்களுக்கு முன்பு அவனது திருமணத்தில் வைத்து பார்த்தது.சிவந்து கொழுக்மொழுக்காய் சிக்கென்று இருந்தவன்.குடும்பத்தில் ஏதோ பிரச்சினையென்று மட்டும் கேள்விப்பட்டிருந்தேன். விபரங்கள் அரசல் புரசல் தான்.சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்படவேயில்லை.இன்று அகஸ்மாத்தாய் இது நிகழ்ந்திருக்கிறது.

“குழந்தை யார்டா ?” கேட்டேன்.

“என் பொண்ணு தான்.மாலினி அங்க்கிளுக்கு ஹாய் சொல்லு”.மாலினி அவனது கால்சராயை கைகளால் பிடித்தபடி பின்னால் நகர்ந்து ஒளிந்து கொண்டாள்.

“ஹாய் மாலு” என்றேன் நான்.மெதுவாக எட்டிப்பார்த்தாள்.லேசான புன்சிரிப்பு.போதுமானதான அங்கீகாரம்.சில விநாடிகள் கடந்தன.

“டேய்…ஒரு கட்டிங் லைட்டா… வாங்கி குடுடா” கெஞ்சலான கோரிக்கை.ஏற்கனவே நிறைய குடித்திருக்கிறான்.யோசித்தேன்.

“வேணாம்டா.மொதல்லியே ரொம்ப போட்டுட்ட மாதிரி இருக்கு.ஒடம்புக்கு ஆகாது”.சொன்னேன். கேட்கவில்லை.

சார்மினாருக்குள் நுழைந்தோம்.ஜமில் பாய் வாய் நிறைய புன்னகையோடு வந்து நின்றார்.

“பாய்…நெப்போலியன் ஒரு குவாட்டர் ”.சொன்னான்.

ஜமில் பாய் என்னை பார்த்தார்.நான் தலையசைத்து ஆமோதித்தேன்.

“சார் அந்த ரூமுக்குள்ளே போயிருங்க”.பேமிலி ரூமை காட்டினார்.எழுந்து உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம்.பின்னாலேயே வந்த ஜமில் பாய் பணத்தை வாங்கிக்கொண்டு போகும் போது மாலினியின் கன்னத்தை கைவிரல்களால் கூம்பு போல் இழுத்து விரல்களை தன் உதட்டில் பதித்து ‘உச் ’சென்று முத்தித்தார்.

குவாட்டர் வந்தது.ஜமில் பாய் மாலினியை வெளியே அழைத்து செல்வதாய் கூறினார்.ஆனால் அவள் சுணங்கினாள்.அவர் சிரித்தபடி வெளியே சென்றுவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் சூடான சில்லி சிக்கன் கொண்டு வந்தார்.சுக்கா பிரையை மாலினிக்காக ஸ்பெஷலாய் எலும்புகளை நீக்கி வைத்திருந்தார்.குழந்தை அரக்க பரக்க சூழலில் ஒன்றாது தனித்திருந்தது.மனோகரன் ‘ரா ’வாக குவாட்டரையும் உள்ளே செலுத்தினான்.

“டேய்…இன்னும் கொஞ்சம்…”.தெளிவாய் இருந்தான்.

“போதும்டா”

“நீ கூட போட்டுக்கல.டேய் டேய்…”கெஞ்சினான்.மாலினி அவனை ஏறிட்டு பார்த்தாள்.பின்பு திரும்பி என்னை பார்த்தாள்.

“நீ சாப்பிடும்மா”. தட்டை அவள் பக்கமாய் நகர்த்தி வைத்தேன்.

ஜமில் பாய் வந்தார்.பணத்தை வாங்கும் போதே என்னை ஒரு மாதிரியாய் பார்ப்பதாய் உணர்ந்தேன்.ஆனால் அந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.வேகமாய் திரும்பி வந்தார்.

“சார் வேற எதாவது…”.கேட்டார்.

“அப்புறம் சொல்றேன்”என்றேன்.

பாட்டிலில் பாதியை நியாயமாய் தனது கிளாஸில் ஊற்றிக்கொண்டு மீதியை என்னிடம் தந்தான். மடக்கென்று ஒரே மூச்சில் இழுத்துக்கொண்டவன் பாட்டிலின் மீது கண்களை பதித்திருந்தான்.அவன் கண்களில் கெஞ்சலிருந்தது.சுதாரிப்பதற்குள் மீதியையும் எடுத்து குடித்துவிட்டான்.தடுக்க முயன்று தோற்றேன்.

சிக்கன் பிரியாணி வந்தது.இரண்டு கவளம் சாப்பிட்டான்.

“போதும்டா.முடியல..”.எழுந்தான்.

மாலினி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

”டேய் கொழந்த சாப்பிடுது.ஒக்காரு”.நானும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

மறுபடியும் எழுந்து நின்றான்.மாலினியும் எழுந்து கொண்டாள்.நானும் எழுந்து கொண்டேன்.

ஜமில் பாய் வந்தார்.

“என்ன சார்…அப்பிடியே இருக்கு.நல்லால்லையா ?”.கேட்டார்.

“இல்லல்ல.முடியல.அதான்”.பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.ஜமில் பாய் மாலினிக்கு கையசைத்து விடை கொடுத்தார்.டிரேட் மார்க் சிரிப்பு முகத்தில்.

லேசான தள்ளாட்டம் தெரிந்தது இப்போது மனோகரின் நடையில்.

“டேய் முரளி…அவ போனதிலிருந்து என்னால முடியலைடா…”குழறினான்.

அப்போது தான் என் மண்டைக்குள் உரைத்தது.ஆமாம் அவனது மனைவி என்னவானாள்.ஏன் இவன் இப்படியாகி போயிருக்கிறான்.

கேட்டேன்.

பதில் சொல்லும் முன்னமேயே ‘உவேக் ’கென்று வாந்தியெடுத்தான்.சுதாரித்து கொண்டவன்,

“எவங்கூடவோ போயிட்டாடா முரளி.இவள வேற விட்டுட்டு போயிட்டா…”.

மாலினியின் மருண்ட கண்களில் மேலும் மருட்சி அதிகரித்திருந்தது.தொலைவிலேயே நின்றிருந்தாள்.

வாட்டர் பாக்கிட் வாங்கி வாய்க்குள் பீய்ச்சி அடித்து கொப்புளித்தான்.பின்பு இரண்டு மிடறு விழுங்கினான்.மாலினி அவன் வீசியெறிந்த காலியான வாட்டர் பாக்கிட்டை பார்த்து கொண்டிருந்தாள்.

“டேய் வேலூருக்கு போவனும்.பஸ் ஏத்திடு”.நடந்தோம் நாங்கள்.எனக்குள் எழுந்த கேள்வியை கேட்டு வைத்தேன்.

“ராதாவை கலியாணம் பண்ணிண்ணு இருந்தா நல்லாருந்திருக்கும்ல”.

பள்ளி நாட்களில் அவன் காதலித்த…காதலித்ததாய் நாங்கள் நினைத்திருந்த ராதாவை பற்றி தான் கேட்டேன்.போதையிலும் லேசாய் சிரித்தான்.’உச் ‘ கொட்டினான்.

வேலூர் பேருந்து வந்தது.ஏற்றிவிட்டேன்.கையசைத்து விடை பெற்றுக்கொண்டான்.மாலினியும் திரும்பி பார்த்தாள்.சிரிப்பு.’ஊஹூம்’ என்றது.

வாரங்கள் கடந்து ஒரு நாள்.பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்.மனோகரனின் தம்பி மாதவன் வந்தான்.இருவரும் ஒரே வகுப்பில் படித்ததால் நண்பர்களானவர்கள்.கூடவே மாலினி.

“வணக்கம் மச்சி…”என்றான்.

“டேய் மாதவா…எங்கடா ஆளயே காணோம்”.

மாலினி இவனை பார்த்ததும் மாதவனின் கால்சராயை பிடித்துக்கொண்டு அவனுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.மாதவன் என்னிடம்,

”மனோகரு பொண்ணுடா”என்றான்.கூடவே ”மாலி அங்க்கிளுக்கு விஷ் பண்ணு”என்றான்.மாலினி மேலும் அதிகமாக அவனுக்கு பின்னால் பதுங்கினாள்.

“எங்கடா மனோ?போன மாசம் வந்திருந்த மாதிரி இர்ந்திச்சி”கேட்டேன்.

அமைதியாய் இருந்தான்.அவனது கண்களின் ஓரங்கள் பனிக்க ஆரம்பித்தன.

“என்னடா…?”

“இல்ல…போன மாசம் இங்க என் வீட்டுக்கு வந்துட்டு போனவன்.ஓவரா குடிச்சிட்டு போயி சேர்ந்துட்டான்”.வானத்தை நோக்கி கைகளால் சைகை செய்தான்.

எனக்குள் ஏதோ ‘ஜிவ்’வென்று கிளம்பி முகத்தின் மீது வந்து படர்ந்து பரவியது.படபடத்தது மனது.அன்றுதானா…?அன்றுதானா…? கேள்வி மனதுள் குடைந்தெடுத்தது.எதேச்சையாய் மாலினியின் மீது என் பார்வை படிந்தது.அவள் என்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹாய் மாலு…”.வார்த்தைகள் வெளிவரவில்லை.தொண்டையில் சிக்கியது எனக்கு.

“டேய் மச்சி…வேலூரு பஸ் வந்திடுச்சி.கெளம்பறேன்”.மாதவன் மாலினியை தோளில் சார்த்திக்கொண்டு பேருந்தில் ஏறிக்கொண்டான்.

“வர்ரேன் டா…”.கையசைத்தான்.

நான் மாலினியை பார்த்தேன்.அவளும் என்னை பார்த்தாள்.அவளது முகத்தில் லேசான சிரிப்பு.அது பூவாய் மலர்ந்து புதிதான மணத்தோடு என்னை சூழ ஆரம்பிக்கிறது.

நான் உள்ளுக்குள் ‘ஓ’வென்று கதறியழ ஆரம்பித்தேன்.

பேருந்து வேலூரை நோக்கி நகரத்துவங்கியது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில் தான் சந்தித்தேன்.ஏற்கனவே பத்து பேர் நின்றிருந்த இடத்தில் இடம் தேடி எதேச்சையாக புஷ்பம்மா நின்றிருந்த இடத்தில் இடம் பிடித்து நின்றுகொண்டேன்.ஐந்து ...
மேலும் கதையை படிக்க...
"ஏய் கெளவி அந்த சக்கரமில்லு பாய்க்கு தோப்ப உட்டு கீது.பத்து மணிக்கு பாய் வந்து தோப்ப பாக்கப்போறானாம்.எங்கியும் பூடாதே”.சொல்லிட்டு போயிட்டாரு மாணிக்கம். கெளவி மாணிக்கத்துக்கு தூரத்து சொந்தம் தான்.ஊருல நாயக்கர்களும் மந்திரிமார்களும் ரொம்பப்பேர் இருந்தாங்க.எல்லாம் ஆண்டு அனுபவிச்சி ஆய்ஞ்சி ஓய்ஞ்சிப்போன கட்டைங்க.இப்போ எங்க ...
மேலும் கதையை படிக்க...
பிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான கயிறு.கயிறு காற்றில் லேசாக அசைந்தது என் கழுத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேன் என்பதாய். உள்ளங்கைகளின் மேல் தலை வைத்து இடது காலின் ...
மேலும் கதையை படிக்க...
மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில் பத்து சொட்டுக்களும் தேயிலைத்தூள் ஒரு தேக்கரண்டியும் குழைத்திருந்த மருதாணிக்குழம்பில் போட்டு வலது கையின் விரல் நுனிகளாலேயே நன்றாக பிசைந்துவிட்டு கையை ...
மேலும் கதையை படிக்க...
இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
பேச்சுத்துணையின் வரலாறு…!!!
தென்றல் மறந்த கதை
சிறைபட்டமேகங்கள்
மருதாணிப்பூக்கள்
பருந்தானவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)