சங்கீத சௌபாக்யமே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 8,373 
 

கூட்டம் நெரிந்தது. கோலாகலமான டிசம்பர் சங்கீத சீஸன்! எல்லா சபாக்களிலும் மத்யான நேர கச்சேரி மேடைகள் வளரும் இசைக் கலைஞ்ர்களுக்கென்றே பிரத்யேகமாக.

முதல் கச்சேரிக்கு வந்த கும்பல் அப்படியே அடுத்த கச்சேரிக்கும் அமர்ந்து விட்டது. அடுத்த கச்சேரிக்கு, அந்த பிரபலமாகி வரும் இளம் பாடகியின் பாட்டைக் கேட்க என்றே பிரத்யேகமாக வந்தவர்கள் அப்படியே வரிசையாக நிற்க வேண்டியதாயிற்று.

சங்கீத விமர்சகர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த முன் வரிசையில் நோட்டுப் புத்தகமும் பேனாவுமாக அமர, உட்கார இடம் கிடைக்காத ரசிகர்களில் சிலர் முன்னேறிச் சென்று மேடையிலேயே இடம் பிடித்து, பாடகிக்குப் பின்னாலேயே அமர்ந்து கொண்டார்கள்.

போன வருஷமே இந்தக் கச்சேரியைக் கோட்டை விட்டதால், இந்த வருடம் எச்சரிக்கையாக முதல் கச்சேரிக்கே வந்து முன்னாலேயே இடம் பிடித்து அமர்ந்து கொண்டிந்தோம் நானும் சங்கீதாவும். சங்கீதா பாட்டு கற்றுக் கொள்கிறாள். நாலைந்து கீர்த்தனைகள் கூட பாடமாகி விட்டது அவளுக்கு. அவளுக்கும் கச்சேரி கேட்பது பழக்கமாகட்டுமே என்று முதன் முறையாக அவளையும் அழைத்துக் கொண்டு வந்தேன்.

பாடகி பாட ஆரம்பிக்க, கூட்டம் எல்லா அசௌகரியங்களையும் மறந்து அவளுடைய சாரீரத்தின் இனிமையில் கட்டுண்டு போனது. முதலில் பாடிய பைரவி அட தாள வர்ணத்திலேயே கச்சேரி களை கட்ட ஆரம்பித்து விட்டது.

“அப்பா, அப்பா! அங்கே பாரேன்!”

சங்கீதா சுட்டிக் காட்டிய இடத்தில் புதிதாய் எங்கள் அண்டை வீட்டுக்குக் குடி வந்திருக்கும் வயலின் வித்வான் விஸ்வநாதன் எங்கேயாவது உட்கார இடம் கிடைக்குமா என்று பார்வை அங்குமிங்கும் அலை பாய நின்று கொண்டிருந்தார்.

அவரை அருகே அழைத்து, பத்து வயதான போதிலும் மெல்லிய உடல் வாகு கொண்ட சங்கீதாவை என் மடியில் அமர்த்திக் கொண்டு அவளுடைய இடத்தில் விஸ்வநாதனை அமரச் செய்தேன். நன்றி தெரிவித்து அமர்ந்த விஸ்வநாதன் இசையில் லயித்துப் போனார்.

பக்கத்து வீட்டில் ரொம்ப வருடங்களாக வாடகைக்கு தான் மாற்றி மாற்றி குடும்பங்கள் இருந்து கொண்டிருந்தன. சொந்தக்காரர் யார் என்றே தெரியாது. கடைசியாக இருந்தவர் காலி செய்ததும் வீடு ஒரு மாதம் பூட்டியே கிடந்தது. திடீரென்று ஒரு நாள் வீடு மராமத்து பார்க்கப்பட்டு புதிதாக வெள்ளை அடிக்கப்படும் வேலை ஆரம்பித்தது. யாரோ மும்பைக்காரர் வீட்டை வாங்கி குடி வருகிறார் என்று சொன்னார்கள். மும்பைக்காரர் என்றால் வட இந்திய குடும்பமாக இருக்குமோ என்று நானும் மனைவியும் யோசித்துக் கொண்டிருந்தோம். பார்த்தால் பக்கா தமிழ்க்காரர்.

புதிதாக அண்டை வீட்டை விலைக்கு வாங்கிக் குடி வந்திருக்கும் விஸ்வநாதனுக்கு நாற்பத்தெட்டு ஐம்பது வயது இருக்கும். அவரும் மனைவியும் மட்டுந்தான் வீட்டில். மும்பையிலிருந்து வந்தாலும் முன்பு சென்னையில் தான் இருந்திருக்கிறார். சங்கீத வித்வான். சென்னையில் வயலின் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் சங்கீதா மூலம் தெரிய வந்தது.

பக்கத்தில் ஒரு வித்வான் வந்து அமர்ந்து கொண்டதில், ‘பரவாயில்லே! பாடகி ஏதாவது அபூர்வ ராகமாக, நமக்குத் தெரியாததா பாடினா கூட கேட்டுத் தெரிந்து கொள்ள பக்கத்தில் ஆள் இருக்கிறார்’ என்று என்னுள் மகிழ்ச்சி பரவியது.

பாடகி எல்லாம் பரிச்சியமான ஜனரஞ்சகமான ராகங்களாகவே பாடிக் கொண்டிருந்தார். ஒரு தெலுங்கு கீர்த்தனை, ஒரு தமிழ்ப் பாட்டு என்று மாறி மாறிப் பாடியது கச்சேரிக்கு விறுவிறுப்பைக் கூட்டியது. ‘திலங்’ ராகத் தில்லானாவுக்கு அமோகமான அப்ளாஸ்!

நல்ல சங்கீதம் தந்த போதையில் கூட்டம் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக வெளியேற ஆரம்பித்தது. என் காதில் பாடகி கடைசியாகப் பாடிய, ‘கண்ட நாள் முதலாய்…” என்கிற மதுவந்தி ராகப் பாடல் இனிமையாக ரீங்கரித்துக் கொண்டிருக்க, நான் மௌனமாய் நடந்து கொண்டிருந்தேன்.

தற்செயலாய் அருகே நடந்து வந்து கொண்டிருந்த விஸ்வநாதனின் முகத்தை ஏறிட்ட போது, ஏதோ பறி கொடுத்தது போல் இருந்தது அவர் முகம்.

“நான் இங்கே நிம்மதியா சங்கீதம் சொல்லிக் குடுத்துண்டிருந்தேன் சார்! ‘நமக்குப் பணம் காசுமில்ல, நம்பளைப் பிற்காலத்தில் வச்சுக் காப்பாத்தப் புள்ளைக் குட்டியுமில்ல. பாம்பேக்கு வா! எங்கண்ணாவோட சேர்ந்து பிஸினெஸ் பண்ணலாம். பணம் சம்பாதிக்கலாம்னு’ என்னைப் புடுங்கியெடுத்துக் கூட்டிண்டு போனா என் பொண்டாட்டி. அங்கே போய் ..பிஸினெஸ்…இருவத்து நாலு மணி நேரமும் பிஸினெஸ்………உழைப்பு.. பணம்…………….காசு……………..ஆச்சு! இதோ சென்னையில சொந்த வீடு வாங்கியாச்சு! வேணுங்கிற காசு சம்பாதிச்சு வாழ்க்கையில செட்டிலாகியாச்சு!”

“ஆனா.. சங்கீதம்?……………ப்சு!” உதட்டைப் பிதுக்கினார்.

“கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்குப் பிறகு நா கேட்ட மொதல் கச்சேரி இது தான்! நம்புவேளா?”

நான் மௌனமாய் அவர் ஆதங்கத்தைக் கேட்டுக் கொண்டு வந்தேன்.

“இன்னிக்குக் கச்சேரியில கடைசில பாடினாளே ‘கண்ட நாள் முதலாய்’ன்னு ……….. ரொம்ப பரிச்சியமான ராகம் சார் அது. அது……….அது…….. என்ன ராகம்னு கொஞ்சம் சொல்லுவேளா?” அழுது விடுவார் போல் இருந்தது விஸ்வநாதன் பேசிய விதம்.

‘சங்கீதத்தை இத்தனை வருடம் பிரிந்திருந்தால் ‘மதுவந்தியும்’ மறந்து தான் போகுமோ?’

“சங்கீத சௌபாக்யமே!’ எங்கோ தூரத்தில் சினிமா பாட்டு சன்னமாக ஒலித்தது.

‘நிச்சயம் சங்கீதம் ஒரு சௌபாக்கியந்தான்! வாழ்க்கையில் ஒரு கொடுப்பினைதான்!’

பேச நாவெழும்பாமல் வருத்தம் மேலிட மௌனமாய் அவரோடு நடந்தேன் நான்.

– லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *